“இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?”
வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம் முறையிட்டாள் தாய்.
ராசுவின் உடலும் மனமும் ஒருங்கே சுருங்கின.
முப்பது வயதுவரை கல்யாணத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தவன் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? நண்பர்களின் கேலியோ, அல்லது அகல்யாவின் அழகோ அவனை வெல்ல, பிரம்மச்சரியத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
அப்படித்தான் நினைத்தான் முதலில். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே, பருவ வயதில்கூட தனக்குப் பெண்களைக் கண்டு எந்தக் கிளர்ச்சியும் ஏற்படாத விநோதம், தனது பெண்குரல் இவற்றுக்கான காரணம் புரிய, மனைவியைவிட்டு உடலளவில் விலகிப்போனான்.
பதினெட்டே வயதாகியிருந்த அகல்யாவுக்கு எதுவும் புரியவில்லை. தான் அவரைப்போல் அதிகம் படிக்காதவள் என்று அலட்சியம் காட்டுகிறாரோ? ஏழை என்று தெரிந்துதானே, தானே கல்யாணச் செலவைக்கூட ஏற்றுக்கொண்டார்?
தன்னைப் பார்த்தாலே விலகும் கணவனை என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாது அகல்யா தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் இந்திரன் அவர்கள் வீட்டுக்கு வந்தான்.
“பெரியக்கா மகன்,” என்று அறிமுகம் செய்தான் ராசு.
“இவன் என்னோட மாமான்னு பேருதான். என்னைவிட ஒரே வயசுதான் பெரியவன். நாங்க ரெண்டுபேரும் ஒண்ணா வளர்ந்தோம்,” என்று அகல்யாவைப் பார்த்து சிநேகிதமான புன்னகையுடன் தெரிவித்தவன், ராசுவின்புறம் திரும்பி, “ஒங்க கல்யாணத்துக்கு நான் வரமுடியல. அதுக்காக, எனக்கு இவ்வளவு அழகான அத்தை இருக்காங்கன்னு ஏண்டா முந்தியே சொல்லல?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டான்.
ஒரே ஒருவன் வருகையால்தான் வீடு எவ்வளவு கலகலப்பாகிறது!
“இப்போ எங்கடா வந்தே?” என்று கேட்டான் ராசு. கோலாலம்பூரிலிருக்குத் தெற்கே, 123 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது சரித்திரபூர்வமான மலாக்கா.
“என்னை இங்க மாத்திட்டாங்க. அதுவும் நல்லதாப்போச்சு. கடைச் சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப்போச்சு!”
புன்னகைத்தான் ராசு. “சுத்தி வளைக்காதேடா, தடியா. `இங்கதான் தங்கப்போறேன்’னு பட்டுனு சொல்லிட்டுப்போயேன்!”
“அம்மாதான் சொன்னாங்க, ஒங்களுக்கு ஒத்தாசையா நான் இருக்கலாம், நீ ரொம்ப சந்தோஷப்படுவேன்னு!”
“சும்மா அளக்காதே. `வெளியில சாப்பிட்டா, வயிறு கெட்டுப் போகுது! கல்யாணம் பண்ணி வைங்கம்மான்னு இதைவிட வெளிப்படையா ஒருத்தன் எப்படிச் சொல்வான்?’னு கேட்டிருப்பியே?” சிரித்தான் ராசு.
அதிசயத்துடன் கணவனைப் பார்த்தாள் அகல்யா. அவன் இவ்வளவு பேசுவானா?
தன்கூட மட்டும் ஏன்..?
“கல்யாணமா! சுதந்திரமா இருக்கிறவன்லாம் மாட்டிக்கணும்னு பார்ப்பான். மாட்டிக்கிட்டவன் எப்படிடா வெளியே வர்றதுன்னு முழிப்பான். என்ன சொல்றீங்க, அத்தை?” என்று அகல்யாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான் இந்திரன்.
தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒருவன் பேசியது அகல்யாவுக்கு நிறைவை அளித்தது. ஆனால், பதில் கூற அஞ்சி, சற்றே பயந்தவளாக கணவனை ஏறிட்டாள். அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.
தம்பதிகள் இருவருக்கும் இடையே இருந்த பிளவைப் புரிந்துகொள்ள இந்திரனுக்கு நாளாகவில்லை.
ஒரு நாள் பகல் பத்து மணி இருக்கும். ஆண்கள் இருவரும் வேலைக்குப் போய்விட்டிருந்தனர். சமையலை முடித்துவிட்டு, இந்திரன் அவளுக்கென்று வாங்கி வந்திருந்த காதல் புதினத்தை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தாள் அகல்யா. வாயிற்கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டது. எழுந்துபோய் திறந்தாள்.
கதவைத் தாழிட்டபடி உள்ளே நுழைந்த இந்திரனைப் பார்த்து, “எதையாவது மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்களா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டவளுக்குப் பதில் கூறாது, அவளுடைய கண்களை ஊடுருவுவதுபோல பார்த்தான் இந்திரன்.
நெருக்கமாக வந்தவனின் தலைமுடியில் பூசப்பட்டிருந்த கிரீமின் வாசனையும், முகச் சவரத்துக்குப்பின் தடவியிருந்த குடிகுரா பவுடரின் மணமும் ஒன்றுசேர்ந்து அவளுடைய உணர்வுகளைத் தாக்கின. அவளுடைய உடலும் மனமும் படபடத்தன. மூச்சு வேகமாக வந்தது.
“பைத்தியக்காரன்!” முணுமுணுப்பாக வந்தது அவன் குரல். “கோவில் சிலைமாதிரி இருக்கிற ஒங்க அருமை அந்த மடையனுக்குப் புரியுதா!” என்றபடி அவனது கை…!
பயந்து பின்வாங்கினாள் அகல்யா.
அவளுடைய செயலை எதிர்பார்த்திருந்தவனாக, அவளுடைய தோள்களை அழுத்தி, தன்னருகே கொண்டுவந்தான். அகல்யா உறைந்தே போனாள்.
இந்திரன் வெளியேறி வெகுநேரம் கழிந்தபின்தான் அகல்யாவுக்கு நடந்து முடிந்ததன் விபரீதம் மெள்ள உறைக்க ஆரம்பித்தது.
தான் ஏன் அவனைப் பிடித்துத் தள்ளவில்லை? அவனுடைய உணர்வுகளின் எதிரொலி ஏதோ ஒரு சிறிய அளவில் தன்னுள்ளும் எழுந்ததோ?
இரு கண்களையும் இறுக மூடி, மூச்சைப் பிடித்துக்கொண்டு, அவனுடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் மனக்கண்ணால் உணர்ந்து, சவம்போல உறைந்து கிடந்ததற்கு என்ன அர்த்தம்?
கத்திக் கூச்சலிட்டிருக்கலாமே? அப்போது என்ன ஆயிற்று எனக்கு?
அடுத்து வரும் தினங்களில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று அகல்யா திகிலடைந்தாள். கூடியவரை தன்னுடைய அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு, உள்ளேயே இருக்கத் தலைப்பட்டாள்.
தன் கழுத்தில் தாலி கட்டியவர் எல்லாக் கணவர்களையும்போல இயங்கியிருந்தால், தான் இந்தப்பாடு படவேண்டியிருக்குமா என்று எண்ணம் போக, கணவன்மேலும், அவனை மணந்த பாவத்திற்காகத் தன்மீதும் ஆத்திரம் பொங்கியது. ஆத்திரம் ஒரு வடிகாலைத் தேடியது. தனிமையில் அழுகை பீறிட்டது.
மனைவியிடம் ஏதோ மாற்றம் தெரிகிறதே என்று ராசு, அவளை பரிசோதனைக்கு அழைத்துப் போனான்.
“வாழ்த்துகள்! நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்!” என்று போலியான மகிழ்ச்சியுடன் டாக்டர் தெரிவித்தபோது, அகல்யாவின் பார்வை வெறித்தது.
ஒரு தடவை!
ஒரே ஒரு தடவை!
அதிகபட்சம் பத்து நிமிடங்கள் இருக்குமா?
அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
கோபத்தாலும், அவமானத்தாலும் சிவந்த முகத்தோடும், நெறிந்த புருவங்களுடனும் தெருவிலேயே கவனத்தைச் செலுத்த முயன்றபடி, அவள் பக்கமே திரும்பாது காரை ஓட்டினான் ராசு.
பதினெட்டு வயதுக்குள் இந்திரன் வெம்பிப்போயிருந்தது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. ஏன், அவனே அதைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்வான். ஆனால், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யவும் துணிவான் என்பதை ராசு நினைத்தும் பார்த்திருக்கவில்லை.
வாரம் ஒன்று நகர்ந்தது. கணவனாக ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்த அகல்யா, அவனது நீடித்த மௌனத்தால் மேலும் கலங்கிப்போனாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வயிற்றின்மேல் ஒரு கை பதித்து, முகசாடையாகவே கேட்டாள்.
“வேணாம்!” அவளை நிமிர்ந்து பார்க்காமலே பதிலளித்தான்.
நினைத்துப் பார்க்கும்போதே அகல்யாவுக்குக் கலக்கமாக இருந்தது. குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குச் செய்த துரோகத்தால் தான் துடிக்க வேண்டும் என்றே அந்த முடிவுக்கு வந்திருப்பான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அழ ஆரம்பித்தாள்.
அதைப் பொருட்படுத்தாது, “ஆபீசிலே என்னை லண்டனுக்குப் போகச் சொல்லி உத்தரவு வந்திருக்கு,” என்று முகத்தை எங்கோ திருப்பியபடி தெரிவித்தவன் சற்றே யோசித்தான்.
“ஒன்னை அலோர் ஸ்டாரில, அம்மாகிட்ட கொண்டு விடறேன்,” என்றான். மலேசிய நாட்டின் வடகோடியில், கடாரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இன்றைய கெடாவின் தலைநகரம். கோலாலம்பூரிலிருந்து நானூறு கிலோமீட்டர்களுக்குமேல் தொலைவு. இந்திரனும் அவளும் நெருக்கமாக இருக்க முடியாது என்று கணக்குப் போட்டிருந்தான்.
இப்படியும் ஒரு பொறுமையா! தன்னிடம் ஆத்திரப்படாது, பொறுப்பைத் தட்டிக் கழிக்காது..!
அதே வீட்டில் பழையபடி சேர்ந்திருந்தால், இந்திரனை கட்டுப்படுத்த முயல்வதோ, வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வதோ ரசாபாசத்தில் முடிந்துவிடும் என்றே, பிரச்னையை எதிர்கொள்ளும் சக்தியின்றி, கணவன் ஓடி ஒளிகிறான் என்பது அகல்யாவிற்குப் புரியவில்லை.
இன்னொருவராக இருந்தால், தெரிந்தோ, தெரியாமலோ சோரம் போன மனைவியை அடித்தே கொன்றிருப்பார்கள். இல்லை, விலக்கியாவது வைத்திருப்பார்கள்.
சட்டென பொறி தட்டியது. இவரும் விலக்கித்தான் வைக்கிறார். யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவண்ணம்.
ஓயாது சுழன்ற தனது குற்ற உணர்விலேயே மூழ்கிப்போனாள் அகல்யா. அதன் உறுத்தல் தாங்காது அழுதாள். மீண்டும்… மீண்டும்… . மீண்டும்…
`அழுதுக்கிட்டே இருக்காளே!’ என்று மாமியார் அதிசயப்பட்டாள். `புருஷன்மேல அவ்வளவு பிரியமா!’ கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் சாதாரணமாக ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவு போலும் என்று சமாதானம் அடைந்தாள்.
ஆனால், பிரசவத்திற்குப் பின்னரும் அகல்யாவின் நிலை மாறவில்லை. குழந்தை தன்பாட்டில் கதறிக்கொண்டு இருக்கும். அவள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள்; இல்லை, விம்மி விம்மி அழுதுகொண்டிருப்பாள்.
`ஹிஸ்டீரியா வந்திருக்கு! தாம்பத்திய உறவில் ஏதோ கோளாறு!’ என்று உளவியல் நிபுணர்கள் அபிப்ராயப்பட, “கல்யாணமாகி, அடுத்த வருஷமே பிள்ளை! என்னமோ சொல்றாங்க!” என்று நொடித்தார்கள் மாமியாரும், நாத்திகளும்.
பிள்ளையிடம் காட்டிய அதே பராமுகத்தைத் தன் உடலைப் பராமரிப்பதிலும் கைப்பிடித்தாள் அகல்யா.
“பிள்ளை பிறந்ததும் வயிற்றைக் கட்டி இருக்கக்கூடாது? இப்படி தொந்தி போட்டிடுச்சே!” என்று நாத்தனார் ஒருத்தி கரிசனத்துடன் கேட்க, `அப்பாடா! இனிமே, அழகு, அழகுன்னு எந்தப் பயலும் என்கிட்ட வாலாட்ட மாட்டான்,’ என்ற ஏற்பட்டிருந்த நிம்மதி குலைவது போலிருந்தது அகல்யாவுக்கு.
“வயத்தைக் கட்டறதா! என்ன அசிங்கம் அதெல்லாம்?” என்று கத்த ஆரம்பித்தவள், அழுகையில் நிறுத்தினாள்.
“அதுகிட்ட எதுக்குடி வாய்குடுக்கறே? எல்லாத்துக்கும் ஒரு கத்தல், ஒரு அழுகை! பிசாசு!” என்று வெறுத்துப்போய் கூறிய மாமியார்க்காரி, “ராசு, பாவம்! அதிர்ந்துகூடப் பேசமாட்டான். உடம்பு அழகுன்னு மயங்கிப்போயிட்டான். இவளோட தொல்லை தாங்கமுடியாமதானே வெளிநாட்டுக்கு ஓடிட்டான்! இங்கே, நான் கிடந்து அல்லாடறேன்!” என்று நீட்டி முழக்கினாள்.
தான் மணந்த அழகுப் பதுமையா இது! மூன்று ஆண்டுகள் கடந்ததும் திரும்பிய ராசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கூடவே, `நல்லவேளை, பிள்ளை அம்மா சாயலிலே இருக்கு!’ என்ற சந்தோஷமும் எழாமலில்லை.
“ஒன் பிள்ளை என்னடா இடது கையில சாப்பிடுது! ஒங்க ரெண்டுபேருக்குமே வலதுகைப் பழக்கம்தானே?” என்று அவனுடைய தாய் அதிசயப்பட்டுக் கேட்டபோதே உண்மை புரிந்துபோக, அவளுடைய கை தன்னிச்சையாக வாயை மூடியது.
அருகே அமர்ந்திருந்த அகல்யாவுக்கும் அவ்வார்த்தைகள் கேட்டன.
அவளுடைய குழம்பிய மனத்தினடியிலிருந்து ஒரு தெளிவான எண்ணம் மேலெழுந்தது: இந்திரனின் இடது கை அவளுடைய திரண்ட மார்பைப் பிடித்து அழுத்துகிறது!
அந்த நினைவின் தாக்கத்தைப் பொறுக்கமுடியாது, `வீல்’ என்ற அலறலுடன் தரையில் விழுந்தவள், வெறித்த கண்ணும் விறைத்த கைகால்களுடனும் அப்படியே கிடந்தாள்.
அப்போதுதான் உபதேசித்தாள் தாயார், “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா,” என்று.
உடனே பதிலளிக்க முடியவில்லை ராசுவால். `நீ ஒழுங்காக நடந்துகொண்டிருந்தால், இவள் இன்னொருத்தனை அனுமதித்து இருப்பாளா?’ என்று குத்தியது மனசாட்சி.
பெரிய மனது பண்ணுவதுபோல், “அது சரியில்லேம்மா. எனக்கு ஒரு வியாதி வந்தா, என்னைப் பாத்துக்காம, இவ விட்டுட்டுப் போயிருப்பாளா?” என்றான்.
உள்மனமோ, `நான் பொட்டைன்னு கேலி செய்தவங்க என் வாரிசைப் பாத்து அசரப்போறாங்க!’ என்று குதூகலித்தது.