கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 10,213 
 
 

ரகுவுக்கும் அவன் லவ்வர் வசுமதிக்கும் ஒரே லடாய். ரகு ரொம்பக் குழம்பிப் போயிருந்தான். இன்று அவனுடைய அபிமான நடிகரின் புதுப் படம் ரிலீஸாகிறது. ஒவ்வொரு தடவையும் எப்படியாவது முதல் நாளே அவர் நடித்த புதுப் படத்தைப் பார்த்து விடுவான்.

ஆனால், இம்முறை அது முடியாது என்ற நினைப்பே அவனுக்குக் கசந்தது. அதுதான் வசுமதியுடனான சண்டைக்கும் காரணம்.அவன் குடியிருக்கும் ஏரியாவில், அந்த நடிகர் மன்றக் கிளைச் செயலாளர் ரகுதான். அவனே முதல் நாள் பார்க்காவிட்டால் எப்படி? மற்ற மன்ற உறுப்பினர்கள் காறித் துப்ப மாட்டார்களா?

“ஏண்டா… நீயே வல்லைன்னா என்னடா அர்த்தம்? தோரணம் கட்டறது, ஜிகினா தூவுறதுன்னு எவ்வளவு வேலை இருக்கு! கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?” என்று கிழி கிழி என்று கிழித்துவிடமாட்டார்களா? அதையாவது தாங்கிக் கொள்ளலாம். ஆனால், வசுமதியின் முகத்தில் எப்படி விழிப்பது? வசுமதியை ரகு லவ் பண்ணக் காரணமே அவளும் ரகுவைப் போலவே அந்த நடிகரின் மேல் உயிரையே வைத்திருப்பதுதான்.

முந்தாநேற்று காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பார்க்கும் போதே வசுமதி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். சமீப கால வழக்கப்படி ‘வாடா போடா’ என்றுதான் காதலனாகிய ரகுவை அழைப்பாள். “டேய் ரகு! எப்படியாவது படத்தை மொத நாளே பாக்கணும்டா! காசில்லைனு பஞ்சப் பாட்டு பாடிட்டு அசால்ட்டா இருந்துராத…” என்று பாதி கொஞ்சலாகவும் மீதி கெஞ்சலாகவும் எச்சரித்திருந்தாள்.

ரகுவும் எவ்வளவோ சின்சியராக முயற்சி செய்து விட்டான். தெரிந்தவர்கள் அத்தனை பேரிடமும் கேட்டாகிவிட்டது. ஒரு பயலும் தரவில்லை. அவன் வேலை செய்யும் ஒர்க்‌ஷாப் ஓனர் மாதப்பனிடம் அட்வான்ஸ் கேட்டபோது உதைக்கவே வந்துவிட்டார்.

தன் வீட்டு நிலைமையை எண்ணிப்பார்த்தான். அப்பனுக்கு சீக்கு பார்க்கவே அம்மாவின் சத்துணவு ஆயா சம்பளம் சரியாய்ப் போய்விடுகிறது. போதாக் குறைக்கு மன வளர்ச்சி குன்றிய தங்கச்சி சனியனுக்கு வேறு அவ்வப்போது தண்டச் செலவு. எனவே, வீட்டில் பணம் கிடைக்க ‘நோ சான்ஸ்’ என்று மனசு எதார்த்தத்தை உணர்த்தியது.

வசுமதிக்கும் ஒரே டென்ஷன்தான். ‘இனிமேல் இந்த ரகுப் பயலை நம்பிப் பயனில்லை. அடுத்த தடவை லவ் பண்ணும்போது கொஞ்சமாச்சும் பசையுள்ளவனாப் பாத்துத்தான் லவ் பண்ணணும். இதுவரைக்கும் ஒரு தடவை கூட நம்ம ஆளு படத்தை மொத நாள் மிஸ் பண்ணியதில்லையே! அவருக்கு ரத்தக் கையெழுத்துப்போட்டு எத்தனை லெட்டர் போட்டிருக்கோம்! ஒரு தடவை ‘பாசம் வளர்க’ அப்படின்னு எழுதி, போட்டோ கூட அனுப்பிச்சிருக்காரே! மொத நாள் தலைவர் படம் பாக்கக்கூட கூட்டிக்கிட்டுப் போக முடியாதவனெல்லாம் ஒரு லவ்வரா?’

பலவிதமாக யோசித்தபடி இருந்தவளுக்கு சட்டென்று கோபியின் ஞாபகம் வந்தது.வசுமதி வேலை பார்க்கும் எஸ்டிடி பூத்துக்குப் பக்கத்தில்தான் கோபி லேத் பட்டறை வைத்திருக்கிறான். செல்போன் ரீசார்ஜ் பண்ணுகிற சாக்கில் அடிக்கடி வசுமதி வேலைபார்க்கும் கடைக்கு வருவான்.

ஆள் பார்க்க ரொம்ப சுமார் ரகம்தான். எப்போதும் லேசான சாராய வாடை வேறு. ஆனால், நல்ல வசதியான பார்ட்டி. மோதிரமும் மைனர் செயினுமாக பந்தாவாய் இருப்பான். வசுமதியைப் பார்த்து அசட்டுத்தனமாய் இளிப்பது அவன் வழக்கம். ரீசார்ஜுக்கு பணம் தருகிற சாக்கில் அவ்வப்போது இலேசாக வசுமதியின் கையை நெருடுவான்.

ஒருதடவை கொஞ்சம் போதை அதிகம் போல… வாய் விட்டே கேட்டுவிட்டான். “காலைல பத்து மணியிலிருந்து பன்னெண்டு மணிவரைக்கும் ஒர்க்‌ஷாப்புல ஒருத்தரும் இருக்கமாட்டாங்க. வர்ரதுனா வா. செலவுக்கும் எதுனா வாங்கிக்க!” என்றான்.

வசுமதிக்கு வந்ததே ஆத்திரம்! கோபத்துக்குக் காரணம் கோபி ‘கூப்பிட்டது’ மட்டுமல்ல. அவன் வசுமதிக்குப் பிடிக்காத நடிகனின் தீவிர விசிறி என்பதும்தான்!கோபியைக் கடுமையாகத் திட்டிவிட்டாள். இப்போது வசுமதியின் மனம் ஊசலாடியது. மணியைப் பார்த்தாள். சரியாகப் பதினொன்று. “அக்கா! கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. இந்தா வந்துடறேன்…” என்று பக்கத்து பெட்டிக் கடை பாலாமணியிடம் கடை பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைத்து விட்டு கோபியின் ஒர்க்‌ஷாப்புக்குள் நுழைந்தாள்.

மெகா குழப்பத்துடன் தன் வீட்டுப் பக்கம் ஒதுங்கினான் ரகு. சாதாரணமாகவே இருண்டிருக்கும் முகம் மேலும் இருட்டுக் கட்டியபடி அவன் அம்மா பொன்னுத்தாய் ரகுவின் அருகில் வந்தாள்.“அப்பா ரகுராமா! உங்கொப்பனுக்கு ரொம்ப ஒடம்பு முடியாமப்போச்சுடா. எதிர்வீட்டு சேகர்தான் பெரியாஸ்பத்திரியில சேர்க்கறதுக்கு ஒத்தாசை பண்ணுச்சு. ரத்தம் குடுக்கோணுமாம். கூடவே மருந்தும் வேற வாங்கியாரச் சொல்லி சீட்டு குடுத்திருக்காங்க. பெரிய மனசு பண்ணி வாங்கிவாய்யா சாமி.

நானே போயிருப்பேன். நூத்தம்பது ரூவாய அஞ்சு வட்டிக்கு வாங்கியாரதுக்கு இவ்வளவு நேரமாயிருச்சு. இந்தச் சனியனுக்கு வேற சோறூட்டணுமே. அதுக்காகத்தான் அந்த மனுசனை ஆஸ்பத்திரியிலயே உட்டுட்டு ஓடியாந்தேன்…”

இறைஞ்சிய அம்மாவிடம் ஆர்வத்தைக் காட்டாமல் பணத்தை வாங்கிக்கொண்டு மன்றத்தை நோக்கி நடையைக் கட்டினான் ரகு.

மன்றப் பொருளாளர் முருகேசன் வாசலிலேயே இருந்தார். “உனக்கு நல்ல லக்குடா ரகு. ரெண்டு டிக்கெட்தான் இருக்கு. இதுக்கும் எத்தனை போட்டி தெரியுமா? நூத்திருவது ரூவா டிக்கட் இன்னைக்கு இருநூத்தம்பது ரூவாய்க்கு விக்கிது. நம்ம பிள்ளைங்களுக்காக நூத்தம்பது ரூவாய்க்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்…” என்று பணத்தை வாங்கிக்கொண்டு மதிய ஷோவுக்கான டிக்கெட்டைக் கொடுத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ்ணா!” என்று டிக்கெட்டை வாங்கிக் கொண்டான் ரகு.இன்னும் ஷோவுக்கு மூன்று மணி நேரம் இருக்கிறதே. பசி வேறு பயங்கரமாக எடுத்தது. வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ‘அம்மா நிச்சயம் ஏதாவது பொங்கி வச்சிருக்கும்’ என்ற நினைப்புடன் வீட்டை நோக்கி மெல்ல நடந்தான்.

வீடு இருக்கும் சந்தின் முனையில் திரும்பும்போதே வீட்டுக்கு முன்னால் கூடியிருக்கும் சிறிய கூட்டத்தைப் பார்த்தான் ரகு.

அருக்காணி சித்தி பெருங் குரலெடுத்து, “மச்சான் மச்சான்…” என்று அரற்றியபடியே தலைவிரிகோலமாய் எதிர் முனையில் ஓடிவருவதைப் பார்த்தவனுக்கு விஷயம் ஓரளவுக்குப் புரிந்துவிட்டது.

மனசு ‘திக்’ என்றது. ‘ஐயோ! இப்படி ஆயிருச்சே! இப்ப வீட்டுக்குப் போனா அவ்வளவுதான்! தலைவர் படத்தை இன்னிக்குப் பார்க்க முடியாது…’ மனசுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.நைசாகப் பின்வாங்கி, விறுவிறுவென பக்கத்தில் இருந்த இன்னொரு சந்தில் நுழைந்து, தியேட்டரை நோக்கி நடையைக் கட்டினான்.

தூரத்தில் வசுமதி வேக வேகமாக வருவது தெரிந்தது. அவள் கையிலும் ஒரு டிக்கட். இருவரும் அவசர அவசரமாய்த் தியேட்டரை நெருங்கினார்கள்.

வாசலில் நேற்று அவன் கட்டிய தலைவர் படத்தின் பேனர் கம்பீரமாகக் காட்சி அளித்தது.

– பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *