அன்று நிகழ்ந்த ஒரு கதை .
தாமிரபரணி ஆறு எப்பொழுதும் போல தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது
நெல்லையை நெருங்குமுன் கிராமங்களில் அவள் வரும் அமைதியும் அழகும் தனிதான் !
படித்துறையில் யாருமே இல்லை.காலை பதினோரு மணிக்குமேல் ஆட்கள் வருவது குறைவுதான்.
நெல்லை எக்ஸ்பிரஸ் எட்டரை மணிக்கு வந்து ஆறுமுகம் ஆட்டோவோடு காத்திருந்தால் கூட டவுன் வழியாக கிராமத்திற்குப் போகுமுன் நம்ப அண்ணாச்சி ராமசாமி கபேயில் முறுகலா இரண்டு தோசை நெய் மணக்க சட்னி சாம்பாருடன் சாப்பிட்டால்தான் ஒரு தெம்பு தானாக வரும்.
வே!அம்பி! சுகமா இருக்கீரா! இப்பதான் வாரிகளா!நேரா ஊருக்குத்தானே !
அண்ணாச்சி கடையில் இவை விசாரிக்கப் படாமல் தோசை சாப்பிட முடியாது.
அண்ணாச்சி ராமசாமி பிள்ளை அவர்கள் வெள்ளை வெளேர் கதர் வேட்டி சட்டை ,நெற்றியில் விபூதி எப்போதும் குறுக்குதுறை முருகனின் நினைவு !அவர் உடுத்திய உடுப்பு போல மனதும் வெள்ளை!ரொம்ப நல்லவர்.
எங்களுக்கு எங்க தாத்தா காலத்திலிருந்து அவர்கள் குடும்ப நட்பு உண்டு.’நேத்து பெரிய ஆச்சியைக் கூடப் பார்த்தேன் ! நீங்க வாரதாகச் சொல்லலியே !மறந்து இருப்பாக போல!
அப்பொழுது ஒருவர் கல்லாவில் சில்லறை கொடுக்கும்போது அண்ணாச்சியிடம் ‘டிபன் பழைய மாதிரி இல்லை!என்ன ஆச்சு! எனக் கேட்டுக் கொண்டிருந்தார் .
என் மனைவி அதற்குள் ‘இப்பவே நேரம் ஆச்சு !இன்னும் பழயபடி அவரிடம் பேச ஆரம்பிக்காதீங்க !
பணம் செலுத்தப் போனேன் .அண்ணாச்சி மறுபடியும் ‘உமக்கு இந்தப் பையன் !வேற !’
இல்லை! அண்ணாச்சி !இவன் ஒருத்தன்தான் !மெட்ராசிலே ஹைஸ்கூல் படிக்கிறான்.ஊரைப் பாக்காம இருக்க முடியலே !சும்மா பத்து நாளைக்கு வந்தேன் ‘.
சில்லறையை எண்ணிக்கொண்டே ‘உம்ம கிட்ட ஒண்ணு சொல்லணும் .
சொல்லவா ‘.
சொல்லுங்க அண்ணாச்சி !
‘நம்ம கடையிலே சரக்கு பலகாரம் போடுதாரே செல்லப்பா !அவரு உமக்கு சொந்தமா ?
இல்லை அண்ணாச்சி !ஆனா என் மாமியாரைக் கேட்கணும் .எல்லாம் ஒரே ஊர்தான்.என்ன விஷயம் ?
‘அவரு ரொம்ப நாளா நம்ம கடையிலே எங்க அப்பா காலத்திலே இருந்து இருக்காரு !ரொம்ப நல்லவரு நாணயம் உண்டு !ஆனா வயசாயிடிச்சு !கண் தெரியிலேன்னு ஆபரேஷன் கூட நான் சிலவு பண்ணினேன்.இன்னொரு கண்ணுக்கும் பண்ணனும் .பழைய தெம்பு இல்லை !கடையிலே கூட்டம் இருக்கும் போது சிரமப்படராரு!
என்ன அம்பி !யோசிக்கேரு!உம்ம ஆறுமுகம் உள்ளே சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்.அவனும் உம்ம ஊர் தானே!
ஏ!அப்புறம் வா!உன் கிட்டே பேசணும் !
இதுதான் நெல்லையின் தனிப்பெருமை வாய்ந்த உறவுத் தன்மைகள்!
தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது மனம் விட்டு உண்மையான அன்புடன் பேசுவார்கள் !அதில் போலி கிடையாது!
சரி அண்ணாச்சி !டவுனுக்கு வரும் போது அவசியம் வரேன் !
ஆறுமுகம் வந்திட்டான்.
ஆறுமுகம் !நேரா சந்திப் பிள்ளையார் கோவில்லே தேங்காய் விடல் போட்டுட்டு போகணும் ‘
நீர் சொல்லுதக்கு முன்னாலேயே சதுர் தேங்காய் வாங்கியாச்சு .இது பதுவா நாம செய்யறதுதானே !
ஆறுமுகம்!உன் பொஞ்சாதி சரோஜா எப்படி இருக்கா?இப்பவும் கோவிச்சுக்கிட்டு போயிடராளா’இது என் மனைவி கேட்டாள்.
‘பொறவிக் கொணம் போகுமா தாயி !ஆத்துலே தண்ணி இல்லேன்னா அன்தான்னைக்கி அக்கரைக்கு நடந்து போயிருவா !
தருவை தானே உன் மாமியார் ஊரு ?
ஆமாம் தாயி !இருக்கும் போது நல்லாத்தான் இருக்கா!
அது சரி !எனக்கு என்ன வாங்கிட்டு வந்தேரு!
என் மனைவி ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்!
உனக்கா!உனக்கெதுக்கு !சரோஜாவுக்கும் உன் பிள்ளைக்கும் தான் வாங்கினேன் !
அதனால் என்ன அம்மா !நீங்க நிறையக் கொடுத்திருக்கிறீங்க .அது போதும்!
ஒரு ஏக்கம் இருந்தாலும் அந்த உரிமை தடை இல்லாத அன்பு எங்கள் ஊரின் தனி சொத்து !அந்த மகிழ்ச்சியே தனி!
‘அவ கிடக்கறா! நான் உனக்கு ஸ்பெஷலா வெச்சிருக்கேன் ஆறுமுகம் என்றேன் நான்
சின்னக் குழந்தைக்கு பிடிச்ச ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும் !அது போல அவன் முகம் பிரகாசமாயிற்று .
இது மாதிரி உறவுகளுக்கு விலை இல்லை !
ஆறுமுகம் சந்திப் பிள்ளையாருக்கு சிதர் தேங்காய் உடைத்தான்’கையில் விபூதியை என் பையன் நெற்றியில் இட்டான்.
வண்டி பேட்டை ரோட்டில் சென்று பள்ளிவாசல் முனையில் ஊர் பக்கம் திரும்பியது .
அது குறிகிய பாதைதான் .ஆனால் இரு மருங்கிலும் பச்சை வண்ண வயல்களின் கதிர்கள் நிதானமாக நின்று அசைந்தாடும் அழகையும்,
மெல்ல ரசிக்க வேண்டும்.நடு நடுவே சிறு குளங்களின் அமைதியான தெளிந்த நீரில் சின்னஞ்சிறு பறவைகள் அதன் அழகுக்கு ஏற்ப மீன்களை கொத்திச் செல்லும்போது ஏற்படும் மெல்லிய அலைகள் சூரிய வெளிச்சத்தில் தவழ்ந்து தரை நோக்கி வரும் காட்சிகள் ,அடர்த்தியான வரிசையான மாமரங்கள் இலைகளைத் தாண்டிச் சென்றால் உயர்ந்த படிக்கட்டுகளுடன் உய்யவன் எம்பெருமான் சன்னதி!
அந்தத் தெருக்களைத் தாண்டி எட்டிப் பார்த்தால் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி அமைதியாக ஓடும் தோற்றம் .!
வீட்டுக்குச் சென்றோம் .மாமியார் இருந்தார்கள் .நேரா ஆத்தங்கரைக்குப் போனோம் குளிப்பதற்கு.போகும்போது ‘என்ன இந்த செல்லப்பா மாமாவுக்கு !பாவம்! அழகுன்னா அழகு அப்படி ஒரு பெண் அவருக்கு .ஒண்ணுக்கும் உதவாத ரெண்டு பையங்க !ஏற்கெனவே கஷ்டம்.சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார் ‘என்று என் மனைவி சரஸ்வதி சொன்னாள்.
ரெண்டு நாள் கழித்து கோவில் வாசலில் செல்லப்பா மாமாவை பார்த்தேன் ..
மாப்பிளே !வாரும்!அன்னக்கி எங்க முதலாளி கிட்டே பெசிநேரா !கடையிலே சொன்னங்க !
ஆமாம் !கண் ஆபரேஷன் ஆச்சா !
ஆமாம் .ஒருகண்ணுக்கு ஆச்சு .வேலை நல்லா செய்யறேன் .அப்போ உள்ள தெம்பு இப்போ இல்லை.அண்ணாச்சிக்கு திருப்தி இல்லை.
ரொம்ப நல்லவர்.என்னை விட இஷ்டம் இல்லை.ஆனா எனக்கு வயசு ஆயிடுச்சு .அவர் அப்பா காலத்திலேருந்து இருக்கேன் .
சரி மாமா !அப்புறம் பார்க்கிறேன்.
பாவம் அந்தப் பொண்ணு ராதை !பக்கத்துக்கு வீடு அங்கே இங்கேன்னு வீட்டு வேலை செய்து கொண்டு அந்தந்த வீட்டுக்காரர்களின் அதிகாரம் கடுமையான வேலைகளுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்க
வேண்டும் .கிராமத்து வீடுகள்!பெரிதும் நீளமுமாக கடுமைதான் .
இந்தப் பொண்ணு படிச்சிருக்கா’ என்று என் மனைவியைக் கேட்டேன் .
பத்து பாஸ் பண்ணிட்டு டைப் அடிக்க டவுனுக்குப் போச்சு .பஸ் வசதி சரி இல்லை .அதனால் பாதி நாள் போகாது.
பாவம்!ரொம்பக் கஷ்டம் !
ரெண்டு நாள் கழித்து சாயங்காலம் ரொம்ப புழுக்கமாக இருக்கு என்று ஆத்தங்கரைக்குப் போனேன்.செல்லப்பா மாமாவைப் பார்த்தேன் .
என்ன மாமா !கடைக்குப் போகலையா!
இல்லேப்பா !முடியலே !
எப்போ ஊருக்குப் போறே ?
அடுத்த வாரம் !மாமா உங்களை ஒண்ணு கேட்கட்டுமா !
என்ன மாப்பிளே !கேளுங்க !
உங்க பொண்ணு இப்படி வீட்டு வேலை செய்து கொண்டு மாமிகளுக்கு கடுமையாக உழைச்சுண்டு,எனக்கு நம்ப ஊர்காரங்க மேல நம்பிக்கை கிடையாது .
அழகா வேற இருக்கா!
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொடுங்கோ !
பண்ணணும்! என்னுடைய செங்கோட்டை அண்ணா உதவி செய்தா பண்ணுவேன்.அண்ணா நல்ல வசதி உள்ளவர்.எனக்கு இங்கே சாப்பாட்டுக்கே கஷ்டம் .அண்ணா பையன் கூடப் பார்த்து வெச்சிருக்கார் .
சந்தோஷம் மாமா .கல்யாணம் வரும்போது தகவல் கொடுங்கோ .
நான் வரேன் .
அடுத்த நாள் .
சங்கரன் கோயிலுக்குப் போகலாம் என்று இருந்தோம் .
அந்தப் பொண்ணையும் கூப்பிடு .நாம் மட்டும் தானே கார்லே போறோம் .அவளுக்கும் ஒரு மாறுதல் இருக்கும் என்று சொன்னேன் .
அவள் அம்மாவும் சந்தோஷமாக அனுப்பினார்கள் .
செழிப்பு ,வறுமை வாழ்க்கையில் அவரவர்களுக்கு ஏற்பட்டது .
ஆனால் அவை எப்பொழுது வேண்டுமானாலும் இடம் மாறலாம் !
அழகு அப்படி அல்ல ! அது இறைவனால் வரையப்பட்டது .
அதற்க்கு மாறுதல் கிடையாது!
ராதை வந்தாள்.
அக்கா! என்று தயங்கி என் மனைவியைப் பார்த்தாள்.சரஸ்வதிக்கு அவளைப் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகி விட்டது .
அவளின் கசங்கிய பெட்டியில் வைத்த புடவையும் அதன் அமைப்பும் !
நீங்க காருக்குப் போங்க !நான் இவளைக் கூட்டிண்டு வரேன் .
நானும் பையனும் காருக்குப் போய்ட்டோம் .
பத்து நிமிஷம் ஆயிற்று .
திரும்பிப் பார்த்தால் அழகான பச்சை நிறப் புடவையும் கழுத்தில் செயின் போட்டு தலை வாரிப் பூ வைத்து பெண்மையின் பேரழகும் பொலிவும் இதுதான் என்ற அமைப்பில் என் மனைவி அவளைக் கூட்டிக் கொண்டு வந்தாள் .
தன்னுடைய புடவை ஜாகெட் நகை போட்டு ஒரு தேவதைக்கு மனம் நிறைந்த இன்னொரு பெண் அழகு பார்த்தாள்.!
பிறப்பின் தன்மை கடவுளால் வரையப்பட்டது.அழகானவர்களை மேலும் அழகு படுத்திக்கொண்டே போகலாம் .ஜொலிப்பார்கள் !
இது உண்மை !
இயற்கையான பேரழகை இறைவன் இவளுக்கு கொடுத்திருக்கிறான் .
அதை இன்னொருவர் நினைத்தாலும் அவர்களால் ஆக முடியாது.
இது இறைவனின் இன்றிமையாத செயல் !
ராதை என் மனைவியுடன் காரில் ஏறும் போது எரிச்சலான கண்கள் சில அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன.
கார் சங்கரன் கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தது .
என் மனைவி கேட்டாள்.’எல்லோரும் உன்னை நல்லப் பார்த்துப் பாரா!
எல்லாம் வாங்கிக் கொடுப்பாங்களா அல்லது வேலை வாங்கிட்டு அனுப்பிடுவாங்களா !
சில பேர் நல்லவங்க இருக்காங்க !ஆனா நான் எதையும் எதிர் பார்க்க மாட்டேன் .சில சமயம் கஷ்டமாக இருக்கும்.கூச்சமாகவும் இருக்கும் .
என்ன பண்றது !சாப்பிடணுமே!
டென்த் லே நல்ல மார்க் வாங்கினேன் .படிக்க வசதி இல்லே !
எனக்கு எந்த சாய்ஸ்ம் இல்லே.கடவுள் செயல் தான் !
பாவம்!எவ்வளவு ஆதங்கம்!
இன்னைக்கு உங்க கூட வரது என் பாக்கியம் !
ஏன் அவர்களெல்லாம் கூட்டிக்கொண்டு போக மாட்டார்களா ?
மாட்டார்கள் .இன்னைக்கு எனக்கு இவ்வளவு எல்லாம் கொடுத்து நீங்க கூட்டிக் கொண்டு போவது ஏதோ ஒரு ஜன்மத்தில் நீங்க எனக்கு அக்காவோ அல்லது அம்மாவோ இருந்திருக்கிறீர்கள் .
அந்தப் பெண் மட்டும் கலங்கவில்லை !நாங்களும் கலங்கினோம்!
என் பெரியப்பா ஏதோ ஒருத்தரைப் பார்த்து வச்சுருக்கார் என்று அப்பா சொல்றார் ,கடவுள் தான் வழி விடணும்.எனக்கு சாயிஸ் எதுவும் கிடையாது .இங்கே தினம் கழிக்கிறதே கஷ்டம் .எனக்கு பாதுகாப்பு இல்லை!
கோவிலில் சக்தி வாய்ந்த கோமதி அம்மனிடம் நாங்கள் வேண்டியது ‘தாயே!இந்தப் பெண்ணை நல்ல இடத்தில் சேர்த்து விடு !
இரண்டு நாள் கழித்து ஊருக்குப் போக வேண்டும் .செல்லப்பா மாமாவை பார்த்தேன் .ஏதாக இருந்தாலும் தகவல் கொடுங்கள் .
நாங்கள் உதவியாக இருப்போம்.என்று சரஸ்வதியும் நானும் சொன்னோம் .
அண்ணாச்சி யோடு பேசினேன் .
அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் வந்தால் நாங்கள் வருவோம் .முடிஞ்சதை செய்வோம் .
வே அம்பி!செல்லப்பா நம்ப குடும்பத்திலே ஒருத்தர் !நீர் கவலைப் படாதேயும் !நான் கூட இருந்து பார்த்துப்பேன் .
மனித நேயம் என்ற மாபெரும் சக்தி இவரிடம் ஒளி வீசியது!
மிகவும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் .
மெட்ராஸ் வந்து ஒரு மாசம் இருக்கும்.செல்லப்பா மாமா லெட்டர் போட்டிருந்தார் .
செங்கோட்டைக்குப் போய் அண்ணா முன்னாலே பையனை நிச்சயம் பண்ணிட்டேன் கல்யாணம் தை மாசம் நடக்கும் .அவசியம் வரவும்.
கேட்க சந்தோஷமாக இருக்கு.அவசியம் வருவோம் என்று பதில் போட்டேன் .
கொஞ்ச நாட்கள் ஆயிற்று .
ஒரு நாள் தபாலில் ‘மாபிள்ளைக்கு ,கல்யாண தேதி குறிச்சாச்சு .
ஆனா என் அண்ணா வாத நோயினாலும் மூச்சு விட முடியாமல் நினைவு தப்பி திருவனந்தபுரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள் .கல்யாணம் எப்படி நடக்கும் என்று தெரிய வில்லை .நீங்களும் என் முதலாளியும் தான் எனக்கு உதவணும்.தப்பா எடுத்துக்கக் கூடாது .
என்ன ஆனாலும் சரி !இந்தக் கல்யாணத்தை எப்படியாகிலும் முடியிங்கோ !நான் கூட இருக்கேன் !
இவ்வளவு உயர்ந்த குணம் உடைய ஒருவள் என் மனைவி என்ற உள நிறைவு எனக்கு மிக்கத் தெம்பைக் கொடுத்தது .
நிலம் வாங்க அட்வான்ஸ் தொகை இருக்கு .தவிர என் பாஸ் கிட்டே லீவுக்கு சொல்லிட்டு வரேன் .
நான் வேலை பார்ப்பது ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி .என் பாஸ் கிருஷ்ணா பெங்களூரை சேர்ந்தவர் .பெங்களூர்தான் அவர் ஊரா ,
அல்லது புனாவா அல்லது கர்நாடகவா தெரியாது .ஆனால் ரொம்ப மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் .அதுதான் தெரியும் .
அடுத்த நாள் பாஸ் காபினுக்குப் போய் முழு விவரமும் சொன்னேன் .
சேகர்!நானே உன்னிடம் பேசணும் என்று இருந்தேன் .அடுத்த மாதம் என் பையன் பிசினெஸ் படிப்பு முடிச்சுட்டு யுஎஸ் லேயிருந்து வரான் .
பெங்களூர் பிரான்ச்க்கு நீ அவனுக்கு உதவி யாக ப போக முடியுமா !
உன்னைவிட நம்பிக்கையான வேறு யாரும் தோணலை !எனக்கும் பாமிலியோடு உங்க ஊருக்கு போய் சுற்றிப் பார்க்கணும்னு ஒரு ஆசை கல்யாணம் எப்போன்னு சொல்லு .நாங்களும் வரோம் .
மணி பிராப்ளம் பற்றி யோசிக்காதே .நான் ஹெல்ப் பண்ணறேன் .
இந்த மாதிரி கல்யாணம் நடக்கணும்
மனிதாபிமானம் என்பது நாம் உணரும்போதுதான் அதன் பரிமாணங்களும் உயர்வும் தெரிகிறது .உயர்ந்த உள்ளங்கள் நெல்லையில் அண்ணாச்சி ,இங்கே என் பாஸ் கிருஷ்ணா சார் !
கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னாலேயே நானும் மனைவியும் போய்ட்டோம் .செல்லப்பா மாமாவுக்கு தெம்பு வந்து விட்டது
ஊர்காரர்களுக்கு சுரத்து இல்லை !பாதி முகங்களில் சிரிப்பையே காணோம் .
ராமசாமி பிள்ளை அவர்களுக்கு ஒரே குஷி !
வே!அம்பி!சொன்னபடி வந்துட்டேரே !கவலைப்படாதேயும் !பிரமாதப் படுத்திடலாம் ! என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார் .
இவரைப் போல மனித உள்ளங்கள் பார்க்க முடியாது!
கல்யாணம் கிராமத்தில் பந்தல் போட்டு ஏற்பாடு பண்ணியாச்சு .மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் செங்கோட்டைப் பாசஞ்சரில் அழைத்துத் தங்குவது,சமையல் ஏற்பாடு எல்லாம் அண்ணாச்சி செய்துட்டார்.
கல்யாண ஏற்பாடுகள் என் மனைவி இருந்து பார்த்துக்கொண்டாள்’
என் பாஸ் குடும்பத்திற்கு கெஸ்ட்ஹவுஸ் ஏற்பாடு செய்து தகவல் கொடுத்திட்டேன் .
கல்யாணத்திற்கு இரண்டு நாள் இருக்கும் .
மாலை நேரம் .எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் ராதையும் என் மனைவியும் பேசிக்கொண்டிருந்தார்கள் .அதற்குப் பிறகு என் மனைவி முகத்தில் ஒரு மௌனம் கலந்த இறுக்கம் தெரிந்தது .
கல்யாணத்திற்கு முதல் நாள் .
மாப்பிள்ளை வீட்டாருக்கு பந்தலில் இருந்து நாலு வீடு தள்ளி ஒரு வீட்டில் ஏற்பாடு செய்திருந்தது .வரவேற்ப்புக்கு சில மணி நேரம் இருந்தது .
என் பாஸ் குடும்பம் ,அண்ணாச்சி குடும்பம் மற்றும் உறவினர்கள் வந்துவிட்டனர் .
அப்பொழுது செல்லப்பா மாமா என்னைத் தேடி ஓடி வந்தார் .
என்ன மாமா !பதட்டப்படுகிறீர்கள்!
நிச்சயதார்த்தப் புடவை, முஹூர்த்தப் புடவை அவர்களிடம் பார்பதற்க்கு கொடுத்து விட்டு இருந்தேன் .இப்போ அங்கே இல்லைன்னு சொல்றா! தவிர பதினைஞ்சு பவுன் நகை ,இருபத்தி ஐந்து ஆயிரம் பணம் தந்தால்தான் கல்யாணம்னு சண்டைக்கு வராங்க .என் அண்ணா ஏற்பாடு .இந்த விவகாரம் அவருக்குதான் தெரியும்.அவர் பேச்சு மூச்சு இல்லாமல் ஆஸ்பத்திரி யில் இருக்கார்.
எல்லாரும் வந்தாச்சு .மாப்பிள்ளை வரலை !
என்ன செய்யறதுன்னே தெரியலே !
புடவைதானே !நாங்க புதுசா ஏற்பாடு பண்ணறோம் !என்று என் மனைவியும் பாஸ் மனைவியும் அவர்கள் காரில் பையன் விக்னேஷ்
டிரைவ் செய்ய கிளம்பிவிட்டார்கள் .
டவுன் ஆரெம்கேவீ யில் வாங்கிண்டு ஒரு மணி நேரத்தில் வருவோம் .
நீங்க மாபிள்ளைப் பையனைக் கண்டுபிடியுங்கோ என்று சொல்லி அவர்கள் போய் விட்டார்கள் .
காலேலே கூட டவுன்லே பையனைப் பார்த்தேன்னு சொன்னாங்களே !
அதுக்குள்ளே எங்கே போய்ட்டான் .என்றார் அண்ணாச்சி.
நான் செல்லப்பா மாமாவுடன் அங்கே போனேன் .
மாமா !எங்களையெல்லாம் பார்த்த பிறகு பணத்திற்கு அடி போடறாங்க .
நீங்க கவலைப் படாதீங்க ! நாங்க இருக்கோம்!.அங்கே போனோம்.
கிராமத்திலே விஷயம் பரவ ஆரம்பித்தது .
என்ன பணப் பிரச்சனையா !கடைசி நேரத்திலே இப்படிப் பேசறீங்க !
பையன் எங்கே ?என்றேன்
பையன் வந்திருவான் !பணத்தைப் பற்றி மாமாகிட்டே சொன்னோமே !
அவர் சொல்லலியா ?
நாங்க இவர் கிட்டப் பேசலே !இவர் அண்ணா உடம்பு சரியானதும் கல்யாணம் வச்சுக்கலாம் இப்போ எங்களாலே சம்மதிக்க முடியாது .
என்ன கடைசி நேரத்திலே சொல்லறீங்க ! நாளை கல்யாணம் !
அதனால் என்ன !பார்த்துக்கலாம் !
சரி !பையனை வரவழையுங்கோ !பணம் பற்றிப் பந்தலில் பேசுவோம் என்று சொல்லிவிட்டு வாங்க மாமா போகலாம் .
மாமாவைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன் .
அதற்க்கு முன்னால் என்னைத் தவிர என் பாஸ் ,அவர் மனைவி,என் மனைவி ,அண்ணாச்சி ரொம்ப சீரியஸ் ஆக பேசிக்கொண்டிருந்தார்கள் .
என்னைக் கூப்பிடலை!
எல்லாம் முடிந்து அண்ணாச்சி என்னிடம் வந்தார் .
வே!அம்பி !நீர் உண்மையிலேயே பெரிய ஆளுதாம் ! எம்ம்புட்டுப் பெரிய காரியம் !அதிசயமா இருக்கு !
குறுக்குத் துறையிலே முருகன் எப்படி நமக்குக் காட்டறாரு !
முருகா!முருகா !அண்ணாச்சி மெய்மறந்து கண்களில் நீர் வழிய முருகன் திசை நோக்கி தொழுது கொண்டிருந்தார் .
எனக்கு ஒண்ணும் புரியலே !
அண்ணாச்சி !நீங்க பாட்டுக்கு எதோ சொல்றீங்க !என்ன சமாசாரம் ?
இது சாதாரண சமாசாரம் இல்லை அம்பி ! என் அய்யன் முருகன் காட்ற அதிசயம் !
வாரும் என்னோட !செல்லப்பாவைப் பார்க்கணும் .
நேர மாமாவைத் தேடி உள்ளே போனோம்.
சோர்ந்து ஒரு ஓரமா உட்கார்ந்திருந்த மாமா முதலாளி வரதைப் பார்த்து எழுந்து ‘முதலாளி கடேசியிலே இப்படி பணம் கேட்க றாங்க என்ன பண்ணறதுன்னு தெரியலே ‘
வே!அழுகையே நிப்பாட்டும்!அந்த அட்டிரஸ் இல்லாத வெறும் பயலுகளைப் பத்தி இன்னமே பேசாதேயும் !
இன்னமே நான் உம்ம முதலாளி இல்லே ! இப்போ நீர் எம்புட்டுப் பெரிய ஆளு தெரியுமா !
நான் சொல்லுதற்கு மட்டும் ஆமாம் சொன்னாப் போதும் !
உம்ம பொண்ணு ராதா சாதரணப் பொண்ணு இல்ல !பெரிய கோடீஸ்வரன் வீட்டு மருமகள் !
மாமாவை வெளியே கூட்டிக்கொண்டு வந்து , ‘அன்னா நிக்காறே நம்ப அம்பி முதலாளி அவரும் அந்த அம்மாவும்தான் உம்ம பொண்ணு ராதா வோடே மாமனார் மாமியார் .
அன்னா காரைப் பிடிச்சுக்கிட்டு சிவப்பா நின்னுகிட்டு இருக்காரே அவர்தான் உம்ம மாப்பிள்ளை !
எனக்கே ஒரே ஷாக் !
அண்ணாச்சி நிஜமாவா !
ஆமாம் !அந்தப் பையநோடே அம்மாதான் ஜவுளிக்கடையிலிருந்து வரும் போது உம்ம சரஸ்வதி கிட்டே சொல்லி உறுதி பண்ணினாங்களாம் !பையனும் ஐயாவும் உடனே சம்மதம் சொல்லிட்டாங்க !
பொண்ணு ராதா சம்மதமும் அவ அம்மா சம்மதமும் வாங்கியாச்சு !
நீர் என்ன சொல்லுதெரு?
செல்லப்பா மாமாவாலே பேச முடியலே ! பூரண சம்மதம் ! நீங்க பார்த்து பண்ணற கல்யாணம் .பகவான் வழி விட்டுட்டார் !
ஆனா அதிசயமா இருக்கு!நம்ப முடியலே!
ஒய் !எங்களாலேயே நம்ப முடியலே !
அண்ணாச்சி கடைப் பையன்களைக் கூப்பிட்டார் .சரவணா !நம்ப பெரிய ஆச்சி வீட்லே ஒரு பார்சல் இருக்கும் .எடுத்துக்கிட்டு ஓடிவா .
சரவணன் ஓடி வந்தான் .
இந்தாப் பாரும் !இதிலே வேட்டிபுடவை எல்லாம் இருக்கு.பந்தலுக்கு வந்திருங்க !
எனக்கு அந்த மக்களை செங்கோட்டை பாசஞ்சரில் அனுப்பணும்.
அண்ணாச்சி !அவங்களை சமாதானமாய் அனுப்புவீங்களா ?எப்படி?
அம்பி!இது நம்ம ஊரு!நம்மை மீறி எதுவும் நடக்காது !நீர் பாட்டுக்கு உம்ம சோலியப் பாரும் !
நான் பார்த்துக்கிறேன் !யாரும் வரவேண்டாம் !
நான் என் பாஸ் கிருஷ்ணா சாரிடம் ஓடினேன் .அவர்களெல்லாம் பந்தலில் இருந்தார்கள் .இதற்குள் ஊரில் உள்ளவர்களுக்கும் விஷயம் தெரிய ஆரம்பித்து விட்டது .
இந்த மாதிரி அதிசயம் யாரும் கேட்டதில்லே !
சார்! எப்படி நீங்க இந்த முடிவுக்கு வந்தீங்க ? உங்க பையன் விக்னேஷ் எப்படி இதற்க்கு சம்மதித்தார் !மேடம் என்ன சொன்னங்க !
இது என்னுடைய கேள்விகள் .
பாஸ் சொன்னார் .’சேகர்!பணம் அந்தஸ்து முக்கியமில்லை .குணம் !
உண்மையான அன்பு ! இது எங்கேயோ எபாவோதான் கிடைக்கும்.
என் பையன் விக்னேஷ் ரொம்ப சோஷியல் திங்கிங் உள்ளவன் .
வெரி நைஸ் பாய் ! என்னைவிட அவன் அம்மாவும் அவனும் தான் முக்கியக் காரணம் .
அந்தப் பொண்ணு பணம் இல்லாத காரணத்திற்காக உங்க ஊர்லயே ஒரு இறுக்கமான வாழ்க்கை வாழணும்னு தேவையா !
சமூகத்துக்கு எங்களால் ஆனா சிறு உதவி !
எங்க மருமகளை நாங்க நல்ல பார்த்துக்குவோம் .
அவள் எங்களுக்குக் கடவுள் தந்த பரிசு!
இது உதவி இல்லை சார் !தியாகம் ! யாருக்குமே இந்த மனசு வராது!
சேகர்! நீங்க தேங்க்ஸ் சொல்லணும்னா உங்க மனைவி சரஸ்வதி மேடமுக்கும் அந்த கிரேட் ஜென்டில் மென் அண்ணாச்சிக்கும் சொல்லுங்க!
பாஸ்!இப்படி ஒரு கிராமத்திலே சாதரணமாக கல்யாணம் சம்மதிக்கிரீர்களே ! எல்லாருக்கும் சொல்ல வேண்டாமா !
இல்லை சேகர்!இது எங்கள் குடும்பத்திற்கான முக்கிய நபரை தேர்ந்து எடுக்கும் நேரம் !இதில் நாங்களே முழுமையாக பங்கெடுத்து இருக்க விரும்புகிறோம் .இது நாங்களே எங்களை கவனிக்கும் நேரம் !
ஒரு நல்ல பெண்ணை எங்களுக்குக் காட்டியதற்கு கடவுளுக்கும் உங்கள் போன்ற நல்ல மனமுடையோருக்கும் நன்றி சொல்லுகிறேன் .
மற்றப்படி இந்த ரேசிப்ஷன் டின்னர் எல்லாம் ஊருக்கும் உலகத்திற்கும் அறிவிக்கும் ஒரு ஷோ !
ஊர்லே போய் செய்யலாம் .
பாஸ் விளக்கத்தையும் அதன் உட்கருத்தும் என்னை வியக்க வைத்தது .
பையன் விக்னேஷ் வந்தான் .
ஆண்டிக்கும் உங்களுக்கும் எனக்கு ஒரு பெரிய கிப்ட் கொடுத்ததற்கு தேங்க்ஸ் !ஐ லைக் ராதா வெரி மச் !
எனக்கு இன்னும் எல்லாம் அதிசயமாக கதை போல இருந்தது..
எவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது.
வரவேற்ப்பு நேரம் வந்தது .
நேற்று வரை வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கேள்விக் குறியாக இருந்த ராதைக்கு இன்று ஐஸ்வர்ய தேவதையாக வாழ்வு அமைகிறது .
அழகாக நடந்து மெதுவாக மேடைக்கு வந்தாள்.ஊரினர் அதிசயம் அடங்கவே இல்லை .
வெளி நாட்டில் படித்து ஒரு பெரிய தொழில் அதிபர் மகனான விக்னேஷ் கிருஷ்ணா சாதாரண அலங்காரத்துடன் ஒரு சிறிய கிராமத்தில் மேடைக்கு வந்தான்.
கிருஷ்ணா தம்பதியர் அண்ணாச்சியின் வருகைக்காக காத்திருந்து அவர் குடும்பத்துடன் வந்து அமர்ந்ததும் வரவேற்ப்பு நிகழ்ச்சி அருமையாக நடந்தது.
மறு நாள் காலை சுப முகூர்த்ததில் திருமணம் இனிதாக நடந்தது.
சாப்பாடு நடந்து கொண்டிருந்தது.
பாஸ் சொன்னார் ‘சேகர் !என் மருமகளுக்கு சங்கரன் கோயில் அம்மனை தரிசனம் பண்ணனும்னு ஆசை !விக்னேஷ் சொன்னான் .நாம எல்லாரும் போறோம் .அப்படியே நாங்க ராதாவைக் கூட்டிக்கொண்டு
கெஸ்ட் ஹவுஸ் போய் ஊருக்குப் போறோம்.உனக்கு இங்கே வேலை இருக்காது .நம்ம பெங்களூர் ஆபிஸ் பத்தி பேசணும்.
பக்கத்திலே அண்ணாச்சி இருந்தார் .
பாஸ் சொன்னார் .’அண்ணாச்சி !நீங்க எங்களோடு சங்கரன் கோயிலுக்கு வரணும் .உங்களால் தான் எங்களுக்கு நல்ல மருமகள் கிடைத்தாள்.
அண்ணாச்சிக்கு கண் கலங்கியது.!ஐயா! பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லாதீங்க !உங்களோடு பெருந்தன்மைக்கு முன்னாலே எதுவும் ஈடாகாது !
நீங்க நல்லா இருக்கணும் .!
ஏற்கெனவே நம்ம பையன்கள் சரவணனும் ஆறுமுகமும் சங்கரன் கோயிலுக்கு அனுப்பிட்டேன் .போறதுக்கு முன்னாடி எல்லா ஏற்பாடும் பண்ணிடுவாங்க .நாம போய்டலாம்.
இரண்டு நாள் கழிந்தது.
நாங்க ஊருக்குப் போகணும் .செல்லப்பா மாமா அவர்களோடு சென்னைக்குப் போக மாட்டேன் என்பதால் அண்ணாச்சியிடமே எல்லா உதவிகளும் செய்யச் சொல்லி பாஸ் சொல்லிட்டு போய்ட்டார் .
நானும் என் மனைவியும் ஆத்தங்கரைக்குக் குளிக்கச் சென்றோம் .
நான் கேட்டேன் .’எப்படி இந்த பெரிய முடிவு எடுத்தார்கள் !உனக்குத் தெரியும் .எனக்குத் தெரியாது .என்ன ஆச்சு?
என் மனைவி சொன்னாள்.
பணம் நகை எல்லாம் ஏற்பாடு செய்து விடலாம்.ஆனால் அவர்கள் போக்கு சரியில்லை .தவிர அந்தப் பையன் ராதையிடம் அளவுக்கு மீறி அசிங்கமாகப் பேசி இன்னும் ஒரு வாரத்திலே கல்யாணம் .இப்பவே
நமக்குள்ளே தடை இல்லை என்று தப்பாக நடக்கப் பார்த்திருக்கான்.
நான் அந்த சமயம் அவர்கள் வீட்டுக்குப் போய் இருந்தேன் .
என் சத்தம் கேட்டதும் ராதை அக்கானுட்டு ஓடி என்னிடம் வந்து விட்டாள்.இவ்வளவு மோசமான ஆட்களுடன் என்ன சம்பந்தம் வேண்டியிருக்கு .இதை வெளியில் சொல்லவும் முடியாது.நல்ல வேளை இந்தப் பணம் பற்றி சண்டை வந்தது.
நானும் விக்னேஷ் அம்மா கிட்டே ஆரெம்கெவி க்கு ப் போகும் போது சொன்னேன் .
அவன் அம்மா பேசுவதற்கு முன் விக்னேஷ் ஆன்டி!அவங்க போகட்டும் விடுங்க !இந்தப் பொண்ணுக்கு நான் லைப் கொடுக்கிறேன் என்று பளிச் சின்னு சொன்னான்.மேடமும் விக்னேஷ் சொன்னதுதான் சரி .நானும் தயார் அவன் அப்பாவும் சம்மதிப்பார் என்று சொன்னார்கள் .
அதுதான் நாங்க காரை விட்டு இறங்கின வுடன் நம்ம பாஸ் கிட்டேயும் அண்ணாச்சி கிட்டேயும் பேசினோம் .
எல்லாரையும் விட விக்னேஷ் ஒரு மாடர்ன் பையன் செய்தது பெரிய தியாகம் !
அந்த கோமதி அம்மன் அருளாலே ஒரு நல்ல பெண் ஒரு நல்ல குடும்பத்திற்குப் போனாள்.
தாமிரபரணி சலனமே இல்லாமல் எப்போதும் போல ஓடிக் கொண்டிருந்தது .