வெளிநாட்டு மோகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 2,939 
 

இந்தியா போன்ற நாடுகளிலிருப்பவர்கள் அமெரிக்கா,ஆஸ்திரேலியாவுக்கு சென்று வேலை பார்ப்பதோடு,அங்கேயே குடியுரிமை பெற்று நவீன வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்ற தொன்னூறுகளில் இருந்த மோகத்தில்,அமெரிக்காவில் வேலைக்கு சென்று வேலையில் சேர்ந்த நவீன், ஊரில் உள்ள சொத்துக்களை சொச்ச விலைக்கு விற்று விட்டு பெற்றோரையும் அழைத்துச்சென்று,சொந்த வீடு பத்தில் ஒன்பது மடங்கு கடனில் வாங்கி குடியேறி விட்டான்.

குழந்தைகள் சொந்த நாட்டுக்கு சென்று வர ஆசைப்பட்டதாலும்,பெற்றோர் குல தெய்வ கோவிலில் வழிபட விரும்பியதாலும் இந்தியா வந்தான் குடும்பத்துடன். முப்பது வருடங்களாக யாருடனும் தொடர்பின்றி இருந்தவனுக்கு, யாரைத்தொடர்பு கொள்வது என்பதில் குழப்பம். ஹோட்டலில் அறை எடுத்து தங்கி விட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்களை,அங்கு வந்த சில சொந்தங்கள் அடையாளம் தெரிந்தும் கண்டு கொள்ளவில்லை. சிலர் சிரித்து விட்டு பேசாமல் சென்றனர். சிலர் கோபமான பார்வையை வீசிச்சென்றனர். இது இவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

சந்தன வீரப்பனைப்போல மீசை வைத்த ஒருவர் அருகில் வந்து, “அடையாளம் மறந்து போச்சு. அர்ச்சனை வச்ச போது பேரைக்கேட்டு உறுதிப்படுத்திட்டேன். அமெரிக்காவுல இருக்கிற நவீன் தம்பிதானே..?”

“ஆமாம்”என்று தலையாட்ட “நான் தான் நாச்சியப்பன். உங்க ஒன்றுவிட்ட சித்தப்பா முறை பங்காளி. கல்யாணத்துக்கு வரலேன்னா பரவாயில்லை. வருசம் ஒரு தடவையாவது ஊருக்கு வந்து செத்தவங்க எழவு கேட்டிருந்தா , இப்படி உங்களை முகங்கொடுத்து பேசாம போக மாட்டாங்க. ஆனா எல்லாரும் அழுத முகத்தோட தான் போறாங்க. பாசம் இல்லாமில்ல” என்றவரும் அழுதார்.

“ஆடம்பரமா வாழ்ந்தா மட்டும் போதாது. அன்பு,பாசம் விலை கொடுத்து வாங்கமுடியாது. உங்க கூட பேசாம போறவங்க, உங்களை எம்பட ஊட்டுக்கு கூப்புட்டு வரச்சொல்லி என்கிட்ட சொல்லீட்டு போறாங்க. வாங்க போலாம்” என்றவுடன் குடும்பத்துடன் தாங்கள் வந்த வாடகை காரில் கிளம்பினான் நவீன்.

அப்போது அவரையும் தன்னுடன் காரில் வர அழைத்த போது,அவர் அருகில் ஆடிகார் வந்து நின்றதும் ஆடிப்போனான் நவீன்.

“என்ன தம்பி அப்பிடிப்பார்க்கிறே? இந்த மாதிரி நாலு கார் இருக்கு. கம்பெனிக்கு நாப்பது பஸ் இருக்கு. மூணாயிரம் பேர் வேலை செய்யறாங்க. இந்த குலதெய்வ கோவில் கட்ட போன வருசம் நாலு கோடி கொடுத்தேன். வருசத்துக்கு ஐநூறு கோடிக்கு ஏற்றுமதி பண்ணறேன்”. என்ற போது தலை சுற்றியது. நவீனை தன் காரில் அமர வைத்துக்கொண்டு சென்றார்.

வீட்டில் போய் இறங்கிய போது வீடா அது?அரண்மனை போலிருந்தது. காவலாளி ஓடிவந்து கேட்டைத்திறக்க கார் நுழைந்தது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் உணர்வு ஏற்பட்டது. வேலைக்காரப்பெண் ஓடி வந்து பவ்யமாக அவர்களை உறவினர் அறைக்கு அழைத்துச்சென்ற போது, ‘இது நம்ம ஊர் தானா?அமெரிக்காவா?’ என்று பிரித்துப்பார்க்க முடியவில்லை.

மாடிக்குச்சென்று வெளியே பார்த்தவனுக்கு வானுயர கட்டிடங்கள் அமெரிக்காவை மிஞ்சின.

“வாங்க தம்பி. அப்பா,அம்மா,குழந்தைகளோட பேசினேன். தாயாதிகள் எங்களை மறந்தாலும், நம்ம தாய் மொழிய மறக்காம குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்திருக்கியே அது போதும்” என்றார்.

“அப்புறம் நம்ம ஊர்ல பூமி வாங்க ஆசைப்பட்டீன்னு அப்பா சொன்னார். இன்னைக்கு குதிரைக்கொம்பு கிடைச்சாலும் கிடைக்கும். பூமி வாங்க முடியாது. அப்படி வாங்கினாலும் ஒரு ஏக்கர் முப்பது வருசத்துக்கு முன்னாடி நீங்க முப்பதாயிரத்துக்கு கொடுத்த சொத்து, இன்னைக்கு பத்து கோடி” என்று அவர் சொன்ன போது நவீனுக்கு தான் எதிர்காலம் குறித்த நிலைப்பாட்டில் ஏமாந்ததை அறிந்து கண்ணீர் சிந்தினான் நவீன்.

“தம்பி தாய் நாட்டையும்,தாய் மொழியையும்,பெத்த தாயையும் இழிவா நினைக்க கூடாது. நான் நாலாவது தான் படிச்சேன். கடுமையான உழைப்பாலயும்,பூமி விலை ஏறியதாலயும் இந்த நிலைக்கு வந்திருக்கேன். இன்னைக்கு ஒரு பையன் லண்டன் போயிருக்கான்,ஒரு பையன் ஜப்பான் போயிருக்கான். இப்போதைக்கு இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணறேன். படிச்ச நீ ஒரு நாட்ல வாழறே. படிக்காத நான் பல நாடுகளை சுத்திட்டு வர்றேன்”

என்றவர் வீட்டுக்கு வந்த மற்ற உறவுகளை கைகூப்பி வரவேற்றார்.

“எல்லாரையும் உங்களை பார்க்கத்தான் வரச்சொன்னேன்.”

என கூறி அனைவரையும் யார் என்ன உறவு என அறிமுகப்படுத்த,நவீனின் குழந்தைகள் உற்சாகமாகி தங்கள் சம வயது கொண்டோருடன் ஆங்கிலத்திலேயே உரையாடினர். தமிழ் தெரியுமென்றதும் தமிழில் எண்ணங்களை பகிர்ந்து,விருந்துண்டு மகிழ்ந்தனர்.

“இன்னைக்கு பூமி விற்கிற விலைல நவீன் தம்பியால நம்மூர்ல பூமி வாங்கமுடியாதுன்னு அவனோட அப்பா கவலைப்பட வேண்டாம். நாளைக்கே பங்களாவோட என் பேர்ல இருக்கிற ஒரு தோட்டத்து வீட்டை நவீன் பேருக்கு எழுதப்போறேன். எனக்கு இன்னொரு பையன் கிடைச்சிருக்கான்னு நினைக்கிறேன்.” என்று பங்காளி நாச்சியப்பன் கூறியதைக்கேட்டு உறவுகள் ஆரவாரம் செய்ய, ஆனந்தக்கண்ணீர் மழையில் நனைந்தனர் அமெரிக்காவை முன்பு நேசித்து, தற்போது இந்தியாவை நேசிக்கும் நவீன் குடும்பத்தினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *