கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 7,335 
 
 

இதுக்கு முன்னாடிகூட என் கணவர்கிட்ட பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்கிற நல்லது கெட்டது பத்தி தெரிஞசிக்கிட்டேன்.

ஆனா இந்தமுறை ஏதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு. இந்தப் பிரச்சினை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என் கணவர் மது குடிச்சு அதுல பணத்தை விரயமாக்குறத நிறுத்தி, பணத்தை சேமிக்க நான் விரும்பினேன்.

அதனால, நான் வாங்குற சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை வாங்குற மாதிரி அவரிடம் சொன்னேன். நான் பொய் சொல்றத அவர் கண்டுபிடிச்சிட்டார் என்றால் எனக்கு பயங்கரமான அடி உதை காத்திருக்குன்னு எனக்குத் தெரியும். எனக்கு உடலில் தழும்புகள்கூட உண்டாகும். இருந்தும், நான் நிரந்தர வைப்பாக வங்கியில் போட்டு வைச்சிருக்கிற பணத்தை அவரால எடுக்க முடியாதுன்னு ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு.

நான் ஒரு வீட்டில் வேலைசெய்யும் முதலாளியம்மா சொன்னதுநாலதான் நான் அப்படிச் செய்தேன். இல்லைன்னா என்னை மாதிரியான பட்டிக்காட்டு பொண்ணுக்கு வங்கியில் கணக்குத் தொடங்கி, அதுல பணத்தைப் போடத் தெரிஞ்சிருக்குமா? அவரை நான் மேடம் என்றுதான் மரியாதையுடன் அழைப்பேன். மேடம் எல்லாத்தையும் விளக்கினது புரிய, இன்றைக்கு நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். இருந்தாலும் எனக்கு பதற்றமாகவே இருந்திச்சு.

ஆனா அதே மேடம் என் கருவைக் கலைக்க ஐடியா சொன்னபோது நான் அதிர்ந்து போனேன்.

ஏனெனில் இந்தமுறை என்னோட உடம்புதான் பணயம் வைக்கப்பட்டுச்சு. இந்த ஆபரேஷன் நடக்கும்போது பெண்கள் இறந்து போறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சாவது போலத்தான் இருந்திச்சு. எனக்கு 22 வயசுதான் ஆச்சு. ஆனா பாக்குறதுக்கு 40 வயசு மாதிரி இருந்தேன். என்னோட உடம்பு ஒல்லியாகவும் உயிரற்றும் கிட்டத்தட்ட ஒரு எலும்புக்கூடு மாதிரி இருந்திச்சு. என்னோட கண்ணைச் சுத்தி கருவlளையங்கள் இருந்ததோட எப்போதும் சோர்வா இருக்கிறதுநால, என் வயசுக்கான களை இழந்து என்முகம் காணப்பட்டது.

நான் நடக்கும்போது என் முதுகுல கூன் விழுந்தா மாதிரி இருந்திச்சு. இதெல்லாம் வெளியே பார்த்தா தெரியற என் பிரச்சினையோட அறிகுறிகள்.

இதயெல்லாம்விட ரொம்ப அதிகமா என்னோட மனசு உடைஞ்சு போயிருக்கு. ஆனா அந்த வலிகளோட எதிரொலிப்பு கண்ணீராக மட்டுமே இருந்தது, ஆரம்பத்துல இதெல்லாம் நியாயம் இல்லேன்னு எனக்குப் புரியல. எனக்கு பதினைஞ்சு வயசுல கல்யாணம் ஆச்சு. அப்புறம் சென்னைக்கு குடிவந்தோம்.

என் கணவர் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் டைனிங் டேபிளில் சாப்பாடும், அதன்பிறகு படுக்கையில் நானும் அவருக்குத் தேவை. வெறும் தேவை அவ்வளவுதான். அவர் என்னை வெறும் உடம்பா மட்டும்தான் பாத்தாரு. என் உணர்வுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கலை. நானும் அவர்கிட்ட எதையும் எதிர்பாக்கலை. என் அம்மா எனக்கு எல்லாத்தையும் முன்னாடியே சொல்லியிருக்காங்க. எல்லாம் தெரிந்தும்தான் நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.

எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்துச்சு. அதனால அவர் என்னைப் போட்டு அடிச்சாரு. நிறைய குடிச்சிட்டு எல்லாக் கோபத்தையும் என்னிடம் படுக்கையில் காட்டினாரு. பிறகு எனக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்திச்சு. அப்புறம் அவர் வேலைக்குப் போவதையே நிறுத்திட்டாரு. அப்போதான் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். பிறகு எனக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பொறந்துச்சு.

அவரு என்னைப் போட்டு அடி அடின்னு அடிச்சு என்னை ரண களப்படுத்தினாரு. நான் சேர்த்து வச்ச காசுல மது வாங்கிக் குடிச்சாரு . படுக்கையில் என் உடம்பை மட்டும் அனுபவிச்சாரு. .

ஆனா நான் அமைதியாகவே இருந்தேன். இதுதான் பல பெண்களோட நிலமைன்னு என் அம்மா முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்காங்க. என் நான்காவது குழந்தையை நான் சுமக்கும்போது எனக்கு இருபது வயசு.

உயிரே இல்லாத என் உடம்பு வீங்கிப் போயிருந்ததைப் பார்த்த என் மேடம் ரொம்பக் கோபமாயிட்டாங்க.

“உன்னால இன்னொரு குழந்தையை பெத்து எடுக்க முடியுமா? உன் உடம்பு அதுக்கு ஒத்துழைக்குமானு? கேட்டாங்க..”

“அதெல்லாம் பாத்துக்கலாம்.. நீங்க கவலைப்படாதீங்க.” என்று நான் சொன்னேன்.

ஒரு மாடர்ன் பெண்மணிக்கு என் வாழ்க்கை எப்படிப் புரியும்னு நான் எனக்குள்ளேயே நெனச்சுக்கிட்டேன். ஓர் ஆண் குழந்தையை பெத்துக் குடுக்கிற வரைக்கும் என்னை மாதிரி பொண்ணுங்க தொடர்ந்து கர்ப்பமாகிறதை பொருததிக்கிட்டுதான் ஆகணும்.

வங்கிக் கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்க மேடம் அறிவுரை சொன்னாங்க, அவ்வளவுதான்.. ஆனா குடும்ப சுமைகள் பத்தியும், சமூக அழுத்தங்கள் பத்தியும் அவங்களுக்கு விளக்குறது ரொம்பவே கஷ்டம். அதனாலதான் எல்லாமே அமைதியா நடக்கணும்னு என் உள் மனசு சொல்லிச்சு. நான் கர்ப்பமாயிருப்பது யாருக்கும் தெரியக்கூடாது.

எனக்கு ஒரு மகன் பிறந்தா எல்லாமே சரியாயிடுமின்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருந்திச்சு. தினம் தினம் அவரு என்னை அடிக்குறது, மது குடிக்கிறது, படுக்கையில் என்னை பாடாய் படுத்துவது எல்லாமே மாறிடும்னு தோணிச்சு.

இந்தவாட்டி நான் நெனச்சா மாதிரியே எனக்கு ஆண் குழந்தை பிறந்திச்சு! நர்ஸ் வந்து இந்தச் செய்தியை சொன்னதும், எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

ஒன்பது மாசமா பலவீனமான என் கரப்பப்பையில் என் குழந்தையை சுமந்த வலி, பத்து மணிநேர சகிச்சையில் அடைந்த சோர்வு எல்லாமே அந்தப் பிஞ்சு முகத்தை பார்த்த வினாடியே பறந்து போச்சு.

ஆனா அதுக்கு அப்புறமும் எதுவுமே மாறல. அந்தக் கொடுமைகளெல்லாம் மீண்டும் தொடர்கதையானது. நான் என்னதான் தப்பு செய்தேன்? நான் இப்போ ஒரு ஆண் பிள்ளையையும் பெத்துக் கொடுத்திருக்கேன். ஆனா கொடுமைப் படுத்துவது என் கணவரோட பழக்கமாகவே மாறிடுச்சுன்னு அப்போதான் எனக்கு புரிஞ்சுது.

என் உடம்பு ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. மறுபடியும் கர்ப்பமாகி விடுவேனோ என்ற பயத்துலேயே நான் வாழ்ந்தேன். ஒருநாள், என் மேடம் களையிழந்த என் முகத்தைப் பார்த்து, “உன் வாழ்க்கையில ஒரு விஷயத்தை மாத்த முடிஞ்சா, நீ எதை மாத்தணும்னு விரும்புவ?” என்று கேட்டாங்க.

எனக்கு சிரிப்புதான் வந்திச்சு. எனக்கு என்ன வேணும்னு நான் இதுவரைக்கும் நினைச்சதில்லை. யாரும் என்னைக் கேட்டதும் இல்லை. ஆனா இந்தவாட்டி நான் யோசிக்க ஆரம்பிச்சேன். ஒருவாரம் கழிச்சு, “நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் கண்டுபிடிசிக்கிட்டேன்..” என்று மேடம்கிட்டே சொன்னேன்.

“என்ன அது?”

“நான் மீண்டும் கர்ப்பமாகக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா என் கணவரை எப்படி தடுக்குறதுன்னு எனக்குத் தெரியல..”

நான்கு குழந்தைகளை வளர்க்கும் அளவுக்கு நம்மகிட்ட காசு இல்லைன்னு பலவாட்டி நான் அவர்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா அவரால ஆசைகளை கண்ட்ரோல் பண்ணமுடியல. என் உடம்பு ரொம்ப பலவீனமானதை அவரு பொருட்படுத்தல. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும் அவரிடம் இல்லை என்பதால் அதப் பத்தியும் அவரு கவலைப் படவில்லை.”

ஒருநாள் மேடம் என்னிடம் என்னை கருத்தடை பண்ணிக்கச் சொன்னாங்க. இது மட்டும்தான் உன் கையில் இருக்குன்னு சொன்னாங்க.. ராத்தரி அவரு படுக்கையில் செய்வதை உன்னால் தடுக்க முடியலைன்னாலும் நீ கர்ப்பமாக இருப்பதையாவது இது தடுக்கும்னு எடுத்துச் சொன்னாங்க.

இதுபத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நாட்கள் நிறைய ஓடிப்போச்சு. எனக்குள்ள பல கேள்விகளும் எழுந்துச்சு. அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி சொல்லி களைச்சுப்போன என் மேடம் ஒரு களினிக்கின் முகவரியை என்கிட்டக் கொடுத்தாங்க.

என்னை மாதிரியே பல பெண்களை அங்கே பார்த்தேன். இது சீக்கிரமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய ஆபரேஷன் என்றும், ஆனா இதுல ஏதாவது தப்பா நடந்தா உயிருக்கே ஆபததுன்னும் அவங்க என்கிட்டே சொன்னாங்க. இதப்பத்தி நான் பல நாட்கள் யோசிச்சேன். இறுதியா என் கணவர் மற்றும் குழந்தைங்ககிட்ட பொய் சொல்லிட்டு நான் கிளினிக்குக்கு போனப்போ இந்தப் பயம் எனக்கு ரொம்ப அதிகமாச்சு.

நான் ரொம்ப சோர்வா இருந்தேன். பயமும் விரக்தியும் எனக்கு அதிகமாச்சு. இதுல நிறைய ரிஸ்க் இருந்தாலும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியாவது என் வசம் இருக்கும்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி.

அப்புறம் எனக்கு ஆபரேஷன் நடந்துச்சு. நான் பொய் சொல்லல. நான் அதுல இருந்து மீண்டுவர சில நாட்கள் ஆச்சு. வலியில் துடித்தேன். ஆனா இப்போ எல்லாமே சரியாயிடுச்சி.

பத்து வருஷம் ஓடிப்போச்சு. ஆனா அதுக்கு அப்புறம் நான் கர்ப்பமாகவில்லை. என் கணவரும் இதைப் பெருசா எடுத்துக்கலை. மதுபானம் குடிப்பது, என்னை அடிப்பது, என்கூட படுக்கையில் சுகம் காண்பது இதுதான் என் கணவரோட வாழ்வியல் முறை. இதவிட்டா அவருக்கு வேறு எதுவும் தெரியாது.

எனக்கு என்ன தேவையோ அதை நானே செய்து கொள்கிறேன். பல வீடுகளில் வேலை செய்து என் குழந்தைகளை படிக்க வைக்கிறேன். என் கணவரை விட்டுப் போகமாட்டேன்; என் அம்மா எனக்கு எல்லாத்தையும் சொல்லியிருக்காங்க. அதுமட்டும் இல்லாம என் கணவரையும் என்னால இனி மாத்த முடியாது. அதனால் இது எல்லாமே எனக்கு பழகிப் போச்சு. அவர் என்னை வேண்டாமின்னு ஒதுக்கி வச்சாலும் என்னால என்னைப் பாத்துக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என் ஆபரேஷன்தான் என் வாழ்வின் ரகசியம்.

நான் அதுக்காக பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையில் எனக்காக எனக்காக மட்டுமே என்னால ஒரு முடிவாவது எடுக்க முடிஞ்சத நினைச்சு சந்தோஷப் பட்டுக்கிறேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “வலிகள்

  1. நல்ல வேளை நாம இந்தியாவில இருக்கிறோம். இஸ்லாமிய மற்றும் அமெரிக்கா போன்ற கிறிஸ்தவ நாடுகளில் கருத்தடை கருக்கலைப்பு எதற்குமே உரிமை இல்லை. பெண்களை அடிமைப்படுத்தும் கலாசாரங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *