ரங்கசாமி வீட்டுக்கு வந்த கார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 2,030 
 
 

இந்த கதையின் கரு ந.பிச்சமூர்த்தின் சிறுகதையில் கிடைத்தது.

ராசப்பன் கார் தரகர் கன்னையனை பிடித்து ஒரு அம்பாசடர் காரை குறைந்த விலைக்கு பேசி முடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். திண்ணையில் உட்கார்ந்திரூந்த ரங்கசாமி கவுண்டருக்கு கார் நிரம்ப பிடித்திருந்தது. இருந்தாலும் தன்னை ஒரு வார்த்தை கேட்காமல் இவன் மட்டும் எப்படி வாங்கி வரலாம்?

எலேய் இந்த வூட்டுக்கு நான் பெரியவனா நீ பெரியவனா? கேள்வி கேட்ட ரங்கசாமி கவுண்டருக்கு வயது எண்பது பக்கம் இருக்கும்.

ராசப்பன் ஏனுங்க ஐயா இப்படி கேக்கறீங்க? பதவிசாய் கேட்டான்.

பின்னே என்னடா என் கிட்டே ஒரு வார்த்தை சொன்னியாடா? பிளசரு வாங்கனும்னு.

நீங்கதான பேத்தியும், பேரனும் ஸ்கூலுக்கு போறதுக்கு வண்டி ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னுன்னு சொன்னீங்க?.

ஆமடா சொன்னேன், அதுக்கோசரம் இந்த பிளசர வாங்கிட்டு வந்துடவியா?.

ஐயா இது பிளசரு இல்லீங்க அம்பாசடரு.

இருக்கட்டும்டா, இப்ப அதுக்கென்ன? உனக்கெல்லாம் காசு கொழுப்பு அதிகமாயிடுச்சுடோ? ஆரு வூட்டு பணமுன்னு நினைச்சே? உன்னைய உங்கப்பனும், ஆத்தாளும் வுட்டுட்டு மேல போய் சேர்ந்தப்பவே உன்னை எடுத்து வச்சு வளத்துனம் பாரு என்னைய சொல்லணும்.

ராசப்பன் ஐயா கோச்சுக்காதீங்க, நம்ம கன்னையன் நல்ல வண்டின்னு சொன்னான், அதான் வாங்கிட்டேன். பாதி விலை தான் சொன்னான், அதான் ஓட்டிட்டு வந்துட்டேன்.

அவனெங்கடா கன்னையன்? ஐயா பக்கத்துலதான் நிக்கறேனுங்க.

ஏண்டா இவன் கேட்டா உடனே கொண்டு வந்துடுவியா? பணம் யாரு கொடுப்பான், அவன் அப்பனா கொடுப்பான், எனக்கு இந்த வண்டி வேணடாமெடாவ்

ஐயா நானு சொன்னேனுங்க, இவங்கிட்ட, ஐயன் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு வாங்கிக்கன்னு, இவன் ஐயன் சொல்லித்தான் வாங்குறேன்னு சொன்னானுங்க,

இரண்டு பேரும் என் முன்னாடி நிக்காதிங்க டேய், இடுப்பில் இருந்த பையை துழாவி வெத்தலையை எடுத்தவர் அதன் காம்பை கிள்ளி விட்டு பின்புறம் பக்கத்தில் இருந்த சுண்ணாம்மை தடவ ஆரம்பித்தார்.

ஐயன் இப்பொழுது மகா கோபமாய் இருக்கிறார் என்பது அனுபவமாய் தெரிந்து வைத்திருந்த ராசப்பன், சம்சாரம் மயிலாத்தாளை தேடி கன்னையனையும் கூட்டிக் கொண்டு போனான்.

இந்த வூட்டுல மனுசனுக்கு ஒரு மருவாதி கிடையாது, ஆரு வூட்டு பணம்னு நினைச்சுப்புட்டான், பத்து ஏக்கரா வச்சிருக்கற எனக்கே இம்புட்டு மரியாதையத்தான் கொடுக்கறான்னா, இவனை வச்சுக்கறேன்.

மெல்ல எழுந்து தடியை ஊன்றி பக்கத்து காசியப்ப கவுண்டன் வூட்டுக்கு நடந்தார். பால்ய கூட்டாளி, அவரும் திண்ணையை தேய்த்து கொண்டிருப்பார்., அவரிடம் போய் உட்கார்ந்து முணு முணுத்தார் ரங்கசாமி கவுண்டர்

வர வர வூட்டுல் மரியாதையே காண மாட்டேங்குது, மெல்லிய குரலில் புலம்பினார் ரங்கசாமி கவுண்டர். காசியப்பனுக்கு காது மந்தமென்றாலும், ரங்கசாமி காட்டின் மீது எப்பொழுதும் ஒரு கண்ணுதான், அதனால் இவரின் புலம்பல் அவருக்கு ஊக்கம் கொடுக்க, பேச்சை வளர்த்த ஆரம்பித்தார்.

என்ன ஆச்சு? எடுத்து வளர்த்தவன் மூக்கை உடைச்சுட்டானா? அதான் எப்பவும் சொல்றேன் கேக்க மாட்டெங்கறே? முணங்குவது போல ரங்கசாமியிடம் நூல் விட்டார்.

அதுவும் சரிதான், பத்து ஏக்கரா எனக்கு இருக்கப்பவே இந்த ஆட்டம் போடுறாங்க,

அவன் கிடக்கான், நீ மட்டும் சரீ ன்னு சொல்லு, சம்முனு அந்த பத்து ஏக்கராவும் என் பேரனுக்கு வித்துப்புடு, சும்மா கட்டு கட்டா பணத்தை வாங்கி முடிச்சு போட்டு வச்சுக்க, ஒரு பையன் உங்கிட்ட வருவானா?

அதுவும் சரிதான், நாளைக்கு சின்னையனை வர சொல்லோனும், பத்திரத்தை மாத்தறதுக்கு, மெல்லிய குரலில் சொன்னாலும் இது மட்டும் பாம்புக் காதாய் காசியப்ப கவுண்டன் காதில் விழுந்து ஒரு புளங்காகிதத்தை கொடுத்தது

ஏன் மாமா இங்கன வந்து உக்காந்துட்டா சரியா போச்சா? சோறு உங்காண்டமா? மயிலாத்தாளின் குரல்.

மயிலாத்தாளை கண்டவுடன் ரங்கசாமி கவுண்டரின் வயிறு பசியெடுக்க ஆரம்பித்து விட்டது. அவளிடம் எப்பொழுதுமே இவருக்கு ஒரு வாஞ்சை. அதுவும் காலையில் எழுந்தவுடன் சுட சுட வெல்லம் போட்ட காப்பி, எட்டு மணிக்கு அவள் இவருக்காக கெட்டி தயிருடன் தரும் ராகி களி, அரிசி உப்புமா, மதியம் சுட சுட ரசம் சோறு, இராத்திரிக்கு சுட்டு தரும் ராகி அடை, கோதுமை தோசை, வாரத்துக்கு மூணு நாள் கறி குழம்பு, வகை வகையாய். சம்சாரம் காலத்தில் கூட இவர் அனுபவித்து சாப்பிட்டதில்லை. ராசப்பன் மயிலாத்தாளை கட்டி வந்து இந்த பதினைந்து வருடங்கள், அவருக்கு சாப்பாட்டுலகில் ஒரு புரட்சியையே காட்டி விட்டது.

பதவிசாய் எழுந்து மயிலாத்தாளின் பின்புறம் ஆட்டுக்குட்டியாய் சென்றார். இது தெரிந்துதான் ராசப்பனும், கன்னையனும் மயிலாத்தாளை இங்கு அனுப்பி வைத்தனர்.

அடங் கோபம் வந்துடுச்சுன்னு அடுத்த வூட்டுல வுக்காந்து ஞாயம் பேசுனா, அவங்களுக்கு நம்ம வூட்டு விசயம் போயி பலதும் முடிச்சுப் போடுவாங்க, இது தெரியாம இந்த மாமன் அங்க போயி பேசிகிட்டு இருக்கீங்க, சொல்லிக்கொண்டே சுட சுட சாதத்தை வட்டலில் போட்டவள், சூடாய் கறிக்குழமபை ஊற்றினாள். கோபமாய் இருந்த ஐயனின் முகம் இப்பொழுது கறிக் குழம்புக்கு மயங்கி சுருண்டு கிடந்தது.

இந்தா சொல்லிப்புட்டேன் மாமாவுக்கு புடிக்காத விசயத்தை இந்த வூட்டுல ஆரும் செய்யப்படாது சொல்லிப்புட்டேன், நாளைக்கே இந்த சனியம் புடிச்ச காரை கன்னையன் கிட்டே கொடுத்துட்டு, உன் சங்காத்தமே வேணாமுன்னு சொல்லிட்டு வாரீங்க, சரியா? மனைவியின் சொல்லுக்கு கிழவன் எதிரில் ஒடுங்கி உட்கார்ந்திருந்த ராசப்பன் பூம் பூம் கணக்காய் தலையாட்டினான்.

மறு நாள் திண்ணையில் உட்கார்ந்து வெத்தலை போட்டுக்கொண்டிருந்த ரங்கசாமி கவுண்டனுக்கு எதிரில் யாரோ நிற்பது போல தட்டுப்பட கண்ணை சுருக்கி பார்த்தார், கன்னையன் நின்று கொண்டிருந்தான்.

நான் காரை கொண்டு போறேனுங்க, ராசப்பன் இதை எடுத்துட்டு போக சொல்லிட்டானுங்க, காரை நோக்கி நடக்க ஆரம்பித்த அவனை

ஏலேய் இங்க யாரு பெரிய மனுசன் இந்த வூட்டுல? கிழவனாரின் கம்பீரக் குரல், நான் தாண்டா முடிவு பண்ணொணும், அவனாருடா சொல்றது இதை இந்த

வூட்டுல இருந்து எடுத்துட்டு போக சொல்ல. நாந்தாண்டா முடிவு பண்ணோனும் இதை கொடுக்கறதா வேண்டாமான்னுட்டு.,

போ, போய் பணம் எம்புட்டுன்னு சொல்லி மயிலாத்தாகிட்டே கேட்டு வாங்கிக்க..

கார் தரகர் கன்னையன் சந்தோசமயாய் ராசப்பனிடம் வர, ராசப்பனிடம் மயிலாத்தாள் பணத்தை எண்ணி கொடுத்தாள். ராசப்பன் அதை கன்னையனிடம் கொடுத்தான்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *