வரப் பிரசாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 2,250 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐந்தாறு வருஷங்களுக்குமுன் நில விஷயமாகப் பூந்தோட்டம் சென்ற என் தந்தையுடன் நானும் போயிருந்தேன். உத்தியோக அலுவல்களால் என் தந்தை காவிரி தீரத்தைவிட்டுச் சென்னைக்கு வந்துவிட்டமையால், காவிரியோடு நெருங்கிப் பழகும் பாக்கியத்தை நாங்கள் சிறு வயதிலேயே இழந்துவிட்டோம். எங்கள் கிராமமே எனக்கு மறந்துபோயிருந்தது. ஊரில் அல்லி மலர்கள் நிறைந்த குளமும், சிவாலயமும் தெருக்களும் ஏதோ கனவு கண்டவைபோல் என்முன் திட்டுத் திட்டாகச் சில சமயம் வருவதுண்டு. கனவில் கண்டு களிக்கும் தோற்றத்தைப்போல் இருக்கும். அவைகளை நேரில் காண அப்பாவுடன் பிடிவாதமும் பிடிக்கவேண்டி இருந்தது. பூந்தோட்டத்தில் சுப்பராம சாஸ்திரிகள் அகத்தில் இருக்கும் ஒரு திவ்வியமான் ராமபட்டாபிஷேக படத்தைப்பற்றி வாய்க்கு வாய் அப்பா சொல்லிக்கொண்டிருப்பார்.

“அந்தமாதிரி ஒரு படத்தைப் பாரதபூமி பூராவும் தேடினால்கூடக் கிடைக்காதம்மா! அவ்வளவு வரப்பிரசாதத்துடன் அமைந்த சித்திரம் அது என்று மெய்ம் மறந்து அவர் சொல்லும்போதெல்லாம் ‘இப்பொழுதே பூந்தோட்டம் போய் அந்தச் சித்திரத்தைப் பார்த்துவிட மாட்டோமா’ என்ற ஆவல் கங்கு கரையில்லாமல் எழும். உண்மையாகவே பூந்தோட்டத்தை அடைந்தபோது எங்கே பார்த்தாலும் ராம படங்களாகவே என் கண்முன் மின்னி மறைந்தன.

என் தொந்தரவு – ஆசைகூட – பொறுக்க முடியாமல் மற்ற அலுவல்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டு அப்பா என்னைச் சுப்பராம சாஸ்திரிகள் அகத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். அப்பொழுது உதயம் ஆகவில்லை. இன்னும் சிறிது நேரத்திற்குள் உதயம் ஆகிவிடும் என்பதற்கு அறிகுறியாக அபூர்வ ஒளி ஒன்று இருளைக் கழிகொண்டு விரட்டிக்கொண்டிருந்தது. சிவாலயத்தில் இருந்து பிராதக்காலப் பூஜையின் மணி ஓசை கேட்டது. பசுக்களும் கன்றுகளுமாக இடையர்கள் தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள். ஸ்திரீகள் முத்து முத்தாகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள். தூங்கி வழிகிற ஒரு ஜீவனையும் அங்கே காணோம்.

சுப்பராம சாஸ்திரிகளின் அகத்து வாயிற்படியில் காலைவைத்ததும் ‘கண கண’ வென்ற மணியோசை எங்களை உள்ளே வரும்படி அழைத்தது. “சாஸ்திரிகள் பூஜை செய்கிறார்” என்று அப்பா பயபக்தியோடு மேல்வேஷ்டியை எடுத்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

பால ரவியின் ஒளி அறை முழுதும் பரவ, பல புஷ்பங்களின் வாசனையோடு அந்தப் பூஜை அறை காணப்பட்டது. என் தந்தை என் மனத்துள் கனவு அலைகளை எழுப்பி வந்த ஸ்ரீ ராம படம் மந்தஹாஸத்தில் காணப்பட்டது. படத்தின் தேஐஸை எடுத்துக் காட்ட அங்கே மின் விளக்கு இல்லைதான். ஆனாலும் குத்துவிளக்குச் சுடரே வெட்கிப் போகும்படியாக அதன் தேஜஸ் அந்த அறை பூராவும் வியாபித்திருந்தது. சாஸ்திரிகள் கண்ணை மூடித் தியானத்தில் இருந்தார். அநுபவத்தால் முதிர்ந்த தோடு வயதிலும் முதிர்ந்த சரீரம். ஸ்ரீ ராமனிடம் கொண்டிருந்த அளவற்ற பிரேமையால் அவர் முகம் காந்தி பெற்று விளங்கியது. மெளனமே குடிகொண்டிருந்த அவ்வறையில் சிறிது நேரம் நாங்கள் மெய்ம்மறந்து நின்றிருந்தோம். சாஸ்திரிகள் கண்விழித்துச் சாஷ்டாங்கமாக ஸ்ரீராகவனை நமஸ்கரித்துவிட்டு நிமிர்ந்து என் தந்தையை நோக்கினார்.

“வா அப்பா! ராமசந்திரா” என்று அன்பையெல்லாம் திரட்டி அழைத்தார். பகவானுக்கும் அவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அப்பா நிமிர்ந்தபோது அவர், “இவள்தான் ‘இவள் தான் உன் பெண்ணோ?” என்று கேட்டார்.

“ஆமாம், உங்கள் படத்தைப் பார்க்கவேண்டும் என்று தொந்தரவு செய்ததன்பேரில் அழைத்து வந்தேன்.”

“அருகில் போய்ப் பாரம்மா ! சிறு வயதிலேயே பக்தி ஏற்படுவது நல்லது. ஸ்ரீ ராமன் அருள் பெற்றுத் தீர்க்க சுமங்கலியாய் இரு” என்று ஆசீர்வதித்தார். சாஸ்திரிகள் மனம் பக்தியால் பக்குவம் அடைந்திருக்கிறது என்பதை அவர் பேச்சும் வினயமும் காண்பித்துவிட்டன.

“இந்த ராம சித்திரம் உருவான வரலாற்றைச் சொல்லவேணும்” என்று அப்பா கேட்டுக்கொண்டதன் பேரில் சாஸ்திரிகள் ஆரம்பித்தார்.

***

“ஏறக்குறைய ஐம்பது வருஷங்களுக்குமுன் என் அத்தான் கிருஷ்ணசாஸ்திரிகள் எழுதிய படம் இது. கிருஷ்ணன் என்னைவிடப் பத்து வயது மூத்தவன். சிறுவயதிலிருந்தே படங்கள் எழுதுவதில் நல்ல ஆஸ்தை உண்டு அவனுக்கு. அவனுக்குப் பதினைந்து வயது நிரம்பியதும், இந்த ஊர்ச் சிவாலய உத்ஸவமூர்த்தியை ரிஷபவாகனரூடராய் எழுதிப் பெரிய மகான்களின் ஆசியைப் பெற்றவன். சிறு வயதிலிருந்தே கவிதை, ஓவியம் இரண்டிலுமே மனத்தை லயிக்கவிட்டுக் காவியத்தை அவனால் ரசிக்க முடிந்ததே தவிரக் கவிதை எழுத வரவில்லை. ஒரு நாள் கம்பனின் பாடல் ஒன்றை ஊன்றி ஊன்றிப் படித்தான். திடீரென்று என்ன தோன்றியதோ? ராமன் விஸ்வாமித்திரனுடன் தாடகை சம்ஹாரத்துக்குப் போகும் காட்சியைக் கவிதையை வைத்துக்கொண்டே சித்திரமாக எழுதிவிட்டான். இளஞ் சூரியன்போல் விளங்கும் சூரிய குல சிங்கங்களைத் தன் சித்திரத்தில் பார்த்துப் பார்த்து அன்று பூராவும் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தான். அவனிடம் ஒரு விசேஷ குணமும் உண்டு. தன்னைவிடப் பெரியவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்களிடம் தன் வித்தையைக் காண்பித்துப் பெருமையடையத் தான் எந்த விதத்திலும் ஏற்றவன் அல்ல என்பதுதான் அந்த எண்ணம். சித்திரம் எழுதுவதும் தனிமையில்தான். இந்த அறை ஒதுக்குப்புறமாகத்தானே இருக்கிறது? இது பூஜைக்கு லாயக்கு இல்லைதான். ஆனால்… இருக்கட்டும். பூராவையும் விஷயம் சொல்லிவிட்டு அறையைப் பற்றிச் சொல்ல வேணும் உனக்கு” என்று சாஸ்திரிகள் தொடர்ந்து ஆரம்பித்தார்.

அவன் தான் எழுதிய சித்திரத்தைக் கண்டு மனம் களிப்பதும் தனிமையில்தான். கூட நான் இருப்பதுண்டு. என்னை மட்டும் தன்னுடன் இருக்க அனுமதித்தான்.

“கம்பன் கவிதைகளைப் படிப்பதும் உடனே சித்திரம் எழுதுவதும், அவைகளைப் பார்த்துக் கண்ணீர் பெருக்கி மெய்ம்மறந்து போவதுமே அவன் தினசரித் தொழில்களாகப் போய்விட்டன. அகத்தில் பெரியவர்கள் எங்கள் இருவரையும் கடிந்துகொள்வார்கள்.

“ஊரிலே ஒரு வேலைக்கும் துப்புக் கிடையாது. வீட்டுக்குள்ளேயே நீயும் உக்காந்திண்டு என்னடா செய்யறே சுப்பராமா?” என்று என் அத்தை கோபித்துக் கொள்வாள். அறைக்கதவைக் கிருஷ்ணன் திறந்தால் தானே?

“நீ வேண்டுமானால் போடா, என்னால் இப்போது வர முடியாது” என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவான் கிருஷ்ணன். அவன் எழுதிய சித்திரங்களின் முழு வனப்பையும் கண்டு களிக்க முடியாத நான் அத்தைக்குப் பயந்து வெளியே போய்விடுவேன்.

“பையனுக்குக் காலத்தில் ஒரு கால்கட்டைக் கட்டணும். அவனோ படம் எழுதறதே கதியாகக் கிடக்க கறான், நீங்களோ அவனைக் கவனிக்கிறதே இல்லை” என்று தன் பர்த்தாவின்மீது கோபத்தைக் காண்பித்து வந்தாள் அத்தை.

“அவனவன் கர்மாவின்படி நடக்கப் போகிறது. நீ ஏன் சங்கடப்படுகிறாய்?” என்று அத்திம்பேர் அவளுக்குத் தேறுதல் சொன்னால் வீட்டில் ரகளைதான்.

“அவன் மனத்தைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ ராமன் அப்பொழுது அவன் கையில் கல்யாண கோலத்தில் அமர்ந்திருந்தான். சீர்காழியில் இருந்த பெரிய மிராசுதார் ஒருவர் தன் பெண்ணை இந்த ராம பக்தனுக்குக் கொடுக்க முன் வந்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. கிருஷ்ணனின் மனைவி ஸ்வர்ணம் அசல் ஸ்வர்ணம்தான். தன் பர்த்தாவின் மனம் கோணாமல் நடந்து, அவன் எழுதும் சித்திரங்களுக்கு உடனிருந்து ஏதாவது திருத்தங்கள் சொல்லுவாள்.

“பிள்ளை சரியில்லை’ என்ற ஏக்கத்தால் அத்தையும் அத்திம்பேரும் அடுத்தடுத்துச் சில வருஷங்களில் இறந்து விட்டார்கள். ஊரிலிருந்த நிலம் புலன்களில் வரும் வரும்படி லாபமா நஷ்டமா என்பதையும் கவனிக்காமல் ஸ்ரீ ராமன் கதையைச் சித்திரமாக வரைவதையே. தொழிலாகக் கொண்டான் அவன்…” என்று சொல்லிக் கொண்டே சாஸ்திரிகள் படத்தைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தார்.

“அந்தப் படங்களெல்லாம் இப்பொழுது எங்கே?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“பொறு அம்மா! இந்தத் திவ்வியமான படம் அமைய இருக்கும்போது, அவைகளைக் கேட்ட நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டான். அவர்கள் வாழ்க்கைப் பாலத்தை இன்னும் பலமாக இணைக்கும்படி குழந்தை ஒன்றும் இல்லை. ஸ்வர்ணத்திற்கு அது பெரிய குறையாகத்தான் இருந்தது”.

****

“அந்த வருஷம் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் வழக்கம் போல் ஆரம்பமாயிற்று. கிருஷ்ணன் அகத்தில் ராமாயணக் காலக்ஷேபமும் ஆரம்பமாயிற்று. கம்பனின் கவிதைச் சுவையை ஊரில் உள்ளவர்கள் அநுபவித்தார்கள். ஆனால் புராணிகருக்கு அடுத்தாற்போல் இருக்கும் அறையில் கிருஷ்ணன் உட்கார்ந்து புராணிகர் ஒவ்வொரு கவிதையையும் விளக்கிச் சொல்லும்போது மெய்ம்மறந்து கை என்ன எழுதுகிறது என்பது புரியாமலே கவிதை இன்பத்தில் கடைந்தெடுத்த அநேக ஓவியங்களைத் தீட்டினான். சித்திரங்கள் ஒன்றை ஒன்று வென்று விடும்போல் களை சொட்ட அமைந்திருந்தன.

“ராமாயணக் காலக்ஷேபம் முடியும் நாள்; மறுநாள் பட்டாபிஷேக வைபவம். முதல்நாள் இரவு கிருஷ்ண னின் பேச்சு, செயல் யாவும் அதிசயமாக இருந்தன. வீட்டில் ஸ்வர்ணம்மட்டும் பட்டாபிஷேக வைபவத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாள். கிருஷ்ணன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. அது
அவள் மனத்திற்குக் கொஞ்சம் வருத்தமாயிருந்தது என்று எனக்குத் தெரிந்தது.

“உங்கள் அத்தானை நாளை வைபவத்தில்மட்டும் கலந்துகொள்ளச்செய்ய முயலுங்கள்” என்று ஸ்வர்ணம் என்னிடம் சொன்னாள்.

“அம்மா! அவன் நிழல்போல் இருந்து சேவை செய்யும் உன் வார்த்தையைவிட என் சொல்லைக் கேட்பானா அவன்?” என்று நான் பதில் சொன்னேன்.

பட்டாபிஷேக வைபவம் சுப வேளையில் ஆரம்பமாயிற்று.

“‘ஹரே ராம்’ என்று ராமநாமம் வீடு பூராவும் ஒலிக்கவே கிருஷ்ணன் எழுந்து வெளியே வந்து சற்றுப் பிரமித்து நின்று பட்டாபிஷேகத்திற்காக வைத்திருந்த படத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே உள்ளே போக யத்தனித்தான்.

“கிருஷ்ணா இப்படி உட்காரப்பா’ என்று புராணிகர் அழைத்தார். அவன் புன்னகையோடு சென்று தன் அறைக் கதவைத் தாழிட்டான்.

“ஸமாராதனை எல்லாம் முடிந்து, இரவு வைபவங் களும் முடிந்துவிட்டன. ஸ்வர்ணம் தன் பர்த்தாவுக்காகப் பால் எடுத்துக்கொண்டு கலை நிரம்பிய அவ்வறைக் கதவைத் தட்டினாள். ‘யார்? ஸ்வர்ணமா? வா’ என்று கிருஷ்ணன் அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்து கொண்டுபோய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டான். இந்தச் செய்கை எனக்கு வியப்பை அளித்தது.

“ஸ்வர்ணம் பகலெல்லாம் வேலை செய்த களைப்பால் அயர்ந்து தூங்கிவிட்டாள். கிருஷ்ணன் தான் எழுதிவந்த பட்டாபிஷேகப் படத்தின் திரையை நீக்கினான்.

“பரதா! சரியாய் நின்று சேவைசெய்க! ஹே அஞ்சன புத்திரா! பாத தூளியைச் சிரசில் நீமட்டும் தரித்துக் கொள்ளுகிறாயே ! ஜய ஜய ராம்’ என்று கத்துவதைக் கேட்டு ஸ்வர்ணம் விழித்து பார்த்தாள். தன் கணவன் சிரமேல் கைகூப்பிக் கண்கள் நீரைச் சொரிய நின்று ராம மந்திரத்தை ஸ்மரிப்பதைக் கண்டாள். எதிரே கலையின் சிகரத்தை அடைந்த இந்தப் பட்டாபிஷேகப்படம் களைப் பறித்தது.

“ராமா! நானும் வருகிறேன்” என்று கிருஷ்ணன் தடதடவென்று கதவை நோக்கி ஓடினான். கீழே தடாரென்று விழுந்தவனை ஸ்வர்ணம் மடியில் தாங்கிக்கொண்டாள்.

“உஷத்காலத்தில் சகல ஜீவன்களும் தெய்வ அருளைப் பாடித் துதித்திடும் நேரத்தில் ஸ்ரீ ராம சந்நிதானத்தில் கிருஷ்ணன் பகவானை அடைந்தான். அந்த உத்தமியும் அதிக நாள் வைத்தவ்வியக் கோலத்துடன் இருக்கவில்லை.

“அவள் அந்திய காலத்தில் என்னிடம், ‘உலகின் ஐச்வர்யம் அத்தனையும் இந்தப் படத்துக்கு ஈடாக நிற்காது. இதற்கு ஈடு இதுவே. என் பர்த்தா வரப்பிரசாதத்தால் ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகக் கோலத்தைக் கண்ணால் கண்டு களித்து எழுதிய சித்திரம் இது. உங்களிடம் நம்பிக்கை இருப்பதால் இதை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்’ என்று சொல்லி என்னிடம் அளித்தாள்.

“அந்தப் பக்த தம்பதிகளின் ஆசியால் படத்திற்கு இன்றுவரையில் ஒரு குறையும் வைக்கவில்லை. நான் முதலில் சொன்னேனே: பூஜைக்கு இந்த அறை ஒதுக்குப்புறமாக இருந்தாலும் இதையே உபயோகித்து வருகிறேன் என்று. இதில்தான் என் அத்தான் பல அருமையான படங்களை எழுதியது; இங்கேதான் அவன் ஆத்மா ஈச்வரனை அடைந்ததும். இந்த அறையின் மகத்துவம் கொஞ்ச நஞ்சம் அல்ல” என்று ஆனந்த பாஷ்பம் பொழியக் கூறி முடித்தார் சாஸ்திரிகள்.

என் முன் கிருஷ்ண சாஸ்திரிகளின் வாழ்க்கை பூராவும் தோன்றி மறைந்தது. “அந்தப் பக்தரின் அறைக்குள் இருக்கிறோம்” என்று உணர்ந்து புளகாங்கிதம் அடைந்தேன்.

“ஆஹா! அந்தப் படம்! அது வரப்பிரசாதந்தான் ண்பதில் சந்தேகமே இல்லை!”

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *