ராசு மணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 2,350 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொழுது விடிந்ததிலிருது அன்று என் மனம் உத்ஸாகத்தில் இல்லை. காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷினின்பேரில் கோபம் கோபமாக வந்தது. பால்காரன் மீது எரிச்சல் வந்தது. வீடுகூட்டி தங்கத்தின்மீது வந்த ஆத்திரம் சொல்லிமுடியாது. மனத்தில் வேதனை வேறு குமுறிக்கொண்டு வந்தது. ‘வீட்டில் நான்கு வருஷங்களாக – வீட்டின் ஓர் அங்கமாக இருந்த ஒரு பெரிய வஸ்துவை இழந்துவிட்டோம்’ என்று மனம் புலம்ப ஆரம்பித்தது.

“டிசம்பர்ப் பூவைப் பறிக்கலையே அம்மா” என்று தங்கம் கேட்டவுடன் என்னுடைய ஆத்திரம் அதிகமாயிற்று.

“பூவும், நீயும் நாசமாய்ப் போக” என்று அவளை மனமாரச் சபிக்கும்படியாக முதல் நாள் நடந்த சம்பவம் என்னைத் தூண்டியது.


ராசுமணி எங்கள் வீட்டு வேலைக்காரப் பையன். நாங்கள் அவனை வேலைக்காரப் பையனாகக் கருதவில்லை. வீட்டில் ஒரு முக்கியஸ்தனாகவே நினைத்து வந்தோம். ராசுமணி எங்களிடம் வரும்போது ஒன்பது வயதுப் பையன். தாயார், தகப்பனார் இரண்டு பேரையும் இழந்தவன். பாலக்காட்டில் என் கணவர் வேலையாக இருந்த போது அவனுடைய மாமா அவனை எங்கள் வீட்டுக்கு வேலையாளாக அனுப்பிவைத்தார்.

ராசுமணி வந்த புதிதில் வேலை ஒன்றும் தெரிந்தவனாக இல்லை. ஆனால், கெட்டிக்காரப் பையன் என்று அவன் முகம் சொல்லிற்று. அதிகாலையில் எழுந்து முதல் வேலையாக ஸ்நானம் செய்துவிடுவான். கிணற்றடியில் தொட்டியில் ஜலம் நிரப்பி, பூஜைக்கு வேண்டிய புஷ்பங்களைப் பறித்து, பால் வாங்கி வைத்து, காபிப் பொடி அரைத்து – இவ்வளவு காரியங்களும் அவன் செய்துவைத்த பிறகுதான் நான் எழுந்திருப்பது வழக்கம். மணி ஆறரை தான் இருக்கும். நான் காபி போடுவதற்குள் ஐயாவின் வேலைகளைக் கவனிக்க மாடிக்கு ஓடிவிடுவான். அங்கே அலங்கோலமாகச் சிதறிக் கிடக்கும் பேப்பர்களையும் துணிகளையும் ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டுக் கீழே வந்து காபி சாப்பிடுவான். “அம்மா! மார்க்கெட்டுக்குப் போகணுமா?” என்று கேட்பான் கையில் பையுடன்.

அம்மாதிரி அன்று பொழுது விடிந்ததிலிருந்து கேட்க யாரும் இல்லை. கிணற்றடியில் தொட்டி ஜலம் இல்லாமல் காலியாகக் கிடந்தது.பால்காரன், “அம்மா, அம்மா” என்று கொல்லைப் பக்கம கத்த ஆரம்பித்துவிட்டான். புஷ்பங்கள் செடியிலேயே இருந்தன. காபிப் பொடியை நான் அரைக்க ஆரம்பித்தேன். வீட்டில் சமையலுக்குக் கறிகாய் இல்லை. நல்ல வேளையாக நான் மாடிப்பக்கமே போகவில்லை. போய்ப் பார்த்திருந்தால் ஒரு குரல் துக்கம் தீர அழுதிருப்பேன்.

என் கணவர் மாடியிலிருந்து கீழே வந்தார். முதல் நாளிலிருந்து அவருடன் சில்லறை மனஸ்தாபம் காரணமாகப் பேசவில்லை. கொல்லையிலிருந்த தங்கத்தை மாடியைப் பெருக்குவதற்காகக் கூப்பிட்டார்.

“வேலை இருக்குதே சாமி! பாத்திரம் தேய்க்கணுமே” என்று தங்கம் சொல்லிக்கொண்டிருந்தாள். ராசுமணியை வேலையைவிட்டுப் நாங்கள் போகச் சொன்னது அவள் மனத்துக்குக்கூட அதிருப்தியை உண்டு பண்ணி விட்டது.

“நீயாவது கொஞ்சம் மாடியைப் பெருக்கிவிடுகிறாயா?” என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் வந்தார்.

“நான் பெருக்குவதாவது? ஆபீஸுக்குச் சமையல் ஆகவேண்டும்; கிரிஜாவுக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அவர் முகத்தைக் கவனித்தேன். ராசுமணி இல்லாமல் அவர் மிகவும் கஷ்டப்படுவதாகவே எனக்குத் தோன்றியது.

“நான் சொன்னதைக்கூடக் கவனியாமல் அவசரப்பட்டுப் போகச் சொல்லிவிட்டீர்களே?” என்றேன்.

“அவசரமாவது? கோட்டை ‘பிரஷ்’ செய்து வை என்றால் பத்து ரூபாயைத் திருடுவது என்று அர்த்தமா? அவனைத் தவிர வேறு யார் எடுத்திருப்பார்கள்? மாடிப் பக்கம் வேலைக்காரியோ வருவதில்லை!” என்றார் அவர் கோபத்துடன்.


முதல் நாள் எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் இதுதான்:

வழக்கம்போல் ராசுமணி மாடியைச் சுத்தம் செய்து விட்டுத் துணிமணிகளை ஒழுங்காக மடித்து வைத்துக் கொண்டிருந்தான். மார்க்கெட்டுக்கு அனுப்பலாமென் மாடிக்குப் போனேன். “அவனுக்கு இன்று அதிக வேலை இருக்கிறது. கோட்டைப் ‘பிரஷ்’ பண்ணவேண்டும். இருக்கிற கறிகாயை வைத்துக் கொள்” என்று உத்தரவிட்டார் இவர்.

ஆபீஸ”க்குக் கோட்டைப் போட்டுக்கொண்டு போனவர் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து ‘கோட்டுப் பையில் வைத்த பத்து ரூபாயைக் காணோம்’ என்று வீடு பூராவும் தேடினோர். ராசுமணியைக் கூப்பிட்டு நயமாகக் கேட்டார்.

“இல்லை ஐயா! கோட்டில் பணம் இருந்ததோ என்னவோ, நான் பார்க்கவில்லை” என்றான்.

“நான்தான் வைத்தேன் என்கிறேன்; நீ இல்லை என்கிறாயா? பணம் கால் முளைத்து நடந்து ஓடி விட்டதா?” என்று இரைய ஆரம்பித்தார். ராசுமணி கண்ணில் ஜலம் பெருக நின்றுகொண்டிருந்தான்.

“உண்மையைச் சொல்லி விடு ; இரண்டு ரூபாய் இனாம் தருகிறேன்” என்று ஆசைகாட்டிப் பேசினார்.

“எடுத்திருந்தால் கொடுத்துவிடேன்; என்னவோ நீயும் சிறு பிள்ளை தானே!” என்றேன் நான்.

“சத்தியமாகச் சொல்லுகிறேன், நான் எடுக்கவில்லை அம்மா” என்று என்னைப்பார்த்தான் ராசுமணி.

“சத்தியம் வேறு செய்ய ஆரம்பித்துவிட்டாயா நீ? வெளியே போடா. உனக்கு ஊரிலே கூட்டாளிகள் அதிகமாகி விட்டான்கள். சினிமா பார்க்கக் காசு இல்லை என்று சரியாக வேலை தீர்த்துவிட்டாய்” என்றார் என் கணவர்.

சிறிது நேரத்துக்கு முன்பு அழுதுகொண்டிருந்த ராசுமணியின் முகத்தில் கோபமும் ரோஷமும் காணப்பட்டன. கீழே ஓடிப் பெட்டியை எடுத்துவந்து துணிமணிகளை உதறிக் காண்பித்தான்.

“நான் வருகிறேன் அம்மா” என்று சொல்லிவிட்டு விடு விடு வென்று கீழ போய்விட்டான்.

“அவன் தான் எடுத்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“அவன் எடுக்கவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? போகிறான் தரித்திரப் பயல். இவன் போனால் வேறு ஆள் கிடைக்காதா?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் ஆபீஸுக்குப் போய்விட்டார்.

ராசுமணி வீட்டை விட்டுப் போன மறு தினத்திலிருந்துதான் முதலில் கூறிய சங்கடங்கள் ஆரம்பித்தன. வீடு கிடந்த அலங்கோலமும், கிரிஜாவைப் பள்ளிக்கூடம் அழைத்துப்போக ஆள் இல்லாமல் நான் தவித்ததும் கணக்கில்லை.


ராசுமணி போய்ப் பத்துத் தினங்களுக்கு அப்புறம் சலவைத் துணிகளை எடுத்துக் கொண்டு வண்ணாத்தி வந்தாள். துணிகளைக் கணக்குப் பார்த்துப் பீரோவில் வைத்துக்கொண்டிருந்தேன்.

“எங்கே அம்மா ராசுமணி?” என்று என்னைக் கேட்டாள்.

“வேலையை விட்டுப் போய்விட்டாண்டி” என்றேன் நான்.

“ஏன் அம்மா? உங்களால் எல்லா வேலையும் செய்ய முடியுமா?” என்று கேட்டாள் வண்ணாத்தி.

“முடிகிறது, இல்லை. அதுக்காகத் திருட்டுப்புத்தி உள்ளவனை வீட்டில் வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டேன்.

“பலே! திருடனைக் கண்டுபிடித்து விட்டீர்கள் அம்மா” என்று பரிகாசம் கலந்த குரலில் சொன்னாள் வண்ணாத்தி. அவள் மேலும், “அநியாயமாக அந்தப் பையனை வீட்டை விட்டுத் துரத்தினீங்களே, நாலு வருஷமாப் பழகியும் தெரியலையே அம்மா உங்களுக்கு! எனக்குச் சலவை செய்யப் போட்ட கோட்டில் பத்து ரூபாயை வச்சுட்டு அந்தக் கோட்டில் தேடினாக் கிடைச்சுடுமா?” என்றாள்.

“என்னடி சொல்லுகிறாய்?” என்றேன் ஆச்சரியத்துடன்.

“இந்தாங்க அம்மா ரூவா” என்று பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள் வண்ணாத்தி.

“ராசுமணியை நீ பார்த்தாயாடி?” என்று கேட்டேன். எனக்கு அழுகை குமுறிக்கொண்டு வந்தது.

“அதுதான் நீங்க துரத்தின அன்னிக்கே எஙக வூட்டண்டை வந்து துணியெல்லாம் தேடுச்சு. ரூவா அகப்பட்டதும், ‘பாத்தியா அம்மா! ஐயா ஒரு பாவமும் இல்லாமல் என்னை விரட்டினார்? பழகினவனிடம் நம்பிக்கை இல்லை பாத்தியா அவங்களுக்கு? இதை நான் கொண்டுபோய்க் கொடுத்தாக்கூட நம்பமாட்டாங்க. நீயே கொடுத்துடு’ன்னு சொல்லிட்டுப் போச்சு. பத்து நாள் திண்டாடினாத்தான் தெரியும்னு நான் கொண்டுவரலை அம்மா!”

ராசுமணியைப் பல இடங்களில் தேடிப்பார்த்தோம். அவன் அகப்படவில்லை. வீட்டில் இருந்த புது வேலைக்காரன் கோவிந்தனிடம் மட்டும், “ராசுமணி மாதிரி நம்பிக்கையாக வேலை செய் அப்பா” என்று சொல்லியிருக்கிறோம்.


ராசுமணியை வேறு பெரிய வேலைக்கு வெளியூருக்கு அனுப்பிவிட்டதாக நாங்கள் சொன்ன பொய்யைக் கோவிந்தன் நம்பினதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு மாதம் மூன்று முறை வரும் வண்ணாத்தி அவனிடம் நடந்ததைச் சொல்லியிருக்கமாட்டாளா என்ன?

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *