விடியாத இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 4,842 
 

ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க அத்தையே அப்படி சொல்றாங்க, அப்புறம் நீ ஏன் கவலைப்படுகிறாய்? என அறிவுறுத்திக் கொண்டு இருந்தாள் மாலா.

மாலா ராதாவின் பள்ளிக்காலத் தோழி, இவளைப் பார்க்க ஒரு மாலை வேளையில் வந்து இருந்தாள்.

ராதா, மணமாகி ஐந்தே மாதங்கள் தன் கணவனுடன் வாழ்ந்து, பதினாறு வார கருவை சுமக்கும் இளம் விதவை பெண்.

உறவு என்று சொல்லிக்க இருந்த அம்மாவும், ராதாவிற்கு மணமான இரு மாதங்களில், அதற்காகவே காத்து இருந்தார் போல நோய்வாய்பட்டு இறந்துவிட்டாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு புகுந்த வீடே தன் வீடாக நினைத்து அத்தையிடம் பாசத்துடன் பழகி
வந்தாள்.

கணவன் குமாருக்கு பிளம்பிங் வேலை, அவ்வப்போது குடித்தாலும் , குடித்தனம் நடத்துவதில் ஒன்றும் குறை வைத்ததில்லை.

நன்றாக சென்ற இவர்கள் வாழ்க்கை, ஒரு நாள் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசியதில் கவனம் சிதறி, வீட்டிற்கு பொட்டலமாய் வந்து சேர்ந்தான்.

கருவினை தடவியபடி உட்கார்ந்து இருந்த ராதா, வீட்டிற்கு வந்த ராசியை அனைவரும் குறை கூறிக் கலைந்தனர்.

அத்தை நானே, கருவைக் கலைத்துக்கொள் என்றுதான் சொல்கிறேன் முடியாது என்று சொல்கிறாள்.என்றாள் மாலாவிடம் அத்தை.

அத்தை கருவைக் கலைப்பது சட்டபடி குற்றமாகும் அதனாலே பயப்படுகிறாளோ என்னவோ? என்றாள் மாலா,

இருபது வாரத்திற்கு மேலே உள்ள கருவை கலைத்தால்தான் குற்றம் என்றாள் ராதா.

உனக்கே தெரியுது இல்லே குற்றம் இல்லை, என.
பின்னே என்னடி? உனக்கு ? கலைச்சுட வேண்டியதுதானே?
என்றாள்.

கலைச்சிட்டு? என எதிர்கேள்வி கேட்டாள்.

அதற்கு பதிலே இல்லாமல் வெறுமையான பார்வை மட்டுமே மாலாவிடம் இருந்தது.

இப்படிதானம்மா, நான் சொன்னாலும் கேட்கிறாள். என்ற அத்தை சாப்பாடு எடுத்து வைக்க அடுப்படி சென்றாள்.

என்னடி, உன் வாழ்க்கையை வாழ வேண்டாமா? மாலா.

என் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கா?

அம்மாவுடன் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பிரிந்தேன்,

பிறகு குமாருடன், குமாரை இழந்தேன்

இப்போ அத்தையுடன், இதில் எனக்கான தனி வாழ்க்கை ஏது?

அத்தைக்குப் பிறகு? நான் அநாதை தானே ? என்று தேம்பினாள்.

அத்தையும் தன் மகனை இழந்து தவிக்கின்றார், அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறாள். அவர் தன் பிள்ளையை இழந்தது போல நானும் என் பிள்ளையை பாதியிலேயே இழக்க விரும்பவில்லை,

விடியாத இரவுகள் என்று ஒன்றும் இல்லை, இரவுகள் கண்டிப்பாக விடிந்துதானே ஆகனும், இந்த புதிய வரவே எங்களுக்கான ஆறுதலாக இருக்கும், அதன் எதிர் பார்ப்பில் ஒரு ஆறு மாத காலம் நாங்கள் நகர்த்துவோம்.

மீத வாழ்க்கையை காலம் கைபிடித்து நகர்த்தட்டும் என்று சொல்ல, சாப்பாட்டுத் தட்டுடன் வந்த அத்தை, கண்கள் கலங்கியபடி ராதாவை அணைத்து தோளில் சாய்த்தபடி அமர்ந்தாள்.

ராதாவின் பார்வையில், இரவு நேரத்து நிலா மெல்ல வானிலே ஊர்ந்து சென்றது. இந்த இளம் விதவையின் விடியலுக்காக.

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *