யாரு ஏமாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 3,650 
 
 

இரவு 10.45 மணி. காவேரி எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக நின்றது. இன்னும் 10 நிமிடம் தான் இருக்கிறது. சிதம்பர ஐயரும் அவர் மனைவி பர்வதமும் அரக்க பரக்க ஓடி வருகிறார்கள். பார்த்தாலே பழைய பஞ்சாங்கம் என்கிற தோற்றம். கட்டுக் குடுமி, பஞ்சகச்சம், காதில் கடுக்கன் சகிதம் மாமா, மடிசார் புடைவை, முழங்கை வரை ரவிக்கை, இழுத்து வாரப்பட்ட கொண்டையுடன் மாமி இருந்தது ஆசார சீலர்கள் என்று உணர்த்தியது.

உள்ளே வந்து ஸீட் தேடி உட்கார்ந்தனர். உடனே ரயிலும் புறப்பட்டது. ஸீஸன் இல்லாததால் ரயிலில் அதிக கூட்டம் இல்லை. ஜன்னல் ஓரத்தில் ஒருத்தி உட்கர்ந்திருந்தாள். அவள் இவர்களைப் பார்த்து,” நீங்க ரெண்டு பேரும் வயசானவங்க, இப்படி ரயில் கெளம்பற நேரத்தில அவசரமா ஓடி வறீங்களே, கொஞ்சம் முன்னால வந்தா நல்லது தானே,” என்று கேட்கவும்,” என்னம்மா, பண்ணறது? ஆட்டோக்காரர் லேட்டாக்கி விட்டார்,” என்று மாமி பதில் அளித்தாள்.” பெங்களூருல யாரு இருக்காங்க?” ” என் சம்பந்தி இருக்கா, எங்களுக்கு பேத்தி பிறந்திருக்கா, எங்க வீட்டுக்கே அருமைப் பேத்தி! ஏன்னா, எங்க வீட்டில எல்லாருக்கும் பிள்ளை, அதனால பேத்திக்கு ஏங்கிப் போயிட்டோம். அதான் பாக்கப் போயிண்டு இருக்கோம்.”” அது சரி, நீங்க தனியாப் போறீங்க, அப்படியிருக்கச்சே இவ்வளவு நகையைப் போட்டுகிட்டு வரலாமா? ரயிலில் திருட்டு நடக்குதுன்னு அடிக்கடி கேள்விப்படுறோமே, உங்களுக்குத் தெரியாதா?” என்று சொன்னவுடன் மாமிக்கு பயம் வந்து விட்டது. நகையெல்லாம் கழட்டி மாமாவிடம் கொடுத்து ’பெட்டில வெச்சுடுங்கோ’ன்னு கொடுத்தாள். அவர், ”பெட்டில எதுக்குடீ? என்னோட கைப்பையில வெச்சுக்கிறேன். பத்திரமா இருக்கும்” னு சொல்லி வைத்துக் கொண்டார். மாமி,” ஏன்னா, நம்ம சம்மந்தி அட்ரஸ் எடுத்து வெச்சுண்டேளா?” என்று கேட்க,” அதான் நம்ம பையன் விகாஸ் வரேன்னு சொல்லியிருக்கானே. அவன் ஸ்டேஷனுக்கு வருவான். கவலையை விடு” ன்னு மாமா சொல்ல,” அது சரி, ஒரு சமயம் அவனால வர முடியலேன்னா நமக்கு போகத் தெரிய வேண்டாமா? ஆட்டோக்காரனெல்லாம் அங்க கன்னடம் தான் பேசுவான், அவனுக்கு தமிழ் தெரியாது, நமக்கோ தமிழத் தவிற வேற பாஷை தெரியாது. அவன் தப்பான ரூட்ல போனாலோ அல்லது அதிகமா சார்ஜ் கேட்டாலோ நமக்குத் தெரியாது. காத்தால வேளை, ரோடில ஜன நடமாட்டம் ஜாஸ்தி இருக்காது, அவன் ஏதாவது சண்டை போட்டாலும் ஏன்னு கேக்க ஆள் இருக்க மாட்டா. அதான் பயமா இருக்கு” – மாமி.” சரி, ரொம்ப கற்பனை பண்ணாதே. மொதல்ல தூங்கற வழிய பாப்போம்” னு மாமா சொல்லவும் மாமி,” எனக்கும் மேல் பெர்த். உங்களுக்கும் மேல் பெர்த். ரெண்டுமே நமக்கு சரிப்படாது, டி. டி வந்து பெர்த் மாத்தி தர வரைக்கும் உக்காந்திருப்போம்”னு சொல்வதைக் கேட்டு ஜன்னல் ஓரத்துப் பெண்மணி, அவர்கள் எதிரில் இருந்த நடுத்தர வயதுக்காரரைப் பார்த்து, “ஏங்க, உங்களுக்கு கீழ் பெர்த் தானே, அதுல இவங்க யாரையாவது படுத்துக்கச் சொல்லுங்க. நீங்க மேல் பெர்த்ல படுங்க, நடு பெர்த்தில் ஒருத்தர் படுக்கட்டும்” னு சொன்னதும் மாமிக்கு ஒரே ஸந்தோஷம்.” மகராசியா இரும்மா”ன்னு வாழ்த்தினாள். மேலும் அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்,” எனக்கு கால்ல பிரச்சினை, மேலே ஏறிப் படுக்க முடியாது. இல்லேன்னா என் பெர்த்தையும் உங்களுக்கு குடுத்திருப்பேன். என் புருசன் தான் எதிர்ல இருக்கிறவரு. அவரும் நானும் சாப்பிட்டு முடிச்சவுடனே, நீங்க படுக்கலாம்,” என்றாள்.

அவர்கள் சாப்பிட்டு விட்டு பீடா சாப்பிடும் பொழுது,” நீங்க சாப்பிடுறீங்களா? எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பீடா கடையில் எப்போதும் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். அவ்வளவு ருசி, பழக்கமில்லாதவங்க கூட ஒரு தடவை சாப்பிட்டாங்கன்னா அப்புறம் விட மாட்டாங்க” ன்னு சொன்னாள். மாமி, வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் கணவன் கூட, “அவங்களுக்கு வேண்டாம்னா ஏன் வற்புறுத்துறே” ன்னு சொன்னான் ஆனால் அவள் விடுவதாக இல்லை.” சும்மா சாப்பிட்டுப் பாருங்க” என்று இரண்டு பீடாக்களை மாமா, மாமிக்கு கொடுத்தாள்.

எல்லோரும் உறங்கப் போயினர். மாமா தன் கைப்பையை தலையணை போல வைத்துக் கொண்டார். இரவு 3 மணி இருக்கும். அந்த நடுத்தர வயதுக்காரர் மெதுவாக மாமா தலைக்கடியில் இருந்த பையை எடுத்துக் கொண்டு தன் மனைவியுடன் குப்பம் ஸ்டேஷனில் இறங்கி விட்டார். இது ஏதும் தெரியாமல் மாமா, மாமி தூங்கிக் கொண்டிருந்தனர். பெங்களூரு வந்து விட்டது. அவர்கள் பையன் விகாஸ் ஸ்டேஷனில் காத்திருந்தான். எல்லோரும் இறங்கி விட்டனர்.

தன் அப்பா, அம்மாவைக் காணுமே என்ற கவலை அவனுக்கு. சட்டென்று தான் குறித்து வைத்திருந்த கோச் நம்பர், ஸீட் நம்பரை வைத்து தேடலாம் என்று எண்ணி ரயிலில் உள்ளே போய் தேடினான். அங்கு இருவரும் அசந்து தூங்குவதைப் பார்த்து துளி சத்தம் கேட்டாலும் எழும் அம்மா, பக்கத்தில் படுத்திருக்கிறவர் லேசாக இடித்தாலும் தூக்கம் போச்சுன்னு சொல்ற அப்பா, எப்படி இவ்வளவு அசந்து தூங்குகிறார்கள் என்று எண்ணியவனாய் அவர்களை உலுக்கி எழுப்பினான். அவர்கள் விழித்துக் கொண்டாலும் தெளிவாக இல்லை. அவர்கள் பையன் விகாஸ்,” என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? மயங்கினாப்பில இருக்கேளே? ஊர் வந்தாச்சு, வீட்டுக்குப் போகணும், மொதல்ல மொகத்தை அலம்பிண்டு வாங்கோ. ஃப்ளாஸ்க்ல காஃபி காஃபி இருக்கு, குடிங்கோ. மயக்கம் எல்லாம் ஓடிப்போயிடும்’னு சொன்னான்.

அவர்களுக்கு காஃபி உள்ளே போனவுடன் கொஞ்சம் மயக்க உணர்வு போயிற்று. அப்பொழுது தான் மாமாவுக்குத் தன் கைப்பை திருட்டுப் போன விஷயம் தெரிந்தது. அவர், அடி, பர்வதம் மோசம் போயிட்டோம்டி” னு தலையில் அடித்துக் கொண்டார். விகாஸ், “என்ன ஆச்சு? யார் உங்கள மோசம் பண்ணினா?”னு கேட்க மாமா எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அவன்,” மயக்க மருந்து கலந்த பீடாவைக் குடுத்திருக்கா. உங்களுக்கு எவ்வளவு படிச்சுப் படிச்சுச் சொன்னேன், ’ரயில்ல யார், எது குடுத்தாலும் வாங்கிக்காதீங்கோ, வீட்டு விஷயத்தையெல்லாம் சொல்லாதீங்கோன்’னு’, இப்ப அவாளை எங்க தேடறது? அவா டிக்கட்லெஸ் பிரயாணியாக் கூட இருப்பா. பொய் பேர்ல கூட டிக்கட் வாங்கியிருப்பா, அவாளைப் பத்தி ஒரு விவரமும் தெரியாம எப்படி போலீஸ்ல கம்ப்ளைண்ட் தருவது? அவா தான் எப்படி கண்டுபிடிப்பா? இருந்தாலும் குடுத்துப் பார்ப்போம். ’ஏம்மா, நீங்க வேற சமத்தா அவ சொன்னாளேன்னு நகையை கழட்டி உள்ளே வெக்கச் சொல்லுவேளா? நீங்க போட்டுண்டு இருந்தா கூட தப்பிச்சிருக்கும்’, என்ன பண்றது, போக வேண்டிய வேளை, யாரைச் சொல்லி என்ன குத்தம்? சரி, மேல ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்’னு சொல்லி கார்ல லக்கேஜ்களை ஏற்றி இவர்களையும் உட்காரச் சொன்னான்.

உள்ளே ஏறினவுடன், பர்வதம், “விகாஸ், நகை நெசமாவே திருட்டு போயிடுத்துன்னு நீயும் உன் அப்பாவும் பயந்துட்டேளா? நான் உன் அம்மாடா, நான் அப்படி ஏமாறுவேனா? நீ சொன்னதையெல்லாம் மனசிலே வெச்சுண்டு நான் அசல் நகையை போட்டுக்கலை. எனக்கு அப்புறம் அதை என் மாட்டுபொண்ணு போட்டுக்க பத்திரமா காப்பாத்த வேண்டாமா? நம்ம பக்கத்து வீட்டில ஒருத்தி இருக்கா. அவா நகை பண்ற ஆசாரி குடும்பம். கரோனா காலத்தில தங்கம் வாங்கிற அளவு யார் கிட்டேயும் பணம் இல்லாததால வியாபாரம் நொடிச்சுப் போச்சு. அதனால முலாம் பூசின நகையை விக்கறா. பாக்க ரொம்ப அழகா இருக்கு. காலம் இருக்கற இருப்புல தங்கத்துக்குப் பதிலா நம்ம மாட்டுப் பொண்ணு போட்டுக்கட்டமேன்னு, நீ எங்களுக்கு கொடுக்கிற காசுல மிச்சம் பண்ணி வாங்கினேன். ஊருக்கு கிளம்பற அன்னிக்குத் தான் கொண்டு வந்து கொடுத்தா. அதனால நான் எல்லாத்தையும் போட்டுண்டு வந்தேன். அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது. மருமகப் பொண்ணு முகத்தில தெரியற சந்தோஷத்தைப் பாக்கணும், அதனால ஸர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லலை. நீ போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்கப் போறேன்னு சொன்னதனால இப்ப எல்லாத்தையும் சொல்லும்பபடியாச்சு. ஸர்ப்ரைஸ் கொடுக்கலைன்னாலும் பரவாயில்ல, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு வெச்சுப்போம். அந்த நகையில ஜாஸ்தி தங்கம் கூட இல்ல. இப்ப எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னன்னா ஆசையா மாட்டுப்பொண்ணுக்கு வாங்கின நகையை குடுக்க முடியாம என் ஆசையில மண் விழுந்துடுத்தேன்னு தான். ட்ரெயின்ல வந்தவ தான் சாமர்த்தியக்காரின்னு என்னை ஏமாத்தப் பாத்தா. நான் அவளை விட சாமர்த்தியசாலிங்கிறதை அவ தட்டான் கிட்டே அந்த நகையை கொண்டு காட்டறச்சே புரிஞ்சுப்பா. அப்ப அவ முழிக்கறதைப் பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. சரி, இப்ப சொல்லுங்கோ யாரு ஏமாளின்னு” என்று சிரித்தாள் பர்வதம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *