(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாகிஸ்தானின் வடமலைப் பிராந்தியத்தில் அவர்கள் வெகு நேரமாக பயணம் செய்தார்கள். அஸ்காரி முன்னாலே சென்றார்; அவரைத் தொடர்ந்து அவருடைய ஒரே மகன் அலி, பன்னிரெண்டு வயதுகூட நிரம்பாதவன், வந்து கொண்டிருந்தான். மூன்று துப்பாக்கிகளும், ஒரு கைத்துப்பாக்கியும் அவர்களிடம் இருந்தன. இவர்களுடன் முபாஸர் என்ற வேலைக்காரன் அவர்கள் குடிப்பதற்கு தண்ரும், சாப்விடுவதற்கு ரொட்டியும், பழங்களும் ஒரு கூடையில் வைத்து காவியபடியே பின்னாலே வந்தான்.
அந்த வேட்டைக்கு அன்று விடிகாலை மூன்று மணிக்கே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். பன்னிரெண்டு மணி நேரம் அவர்கள் நடக்க வேண்டும். வெயில் தலைமேல் வருமுன்னரே அவர்கள் மலையடி வாரத்திற்கு வந்து விட்டார்கள். பாறைகள் குத்துக்குத்தாக இருந்தன. செங்குத்தான அந்தப் பாறைகளில் துவக்குகளையும் மாட்டிக் கொண்டு ஏறுவதென்பது எல்லோராலும் இயலாத காரியம்.
அஸ்காரி நிதானமாகவும் லாவகமாகவும் பாறைகளில் கால்வைத்து ஏறினார். அலி ஆர்வத்தோடு வேகமாகப் பின் தொடர்ந்தான். அஸ்காரியின் பார்வை மாத்திரம் அங்குமிங்கும் அலை பாய்ந்தபடியே இருந்தது. இது அலியினுடைய முதல் வேட்டை. அவனுடைய எதிர்காலமே அந்த வேட்டையில் அடங்கியிருந்தது. அல்லாவின் கடாட்சம் இருந்தால் அலி திரும்பும்போது ஆண் மகனாகத் திரும்புவான். ஓர் அணிலையோ, முயலையோ காட்டுக் கோழியையோகூட சுடலாம்; பிழையில்லை. ஆனால் அஸ்காரியின் பேராசை அலி ஒரு மலை ஆட்டை வேட்டையாட வேண்டுமென்பது தான்.
அஸ்காரி ஆசையுடன் ஒருமுறை தன் மகனைப் பார்த்துக் கொண்டார். சிறுவனாக இருந்தாலும் அவன் புஜங்கள் என்ன திடகாத்திரமாக இருக்கின்றன. இவனை தவம் செய்தல்லவோ அவர் பெற்றுக் கொண்டார். எத்தனை கஸ்டங்களை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவருடைய முதல் மனைவி நூர்ஜஹான் பிழியப் பிழிய அழுதுவிட்டாள். பன்னிரெண்டு வருட காலம் அவருடன் வாழ்ந்தவள் ஆயிற்றே! அவளைத்துறந்துவிட்டு அவ்வளவு சுலபத்தில் இரண்டாவது மனைவியை எடுத்துவிட முடியுமா?
தனிமையில் இருக்கும்போது நூர்ஜஹானிடம் “நீ ஏன் கலங்குகிறாய்? நான் உன்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம் உனக்கு தெரியாதா? ஆண் வாரிசு வேண்டுமென்றல்லவோ இந்தக் காரியத்தை செய்யத் துணிந்தேன்” என்று அவள் மோவாயைப்பிடித்து கூறினார். பதிலாக நூர்ஜஹானுடைய கண்களில் மெல்லிய நீர்ப்படலம் கோத்து நின்றது.
முந்திய காலம் போல வேண்டியபோது இருக்கும் மனைவியைத் தள்ளி வைத்துவிட்டு புது மனைவியை இப்போதெல்லாம் தேடிக்கொள்ள இயலாது. முதல் மனைவியின் சம்மதத்தை பெறவேண்டும். அஸ்காரி வேறு வழியின்றிதான் இப்படி நூர்ஜஹானிடம் கெஞ்சவேண்டி இருந்தது.
அஸ்காரியின் தகப்பனாருக்கு இறக்கும்வரை அந்தப் பயம் இருந்தது, தனக்கு பிறகு தன்னுடைய வம்சம் அழிந்துவிடுமோ என்று. ஏனெனில் அவருடைய தகப்பனாருக்கு அவர் ஒரே ஆண் பிள்ளை. பாட்டனாருக்கும் அப்படித்தான். அவர்கள் வம்சத்தில் பல பெண்கள் பிறந்தாலும் ஆண் வாரிசு ஒன்றுதான். இப்ப மூன்று தலைமுறைகளாக, எத்தனை பெண்கள் இருந்தாலும் ஓர் ஆண் பிள்ளைக்கு ஈடுவருமா?
அஸ்காரிக்கு இருபது வயது இருக்கும்போதே நிக்காஹ் ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. பக்கத்து ஊரிலே நல்ல வசதியான இடத்தில் இருந்துதான் நூர்ஜஹான் வந்தாள். அவள் மயக்கும் அழகியில்லை. ஆனால் யௌவனப் பிராயத்தில் எந்தப் பெண்தான் கண்ணுக்கு அழகாக தெரிய மாட்டாள்.
பஃராத் அன்று அவளை பல்லக்கில் கொண்டு வந்து இறக்கினார்கள். ஊர் முழுக்க அங்கே கூடி நின்றது. பின்னாலேயே நாலு வண்டிகளில் அவள் வீட்டு žதனமும் வந்தது. பதினைந்து சால்வார் கமிஸ், தங்க நகைகள், வெள்ளிக் கொலுசுகள், சமையல் பாத்திரங்கள், கட்டில், மெத்தை, வீட்டு தளபாடங்கள் இதுவெல்லாம் தவிர இன்னுமொரு விசேஷமான சாமானும் இருந்தது. அது ஒரு ட்ரான்ஸ’ஸ்டர் ரேடியோதான். அந்தக் காலத்தில் அது ஒருவரிடமும் கிடையாது. அவள் கொண்டுவந்த சாமான்கள் எல்லாவற்றையும் பரப்பி வைத்தபோது ஊரில் எல்லாரும் வந்து அதிசயமாகப் பார்த்துப் பார்த்து அது பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். நூர்ஜஹானுக்கு எவ்வளவு பெருமை இருந்தது.
முதல் வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அஸ்காரிக்கு பெரிய ஏமாற்றம்; ஆனால் அவர் அதைக்காட்டவில்லை. இரண்டாவது பெண். அடுத்தடுத்து நாலு பெண் குழந்தைகள் பிறந்தன. ஊரிலே எல்லாரும் ஒரு மாதிரி இவரை இளப்பமாக பார்ப்பதுபோல பட்டது. அப்பொழுதுதான் அஸ்காரி ஹக்கீமை தேடி ஓடினார். மருந்துகள் பொட்டலம் பொட்டலமாக வாங்கி மனைவிக்கு கொடுத்துப் பார்த்தார். சரிப்படவில்லை. ஐந்தாவது பெண்ணும் பொட்டலம்போல பிறந்தபோது இவர் நூர்ஜஹானை பிரசவ அறை என்றுகூட பார்க்காமல் அடித்து விட்டார்.
அஸ்காரியின் தகப்பனார் பயந்தது போலவே நடந்தது. அவர் ஆண் வாரிசுவைப் பார்க்காமலே இறந்து போனார். அஸ்காரி தன்னுடைய சந்ததி தனக்கு அஸ்தமனமாகி விடுமோ என்று நிறைய கவலைப்படத் தொடங்கினார்.
அந்த நேரம் பார்த்துத்தான் ஜிர்காவில் தன்னுடைய பிரச்சினையை கிளப்பினார் அஸ்காரி. இரண்டாவது மனைவியை எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. நூர்ஜஹான், பாவம் அவள், கண்களில் நீருடன் தன்னுடைய கையெழுத்தைப் போட்டு தந்தாள். ஆனால் சம்மதம் வாங்கிய பிறகு பார்த்தால் இவள் இன்னுமொரு முறை கர்ப்பம். நாள் தவறினாலும் வருடாவருடம் இவள் கர்ப்பமாவது மட்டும் தவறியது கிடையாது. அஸ்காரி அவசரப்படாமல் பொறுத்திருந்து பார்த்தார். ஆனால் ஆறாவதும் பெண் குழந்தையாகத்தான் பிறந்தது.
முஸ்லா இமானுல்ல பரம ஏழை. ஆனால் அல்லாவின் பரிபூரண அருளால் குழந்தை செல்வத்துக்கு மட்டும் குறைவில்லை. அவருக்கு பதினொரு குழந்தைகள். இரண்டு நேரம் சாப்பிடுவதற்கும், உடுப்பதற்கும் வசதி இருந்தது. அவருடைய மூத்த பெண்ணை ஒருநாள் அவர் தலைநிமிர்ந்து பார்த்த போது திடுக்கிட்டு விட்டார். அவள் இப்படி கிடுகிடென்று வளர்ந்து விடுவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்?
முல்லா நேரம் தவறாமல் தொழுகை செய்வார். அதற்கு சாட்சியாக அவருடைய நெற்றியிலே கொட்டைப் பாக்கு அளவில் ஒரு பொட்டணம் இருக்கும். அதைப் பார்த்தவர்கள் அவருக்கு அதிமரியாதை செலுத்தி தள்ளிப் போவார்கள். குரல் வளம் அவருக்கு இந்த வயதிலும் கரென்றுதான் இருந்தது. அவருடைய தொழுகை அழைப்பு அடுத்த கிராமம்வரை கேட்கும்.
முல்லாவினுடைய மூத்த மகள் மெஸ்ருன்னிஸாவுக்கு பதினேழு வயது நடக்கும்போது அஸ்காரி வந்து இரண்டாந்தாரமாக பெண் கேட்டார். இமானுல்லா மெய்மறந்து விட்டார். அல்லாவின் கருணையை நினைத்து நினைத்து வியந்தார். இம்முறை பல்லக்கில் மெஹ்ருன்னிஸா வந்து இறங்கிய போது அவள் பின்னால் வந்த டொங்காவில் ஓட்டை சட்டி பானைகளும், உடைந்த கட்டிலும்தான் வந்தது. ஏழை முல்லாவிடம் வேறு என்ன இருக்கும்; திமுதிமுவென்று பார்க்கவந்த ஊர்சனங்கள் எல்லாம் ஏமாந்து போய் திரும்பி விட்டார்கள்.
ஆனால் அஸ்காரி ஏமாறவில்லை. அளக்கமுடியாத சௌந்தர்யத்தை மெஹ்ருன்னிஸா அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். அஸ்காரி ஆசை மேலிட்டு அணுகியபோது அவளுடைய அழகு இன்னும் பிரகாசித்தது. முதல் நாளிலிருந்தே அவருக்கு அவளிடம் மையல் ஏற்பட்டு விட்டது. அவருக்கோ வயது முப்பத்தைந்து தாண்டிவிட்டது. மெஹ்ருன்னிஸாவுக்கு இன்னும் பதினேழு முடியவில்லை. மையல்வராமல் என்ன செய்யும்?
முல்லாவின் மகள் என்றாலும் மெஹ்ருன்னிஸாவுக்கு, இயற்கை அளித்த அழகை கணவனை அடிமை கொள்ள எப்படியெல்லாம் பிரயோகிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. அஸ்காரியை முதல் நாள், முதல் கணத்திலிருந்தே தன்வகமாக்கி விட்டாள். அவருடைய முதல் மனைவி இவ்வளவு காலமாக அறியாத நுணுக்கங்களெல்லாம் மெஹ்ருன்னிஸாவுக்கு அத்துபடி. ஒது பெண்ணிடம் இத்தனை விசேஷங்கள் இருப்பது அஸ்காரிக்கு தெரியாமல் போய்விட்டது. நூர்ஜஹான் இவ்வளவு காலமும் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்துக் கொண்டார்.
அஸ்காரிக்கு மெஹ்ருன்னிஸாவிடம் பிடித்தது அவளுடைய சூட்சுமமான குறிப்பறியும் தன்மையும், குக்கிராமத்துப் பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள புத்தி சாதுர்யமும்தான். பிரியமுடன் அஸ்காரி வரும்போதெல்லாம் அவள் எதேச்சையாக தன் தலைத்திரையை நழுவ விடுவாள். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பது கடைசிவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகஸ்யமாக போய்விட்டது.
அவள் கர்ப்பமானவுடன் அவளுக்கு விருப்பமான அல்வாவை ரஹ்மான் கடையில் வாங்கி ரகஸ்யமாக ஓடோடி வருவார். தனிமையில் இருக்கும்போது அதை விள்ளி அவள் வாயில் ஊட்டுவார். அவள் காதுகளில் செல்லமாக காதல் வார்த்தைகளில் கொஞ்சுவார்.
அந்தக் கொஞ்சல்கள் கனகாலம் நீடிக்கவில்லை. அவளுக்கும் பெண் குழந்தைதான் பிறந்தது. மரியம் என்று பேர் வைத்தார்கள், அஸ்காரி பேயறைந்தவர் போல நடந்துகொண்டார். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. அடிக்கடி ஆற்றங்கரையிலே போய் விசராந்தியாக உட்கார்ந்து கொண்டு தீவிரமாக யோசித்தார்.
அஸ்காரி தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்கொண்டார். திடீரென்று ஒற்றையடிப் பாதை மறைந்து இப்போது காட்டுப் பாதையாக மாறிவிட்டது. அலி ஒரு பாறையில் ஏறி நின்று சுற்றிவரவும் பார்த்தான். அவன் சிறுவன்தானே! அவன் நினைத்ததுபோல் மலை ஆடுகள் கூட்டம் கூட்டமாக அந்தப் பிராந்தியத்தை நிறைத்து திரியவில்லை. இதுவரை அவர்கள் கண்டதெல்லாம் ஒரு காட்டுக் கோழியும், முயலும்தான். மலை ஆடு எப்படி இருக்கும் என்றுகூட அலிக்குத் தெரியாது.
சாம்பலும் பழுப்பும் கலந்த நிறமாக பாறைகளுடன் கரைந்துதான் அவை காணப்படும். கூட்டம் கூட்டமாக ஒரு காலத்தில் திரிந்த அந்த ஆடுகளின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. உயரம் இரண்டரை அடிதான் இருந்தாலும் நேரான கொம்புகளுடன் அவை கம்பீரமாக இருக்கும்.
அவைகளின் கால் அமைப்பு ஒரு பாறையில் இருந்து இன்னொரு பாறைக்கு தாவுவதற்க ஏற்றமாதிரி அமைந்திருக்கும். ஒவ்வொரு பாறையாக அவை அனாயசமாகத் தாண்டுபோது பார்த்தால் பறப்பது போலவே இருக்கும்; கீழே நிலத்தை அடையும்போது முன்னங் கால்களை ஒருங்கே குவித்துவைத்துத்தான் விழும்; சறுக்கி விழுந்ததென்பது அவைகளில் ஜாதகத்திலேயே கிடையாது. கண்களை அலைய விட்டபடியே மேயும்; ஒரு சிறிய அசுகை அவற்றைக் காற்றிலே தூக்கி எழுப்பிவிடும். அந்தரத்திலேயே செங்குத்தாக திரும்பும் வல்லமை படைத்தவை. மனிதனுடைய விவேகத்துக்கும், சக்திக்கும் சவாலாக கடவுளால் படைக்கப்பட்ட ஜ“வன் அவை.
மலை ஆடுகள் பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசங்களில் பல்லாயிரம் ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்தவை. வரவர அவைகளுடைய இனம் இயற்சையின் žற்றத்தாலும் மனிதனுடைய ஆக்கிரமிப்பாலும் குறுகி விட்டது. இந்த மாதிரி மலை ஆடுகள் உலகின் வேறெந்தப் பரப்பிலும் கிடையாது. இவை வேரோடு மறைந்துவிடும் அபாயத்தை உணர்ந்த பாகிஸ்தானின் அரசு இந்த ஆடுகளை இடருற்ற உயிரினம் (endangered species) என்று அறிவித்திருந்தது. இவற்றை பிடிப்பதோ, வேட்டையாடுவதோ சட்டத்திற்கு புறம்பானது.
ஆனால் இப்படியான அறிவிப்புகள் மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு வடிகட்டி வர கனகாலம் ஆகும். அப்படியே தெரிய வந்தாலும் கிராமத்து மக்கள் அதை சட்டை செய்யப் போவதில்லை. அந்த ஆடுகளோ, தம்மை பாதுகாக்க விசேஷமான சட்டம் போட்ட விஷயம் தெரியாதபடியால், இன்னமும் பயந்தபடியே அந்த மலைப் பிராந்தியங்களின் செடிகளை மென்றபடி திரிந்து கொண்டிருந்தன.
அஸ்காரி ஆசையுடன் மெஹ்ருனை இன்னொரு முறை நினைத்துக் கொண்டார். இவளுடைய நினைவே அவருக்கு உற்சாகமூட்டியது. இவளை மணமுடித்து முதல் பிரசவம் பெண் குழந்தையாக இருக்கக் கண்டு அவர் மனம் என்ன பாடுபட்டது. இவளை தள்ளி வைக்கக் கூட நினைத்தாரே! அப்போதுதான் ஹஜ் யாத்திரை போவதென்ற தீர்மானத்துக்கு அவர் வந்தார்.
அந்த வருடம் ஹஜ் யாத்திரையாக 60,000 பேருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க முடிவு செய்திருந்தது. அஸ்காரியின் பெயரும் அந்தப் பட்டியலில் இருந்தது. அவருடைய பிரார்த்தனை எல்லாம் ஒர் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்பதுதான். அவர் உயிராக நேசிக்கும் மெஹ்ருன்னிஸாவும் இப்படி தன்னை ஏமாற்றுவாள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இப்ப மொலுமொலுவென்று ஏழு பெண் குழந்தைகள் அவர் வீட்டை அடைத்துக் கிடந்தனர். முதல் மனைவியிடம் பிறந்த மூத்த மகள் ரஸ“மா பூப்பெய்தி விட்டாள். தலையில் முக்காடு போட்டுத்தான் அவள் இப்போதெல்லாம் காணப்படுகிறாள். தன் சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்துவிடுமோ என்று அவர் பெருமூச்சு விட்டார்.
மெஹ்ருன்னிடம் இவருக்கு அளவு கடந்த மோகம். கடைசல் உடம்பு என்பார்களே, அப்படி அவளுக்கு. வழவழவென்றிருப்பாள். ஒரு வீச்சில் என்னவெல்லாமோ சொல்கிற கண். இவர் காதல் மேலிட்டு நிற்கும் வேளைகளில் என்ன மாதிரி ஊகமாக இவரிடம் வந்து சேர்ந்து கொள்வாள். முல்லாவின் மகளாக இருந்துகொண்டு இந்த செப்படி வித்தையெல்லாம் எங்கே கற்றாள்? அவளை எப்படி தள்ளி வைக்க முடியும்! மூன்றாவது மனைவி ஆண் மகவு தருவாள் என்பது என்ன நிச்சயம்?
ஹஜ்யாத்திரை மேற்கொண்ட போது அல்லாவின் அளப்பரிய கருணையால் தனக்கு ஒரு விடிவு காலம் கிட்டும் என்று எதிர்பார்த்தார். தையல் போடாத இரண்டு ஒற்றைத் துணிகளை உடுத்திக்கொண்டு அல்லாவின் சன்னிதியில் நின்றபோது அந்த ஜனவெள்ளத்தில் இவர் தன்னை ஒரு துளியாகத்தான் உணர்ந்தார். இடது தோளை மூடிக்கொண்டு வலதுகையின் துணியை இடுக்கிக் கொண்டு தல்பியாவை ஓதியபடி இடம்வரத் தொடங்கினார்:
லப்பய்க்க அல்லாஹும்மா லப்பய்க்க
லப்பய்க்க லா ஸரிக்க
லக லப்பய்க்க
ஓ அல்லாவே சரணம்
உன் அடிமை நான் இங்கே
உனக்கு சமானம் யார்
அல்லாவே நான் இங்கே
அஸ்காரியின் கண்களில் நீர் பனித்தது. சஃபா மலைக்கும் மர்வா மலைக்கும் இடையில் ‘சாய்’ செய்யத் தொடங்கியபோது அவர் கண்களில் கண்ர் கொட்டியது. ஏழுதரம் மாறி மாறி ஓடினார். ‘பச்சை குழந்தை இஸ்மாயில் தன் சின்னக் கால்களை உதைத்துக்கொண்டு தண்ருக்காக கதறியபோது நடுப் பாலைவனத்தில் தண்ர் ஊற்றை தோற்றுவித்தாய் அல்லவா? என் கண்ர் உனக்குத் தெரியவில்லையா? குழந்தை இஸ்மாயிலின் சந்ததி பெருகியது போல என் வம்சம் விருத்தியாக ஒரு வழி செய்ய மாட்டாயா?’
குர்பானை முடித்து தலைமயிரையும் ஒட்டமழித்த பிறகு அவர் மனதிலே இத்தனை காலமும் அழுத்திய பாரம் இறங்கியதுபோல இருந்தது. திரும்ப ஊருக்கு வந்தபோது வழக்கம்போல ஹஜ்விருந்துகள் பல நாட்கள் தொடர்ந்தன. அவர் கொண்டுவந்த பவித்திரமான ‘ஸம் ஸம்’ தண்ரை வடக்குப் பார்த்தபடி எல்லோரும் ஓரொரு சொட்டு வாயிலே விட்டுக் கொண்டார்கள்.
மெஹ்ருன்னிஸாவை தயிமையில் அணுகுவதற்கு அவருக்க மூன்று நாள் பிடித்தது. என்ன வžகரமாக இருந்தாள். அவளுடைய புன்னகை ஒரு புதுவிதமான அர்த்தத்தோடு விகஸ’த்தது. இவர் அவளுக்காக கொண்டுவந்த தங்கச் சங்கிலியை அவள் கழுத்திலே கட்டிவிட்டார். ‘மரியமின் அம்மாவே, மரியமின் அம்மாவே’ என்று கூப்பிடும் இவர் தனிமையில் இருக்கும்போது ‘மெ…ஹ்…ரூ…ன்’ என்று செல்லமாக அவள் காதுகளில் கூவினார். இம்முறை நிச்சயமாக பையன்தான் என்று இவர் உள்ளுணர்வுக்கு பட்டது.
‘வாழ்ந்தால் அலிபோல் வாழ், இறந்தால் ஹுசைன் போல் இற’ என்ற வாசகம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனபடியால் பிறக்கும் குழந்தைக்கு அலி என்று பெயர் வைப்பதாகவே தன் மனத்திற்குள்ளே முடிவு செய்தார். அவருடைய மனைவியின் விருப்பம் வேறுவிதமாக இருக்குமென்பது அப்போது அவருக்குத் தெரியாது.
இரண்டுநாளாக அவர் மனைவி பிரசவ வலியிலே துடித்தாள். மூன்றாம் நாள் இரவு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். பொன்னாங்காணி தண்டுபோல சிவப்பு நிறம்; கருநீலக் கண்கள்; தலை நிறைய சுருள் மயிர். அப்படியான ஒரு அழகை அவர் ஆயுசிலேயே பார்த்ததில்லை.
பிள்ளையினுடைய அழகைப் பார்த்து அவர் மனைவி. யூசுப் என்று பேர் வைக்கலாம் என்று யோசனை சொன்னாள். யூசுப்பையும் மிஞ்சிய ஒர் அழகான ஆண்மகனை இந்த மண்ணுலகம் பார்த்திருக்க முடியுமா; யூசுப் என்ற அடிசை ஸ”லைகாவுடைய விருந்து மண்டபத்திற்குள் காலடி எடுத்துவைத்தபோது ஸ”லைகாவினுடைய அரசவைத் தோழியர் பழங்கள் நறுக்கிக் கொண்டிருந்தனராம். அவனுடைய பேரழகைப் பார்த்த தோழியர் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் மயங்கி கைவிரல்களை வெட்டிக் கொண்டார்களாம். அப்படியான ஒரு பேரழகுடன் பிறந்த பிள்ளைக்கு யூசுப் என்று பேர் வைப்பதுதான் பொருத்தம். அதனால் இருவரும் யோசித்து யூசுப் என்று பேர் வைப்பதாக முடிவு செய்தனர்.
அஸ்காரியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஹுஜ்ராவில் சனம் நிறைந்துவிட்டது. துப்பாக்கியை நூறு ரவுண்டு, இருநூறு ரவுண்டு என்று சுட்டு ஊர் முழுக்க பிரகடனம் செய்தார்கள். வண்ணக் கலர் ரவைத் துப்பாக்கிகளை வெடித்து வானத்தை மத்தாப்புபோல அலங்கரித்து ஆரவாரித்தார்கள். ஒரு கொழுத்த எருமை மாட்டை வெட்டி விருந்து போர்ட்டார் அஸ்காரி. அவர் இனிமேல் ஜிர்கா கூட்டங்களுக்க தலைநிமிர்ந்து போகலாம்.
அலி பிறந்த அன்று முன்கூட்டியே ‘டாராவில்’ சொல்லி வைத்து வாங்கிய பளபளவென்று மின்னு புதிய கைத்துப்பாக்கி ஒன்று அலியினுடைய சின்னஞ் சிறு தலையணையின் கீழ் வைக்கப்பட்டது. இனிமேல் அவன் தலையணையின் கீழ் அந்த துப்பாக்கி அவன் இறக்கும்வரை இருக்கும்.
அலி கிடுகிடென்று வளர்ந்துவந்தான். ‘கண்ணை இமை காப்பது’ என்று சொல்வார்களே அதுமாதிரித்தான் அவனைப் பார்த்தார்கள். ஏழு பெண் குழந்தைகள் பிறந்த வீட்டில் ஒரே ஆண் பிள்ளை வேறு எப்படி வளரும்? வீடு முழுக்க அவனிடம் உயிரையே வைத்திருந்தது. இரண்டு வயது வரையில் அவனுடைய கால்கள் நிலத்தில் படவேஇல்லை. ஒருத்தியின் இடுப்பிலிருந்து மற்றவளின் இடுப்புக்கு மாறியபடியே இருப்பான். அவனுடைய தளிர் ஸ்பரிசம் பட எல்லோரும் தவம் கிடந்தார்கள். சொந்த தாய்க்குக் கூட அவனை வைத்து கொஞ்ச முடியவில்லை.
இவனுடைய ராஜ்யம்தான் நடந்து கொண்டிருந்தது. இவன் பேச்சுக்கு மறு பேச்சில்லை. எல்லோரும் தனக்கு சேவகம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தான். அழகும் ஆணவமும் சேர்ந்த ஒரு பையனாக வளர்ந்து வந்தான். ஏழு வயது வரையில் தாய் தமக்கையருடன் வீட்டிலேயே இருந்தான். பிறகு அவர்கள் வழக்கப்படி ஹுஜ்ராவுக்கு தகப்பனுடன் மாறிவிட்டான். அன்றிலிருந்து தாயையும் தமக்கையரையும் உதாžனம் செய்துவிட்டு தகப்பனுடனேயே சுற்றத் தொடங்கினான்.
பள்ளிக்கூடம் என்று பேருக்குத்தான் போனான். அவன் கவனம் முழுக்க ஆற்றில் மீன் பிடிப்பதிலும், சிறு பிராணிகளுக்கு பொறி வைப்பதிலுமாக போய்க்கொண்டிருந்தது. அஸ்காரியுடன் சேர்ந்து துவக்குகளையும், பிஸ்டல்களையும் சுத்தப்படுத்துவதும், வேட்டைக்கு போவதும் அவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
இவனுடைய அதிகாரத்திற்கு தாய்மாரும் தமக்கையரும் நடுங்குவார்கள். இப்படித்தான் ஒரு நாள் ஹுஜ்ராவில் விருந்தினர் வந்திருந்தார்கள். ஷெனானா வீட்டிற்குப் போய் žக்கிரம் சாப்பாடு அனுப்பும்படி அதிகாரம் செய்துவிட்டு வந்தான். அப்படியும் சாப்பாடு வரவில்லை. இன்னொரு முறை போய் அதட்டிப் பார்த்தான். அப்ப இவனுடைய பெரியம்மாவின் இரண்டாவது மகள் நுஸ்ரத், அவளுக்கு பதினாறு வயதிருக்கும், எரிச்சல் தாங்காமல் “நீ சும்மா போய் உன் வேலையைப் பார், சாப்பாடு ரெடியானதும் தானே வரும்” என்று சொல்லி விட்டாள். இவனுக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. அப்படி யாரும் இதற்கு முன்பு இவனிடம் கதைத்ததில்லை. தன்னுடைய சின்னக் காலைத் தூக்கி அவளுடைய முழங்காலைப் பார்த்து ஓர் அதைவிட்டான். அவள் ‘உஃப் மோஃரே’ என்று காலைப் பிடித்தபடியே இருந்து விட்டாள். இவனுடைய தாயார் துப்பட்டாவை எடுத்து வாய்க்கள்ளே திணித்து சிரிப்பை அடக்கி கொண்டாள். பெரிய தாயார் மட்டும் தன்னுடைய தலைச் žலையை நன்றாக முன்னுக்கு இழுத்துவீட்டு மற்றப்பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அதற்குப்பிறகு அலிக்கு வேண்டிய மரியாதை கிடைத்தது. எட்டு, ஒன்பது வயதிலிலேயே எல்லாவிதமான துப்பாக்கிகளையும் கழட்டி சுத்தம் செய்து திருப்பியும் பூட்டி விடுவான். பத்து வயதிலேயே துப்பாக்கியை தூக்கி பிடித்து குறி பார்த்து சடப் பழகிக்கொணடான். துப்பாக்கி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அவனுக்கு தண்ணிபட்ட பாடு. ஒரு புதுத் துப்பாக்கி பற்றி பெரியவர்களுக்கிடையில் சர்ச்சை வந்தால் அதைத் தீர்த்து வைப்பது அலிதான்.
அந்தக் கிராமமும் மற்றக் கிராமங்கள் போல ஒரு வழக்கம் வைத்திருந்தது. சிறுவர்களக்கு உபநயனம் செய்து பூணூல் அனிவிப்பது போல இங்கேயும் ஒரு சடங்க இருந்தது. இதன் பிறகுதான் ஒரு சிறுவன் உண்மையான ஆண் மகன் ஆவான். அது முதல்முறையாக காட்டுக்குப் போய் ஒரு மிருகத்தையோ பறவையையோ வேட்டையாடி வருவதுதான். இந்த வேட்டையை வைத்து அவரவரின் தகுதியை ஊர் கணித்துவிடும்.
அஸ்காரி அவருடைய வாழ்நாளில் அறுபது, எழுபது வேட்டைகளுக்கு போயிருப்பார். காட்டுக்கோழி, வாத்து, மான், முயல், காட்டுப்பன்றி என்றுதான் வழக்கமான வேட்டை. ஆனால் இவை எல்லாத்திற்கும் சிகரம் வைத்தது போலத்தான் மலை ஆட்டு வேட்டை இருக்கும். அஸ்காரி இரண்டே இரண்டு முறைதான் மலை ஆட்டு வேட்டையில் வெற்றி பெற்றிருக்கிறார். அதைக் கொல்லுவதென்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. யாராவது வெற்றியுடன் திரும்புவார்களாகில் அன்று கிராமம் முழுக்க திமிலோகப்படும். வேட்டை பிரதாபத்தை எல்லாரும் சுற்றி இருந்து கேட்பார்கள். அந்த இறைச்சியின் ருசியே ஒரு தனி ரகம்தான்.
அஸ்காரி தன் கையிலே இருந்த இரண்டு துப்பாக்கிகளில் ஒன்றை அலியிடம் கொடுத்தார். அது பரம்பரையாக அவருடைய பாட்டனார் காலத்தில் இருந்து வந்த துப்பாக்கி. அதற்கு பின்னே ஒரு பெரிய கதை இருந்தது. அந்தத் துப்பாக்கி தொண்ணூறு வயசு. அது ‘டாராவில்’ குடிசைக் கைத்தொழில் போல் ஒரிஜினல் லீ என்ஃபீல்டு துப்பாக்கியைப் பார்த்து செய்தது. ஒருமுறை ஒரு வெள்ளைக்காரன் கூட அதன் செய்கையைப் பார்த்து அது ஒரிஜினல்தான் என்று ஏமாந்து விட்டான். அவர்கள் வம்சத்தை அது காப்பாற்றுகிறது என்று நம்பினார்கள்.
அவருடைய பாட்டனார் ‘பட்டான்கிளர்ச்சியில்’ பங்கு பெற்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக சண்டை போட்டவர். அப்போது அவருக்கு வயது பதினெட்டுத்தான். கர்ஸன் துரை 35,000 துருப்புகளை அனுப்பி அவர்கள் புரட்சியை முறியடித்த போது அப்கானிஸ்தானுக்கு தப்பியோடி பத்து வருட காலம் தலைமறைவாக இருந்தவர். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து ‘டாராவில்’ இதை வாங்கினாராம்.
பாட்டனார் காலத்திலே பல வேட்டைகளுக்க இந்தத் துப்பாக்கி போயிருக்கிறது. அவருக்குப் பிறகு அஸ்காரியின் தகப்பனார் அஸ்துல்லா இப்ராஹ’மிடம் இது வந்து சேர்ந்தது. அஸ்காரியுடைய காலம்முடிந்த பிறகு அலிக்க போய் சேரும். இது ஒரு அதிர்ஸ்டமான துப்பாக்கி. இதில் குறி வைத்தால் அது தப்பாது. இது பல உயிரைக் குடித்திருந்தாலும் ஒரே ஒரு மனித உயிரைத்தான் இன்று வரை எடுத்திருக்கிறது.
இந்த சம்பவம் அஸ்காரி பிறக்க வெகு நாள் முன்பே நடந்தது. மற்றவர்கள் சொல்லித்தான் இவருக்கு தெரியும். இவருடைய தகப்பனார் இப்ராஹ’ம் பல தடவை ஹஜ் யாத்திரை போனவர். நல்ல உயரமாய் மீசையுடன் கம்பீரமாய் இருப்பார். அவருடைய உடம்பு ஈரத் துணியை முறுக்கி எடுத்ததுபோல இறுகிப்போய் இருக்கும்.
இப்ராஹ’மின் நிக்காஹ் ஓர் அதிசயமான முறையில் நடந்தது. சிறு வயது முதல் கொண்டே ஜமால் அகமதின் மகள் டுரிஷாவரையே இப்ராஹ’ம் நிக்காஹ் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு நாள் இவர் வீட்டுக்கு ஒரு கிழட்டு விருந்தாளி ஜமால் அகமதின் இரண்டாவது மகள் ஸபுன்னிஸாவை வர்ணிக்கக் கேட்டார். அன்றிலிருந்து இவருக்குள் அவள் மேல் மோகம் ஏற்பட்டுவிட்டது. இவர் எவ்வளவு முயற்சி செய்தும் இவரால் அவளை மறக்க முடியவில்லை. கண்ணாலேயே பார்க்காத ஒரு பெண்ணிடம் காதல் எற்படக் கூடுமா?
அக்பர் பாதுஷாவுடைய அந்தப்புரத்தல் எத்தனையோ ராணிகள் காத்துக் கிடந்தனர். ஒருமுறை வழிப்போக்கன் ஒருவன் ரூபமதி என்னும் பெண்ணின் லாவண்யத்தை வர்ணித்து பாடிய பாட்டொன்றைக் கேட்டார். அப்படியே அவளுடைய அழகின் வர்ணனையில் மதி மயங்கி உருகிவிட்டார். அதற் பிறகு அக்பர் அவளுடைய சிந்தனையாகவே இருந்தார். ராஜ்யபாரத்தில் கவனம் செல்லவே இல்லை. நேரே பார்க்காமல் ஒரு பாட்டு வர்ணனையைக் கேட்டு உன் மத்தமாவது சாத்தியம்தான். அக்பர் பிறகு அந்தப் பெண்ணுக்காக சைன்யத்தையெல்லாம் திரட்டிபடையெடுத்துப் போனது சரித்திரம்.
இப்ராஹ’ம் படை எடுக்காவிட்டாலும் மனத்தினாலே பலமுறை படை எடுத்துவிட்டார். ஆனால் ஸபுன்னிஸாவை வர்ணித்தவன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். அவள் அழகு வர்ணனைக்கு அப்பாற்பட்டது. இவர் அவளை மணமுடிக்க பட்ட கஷ்டமெல்லாம் அவளை மணமுடிக்க அன்று இரவு அவள் முகத்திரையை நீக்கியபோது பஞ்சாய்ப் பறந்து விட்டது. இவர் வாயிலிருந்து ‘ஆ’ என்று ஒரு சன்னமான ஒலி இவரையும் அறியாமல் எழும்பியது. ஒரு அக்பர் பாதுஷா இன்று இருந்திருந்தால் இவளுக்காக ஒன்பது மடங்கு சைன்யத்தையெல்லாம் திரட்டியிருப்பாரே என்று இப்ராஹ’ம் நினைத்தார்.
இவர் மனைவியின் அழகு மதியை மயக்கி ஆளை கிறங்க வைக்கும் அழகு. மணமுடித்த நாளில் இருந்து இவருக்கு அவள் மேல் அளவு கடந்த பிரேமை. இந்த அழகு ஏற்படுத்திய விபரீதம் ஒருநாள் அந்த ஊரிலே கொலையாகப் போய் விழுந்தது.
ஸபுன்னிஸாவின் பிரசித்தமான அழகை ஊர் முழுக்க கேள்விப்பட்டிருந்தது. ஆனால் பெண்களைத் தவிர வேறொருவர் பார்த்தது கிடையாது. அதற்கும் ஒரு நாள் சந்தர்ப்பம் வந்தது.
அந்த குக்கிராமத்தில் இருந்த ஒரேயொரு பால்கடை அஹமத் மிர்ஸாவுடையதுதான். அவனிடம் எட்டு எருமை மாடுகளும் பத்து பதினைந்து ஆடுகளும் இருந்தன. பால் சப்ளை தட்டுப்படும் சமயத்தில் மற்றவர்களிடம் பால் வாங்கி சமாளித்து வந்தான். அப்படித்தான் ஒருநாள் பால் சப்பை அவசரமாகத் தேவைப்பட்டதால் ஒரு மத்தியானம் போல இப்ராஹ’ம் வீடு தேடிப் போனான். அந்த சமயத்தில் ஒருவரும் அப்படி வீடு தேடி வருவது கிடையாது. இப்ராஹ’ம் அந்த நேரங்களில் கரும்புத் தோட்டத்திலே இருப்பார் என்பது ஊர் அறிந்த சேதி.
அஹமத் மிர்ஸா வீடு தேடி வந்தபோது ஸபுன்னிஸா எருமை மாட்டடியில் வேலையாக இருந்தாள். வேலையில் கண்ணாயிருந்தவள் தலைத்திரை நழுவியதை கவனிக்கவில்லை. அஹமத் மிர்ஸா பிழையான வழியில் போறவன் அல்ல. ஐந்து நேரத் தொழுகை தவறாமல் செய்து வருபவன். அப்படிப்பட்டவன் மாபெரும் தவறு ஒன்றை அன்று செய்துவிட்டான்.
அவளைப் பார்த்த கண்களை அவனால் அகற்ற முடியவில்லை. வைத்த கண் வாங்காமல் அப்படியோ கொஞ்ச நேரம் நின்றான். கொக்கி போட்டது போல ஏதோ ஒன்று அவனைப் பிடித்து இழுத்து நிறுத்தி வைத்தது; புத்தி அடியோடு மழுங்கிவிட்டது. வெற்றிக்களிப்பில் துரியோதனன் மதி மயங்கி ஒற்றை ஆடையோடு இருந்த திரௌபதியை சபைக்கு இழுத்துவரச் சொல்லி அவள் பார்க்க தனது இடது தொடையை கையினால் தட்டவில்லையா? அது மாதி ஒரு கணம் உன்மத்தனாகி விட்டான்.
அதற்கு பிறகு மகா பாபமான ஒரு காரியத்தை செய்தான் மிர்ஸா. கண்வெட்டாமல் அவளையே பார்த்தபடி žப்பை எடுத்து தன் தலையை வாரினான். இது கிராமங்களில் பாரதூரமான ஒரு அசிங்கமான சைகை. இப்படியான நடத்தைக்கு மன்னிப்பே கிடையாது. இதுபோல கீழ்த்தரமாக நடக்கும் ஆணுக்கு கிடைக்கும் தண்டனையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
சிறிது நேரம் சென்றது. ஸபுன்னிஸாவுக்கு இது ஒன்றும் தெரியாது. அவள் பாட்டுக்கு தன் வேலையிலேயே கண்ணாயிருந்தாள். திடுக்கிட்டு நிமிர்ந்தவள் இவனைப் பார்த்துவிட்டு அரண்டு போய் வீட்டுக்க உள்ளேஓடிவிட்டாள்.
அன்று பின்னேரம் இப்ராஹ’ம் இதைக் கேள்விப்பட்டார். அவர் இருதயத்தை யாரோ திருகிப் பிழிஞ்சதுபோல ஆகிவிட்டது. அவர் செய்யவேண்டியதைச் செய்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.
இப்ராஹ’ம், மிர்ஸாவைத் தேடிப் போனபோது மிர்ஸா கடையில்தான் இருந்தான். கடையிலே இன்னும் இரண்டு வாடிக்கைக்காரர்களும் இருந்தார்கள். இப்ராஹ’மின் கைகளில் துப்பாக்கியைக் கண்டதும் மிர்ஸாவின் கண்கள் மிரண்டன. இப்ராஹ’ம் அவர்களது வம்சத்து சொத்தாகிய லீ என்ஃபீல்டு துப்பாக்கியைத் தூக்கி பிடித்து குறிபார்த்து சுட்டார். குறி தவறவில்லை. மிர்ஸா அந்த இடத்திலேயே இப்ராஹ’ம் திரும்பி வந்து துப்பாக்கியை சுவரில் சாத்திவிட்டு ஒன்றுமே நடக்காதது போல சும்மா இருந்தபோது ஸபுன்னிஸா விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
அன்றிரவே ஜிர்கா அவசர அவசரமாகக் கூடியது. இப்ராஹ’ம் சுட்டதை ஒருத்தரும் ஆட்சேபிக்கவே முடியாது; அது செய்ய வேண்டியதுதான். ஆனால் இது ஒரு பெரிய ‘பரம்பரை ரத்தச் சண்டையாக’ மாறி விடக்கூடாது என்றுதான் பயப்பட்டார்கள். மிஸ்ராவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும். அவள் எங்கே போவாள்? மிர்ஸா பகுதியினர் ‘ரத்தப்பணம்’ கேட்டார்கள். ஜிர்காவில், மிர்ஸாவுடைய குடும்பத்துக்கு, இப்ராஹ’ம் நாலு எருமை மாடுகளும் அந்த வருடத்திய கரும்பு சாகுபடியில் பாதியும் கொடுக்கவேண்டும் என்று துர்ப்பாகியது.
அஸ்காரியின் நிக்காஹ் கன காலம் தள்ளிப் போனதுக்கும் காரணம் அவருடைய தாயார் ஸபுன்னிஸாதான். தன் தாயைப் போன்ற அழகான பெண்தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று அஸ்காரி கேட்டுக் கொண்டிருந்தார். அது அவ்வளவு இலகுவான காரியமா என்ன? அஸ்காரியின் தாயார் இப்போது இல்லையென்றாலும் அந்த மாதிரி ஒரு அழகை அஸ்காரி பிறகு இந்தப் பிரபஞ்சத்தில் காணவேயில்லை.
அஸ்காரி திரும்பிப் பார்த்தார். அலியும் முபாரும் கொஞ்சம் தளர்ந்து விட்டார்கள். விரைந்து வருமாறு சைகை காட்டிவிட்டு மேலும் தொடர்ந்தார். இப்போதெல்லாம் மலை ஆட்டைக் காண்பதுவே அரிதாகி விட்டது. மலையின் உச்சியில் ஒன்றோ, இரண்டோ தனித்து காணப்படும். மனிதவாடை பட்டதும் மாயமாய் மறைந்துவிடும். ராமாயணத்தில் மாய மானைப்போல அது துரிதமாக பறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே காற்றிலே ஐக்கியமாகிவிடும்.
அதிர்ஷ்டம் இருந்தால் இன்று அலியின் முதல் வேட்டை ஒரு மலை ஆடாக இருக்கும். அலி பன்னிரண்டு வயதுப் பையனாக இருந்தாலும் அவனுடைய தோள்கள் துப்பாக்கியைத் தாங்கும் வலுவுடன்தான் இருந்தன. நெற்றியில் சிறிது வியர்வை அரும்ப தடுமாற்றமில்லாமல் ஒவ்வொரு பாறையாக லாவகமாகப் பாய்ந்து குருவிபோல வந்து கொண்டிருந்தான் அலி. மலை ஆட்டுக்கு இவன் பெரிய சவாலாகத்தான் இருப்பான்.
வேட்டைக்காரர்களுக்கு கண்களில் சக்தி வெகுதூரம் வரை இருக்கும். நாலாபக்கமும் கண்களை துழாவியபடியே வந்து கொண்டிருந்தார்கள். முயல், காட்டுக் கோழி எல்லாம் சுடும் தூரத்தில் இருந்தும் அவர்கள் அவற்றைத் தாண்டி வந்து விட்டார்கள். பாறைகளின் உச்சியில் தனிமையில் நின்று வேவுபார்க்கும் மலை ஆடு மட்டும் அவர்களுக்கு தென்படவே இல்லை.
நேரம் பதினோரு மணியாகிக் கொண்டு வந்தது. இவர்கள் மூவருக்கும் களைப்பு மேலிட்டு விட்டது. பாறைகளில் இருந்து சூடு மெதுவாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. ‘கொஞ்சம் இளைப்பாறலாமா?’ என்று அஸ்காரி நினைத்த போதுதான் வெகுதூரத்தில் பாறையின் உச்சியில் நிழலாக பாறையோடு ஒர் ஆடு தன் சாதகத்தை முடிக்க வந்தவர்கள் எதிரில் வருவது தெரியாமல் செடியொன்றை நிமிண்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது.
அஸ்காரியின் இதயம் ‘படக், படக்’ என்று அடிக்கத் தொடங்கியது. அவருடைய வாழ்நாளிலேயே அந்த இதயம் இப்படி வீசோடு துடித்ததில்லை. மலை ஆடு நிமிர்ந்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மறுபடியும் தன் வேலைக்குத் திரும்பி நிமிண்டத் தொடங்கியது.
அஸ்காரி காற்றின் திசை பார்த்து அலியையும், முபாஸரையும் தன் பின்னால் வேகமாக வரும்படி சைகை காட்டினார், அலியும் முபாஸரும் நிலத்தோடு அமுங்கிப் போய் மெதுவாக முன்னேறினார்கள். மலை ஆட்டை நோக்கி சாவு ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு அந்தச் சிறிய செடியில் மனதைப் பறிகொடுத்து அதைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது.
அலி ஒரு புதல் மறைவில் குந்தி முழங்காலில் உட்கார்ந்து கொண்டான். நிதானமாக துப்பாக்கியை நிமிர்த்தி தோள்மீது தாங்க கொடுத்து குறி வைத்தான். சிறு பையன் ஆனாலும் வேட்டைக்காரன் பிள்ளையாதலால் அவன் கைகள் கன்கிரீட் போல ஆடாமல் அசையாமல் நின்றன.
கடைசி முறையாக அந்த ஆடு செடியைவிட்டு நிமிர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டது. அஸ்காரி கண் சாடை காட்டினார். அலி ஆற அமர அவசரப்படாமல் விசையை நிதானமாக அமுக்கினான். படீரென்ற ஒலி காடு முழுக்க பதவியது. ‘டும், டும்’ என்று பாறைகள் எதிரொலித்தன. மலை ஆடு ஆறடி உயரத்துக்கு எவ்விப்போய் தூர விழுந்தது.
அஸ்காரி மகனைப் பார்த்தார். மகன் தகப்பனைப் பார்த்தான் இரண்டு பேரும் கையை உயர்த்தி ‘கூஹாய்’ என்று கத்திக் கொண்டே ஆட்டை நோக்கி ஓடினார்கள். முபாஸரும் கூடையை புதரடியில் போட்டுவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அன்று அவர்கள் கிராமத்தில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இந்தச் செய்தி மற்றக் கிராமங்களுக்கும் பரவிவிடும். அலியின் பிரதாபத்தை கேட்பதற்கு எல்லோரும் வந்து கூடுவார்கள். மலை ஆட்டு விருந்து இரவு முழுக்க தொடரும். அந்த இறைச்சியின் ருž பற்றி எல்லோரும் சிலாகிப்பார்கள். அவன் ஒரு முழு ஆண்மகனாகி விட்டான். அல்லாவின் கருணையால் அவர்கள் வம்சம் இனி இடையூறின்றி தொடரும்.
அவர்கள் கிராமத்தை நோக்கி வேகமாக நடந்தார்கள். மைமலாவதற்கு முன்பே அவர்கள் போய்ச் சேர்ந்துவிடவேண்டும். அலியின் முகத்தில் பெருமிதம். முபாஸர் ஆட்டைத் தூக்கியபடி பின்னாலே இளைக்க இளைக்க வந்து கொண்டிருந்தான்.
இந்த உலகின் பரப்பிலே, பாகிஸ்தானின் வடமலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மலை ஆடுகள் உலவி வந்தன. அவற்றின் உலக எண்ணிக்கை நேற்று வரை 84 ஆக இருந்தது இன்று அது 83ஆக சுருங்கிவிட்டது.
அலியும் தகப்பனும் தங்கள் வெற்றியைக் கொண்டாட கிராமத்தை நோக்கி எட்டி நடை போட்டனர்.
– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.