பஸ்ஸை விட்டிறங்கியதும் சுற்றிலும் கும்மென்றிருந்த இருளும் அதனுள் இருந்துவந்த இரவுப் பூச்சிகளின் இரைச்சலும் என்னைக் கலங்கடித்தன. இறங்கிய இடத்திலிருந்தே ஒரு தடவை பாதையைப் பார்வையிட்டேன். என்னை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்ஸின் பின்புறச் சிவப்பு சிக்னல் லைட்டின் ஒளி புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தது. அதன் படிப்படியான மறைவு என்னை ஒரு தனிமையான உணர்வுக்குட் படுத்தியது. பஸ்ஸிலிருந்து இறங்கும்வரை இருளைப்பற்றிய எவ்வித பயமுமின்றி யன்னலோரமாகத் தலையை வைத்துத் தூங்கியபடி வந்ததில் ஊருக்குள் தனியாகத்தான் நடந்து செல்லவேண்டுமென்ற நினைப்பு மறந்து போயிருந்தது.
தனிமையென்பது எனக்குப் புதிதானதொன்றல்ல. மலைநாட்டில் தொழில் புரியும் நான், அனேகமான நேரங்களைத் தனிமையிலேதான் செலவழிக்கவேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தனிமைக்கும் தற்போதைய தனிமைக்கும் பாரிய வித்தியாசம். எனக்குத் தரப்பட்ட பெரிய பங்களாவில் புத்தகங்களோ வானொலிப்பெட்டியோ ஏதோவொன்று தனிமைக்குத் துணையாய் இருந்திருக்கிறது. அந்தத் தனிமை மனதில் எவ்வித பயத்தையோ பாரத்தையோ அளித்ததில்லை. ஆனால் இருள் சூழவுள்ள தற்போதைய தனிமை மனதில் இனம் காணமுடியாத ஒரு பயத்தை உண்டுபண்ணியது. தெருவைப் பார்த்தபோது மனம் திக்திக்கென்று வேகமாய் அடித்துக் கொண்டது. அந்த இருட்டை ஊடுருவி ஒன்றரைக்கட்டை தூரமாவது நடந்து சென்றால்தான் ஊருக்குள் செல்லும் ஒழுங்கையை அடைய முடியும்.
கண்டியில் இருந்து புறப்பட்ட பஸ்ஸின் மந்த கதியிலான பயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தபோது இரவு எட்டு மணியாகி யிருந்தது. ஒரு மணிநேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்துதான் ஊரை நோக்கிப் பயணிக்கும் கடைசி பஸ்ஸில் பயணிக்கமுடிந்தது.
மூன்று நாட்களுக்கு முன்னர் தாத்தாவுக்கு சீரியஸ் என்று வந்த தந்திதான் இந்தப் பயணத்துக்கான காரணம். தந்திகிடைத்த அன்றோ அல்லது மறுநாளோ செய்ய வேண்டிய பயணம் வேலைப்பழு காரணமாக மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது.
எனது தாமதத்தைத் தொடர்ந்து மாமா போனில் கதைத்தார். “தாத்தா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது கடைசிக் கட்டம் நெருங்கிவிட்டது. இறுதியாக உன்னைப்பார்க்க விரும்புகிறார். அதற்காகவே அவரது உயிர் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்ற
செய்தியை மாமா கூறியபோது சுற்றியிருந்த வேலைகள் யாவும் மறந்து போயின. தாத்தாவை உயிருடன் பார்க்க முடியுமோ என்ற பயம் மனதுக்குள் புகுந்து கொண்டது.
தாத்தா என்மீது அளவு கடந்த அன்பைச் சொரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப்பருவம் வரை அவரது அரவணைப்பிலும் நிழலிலும்தான் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை வளர்ச்சியிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என்னை உருவாக்குவதில் கவனஞ் செலுத்தியிருக்கிறார். பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது தோளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது, அவரது உடம்பின் வாசனை படிப்படியாக என் ஜீவனுக்குள் புகுந்து ஒன்றிப்போய் விட்டது. அந்த வாசனை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல. அந்த வாசனையின் சிறு அதிர்வுகூட என்னைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும்.
எங்கள் குடும்பத்துடன் தாத்தா எவ்வாறு சம்பந்தப்பட்டவர் என்பதை அம்மா அவருக்குச் செய்யும் பணிவிடைகள் மூலம்தான் அறிந்து கொண்டேன். அவர் எங்கள் அம்மாவழிக் கொள்ளுத்தாத்தா.
தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கி பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது. இதனைப் பல முறை நான் எண்ணியதுண்டு.
தாத்தாவுக்கு சீரியஸ் என்று தந்தி வந்த அன்றே ஊருக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். வேலை வேலையென்று பயணத்தைப் பின் போட வேண்டியதாயிற்று. உண்மையில் யோசித்துப் பார்த்தால் அவ்வளவு வேலையொன்றும் இருக்கவில்லைப் போலத்தான் தெரிகிறது. அப்படியெனில் அது என் அலட்சியமா? ஆம், அலட்சியம் தான். முதுமையைக் கண்டுகொள்ளாத அலட்சியம். மனம் சொல்ல வியலாத வேதனைக்குள்ளாகியது. இளமையின் வளர்ச்சிக்காகவும் உருவாக்கத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் கற்பூரமாகக் கரைந்து போன முதுமையை இளமை அலட்சியப் படுத்தியிருக்கிறது.
தாத்தாவுக்கு இப்போது எண்பது வயது இருக்கலாம். எனக்கு விபரந்தெரிந்த காலத்திலிருந்து தாத்தாவின் தோற்றம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. நெடிய உடம்பு, சிவந்த மேனி, மூக்குக் கண்ணாடி யினூடாக ஊடுருவும் தீட்சண்யம் நிறைந்த கண்கள், உச்சிக் குடுமி, பஞ்சு போன்ற வெள்ளைத்தாடி, இடது தோளிலிருந்து மார்பிலே தவழும் தடித்த பூணூல். காலிலே மரத்தினால் செதுக்கிய குமிழி மிதியடி…. அவர் நடக்கும் போது எழும் மிதியடியோசை என் நெஞ்சைத் தட்டிக் கொண்டே இருக்கும்.
காலையில் எழுந்ததும் குளித்து சந்தியாவந்தனம் முடித்து சிவபூசை செய்த பின்னர்தான் தாத்தா எந்த வேலையையும் தொடங்குவார். நெற்றியிலும், மார்பிலும், கைகளிலும் திரிபுண்டரமாகத் தரித்த திருநீறு. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் குங்குமமும் துலங்கும். அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர்மேல் ஒருவகை மரியாதை தோன்றும்.
எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயதுதான் இருக்கலாம். அம்மணமாக ஓடித்திரிந்த வயது. தாத்தா ஒருநாள் என்னைப் பார்த்தபோது, தனது கண்களை இடுக்கி நாக்கைக் கடித்துக் கொண்டு, ஓடுகின்ற பல்லியையோ பூச்சியையோ குறிவைத்து அடிக்கும் பாவனையுடன் தனது வளைந்த கைப்பிடியுடன்கூடிய தடியைப் பலமாக என்மீது ஓங்கி, பின்னர் அதன் வீச்சினைக் குறைத்து, நுனித் தடியால் எனது அம்மணத்தில் மெதுவாகத் தட்டியபோது நான் கூச்சத்துடன் கைகளால் பொத்தியபடி அவரைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்ததை அவர் ரசித்துப் பலமாகச் சிரித்த காட்சி இன்னும் என்மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
தாத்தாவைப்பற்றிய கனத்த நினைவுகளோடு இருட்டைக் கிழித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இருளைக் கண்களுக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதற்காக சற்று நேரம் இருளுக்குள் பார்வையை அழுத்திக் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டியிருந்தது. கண்கள் இருளோடு சங்கமித்தபோது கால்களை மெதுவாக நகர்த்தினேன்.
ஊருக்குள் செல்பவர்கள் யாராவது வந்தால் துணைக்குப் பேசிக் கொண்டே போகலாம். இந்த நேரத்தில் யார்தான் வருவார்கள்? நடையைச் சற்று வேகமாக்கினேன். ஊருக்குள் திரும்பவேண்டிய ஒழுங்கை இன்னும் சற்றுத் தூரத்திலே இருக்கிறது. தெருவும் ஒழுங்கையும் சந்திக்கும் இடத்திலே இருக்கும் ஐயனார் கோயிலைத் தாண்டி போயிலைச் சுப்பரின் கடையை அடைந்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு பயமில்லை. ஐயனார் கோயிலின் பக்கத்திலே இருக்கும் ஆலமரம்தான் வயிற்றைக் கலக்குகிறது.
அந்த ஆலமரத்தைப் பற்றியும் அதன் பக்கத்திலே இருக்கும் ஐயனார் கோயிலைப்பற்றியும் தாத்தா எனக்குப் பல கதைகள் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து ஒரு மைல் தூரம் ஊரின் உள்ளே சென்று விட்டால் அங்கே இருக்கும் பிள்ளையார் கோயிலின் தெற்கு வீதியிலேதான் எங்களது வீடு இருக்கிறது. அந்த ஆலமரத்தின் உச்சியில் கொள்ளிவாய்ப் பேய்கள் குடியிருப்பதாகத் தாத்தா கூறியிருக்கிறார். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் இரவு தாத்தா என்னை வீதிக்கு அழைத்துவந்து தூரத்தே தெரியும் ஐயனார் கோயில் ஆலமரத்தின் பக்கம் காட்டினார். அங்கே கொள்ளிவாய்ப் பேய்கள் திரிவதைப் பார்க்கச் சொன்னார். ஆலமரத்தின் உச்சியிலிருந்து தீப்பொறிகளைக் கக்கியபடி வாண வேட்டுக்கள் போன்று கும்மிருட்டில் அங்கும் இங்கும் சில கொள்ளிவாய்ப் பேய்கள் ஓடித் திரிந்ததை என் கண்களால் கண்டு பயத்தில் உறைந்து போனேன். அந்த ஆலமரத்தில் யாரோ ஒரு குமர்ப் பெண் தூக்குப் போட்டுச் செத்ததாகவும் அந்தப் பெண்ணின் ஆவிதான் கொள்ளிவாய்ப் பேயாக நடமாடுவதாகவும் ஊரிலே பேசிக் கொண்டார்கள்.
மனம் பயத்தினால் திக்திக்கென அடித்துக் கொண்டது. தனிமையில் நடக்கும்போதுதான் மனதில் வேண்டாத நினைவுகள் எல்லாம் வந்து தொலைக்கின்றன! பின்னால் மிகச் சமீபமாக யாரோ வருவதைப் போன்ற பிரேமை; திரும்பிப் பார்த்தேன். யாரும் தென்படவில்லை இருட்டில் தனியாக வரும்போது பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாதென்று தாத்தா ஒரு முறை எனக்குக் கூறியிருக்கிறார். அந்த ஞாபகமும் எனது பயத்தை அதிகரிக்கச் செய்தது. அப்படித் திரும்பிப் பார்த்தால் எம்மைப் பின் தொடரும் ஆவிகள் முதுகிலே அறைந்து விடுமாம். இதனை அவர் சொன்ன வேளையில் நான் அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. கதைவிடுகிறார் என நினைத்தேன். ஆனால் அவர் கூறியது இப்போது என்னைப் பயங்கொள்ள வைத்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாதென எண்ணிக் கொண்டேன்.
தாத்தா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை சிறுவயது முதற்கொண்டே எனக்கிருந்தது. அதற்குக் காரணம் அவர் தனது அறிவாற்றலால் என்னை ஆகர்ஷித்திருந்தார். தாத்தாவுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலும் சமஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமையிருந்தது. அடிக்கடி பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பாடல்களைப் பாடி அவற்றின் சுவைகளை எடுத்துக் கூறுவார். அப்போதெல்லாம் தாத்தா எப்படி இவ்வளவு பாடல்களை மனத்தில் வைத்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வால்மீகி இராமாயணத்திலிருந்து சமஸ்கிருத சுலோகங்களைக் கூறி அதன் சுவைகளைத் தமிழிலே எடுத்துச் சொல்வார். மகாபாரதக் கதையைத் தொடராக தினம்தினம் அவரது மடியில் இருந்து கேட்ட நாட்கள் அற்புதமானவை. அந்தக்கதையில் வருகின்ற பீஷ்மர் போலவே தாத்தா தோன்றுவார். தாத்தாவும் பீஷ்மரைப் போன்று பிரமச்சாரிதான் என்பதை அம்மா எனக்குச் சொல்லியிருக்கிறார். தாத்தாவின் உடம்பு வாசனை பீஷ்மரிடமும் இருந்திருக்குமோ ?
மீண்டும் ஐயனார் கோயிலடி ஆலமரத்தின் ஞாபகம். நன்கு உயர்ந்து வளர்ந்த மரம் அடர்த்தியாகக் கிளை பரப்பி விழுதுகள் ஊன்றி அதன் சுற்று வட்டாரத்தையே ஆக்கிரமித்திருந்தது. பகல் நேரத்தில் கூட அதன் அடிப்பாகம் சற்று இருள்மண்டியே காணப்படும்.
அந்தக் காலத்தில் தாத்தா சொன்ன கதையொன்று என் ஞாபகத்தில் வந்தது. தாத்தாவின் வாலிபப் பருவம் அது. ஒரு நாள் நடுச்சாமம் ஐயனார் கோயில் வழியாக வரவேண்டிய சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டதாம். ஐயனார் கோவிலின் முன்னால் ஒரே சனக்கூட்டமும் வெளிச்சமுமாக இருந்ததினால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும் நோக்கத்துடன் அவர் தரித்து நின்று பார்த்திருக்கிறார். கோயிலின் முன்னால் பலர் கூடியிருந்து பொங்கல்பானை வைத்துப் பொங்கிக் கொண்டிருந்தார்களாம். சிலர் பொங்கி முடித்து ஐயனாருக்குப் படைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்களாம். தாத்தா விடுப்புப் பார்க்கும் நோக்கத்துடன் அங்கு சென்றிருக்கிறார். அவர்கள் தாத்தாவை வரவேற்று, பொங்கல் பிரசாதம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்களாம். வெற்றிலை பாக்கு கொடுத்துத் தாம்பூலம் தரித்துக் கொள்ளும்படி வேண்டினார்களாம். அவர்களில் சிலரும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டார்களாம். அவர்களிடம் சுண்ணாம்பு இருக்கவில்லை. தாத்தாவிடம் சுண்ணாம்பு கேட்டு வாங்கி வெற்றிலையில் தடவி மடித்துத் தாத்தாவுக்கும் கொடுத்தார்களாம். தாத்தா தற்செயலாகக் கீழே பார்த்திருக்கிறார். அப்பொழுதுதான் அங்கே இருந்தவர்களது கால்கள் நிலத்திலே பதியாது அந்தரத்தில் இருந்ததைக் கவனித்திருக்கிறார். தாத்தாவுக்கு அப்போதுதான் பேய்களின் மத்தியில் தான் மாட்டிக் கொண்டிருப்பது புரிந்ததாம். மெதுவாக அவர்களுக்குப் போக்குக் காட்டி அந்த இடத்தைவிட்டு நழுவி வந்து விட்டாராம். இது, தாத்தா பேய்களிடம் வெற்றிலை வாங்கிப் போட்ட கதை. இப்படியான கதைகள் பலவற்றை தாத்தாவின் மடியில் உட்கார்ந்தவாறு மெய்மறந்து வாய்பிளந்து கேட்டிருக்கிறேன்.
‘சர்வே ஜனா ஸுஹினோ பவந்து’ எனத் தாத்தா அடிக்கடி கூறிக்கொள்வார். அதன் அர்த்தம் அந்தக் காலத்தில் எனக்குப் புரிந்ததில்லை. பிற்பட்ட காலத்தில் நான் பாரதியாரின் கவிதா விலாசத்தில் மூழ்கித் திளைத்து, ‘வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே’ என்ற வரிகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட போதுதான் தாத்தாவின் உள்ளத்தின் விசாலத்தை புரிந்து கொண்டேன்.
இப்போது எனது காலடிகள் ஐயனார் கோயிலடி ஆலமரத்தை நெருங்கியிருந்தன. பாதையின் இருமருங்கிலுமுள்ள தோட்டங்களி லிருந்து வரும் இரவுப் பூச்சிகளின் இரைச்சல் இருபக்கச் செவிகளையும் துளைத்தன. அது மேலும் எனது பயப் பிராந்தியை அதிகரிக்கச் செய்தது. எனது நடையின் வேகம் கூடியிருந்ததை உணர்ந்தேன்.
காலில் ஏதோவொன்று இடறியது. மனதைப் பிழந்து கொண்டு ஆப்பு ஒன்று இறங்கியதைப் போன்ற உணர்வு. மூளையின் நரம்புகள் அதிர்ந்து செவிப்பறைக்குள் ரீங்காரித்தன. அந்த அதிர்வின் பயம் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. சுற்றுச் சூழலுக்குள் புதைந்து கொண்ட எனது இதயத் துடிப்பின் ஓசை இருமடங்காய் என் காதுக்குள் சப்தித்தது. கல்லொன்றில் எனது கால் இடறிப் பெருவிரல் நகம் பிளந்திருக்கவேண்டும். விண்விண்ணென்று தெறித்தது. பெரு விரலுக்கும் அடுத்த விரலுக்கு மிடையில் பிசுபிசுப்பை உணர்ந்தேன். தரித்துநின்று காலைத் தடவிப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தது.
எனக்கு ஒரு பத்தடி தூரத்தில் ஆலமரம் இருட்டோடு இருட்டாய் விழுதுகள் ஊன்றி நின்று கொண்டிருந்தது. கம்பீரமான ஓர் இராட்சசனாய் நிமிர்ந்து நின்ற அந்த மரத்தின் உச்சியைப் பார்ப்பதற்கு எனக்குத் திராணி இருக்கவில்லை. கொள்ளிவாய்ப் பேய்கள் எனத் தாத்தா எனக்குக் காட்டியது காற்றிலே எரியக் கூடிய ஒரு வாயுதான் என்பதை நான் பிற்காலத்தில் உயர்வகுப்பில் விஞ்ஞான பாடத்தில் படித்தபோது அறிந்து கொண்டது உண்மை எனினும் ஏனோ அந்த உச்சியைப் பார்ப்பதற்கு எனக்குப் பயமாக இருந்தது.
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்காக எங்களது குல தெய்வமான பிள்ளையாரை நினைத்துக் கொண்டேன். சிறிது நேரந்தான் பிள்ளையார் மனதில் வீற்றிருந்தார். பின் எங்கிருந்தோ பேய்கள் ஐயனாருக்குப் பொங்கல் வைக்கும் காட்சி என் மனதுக்குள் புகுந்து கொண்டது. இப்போது என்ன செய்வது? இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ சிறுகதையில் வரும் செல்லையா, கொள்ளிவாய்ப் பேய்கள் ஏற்படுத்திய பயத்தை மறைக்க தேவகாந்தாரி இராகம் பாடிய ஞாபகம் வந்தது. எனக்குத் தேவகாந்தாரி தெரியாது. எனவே ஒருதேவாரத்தைப் பாடத் தொடங்கினேன். ‘வேயுறு தோழிபங்கன்’ என்ற கோளறு பதிகத்தை எனது வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது. இடையே பேய்கள் தாத்தாவிடம் சுண்ணாம்பு கேட்டதும் நினைவில் வந்தது. அந்தப் பதிகத்தின் கடைசி வரிகள் மறந்துபோனதால் ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதிசொன்னாளே’ என்ற சினிமாப் பாடலுடன் அதனை முடிச்சுப் போட்டேன். எதையாவது உரத்து முணு முணுத்தால்தான் எனது பயத்தைக் கட்டுப்படுத்தலாம் போலிருந்தது.
பயத்தை உண்டாக்கும் நினைவுகளை மறக்க நான் எத்தனம் செய்து கொண்டிருந்த வேளையிலேதான் அந்தச் சத்தம் என் செவிகளை வருடியது. ‘கிணிங் கிணிங்’ என்ற மணிச்சத்தம் போன்ற அந்த மெல்லிய ஒலி என் மூளையின் உச்சிவரை கேட்டது. அந்த ஒலி ஐயனார் கோயிலிலிருந்து வருகிறதா அல்லது ஆலமரத்தின் உச்சியிலிருந்து வருகிறதா? அல்லது மனப் பிரமையா ?
பின்னால் திரும்பிப் பார்க்கலாம் என நினைத்தேன்; பயமாக இருந்தது.
முதுகில் அறை விழும்.
பயம் நடையின் வேகத்தைக் கூட்டியது. ஆலமரத்தைத் தாண்டும்போது ஒரு வாசனையை என்னால் நுகர முடிந்தது. அது தாத்தாவின் உடம்பிலிருந்து வீசும் வாசனையை ஒத்திருந்தது. மரணப் படுக்கையில் எனது வரவுக்காகக் காத்திருக்கும் தாத்தாவின் வாசனை இந்த நேரத்தில் இந்த இடத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை. முதலில் மெல்லிய வாசனையாக ஆரம்பித்து படிப்படியாக அதன் செறிவு கூடிக் கொண்டிருந்தது. நுகர நுகர அந்த வாசனை என்னை மயக்க நிலைக்குத் தள்ளிவிடும் போலிருந்தது. அதுவும் ஒரு கணப்பொழுது தான். பின்னர் அந்த வாசனையின் செறிவு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது.
சிறிது நேரத்தில் அந்த வாசனையின் தாக்கம் என்னை நிலை தடுமாற வைத்துவிட்டது. தேகமெங்கும் குப்பென வியர்த்து விட்டது. எனது நடையின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்து நான் ஓடத் தொடங்கினேன். வீட்டின் திசையை மனத்திலிருத்தி ஓடத் தொடங்கினேன். கையில் கொண்டுவந்த கைப்பையை நெஞ்சோடு அணைத்தபடி ஓடினேன். போயிலைச் சுப்பரின் கடை வந்ததும்தான் இனிப் பயமில்லை என்ற நிலையில் எனது ஓட்டத்தை நிறுத்தினேன்.
கடையின் முன்பக்கம் மூடப்பட்டு இருளில் ஓய்வு கொண்டிருந்தது. உள்ளே சுப்பர் உறங்கிக் கொண்டிருப்பார். கடையின் முன்பக்கமாக இருந்த வாங்கில் அமர்ந்து சற்று ஓய்வாக மூச்சு விட்டேன். மெது மெதுவாக என்னை ஆட்கொண்டிருந்த அமானுஷ்யம் இப்போது விலகத் தொடங்கியது. கதவைத்தட்டி சுப்பர் மாமாவை எழுப்பலாம் என்ற நினைவை ஏதோவொரு தைரியத்தில் மாற்றிக் கொண்டேன்.
வீட்டிற்கு இன்னும் சிறிது தூரம்தான் இனிப் பயமில்லை. கிழக்கு வானிலிருந்து பனை வடலிகளுக்கூடாகச் சந்திரன் வெளியே எட்டிப் பார்த்தான். இப்போது பாதையைப் பார்த்து நடக்கக் கூடிய வெளிச்சம் துலங்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சத்தில் பயவுணர்வுகள் அவ்வளவாக வெளிப்படுவதில்லைத்தான். ஆனாலும் அந்த வாசனை மட்டும் என்னைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அது ஏற்படுத்திய திகிலோடு நான் வீட்டை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கினேன்.
பிள்ளையார் கோயிலின் தெற்குப் புறத்தில் உள்ள எங்கள் வீட்டு வாசலை நெருங்க நெருங்க அங்கிருந்து மெல்லியதான அழும் ஓசை வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். வீட்டுப் படலையடியில் வந்தபோது, வீட்டினுள்ளே இன்னும் விளக்குகள் எரிந்து கொண்டி ருப்பதைக் கவனிக்கக் கூடியதாக இருந்தது. மனதில் கேள்விக் குறியோடு படலையைத் திறந்தேன். வீட்டை நெருங்க நெருங்க அந்த அழுகை ஒலி தெளிவாகக் கேட்டது. அது அம்மாவின் அழுகை ஒலி. அம்மாவின் அழுகை அங்கு நடந்த விபரீதத்தை உணர்த்தியது. திக்திக்கென்ற இதயத் துடிப்போடு வீட்டு விறாந்தையை அடைந்தேன். அங்கே வீட்டில் உள்ளவர்களோடு ஊர்மக்கள் சிலரும் காணப்பட்டனர்.
மாமா என்னை நோக்கி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு ஓவென அழுதார். தாத்தா போய்விட்டார் என்பது எனக்குப் புரிந்தது. மாமாவின் தொண்டை கரகரத்தது. சற்று முன்னர்தான் தாத்தாவின் உயிர் பிரிந்ததாக மாமா கூறினார். இறுதியாக அவர், அருகே தூங்கிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டிருக்கிறார். அம்மா தண்ணீர் கொண்டுவருவதற்கு முன்னரே அவரது உயிர் பிரிந்து விட்டது.
முன்விறாந்தையில் எனது கைப்பையைப் போட்டுவிட்டு தாத்தாவின் அறைக்குள் நுழைந்தேன். அறையின் நடுவே தாத்தாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. தாத்தாவின் கால்மாட்டிலிருந்து அழுது கொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும் எழுந்து என்னைக் கட்டிக் கொண்டு பெரிதாக விம்மத் தொடங்கினார். அம்மாவைக் கட்டுப் படுத்துவது சிரமமாக இருந்தது.
தாத்தாவின் அருகே சென்றேன். அவரது உயிரற்ற உடல் அமைதியாகக் கிடந்தது. ‘உன்னைப் பார்க்கவேண்டும், உன்னோடு பேசவேண்டும் என ஏக்கத்துடன் காத்திருந்தேன். ஏமாற்றிவிட்டாயே’ எனத் தாத்தாவின் முகம் என்னைக் குற்றம் சாட்டியது. அம்புப் படுக்கையில் உயிர் போகமுடியாமல் தவித்த பீஷ்மரைப் போன்றுதான் தாத்தாவும் தவித்திருப்பாரோ….
கடைசியாக என்னைப் பார்க்கவேண்டுமென்ற அவரது ஆசை ஒரு சில நிமிடங்களால் நிராசையாய்ப் போனது என் நெஞ்சை அடைத்தது. அவர் என்னிடம் என்னசொல்ல இருந்தாரோ…? அடக்கமுடியாத சோகம் என்னுள் வெடித்தது. கண்களில் கண்ணீர் பிரவாகித்தது. அவரது இரக்கமும் அன்பும் தோய்ந்த முகத்தைப் பார்க்கமுடியாதவனாய் யன்னல் ஊடாக வெளியே தூர இருளுக்குள் நோக்கினேன். இப்போது இருட்டு என்னைப் பயமுறுத்தவில்லை. பதிலாக ஒருவகைச் சினத்தை உண்டு பண்ணியது.
அப்போது… அந்த வாசனை… தாத்தாவின் உடம்பிலிருந்து வீசும் அந்த வாசனை எனது மூக்கை வருடியது. எனது மனம் நடுங்கியது. மீண்டும் என் நெஞ்சுக்குள் இறுக்கமான ஏதோ உருள்வதைப் போலிருந்தது. நடுங்கிய இதயத்தோடு உற்று நோக்கினேன். வாசனையின் செறிவு இப்போது சிறிது சிறிதாகக் குறைந்து எனது உயிருள் ஒடுங்கிக் கொண்டிருந்தது.
-கலசம் 1972