யாதும் ஊராகி… யாவரும் இல்லாது…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 12,330 
 

சாலையோர மரங்களின் கிளைகளில் பனி இறங்கி அது இயல்பைவிடவும் தாழக்கிடந்தது. நீண்ட தடுப்பு வேலி களின் மீது இலைகள் நீரைச் சொட்டிக் கொண்டு இருந்தன. குளிர் அவ்வளவாகப் பழக்கம் இல்லாது இருப்பினும், நான் குளிரோடு ஒரு போர் நடத்தப் பழகிக்கொண்டு இருந்தேன். குளிரில் முடங்கிப்போய் வீட்டுக்குள் படுத்துக்கிடப்பது என் குழந்தைகளை மன அழுத்தம்கொள்ளவைக்குமோ என்று நான் அஞ்சியதே அதற்குக் காரணம். அவர் கள் மிகப் புதிதான ஒரு தேசத்துக்கு வந்திருக்கிறார்கள். தங்களுடைய இயல்பான மண்ணையும் மக்களையும் விட்டுவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நகரத் துக்கு அவர்களைப் பழக்குவது என்னு டைய வாழ்க்கையின் புதிய சவாலாக இருந்தது.

ஆறு மணிக்கெல்லாம் இந்தச் சாலைகளில் யாரும் இயல்பாக நடந்து செல்வதை நான் பார்த்திருக்கவில்லை. கனத்த கம்பளிப் போர்வைகளுக்குள் உடலைச் சுருட்டி, அறைகளில் எரியும் கதப்புகளில் குளிர்காயும் மக்கள் நிரம்பிய நாட்டில் நான் அதிகாலைகளில் நடக்கப் பழகியிருந்தேன். எப்போதாவது குளிர் குறைந்த காலை நேரங்களில் முகிலனையும் என்னோடு அழைத்து வரத் தொடங்கி இருந்தேன். மங்கிய வெள்ளி நிறத்தில் தன்னைச் சுற்றி விரிந்து இருக்கும் இந்தப் புதிய உலகை, என் கை விரல்களை இறுகப் பற்றிக்கொண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தான் அவன். இன்று முகிலன் என்னோடு வரவில்லை. தனியாக நடப்பதும் தனிமையாக உணர்வதும் சில நேரங்களில் மனதைக் காற்று பிடுங்கப்பட்ட ஒரு பலூனைப் போலச் சுழற்றி எறிவதும் சில நேரங்களில் உயரப் பறக்கவிடுவதுமாய் விளையாடிப் பார்க்கிறது வாழ்க்கை.

நான் வாழ்ந்தாக வேண்டும். என் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களின் மேன்மைக்காகவும் பரந்துவிரிந்து கிடக்கிற இந்தப் பெருநகரத்தை நான் எதிர்கொள்ள வேண்டும். நகரம் எங்கும் விறகடுப்பின் புகை மண்டிக்கிடப்பதைப் போலப் பனிப் பொழிவு மிகத் தீவிரமாக இருந்தது. வீடுகளின் முக்கோண முகப்பு களில் பனியின் ஈரம் கசிந்து ஓவியங் களாக ஒழுகிக்கொண்டு இருந்தன. பீட்டர்ஸ்பெர்க் தேவாலயக் கதவுகளைத் திறந்துகொண்டு இருந்தான் அரக்கு வண்ணக் குளிர் சட்டையும் நீல நிறப் பனித் தொப்பியும் அணிந்திருந்த காவலாளி.

தேவாலயத்தின் மிகப் பெரிய மணி, தலைகீழாகக் கட்டப்பட்டு இருந்த ஒரு கிணற்றைப் போலத் தொங்கிக்கொண்டு இருந்தது. அதில் இருந்து ஓசை ஏதும் இல்லாது இருப்பினும், மனத்தின் எங்கோ ஒரு மூலையில் அது எழுப்பும் ஓசை மிகத் துல்லியமாக எனக்குள்ஒலித்துக் கொண்டு இருந்தது. தும்பிக்கைபோல நீண்டு கிடந்த அதன் பெண்டுலத்தைக் கயிற்றின் வழியாக அசைத்து மணியின் சுற்றுச் சுவர்களில் மோதிக் கிளப்பும் பிரமாண்ட ஓசை, என் சொந்த ஊரின் புகழ்பெற்ற முருகன் கோயிலை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அதிகாலையில் அங்கு இருந்து வெளிக் கிளம்பும் சீர்காழி கோவிந்தராஜனின் குரல், அடைபட்ட சிங்கத்தின் கர்ஜனையைப் போல எங்கள் தெருவுக்குள் பெருக் கெடுத்து ஓடிவரும். கோயிலின் வெளிப் பிராகாரத்தில் ஒலிக்கும் அந்த மணியோசை இல்லாத நாட்களே என் இளமைக் காலத் தில் இல்லாதிருந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி, அவளுடைய இன்னொரு கையில் இருக்கும் பூசைக் கூடையின் அசை வைப் பார்த்தபடி நடந்த காலம் அது. வீடு திரும்பியவுடன், தேங்காய்த் துண்டும் பாதிப் பழமும் கிடைக்கும்.

விழாக் காலங்களில் களைகட்டும் வித விதமான தள்ளுவண்டிப் பொருட்கள், வண்ணக் காற்றாடிகளைச் சுழற்றியபடி வரும் வயோதிகர்கள், மூங்கிலில் தொங்கிக்கொண்டு இருக்கும் பொம்மை ஒன்றில் இருந்து இழுத்துச் சுருட்டி கண்ணாடித் தாளில் அடைக்கப்படும் ஜவ்வு மிட்டாய்க்காரர்கள்… இவை எல்லாம் பஞ்சு மிட்டாயின் வண்ணத்தைப் போல நெஞ்சுக் கூட்டுக்குள் அப்பிக்கிடந்தன.

அந்த மணியோசையை மறக்க விரும்பி நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன். ஏனெனில், அந்த மணியோசை எனக்குள் ஓர் இனம் புரியாத பிரிவின் வேதனையை உணர்த்துவதாக இருந்தது. பெரும் பாலைவனம் ஒன்றில் சிறகு முறித்து எறியப்பட்ட ஒரு பறவையைப் போல என்னை உணரவைக்கும் அந்த மணியோசை, அச்சமூட்டு வதாக மாறிப்போனது. இப்போது குளிர் கொஞ்சம் குறைந்து மனிதர்கள் ரோமம் மண்டிக்கிடந்த விநோத ஆடுகளைப்போல நடக்கத் தொடங்கி இருந்தார்கள். இனி வீடு திரும்ப வேண்டும். குழந்தைகள் இருவரும் எழுந்திருப்பார்கள். அவர்களுக்கானதேநீர் தயாரிக்கும் பணியை என் மனைவி தொடங்கி இருப்பாள். தனக்கான வாழ்க்கை அல்லது விருப்புகள் குறித்த எந்தத் தடயங்களும் இல்லாது வாழும் ஒரு பெண்ணாக என் மனைவி மாறிவிடுவாள் என்று நான் கற்பனைகூடச் செய்தது இல்லை. அவள் ஒரு சிறு குழந்தையைப் போலப் பிடிவாதம் செய்பவளாகவும் தனக்கான விருப்புகளை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு இருப்பவளாகவும் இருந்ததை நினைத்துப் பார்த்தேன். அவளை மீண்டும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்கியபடி குளிரில் நடுங்கியது.

இப்போது நான் என் வீட்டின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இருந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும், வெளிநடைப் பகுதியின் நாற்காலிகளில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டு இருந்த முகிலனையும் கண்மணியையும் கண்டேன். எனதுஅரவம் கண்டு திரும்பிய முகிலன், ”காலை வணக்கம், அப்பா” என்று ஆங்கிலத்தில் சொன்னான். திரும்ப வணக்கம் சொல்லிவிட்டு, நானும் அவர்களுக்கு அருகில் அமர்ந்தேன். மிக வேகமாக இந்த நாட்டின் கலாசாரத்தை முகிலன் கற்றுக்கொண்டுவிட்டான். வாழ்க்கை, இடங்களுக்கேற்ப மாறக் கூடியது என்பதை அவனுக்கு மெள்ள உணர்த்தியபடி இருந்தேன் நான்.

நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவனுடைய பழைய நினைவுகளை இந்த நகரத்தின் விநோதமான ஓசைகளுக்குள் நான் கரைக்க முயற்சித்தேன். நாங்கள் அமர்ந்திருந்த நடையின் சாளரங்களின் வழியாக, வெளிப்புற உலகம் மெள்ள ஒளி ஏறிக்கொண்டு இருந்தது.

கட்டடங்கள், சாலைகள், சாலைகளில் நகரும் ஊர்திகள், முகம் தெரியாத மனிதர்களின் நடை என்று நகரம் விழித்துக்கொண்டு இருந்தது. என் கண்களில் தேங்கிக்கிடந்த பழைய காலைக் காட்சிகள் ஏனோ நகரத்தின் நிகழ்காலத்தைத் தாண்டி விழித் திரைகளை உறுத்திக்கொண்டு இருந்தது.

அது ஒரு மார்கழி மாதத்தின் காலை நேரமாக இருக்க வேண்டும். வாசலில் கிளைத்திருந்த வேப்ப மரத்தின் கிளைகளில் எப்போதும் காலையில் வந்து அமரும் கிளிகள், அம்மாவும் அக்காவும் கோலம் போடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தன. திண்ணையின் ஓரத்தில் கிடக்கிற மர நாற்காலியில் அப்பா வழக்கம்போலத் தேநீர் குடித்துக்கொண்டு இருப்பார். முகப்புத் தோட்டத்தின் அவரைக் கொடிகளில் ஒட்டிக்கிடந்த பூச்சிக் கூடுகளை நீக்கியபடி, ”பாம்புச் சட்டை ஒண்ணு கெடக்குது, தர்மா. பிள்ளைகளைக் கவனமா இருக்கச் சொல்ல வேணும். வெறகு அடப்பை ஒருக்கா சுத்தப்படுத்த வேணும்” என்று சித்தப்பா உரக்கப் பேசிக்கொண்டு இருந் தார்.

அப்பா அவரைக் கவனிக்கிறாரா? இல்லையா என்பது குறித்தெல்லாம் அவர் கவலைகொள்வது கிடையாது. அவர் போக்கில் பேசி முடித்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார். கவனிக்காமல் இருப்பதுபோலத் தெரிந்தாலும் சித்தப்பாவின் ஒவ்வொரு சொல்லும் அப்பாவின் நினைவுகளில் தங்கி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எந்தப் புற ஆற்றல்களாலும் பிரிக்க முடியாத சகோதரர் களாக அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து இருந்தார்கள். அப்போது புஞ்சையில் பயிரிடப்பட்டு இருந்த தட்டைப் பயறின் வாசம், உயிர் வாழ்வின் சிலிர்ப்பாகத்தெரு எங்கும் நிரம்பிக்கிடந்தது.

நான் முகிலனின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்க வேண்டி நினைவுகளில் இருந்து திரும்பினேன். அவன் இப்போது தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, ”அப்பா, நாம் இனி எப்போதாவது நிரந்தரமாகத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?” என்று கேட்டான். அவன் வேறு ஏதாவது திசையில் பயணிப்பானா என்று எதிர்நோக்கியபடி நான் நீண்ட அமைதி காத்தேன்.

கூடச் சேர்ந்து அமைதி காத்துவிட்டு, அவன் விட்ட இடத்துக்கே திரும்ப வந்தான். ”நாம் திரும்பிச் சென்றால், நம்முடைய பழைய வீட்டில் வாழ முடியுமா? இப்போது அங்கே யார் இருப்பார்கள்?” என்னுடைய பதிலுக்காக அவன் காத்திருப்பது, ஓலைகளை அரிக்கும் கறையான்களின் ஓசை யைப் போல என் நரம்பு செல்களைத் தீண்டியது. இனி அமைதி வழிக்கு வராது. நான் பதில் சொல்லியே தீர வேண்டும்.

”முகில், வகுப்பில் யாரும் இந்தக் கேள்வியை உன்னிடம் கேட்டார்களா?” என்று கேட்டுவிட்டு, அவனுடைய முகத்தைப் பார்த்தேன். ”இந்தக் கேள்வியை வாரம் இரண்டு மூன்று முறையாவது யாராவது கேட்டுவிடுகிறார்கள் அப்பா” என்று சொல்லிவிட்டு, என் முகத்தில் பதிலுக்கான தொடக்க ரேகைகளைக் கவனிக்கத்தொடங் கினான் முகிலன்.

”இந்தப் பால்வெளியில் எத்தனை கோள்கள் இருக்கின்றன முகில்?” என்று திரும்ப ஒரு கேள்வி கேட்டேன். அவன், ”ஒன்பது, இல்லையில்லை எட்டு” என்று ஏறத்தாழக் கத்தினான். ”சரி, அவற்றுக்குஎல்லாம் நாடு இருக்கிறதா?” என்று நான் கேட்டபோது, ஏளனமாகச் சிரித்தான் முகில். ”அப்பா, நாடுகளே அதற்குள்ளாகத்தானே இருக்கின்றன. இது என்ன கேள்வி?” என்றான்.

”சரி, நீ தினமும் மாலையில் பார்க்கிற நீள்கழுத்துப் பறவைகளுக்கு நாடு இருக்கிறதா?” என்றேன்.

”இல்லை, அவை குளிர் காலத்தில் ஒரு கண்டத்திலும் வெயில் காலத்தில் இன்னொரு கண்டத்திலும் இருக்கும்” என்று பெருமித மாகச் சொன்னான் முகிலன்.

”சரி, நீ அடிக்கடி கடற்கரையில் பார்க்கும் கடல் சிங்கங்களுக்கும் குதிரைகளுக்கும் நாடு உண்டா?” என்று மீண்டும் நான் கேட்டபோது, அமைதி காத்தான் முகில். பிறகு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, ”இல்லையப்பா” என்று மிக மெல்லிய குரலில் சொன்னான். ”பிறகு ஏன் மனிதர்களுக்கு மட்டும் ஒரு நாடு தேவையாக இருக்க வேண்டும்?” என்று நான் தொடர்ந்தேன். ஒரு வகுப்பாசிரியரின் உறுதி யோடு பேசத் தொடங்கினான் முகிலன், ”அப்பா, கடல் சிங்கங்களிடமும் குதிரைகளிடமும் யாரும் அடையாள அட்டை களைக் கேட்பது இல்லை. அவற்றுக்கு யாரும் மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகள் செய்வது இல்லை. எனக்கும் கண்மணிக்கும் நாடு தேவையாக இல்லையென்றால், இடம்பெயர்ந்தவர்கள் என்று ஏன் இங்கு எங்களை அழைக்கிறார் கள். சலுகைகள் பெறத் தகுதியானவர்கள் என்று ஏன் எங்களை இழிவு செய்கிறார்கள்?” என்று கேள்விகளை வீசத் தொடங்கினான். நான் அமைதியாகவே இருந்தேன். அவன் மிகுந்த அறிவாளியாகவும் சூழலைக் கூர்ந்து கவனிப்பவனாகவும் வளர்வதைக் கண்டு மகிழ்வதா? அல்லது அவனுடைய மனம் மீள முடியாத தனிமையில் உழல் வதைக் கண்டு வருந்துவதா? என்றுகுழம்பிய படி ஒருவிதமான குற்ற உணர்வில் தவிக் கத் தொடங்கினேன் நான்.

முகிலனின் அம்மா அறைக்குள் நுழைந்தபோது, கண்மணியிடம் ஒரு சிறுகதை சொல்லிக்கொண்டு இருந்தான் முகிலன். அந்தக் கதையில் வழக்கம்போலவே கடல் சிங்கங்களும் நீள்கழுத்துப் பறவைகளும் இடம்பெற்று இருந்தன. பள்ளி செல்வதற்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருப்பதாக, முகிலனின் அம்மா நினைவுபடுத்தியபோது, எங்கள் உரையாடல் முற்றுப்பெற்றது.

வேலைப்பளு நிரம்பிய அந்த அலுவலக நாளில் உணவு இடைவேளையின்போது ஒருமுறை வீட்டுக்குத் தொடர்புகொண்டு, ”குழந்தைகள் வந்துவிட்டார்களா?” என்று மனைவியிடம் கேட்டேன். பிறகு மாலையில் ஒருமுறை உலக வரைபடம் வேண்டும் என்று முகிலன் பேசினான். பனிப் பொழிவு தொடங்கும் முன்பாகவே வீடு திரும்ப வேண்டும். கார் நிறுத்தும் இடத்துக்கு நடந்து சென்றபோது, பாதையெங்கும் பனி மூடிக்கிடந்தது. அதனை வழித்துத் துடைக் கும் சிவப்பு அங்கி அணிந்த சில பணியா ளர்கள், மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். துடைக்கப்பட்ட பாதையின் மீது விழுந்து தெறித்த பனிக் கட்டி ஒன்றைப் பார்த்தபோது, என் நினைவுகள் நிகழ்காலத்தை விடுத்து நெடுந் தொலைவு பயணித்தன.

அந்த மழைக் கால மாலையின் பொன்னிற வெயில் அடுப்படிக் கூரையின் நிழலை வாசலில் வீழ்த்தி இருந்தது. இரவு உணவுக்கான நெருப்பில் இருந்து கசிந்த புகை, சுவரில் பதிந்திருந்த சிமென்ட் கிராதியில் சுருள் சுருளாகப் புரண்டுகொண்டு இருந்தது. பள்ளி முடித்துத் திரும்பிய பிள்ளைகள் தின்பண்டங்களைத் தின்றபடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்பா, இன்னும் வேலை முடிந்து வந்திருக்கவில்லை. சித்தப்பா, எங்கிருந்தோ அறுத்துக்கொண்டுவந்திருந்த தழைகளை மாடுகளுக்கு ஏறத் தாழ ஊட்டிக்கொண்டு இருந்தார். ”எங்கன நகண்டு போறவு?” என்று சீதாவின்முதுகில் அவர் பொத்தி அடிக்கும்போது, அது தலையைத் திருப்பி அவரை முட்டுவது போலப் பாவனை செய்யும். பிறகு சித்தப்பா அருகில் சென்று தழைக்கட்டு ஒன்றை எடுத்து முகத்துக்கு நேராக நீட்டும்போது, தன் சொரசொரப்பான நீண்ட நாக்கை நீட்டி ஒருமுறை அவருடைய கையை நக்கியபடி தின்னத் தொடங்கும். சொற்களால் வர்ணிக்க முடியாத உறவு அது. எங்கள் மீது அவர் காட்டும் நேசத்துக்குக் கொஞ்ச மும் குறையாத அளவை தொழுவத்தில் இருந்த மாடுகளும் பெற்றுக்கொண்டு இருந்தன. சடசடவென அப்போது பெய்த மழை ஓர் அழிக்க முடியாத பிம்பம். அம்மா அடுப்படியில் இருந்து இறங்கி கொல்லையின் வேலிகளில் காய்ந்துகொண்டு இருந்த துணிகளை அள்ளித் தோளில் சரித்தபடி வீட்டுக்குள் ஓடினார். நான் திண்ணையில் இருந்து வீட்டுக்குள் செல்லும்படி சித்தப்பாவால் பணிக்கப் பட்டேன். அறையின் நிலைக் கதவில் சாய்ந்துகொண்டு அந்த அதிசயமான மழையை நான் வேடிக்கை பார்த்தேன்.

சின்னச் சின்ன உருண்டைகளாக மாறி மழைத்துளிகள் கட்டிக் கட்டியாக ஓட்டி லும் கூரையிலும் விழுந்து ஒலி எழுப்பின. சித்தப்பா அடுப்படிக்குள் ஓடிச்சென்று முறத்தையும் ஒரு போத்தலையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். முறத்தை வாசலில்வைத்துவிட்டு அதில் விழுகிற மழைக்கட்டிகளை எடுத்து போத்தலில் சேகரித்தபடி அம்மாவிடம் ஆலங்கட்டி மழை குறித்துச் சொல்லிக்கொண்டு இருந்தார் சித்தப்பா. தான் சிறு வயதில் இருந்தபோது இப்படித்தான் ஒருமுறை ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் அதனை போத்தலில் சேகரித்த அப்பப்பா விஷக் கடிக்கு நல்ல மருந்தென்றும் இந்த நீர் இருக்கும் இடத்தை அரவம் நெருங்குவது இல்லை என்றும் சித்தப்பா சொன்னது எனக்கு வியப்பானதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.

கார்கள் செல்லும் இந்தப் பாதையில் பெய்கிற பனி மழைகூட ஆலங்கட்டி மழைபோலத்தான் இருக்கிறது. அடுப்படி யும் சித்தப்பாவும் தோட்ட மரங்களும் இல்லாத வெறுமையான ஆலங்கட்டி மழை.

கார் நிற்கும் இடத்துக்கு வந்து, இரண்டொரு முறை முயற்சித்த பிறகு, ஒரு மழைக் கால நாரையின் கீறலான இரைச்சலைப் போலக் குரல் எழுப்பியபடி இயங்கத் தொடங்கியது என்னுடைய ‘ஒபெல் பெர்சா’. நினைவுகள் ததும்பும் என் உடலைச் சுமந்தபடி பயணிக்கத் தொடங்கியது கார்.

வரும் வழியில் ‘லாச்சி டௌன் ஸ்ட்ரீட்’ சென்று மறக்காமல் உலக வரைபடத்தை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது, இருட்டத் தொடங்கி இருந்தது. இறுக்கிக் கட்டப்பட்டு இருந்த காலணிகளைக் கழற்றி, மர அலமாரியில் வைத்துவிட்டு உள்ளறைக்குள் நுழைந்தபோது, முகிலன் கையில் இருந்த உலக வரைபடத்தைப் பிடுங்கிக்கொண்டான். சாய்வு நாற்காலியில் அமர்ந்து நான் கொஞ்சம் ஓய்வுகொண்டபோது, வரைபடத்தை விரித்துத் தன்னுடைய மேசையில் பரப்பிக்கொண்டு இருந்தான் முகிலன்.

நான் அவனுடைய நடவடிக்கைகளைப் பார்த்தபடி அசைவற்றுக் கிடந்தேன். அவனுக்கு நேரெதிராக அமர்ந்திருந்த கண்மணிக்கு எதையோ காட்டப்போவதாகச் சொல்லிய முகிலனின் கண்களில் ஒளி ஊடுருவி இருந்தது.

”இப்போது நான் மாலையில் உனக்குச் சொன்ன இடங்களைக் காட்டப்போகிறேன்” என்று ரகசியமான குரலில் முகிலன் தன் தங்கையை ஆர்வமூட்டினான். முகிலனின் கண்கள் கிளைத்துப் படர்ந்திருந்த அந்தச் சிக்கலான கோடுகளுக்குள் எதையோ தேடிப் பயணித்தன. அநேகமாக என் கண்களும் இப்போது முகிலனின் கை களோடு சேர்ந்து நகர, இடது கையின் நடுவிரலில் அந்த இடத்தை அழுத்தியபடி தன்னுடைய தங்கையின் பக்கமாகத் திரும்பி இப்படிச் சொன்னான் முகிலன். ”இதுதான் நம்மட ஊர், நம்மட வீடு, தோட்டம் எல்லாம் இங்கேதான் இருக் கிறது. நம்மட அம்மம்மா, அப்பப்பா எல்லாம் இங்கேதான் இருந்தார்கள். நாமளும் ஒருநாள் இங்கேதான் போகணும்.”

அண்ணனின் ஏற்ற இறக்கமான குரலை யும் அதன் வழியே பொங்கி வழியும் உணர்ச்சிகளையும் வழக்கமான வியப்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள் கண்மணி.

முகிலனின் அருகில் சென்று அவனை என் வயிற்றோடு அணைத்துக்கொண்டு, வரைபட மேசையில் வளைந்த கோடுகளில் அமிழ்ந்துகிடந்த எங்கள் நிலப்பரப்பைப் பார்க்க முயன்றேன் நான். கலங்கித் தளும் பிய என் கண்ணீரில் தடித்து பின் மறையத் தொடங்கியது அந்தப் பெயர்.

இரவுப் பூசைக்கான பீட்டர் ஸ்பெர்க் தேவாலய மணி தொலைவில் உரக்க ஒலிக்கத் தொடங்கி, அதன் பிரமாண்ட ஒலி வெகு தொலைவில் தன்னுடைய மனிதர்களைத் தொலைத்து வெறிச்சோடிக்கிடக்கும் எங்கள் தெருக்களின் மரங்களில் சென்று அடைந்துகொள்வதாக உணரத் தொடங்கினேன் நான். மீண்டும் ஒருமுறை யாருமற்ற பாலை நிலத்தில் சிறகு முறிக்கப்பட்ட பறவையைப்போல வீழ்ந்துகிடந்தேன். நகரம் எங்கும் ஆலங்கட்டி மழை பெய்து கொண்டு இருந்தது. முறங்களும் போத்தல் களும்கொண்டு சேகரிக்க முடியாதபடி.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *