கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 8,151 
 
 

“மையல் செய்யாது உய்வதெல்லாம் உய்யலோ?…” என் இருதயத்தை தொட்ட தற்கால பாடல் என்றால் இதைத்தான் சுட்டிக்காட்டுவேன். அந்த கவிதை வரிகளில் கமல் ஹாசன் எழுதிய வசனங்கள் செதுக்கினாற் போலிருக்கும், நானும் மையல் செய்யாத வாழ்வு வாழ்வே இல்லை என வாதாடுபவன் தான். நான் கண்மூடி இருந்த கணம் திடீரென வரைப்பட்டிகை பாடுவதை நிறுத்தியது.பாட்டை நிறுத்தியது யாரென நன்கு தெரியும்.

“ஏன் சந்திரா?”

“எழும்புடா, எடுத்து குடி கொஃபியை” சொல்லிவிட்டு தப்பலாம் என எண்ணினால், நானோ அவளின் மிருதுவான இடையினிடையே விரல்களை உலாவவிட்டு அவளை என் வசம் இழுத்தேன்.

“ஐயோ!, என்ட ராமா! என் ஹஸ்பன்டோட புத்திய மாத்த மாட்டியா?” முகுந்தனிடமே முறையிட்டாள்.

“போடி லூசு! உன்னோட ராமன் ஏற்கனவே நல்ல ஆர்ட்டிஸ்ட்டே?” எம்மிருவருக்கும் நீங்கள்,நான் என்று உரையாடி பழக்கமில்லை, பள்ளிக் காலந்தொட்டு வளர்ந்த காதல்.

“என்ட ராமன் நல்ல ஆர்ட்டிஸ்ட் தான் ஆனா 7 மணிக்கு எழும்பி குளிச்சிட்டு வந்து ரொமென்ஸ் பன்றான் என்று சொன்னா நாறிடும். சரி, எழும்புடா நான் ஆஸ்பத்திரிக்கு பொயிட்டு வாரேன்”

“என்னாச்சு?” கரை அடைந்த மீன் போல் தவித்தேன்.

“ஒன்னுமில்லை ஜஸ்ட் தலை வலி” என்று சொல்லியவாறே வெளியேறினாள்.

அன்றுதான் பிடித்தது பிசாசு என் தேவதை சந்திரா அழகான இராட்சசியாக மாறினாள்.

எதுக்கெடுத்தாலும் சண்டை, அவ்வளவு காதலும்,கலக்கமாக மாறியது போலிருந்தது.

“ஏய் கோஃபி இல்லையாடி?” என அவள் கூந்தலை என் கையால் அலங்கரித்தவாறே கேட்டேன்.

“வேணும்னா போய் போட்டு குடியேன். சும்மா எந்த நேரமும் குடைந்து கொண்டு இருக்காத. இனிமேல் நீயே போட்டு குடி சரியா?”

“ஓகே ஓகே கோவப்படாத!”

அஃதை கூட பொறுத்துவிட்டேன் இதை முடியவில்லை,

“அணு தினம் உனை நினைத்திருக்கிறேன்” என பாடியவாரே அவளை பின்னிருந்து கட்டிப்பிடித்தேன். எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்தவள் அவளிடமே அவ்வாறெல்லாம் பாட முடியும்.

“ச்ச! சும்மா சும்மா வந்து தொட்டுக்கொண்டிருக்காத சரியா? இன்னுமொரு தடவ இப்படி செஞ்சா நான் டிரெக்ட்டா டைவர்ஸ்ஸுக்கு பொயிடுவேன்”

“ஹே! நான் என்ன செஞ்சேன் இப்படி கத்துற? நான் கூட டைவர்ஸ் எடுப்பேன் தெரியுமா?” ஆண் ஆணவம் விட்டு வைக்குமா? அப்போது நானே என் வாயால் கேடு விளைக்கப் போவது எனக்கு தெரியாது.

“வெரி நைஸ் சேர். நானே இன்டைக்கு இத பத்தி தான் கதைக்கலாம் என்டு இருந்தேன். இந்தா இதுல சைன் பண்ணு! பண்ணுடா!” ஒரு இமைப்பொழுதில் இப்படியா என்று தவித்தது என் மணம்.

“நோ. நான் சும்மா சொன்னத ஏன் இப்படி பெருசாக்கனும். ஐ ஆம் சொரி. என்னை மன்னிச்சிடு பிலீஸ்” என உண்டி எண்ணி பிச்சைக்காரன் தெருவில் காண்போர் அனைவரிடமும் கெஞ்சுமாறு கெஞ்சினேன்.

“முடியாதுடா. உனக்கு என் மேல் உண்மையாவே லவ் இருந்தா என்ன விடு, நீ குறைஞ்ச சாதியாம், எனக்கு அதெல்லாம் பிடிக்கல” என அவள் சாயம் தடவப்பட்ட உதடுகள் உரைத்தது தான் தாமதம் நான் உரைந்துவிட.

நகங்களை கடித்தவாறு,நிலத்தை நோக்கியவாறு, நிறைவுரா பெருமூச்சுடன், நதிகளை அசிங்கப்படுத்தும் அளவு கண்ணீர்கள் கொண்டு நான் சுவரில் சாய்ந்து நின்ற கணம் அவள் மீண்டும் என் இதயத்தை தைத்தாள்,

“அது மட்டுமல்ல நான் என் மனசுக்கு பிடித்த ஒருத்தனையும் கண்டுபிடிச்சுட்டன். ஐ ஆம் சொரி” தமிழ் வகுப்பில் சந்தித்து பத்தாம் வகுப்பு தொட்டு வளர்ந்த காதலை இவ்வாறு சுக்குநூறாக உடைப்பதற்கு அவள் ஒன்றும் உடைக்க முடியா கல் நெஞ்சக்காரி அல்ல இருப்பினும் என்னால் அதை தாங்க முடியவில்லை.

அப் பத்திரங்களில் நான் உணர்வுகள் இழந்து ஒப்பமற்று கையொப்பமிட்டேன்.

அதன் பிறகு ஓர் 6 மாதங்கள் கடந்து இருக்கும். நான் இறுதியாக அவளுடன் கொஞ்சி குலாவி 8 மாதங்களும் ஆகியிருக்கும். நான் வண்ணங்களுடன் விளையாடுகையில் திடீரென என் நெருங்கிய நண்பனிடமிருந்து ஓர் அலைபேசி அழைப்பு,

“டேய், சந்திரா ரொம்ப நாளா உடம்பு சரியில்லாம இருந்து இன்டைக்கு காலமை 4 மணிக்கு இறந்துட்டாளாம். நீ டக்குனு அவங்க வீட்ட வாவேன். ஹலோ லைன்ல நிற்குரியா?” பதிலளிக்க புத்தி கூறினும் உள்ளம் மறுக்கிறது, நா அசைய ஆமோதிக்கவில்லை, கைகள் தளர்ந்து கைப்பேசியின் முகம் என் இதயத்தை போல் நொருங்கி தூளாயிற்று.

அங்ஙனம் சென்ற பின் தான் விளங்கிற்று சித்திரத்தை ஓர் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் புரியாதென்று. சந்திராவிற்கு 9 மாசமா தலையில் புற்று நோய்க் கட்டி ஆண்டு வந்ததாம். எனது வாழ்க்கையை சிதைக்க கூடாதென்ற எண்ணத்துடனே அவள் அத்தனை நாடகங்களையும் அரங்கேற்றினாள்.அவள் என்னை கொல்வதாக எண்ணினேன் ஆனால் என்னை கொல்லும் போதெல்லாம் அவளை அவளே உயிரோடு புதைத்திருக்கிறாள். மெய்யான மையல் என்றால் என்னவென்று அவள் எனக்கு பாடம் புகட்டி சென்றுவிட்டால்.

இன்று, அதாவது அவளை பிணமாக பார்த்து நான் பிணமாக நடமாடத் தொடங்கி 1 நாளின் பின், நான் அவளை சித்திரிக்கிறேன். என்ன கொடுமை என்றால் என் உதிரத்தால் அவள் உதடுகளை வரைகின்றேன். இதுவே என் இறுதி சித்திரம். மீண்டும் அதே பாடல் ஆனால் நிறுத்தியதோ நான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *