யூனிபோர்ம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,561 
 
 

யோதிராணி வீட்டு வேலை செய்பவள். எட்டு வருட‌மாக‌ ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவள் வேலை செய்யும் வீட்டிலே கணவன், மனைவி ரெண்டு பேரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். என்ன வேலை என்றெல்லாம் புரிந்துகொள்ளுமளவுக்கு யோதிராணிக்கு விளக்கமில்லை. வீட்டுகாரம்மாவுக்கு ரெண்டு பிள்ளைகள். பொம்பிளைப் பிள்ளை, லண்டன் கொலேஜ் என்ற இன்டெர்னெஷனல் ஸ்கூலில படிக்கிறாள். ரெண்டாவது பையனுக்கு இப்போதுதான் மூன்று வயது.

யோதிராணி காலையிலேயே வேலைக்குப்போய், சமைத்து வீட்டுக்காரம்மாவுக்கும் அவள் கணவனுக்கும் பார்சல் கட்டிக் கொடுத்து அனுப்பிவிட்டு, அவர்கள் வேலை விட்டு வரும் வரை ரெண்டாவது மகனைப் பார்த்துக்கொள்ளுவாள். இடையில் பையன் நித்திரை கொள்ளும் நேரம் பார்த்து வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் போன்றவற்றைக் கவனித்துக்கொள்ளுவாள்.

யோதிராணி வாங்கும் பத்தாயிரம் ரூபாயிலேயே அவள் குடும்பம் ஓடுகிறது. புருஷன் ஆட்டோ ஓட்டும் ஒரு குடிகாரன். இந்தக் கதைக்கு அவனைப் பற்றிய இந்த அறிமுகமே போதுமானது.

யோதிராணிக்கு மூன்று பிள்ளைகள். பொம்பிளைப் பிள்ளைக்கு எஜமானியம்மாவின் மகளின் வயதுதான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வேலைக்கு கொஞ்சம் நேரத்துக்கே போய்விட்டாள் யோதிராணி. அலுமாரியில் இருந்து உடுப்பெல்லாம் அடுக்கும் வேலை இருந்தது.
வீட்டுக்காரம்மா அலுமாரி அடுக்கும் நாள், யோதிராணிக்கு கிட்டத்தட்ட ஒரு திருவிழாதான்.

அந்தப் பெரிய அலுமாரியில் இருக்கும் அத்தனை உடுப்பையும் வெளியே எடுத்து, அதிலே தேவை இல்லாதது எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு மிச்சம் இருப்பவற்றை அடுக்கி வைக்க வேண்டும். அதுக்கு எப்படியும் மூன்று மணித்தியாலமாவது எடுக்கும்.
ஒதுக்குபவை எல்லாம் யோதிராணிக்குத்தான்.

வீட்டுக்காரியம்மா ஒரு சென்டிமென்ட் ஆள். பிள்ளைகளின் உடுப்பை எறியவே மாட்டார். பிள்ளைகளின் பழைய உடுப்பை வைக்க என்றே தனியே ஒரு அலுமாரி வைத்திருக்கின்றார். அந்த அலுமாரியில் இருக்கும் உடுப்பைப் பார்க்கும் போதெல்லாம் யோதிராணிக்கு ஏக்கம் வரும்.

‘எவ்வள‌வு உடுப்பு அநியாயமாகக் கிடக்கு? என்ட மகளுக்குக் கொடுத்தா எவ்வள‌வு ஆசையாப் போடுவாள்?’ நினைப்பதோடு சரி, ஒருநாளும் வீட்டுக்காரம்மா கொடுக்காமல் ஒரு கைக்குட்டையைக்கூட எடுக்கமாட்டாள்.

அன்று வீட்டுக்காரியம்மா கழித்துவிட்ட உடுப்பு எல்லாத்தையும் ஒரு காட்போர்ட் பெட்டியில் போட்டு எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.

பக்கத்து வீட்டு வேணியிடம் கொண்டு சென்றவற்றில் சிலவற்றைப் பேரம் பேசி முந்நூற்றுச் சொச்சத்திற்கு விற்றபின் எஞ்சியவற்றை எடுத்து அடுக்கத் தொடங்கினாள்.

அதிர்ஸ்டவசமாக‌ வீட்டுக்காரியம்மா தன் பிள்ளையின் ஸ்கூல் யூனிபோர்ம் ஒன்றையும் கழித்திருந்தாள். ஒரு அக்குள் பகுதியில் சின்னக் கிழிசல் இருந்தது.

‘ஐய் அச்சாச் சட்டை’ எனத் துள்ளிக்குதித்தாள் மகள் அமுதா. இன்டெர்னெஷனல் ஸ்கூல் யூனிஃபோர்ம் என்ற படியால் நீலமும் வெள்ளையும் கலந்து பார்ப்பதற்கு யூனிபோர்ம் போலவே தெரியாது. நெஞ்சுப் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும் லண்டன் கொலேஜ் என அச்சடிக்கப்பட்டிருக்கும்.

“சரி சரி அதைக் கொண்டா, தைத்து வைத்தால் ராணியின்ட மகளின்ட சாமத்திய வீட்டுக்குப் போட்டுட்டுப்போகலாம்”

முதல் நாளே லீவு சொல்லியிருந்தாள். மகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. ராணி எனும் பள்ளிக்காலத் தோழியின் மகளின் சாமத்திய வீடு.
அந்த யூனிபோர்மில் மகளைப் பார்த்த யோதிராணிக்கு அவள் பணக்கார வீட்டுப் பிள்ளை போலவே தெரிந்தாள்.

தானும் வீட்டுக்காரியம்மா கழித்துவிட்ட சாரிக்குச் சம்பந்தமேயில்லாத ஒரு பழைய பிளவுசைப் போட்டுக்கொண்டு வெளிக்கிட்டாள்.

அன்று கொஞ்சம் நல்ல உடுப்பு போட்டிருக்கின்றோம் என்ற திருப்தியில் தனக்கும், மகளுக்கும் கொஞ்சம் அதிகமாகவே மேக்கப் போட்டுக்கொண்டாள்.
அடித்தட்டு மக்கள் அறிந்த மேக்கப் என்பது, அளவுக்கதிகமாகப் பவுடர் பூசுவதும், போடுகின்ற ஆடைக்கு சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் வைத்திருக்கின்ற‌ ஒரே ஒரு கலர் லிப் ஸ்டிக்கைப் பூசிக்கொள்ளுவதும்தானே.

ஒரு சிறிய சுப்பர் மார்க்கெட்டில் ஏதாவது கிப்ட் வாங்குவம் எனப் போனாள். கீழ்த் தட்டில் சின்னப் பிள்ளைகளுக்கான விளையாட்டுச் சாமான் இருந்தது, மகளை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு ரெண்டாவது மாடியில் இருக்கும் வீட்டுச் சாமான் பகுதிக்கு ஒரு போய் இருநூறு முன்னூறு ரூபாய்க்கு ஏதாவது குத்து விளக்குக் கிடைக்குமா என்று தேடிக்கொன்டிருந்தாள்.

தன் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத விளையாட்டுப்பொருட்களை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா. ரோஸ் கலர் கரடிப்பொம்மை அவளைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. அதைத் தொட்டுப்பார்க்கவேண்டுமென ஆசை உந்தியது. ஆசையாகத் தடவிப் பார்த்தாள்.

திடீரென ஒரு செக்யூரிட்டி உள்ளே ஓடி வந்தான். கடை மனேஜர் அவளிடம் ” எந்தப் பள்ளியில் படிக்கிறாய்?’

“……… அரசாங்கப் பள்ளியில அங்கிள்”

“ஓ அப்ப லண்டன் கொலிஜ் யூனிபோர்மைப் போட்டுக்கொண்டு பணகார வீட்டுப்பிள்ளைகள் மாதிரி வந்து களவெடுக்கும் கூட்டமா நீ?”

“போலிஸூக்கு கோல் பண்னுங்க சேர் இதெல்லாம் பொலிஸில் பிடித்துக்கொடுத்தால்தான் இதுகளை அனுப்பி களவெடுக்கச் சொல்லும் ஆட்களைப் பிடிக்கலாம்” சொல்லியபடி அமுதாவைத் தர தரவென இழுத்துப்போனான் செக்கியூரிட்டி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *