கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 4,945 
 

எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி படியேறும் ரமேசைப் பார்க்க எனக்குள் பரவசம்.

நான் இவனைப் பிஞ்சிலேயேத் தூக்கி கொஞ்சிய பக்கத்துவீட்டுப் பிள்ளை. பத்து வயதுவரை என் மடியில் படுத்து வளர்ந்தவன்.

இவன் தாய் வயிற்றில் இருக்கும்போது அப்பா ஆளவந்தான் அருகில் இல்லை. வெளிநாட்டு வேலைக்காரன். மனைவியைக் கருவாக்கி விட்டு விமானம் ஏறியவன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு வந்துதான் பிறந்த மகன் முகத்தை நேரில் பார்த்தான். அதுவரை தகப்பனும் மகனும் ஒருத்தருக்கொருத்தர் நெட்டில்தான் பார்த்துக் கொண்டார்கள். வெப் கேமிராவை வைத்துக் கொண்டு நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டார்கள். அடுத்தெல்லாம் தகப்பன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மூன்று மாதங்கள் விடுப்பெடுத்து தங்கிப் போவதை வாடிக்கையானது. பெண் குழந்தை ஒன்றும் கூடிப்போனது.

பெற்றவர்களைப் பிரிந்த குழந்தைகளுக்குத்தான் தெரியும் பாசத்தின் ஏக்கம், தாக்கம். நண்பர்கள், உறவென்று தங்கள் வீட்டிற்கு வரும் எந்த ஆணும் அவர்களுக்கு அப்பா பார்வை. அதிலும் பக்கத்து வீட்டுக்காரன் நானென்றால் அவர்களுக்கு ரொம்ப ஒட்டுதல். அவர்கள் என் வீட்டிற்கு வந்தாலும் நான்; வீட்டிற்குச் சென்றாலும் அண்ணன் தங்கை இருவரும் ஓடிவந்து ஒட்டிக்கொள்வார்கள். உரசி நின்று கொள்வார்கள். மடியில் உட்கார்ந்து கொள்வார்கள். அம்மா அடித்தால் ”பெரீப்பா!” என்று ஓடி வருவார்கள். நானும் அவர்கள் பாசம் புரிந்து அரவணைப்பேன். என் வீட்டுக்காரிக்கும் தன் மக்களைப் போல் இவர்கள் மீது பாசம். பாவம் அப்பா பாசத்துக்காக ஏங்கும் குழந்தைகள் என்ற பச்சாதாபம்.

அதேசமயம் அப்பா ஆளவந்தான் வந்துவிட்டால் போதும் அவனைப் பிரியமாட்டார்கள். பெற்றவளையும் மற்றவர்களையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள்.

”பாருங்க சார். ஆண் வாடை இல்லாம வருசத்துக்கும் நான் வளர்க்கிறேன். ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை ஒரு மாசம் எட்டிப் பார்த்துட்டுப் போகும் அப்பனைப் புடிச்சிக்கிட்டு பேயாய் அலையுதுங்க பிசாசுங்க.” அருணா உண்iமையாய்த் திட்டுவாள்.

பெண்ணுக்கு அப்பா பாசம். ஆணுக்கு அம்மா பாசமென்கிற எதிர்மறை பாசமெல்லாம் கிடையாது. இருவருக்கும் அப்பா பாசம்தான்.

அப்பா வந்துவிட்டு விமானம் ஏறினால் அடுத்து நான்கு நாட்கள் இவர்கள் அவன் ஏக்கத்தில் சுரத்தில் கிடந்து எழுந்திரிப்பார்கள்.

பையன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை குடும்பம் அங்கிருந்தது. அப்புறம்…..திருச்சிக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள்.

இருபது வருடங்களுக்குப் பிறகு இளைஞனாய் இதோ ரமேஷ்.

அறுபது வயசு என்னை அடையாளம் தெரியவில்லைப் போல.

நான் அவன் நுழைந்த வீட்டில் படியேறினேன். ‘குடும்பத்தோடு இருப்பானோ ?!’ அழைப்பு மணி அழுத்தினேன்.

ஐந்து நிமிடத்தில் ஒரு பெண் வந்து திறந்தாள். அவன் மனைவி போல.

”ரமேஷ்…….” இழுத்தேன்.

”மாடியில இருக்கார்.”

”நீங்க ?”

”இந்த வீட்டுக்காரி.” அவள் பின்னால் வந்த இளைஞன் பதில் சொன்னான்.

மாடி ஏறினேன். ஒற்றை அறை. கதவு தட்டினேன்.

திறந்த ரமேஷ் ஒரு கணம் திகைத்து…… ”பெரீப்பா…ஆ!” வாயைப் பிளந்து ஆச்சரியப்பட்டான்.

”வாங்க வாங்க…..” மலர்ச்சியாய்க் கதவை அகலத் திறந்து விட்டான்.

”எப்படிப்பா இருக்கே ?” கட்டிலில் அமர்ந்தேன்.

”இருக்கேன் பெரிப்பா.”

”என்ன பண்றே ?”

”பொறியியல் முடிச்சிட்டு இங்கே டாடா கம்பெனியில வேலையாய் இருக்கேன்.”

”தங்கச்சி ?”

”அவளும் படிப்பு முடிச்சி திருமணம் முடிச்சு சென்னையில தனிக்குடித்தனம்.”

”அம்மா அப்பா ?”

”இருப்பாங்க.”

”இருப்பாங்கன்னா…. புரியலை ?!”

”நான் வீட்டைவிட்டு வெளியே வந்து பல வருசம் ஆச்சு பெரிப்பா.”

”அம்மா அப்பாவோட சண்டையா ?”

”கோபம் வெறுப்பு.”

”ஏன் ??”

”பின்னே என்ன பெரிப்பா. அப்பா பணத்துல மேல ஆசைப்பட்டு அப்பப்போ தலைகாட்டிட்டு வெளிநாட்டுலேயே வேலையாய் இருந்தாரு. அம்மாவும.;… புள்ளைங்க மனசு தெரியாம அவரை சம்பாதிக்கத் துரத்திக்கிட்டே இருந்தாங்க. பணம்தான் வாழ்க்கையா பாசமில்லையா ? பணத்தை நீங்களே வைச்சுக்கோங்கன்னு நான் படிச்சேன் கேம்பஸ் இன்டர்வியூல வேலைகிடைச்சுது வந்துட்டேன்.”

”அதாவது கிளிக்கு ரெக்கை மெளைச்சாச்சு. பறந்துட்டே.”

”அப்படி இல்லே பெரீப்பா. வேலை கெடைக்கலைன்னாலும் பறக்கிறவன்தான். எங்க பாசம் தெரியாம உங்க பாசத்துக்காக ஏங்க வைச்ச நீங்க…. இப்போ எங்க பாசம் வேண்டி இருங்க. இது தண்டனை சொல்லி வந்துட்டேன். தங்கச்சியும் திரும்பலை. புருசன் வீட்டைவிட்டு வரமாட்டாள்.”

”இது நியாயமா ரமேஷ் ?”

”நியாயம் பெரிப்பா. நாங்க பிஞ்சுல வெம்பினதைச் சொல்ல ஒரு நாள் பத்தாது. அப்பா இல்லாத அனாதைகளாய் வளர்ந்தோம். இப்போ அவுங்க வெம்பட்டும். நீங்க எப்படி பெரிப்பா ?”

”அண்ணன்கள் ரெண்டு பேரும் அமெரிக்காவுல பத்து வருசத்துக்கு மேல் குடித்தனம்.. அம்மாவும் நானும்…பக்கத்து கிராமத்துல இருக்கோம். எதிர்பாராத விதமா உன்னைப் பார்த்தேன் வந்தேன்.”

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த ரமேஷ், ”சின்ன ஆசை பெரிப்பா.” என்றான்.

”என்ன ?”

”இப்போ உங்க மடியில படுத்துக்கனும் போல இருக்கு.”

”ரமேஷ்!!!”

”படுத்துக்கிறேன் பெரீப்பா !” அடுத்த விநாடி ஒரு குழந்தையாய் கேட்காமலேயேப் படுத்தான்.

பிறந்து பிரிந்து வளர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதன் வலியும் வருத்தமும்.

எனக்குள் பீரிட்டு எழும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவனைக் குழந்தையாய்த் தட்டிக் கொடுக்க…..

அவன் விம்மினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *