விடாத உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 1,841 
 
 

காலை நேரமாகிவிட்டதோ என்கிற பதை பதை பதைப்புடன் பள்ளி காம்பவுண்டுக்குள் நுழைய போகு முன் என் முன்னால் வந்து நின்ற உருவத்தை பார்த்து வியப்படைந்து விட்டேன். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு வினீத் நீ எப்படி இங்கே?

அவன் சோகமான புன்னகையுடன் ஏன் நான் உன்னை பார்க்க வரகூடாதா?

தாராளமா வரலாம், சரி உள்ளே வா பிரேயருக்கு டைம் ஆச்சு, போய் என் ரூமுல உட்கார்ந்திரு. சொல்லி விட்டு காலை பிரேயருக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.

மலை பகுதிகள் சூழ்ந்த ஏரியாவில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி என்றாலும் சுமார் அறுபது குழந்தைகள் இங்கு படிப்பதால் எப்பொழுதும் கூச்சலுடன்தான் இருக்கும். நானும், என்னுடன் ஒரு டீச்சரும், ஒரு சத்துணவு அமைப்பாளரும் இருக்கிறோம்.

அவர்கள் இருவரும் எனக்காக காத்திருந்தனர்.

மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஒரு சில அறிவுரைகளும் சொல்லி கலைந்து போனார்கள். அவரவர்கள் அந்தந்த வகுப்புகளில் உட்கார்ந்த பின் நான் மற்றொரு ஆசிரியரிடம் என் தம்பி வந்திருக்கிறான், சொன்னதும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். இதுவரை என்னை தனிக்கட்டையாகத்தான் ஐந்து வருடங்களாக தெரிந்திருந்தார். தம்பி வந்திருக்கிறான் என்று சொன்னதும் ஆச்சர்யம் அடைந்த்தில் வியப்பு ஒன்றுமில்லை. சிறிது நேரம் பேசி விட்டு வந்து விடுகிறேன், சொல்லி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன்.

ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தவன் என் அரவம் கேட்டு திரும்பி பார்த்து புன்னகைத்தான். ம்..அப்படியேதான் இருக்கே, இத்தனை வருசம் ஆகியும், முடிக்கு முன், நான் சரி சாப்பிட்டியா? தலையாட்டினான். வா அப்படியே வெளியே போய் பேசலாம்.

பள்ளியை விட்டு வெளியே வந்தோம். பனி இருந்தது, அந்த குளிர் இவனை கொஞ்சம் இம்சைபடுத்த உடலை குலுக்கிக்கொண்டான். அப்பா மணி ஒன்பதாயும் இன்னும் குளிரு போகலை, உங்க ஊர்ல. இங்க எல்லாம் வெயிலை பாக்கறதுக்கே மணி பன்னெண்டாயிடும், பள்ளி எதிரில் டீ க்கடை மாஸ்டர் டீ ஆற்றிக்கொண்டே சிநேகமாய் சிரித்தார். டீச்சர், உங்க தம்பிங்களா? நான் எப்படி கண்டு பிடிச்சீங்க? ஆச்சர்யத்துடன் கேட்டேன். உங்க ஜாடை தெரியுதே? சிரித்தவரிடம் சூடா இரண்டு டீ போடுங்க.

சூடான டீ உள்ளே போகவும் கொஞ்சம் தெம்பானவன் போல் காணப்பட்டான்.

இருவரும் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். ஐந்து நிமிடம் மெளனம்.. அந்த மெளனத்தை கலைக்க வேண்டி வினீத் என்ன விஷயம்? இவ்வளவு தூரம் வந்திருக்கே? அதுவும் இத்தனை வருசம் கழிச்சு.

உன் வீட்டுக்காரருக்கு இப்ப ரொம்ப உடம்பு சரியில்லை, கடைசியா உன்னை பாக்கணும்ங்கறாரு. நான்தான் எல்லாம் மறந்து வேண்டாமுன்னு உதறிட்டு வந்துட்டேனே, அப்புறம் எதுக்கு என்னைய பாக்கனுமாம்?

அக்கா அப்ப அப்படி சூழ்நிலை இருந்துச்சு, இப்ப அப்படி எல்லாம் இல்லை, வீட்டிலதான் இருக்கறாரு. முன்ன மாதிரி வேலைக்கு எங்கேயும் போறதில்லை. அப்ப அப்ப கல்யாணம் காட்சிக்கு ஆளுங்களை வேலைக்கு கூப்பிட்டா கூட மாட ஒத்தாசைக்கு போவாராம், அதுவும் அந்தம்மா கூட இருந்தாத்தான்.

அந்தம்மா நாலஞ்சு வீட்டுக்கு வேலைக்கு போகுது. பெரிய வருமானம் ஒண்ணுமில்லை, அவங்களுக்குள்ளயே அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு இருக்குது. இவருக்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லை.

நீ எப்ப பார்த்தே? நான் போய் பார்க்கலே, ஒரு நா சென்னைக்கு ஒரு விசேசத்துக்கு போயிருந்தேன். அந்த கல்யாண மண்டபத்துலதான் அவங்களை பார்த்தேன்..அந்த இடத்தில் சற்று தடுமாறினான்.

சட்டென்று திரும்பி அவன் முகத்தை உற்று பார்த்தேன், என் பார்வையை தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேரும் எடுபிடி வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. மனத்தாங்கலாய் சொன்னான்.

அவன் குரலில் இருந்த வருத்தம் அளவுக்கு கூட எனக்கு வருத்தம் வரவில்லை.

என்னிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் வராததால் அவனே தொடர்ந்தான், நானே போய் தான் பேசினேன், அவங்களுக்கு ஒரே அதிர்ச்சியாய் போயிடுச்சு. அந்தம்மா ஓ ன்னு அழுதுடுச்சு, அவங்களுக்கு நான் எந்த துரோகமும் பண்ணலை இருந்தாலும் விதி இப்படி எங்களை வாட்டுதுன்னு சொல்லி அழுதது. இதுக்கும் அவர் எதுவுமே பேசலை, அதுக்குள்ள என்னைய பாக்க நிறைய பேர் வந்துட்டாங்க, அதனால அங்கிருந்து வந்துட்டேன், வரும்போது அவர்தான் பேசினார். கடைசியா உன்னை ஒரு தரம் பார்க்க முடியுமான்னு?

நான் அங்கேயே நின்று விட்டேன், அதனால நீ மதுரையிலேயிருந்து கிளம்பி வந்துட்டே. சரி எப்படி கண்டு பிடிச்சே? நான் இங்க இருக்கறேன்னு.

அது எனக்கு ஒண்ணும் பெரிய சிரமமில்லே, நான் உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்களை பிடிச்சு, நீ எங்க வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்னு விசாரிச்சேன்.

வினீத் செல்வாக்கானவன்தான், சிறு வயதில் இருந்தே என்னையும், அவனையும், அப்பா அப்படித்தான் வளர்த்தார். தன் கையில் நின்று பழக வேண்டும் என்பதை அடிக்கடி சொல்வார். ஆசிரியராய் இருந்ததால் அவர் ஆசிரியரயிருந்த பள்ளியிலேயே சேர்த்து பள்ளி இறுதி வரை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டார்.

அப்படி பார்த்து பார்த்து வளர்த்து மணமுடித்து கொடுத்தும் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகும் என்று அவர் கனவு கூட கண்டதில்லை. ம்.. ஒரு பெரு மூச்சுடன் வினீத் உன் குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? பேச்சை மாற்றுகிறாள் என்று தெரிந்தும் குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்க, தேவிக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு பக்கத்துலயே வந்துட்டா, அதனால நாங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல வேலைக்கு கிளம்பறோம். இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு. சரி நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பாருக்கா..

என்னை என்ன பண்ண சொல்றே? கையாலாதவளாய் அவனை பார்த்தேன். ஒரு வேளை உன் கிட்ட மன்னிப்பு கேட்கறதுக்கு கூட அவர் உன்னை பாக்கனும்னு சொல்லியிருக்கலாமுல்ல. சரி மன்னிப்பு கேட்டா இந்த பிரச்சினை முடிஞ்சிட்டதா அர்த்தமா? என் கேள்விக்கு என்ன பதில் சொலவது என்றூ கொஞ்ச நேரம் விழித்தான்.

சரி வா வந்து ஒரு மணி நேரம் ஆயிடுச்சு, போய் பர்மிசன் எழுதி கொடுக்கணும்,

அவனை இழுத்து வந்தேன். மதியம் இருவரும் ஒன்றாக எதிரில் இருந்த கடையில் சாப்பிட்டோம். சரிக்கா, நான் இப்ப கிளம்பறேன், நீ சீக்கிரம் உன் முடிவை சொல்லு. அவன் கிளம்பி விட்டான். ஊட்டியில் ரூம் போட்டிருப்பதாக சொன்னான்.

அடுத்த முறை குழந்தைகளையும் கூட்டிட்டு வந்துடு, என் வார்த்தைக்கு தலையை ஆட்டினான்.

மாலை வரை வகுப்புக்களை நடத்தினாலும் மனம் மட்டும் அதில் ஒட்டாமல் இருந்தது. நமக்கும் இந்த குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்து வராது என்று ஒதுங்கி வந்தாலும் அதை நம்மை விட்டு போக மறுக்கிறது. எல்லாம் அப்பாவால் வந்த வினை.

டீச்சர் டிரெயினிங் முடித்து மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க போகலாம் என்கிற போது வரன் கேட்டு வந்தார்கள் என்று அவசரம் அவசரமாய் கல்யாணம் செய்வித்தார்கள். பையன் எப்படி என்று சுற்றுப்புறம் விசாரிக்காமல் அவசரப்பட்டதன் விளைவு கல்யாணம் ஆன பின் ஆறு மாதம் கழித்து தான் தெரிந்தது, ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு என்று. கோபித்து, சண்டையிட்டு என்னன்னவோ செய்து பார்த்தும், சரி வராததால் பேசாமல் விலக நினைத்தேன். விலகி வந்து எங்கே போவது? வீட்டுக்கு செல்லவும் மனது இடம் கொடுக்கவில்லை. சரி நடப்பது நடக்கட்டும், தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி அவர்கள் உதவியாலேயே தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டேன். தங்குமிடம், உணவு எல்லாம் பள்ளியின் கணக்கிலே என்பதால், சம்பளம் என்பது இதற்காக மட்டும் என்று ஆகிப்போனது. இருந்தாலும், எப்படியோ இந்த குடும்பம், புருசன், அவனுடைய ஏமாற்றுத்தனம் இவைகளில் இருந்து விலகினால் போதும் என நினைத்து பல்லை கடித்துக்கொண்டு காலத்தை கடத்தினேன். இதற்குள் அப்பா இரண்டு மூன்று முறை வந்து பேசியும் சமாதானாமாகவில்லை. பிறகு அவரே சரி பொண்ணு அவள் காலிலேதான் நிற்கிறாள், மன சலனத்துடன் அதை பற்றி பேசுவதை குறைத்து கொண்டார். அதற்குள் வினீத்துக்கு ஒரு நல்ல இடம் அமைய அது விசயமாக அலைய ஆரம்பித்து விட்டார்.

வினீத் அடிக்கடி வந்து போனான். கல்யாணத்துக்கு என்னை முன்னிருத்தியே செய்தான். அவனுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. காலம் ஐந்து ஆறு வருடங்களை முழுங்கியது தெரியவில்லை.

அரசாங்க பள்ளியில் வேலை வாய்ப்பு வர நானே யாரும் காணாத காலியாக இருந்த இடமாய் தேடி இந்த மலை பகுதியில் வந்து சேர்ந்து கொண்டேன். ஐந்து வருடங்களும் ஓடி விட்டன. இவள் மட்டுமே அதிசயமாய் ஐந்து வருடங்களாய் இங்கு பணி புரிவது இங்குள்ளவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்த்து. காரணம் வந்து சேர்ந்து இந்த குளிர் தாக்கு பிடிக்க முடியாமல் ஒன்றிரண்டு வருடங்களில் மாற்றல் வாங்கிக்கொண்டு ஓடுபவர்கள்தான் அதிகம் இருந்தனர். நான் தொடர்ந்து இங்கு இருக்கவும் அதுவும் இது வரை என்னை தேடி ஒருவரும் வராமல் இருக்கவும் தனியாளாக நினைத்து கொண்டனர் இதனால் என்னுடன் அங்கிருந்த பெண்கள் நன்கு பழகவும், தங்கள் வீட்டு விசயங்களை என்னிடம் வந்து கொட்டி தீர்த்து விட்டு செல்லவும் வசதியாக இருந்தது. பலருக்கு குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்க யோசனை சொன்னவளின் பிரச்சினை இவர்களுக்கு தெரியவே இல்லை.

வினீத் வந்து சென்ற ஒரு வாரத்தில் அப்பா வந்து நின்றார். அப்பா நீங்க எதுக்குப்பா இந்த குளிருல, மழையில? இவளின் பேச்சுக்கு கோபத்துடன் ஏம்மா, இப்படி சொல்லாம கொள்ளாம எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டியேம்மா, அங்க உங்கம்மா உன்னை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா. பக்கத்துல அந்த ஸ்கூல்ல இருந்தப்பவாவது உன்னை அடிக்கடி பார்த்து மனசை தேத்திக்குவோம். இப்ப இப்படி மலையில வந்து உட்கார்ந்து அஞ்சு வருசமாச்சு, உங்க அம்மாவாவையாவது வந்து ஒரு முறை பார்த்துட்டு போயிடும்மா. அப்பாவின் வேண்டுதலில் பரிதவிப்பை பார்த்தேன்

ஒரு மாதம் ஓடியிருந்தது, வினீத் போன் செய்தான், அக்கா மாமாவோட இருந்த பொண்ணு இறந்துட்டாங்க, செய்தி அவள் மனதை ஒரு நிமிடம் உலுக்கியது. என்னதான் பழக்கமில்லாமல் இருந்தாலும், இவளுக்கு முன்பே இவள் கணவனுக்கு சொந்தமானவளாக இருந்திருக்கிறாள், அவனை நம்பி இரு குழந்தைகளை பெற்று கொடுத்திருக்கிறாள். இனி அந்த குழந்தைகள் கதி?

அடுத்த வாரம் வினீத் வந்திருந்தான், அவன் முகமே சரியில்லாமல் இருந்தது,

திணறலுடன் பேசினான், அக்கா மாமா இறந்துட்டாரு, அந்தம்மா போன இரண்டு மூணு நாள்லயே இறந்திட்டாரு. இந்த செய்தி எனக்கு அதிச்சியை விட பொறாமையைத்தான் மனதில் பொங்கி வழிய செய்தது.. அது எப்படி? அந்த பெண் இறந்து இரண்டு மூணு நாட்களில் அவரும் இறப்பதென்றால்? எந்தளவு மனமொத்தவர்களாக இருந்திருக்க வேண்டும்? அப்புறம் எதற்கு என் வாழ்க்கையை ஏமாற்றி பங்கு போட்டு கொண்டார்?. கண்களில் ஆற்றாமையால் கண்ணீர் பெருகியது. தம்பி அக்கா கணவனுக்காகத்தான் அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டான்.

இப்ப இரண்டு குழந்தைகளை என்ன பண்னறதுன்னு தெரியலை, அந்த பொண்ணு வீட்டு சொந்தக்காரங்க, ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்க, அப்பாவும், கடமைக்காக அவர் இறந்ததுக்கு போய்ட்டு வந்ததோட சரி. பாவம் அந்த குழந்தைகளை நினைச்சாத்தான் பரிதாபமாயிருக்கு, பொண்ணு ஏழாவதோ எட்டாவதோ படிக்கிறா? பையன் சின்ன பையன், வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான்.

“நான் அங்க வர்றேன்” குரல் கேட்டு அதிசயமாய் பார்த்தான் என்னை, ஆமா லீவு சொல்லிட்டு வர்றேன், இப்ப பஸ் ஒண்ணு வரும். அதுல போலாம். தீர்மானமாய் சொன்ன வார்த்தைகளை கண்டு மலைத்துவிட்டான்.

அது மட்டுமல்ல, அந்த குழந்தைகளை கூட்டி வர தீர்மானம் செய்திருப்பதற்கு என்ன சொல்வானோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *