கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 12,419 
 
 

பஸ் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. வெயிலின் வெப்பக் காற்று முகத்தில் அறைந்தது. பஸ்சில் இருந்தவர்கள் வெயிலின் உஷ்ணத்தை தம் கைகளால் விசிறிக் கொண்டும், பலர் தூங்கிக்கொண்டும் சமாளித்துக் கொண்டிருந்தனர். எனக்கு முன்னால் இருந்த இரண்டு இருக்கைகளிலும், உட்கார்ந்திருந்த அந்த நான்கு சிறுவர்களுக்கு சுமார் பதினாலு, பதினைந்து வயது தான் இருக்கும். அவர்களுக்குள்ளே எதைப்பற்றியோ பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. வெளியே துளியளவும் எந்த சத்தமும் இல்லாமல். ஆம், அவர்கள் அனைவரும் வாய் பேச முடியாத காதும் கேளாதோர். அவர்களின் சைகைகளில் மொழியில் உறவாடிக்கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும், என் நினைவில் நிழலாடியவன், லூயீ தான்.

நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில், எட்டாம் வகுப்பில் எங்களோடு வந்து சேர்ந்தான், லூயிஸ் மாத்யூ. எங்களுக்கு லூயீ.

துறுதுறு கண்கள். வயதிற்கு மீறிய நல்ல வளர்த்தி. அந்த வளர்ச்சிக்கு ஏற்ப பருமனாக இருந்தான். பார்க்க சற்று கலவரமாகத் தெரிந்தாலும், அவன் முகத்தில் விவரிக்க முடியாத வசீகரம் இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலே, அவனால் பேசவோ, கேட்கவோ முடியாது.

ஒரு கிருஸ்துவ டிரஸ்ட் நடத்தும், சாதாரணப் பள்ளிக்கூடம் அது. எங்கள் பள்ளியில் அவனை எப்படி சேர்த்தார்கள் என்பதே பெரிய புதிராக இருந்தது.

லூயீயை எல்லோருக்கும் பிடித்துவிட்டது.

லூயீ, சைக்கிளில் தான் பள்ளிக்கு வருவான். படிப்பிலும், விளையாட்டிலும் ரொம்பவும் ஈடுபாடு காட்டினான். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர். கெட்டிக்காரன். வாய் பேச முடியாவிட்டாலும், தான் நினைத்ததை, சொல்ல வந்ததை எப்படியும் நமக்கு சைகையின் மூலம் புரிய வைத்துவிடுவான். சக பையன்கள், அவனின் குறையைச் சொல்லி கிண்டல் அடித்தாலோ, அல்லது அவனின் சைகை மொழியில் தவறாகச் வெறுப்பேற்றினாலோ, வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்துவிடுவான். மிகுந்த கோபக்காரன்.

லூயீ சைகையோடு அடித்தொண்டையிலிருந்து கரகர ஒலியோடு, காற்று மொழியில் நம்மோடு பேசுவான். என்னிடம் மட்டும் நன்றாகப் பழகினான். என்ன சக்தியோ தெரியாது, எனக்கு புரியாவிட்டாலும், நான் அவனுக்கு பதில் சொல்லுவேன். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு நான் விளக்கம் தந்தால், அது அவனுக்குப் புரியும். நான் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்று, தவறாக இருந்தாலும், சிரித்து மழுப்பிவிடுவான்.

லூயீ தன் வீட்டைப் பற்றி நிறைய சொல்லுவான். அவனுக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் ஷெர்லி. ஷெலி(அப்படித்தான் இருக்கும் லூயீ சொல்லும்போது) அவன் உயிர் மூச்சு. வார்த்தைக்கு வார்த்தை ஷெலி தான். என்னை தன் வீட்டிற்கு வருமாறு எப்போதும் கூப்பிடுவான். என் வீடு, பள்ளியிலிருந்து ஐந்து நிமிடத்தில் நடந்து போகும் தூரம்தான். லூயீயின் வீடோ சற்று தொலைவில் இருந்தது. எனக்கு தனியாக எங்கும் சென்று பழக்கமில்லை.

நான், எல்லா விளையாட்டிலும் ஆல்ரவுண்டர், வேடிக்கைப் பார்ப்பதில். லூயீ கிரிக்கெட் ஆடும்போது, என்னையும் தன்னோடு விளையாடும்படி கட்டாயப்படுத்துவான். நான் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டான். ஃபீல்டிங்கில் பவுண்டரிலியாவது என்னை நிற்க வைத்துவிடுவான். பந்து பொறுக்கும் வேலை. அதைக் கூட நான் சரியாகச் செய்யமாட்டேன்.

இப்படித்தான் ஒருதடவை, ஸ்கூல் கிரவுண்டில், எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தோம். வேறு வகுப்பு பையன்களும், அவரவர் டீம்களின் பையன்களோடு தனித்தனியாக மாட்ச் ஆடிக்கொண்டிருந்தனர். எனக்கு வழக்கமான வேலை. பந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். லூயீ விக்கட் கீப்பராக நின்றிருந்தான். எங்கள் டீமின், ரகு, பேட்டை வேகமாக சுழற்ற, பந்து காற்றில் எங்கோ போய்விட்டு, சரியாக நான் இருக்கும் திசையில் என்னை நோக்கி வந்தது. இதுவரை, நான் இப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டியதே இல்லை. லூயீ உள்பட, அனைவரும் உற்சாகமூட்டவே, சரி, எப்படியும் பந்தைப் பிடித்துவிடலாம் என்று நான் என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கையில், எனக்குப் பின்னால், வேறு டீமின் பையன் ஒருவன் நின்றிருப்பதையோ, அவன் அந்தப் பக்கமாக திரும்பி இருந்ததையோ, நான் கவனிக்கவே இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்காததால், நான் பின்புறமாகவே போய், அவன்மேல் மோதி விட, அவன் கீழே விழ, நான் அவன் மேல் எக்கச்சக்கமாக விழுந்து புரண்டேன். போதாக்குறைக்கு, நான் பிடிக்க வேண்டிய பந்து நேராக வந்து அவன் தலையை பதம் பார்த்தது. கீழே விழுந்தவனோ சீனியர். பத்தாம் வகுப்பு மாணவன். எழுந்ததும், முதல் வேலையாக, என் சட்டையை கொத்தாகப் பிடித்து, என் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான். நான் உடம்பெல்லாம் நடுங்கி, கண்கள் கலங்க, ஆடிப்போய் நின்றிருந்தேன்.

லூயீ அங்கிருந்து ஓடி வந்து, யாரும் எதிர்பாராத விதமாக, எங்களிலும் பெரியவனான அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டான். இருவரும் கிரவுண்டில் புரண்டு சண்டை போட்டனர். இராஜகோபால், பி.டீ. மாஸ்டர், வந்து, இருவரையும் விலக்கி, நடு கிரவுண்டிலேயே முட்டி பேடவைத்து தண்டித்தார். சட்டை கசங்கி, வாயோர உதடு வீக்கத்துடன், லூயீ, என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தான்.

நான் ஒருநாள் அவனிடம், அவன் வீட்டிக்கு வருவதாகச் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான். அன்று முழுவதும், பள்ளியில் எல்லோரிடமும், நான் அவன் வீட்டிற்கு வரப்போவதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டான். மாலையில் அவன் சைக்கிளில் என்னை டபுள்ஸ் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவன் வீடு பெரியார் நகரில் இருந்தது. ரொம்ப தூரம், பல தெருக்களைக் கடந்து, அவன் வீடு போய் சேர்ந்தோம். வாசலிலேயே அவன் அம்மா நின்றிருந்தாள்.

சைக்கிளை விட்டு இறங்குவதற்குள் ஷெலி என்றான். அவன் அம்மா ஏதோ சைகை செய்தாள். என்னை அம்மாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று அவன் முதலில் காட்டியது, தங்கை ஷெர்லியின் போட்டோவை தான். ஷெர்லி மிகவும் ஒல்லியாக இருந்தாள். போட்டோவில், அவன் அப்பா, அம்மா, லூயீ மற்றும் ஷெர்லி. அளவான ஆங்கிலோ-இந்திய குடும்பம். அவன் வீடு மிக அழகாக இருந்தது. சிறிய வீடு. வாசலிலே ஏசுநாதர் இருந்தார்.

“உன் பேரு என்னப்பா?” அவன் அம்மா கேட்டார்.

“சிவக்குமார் ஆன்ட்டி”

“நீயும் லூயிஸோட கிளாஸ் தானா?”

“ஆமா ஆன்ட்டி”

“உங்க வீட்டுல எத்தனை பேர்?”

“நாங்க மூணு பேர். எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன்”

அதற்குள் லூயீ, கையில் ஏதோ ஒரு பெரிய நோட்டு போல எடுத்து வந்து, அவன் தங்கையின் பெயிண்டிங்கை காட்டினான். ஷெர்லி எங்கே என்று கேட்டான்? அதற்கு, ‘அவள் மார்க்கரெட் ஆன்ட்டி வீட்டுக்கு, பர்த்டே பார்ட்டிக்கு போயிருக்கிறாள்’ என்று கூறிவிட்டு, பிறகு நீ தான் சென்று அழைத்து வர வேண்டும் என்றும் சொன்னதும் பிரகாசமானான்.

அவன் அம்மா, என்னை நல்ல முறையில் கவனித்தார். லூயீயின் தந்தை ஹைவே துறையில் சைட் எஞ்சீனியராக இருப்பாதாகவும், நம் லூயீயைப் பற்றியும் நிறைய பேசினார். அவனுக்கு தங்கை ஷெர்லி என்றால் உயிரென்றும், எப்போதும் அவளைப் பற்றிய நினைவு தான் அவனுக்கு. சிறிது நேரம்கூட விலகி இருக்கமாட்டான் என்றார். அவரே என்னுடன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, என்னை வழியனுப்பி வைத்தார். பலமுறை, கண்டக்டரிடம், பத்திரமாகச் என்னை வீட்டில் சேர்த்துவிடுமாறு கூறி அனுப்பினார்.

இப்படி நன்றாகப் படித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும், என் மேல் அவ்வளவு பரிவு காட்டிய, என் நண்பன் லூயீ, திடீரென்று பள்ளிக்கூடம் வருவது நின்று போனது.

ஒருவாரமோ இருவாரமோ அல்ல. முழுதாய் இரண்டு மாதங்களாகியும், லூயீ வரவே இல்லை.

எங்கள் தமிழ் வாத்தியார், சீனிவாசன், நல்ல மனிதர். அவரிடம் நான் லூயீயைப் பற்றி விசாரித்தேன். அவருக்கும் சரிவர எதுவும் தெரியவில்லை. ஆனால், லூயீயின் தந்தை வந்து டீ.சி. வாங்கிச் சென்றுவிட்டதாக ஒரு தகவலைச் சொன்னார்.

எனக்கு ஒன்றும் புரியாமல், தவித்தேன். என்ன நடந்தது? ஏன் இப்படி தீடீரென்று எங்கே போனான்? டீ.சி. வாங்கி விலகும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது?

லூயீயின் வீட்டிக்கு போய் பார்க்கலாம் என்றால், அந்த வயதில் எனக்குத் தனியே செல்லத் துணிவில்லை. என் வீட்டிலுள்ளவர்களை அழைத்து போகலாமென்று கூப்பிட்டதும், ‘வா நான் கூட்டி போகிறேன்’, என்று போட்டி போடுவார்கள்னு நினைத்தால், ‘ஒழுங்காய் படிக்கிற வேலையைப் பார்’ என்று விரட்டினார்கள்.

பிறகு, என் பக்கத்து வீட்டு நண்பன், ராகவன் தான், “வீடு எங்கென்னு தெரியுமா?” என்றான்.

“தெரியும் போயிருக்கிறேன். பெரியார் நகர்ல…….” என்றதும், “வா போகலாம்” என்று சொல்லி என்னை அழைத்துக் கொண்டு, 29ஏ பஸ் ஏறி விட்டான். அவன் பஸ்ரூட் எல்லாம் தெரிந்து வைத்திருந்தான்.

பெரியார் நகரில் இறங்கினதும் தான் எனக்கு குழப்பியது. எல்லா தெருக்களும் ஒரே மாதிரியாக இருந்தது. லூயீ, அன்று சுற்றி சுற்றி போனதால், எந்தத் தெரு என்று புரியவில்லை. ராகவன்,

“அட்ரஸ் என்னடா?” முழித்தேன், “தெரியும்னு சொன்னே?”

”வழி மறந்து போச்சுடா”

யோசித்ததில், அவர்களின் தெருவில் பேக்கரி கடை ஞாபக வர, சுற்றிலும் பார்த்தேன்.

அப்பாடா. இரண்டாவது தெருமுனையில் பேக்கரி.

“இங்க தான்” என்று பேக்கரியில் சென்று, “அங்கிள். லூயீன்னு, வாய் பேச முடியாத பையன்……”, விசாரித்தோம்.

அவன், யாரைக் கேட்கிறோமொன்றே தெரியாமல் உதட்டைப் பிதுக்கினான்.

அப்போது, பேக்கரிக்கு ஒரு நடுத்தர வயது ஆங்கிலோ-இந்திய பெண் வந்தாள்.

உடனே, கடைக்காரன், “இவங்க மார்க்கரெட். இதே தெருதான். இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றான்.

மார்க்கரெட், பெயரைக் கேட்டதும், தெம்பு வந்தது. அன்று லூயீயின் அம்மா குறிப்பிட்ட பெயர்.

“ஆன்ட்டி, நாங்க லூயீஸின் கிளாஸ்மேட்” என்றதும், அந்த பெண் சட்டென்று எங்களைப் புரிந்து கொண்டார்.

“எஸ் மை சைல்ட். என்ன வேண்டும்?” என்றாள்.

“நாங்க லூயீஸைத் தேடி வந்திருக்கிறோம். அட்ரஸ் தெரியாம சுற்றிக்கொண்டிருக்கிறோம்”

அவள் முகம் சட்டென்று சோகமாக மாறியது.

“அவர்கள் வீடு மாற்றிக் கொண்டு, வேறு ஊருக்கு போய்விட்டார்களே” என்றாள்.

“எப்போது ஆன்ட்டி? ஏன் இப்படி திடீரென்று?”

“உங்களுக்கு ஏதும் தெரியாதா?”

“என்ன விஷயம் ஆன்ட்டி?” என்றேன்

“அந்த சின்னப் பெண், ஷெர்லி இறந்துபோய்விட்டாள்”

“ஐயோ, என்ன ஆச்சு?” என்றேன் பதறிப் போய்.

“புவர் கர்ள். இரண்டு நாள் கடும் ஜுரத்தில் படுத்தவள், எதிர்பாராமல் பிட்ஸ் வந்து இறந்துபோனாள்”

எனக்கு அழுகையாய் வந்தது.

“ஸ்மார்ட் சில்ரன்ஸ். அந்த பேமிலியை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ரொம்பவும் ஆடிப்போய்விட்டார்கள். எவ்வளவு ஆறுதல் சொல்லியும், அவர்களால் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிலநாள் கழித்து, மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, வேறு ஏதோ ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்” என்று கூறிமுடித்தாள்.

போட்டோவைத் தவிர, நேரில் ஒருமுறை கூடப் பார்த்திராத ஷெர்லியை நினைத்து மனசு அழுதது. கண்ணீர் மளமளவென வந்தது. அதையெல்லாம் விட, லூயீயை நினைத்ததும் தொண்டையை அடைத்தது.

ஐயோ லூயீ, என் வாய் பேசமுடியா நண்பனே! உன் மனது என்ன பாடுபட்டிருக்கும். எப்படி துடித்திருப்பாய்?. எவ்வளவு அழுதிருப்பாய்? கேட்கும்போதே திக்கென்றிருக்கிறதே. அனுபவித்த உனக்கு?? பேச முடிகிற நம்மாலேயே, அந்த சூழலுக்கு துக்கம் ஆற்றாமையாக இருக்கும்.

‘நீ எப்படியடா தாங்கிக்கொண்டாய்?’

அந்த நேரத்தில், நான் லூயீக்கு ஆறுதலாய் பக்கத்தில் இல்லாமல் போனதை நினைத்து, எனக்கே வெட்கமாக இருந்தது. இப்பொழுதே அவனைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. எங்கேயாடா இருக்கிறாய்?

பஸ்ஸிலிருந்து, அந்த நாலு சிறுவர்களும், இறங்கிச் சென்றுவிட்டனர். இருக்கைகள் காலியாக இருந்தன.

காலப்போக்கில், நாம் நம்மவர்களைத் தொடர்பில்லாமல், மறந்துதான் போகிறோம். அவர்களின் நினைவுகள், இப்படி நமக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், நிகழ்வுகளில்தான் நினைவுக்கு வருகிறது. அப்படித்தான், லூயீயையும் நான் மறந்து போனேன். இதோ, இந்த பஸ் பயணம் போல, நிறுத்தம் வந்ததும் இறங்கிப் போய்க்கொண்டே இருக்கிறோம், இழந்ததைப்பற்றிக் கவலைப்படாமல்.

இன்று என் நினைவுக்கு வந்ததுபோல, லூயீயின் நினைவிலும் நான் வந்துபோவேனோ? என்னவோ? தெரியவில்லை. எங்கே இருக்கிறான்? என்ன செய்துகொண்டிருக்கிறான்? எப்படி அவனைத் தொடர்பு கொள்வது? ரொம்ப நாட்களாய் வெறும் கேள்விகளாகவேதான் இன்னும் இருக்கிறான்.

‘லூயீ, என்னை நீ, இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்ன?’

பஸ் மவுனமாக ஓடிக்கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *