வாசனைத் தைலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 7,690 
 

பொழுது சரக்கென்று விளக்கணைத்தது போல இருட்டி விட்டது. ஆறுமணி கூட ஆகியிருக்காது என்று நினைத்ததும், கதவை அகலத்திறந்து எதிரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறு பத்தாகி இருந்தது, வாசலில் உட்கார்ந்து கஸ்தூரி அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்ததில், நேரம் போவதே தெரியவில்லை. எப்போதுமே அப்படித்தான், கஸ்தூரி அக்காவுடன் பேச உட்கார்ந்து விட்டால், அலுப்பும், சலிப்பும் வெட்கமில்லாத கதைகளாய் வெளியே வரும். சொன்ன கதை தான் என்றாலும், பரிமளத்துக்கு ஏனோ எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது. எச்சில் பெருக்கி, உறிஞ்சி கொண்டே கஸ்தூரி அக்கா கதை பேசுவதைப் பார்க்கும் போது, வாழ்க்கையே பெரிய பதார்த்தம் மாதிரி ருசித்திருப்பாள் போல என்று நினைத்துக் கொள்வாள். கஸ்தூரி அக்கா பக்கத்தில் இல்லாதிருந்தால், எத்தனை கஷ்டம் என்று நினைத்தபோது அவளுக்கு ஏனோ கஸ்தூரி அக்காவை திரும்பி பார்க்கத் தோன்றியது.

காலை அகல விரித்து வாசலில் உட்கார்ந்திருந்தாள் கஸ்தூரி அக்கா. புடவை தலைப்பை பிரியாய் போட்டு கழுத்தைச் சுற்றி மாலை மாதிரி போட்டிருந்தாள். முழுதும் நனைந்த பச்சை ரவிக்கையின் நிறமே மாறி வெளுத்திருந்தது, கையிடுக்கிலும், இடுப்பிற்கு மேலும் ரவிக்கை உப்பு பரிந்து கிடந்தது. மடிப்புகள் விழுந்த இடுப்பு சதை தடித்திருந்தாலும், ஒரு கவர்ச்சி இருந்தது அதில். முதுகிலே பார்வை உறுத்த, கழுத்தை திருப்பிய கஸ்தூரி, இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என்பது போல பார்த்தாள் பரிமளத்தை. ஒண்ணுமில்லக்கா! என்றபடியே தொட்டிலை விரித்து பார்த்தாள், ஒண்ணுக்குப் போய் அதன் மேலேயே படுத்திருந்தவனை உசுப்பாமல், தொட்டிலை, லேசாக ஒருபக்கமாய் இழுத்தாள், அவன் உருண்டு ஒண்ணுக்கு இல்லாத இடத்திற்கு வந்திருந்தான் இப்போது. அப்படியே விட்டுவிட்டு, கொடியில் கிடந்த துண்டையும், உள்பாவாடையும் மட்டும் எடுத்துக் கொண்டாள். குளித்துவிட வேண்டும் என்று தோன்றியது, இத்தனை கசகசப்பும், வியர்வையும் ஒருவித அயர்ச்சியைத் தந்துவிடுகிறது, குளித்துவிட்டால் இழந்ததை மீட்டுவிட்டது போல இருக்கும் அவளுக்கு.

”அக்கா! இவனை பார்த்துக்கோங்க, போய் குளிச்சிட்டு வந்துடறேன்!” என்றாள். கஸ்தூரி அக்கா, உட்கார்ந்தவாறே ஒரு பக்கமாய் சாய, அவள் தோளைத் தொட்டு தாண்டிச் சென்றாள்.

பொது கக்கூஸ் பொது பாத்ரூம். நாலு வீடுகள் தான், பெரிய பிரதான வீதியில் உள்ள பெரிய வீடுகளுக்கு இடையேயான சந்தில் புகுந்து வந்தால், சிறிது தூரத்தில் வந்துவிடும் இந்த வீடுகள். பாத்ரூம், சாக்கடைத் தண்ணியில் செழித்து வளரும் வாழை மரங்கள் இரண்டு, ஒரு தென்னை மரம் அப்புறம் ஒரு கிணறு. தண்ணீர் இருக்கும் கிணறு, கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான். அதை ஒட்டியபடி மேலே, ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த பாத்ரூம், கக்கூஸ். காரை பெயர்ந்து செங்கல்கள் வெளியே தெரியும் முன்பக்கம். பாத்ரூம் மட்டும் நல்ல சாந்து பூசியது மாதிரி, உதிராமல் இருக்கும் சுவர்கள், கொஞ்சம் ஒட்டடைகள்.

சிமெண்ட் தொட்டியில் ஊற்றி வைத்திருந்த தண்ணீர் சில்லென்றிருந்தது. பாத்ரூமின் கதவு மேலே கழற்றிய துணிகளைப் போட்டு விட்டு, முழுதாய் நின்ற போது குண்டு பல்பின் பிசுக்கு வெளிச்சத்தில், தண்ணீர் தொட்டியில் மங்கலாய் தெரிந்தது அவளின் உருவம். தலைமுடியை விரித்து விட்டு, முதல் செம்பை உடம்பில் ஊற்ற, தண்ணீர் படாத இடங்களில் குறுமுடிகள் நின்றது போல இருந்தது. இப்படித்தான் இருந்தது, முதன்முதலாக பரமசிவம் தொட்டபோதும், ஒரே சிலிர்ப்பாய், முதுகுத்தண்டில் இருந்து உச்சி மண்டை வரை. அடுத்தடுத்து தண்ணீரை ஊற்றிக் கொண்டு பரமசிவத்தை சோப்பு போட்டு கரைக்க ஆரம்பித்தாள். ஒரு நாள் தவறாமல் பரமசிவத்தின் நினைவு ஏதாவது காரியத்தின் ஊடே வந்துவிடுகிறது.

மைசூர் சந்தன சோப்பின் மனம் பரிமளத்தை, பெயர்க் காரணி ஆக்கியது. குளித்து முடித்து, ஈரத்துணியை தலையிலே கட்டிக் கொண்டு, கதவின் மேல் போட்டிருந்த பாவாடையை தலை வழியாக புகுத்தி, நெஞ்சில் ஏற்றி கட்டிக் கொண்டாள். நனைந்திருந்த மார்பு பாவாடையில் ஒட்டிக் கொண்டது, முன்பக்கமாய் இழுத்து உப்பலாக்கி சரிசெய்தவள், கதவைத் திறந்து வீட்டிற்கு பொறுமையாய் நடந்தாள். பெரிய வீட்டு மாடியில் யாரோ நிற்பது போலிருந்தது. திரும்பி பார்த்தவள், தனக்கா மகன் என்பதை தெரிந்து கொண்டு, என்ன என்பது போல தலையை உயர்த்த, கைப்பிடிச்சுவரில் மறைந்தான். இவளுக்கு சிரிப்பாய் இருந்தது. இன்னும் கஸ்தூரி அக்கா வாசலிலேயே உட்கார்ந்திருந்தாள். பையன் இன்னும் தூங்குகிறான் போல, இரண்டு வயதாகியும், தொட்டிலில் தான் தூங்குகிறான்.

கஸ்தூரி அக்கா, இவளைப் பார்த்து கண்களை சிமிட்டிய படியே கேட்டாள், ‘என்னடி, தனம் பையன், ரொம்ப நாளா உன்ன நோட்டம் விட்டுட்டு இருக்கான், வரச்சொல்றது தான ஒரு நாளு!’.

“போக்கா நீ வேற, அவங்க ஆத்தாவுக்கு தெரிஞ்சா, என்னைய இங்க இருக்க விடுமா? மறுநாளே போய் ரோட்டுல நிக்க வேண்டியது தான்!”. “இப்பவே கொஞ்சம் அரசல் புரசலா தெரியும் தான், போனாப் போகுதுண்ணு விட்டு வச்சிருக்கு! அதை கெடுத்துக்க சொல்றியே!” என்றாள் பரிமளம்.

“சரி நான் கெளம்பறேன், இன்னைக்கு மாணிக்கம் வர்றேன்னு சொல்லியிருக்கான், ஆட்டோவ எடுத்துக்கிட்டு, டவுன் ஹால் ரோடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!” ”ராத்திரி வர்ற லேட்டாயிடும், நீ புள்ளையப் பாத்துக்கோ! பயலை சாப்பிட வச்சுடு” என்றவள் கிளம்ப ஆயத்தமானாள்.

அரக்குக் கலர் ரவிக்கையும், சந்தனக் கலர் சேலையும் கொஞ்சம் எடுப்பா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே மர அலமாரியைத் திறந்து, புடவையை எடுத்தாள். புடவையுடன் செட்டாக வைத்திருந்த உள்பாவாடை, ரவிக்கையையும் எடுத்தவள், பிரா போடலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தவள், வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாள். எடுப்பா இருக்காது, ஆனாலும் கொஞ்சம் குழைவாய் இருந்தாத் தான் சிலபேருக்கு பிடிக்கும், தனக்கும் வசதியாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே, கதவை ஒருச்சாய்த்து விட்டு, உள்பாவாடையையும், ரவிக்கையையும் அணிந்து கொண்டாள். அக்குளில் மழுங்க சிரைத்ததில், எங்கோ காயம்பட்டுவிட, பவுடர் போட்டது எரிந்தது, ரவிக்கை பட்டதும் கூடுதலாய் எரிந்தது. தொடை இடுக்கிலும் நிறைய பவுடரை அடித்துக் கொண்டாள். நல்ல வேளை அந்த இடத்தில் முடிவெட்டும் போது ஏதும் காயமில்லை, இல்லையென்றால், அது ஒரு பெரும் அவஸ்தையாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

மர அலமாரியின் மேல்தட்டில் இருந்த பென்சிலை எடுத்து கண்களில் மை போட்டுக் கொண்டாள். மையை வைத்து கண்களை பெரிசாகவும், சிறிதாகவும் காட்டமுடிகிறது என்று தோன்றியது. மை தீட்டிய விதத்தில், கண்கள் பளீரென்றானது போல இருந்தது அவளுக்கு. முகத்துக்கு பவுடர் அடிக்கவில்லை, விக்கோ டர்மரிக் மட்டும் தான் போடுவது வழக்கம். மடித்து மடித்து பிதுக்கியதில், பின் பக்கம் துளையாகி, வெளியே வந்தது. பரவலாய் முகத்தில் இழுவிக் கொண்டு, மர அலமாரியின் கண்ணாடியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்தவள், வைத்தபடியே புருவமத்திக்கு இணையாய் அசக்கி வைத்துக் கொண்டாள். கழுத்தில் இருந்த செயினை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரவிக்கையை முன் பக்கம் விரலை விட்டு முன்பக்கமாய் இழுத்துக் கொண்டு மார்புகள் தூக்கலாய் இருப்பது மாதிரி செய்து கொண்டு, திரும்பி திரும்பி பார்த்தவள் திருப்தியாய் இருக்க, புடவையை எடுத்து, விசிறி விசிறியாய் கொசுவம் வைத்துக் கொண்டாள். மடிப்பு கலையாமல் இருக்க, ஊக்கை குத்திக் கொண்டாள். நிதானமாய் அவிழ்க்க நினைக்கையில், பொறுமை இல்லாமல் துடிப்பவர்களின் ஞாபகம் வந்தது, சிரித்துக் கொண்டாள்.

அலமாரியின் உள்ளே இருந்த கைப்பையை, எடுத்து பிரித்தவள், உள்ளே, போன வாரம் போன போது உபயோகப்படுத்தாத ஆணுறை, பிரிக்காமல் அப்படியே கிடந்ததைப் பார்த்தாள். போன முறை வந்தவன், ஆணுறை போடவேண்டும் என்று வற்புறுத்தியபோதும் ஒத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு எரிச்சலாய் இருந்தது, ஆணுறை இல்லாமல் செய்வது ஒரு பெரும் அவஸ்தையும், பயமும் கூட. உண்டாவது மட்டுமே கவலை இல்லை, என்ன வியாதியோட இருப்பானோ என்று யோசனையாயிருக்கும் அவளுக்கு.

கஸ்தூரி அக்கா சொல்வாள், “இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டா எவன் வருவான்னு!” ஆனாலும், அவள் அதை பொருட்படுத்துவது இல்லை.

அவள் கருத்தடைக்கென்று ஏதும் மாத்திரை சாப்பிடுவது இல்லை அதுவும் பிரீயட் முடிஞ்சு பத்தாவது நாளோ என்னவோ அன்றைக்கு?! கொஞ்சம் போதும் கருத்தரிக்க! கலைத்துவிட முடியும் என்றாலும் அதில் இருக்கும் சிரமங்கள் அதிகம். அவள் வழக்கமாய் போகும் டாக்டரம்மா இப்போதெல்லாம் அதிகம் பணம் கேட்கிறாள், அவன் எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. கஸ்தூரி அக்காவின் காலத்தில், கலைப்பது எல்லாமே குச்சியின் முனையில் கொஞ்சம் துணியை சுற்றிக் கொண்டு அதில் சீமத்தண்ணியில் நனைத்து அதை உள்ளே சொருகி கலைப்பது பற்றி கேட்கும் போதே அவளுக்கு, பயம் வந்துவிடும். ஆனால் கஸ்தூரி அக்கா அதை சாதாரணமாக சொல்வாள்.

இது போல சில நேரங்களில், ஆணுறை கட்டாயம் போடவேண்டும் என்று சொல்லி, வந்த ஒரு ஆளும் போய் விட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் சம்மதித்துவிடுவாள். அன்றைக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்த பிறகு, சுத்தமாய் கழுவியும் பயம் இருந்ததால், கொஞ்சம் அவளுடைய சிறுநீரையும், அவன் குடித்து மிச்சம் வைத்திருந்த பிராந்தியையும் வைத்து கழுவின பிறகே நிம்மதியாய் இருந்தது. இதெல்லாம், கஸ்தூரி அக்கா சொல்லிக் கொடுத்தது தான்.

முழுதும் தயாராகி, வாசலுக்கு வந்தவள், மேலே எரவாணத்தில் சொருகியிருந்த, செருப்பை எடுத்துப் போட்டுக் கொண்டாள். புடவைத் தலைப்பை இன்னுமொருமுறை சரியாக நீவிக் கொண்டு வெளியே வந்தாள். இருட்டிவிட்டது, மாணிக்கம் வரும்வரை வாசலில், கஸ்தூரி அக்காவிடம் பேசிக் கொண்டு இருக்கலாம். பையன் இன்னும் தூங்குகிறான், திரும்பி வரும்போது முழிச்சிட்டு இருப்பான் என்று தோன்றியது. அவன் முழித்துக் கொண்டு இருந்தால், அவள் தூங்குவது முடியாது, அவனை திரும்பவும் தூங்க வைக்க பாடாய்ப் படவேண்டும். ரொம்ப அலுப்பாய் இருக்கிற நாட்களில், அவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கலந்து பிராந்தியை ஊற்றி விடுவாள்.

ஆட்டோ சத்தம் கேட்டது, மாணிக்கம் தான், சந்துக்குள் இந்நேரம் வேறு யாரும் வரப்போவதில்லை.

”வந்துட்டான் போல்ருக்கே! பூ வச்சுக்கலையா?” என்றாள் கஸ்தூரி அக்கா.

’மாணிக்கத்தை வாங்கிட்டு வரச்சொல்லியிருக்கேன்க்கா!’ என்றவள், ஆட்டோ வந்தால் தெரியும் இடத்திற்கு நகர்ந்து கொண்டாள். ஆட்டோ வந்துவிட்டது, சத்தத்தை நிறுத்தி, சீட்டுக்கடியில் இருந்து பூப்பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான். பிச்சிப்பூ நெருக்கமாய் கட்டப்பட்டிருந்தது, கையில் மொத்தப் பொட்டலத்தையும் வாங்கியவள், இரண்டு கைகளிலும் பிடித்தபடி மூக்கில் வைத்து வாசனை முழுமையும் உறிஞ்சி எடுத்துவிடுவதைப் போல முகர்ந்தாள்.

‘காட்டுப்பிச்சி!’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டாள்.

”சீக்கிரம் வா, டவுன் ஹால் ரோடில்லை, ஏதோ ஓட்டலுக்குப் போகணும்! பார்ட்டி அங்க தான் வருது போல!” என்றான் மாணிக்கம்.

’வருது போலன்னா, உனக்குத் தெரியாதா எந்த இடம்னு? போன வாட்டி போல அலையவிட்டுடாத! கடுப்பாயிடும்!’ என்றாள் ஒரு விரலை உயர்த்தி, நாக்கைத் துருத்தியபடி.

”எல்லாந்தெரியும் வா, சும்மா! என்று அவளை அடக்கினான்.

’வரேங்க்கா, அவனை பாத்துக்கோங்க! என்றவள், ஏறுவதற்கு முன்னால், பெரிய வீட்டு மாடியை ஒருமுறைப் பார்த்தாள்.

வீட்டில் இருந்து இருபது நிமிடத்தில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்த ஒரு பெரிய ஓட்டலின் முன்பாக வண்டியை நிறுத்தினான் மாணிக்கம். அவளை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு, ஓட்டலின் வரவேற்பறைக்குப் போனவன், அவர்களுடன் ஏதோ பேசிவிட்டு, இவளைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டி அழைத்தான்.

ஆட்டோவின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டு, ஹாண்ட் பேக்கில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தில் ஒத்திக் கொண்டாள். புடவை முந்தானை கொஞ்சம் தளர்வாய்ச் சுற்றி, இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

ஓட்டலின் வரவேற்பறையில் கேள்வியாய் பார்த்தவர்களைத் தாண்டி மாணிக்கம் அழைத்துச் செல்ல பின் நடந்தாள். லிஃப்டில் ஏறி மூன்றாம் மாடிக்கு சென்றவுடன் 306 கதவிற்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினான் மாணிக்கம். பரிமளத்துக்கு கொஞ்சம் வேர்த்தது, உள்ளே ஏசி இருக்கும் என்று தோன்றியது. கதவைத் திறக்க ஏனோ தாமதமானது, அறை வாசலுக்கு முன்னால், ஏதோ சாப்பிட்டு விட்டு வைத்திருந்த தட்டுகள் இருந்தது. மாணிக்கம் பொறுமையில்லாமல், மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினான். வராண்டாவில் இவர்களை கடந்து போன ஒருவன், பரிமளத்தின் குழைவான இடுப்பை பார்த்தபடியே நகர்ந்தான். பரிமளம் திரும்பி பார்த்தபோது பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

கதவைத் திறந்தவன் நாப்பதைந்து வயதுக்கு பக்கத்தில் இருந்தான். முன் வழுக்கையின் பளபளப்பு செழிப்பான ஆள் என்று தோன்றியது.

“இவங்க தான் சார்!, நான் கிளம்புறேன்!” “அக்கா நான் கீழே இருக்கேன், நான் ஆட்டோ பக்கத்துல இல்லேன்னா, முனைக்கடையில தான் இருப்பேன், நிதானமா வா!” என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். பிறரின் முன்பாக அக்கா என்று தான் அழைப்பான். என்ன பெயர் சொல்லப்போகிறாள் என்று தெரியாததால், பொதுவாய் அக்கா என்று அழைப்பது தான் அவனுடைய வழக்கம்.

சரி என்பது போல அந்தாள் தலையாட்டிவிட்டு, அவள் உள்ளே நுழைய ஒதுங்கினான். அவள் உள்ளே வந்தவுடன் வெளியே தலையை நீட்டி பார்த்துவிட்டு, கதவை மூடினான்.

திரும்பியவன் பரிமளத்தைப் பார்த்தான், சிரித்தான். குடித்திருக்கிறான் போல, லேசாய் செருகிய கண்களில் தெரிந்தது. நல்லா பார்க்கட்டும் என்று நினைத்தவள் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். இடுப்பில் செருகியிருந்த தலைப்பை எடுத்துவிட்டதும், முந்தானையும் கீழே விழுந்தது. அதனை கண்டு கொள்ளாது, அறையைச் சுற்றி பார்த்தாள், மெத்தென்ற டபுள் பெட், புசுக், புசுக்கெனும் தலையணைகள், பளீரென்று வெள்ளையாய் இருந்தது. இரண்டு பக்கமும், சின்ன மேசைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. பெட்டின் இடது பக்கத்தில் ஒரு பெரிய கண்ணாடியும் ஒரு டேபிளும் இருந்தது. அங்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் பெட்டி வைப்பதற்காக ஒரு குட்டை மேஜையும், அதன் அருகிலேயே ஒரு பெரிய அலமாரியும் இருந்தது. பெட்டி சரியாய் மூடவில்லை. அதற்கு எதிரே பாத்ரூம் இருந்தது. கண்ணாடியின் முன் மேஜையுடன் இருந்த நாற்காலியில் அவனுடைய பேண்டும், சர்ட்டும் ஒழுங்கில்லாமல் கிடந்தது. பர்ஸின் முனைவெளியே பிதுங்கிக் கொண்டு இருந்தது போலத்தோன்றியது. வலது பக்கம் டிவியில் ஏதோ புரியாத பாஷையில் படம் ஓடிக் கொண்டிருந்தது.

”எதுனா சாப்டுறியா?” என்றான் தமிழில், பரிமளத்தின் கவனத்தில் கல்லெறிந்தது அவன் குரல். தெலுங்காகவோ அல்லது கன்னடமாகவோ இருக்க வேண்டும், அவன் பேசுகிற தமிழ் வேறு மாதிரி இருந்தது.

சாப்பிடணும் போல இருந்தது அவளுக்கு, தாகமாயும் இருந்தது. பரிமளத்தை நோக்கி அவன் நகர்ந்ததும், டிவியின் அடுத்தப்பக்கத்தில் இருந்த வட்ட டீப்பாய் மீது இருந்த பாட்டிலும், ஆஷ்ட்ரேயும் கண்ணில் தெரிந்தது. குடிக்கக் கேட்டா கொடுப்பானா என்று யோசனையாய் இருந்தது, ஆனால் குடித்தால் நல்லா இருக்கும் என்றும் தோன்றியது.

தனக்கு முன்னால் நின்றவனை நிமிர்ந்து பார்த்து, பாட்டிலை கை காட்டி, ‘அதுவும் அப்புறம் சிக்கன் பிரியாணியும்!’ என்றாள்.

அவன் காதோரமாய் சொரிந்து கொண்டே “எடுத்துக்கோ, சாப்பாடும் சொல்றேன்” என்றான். பரிமளத்துக்கு சந்தோஷமாய் இருந்தது. எழுந்தவள் புடவை முந்தானை தரையில் இழுத்தபடியே பாட்டிலை நோக்கிப் போனாள்.

‘உங்களுக்கும் ஊத்தவா?’

”நான் இப்ப தான் குடிச்சேன், எனக்கு வேணாம், அப்புறம் வேற எங்கையாவது விட்டுடுவேன்” என்று இளித்தபடியே சொன்னான்.

அறையிலேயே அலமாரிக்குள் இருந்த சின்ன பிரிட்ஜைத் திறந்து, ஒரு பாக்கெட் முந்திரி பருப்பும், சிப்ஸும் கொடுத்தான்.

”ரொம்ப குடிச்சிராதா! அப்புறம் தூங்கிடப்போறே! என்று மறுபடி சிரித்தான். “ஆமா! உன் பேரையே சொல்லலையே நீ! எப்படி கூப்பிடறது உன்னை? என்று கேட்டான். இப்போது கண்ணாடி முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, அவளை முழுமையாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

’மாலா!’ என்றாள்

”என்ன மாலா? வைஜயந்திமாலாவா இல்லை ஆர்யமாலாவா? நிச்சயம் இவன் தெலுங்குக்காரனாத் தான் இருக்கும்.

’வெறும் மாலா தான்!’ என்றவள், கிளாஸில் பாட்டிலில் இருந்த விஸ்கியை ஊற்றிக் கொண்டாள். பரிமளத்துக்கு கலக்குவதற்கு தண்ணியே போதும், அவனிடம் தண்ணீர் கேட்டாள். ஜக்கில் இருந்து எடுத்துவந்து அவனே ஊற்றினான்.

”நீ நல்லா இருக்கியே? ஏன் இந்த தொழிலுக்கு வந்தே?“ என்றான்.

எவனாவது ஒருத்தன், இதக்கேக்காம இருந்திருக்கானா இன்னைக்குவரை? அவளுக்கு ஞாபகமே இல்லை. இதக்கேட்டு என்ன செய்யப்போறாய்ங்களோ? என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ஆனா ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு கதை சொல்வாள். சிலபேருக்கு எதுவுமே சொல்லாமல் மழுப்பிவிடுவாள். இவனுக்கு என்ன சொல்வது என்று யோசிக்கும்போதே, பரமசிவம் ஞாபகம் வந்தது. பரமசிவம் தன்னோட கதைகள்ல பல அவதாரம் எடுக்கிறான் என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது அவளுக்கு.

’சொந்த ஊர் கிருஷ்ணகிரி, தெலுங்கு பேசுறவங்க நாங்க! என்று சொன்னபோது அவன் முகத்தில் பிரகாசம் வந்தது போலிருந்தது. ’எங்க தாய்மாமன் தான் என்னை கெடுத்துடுச்சு!, அதுக்கு அப்பவே கல்யாணம் ஆயிருந்தது!’ ஏதோ பேசிப் பேசி என்னை மயக்கிடுச்சு! அப்புறம் வீட்டுக்கு தெரிஞ்சு போய் ஒரே பிரச்னை. அப்புறந்தான் அதுவே, என்னையக் கொண்டாந்து திருப்பூர்ல விட்டுடுச்சு! அங்க ஓர் பனியன் கம்பெனில வேலை பார்த்தேன். அங்கேயும் நிறைய மாமனுங்க இருந்தானுங்க! அப்புறம் இங்க வந்துட்டேன், மதுரைக்கு!’ என்று முடித்தாள்.

அவன் பார்த்ததை வைத்து அவன் நம்பினானா இல்லையா என்று அவளால், கணிக்க முடியவில்லை. என்ன பெரிய நட்டக்கழுதை? என்று நினைத்துக் கொண்டு, ரெண்டாவது ரவுண்ட் ஊற்றினாள். பரிமளம் ரெண்டாவது ரவுண்ட் முடிப்பதற்குள் பாத்ரூம் போய்விட்டு வந்தவன், பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஏதோ ரெண்டு மாத்திரைகளை எடுத்துப் போட்டுக் கொண்டான்.

’என்ன மாத்திரை அது? எதுக்கு சாப்பிடுறீங்க? என்றாள். ஜட்டியோடு சேர்த்து அவனுடையதை பிடித்துக் கொண்டு தந்துருஸ்தி என்றான்.

’ரப்பர் இருக்கா உங்ககிட்ட?’ என்றாள். சரியாக அவனுக்கு புரியவில்லை, கட்டைவிரலை எடுத்து அதில் உறை போடுவது போல போட்டுக் காண்பித்தாள்.

”இல்லை! அதெல்லாம் எதுக்கு, அப்புறம் ஒண்ணுமே தெரியாது எனக்கு!” என்று சொல்லிக் கொண்டே பனியனையும், பேண்டையும் கழற்ற ஆரம்பித்தான்.

உடம்புக்கேத்த கால்கள் இல்லை அவனுக்கு கொஞ்சம் குச்சிக் கால்கள், இடுப்புக்கு கீழே ரொம்பவும் நோஞ்சானா இருந்தான். பரிமளத்துக்கு அருகே வந்து அவளை இழுத்தான். அவள் புடவையை முழுதுமாய் உருவி அங்கிருந்த டேபிளில் போட்டுவிட்டு, அவன் இழுவைக்குப் போனாள்.

நின்ற மாதிரியே ரவிக்கையோடு சேர்த்து கடித்தான். வலித்தது, நக்கென்று தலையில் அடிக்க வேண்டும் போல கோபம் வந்தது. வெடுக்கென்று அவனைத் தள்ளினாள். தொப்பென்று படுக்கையில் விழுந்தான்.

திரும்பியபடியே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ரவிக்கையைக் கழட்டிவிட்டு, பாவாடையையும் கழற்றினாள். என்ன பாடுபடணுமோ பின்னாடியும், முன்னாடியும்! மாத்திரை வேற போட்டிருக்கானே?! என்று அவளுக்கு பயமாக இருந்தது. பயந்து கொண்டே திரும்பியவள், அவன் கிடந்த கோலத்தைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறிவிட்டது. அவன் ஏகத்துக்கு மூச்சு வாங்கிக் கொண்டு படுக்கையில் இரண்டு கைகளாலும் பிராண்டுவது போல ஏதோ செய்ய, பரிமளத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காற்றுக்குத்துழாவியது போல எக்கி எக்கி மூச்சு விட்டான். கண்களும் செருக ஆரம்பித்தது. பரிமளத்துக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.

இவன் செத்துப் போய்விட்டால், வரப்போகும் பிரச்னையை நினைத்து அவளுக்கு பீதியைக் கிளப்பியது. அவன் வாயில் இருந்து இப்போது ஏதோ நுரையோ, எச்சியோ வர ஆரம்பித்தது. கண்ணத்தில் தட்டி தட்டி பார்க்க, என்னென்னவோ செய்தான். பரிமளத்துக்கு, போலீஸ், கோர்ட் என்று அடிவயிற்றை இப்போது கலக்க ஆரம்பித்துவிட்டது. பணத்துக்காக அவள் ஏதோ மருந்து கொடுத்துவிட்டதாக சொல்லிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தபோது அவளுக்கு நிறுத்தமுடியாமல் கண்ணீர் வந்தது.

அவனிடமிருந்து விலகி, ரவிக்கையையும், பாவாடையையும் எடுத்து அணிந்து கொண்டாள். புடவையை விட்ட இடம் எது என்று, ஞாபகம் வரவில்லை சடாரென்று அவளுக்கு

கைகால்கள் எல்லாம் நடுங்கியது அவளுக்கு, என்ன செய்வது என்று தெரியவில்லை. மாணிக்கத்தை எப்படி கூப்பிடுவது. அப்படியே அறையில் இருந்த ஜன்னலைத் திறந்து பார்த்தாள். ஓட்டலின் பின்புறம் அது, ஆட்டோவை மாணிக்கம் ஓட்டலின் முன்னால் நிறுத்தியது நினைவுக்கு வந்தது.

அவனைப் பார்த்தபோது அதே நிலையில் இருந்தான் அல்லது இன்னமும் மோசமாகி இருந்தான். தான் ஜெயிலுக்கு போய்விட்டால், மகனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அதுவும் முழுதாய் கஸ்தூரி அக்காவையும் நம்ப முடியாது, அவளுக்கு ஏதாவது வேலை என்று வந்து விட்டால், கொஞ்சம் அசட்டையாய் இருந்துவிடுவாள்.

டேபிள் மேல் கிடந்த புடவை கண்ணில் பட்டது, அதை எடுத்து அவசரம் அவசரமாக கட்டிக் கொண்டாள்.

ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் அடித்தாள். ஆனால் வாயில் இருந்து வரும் நுரை நிற்கவில்லை. இதற்கிடையில் அவனுக்கு, கையும், காலும் வெட்டிக்கொள்ள ஆரம்பித்தது. தான் தப்பமுடியாது என்று நினைத்த போது அவளுக்கு மேலும் அழுகை வந்தது. வாய் விட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஏதோ தீர்மானத்திற்கு வந்தது போல அவனை அப்படியே விட்டுவிட்டு, அவன் பர்ஸில் இருந்து, பேசிய பணத்தை எடுத்துக் கொண்டு லிஃப்டில் கீழே இறங்கி, வரவேற்பறைக்கு வந்தாள்.

வரவேற்பறையில் இருந்தவன் பரிமளத்தைப் பார்த்து சிரித்தான். முடிஞ்சுதா என்பது போல தலையாட்டினான்.

அவள் சிரித்துக் கொண்டே, ’அவர் ஏதோ கேட்டார் சாப்பிடுறதுக்கு, யாருமே வரலைண்ணு கத்திக்கிட்டு இருக்காரு, யாரையாவது விட்டுப் பார்க்கச் சொல்லுங்க!’ என்று சொல்லிவிட்டு படியிறங்கினாள். யாராவது அவனை காப்பாற்றி விடுவார்கள் என்று ஏனோ ஒரு தைர்யம் வந்தது மனசுக்குள்.

ஆட்டோவிலேயே காத்திருந்தான் மாணிக்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *