வாக்குமூலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 7,804 
 
 

அன்புள்ள மகனுக்கு,

பொலபொலவென வடித்த சாதத்தின் நிர்மலத்துடன் புலர்ந்திருக்கும் காலைப் பொழுதின் நிரம்பிய சந்தோஷங்கள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. பால் கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன. இந்த நிமிஷம் நீ ஸ்கூலுக்குக் கிளம்பிக்கொண்டு இருப்பாய்.

நீ முதல் நாள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றது ஞாபகமிருக்கிறதா? அது வரைக்கும் ஸ்கூல் பேக், பென்சில் டப்பா, தண்ணீர் பாட்டில் என்று சந்தோஷமாய் வாங்கிக்கொண்ட உனக்கு, ஸ்கூல் வாசலில் முகம் மாறியது. என் வலது கையின் மூன்று விரல்களை இறுகப் பற்றிக்கொண்டாய். ‘‘நான் போ மாத்தேம்மா’’ என்று உன் உதடுகள் பரிதாபமாக முணுமுணுத்தன.

உன் கண்கள் மழை வரும் வானம் மாதிரி இருட்டுவது நீ பிறந்ததிலிருந்தே எனக்குப் பொறுக்காது. ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்போடு நீ என்னிலிருந்து விடுபட்டு சிணுங்கும் அழுகையோடு பிறந்ததும், உன்னை என் வயிற்றுமேட்டில் சிரித்த முகத்தோடு டாக்டரம்மா போட்டபோது எழுந்த உணர்வு, சாகும் நேரமும் என் அடிவயிறு நினைத்திருக்கும்.

வகுப்பறைக்குப் பக்கத்தில் வந்ததும் வீட்டுக்குள் நுழையும் ஆணொருவன் சட்டைப் பித்தான் களை தன்னிச்சையாய் கழற்றுவது போல், கழற்ற ஆரம்பித்தாய். உன்னுள் ஒரு ஆவேசமான பதற்றம் தோன்றி, ‘போ மாத்தேம்மா…’ என்று பிடிவாதத்துடனும் அழுகையுடனும் என் கால்களுக் குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாய். உன் அழுகையை மீறி, வகுப்பாசிரியையிடம் உன்னை ஒப்படைத்துவிட்டு வெளியேறி, ஜன்னல் வழியாகப் பார்த்தேன். நீ ஷ¨க்களைக் கழற்றி எறிய, ஆயாக்கள் உன்னைத் தடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

அன்று மதியம் உன்னை அழைத்துச் செல்ல வந்தபோது, உன் தலையில் பேப்பர் கிரீடம் கட்டியிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் பளிச்சென்று சிரித்தாய். அந்த சிரிப்பு இப்போதும் ஈரப் பசையோடு மனசில் ஒட்டியிருக்கிறது. உன் வலது அக்குள் மச்சம், சிரிக்கும்போது ஈறோடு பளிச்சிடும் பற்கள், ‘மஷ்ரூம் கட் வெட்டினா நான் அழகாருக்கேன்னு ஹரிஹரி சுப்ரமணியம் சொன்னான்மா’ என்று சோப் போடும்போது என் மேல் தண்ணீர் தெளித்தபடி நீ சொன்னது, தண்ணீரின் ஒற்றைத் துளி மாதிரி காற்றில் அலைந்தபடியே இருக்கும்.

உனக்கு எட்டு மாதம் இருக்கும்போது அதிக காய்ச்சலினால் நகரின் பிரபல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தாய். ஒரு காய்ந்த சருகு போல நீ டியூப்கள் நடுவே படுத்திருந்தாய். உன் இரண்டு பற்கள் மட்டும் வெளியே தெரிகிற மாதிரி நீ தூங்கிக்கொண்டு இருந்தபோது உன் கால்களை நான் இறுகப் பற்றிக்கொண்டேன். என் ஸ்பரிசம் பட்டதும் உன் முகம் விரிந்து உதடுகள் லேசாக விரிந்து ‘ம்மா…’ என்றாய். உனக்கும் எனக்குமான உறவுக்குள் ஒரு அழகான உலகம் இருந்திருக்கிறது. எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே எப்போதும் நிலவி வந்திருக்கிற விரோதம்கூட எனக்கும் உனக்குமான நேசத்தைப் பற்றி பிரக்ஞையோடு என்னில் இருந்திருக்கக் கூடும்.

‘என்னன்னாலும் உங்கூடதாம்மா இருப்பேன்’ என்றும் உன்னை நான் பார்த்த ஒரு வாரத்துக்கு முன் நீ என் மடியில் படுத்தபடி சொன்னாய். என் விரல்கள் தன்னிச்சையாய் உன் நெற்றியைக் கோதி விட்டபடி இருந்தது. அப்படிச் செய்வது உனக்குப் பிடிக்கும். தூக்கம் வரும் நேரங்களில் என் கைகளுள் வந்து படுத்துக்கொள்வாய். எந்தக் கட்டத்திலும் நீ இதைச் செய்திருக்கிறாய். எப்போதும் உனக்கும் எனக்கும் ஒரு மெல்லிய புரிதல் தொடர்ந்தபடி இருந்திருக்கிறது.

என் மடியில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு நீ ஹோம் வொர்க் எழுதுவாய். அவ்வப்போது ரப்பரை வைத்து அழிக்கும்போது நெற்றிப் புருவத்தை தூக்கி என் உயிரை உருக்குவது போலொரு பார்வை பார்ப்பாய்.

நீதிமன்றங்களில் உறவுகள் பிரிக்கப்படுகின்றன என்றாலும் தொப்புள் கொடிகளும் அறுத்தெறியப்படுகின்றன என்பதையும் உறுதிசெய்தாகி விட்டது. உன்னைப் பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன் நினைவுகள் மட்டும்தான்.

அதிகாலையில் தூக்கமும் கரகரப்பும் கூடின குரலோடு, ‘ம்மா’ என்று பாலுக்காக நீ அழைப்பது என் காலை நேரங்களை நிறைத் திருக்கிறது. உனக்காக இடது கையில் நான் ஹோம் வொர்க் எழுத, அவித்த கடலை சாப்பிட்டபடி என் வாயிலும் ஒன்றிரண்டைத் திணிக்கும் உன் கை விரல்களின் சூடு என் மனதை நிரப்புகிறது.

‘இந்த சேல உனக்கு நல்லாருக்குமா’ என்று என் தோள் கட்டிக் கொண்டு நீ சொன்ன வார்த்தைகள். என் வாழ்நாளில் என்னைப் பாராட்டின முதல் ஆண் மகன் நீ. ‘எங்கூட படிக்கிற அமுதாவை நான் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?’ என்று நீ என்னிடம் கேட்டபோது இரண்டாம் வகுப்பில் இருந்தாய். நான் சிரித்தபடி, ‘அவ வளர்றப்போ அசிங்கமாயிட்டா..?’ எனக் கேட்டேன். அதுவும் சரிதான் என்பதுபோல் நீ பார்த்தாய். என் நண்பனாக நீ பரிணாமம் கொண்டிருக்கிறாய்.

நீ வளர்ந்த பிறகு உன்னிடம் சொல்ல வேண்டுமென நான் சேமித்து வைத்த உண்மைகள் சில உண்டு. கவிதை எழுதியதற்காக ஒடிக்கப்பட்ட என் வலது கை நடுவிரல், தனித்தன்மைகளற்று மரத்திருந்த என் சுயம். வெறும் உப்பு புளி காரத்துக்காக வாழ்ந்த வாழ்க்கை. சொல்லியிருந்தால், நீ என் வலது கையை, அதன் நடுவிரலைப் பற்றியிருப்பாய்.

உன்னைக் குறித்த தேடல் என்னை ஒரு ராட்சச பலத்தோடு ஆக்ரமிக்கும் சமயங்களில் நீ பள்ளிக்கு என் நினைவுகளோடு கிளம்பிக்கொண்டு இருக்கலாம். விடுதியில் புழு நெளியும் உணவை நான் வெறிக்கும்போது, நீ சாப்பிடாமல் என்னை நினைத்திருக்கலாம். வேலைக்கு நான் பேருந்துகளில் சென்று வந்த பயணச்சீட்டுகளை நீ சேகரித்து வைத்திருப்பாய். இப்போது நினைவுகளின் சேகரிப்பில் திளைத்திருக்கிறோம் இருவரும்.

நீ பிரிந்த இந்த ஒரு வருடத்தில் உனக்காக நான் புதுச் சட்டைகளும், பொம்மைகளும், சில நல்ல புத்தகங்களும் வாங்கியிருக்கிறேன். உன்னை என்றாவது பார்க்கும்போது நீ வளர்ந் திருக்கலாம், இவற்றில் எதுவும் உனக்குத் தோதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நினைவின் அடையாளங்கள் துருப்பிடிக்காதென்று நினைக்கிறேன்.

உன் வகுப்பு ஆசிரியர்கள் பற்றி நீ இப்போது யாரிடம் சொல்வாய்? ஹரிஹரி சுப்ரமணியம் உனக்கு ஜவ்வு மிட்டாய் கொடுத்ததை ஒரு மாலைப் பொழுதின் கரையோரம் என்னிடம் ஏழாவது அதிசயம் போல் நீ விவரித்தாய். அந்த ஆச்சர்யம் கலந்த அதிசய முகம் இப்போது வகுப்பறையில் இருக்கலாம். உனக்குத் தினமும் கேன்டீன் உணவு ஏற்பாடு செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். சமையலறை மேடையில் வீடியோ கேம் விளையாடினபடி ‘இன்னும் மொறுமொறுனு சுடும்மா’ என்று தோசையைப் பார்த்து நீ சொல்லியிருக்கிறாய்.

எனக்கு நீ வேண்டும். நீதிமன்ற வாய்தாக்கள் ஒத்திப் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தினமும் மாத்திரைகளின் உதவியால் தூங்குகிறேன். நகரின் மனிதநேயமற்ற சந்துகளில் நினைவற்று மயங்கி விழுந்த என்னை நோக்கியும் நீளவே செய்கிறது சாலையோரத் தேநீர் அல்லது சோடா. என்னை அழைத்தபடி இரவு நேரங்களில் ஆட்டோக்களில் மருத்துவர் வீடுகளுக்கு அலைகிறாள் என் நெட்டையான தோழி. பணம் மீறியும் வாழ்க்கை இருக்கிறதென்பது அந்த வாகன இரைச்சல்கள் அடங்கின நகரின் அமைதியில் புலப்படுகிறது.

உன்னைப் பார்க்க உடல்நலம் மோசமான ஒரு தருணத்தில் நான் விரும்பினேன். தகவல் தெரிவிக்கப்பட்டும் நீ அனுப்பப்படவில்லை என்றாலும் உன்னைக் கடத்த நான் தீர்மானித்ததாக எனக்கு நோட்டீஸ் வந்தது. பெற்ற மகனைக் கடத்த விரும்பும் தாயாகப் பார்க்கப்பட்டவள் உலகத்தில் நான் மட்டுமே இருக்கக்கூடும்.

சேர்ந்திருப்பதைக் காட்டிலும் இப்போது ப்ரியங்கள் உனக்கும் எனக்கும் கூடியிருக்கும். நீ அங்கிருப்பதால் என் மீதான பழி உன்னிடம் மறுபடி மறுபடி சொல்லப்படலாம். இந்தச் சின்ன வயதில் உனக்குள் அவை ஏற்படுத்தக்கூடிய குழப்பங்கள் மட்டுமே என்னைச் சிதறடிக்கிறது. உன்னருகில் நான் உட்கார்ந்து உன் தோள் பற்றி, உன் தலை கோதிப் பேசும் தருணத்தில் அந்தக் குழப்பங்கள் தீரலாம்… தீரும். உன்னை நான் ‘ஜாஜிம்மா’ என்று கூப்பிட்டால் பிடிக்கும். ‘என்னைக் கொஞ்சும்மா’ என்று அர்த்த ராத்திரி தூக்கத்தில் நீ சிணுங்கியதுண்டு.

கரன்சி நோட்டுக்களின் வாடை புழங்கும் இடங்கள் உன்னைத் தீண்டாதென்பதில் நான் திடமாக இருக்கிறேன். என் விரல் நடுக்கங்களை மீறின நம்பிக்கைகள் எனக்கு இருக்கின்றன என்றாலும், எந்தக் குழந்தையையும் பத்து வினாடிகளுக்கு மேல்இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. உலகிலேயே மரண தண்டனையைக் காட்டிலும் கொடிய தண்டனை பிள்ளைகளைப் பிரிவதுதான். எனினும் உன்னைப் பிரிந்ததாக நான் கருதுவதைவிடவும் வேலையின் நிமித்தமும் படிப்பின் பொருட்டும் நாம் விலகி இருக்கிறோம், உறவுகளைத் தூரங்கள் விலக்கிவிடாது.

பிறந்த சில நாட்களில் நீ தூங்கும் சமயங்களில் தேவதைகள் உன்னை புன்னகைக்க வைப்பதுண்டு. அந்த தேவதைகள் இப்போதும் உன்னைச் சந்தோஷப்படுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் உள்ளங்கையில் என்னைப் பற்றின ரேகைகள் பதிந்திருக்கும். என் மூச்சுக்காற்றின் சூடு உன்னை உஷ்ணப்படுத்திக்கொண்டே இருக்கும்.

தருணங்கள் வந்து போகலாம். பஸ்ஸில் எதேச்சையாய் எதிர்ப்படும் குழந்தையின் முகம் உன்னை நினைவுபடுத்தும். நகரின் நெரிசலில் ஏற்படும் பதற்றங்களை குறைப்பது குழந்தைகள் மட்டுமே. பேருந்தில் ஏறின சிறுவன், கண்டக்டரின் விசிலை வாங்கி ஸ்டாப்பில் அடித்தபோது பஸ் நின்றது. ஒரு கணம் பிரமிப்பு நிரம்பின சந்தோஷத்தில் அவன் சிரித்தபோது அங்கே நீ இருந்தாய். கடந்து போகும் ஏதோ ஒரு குழந்தை தன் அம்மாவின் தோள் மீறிச் சிரிக்கும்போது நீ எதிர்ப்படுகிறாய்.

அப்படித்தான் உனக்கும் இருக்கும். சாப்பிடும்போது கடைசியாய் தட்டை வழித்துத் தரும் நெய்யுருண்டையில், ஷாம்பூ போட்டுக் குளித்து சேலைத் தலைப்பில் கடைசியாய் தலை துவட்ட முந்தானைக்குள் சுற்றி சுற்றி நீ வந்ததெல்லாம்.

நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. இறுகின இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட பாலத்தின் முனையில் நான் நிற்கிறேன். விரிசல் விழுந்த அகலக் கம்பிகள் கால்வைக்க தோதாக இருக்கின்றன. புயலுக்கும் தென்றலுக்கும் இடையே ஆன காற்று என்னை லேசாக அசைக்கின்றது. என் புலன்கள் வேர்க்க ஆரம்பிக்கின்றன. மரணம் என்னை நுனிப் பிரதேசங்களின் உச்சியில் நின்றபடி ‘வா வா’ என்றழைக்கிறது. காற்றின் அலைச்சலில் நான் கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். நீ பிறந்தபோது என்னை முதலில் பார்த்ததுபோல நான் இறக்கையில் உன்னைக் கடைசியாய்ப் பார்க்க வேண்டும்.

பாலமும் இப்போது காற்றின் வேகத்தில் நகர்ந்தபடி இருக்கிறது. உன் முகம் தேடி வழியும் கண்ணோரத்துத் துளிகளுடன், அம்மா.

வெளியான தேதி: 26 மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *