ரிட்டன் கிப்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 4,440 
 
 

பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சந்திரன் பரபரப்பாக இருந்தான். இரண்டாம் வகுப்பு படிக்கிறான்; படு சுட்டி, படிப்பிலும் கெட்டிக்காரன். ஒரு நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் இழுத்து கீழே போட்டுவிடுவான். சுவரெல்லாம் கலர் பென்சிலால் கோடு, கோடாக வரைந்து வைத்திருந்தான். “பெரிய ஓவியனாக வருவானாக்கும்” என வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள் கணவனும், மனைவியும். அன்றும் அப்படித்தான் அறைக்குள் ஓடுவதும் ஏதாவதொரு ஆடையை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டி “அம்மா, இந்த டிரஸ் நல்லா இருக்கா பாரு” என்று காட்டுவதுமாக இருந்தான். அவன் அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை; என்னாயிற்று இவனுக்கு என்று யோசித்தவள் ஒன்றும் பிடிடாமல் போகவே அவனிடமே கேட்டாள். “இப்ப எதுக்கு பீரோவுல இருந்த துணியெல்லாம் இழுத்து கீழப்போட்டிருக்க; இருக்கிற வேல பத்தாதா” என்று சலித்துக் கொண்டாள். “சொல்லும்மா எந்த டிரஸ் நல்லாயிருக்கு” அம்மாவின் புலம்பலை காதில் போட்டுக் கொள்ளாமல் “சொல்லும்மா… சொல்லும்மா…” என்று நச்சரித்துக் கொண்டே இருந்தான்.

கீழே சிதறிக் கிடந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டே “எதுக்கு இப்போ இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுற” என்றாள் அம்மா.

“நான் அப்பா கூட பெர்த்டே பார்டிக்கு போறேனே” உற்சாகமாக சொன்னான் சந்திரன்.

மாலையில் அவன் வீட்டிற்கு வரும் பொழுது சந்திரன் தயாராக இருந்தான். “அப்பா ” என்று ஓடிவந்தவன் அவன் கையில் ஒன்றுமில்லாததைக் கண்டு அமைதியானான். மகனின் உற்சாகம் குறைந்ததை கண்டு “என்னடா” என்று கேட்டான். ” கிப்ட் எங்க” என்று சந்திரன் கேட்கவும் தான் அவனுக்கு ஞாபகமே வந்தது.

நேற்று கடைவீதிக்கு போய்விட்டு மகனோடு வந்துகொண்டிருந்தபோது நண்பன் கணேஷிடமிருந்து அலைபேசி வந்தது. ” நாளைக்கு பையனுக்கு பிறந்தநாள் பேமிலியோட வந்திரு” என்று நண்பன் அழைக்கவும், “சரி வாரேன்” என்றான். கண்டிப்பா வரணும்; மறந்துடாத பேமிலியோடு வா”; “சரி, சரி ” என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழுத்தமாக சொன்னபிறகே அலைபேசி அழைப்பை துண்டித்தான் கணேஷ்.

” யாருக்குப்பா பெர்த்டே”

” பிரண்ட் பையனுக்கு”

” நானும் வரட்டாப்பா”

“சரி வா போவோம்” என்று சந்திரனிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. பிறந்த நாள் விழாவுக்கு செல்ல தயாராக இருந்தவன் அப்பா பரிசு பொருள் வாங்காமல் வந்தது சந்திரனுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

“நாம, பெர்த்டே பார்டிக்கு போகலையாப்பா” என்று சந்தேகமாக கேட்டான் சந்திரன்.

“எங்க கூட்டிட்டு போறேனு சொன்னீங்க, ஸ்கூல்லயிருந்து வந்ததலிருந்து ஒரே அளப்பற; என்னால தாங்க முடியல” என்றாள் மனைவி.

“பிரண்ட் கணேஷ் மகனுக்கு பிறந்த நாளாம், இவன், நானும் வாரேப்பானு கேட்டான் சரின்னு சொல்லியிருந்தேன்.”

“அப்பா, கிப்ட் எங்கப்பா..” இடைமறித்து கேட்டான் சந்திரன்.

“போகும் போது வழியில வாங்கலாம்” என்று அவன் சொல்லவும்தான் சந்தோசமானான் சந்திரன்.

அப்பாவும், மகனும் கிளம்பி பேருந்தில் முலுண்ட் சென்றனர். முலுண்டில் தன் வீட்டருகிலேயே இருக்கும் பூங்கா ஒன்றில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தான் கணேஷ். கணேஷின் மகனுக்கு மூன்று வயது நிரம்பிருக்கும். சந்திரனை விட மூன்று வயது‌ இளையவன். போக்குவரத்து நெரிசலில் பேருந்து மெதுவாக போய்க் கொண்டிருந்தது; கார்களின் ஹாரன் சத்தத்தை மீறியும் பிரண்டு பேரு என்னப்பா? யாருக்கு பெர்த்டே? அவன் பேரு என்ன? பெர்த்டே பார்ட்டி எங்க நடக்குது? இன்னும் எவ்வளவு தூரம் போகணும்? கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான். அவனும் சளைக்காமல் மகன் கேட்ட அத்தனை கேள்விக்கும் பதில் அளித்துக்கொண்டே வந்தான். இடையிடையே “அப்பா கிப்ட்”, “அப்பா கிப்ட்” என ஐந்து நிமிடத்திற்கொரு முறை விடமால் சொல்லிக் கொண்டே வந்தான். பேருந்தில் இருந்து இறங்கி குழந்தைகள் விளையாட்டுப் பொருள் விற்கும் கடைக்கு செல்லவும் பொஸூ, பொஸென்றிருந்த கரடி பொம்மையை காட்டி “அப்பா, டெடி பேர்” என்று சந்திரன் சொல்லவும் அந்த பொம்மையையே வாங்கிக் கொண்டு சென்றனர்.

பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த குழந்தைகள் பூங்காவில் சறுக்கு விளையாட்டிலும், ஓடிப் பிடித்துக் கொண்டும், ஊஞ்சலாடிக்கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தனர். சந்திரன் அப்பாவின் கையை விட்டு, விட்டு குழந்தைகளோடு போய் சேர்ந்து கொண்டான். குழந்தைகளின் துள்ளளலில் பூங்காவே அதிர்ந்தது. மழலைகளின் மொழியில் பூங்கா தனக்கான கவிதையை எழுதிக் கொண்டிருந்தது. பூங்காவின் மத்தியிலிருந்த சிறிய மண்டபத்தில் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அளவான கூட்டம் தான்; இருபது குடும்பங்கள் வரை வந்திருக்ககூடும். ஒன்றிரெண்டு பேர் அப்போதுதான் வந்து கொண்டிருந்தனர்.

வண்ண, வண்ண பலூன்களும், வண்ண காகிதங்களில் செய்யப்பட்ட அலங்காரமும் பூங்காவிற்கே புதிய எழிலை உருவாக்கியிருந்தது. அந்த சிறிய மண்டபத்தை சுற்றியும் சீரியல் பல்புகள் மினுக்கிக் கொண்டிருந்தன. பிறந்த நாள் விழாவை கச்சிதமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தான். அவனைப் பார்த்ததும் கணேஷும், அவன் மனைவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

“பேமிலி வரலையா”

“இல்ல, பையன் மட்டும் வந்திருக்கான்” என்று பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் பையனை சுட்டிக் காட்டினான்.

சந்திரன் விளையாடி களைத்து போய் வந்து நின்றான். கை, காலெல்லாம் புழுதி அப்பியிருந்தது. பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக அனைவரும் கூடிநின்றனர். ” ஹேப்பி பெர்த் டே டூ யூ..” குழந்தைகளின் உற்சாக குரல் பூங்காவெங்கும் எதிரொலித்தது. அனைவருக்கும் கேக்கும், சாக்லெட்டும் கொடுத்து கொண்டிருந்தனர். அவன் சந்திரனை அழைத்துப்போய் கை, கால் முகம் கழுவி, கர்சிப்பால் துடைத்து அழைத்து வந்தான். வந்திருந்த விருந்தினர் வரிசையில் நின்று பரிசு பொருட்களை கொடுத்துக் கொண்டு இருந்தனர். விருந்தினர்கள் அளித்த பரிசு பொருள்களுக்கு மாற்றாக குழந்தைகளுக்கு மட்டும் “ரிட்டர்ன் கிப்ட்” கொடுத்தனுப்பினர். அவன் வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருந்தான். அவனுடைய வரிசை வந்தது. சந்திரன் தன் அப்பாவிடமிருந்து பரிசு பெட்டியை வாங்கி பெர்த்டே பாய்க்கு கொடுத்து கைகுலுகினான். அவனும் பிறந்த நாள் காணும் குழந்தைக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு திரும்பினான்.

சந்திரன் சற்று நேரம் தயங்கி நின்றவன், முகவாட்டத்தோடு தனது ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான்.

” பாவம், குழந்தை மொகம் வாடிப் போச்சு, ரிட்டர்ன் கிப்ட் கொடுக்க வேணாமா நீ” கணேஷின் அம்மாவாகத் தான் இருக்கும். அப்போதுதான் அவன் சந்திரனை கவனித்தான். அப்படியே அவன் தோளில் கை போட்டு அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே கிளம்பினான்.

” நான் என்ன பண்ணட்டும், வாங்கின ரிட்டர்ன் கிப்ட் தீந்து போச்சு”

” தீந்து போனா என்ன, வந்ததுல ஒண்ணு கொடுக்கலாம்ல…”

“யம்மா சும்மாயிரு.. வந்தத எப்படி கொடுக்க.. பெறகு இவன் வாடிப்போவாம்ல…”

கணேஷின் குரல் சன்னமாக காற்றில் கலந்து அவன் காதில் வந்து தஞ்சம் புகுந்தது.

தனக்கு கிடைத்த கிப்டை அடுத்தவர்களுக்கு தருவதை எந்த குழந்தையும் விரும்புமா, விரும்பாதா யாராலும் கணிக்க முடியாது. குழந்தைகளின் மன உலகமே தனி, அதை நாம் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. தன்னுடைய குழந்தை வாடிப் போகக்கூடாது என்று எல்லா தந்தையும் நினைப்பார்கள் தானே. அவன் தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

அவனுடைய கவலையெல்லாம் பையன் அழுது விடக்கூடாதே என்பதுதான். சற்று முன்பக்கமாக உடலை வளைத்து கழுத்தை நீட்டி பையன் அழுகிறனா என்று பார்த்தான். சந்திரன் கண்களில் இலேசாக கண்ணீர் பனித்திருந்தது. ஆனால், இத்தனை நேரம் இருந்த உற்சாகம் முழுதும் வடிந்து முகம் கருத்து கற்பாறை போல இறுகியிருந்தது. பையன் அழவில்லை என்பதே அந்த நேரத்தில் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

மண்டபத்திற்கு சற்று தள்ளி அனைவருக்கும் ஐஸ்கிரீம் கொடுத்துக் கொண்டிருந்தனர். சந்திரன் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டான். ஐஸ்கிரிம் எடுத்துக்கோ என்று மீண்டும் ஒருமுறை சொல்லவும் “ம்கூம்..’ வேக, வேகமாக தலையாட்டினான். சந்திரனை அணைத்துப் பிடித்துக் கொண்டு பூங்காவை விட்டு வெளியேறினான் அவன்.

மகனின் வாட்டத்தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொம்மை வாங்கிய அதே குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்து சென்றான். கடை மூடியிருந்தது. “அப்பா நாளைக்கு வாங்கித் தாரேன்” என்றான். “எல்லோருக்கும் ரிட்டர்ன் கிப்ட் கொடுத்தாங்கள எனக்கு மட்டும் ஏன் தரல…” சந்திரனின் மெளனம் உடைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சிதான்.

“ரிட்டர்ன் கிப்ட் தீந்து போச்சுப்பா’

“இல்ல..போ…” தன்தோள் மீதிருந்த அவனுடைய கைகளை விலக்கினான். அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவேயில்லை. மீண்டும் அவன் தோளப்பிடித்து அணைத்து “, நாளைக்கு “அப்பா வாங்கித்தாரேன்” என்றதும்; “ஒண்ணும் வேணாம் போ..” என்றவன் அப்பாவின் கையை விலக்கிவிட்டு தனியாக நடந்து வந்தான். பேருந்திற்காக நின்றுகொண்டிருக்காமல் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். ஆட்டோவில் வரும் பொழுது சந்திரன் ஒன்றுமே பேசாமல் வந்தது அவனுக்கு நெஞ்சைப் பிசைந்தது. அவனுக்கும் என்ன பேசுவதென்று தெரியாததால் அமைதியாக வந்தான். வீட்டிற்கு வரவும் தன் அம்மாவிடம் புகார் வாசிப்பான் என எதிர்பார்த்தான். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு போய் படுத்துக் கொண்டான்.

சாப்பாடு முடிந்து கணவனும், மனைவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “அப்பவே கேட்கணும்னு நெனச்சேன், என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி உம்னு இருக்கான்” என்று மனைவிகேட்கவும்; அவளுக்கு நடந்த விவரத்தை கூறினான். அவளும் ஒன்றும் பதில் சொல்லாமல் எழுந்து போய் படுத்துக் கொண்டாள். இதை எப்படி சரி செய்வது என்று யோசித்தவாறு அவனும் தூங்கிப் போனான்.

மறு நாள் வேலைவிட்டு வரும் பொழுது குர்லா சென்று பொம்மை விமானம் ஒன்று வாங்கினான். அங்கேயே பரிசு பெட்டியில்வைத்து வண்ண காகிதம் சுற்றி எடுத்து வந்தான். வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா என்று ஓடிவந்து கால்களை கட்டிக்கொள்ளும் சந்திரன் அன்று தான் வரைந்த ஓவியத்தை காட்டவோ, ‘பள்ளியில் மிஸ் இன்னைக்கு இந்தப் படத்தைப் பார்த்து வெரி குட் சொன்னாங்க, மிஸ் இன்னைக்கு வீட்டுபாடம் செய்யலனு திட்டினாங்க, சுனிலும், நானும் கட்லஸ் வாங்கி சாப்பிட்டோம்” என்று எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“சந்திரா, இங்க பாரு அங்கிள் உனக்கு ரிட்டன் கிப்ட் கொடுத்தாங்க” என்று மகனை அழைத்து தான் வாங்கி வந்த பரிசுப் பொதியை காட்டினான். அதை வாங்கியன் திருப்பி, திருப்பி பார்த்து விட்டு அப்படியே மேசையில் வைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் போய் பழையபடி அமர்ந்து கொண்டான். “பிரிச்சுப் பாரு“ என்று சொன்னவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்தான். அடுத்தடுத்த நாட்களிலும் அவனிடம் மாற்றமில்லை. கடைக்கு அழைத்துப் போகச்சொல்லி தொந்தரவு செய்யவில்லை. குறும்புத்தனம் செய்வதில்லை. அம்மாவிடம் மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கவும், தங்கையிடம் வம்பிழுப்பதும் நடந்தது. ஆனாலும், அது வழக்கத்திற்கு மாறனாதாகவே அவனுக்குப் பட்டது. அதிகமான நேரம் அமைதியாகவே இருந்தான். மூன்று நாட்கள் பரிசுப் பொதி மேசையின் மீது அப்படியே இருந்தது. அதைவிட மகன், தன்னிடம் பேசாமல் விலகிச் செல்வதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை. இதை எப்படி சரிசெய்வதென்று உள்ளுக்குள் தவித்தான். மகன் மனத்தில் அது ஆறாத வடுவாக படிந்துவிடுமோ என்று அச்சம் கொண்டான். அவன் உள்ளுக்குள் மருகுவதைக் கண்ட அவன் மனைவி “அதெல்லாம், ஒண்ணுமில்ல தானா சரியாயிடுவான்” என்று ஆறுதல் கூறினாள்.

அவன் மகனை கடைக்கு, பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். அன்று ஞாயிற்றுக் கிழமை ஆர்.சிட்டி மாலிலுள்ள டைம் ஜூன். கிட்ஜெனியா என அழைத்து சென்றான். கிட்ஜெனியாவில் காரும், விமானமும் உற்சாகமாக ஒட்டி வெற்றிபெற்று பரிசு பணமும் (கிட்ஜெனியா பணம்). ஓட்டுனர் அடையாள அட்டையும் பெற்று வந்தான். ஓவியம் வரைந்தான் மாலை வரை உற்சாகமாக விளையாடிவிட்டு வந்தாலும் தன் அம்மாவிடமும், தங்கையிடமும் அந்த உற்சாகத்தை பகிர்ந்து கொண்டான். நாளுக்கு, நாள் தன்னைவிட்டு சந்திரன் விலகிச் செல்கிறானோ என்று கவலை கொண்டான். மகன் குறித்தான கவலை அவனுக்குள் இருளென சூழ்ந்தது. யோசிக்கவே மறந்தவனானான். அலுவலகப் பணிகளிலும் கவனம் குவிய மறுத்தது. “அதெல்லாம், ஒண்ணுமில்ல தானா சரியாயிடுவான்” மனைவியின் வார்த்தைகள் மட்டுமே அவனுக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

மறுநாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரவும் வழமைபோல் “அப்பா” என்று அழைத்துக் கொண்டு வந்து கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டான். அவன் கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் சட்டென்று வெளிப்பட்டதை மகனுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு மகனை இருகைகளாலும் வாரியணைத்துக் கொண்டான். அப்போது அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி அந்த அறையெங்கும் குளிர்ந்து பரவியது. அவனின் முரட்டு பிடியிலிருந்து விடுபட்ட சந்திரன் ஒரு பொம்மை இரயிலை கொண்டு வந்து காட்டினான். பிறகு பொம்மை இரயிலுக்கு முறுக்கேற்றி, முறுக்கேற்றி ஓடவிட்டான். அவன் முறுக்கேற்ற, முறுக்கேற்ற இரயிலும் அந்த அறைமுழுக்க ஒடி வட்டமடித்து நின்றது. அவனுக்கு குழந்தைகளின் உலகம் கொஞ்சம் புரிந்தது போலிருந்தது.

“இது ஏதுடா” என்றான்

“ஏம் பிரண்ட் குடுத்த ரிட்டர்ன் கிப்ட்” குரல் கம்பீரமாக வெளிப்பட்டது. சந்திரன் சாதாரணமாகத்தான் சொன்னான், ஆனால், அவனுக்குத்தான் யாரோ தன்னை கழுமரத்தில் கட்டிவைத்து சாட்டையால் விளாசியது போன்றிருந்தது. ஆசுவாசமாக உணர்ந்தான். மகனிடம் ஒரு வாரமாக இருந்த இறுக்கம் தளர்ந்ததில் அவன் மனம் அமைதியானது. எங்கே தன் மகனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுமோ என்று தான் அச்சமடைந்தது பொருளற்றது என புரிந்து கொண்டான். குழந்தைகள் உலகம் விசித்திரமானது. எவ்வளவு பெரிய பள்ளத்தையும் தானாக இட்டு நிரப்பிக்கொள்ளும் வலிமை அதற்குண்டு. ஒருவாரமாக நீடித்த அலைகழிப்பு நீங்கி மனம் மெழுகுவர்தியின் ஒளி கொண்டு மிளிரத்துவங்கியது. ஏதோ ஞாபகம் வந்தவனாய் எழுந்து படுக்கையறைக்குள் சென்று பார்த்தான் தான் ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி வந்த கிப்ட் அது இருந்த இடத்தில் இல்லை. கைலிக்கு மாறி அப்படியே படுக்கையில் வீழ்ந்தான்.

தலைக்கு மேலே இருந்த காற்றாடி க்கிரு..க்கிரு என மெதுவாக சுற்றுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தது. வெளிக்காற்றுக்கு சாளரத்தின் கதவுகள் க்கிரிச்… க்கிரிச்சென.. சத்தமிட்டபடி ஆடிக்கொண்டிருந்தது அவன் மனத்தைப் போலவே. இனிமேல் பையனை பிறந்தநாள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று முடிவெடுத்தான். அப்படியே தான் அழைத்தாலும் சந்திரன் வருவானா என்ற சந்தேகமும் எழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *