கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,174 
 
 

மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா தரையிறங்குது பனித்தாரை. வரப்படியில் அண்டின பூச்சிப்பொட்டுக குளுர்தாங்காம சில்லாய்க்கிறதில் காதடையுது.

காவாயில் ஜதிபோட்டு ஓடியாரும் தண்ணி வெதுவெதுன்னு பாயுது. வெடிப்புல மண்டியிருந்த தாகம் ஈரம் பட்டதும் இளஞ்சூடா கரையுது காத்தில். சாரையும் நாகமும் விரியனும் மிலுமிலுக்கும் வயக்காடுன்னு தாத்தாவும் தருமனும் சொன்னது நெசந்தான். சீத்துசீத்துனு சீறிக்கிட்டு எலி விரட்டி அலையும் சத்தம்.

ஆள் பொழக்காட்டம் அருகின இப்படியான ராப்போதுகள்ல காசம் தொட மரமெல்லாம் ரகசியமா வளரும் போல. ரயில் ரோட்டோர பனைமரங்க செஞ்செவிக்க நிக்குதுங்க தலைசிலுப்பி. சாரியா ஒசந்ததில் மூனாம் மரம் தாத்தாவுது. ஒத்தமரத்துக் கள் குடிச்சா ஒடம்பு கனியும்னு தாத்தாவுக்கு தனிச்சியுட்ட மரம். கடேசி மடக்கை உறிஞ்சினதும் மீசையொதுக்கி செருமறாப்ல இருக்கு இப்பமும். குளுகுளுன்னு கள் உள்ள இறங்கினதும் ஆளை கிளப்பியுட்ரும் போல. மடி முட்டுன கன்னுக்குட்டியா கும்மாளம் பொங்கிரும் அவருக்கு. கோமணம் தொங்கறது தெரியறாப்ல வேட்டிய நெஞ்சுவரைக்கும் மடிச்சி ஏத்திக் கட்டிக்கிட்டு மரத்தடி சேக்காளிங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் ஞாயம் நீளும். மப்பு சாஸ்தியாகி கண் சொருகி அங்கயே கமுந்தடிச்சிக் கெடக்கறது சகஜம். தெளிஞ்சு எழுந்து வர்றப்ப வாடை அவருக்கே குமட்டுமோ என்னமோ, வரப்புல துளசி கிள்ளி மோந்துகிட்டே வருவார். வெண்ணங்கொடி முனியாட்டம் செவந்து பிதுங்குன முழிங்க பயங்காட்டும்.

அந்தமரத்துக்கள் மேல அனேகம் பேருக்கு ஆசை. கிழவன் மூச்சிருக்கிற வரை கிடைக்காது யாருக்கும்னு பேசிப்பாங்க. அதென்னமோ நெசந்தான். முட்டியில ஒருசொட்டு தங்காது. ஒறம்பரைசரம்பரையே வந்தாலும் வேற மரத்தடிக்கு நகந்துட வேண்டியதுதான்.

இப்ப யாரும் அந்தமரத்துல பாளை சீவறதில்ல. முட்டிக்கு பத்து ரூவா சேத்துத் தாறேன்னு முன்சீப் மவன் கேட்டதுக்குக்கூட தாத்தாம்மா முடியாதுன்னிட்டா. தாத்தா ஞாவகார்த்தமா நுங்குக்கு விட்டாச்சு. சடைசடையா குடுவையாட்டம் பத்திருவது குலையிறங்கி மினுங்கும். முத்தின கடுக்கா நுங்கு கூட தனிருசி. தப்பின கொட்டைங்கள மேங்காட்டுத் திட்டுகள்ல மொளைக்கப் போட்டு ஊராருக்கு கெழங்கெடுத்து குடுக்கறதுல தாத்தாம்மாவுக்கு நிம்மதி. ஊர்ல பசங்க உருட்டி வெளையாடற வண்டிக்கெல்லாம் இந்தமரத்து புருடைங்கதான் சக்கரம். பழம் சுடறப்ப வாசம் ஆளைத்தூக்கும். வெந்து கருகுன மேந்தோலுக்குள்ள மஞ்சமசேல்னு மாம்பழமாட்டம் இருக்குற பனஞ்சேகை நார்நாரா போறமுட்டும் மென்னுகிட்டேயிருக்கலாம். அவ்ளோ இனிப்பு.

தாத்தா மரம்போக மத்தது மன்னானுக்கு. தாத்தாவுக்கு நல்ல சேக்காளி. இப்பமும் குடும்பத்துக்கு நல்ல ஒத்தாசை. தொழில்ல மகா கெட்டிக்காரன். பாகு காய்ச்சும் வாசனைக்கு பக்கம்பராந்திரி பிள்ளைங்கல்லாம் வந்துடுவாங்க. வஞ்சனையில்லாம வழிச்சுக் குடுப்பான் கொட்டமுத்துத் தழையில. முறுகக் காய்ஞ்ச ஓலைய செல்லக்கரண்டியா உடைச்சு பாகு வழிச்சு சப்பும் பிள்ளைங்க, கொப்பரையச் சுத்தி ஈயா மொச்சுக்கிடப்பாங்க. கொதிக்கிற பாகு தெறிச்சு கொப்பளம் எழுந்தாலும் அச்சுல வார்க்குற வரைக்கும் அடுப்பச் சுத்தியே அலையுங்க.

பாகு காய்ச்சி பதம் எடுத்தான்னா அப்படியொரு பக்குவம். வருசம் நாலானாலும் வெல்லத்துக்கு வில்லங்கமில்ல. அம்பது உண்டை வெல்லமும் வேணும்கிறப்ப தெளுவும் பருவத்து ஈடா குடுக்கறான்.

கொப்பரைக்குப் போக மிச்சமரத்துல கள்ளுக்கு வழி பண்ணிட்டான் மன்னான். தாத்தா காலத்திலிருந்தே இது வழமை. காலங்காலைல ஜனமான ஜனம் குமியும். குருத்தோலைல தெத்தின கோட்டையில ஊத்தியூத்தி குடிச்சிட்டு வயனம் பேசி வம்பாடி கரம்பக்காட்ல வுழுந்து கெடப்பாங்க. நெதானந்தப்பி ரயிலுக்கு வேட்டியவுத்துக் காட்ற வேடிக்கைக் கூத்துக்கும் பஞ்சமில்ல.

தாத்தா போனதிலிருந்து ரஞ்சிதம் வர்றதில்ல. அவ வந்துபோன கொடித்தடத்துல அவளுக்கப்பறம் யாரும் நடக்காம அனாதையா நெளிஞ்சிருக்கு அவளாட்டமே. எப்ப வேணும்னாலும் அவ வந்துடுவாள்னும், இனிமே அவ வந்துபோறதுக்கு முகாந்திரமேயில்லைன்னும் இருகூறா அயிப்ராயமிருக்கு. இப்பவும் அவளோட பலகாரக்கூடை வாசம் பனைமரத்துச் செதில்ல படிஞ்சிருக்குன்னு நம்பறவங்க இருக்காங்க.

முன் கொசவம் வச்ச செவத்தா தான் இப்பவெல்லாம் கூடையெடுத்தாறா. பேருதான் செவத்தா. நெருப்புமேல தண்ணியூத்தினாப்ல ஆளு காக்கா செவப்பு. நெறத்துல என்னயிருக்கு? ம்ஹ¥ம்… முந்தானைல கோலின சும்மாடு மேல கூடைய வச்சிக்கிட்டு கை ரெண்டையும் கரகாட்டக்காரியாட்டம் வீசிவீசி வர்றப்ப கெழவன் கூட கெறங்கிருவான். கூடைக்காரிங்கறதால கூப்புட்ற முடியுமா? மானம் போயி மந்தைல நிக்கமுடியுமா? வம்பு பண்ணினான் வாயாடினான்னு நாளைக்கு ஊர்ப்பொதுவுல ஞாயம் கீயம் வெச்சுட்டாள்னா…? எதுக்கு பொல்லாப்புன்னு ஆளாளுக்கு வுட்ட பெருமூச்சுல இன்னம் கறுக்குறா செவத்தா.

செவத்தா, சந்தை நாள்ல ரத்தப்பொரியலும் வறுத்தக்கொடலும் கொண்டாருவா. மத்த நாள்ல சுருக்குனு காரமேத்துற போண்டா, வடை, தாளிச்ச காரமணி, அவரை, நரிப்பயறு சுண்டல்னு கமகமக்கும். இருந்தாலும் ரஞ்சிதம் கைப்பக்குவம் யாருக்கு வரும்கிற அங்கலாப்பு இருக்கு நெடுநாளா மரத்தடியில.

மக நட்சத்திரம் இன்னம் கீழ இறங்குல. அதுக்கும் தாழ ஒத்தையா ஜொலிக்கற மீனுதான் உன் தாத்தான்னு காட்டுவா தாத்தாம்மா. வளவுல படுத்துக்கிட்டு வச்சக்கண் வாங்காம அதையே பாத்திருப்பா. திடும்னு உசுரு வந்தவளாட்டம் வெத்தலச்சாற பீச்சித் துப்பிக்கிட்டே கொசுறு கொசுறா எதாச்சும் பேசுவா தாத்தா பத்தி. பின்னயும் கண்ணொழுக்கி சிலையா படுத்திருப்பா. காசத்துக்கும் அவளுக்கும் தொலவு மங்கி மறஞ்சி புருசன் கைபிடிச்சி தனிச்சி வாழறாப்ல தெரியும். பொதையலக் காக்குற பூதமாட்டம் அது நம்பளையேத்தான் பாத்திருக்கும்னு தணிஞ்சக்குரல்ல அவளுக்கே ரகசியம் சொல்றாப்லா முணுமுணுப்பா. ஊரடங்கி நாய்ங்களும் மொடங்குன பிற்பாடு வாடா எஞ்செல்லமேன்னு என்னை இழுத்து வயித்துச்சூட்டுல தழையவுட்டுத் தூங்கிருவா.

செத்ததுக்குப் பின்னயும் அல்லாரையும் பாத்துக்க தாத்தா மீனுரு பூண்டு அங்கயிருந்து காக்குறாராம். அதும்பக்கத்துல துக்கிலியா தெரியற ரெண்டுமீனுந்தான் உங்கொப்பனும் உங்கம்மாளும்னு தாத்தம்மா சொல்வா. நடுவூட்டு சாமிமாடத்துல போட்டாவா தொங்கறாங்க ரெண்டுபேரும். ரயில்ரோட்ட தாண்டறப்ப வண்டியில சிக்கி அவங்க சாகறப்ப நான் ஒருவருச சிசுவாம்.

மீனுரு மாத்திரமில்ல எந்த அவதாரமும் எடுக்கற சாத்ரீகமுண்டு தாத்தாவுக்கு. கையூனி கரணம் போட்டு அந்தரத்துல மிதக்கற மந்தரமும் தந்தரமும் அறிஞ்சவர். நெனைச்சதை சாதிக்க எந்த ரூபமும் கைக்கூடும் அவருக்கு.

இன்னிக்கும் கூடயிருந்து குடும்பத்த நடத்தறாப்லதான் தோணுது. இவ்ளோ காலத்துக்கப்பறமும் காத்தாட்டம் இங்கயேதான் காடு முழுக்க நெறஞ்சிருக்கறதா நெனச்சிருக்கோம். அதனாலயே ஒருமாதிரி பயமும் தைரியமும் ஒழுங்கும் தானா படிஞ்சிருக்கு எதுலயும். பாக்கப்பாக்க அந்தமீன் தாத்தாவோட சுருட்டாட்டம் கனலுது. அவர் சொடக்கு போட்டு உதுத்துவிட்ட சுருட்டுச் சாம்பலா பனி படியுது மேல. வயக்காடு முழுக்க பொகலை கருகுற நெடி வீசுது இப்ப.

காவாக்கரை தென்னமரத்துலயிருந்து முத்தின நெத்து காத்து தாங்காம அத்து வுழுந்த சத்தம் கேட்டு கொட்டாய்க்கிட்டயிருந்து செவலையன் கொலைக்குது. அகாலத்துல அந்த சத்தம் எதையெதையோ ஞாபகம் பண்ணச் சொல்லுது.

தாத்தா செத்தன்னிக்கு ராத்திரி இப்பிடித்தான் செவலையன் ‘ஓ’ன்னு கூப்பாடு போட்டு கொலைச்சிக்கிட்டிருந்தது. என்ன ஏதுன்னு யாராச்சும் மாமரத்தடிக்கு ஓடிப் பாத்திருந்தா தாத்தா
சாகறதைக்கூட தடுத்திருக்கலாமோன்னு எப்பவாச்சும் தோனும். அன்னம் தண்ணி காரமில்லாம நாலஞ்சு நாள் குழிய சுத்திசுத்தி திரிஞ்சிக்கிட்டிருந்திச்சு செவலையன். வாயில்லா சீவனுக்கும் பேசறத்துக்கு விஷயமிருக்கும் போல.

அத்தினி வயசுல பிறத்தியாரானா நாயா பேயா நாண்டு நாறித்தான் செத்திருப்பாங்க. சவமாயிருச்சா கிழம்னு எட்டயிருந்து மோந்துப் பாத்து ஏன் இன்னமும் சாகலேன்னு ஊரும் உறவும் பஞ்சாங்கம் பாக்கும் விடிய விடிய. எறும்புக்கும் ஈய்க்கும்கூட எளக்காரமாகி ஒரு கவளம் சோத்துக்கு உயிரலைஞ்சு சாகும். தளந்து தள்ளாடி தாவாரத்துல கெடக்கறப்ப ஏன்னு கேக்க எந்த நாயும் பக்கம் வராது. தாத்தா அப்பிடியில்ல. கடைசிவரைக்கும் கைத்திடத்துல இருந்தார். கண் தெரிஞ்சு நடந்தார். நோவுநொடின்னு ஒருநாளும் சாய்ஞ்சதில்ல. கொட்டப்பாக்கை நொடக்குனு கடிக்கிறப்ப மத்தங்களுக்கு பல் வலிக்கும். இவர் தாடைய பிடிச்சிக்கிட்டு கேலி பண்ணுவார்.

ஆனது ஆகாததுன்னு எதுவுமில்ல. ருசியாயிருந்தா வெஷத்தையும் தின்னு, முறிக்கிற மருந்து இல்லாமயாப் போயிரும்பார். கோழியாட்டம் தீனியெடுத்தா குக்கநோவு வந்து செத்துப்போயிடுவே, நல்லாத் தின்னுடா கண்ணும்பார். வெங்கலக் கிண்ணியில விழுற சோத்துல ஒரு பருக்கை சிந்தாது சிதறாது. சாப்பாட்ல அவ்வளவு கவனம். கறி ஆக்கும் நாள்ல கதை தனி.

நெனைக்கற நாள்ல கறி வேணும். வெள்ளிக்கிழம, நடுசனி, பொரட்டாசின்னு யாராச்சும் சொன்னா தீந்தாங்க. பச்சப்பொணத்த பிச்சித் திங்கற சாமியக் கும்புடற ஒனக்கும் எனக்கும் என்னாடா சாங்கியம்… காவு போட்டு படையல்ல கவுச்சி படைக்காதப்ப தன்னோட நாக்கையே கடிச்சி ரத்தம் சப்புற சாமிடா நம்புளுது. நாளாம்…கெழமையாம்… ஓடிப்போய் ஒரு கூறு கறி வாங்கியாம்பார். எந்தஊர் சந்தையில யார் யார் கசாப்புக்காரன்னு கச்சிதமாத் தெரியும். எனக்கு-சாக்கனுக்குன்னு சொல்லு. சுக்கூர்பாய் பதமா குடுத்தனுப்புவான்னு போற ஊருக்கும் ஆளுக்கும் தக்குனாப்ல சொல்லிடுவார். எங்கயும் ப்படாத நாள்ல களத்துமேட்டுல கிளைக்கிறக் கோழி வயித்துக்குள்ள இரையெடுக்கும்.

பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு எலும்பில்லாத செங்கறியா நிமிட்டி எடுத்து தருவார். நான் திங்கவா இதெல்லாம், உனுக்காவத்தாண்டா கண்ணு. தின்னு சாமி.. இந்தா ஈரல்னு ஊட்டுவார். ஏண்டி, மிச்சக்கறிய சட்டியா தின்னும் … எடுத்துப்போட்டு அதக்கி முழுங்கேன்னு தாத்தம்மாளை செல்லமா சீண்டுவார். மப்பு உச்சியேறிட்டா நாய்க்கும் ஊட்டிவிட்டுட்டுத் தான் மறுவேலை. வேஷம் கட்டி கூத்தாடுன ஞாபகம்லாம் வந்து ஹோன்னு படுகளத்துல பாடுற பாட்டு கிளம்பிடும்.

பத்துப் பவுனழுச்சு
படுக்கக் குறிஞ்சிசெஞ்சு
படுத்தால் அழுந்துதுன்னு
பக்கம் வந்தாக் காந்துதுன்னு- நீங்க
பரமனோட பஞ்சு மெத்தெ
படுத்தா சொகமுனு
பறந்தோடிப் போனீங்கொ

எட்டுப் பவுனழுச்சு
இருக்கக் குறிஞ்சி செஞ்சு
இருந்தா அழுந்துதுன்னு – நீங்க
எமனோட பஞ்சு மெத்தெ
இருந்தா சொகமுனு
எழுந்தோடிப் போனிங்கோ

……………………………………
………………………………………

அடே காலா, யாரென்று தெரியாமல் உன் பாசக்கயிறை வீசிவிட்டாயா?
குலத்துக் கொடி விளங்க கொழுந்தாய் தழைத்த சிசுவை
நீ கொண்டு போன சூதென்ன மாயமென்ன… ஹோ…
அடே கிங்கரா, இதோ உன்னை வாள் கொண்டு கிழிப்பேன்
உன் வம்சத்தை அழிப்பேன்..தத்தாங்…தித்தாங்…

முன்னூறு மூங்க வெட்டி – என் ராசா
ஒனக்கு மூனு முக தேரு கட்டி
எம் மவனே நீ போற ரதம்
அந்த வெள்ளி ரதம் நம்ம ரதம் – னு

பாட்டும் வசனமும் கூத்துக்கதையிலயிருந்து பொரண்டுத்தாவி மவனும் மருமவளும் செத்ததுல நிக்கும். அக்கம்பக்க கொட்டாய்க்காரங்க வந்து கெழவனுக்கு வாழச்சாறு ஊத்தி படுக்கவையுங்கன்னு பக்குவம் சொல்லிப் போவாங்க. எச்சக்கையோட எழுந்து அடவு பிடிச்சு ஆடறதுமுண்டு. புத்திர சோகம் பொறத்தால நழுவி பபூன் பாட்டுகூட வந்துடும். கெழவனுக்கு இப்பந்தான் பிராயம் திரும்புதும்பாங்க.

பனங்கறுக்குல கீறினாக்கூட சொட்டு ரத்தம் வராத கெட்டித் திரேகம், திடகாத்ரம். அவரோட வாட்டசாட்டமும் வளச்சிப்போடற பேச்சும் எதுக்கும் துணிஞ்ச கிருதியும் தான், வயசுப்பசங்க வலைக்கெல்லாம் வழுக்கித் தப்பின ரஞ்சிதத்தை தாத்தாக்கிட்ட இழுத்து நிறுத்தியிருக்கும்னு தோணுது. சிக்கிக்கெடந்தாளா சொக்கிக்கெடந்தாளான்னு சொல்லிற முடியாது. சாகறன்னிக்கு கூட மொதக்கோழி கூப்புடறதுக்கு முன்னாடி மாமரத்தடியில ரஞ்சிதம் வந்து கொஞ்சிட்டுப் போனாள்னும் அதுக்கப்புறம்தான் தாத்தா உசுரு பிரிஞ்சதுன்னும் ஊர்ல ஒரு பேச்சிருக்கு.

அவங்க வழமையா கூடுற இடம் அதுதான். அந்நேரத்துக்கு அமுட்டுத் தொலவுல இருந்து ஒண்டியா கௌம்பி வர்றதுன்னா தெகிரியம் இருக்கிறதால மட்டுமில்ல, அவரைப் பாக்காம அவளால இருக்க முடியாதுங்கறதும் தான். இன்னிவரைக்கும் அவர் செத்த நாள்ல மாமரத்தடிக்கும் குழிக்கும் வந்து படையல் போட்டுட்டு வெடியறதுக்குள்ள அவ போயிடற விசயம் ஊருக்கே தெரியும்.

ஏரிக்கு அந்தாண்ட இருக்கும் மண்ணப்பாடியில, மல்லிகக் கொடியோடி கூரையே பச்சையா மாறி ராவும் பகலும் மணக்குற குடிசல்ல இருந்துதான் ரஞ்சிதம் வருவா. மஞ்சளும் பூவும் பவுடரும் சேர்ந்து குழைஞ்ச வாசனை அவளுக்கும் முன்னயே வந்து கமகமங்கும். மாயக்கல்லுல செஞ்சாப்புல சின்னமூக்குத்தி. வெயில்ல அது மின்னுறப்ப பொறி கலங்கி கண்ணும் நெனப்பும் கனாவுல மெதக்கும். ஈரக் கொண்டையிலயிருந்து சொட்டும் தண்ணி நெகுநெகுன்னு முதுகுல கோடு பிடிச்சு கொசுவத்துக்குள்ள எறங்குறதைப் பாத்து எதேதோ நெனப்பு பொங்கி எத்தினியோ நாள் தூக்கம் மடிஞ்சிருக்கு.

தாத்தாவுக்கு தொடுப்பா இருக்கறவளைப் பத்தி இப்பிடி தாறுமாறா நெனக்கலாமான்னு யோசிச்சா, தொடுப்பா இருக்கறவளோட என்னத்த உறவுமுறை பாக்குறதுன்னு எதிர்கேள்வி வந்துருது. தாத்தா முந்திக்கிட்டார். இல்லாட்டி அவளை சுண்டிப் பிடிச்சிருக்க முடியும்னுதான் இப்பவும் தோணுது. இதையெல்லாம் வெளியில சொல்லிற முடியுமா? நெனச்சு நெனச்சு நெஞ்சுக்கூடே நெருப்புமேடா கருக வேண்டியதுதான்.

அவ புருஷன் மூணுவேளை கஞ்சிக்கும் வருசத்துல ரெண்டு வேட்டித்துண்டுக்கும் ஆயிரம் ரூவா ரொக்கத்துக்கும் மாரப்பக் கவுண்டரோட பண்ணையத்துல ஆளிருந்தான். கொழுத்தப் பண்ணையம். ஆம்பளன்னா நாலுவேலை இருக்கும். அங்கயிங்க போய்வரணும். பொழுதும் உன்னைய அள்ளையில மல்லாத்தி கொஞ்சிக்கிட்டிருக்க முடியுமாடின்னு பொண்டாட்டி வாயைப் பொத்திட்டு கவுண்டர் போய்ச்சேருமிடம் புதுப்பட்டி வலசக்கவுண்டன் மகள்கிட்ட தான்னு ஊருக்கே தெரியும். ஆளில்லாத காட்டுக்கொட்டாய்ல தனியாயிருக்க பயந்து மாட்டுக்கொட்டாயிலும் மோட்டார் ரூம்லயும் ஆளுக்காரனோட தூங்கியெழுந்தா கவுண்டர் பொண்டாட்டி. சந்தேகந்தட்டி அவர் ஜாடைமாடையா வேவு பாக்கறது தெரிஞ்சு உஷாரா ரெண்டுபேரும் எங்கயோ ஓடிப்போயிட்டாங்க.

புருஷனப்பத்தி இத்தினி வருசத்துல ஒரு தகோலுமில்ல ரஞ்சிதத்துக்கு. வயித்துப்பாட்டுக்கு வழி வேணுமேன்னு பலகாரக்கூடை தூக்கினவ அங்கயிங்க அலைஞ்சி கடைசியா தாத்தாகிட்ட அண்டிட்டா. கள்ளெறக்குற மரத்தடிக்கு அவ வர்றதுக்கு முந்தியே தாத்தாவோட தொடுப்பாயிருச்சுன்னும், அதுக்கப்பறம் தான் இங்க வந்து போக ஆரம்பிச்சாள்னும் கூட ஒரு பேச்சிருக்குது. அது நெசமா இருந்தாலும் இருக்கும். ஏன்னா, அதுக்கும் முன்னாடியே கூட அவளோட பொட்டலம் தாத்தா கையில மணந்திருக்கு.

தாத்தா சாவுக்கப்புறம் அவ கூடை எடுத்தாறதில்ல. வெளி நடமாட்டமேயில்லாம குடிசல்லயே மொடங்கிக் கெடக்காளாம். மல்லியக்கொடியில பறிக்காமயே பூவுங்க உதுந்து காய்ஞ்சு பூஞ்சருகு மூடி குடிசலே மணந்து கெடக்காம். எப்பவாச்சும் நேர்ப்படறப்ப சின்னவங்க எப்படியிருக்காங்கன்னு என்னையப் பத்தி செவத்தாகிட்ட கேக்கறதுண்டாம். போய் பாத்துட்டு வரணும்னு ஆசையிருந்தாருலும் என்னமோவொன்னு இழுத்துப் பிடிக்குது காலை. தாத்தம்மாளுக்கு இந்த நெனப்பு தெரிஞ்சா ராக்காசியாயிருவா.

தாத்தாம்மாவுக்கும் ரஞ்சிதம் தொடுப்பு சமாச்சாரம் தெரியாமயில்ல. ஆனா கண்ணுங் காதும் இல்லாதவளா இருந்தாள். ரஞ்சிதம்னேயில்ல. மேங்காட்டு சின்னப்பன் பொண்டாட்டி கனகி, வகுரன் மவ பொன்னுருவி, முத்தம்பட்டி பிரிவுரோடு பொட்டிக்கடைக்காரி வசந்தா, வண்டிக்காரன் கொழுந்தியா ஜெயக்கொடின்னு யாராச்சுமொரு வாளிப்பான பொம்பளைங்களோட அப்பப்ப அவருக்கிருந்த சகவாசம் பத்தியும் அறிஞ்சேயிருந்தா. ஆடறது ஒரு காலம்னா அடங்குறது ஒரு காலம்னு பொறுமையாத்தானிருந்தா. ஆனா, அடங்கற பிராயம்னு ஒண்ணு நேரவேயில்ல தாத்தாவுக்கு.அழிஞ்சி அம்பலம் ஏற மேல்பந்தயம் கட்டுற மனுசனை என்ன பண்ணி என் கட்டுக்குள்ள நிறுத்தறதுன்னு தெரியலையேன்னு வெம்பி பொலம்பி வெகாளம் பிடிச்சித் திரிவா தாத்தம்மா.

மத்த சிறுக்கிங்களாட்டம் இவளும் கூடி கும்மாளம் போட்டுட்டு கைக்கு சிக்கறத சுருட்டிட்டு போயிடுவாள்னு லேசாத்தான் நெனச்சா தாத்தம்மா. ஆனா ரஞ்சிதம் அவங்க ஜதையாயில்ல. அவ, கட்டுன பத்தினியாட்டம் வேத்து ஆம்பளை நெழல்ல வெயிலுக்கும் ஒதுங்காதவளா இருந்தாள். எத்தினி நாளைக்குத்தான் இப்பிடி கூடை தூக்கி அலையறது…. இங்கயே வந்துடறதுக்கு ஒரு வழி பண்ணுங்களேன்னு தாத்தாவ அவ நச்சரிக்கற விசயம் எப்பிடியோ தெரிஞ்சி பதறிட்டா தாத்தம்மா. ஆளக் கவுத்தது பத்தாம குடும்பத்தயே கூறு போடணும்னு கேக்குறாளா சக்காளத்தின்னு பொரிஞ்சி திரிஞ்சா. ஆத்துல சுழி இருக்குன்னா எறங்காம இருந்துடலாம், வூட்லயே இருக்குன்னா எப்பிடி பொழைக்கறது? பேரன் நிக்கறான் கண்ணால வயசுல, நீ பிப்பெடுத்து அலையறயேன்னு தாத்தாகிட்ட சண்டை போட ஆரம்பிச்சா. சண்டை வந்துட்டா தாத்தா திண்ணையில ஒக்காந்து வெடிய வெடிய சுருட்டு புடிச்சிக்கிட்டிருப்பார். வெடியக்காலம் மாமரத்தடியில இருமுவார்.

நோய்நொடி எதுவுமில்லாமயிருந்த தாத்தா எப்பிடி செத்தார்னு யாருக்குமே புரியல. தூங்கறாப்ல தான் சவமிருந்துச்சி மாமரத்து அடிவேர்ல தலைசாய்ச்சி. கெழவன் பிடிகொடுக்காத தால ஆத்திரப்பட்டு ரஞ்சிதமே கொன்னிருப்பாளோன்னு சிலவங்க சொன்னத என்னால ஏத்துக்க முடியல. எனக்கு தெரியும் அவளால அவருக்கு எதிரா சின்னத்துரும்பக்கூட கிள்ளறதுக்கு மனசு வராதுன்னு.

நெஞ்சு நோவுல, இல்லாட்டி பூச்சிப்பொட்டுங்க தீண்டி செத்திருக்கலாம்னும், கெழவி அனத்தலும் ரஞ்சிதம் புடுங்கலும் தாங்காம ஒடுவன் தழையவோ அரளிக்கொட்டையவோ அரைச்சி முழுங்கியிருக்கலாம்னும் ஆளாளுக்கொரு யூகமிருந்தது. ஏதோவொரு வகையில ரஞ்சிதத்துக்கு சாவுல சம்பந்தமிருக்குன்னு இப்பமும் சொல்றான் சாணான். அதுக்கும் காரணம் இல்லாமயில்ல. ஆத்தங்கரையில மேஞ்சாலும் அரமணையில வளந்தாலும் ஆட்டுக்கு வாலு அளவாத்தாண்டா இருக்கணும்… நீ கெட்டக்கேட்டுக்கு எங்க ஜாதியில கூத்தியா வேணுமா… வெட்டி பொலி போட்டுருவோம்ணு அவளோட சொந்தக்காரங்க ஆறேழு பேர் போறப்ப வர்றப்ப தாத்தாவ ஏரியில குறுக்காட்டி நிறுத்தி ஏகத்துக்கும் வம்பிழுத்திருக்கானுங்க. வாய் வார்த்தை வாய்ல இருக்கறப்பவே கை நீட்டியிருக்காங்க ஒருவாட்டி. தாத்தா தாட்டிகம் தான் ஊரறிஞ்சதாச்சே… கைக்கு சிக்குனவங்கள பொரட்டி எடுத்திருக்கார். தோதறிஞ்சப் பயலுக கண்ணுக்கு மொளகாப்பொடி அடிச்சிட்டு சுதாரிக்கறதுக்குள்ள உள்ளடி ஊமையடியா தாத்தாவ மொத்திட்டு ஓடிட்டானுங்க.

அன்னைய சண்டைக்கப்பறமும் அவனுங்க அடங்காம பொங்கித்தான் இருந்தாங்க. தாத்தா மாத்திரம் மசியற ஆளா… இமுட்டு நாளா இல்லாத வழக்கமா அவ வூட்டுக்கே போக்குவரத்துன்னு மாறிட்டார். ஒருநாள் வூட்ல இருக்கறப்ப வெளிய தாழ் போட்டுட்டு ஊரையே கூப்புட்டு காறித்துப்ப வைக்கிறம் பாருன்னு கறுவுன ஒருத்தனைக் கூப்பிட்டு ரஞ்சிதம் நாலுபோடு போட்டப்புறம் அவனுங்க யாரும் அந்த தெசைக்கே திரும்பாம திரிஞ்சாலும் ஆத்திரம் கொறையாமத்தான் அலைஞ்சானுங்க. அவனுங்க தான் தாத்தாவ தீத்துக் கட்டியிருக்கணும்கிறது தான் சாணான் கணக்கு.

வெளிச்சமே இல்லாம பாம்பாட்டம் நீண்டு கடக்குது வண்டியொன்னு. ஒத்தக் கண்போல முன்னாடி மட்டும் சன்ன வெளிச்சம். கூட்ஸாயிருக்கும். மெயிலுக்கு இன்னமும் நேரமிருக்கு. ஆறு மணிக்கு கரண்ட் நின்னுரும். அதுக்குள்ள ரண்டு வயலும் ஒரு குண்டுக்காலும் பாய்ஞ்சாகணும்.

பனியில நமுத்து துப்புட்டி சில்லுன்னு ஆயிருச்சு. குருத்தெலும்பு வரைக்கும் நடுக்குது. செத்தைங்கள பத்தவச்சு சூடு பாக்கவும் வழியில்ல. பனி ஈரம். தாத்தாவாட்டம் சுருட்டு பிடிக்கப் பழகியிருந்தாலாவது கொஞ்சம் சூடு கெடைக்கும்.

தாத்தா இருந்தமட்டுக்கும் ஒரு வேல பாக்கவிட்டதில்ல. ராத்திரி கரண்ட்டோ பகல் கரண்ட்டோ அவரேதான் மடைதிருப்புவார். “புதுப்பெண்ணின் மனதைத்தொட்டுப் போறவரே உங்க எண்ணத்த சொல்லிவிட்டு போங்க” இல்லாட்டி “சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா”ன்னு சீக்கையடிச்சு பாடிகிட்டே வரப்புல நடந்தபடியே எல்லா வேலைங்களையும் முடிக்கிற மாயம் அவர்க்கிட்ட இருந்தது. ராத்திரியில பாட்டுச்சத்தமும் பேட்ரி வெளிச்சமும் ஓயறப்ப ரஞ்சிதத்தோட கால்தண்டை சிணுங்கற சத்தம் கேட்கும். அந்நேரமுட்டும் தூங்கறவளாட்டம் திண்ணையில கெடக்குற தாத்தம்மா தூத்தேறி…ன்னு அந்த தெசையில ஓங்காரிச்சு துப்பிப்புட்டு உள்ளவந்து படுப்பா. விடிஞ்சி மரத்தடிக்குப் போய்ப்பாத்தா ஒடஞ்ச கண்ணாடிவளையல் துண்டு செதறிக் கெடக்கும்.

தாத்தாவுக்கப்புறம் காட்டுவேலையப் பாத்துக்க வச்சிருந்த தொப்பளான் மவன் தருமன், அவங்கக்காளுக்கு கண்ணாலம்னு ஒருவாரமா வரல. வயிலெல்லாம் தண்ணியில்லாம பாளம்பாளமா வெடிச்சுப்போயிட்டதால ராத்திரிக்கு நானே மோட்டார் எடுத்துவுட்டு மடைதிருப்பறேன்னா “வேணான்டா கண்ணு, விடிஞ்சா உங்க தாத்தனுக்கு வௌக்கு வைக்கிற நாளு. செத்தநாள்ல படையலெடுக்க வரும்டா அது”ன்னு நைநைன்னு தாத்தம்மா தொணக்க ஆரம்பிச்சிட்டா. தோது சொல்லி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. மொதத்தடவையா கொட்டாய்ல தாத்தம்மா தனியா கெடக்குறா.

கொட்டாய் வளவுல செவலையன் கொலைக்கறது மெயில் சத்தத்த மீறி இங்க கேக்குது. அது ரொம்ப சுட்டி. ஒரு அன்னி அசலை அண்டவுடாது எல்லையில. ஆனா தெரிஞ்சவங்கன்னா மேல தாவி மூஞ்சிய நக்கிரும்.

செவலையன் சத்தம் வளவுல இருந்து கம்பங்காட்டு வழியா ஓடி அது நெட்டுக்கும் ரயில்ரோட்டோரம் கேக்குது. எங்கக் காட்டோரம் எதுக்கு ஓடறேன்னு ரயிலப்பாத்து கொலைக்கறதும் அதுக்கு வழக்கந்தான். ஒவ்வொரு வண்டியோடயும் இந்தச் சண்டை ஓயாம நடக்கும். வண்டி போனப்பறமும் அந்தத்தெசையப் பாத்து கொஞ்சநேரம் கொலைச்சிட்டுத்தான் திரும்பும்.

பளபளன்னு விடியறப்ப கரண்ட் நின்னுருச்சி. அப்பவும் அந்த குண்டுக்கால்ல பாதி கொறையா தங்கிருச்சி. இன்னிக்கு ராத்திரி இதுக்குப் பாய்ச்சிட்டுத்தான் குச்சிக்காட்டுக்கு திருப்பணும்.

மமுட்டியக் கழுவி கொய்யாக்கெளைல மாட்டிட்டு தொட்டித்தண்ணில முங்கியெழுந்து கொட்டாய்க்கு திரும்பறப்பவும் செவலையன் அங்கயே நின்னு கொலைச்சிக்கிட்டிருக்கு. இவ்ளோ நேரமாகியும் ஆங்காரம் மங்காம சத்தம் கூடி வருது. கிட்டப்போய் ஒரு அதட்டு போட்டாத்தான் அடங்கி திரும்பும்னு போய்ப்பாத்தா… ரயில்ரோட்ல சில்லாப் பில்லையா செதறிக் கெடக்கா பொம்பள ஒருத்தி. ரயில்ல இருந்து வுழுந்துட்டாளோ இல்ல குறுக்கப் பாய்ஞ்சாளோ எவனாச்சும் தள்ளிவுட்டுட்டானோ… அட கோரமே நெஞ்சு நசுங்கி கொதகொதன்னு இன்னமும் ரத்தம் பொங்கிட்டிருக்கு. அதங்கி வெளிய தொங்குற கண்ணுங்க காசத்துல எதையோ தேடறாப்ல இருக்கு. துண்டாகி தூரத்தள்ளி கெடக்குற செவத்த கெண்டைக்கால் சதையில ‘சாக்கன்’னு பச்சைக்குத்தி… ஐயோ ரஞ்சிதம்… நீயா இப்பிடி…

வெடவெடன்னு நடுங்குது திரேகம். அங்கயிருந்தே தாத்தம்மாள கூப்புடறேன். நான் கூப்புடறது எனக்கே கேக்கல. கேட்டாலும் அவ எழமாட்டா. ராத்திரி முழுக்க தாத்தாவப் பத்தி பெனாத்திக்கிட்டிருந்துட்டு விடியறப்பதான் கர்ருபுர்ருனு கொரட்டைவுட்டுத் தூங்குவா. தூங்கிட்டாள்னா எழுப்பறது அசகாய வேலை. எழுப்பிக் கூட்டியாந்து இப்பவாச்சும் உனக்கு நிம்மதியான்னு கேக்கணும்னு ஆத்திரத்தோட ஓடிப்பாத்தா திண்ணையில கொரவளி அறுந்து கெடக்கா தாத்தம்மா. பக்கத்துல ரத்த ஈரம் காயாம கெடக்குற அருவாமனையில ஈ மொய்ச்சி எரையுது.

தாத்தா சாவுக்கும் தாத்தம்மா சாவுக்கும் காரணம் பிடிபடறாப்ல இருக்கு. யார்க்கிட்ட நின்னு அழறதுன்னு புரியாம கொட்டாய்க்கும் ரயில்ரோட்டுக்கும் பித்துபுடிச்சாப்ல ஓடியோடி திரும்பறேன். எல்லாம் தெரிஞ்சிருந்தும் எதுவுஞ் சொல்லமுடியாம என்கூடவே செவலையன் அலையுது நெழலாட்டம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *