யார் அது அழுவது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 8,503 
 
 

பெங்களூரின் நவம்பர் மாதப் பின்னிரவுக் குளிர் சிலிர்க்கும் என் வீட்டுப் பால்கனியில் நின்று கதகதப்பாக சிகரெட் பிடிக்கும்போதுதான் கேட்டது அந்த ஒலி. ஒரு பெண் அழும் சத்தம். சின்னதாக விசும்பல், கொஞ்சம் மௌனம், பின்னர் என்னமோ சொல்லி அரற்றல், மறுபடி அழுகை. பின்னிரவின் மௌனத்தில் அந்தச் சத்தம் என்னை ஆட்கொண்டு அதுவரை நிச்சலனமாக இருந்த உணர்வில் கரைந்து மன வருத்தத்தை அதிகரித்தது.

பால்கனியில் நின்று பின் இரவின் நிசப்தத்தில் சிகரெட் புகைக்கும் 10 நிமிடங்கள்தான் குடும்பம், அலுவலகம், சமூகம் என்று நாள் முழுக்க மிதிபடும் உணர்வில் இருந்து விடுபட்டு, நான் என்னுடன் மட்டும் செலவிட விருப்பத்துடன் எதிர்பார்க்கும் நேரம். மதியம் மூன்றில் இருந்து இரவு இரண்டு மணி வரை என்கிற வெளிநாட்டவர்களின் அட்ட வணைக்கு அடிபணிந்த வேலை முடிந்து திரும்பி வரும் பின்னிரவில் எழும் பசி அடங்க ஏதாவது சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. வயிறு நிறைந்திருந்து, ஆசுவாசம் தரும் சிகரெட் புகைத்து, அலுவலகச் சுமையை மூழ்கடிக்கும் பின்னிரவு எம்.டி.வி நடனமும் பார்த்தால்தான் தூக்கம் வருகிறது.
”ராத்திரி ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் சாப்பிடாதீங்க. சுகர் ஏறிடும்” என்று அடிக்கடி மனைவியும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்யும் மருத்துவரும் சொன்னாலும் தவிர்க்க முடிவது இல்லை அகால வேளைச் சாப்பாட்டை. வாழ்க்கைக்குச் சம்பாத்தியம், வியாதிக்கு மருந்து என்றாகிப்போன வாழ்க்கை. வியாதிகள் பீடிக்கும்முன் வேண்டிய அளவு சம்பாதிக்க வேண் டிய வேகமான வாழ்க்கை.

“உங்க டீம்ல இருந்து ராஜினாமா பண்ண நாலு பேரோட வேக்கன்ஸியை நிரப்ப வேணாம்னு உத்தரவு. பிசினஸ் டல்லடிக்கறதால புதுசா ஆள் எடுப்பதைத் தற்காலிகமா நிறுத்தியிருக்கு. இருக்கிறவங்களுக்கு வேலையைப் பிரிச்சுக் குடுத்துடுங்க” – கண்ணைக்கூடப் பார்க்காமல் உயரதிகாரி சொல்கிறார். போனஸ், சம்பள உயர்வு நின்றுபோய், 25 சதவிகிதம் சம்பளம் வெட்டியது போதாது என்று இன்னும் கொஞ்சம் பாரம் ஏற்றும் தயவுதாட்சண்யம் இல்லாத முதலாளிகள்.

மறுபடி அழுகைச் சத்தம். தலையை நீட்டி உற்று நோக்குகிறேன். 25 மாடிகள் இருக்கும் ஆராவாரமான குடியிருப்புக் கட்டடம். எதிரில், பக்கவாட்டில் என்று மூன்று பக்கங்களிலும் நீளும் வரிசை வரிசைய£ன வீடுகள் நிறைய இருளில் அமிழ்ந்திருந்தன. எஞ்சி இருந்த வீடுகளில் அறை விளக்கும், தொலைக்காட்சியில் இருந்து சிதறும் வெளிச்சமும் வண்ணத் திட்டுகளாகத் தெரிந்தன. சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று கவனிக்கிறேன். என் 12-வது மாடி வீட்டுக்கு மிக அருகில் இருந்துதான் அந்த ஒலி எழுகிறது. மேல் தளத்திலோ பக்கவாட்டில் நீளும் வீடுகளில் ஒன்றில் இருந்தோதான் அந்தச் சத்தம்.

சிகரெட் நெருப்பு கைவிரல்களுக்கு அருகில் வந்த வெப்பம் சுட, பால்கனி ஓரமாகவைத்திருக்கும் மண் ஜாடியில் அதனை அணைத்துப் போடுகிறேன். உள்ளே சென்று மூன்றாவது படுக்கை அறைத் தொலைக்காட்சியை இயக்கி 10 விநாடிகளுக்கு ஒன்றாக ஒவ்வொரு சேனலாகத் தாவுகிறேன். எந்த 10 விநாடிகளில் என் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியை இறைத்துக்கொண்டு இருக்கிறதோ, அந்த சேனலுடன் ஐக்கியமாகிவிடுவேன். இடையைச் சுழற்றிச் சுழற்றி ஆடும் யுவதிகளோ, சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுபவனையோ, எதிரிகளைச் சத்தம் வரக் கழுத்தை முறித்தோ, இடுப்பை ஒடித்தோ கொல்லும் ஆஜானுபாகுவனோ வந்தால் நின்று கவனிக்கும்படி என் தொலைக்காட்சி ரசனை மாறிப்போய்விட்டது. இலக்கே இல்லாமல் கிடைத்ததைப் பற்றிக்கொண்டு அதையே ரசிக்கும் நம் வாழ்க்கைபோல.

சேனல் மாற்றும்போது கிடைத்த கொஞ்ச அமைதியில் மறுபடி அந்த அழுகை ஒலி என்னைக் கலைக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் என் உத்வேகத்தை அந்த அழுகை ஒலி சிதைத்துவிடுகிறது. ஓசையை மட்டுப்படுத்தி வெறும் காட்சியில் கண்ணும், அந்த அழுகையில் காதுமாகக் காத்திருக்கிறேன். ஏன் அழுகிறாள் அந்தப் பெண்? அதுவும் இந்தப் பின்னிரவில்? ஊரில் இருந்து ஏதும் கெட்ட செய்தி வந்திருக்குமா? தனித்து வாழும் பெற்றோரோ, இல்லை வெளிதேசத்தில் வாழும் நெருங்கிய குடும்பத்தாரோ இறந்துபோயிருப்பார்களோ? இந்த வீட்டிலேயே யாராவது இறந்துபோய்விட்டார்களா? காதல் தோல்வியா? தனிமையில் கிடந்து உழல்பவளா? குடிகாரக் கணவன்? அழத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கின்றன!

மனைவியை எழுப்பிக் கேட்க வேண்டும்போல இருக்கிறது. அவள் படுக்கை அறைக் கதவு வழக்கம்போல மூடி இருக்கிறது. என் பின்னிரவு வருகையினால் எழும் தொடர் அரவம் கேட்டு அவள் உறக்கம் கலைந்து போகாமல் இருக்க, எப்போதும் தன் சயன அறையை மூடியேவைத்திருப்பாள். பலத்த காற்றில் அடித்துக்கொள்ளும் வாசல் கதவின் ஓசையோ, நான் சாப்பிட்டுவிட்டு சமையலறையில் வைக்கும்போது தவறி விழும் பாத்திரங்களின் சத்தமோ கேட்டு அவள் திடுக்கிட்டு பலமுறை தூக்கம்இழந்து இருக்கிறாள். பின்னிரவில் உறக்கம் கலைந்து எழுந்தால், ஐந்து மணிக்குத் துவங்கும் சமையல்,குளியல், பூஜை, ஒன்பதரைக்கு இருக்க வேண்டிய அவள் பணி, வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்குப் பாடம் என்று நீளும் அவளின் அடுத்த நாள் தலைவலியுடன் ஆரம்பிக்கிறது என்பதால் இந்தக் கதவு அடைப்பு. நான் தூங்கப்போகும்போது படுக்கை அதிராமல் மிகுந்த கவனத்துடன் மென்மையாகப் படுக்கையில் படர்ந்துபோர் வையை இழுத்துப் போர்த்திக்கொள்வேன். இருந்தும், என் இருமலோ, முனகலோ, சிகரெட் நாற்றமோ கலைத்துவிட, சலிப்புடன் அவள் திரும்பிப் படுத்துக்கொள்வாள். அநேகசமயங் களில் நான் அவளைத் தொந்தரவு செய்யலாகாது என்று இன்னொரு அறைக்குப் போய் படுத்துக் கொள்வது… என இரவுகளின் தனிமை எங்கள் இரு வருக்கும் பழகிவிட்டது. மூன்று படுக்கைஅறைகள் கொண்ட இந்தப் பெரிய வீட்டை வாங்கியது வீணாகவில்லை.

மூன்றாவது படுக்கை அறைக்குப் போட்டியாக இருந்த என் பெற்றோர், என் மனைவியுடன் சரி வராமல், எங்களைவிட முக்கியமான பதவியிலும், அதற்கேற்ற மனஅழுத்தத்திலும் இருக்கும் என் அண்ணன் அண்ணியுடன் மும்பையிலும் இருக்கப் பிடிக்காமல், அவர்களின் சம வயது அந்நியர்களுடன் இருக்க ஆசைப்பட்டு, கல்பாத்தியில் ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்கள், ஒரு வருடமாக. நல்ல பத்தியச் சமையல், அருகிலேயே கோயில் குளம், உபன்யாசங்கள், நிறைய பேச்சுத் துணை, பணிவிடை செய்ய ஆட்கள் என்று சௌகர்யமாகவும்சந்தோஷ மாகவும் இருப்பதாகச் சொல்லி, அதெல்லாம் எங்கள் வீட்டில் கிடைக்காததை உணர்த்தி அவ்வப் போது எனக்கு போன் செய்வார்கள்.

வீட்டுப் பொறுப்போடு, அலுவலகச் சுமையையும் சுமக்க வேண்டிய அவசியத்தை என் மனைவி வலிய வந்து உருவாக்கி இருந்தாள். வயதான பெற் றோர், ஒரு முடமான தங்கை என அவள் சம்பளப் பணத்தை எதிர்பார்த்து மூன்று பேர் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் இல்லாவிட்டாலும் அவர்களும் இந்தக் குடும்பத்தின் நீட்சி. விவாகத் துக்கு என்னைத் தேர்ந்தெடுக்கும் போதே, தான் சம்பாதிப்பது தன்குடும் பத்தாருக்கு என்ற நிபந்தனை விதித்து இருந்தாள். அவள் அழகிலும் என் அவசரத்திலும் அப்போது பெருந்தன்மையோடு அதற்கு ஒப்புக்கொள்ள நான் தயங்கவில்லை. 12 வருடங்கள் தாண்டி, வேலையைத் தக்கவைத்துக்கொள்ளச் செய்யும் பிரயத்தனங்களும், சம்பாத்தியத்துக்காகச் செய்ய வேண்டிய அனுசரனைகளும் சலித்துப்போய், எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்து அவர்களைப் பராமரிப்பது எவ்வளவு கடினமான காரியம் என்று புரிந்துகொண்டபோது என் பெருந்தன்மை மீது இப்போது எனக்கே அவ்வப்போது லேசான கோபம் எழுவதுண்டு.

இரண்டாவது படுக்கை அறையை மென்மையாகத் திறந்து பார்க்கிறேன். என் இரண்டு குழந்தைகளும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். விளக்கைப் போட்டு அவர்கள் தூங்குவதை நின்று பார்க்கிறேன். சத்தம் எழுந்தாலோ, விளக்கு எரிந்தாலோ நித்திரை கலையும்படியான மனச் சுமையால் விளையும் வளர்ந்தவர்களின் உபாதைகள் இல்லாதவர்கள். அவர்கள் உறங்குவதைப் பார்க்கவே அழகாக இருக்கிறது. போர்வையை இழுத்து அவர்கள் கழுத்து வரை மூடுகிறேன். தலைமுடியைக் கோதிவிட்டுக் கன்னத்தை வருடுகிறேன். அவர்களின் ஸ்பரிசம் மென்மையான ஆனால், வருத்தம் சூழ்ந்த உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. பின்னிரவில் இப்படி அவர்கள் தூங்குகையில் பார்க்கிறதுகூட, ராத்திரி இரண்டு மணிக்குச் சாப்பிடும், புகை பிடிக்கும், தொலைக்காட்சி பார்க்கும் என் இதர தினசரி வழக்கங்களில் ஒன்றாகிவிட்டது. நான் எழுந்திருக்கும் முன் அவர்கள் பள்ளி சென்றுவிட்டுஅவர் கள் வீட்டுக்கு வரும் முன் நான் அலுவலகம் போகும் எங்கள் விநோத அட்டவணையில் ஞாயிறு, விடுமுறைகள் தவிர மற்ற நாட்களில் தொடர்ச்சியாக நான்கைந்து நாட்கள் அவர்களை என்னால் பார்க்கமுடிவது இல்லை.

அருமையான குழந்தைகள். பெற்றோரைஎதிர்பார்க்காமல் பணிப்பெண் சமைத்துவைப்பதைச் சாப்பிட்டு, பள்ளிவிட்டுத் திரும்பி வந்ததும் வீட்டுப்பாடம் செய்துவிட்டு, அவர்களே பீட்ஸா, நூடுல்ஸ், சாண்ட்விச் என்று சமைத்துச் சாப்பிடத் தெரிந்தவர்கள். நறுக்கிவைத்த மஞ்சள் பசைக் காகிதத்தில் சின்னச் சின்னதாக எனக்கும் என் மனைவிக்கும் அவர்கள் போகும் இடம், அவர்களின் ஃபுட்பால் போட்டிகள், நண்பர்கள் வீட்டு பார்ட்டி என்று தகவல்கள் எழுதி வீட்டில் அதற்கு என்று நியமிக்கப்பட்ட இடத்தில் ஒட்டி வைத்து, அலுவலகத்தில் மன்றாடும் எங்கள் இருவரிடமும் தேவைப்பட்டபோது மட்டும் பேசப் பழகியவர்கள்.

வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு கதவை மெள்ளச் சார்த்திவிட்டு லிஃப்ட்டில் கீழே வருகிறேன். கீழே இறங்கியவுடன் விரியும் தளத்தின் ஒரு பகுதியில் வீட்டு எண்ணுடன் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர்களின் பெயர்கள் பட்டியல் இருக்கிறது. நின்று பார்க்கிறேன். என் மாடியில் இருப்போர், அதன் மேல், அதன் கீழ் என்று பெயர்களைப் படிக்கிறேன். அந்தப் பெயர்களில் ஒன்றுகூட எனக்குப் பரிச்ச யம் இல்லை. அந்தக் குடியிருப்பில் இருந்த இரண்டு வருடங்களில் என் பக்கத்து, எதிர்த்த வீட்டுக்காரர்களில் ஒருவரிடமும் நட்பு பாராட்டியது இல்லை. அதற்கு என் அலுவலும், அதன் விநோத வேலைநேரங் களும் அனுமதிப்பது இல்லை. என்னைப்போல அகால வேளையில் அலுவலகம்விட்டு வருபவர்களை எதிர்கொள்ளும்போது, என்னைப்போலவே வெறுப்புற்றமன நிலையில் வரும் எதிராளியுடன் பேசி நட்புப் பாராட்ட உத்வேகம் ஒன்றும் இருப்பது இல்லை.

வெளியே வந்து என் கட்டடத்தின் முன் நின்று ஒவ்வொரு மாடியாக விரலால் எண்ணி என் வீட்டைக் கண்டுபிடிக்கிறேன். என் 12-வது மாடி முழுக்க என் வீட்டைத் தவிர இருளில் நிம்மதியாக இருக்கிறது. 13-ல் இரண்டு, 14-ல் ஒரு வீட்டில் என்று ஒன்றிரண்டு வீடுகளில் வெளிச்சம் தெரிகிறது. அந்த வீடுகளில் ஒன்றில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமா?

நுழைவாயிலில் இருக்கும் செக்யூரிட்டி ஆளை, ”ஆம்புலன்ஸோ, காரோ வந்ததா? இல்லை யாருக்காவது ஏதாவது நடந்ததா?” என்று விசாரிக்கிறேன். ”இல்லையே, ஏன் கேட்கிறீர்கள் சாப்?” என்கிறான் எழுந்து.

”எங்கிருந்தோ அழுகைச் சத்தம் கேட்கிறது. என் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் யாரோ அழுதுகொண்டு இருக்கிறார்கள்.”

அவன் என்னை அசாதாரணமாகப் பார்க்கிறான்.”புருஷன் பொண்டாட்டிச் சண்டை எதாவது ஆகியிருக்கும் சார்” என்கிறான் சாதாரணமாக. தம்பதியர் இருவருக்குள் மனஸ்தாபமானால், அது மனைவியின் அழுகையில் இறுதியாக முற்றுப்பெறும் என்ற தெளிவு அவன் அனுபவரீதியாகவோ, அல்லது அவன் பார்க்கும் எண்ணற்ற தமிழ் சினிமா மூலமாகவோ, அல்லது அதன் வழி வந்த டெலி சீரியல்கள் மூலமாக அவன் கற்றதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பெண் அழுவதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை என்கிற மாதிரி பதில் சொல்லிவிட்டு, தனக்கு நியமிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு குடியிருப்பைச் சுற்றி நடக்கிறேன். அதிகாலை உறக்கத்துக்குத் தயாராக உட் கார்ந்து உறைந்துபோன காவல்காரர்கள் என்னைப் பார்த்ததும் இயல்பாக எழுந்து நடக்கிறார்கள். அங்கேயும் இங்கேயுமாக விளக்குகள் எரிகின்றன. என்னைப்போல நிறையப் பேர் உறக்கம் பிடிக்காமல் என்னவாவது செய்துகொண்டு இருப்பது எனக்குக் கொஞ்சமாக மனத் திருப்தியை அளிக்கிறது. லிஃப்ட்டில் ஏறி இரண்டு மாடிகள் மேல் சென்று கொஞ்சம் நடக்கிறேன். கீழே ஒரு தளம் வந்து மறுபடி கேட்டுவிட்டு என் மாடிக்கு வந்து கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறேன். பால்கனியில் நின்று கொஞ்ச நேரம் கூர்ந்து கேட்கிறேன். அழுகை ஒலி நின்றுவிட்டதுபோல் இருந்தது. அழுது அழுது அந்தப் பெண் அடங்கியிருக்க வேண் டும் என்று தோன்றியது.

கதவை மூடிவிட்டு உள்ளே வந்து அன்று உட்கொள்ளவேண்டிய என் மாத்திரைகளை விழுங்குகிறேன். தூக்கம் சரியில்லாத என் வழக்கங்களால் அகால வேளைச் சாப்பாடு ஜீரணமாகி, முக் காமல் முனகாமல் வெளியேற வேண்டிய அவசியம் கருதி மருத்துவர் பரிந்துரைத்த மருந்தையும் தண்ணீரில் கரைத்துக் குடிக்கிறேன். அந்தக் கசப்பு போக, எனக்கு அனுமதிக்கப்படாத வாழைப் பழம் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, தோலை மறக்காமல் சமையலறைக் குப்பைத் தொட்டியில் போடுகிறேன். தொலைக்காட்சியை ஓசை அடங்கவைக்கிறேன். ஆடும் நடன நடிகர்களைப் பார்த்தபடியே தூங்கிப்போகிறேன்.

அழுகை ஒலி தொடர்கிறது. என் முன்னால் திரள் திரளாக ஜனங்கள் அழும் ஒரு குரலைத் தொடர்கிறார்கள். நான் ஜனத் திரளில் நுழைந்து ஒவ்வொருவரையும் தள்ளிக்கொண்டு முன் னேறி முதலில் போய்க்கொண்டு இருக்கும் அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்க்க விழையும்போது விழித்துக்கொள்கிறேன். கடிகாரம் 9 மணி என்கிறது. எழுந்து கதவைத் திறந்து மனைவி பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறேன். பதில் இல்லை. அவள் அப்போதுதான் கிளம்பி இருக்க வேண்டும்.

தொலைபேசி வைத்திருக்கும் மேஜை மேல் மஞ்சள் பசைக் காகிதங்கள் என் குடும்பத்தாரிடம் இருந்து செய்திகளைத் தெரிவிக்கின்றன. ”அப்பா வரும் வாரம் என் பிறந்த தினத்துக்கு புது சைக்கிள் வாங்குவதாகச் சொல்லியிருக்கிறாய்” என்றுஞாபகப்படுத்துகிறது ஒன்று. ”கீ-போர்டு கிளாஸ் நிறுத்தப்போகிறேன். எனக்குப் பிடிக்கலை.” என்று இன்னொன்று. ”என் சித்திக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்தது. வரும் வாரம் நான் அம்பாசமுத்திரம் போக வேண்டிஇருக்கும். எழுந்தவுடன் போன் பண்ணவும்” என்கிற மனைவியின் காகிதம். சத்தம் முடக்கப்பட்ட என் செல்பேசி நான்கு நபர்களின் அழைப்புகளை நான் தவறவிட்டுவிட்டதாகச் சொல்கிறது. எழுந்ததும் நான் கவனிக்கவேண்டிய வேலைகளைக் குறித்த மின் அஞ்சல்களைப் பட்டியலிட்டு இருக்கிறது என் ப்ளாக்பெர்ரி.

நான் தன்னிச்சையாக பால்கனியில் போய் நிற்கிறேன். நேற்றைய அவலங்களைத் தொலைத்த புதிய நாள். மிடுக்காக உடையணிந்த கனவான்கள் அலுவலகம் விரைந்துகொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் வயதான கனவான்கள் காலை நடை போய்க்கொண்டு இருக்கிறார்கள், பெண்கள் அங்கங்கு நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அழுகைக்குப் பதிலாக உற்சாகமான தொலைக்காட்சிப் பாடல்கள், கட்டட வேலை நடக்கும் இடத்தில் இருந்து இயந்திரங்களின் இரைச்சல், எங்கேயோ ஒலிபெருக்கியில் கேட் கும் சினிமாப் பாடல், விமானம் போகும் ஓசை, நாய்கள் குரைக்கும் சத்தம்… அந்தப் பெண் இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாளா இல்லை, இந்த இரைச்சலில் அவள் அழுகைச் சத்தம் கேட்கவில்லையா? அழுது ஓய்ந்து உறங்கி காலை எழுந்து அவள் செய்ய வேண்டிய கடமைகள் துரத்த, அலுவலகம் சென்றுவிட்டாளா அல்லது வீட்டு வேலையில் மூழ்கிவிட்டாளா?

மறுபடி படுக்கையில் போய் விழுகிறேன். இன்னும் பாக்கி இருக்கிற மூன்று மணி நேரத் தூக்கத்தைப் பிடிக்க முயல்கிறேன். அந்த அழுகைச் சத்தம் அடங்கிவிட்டதில் மனது சமாதானமாகி இருக்கிறது. போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்க முயல்கிறேன். மெள்ள மெள்ள தூக்கத்தை எட்டி பாதி விழிப்பும் பாதி நித்திரையுமாக உணர்வு மழுங்கி, அந்த அழுகை என் வீட்டில் இருந்துகூட வந்திருக்கலாம் என்று தோன்றிய வேளையில் தூங்கிப்போகிறேன்!

– டிசம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *