மூளைக்கூலிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 6,200 
 
 

கே.எல்.ஐ.ஏ, எனும் கோலலம்பூர் அனைத்துலக விமான நிலைய காத்திருப்பு முகப்பு. அன்றுதான் சுப்பிரமணியமும் செல்லம்மாவும் முதன் முறையாக வந்திருந்தார்கள். விமான நிலையத்தின் பரபரப்பும் சுறுசுறுப்பும் அனைத்துகலப் பயணிகளின் சலசலப்பான உரையாடல்களும் எதை யோசிப்பது எதை விடுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தார்கள்.

மகன் அரசனை யார் யாரோ வந்து வாழ்த்தினார்கள். அவன் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஒரு சிலர் வந்து இவர்களுக்குக் கை நீட்ட கை கொடுக்கும் கலையை அறியாதிருந்தும் முதன் முறையாக அன்று கொஞ்சமாகக் கற்றுக்கொண்டார் சுப்பிரமணியம். செல்லம்மாவுக்கு இன்னும் சற்றுக் கூடுதலான தடுமாற்றமாகிப் போனது. அவரைப் பார்த்துக் கை கூப்பி வணக்கம் சொல்பவர்களைப் பார்த்து என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்து மலர்ந்தும் மலராத சிரிப்பு என்ற ஒன்றை முகத்தில் நெளிய விட மட்டுமே முடிந்தது.

மகன் அரசனை போன்றே இன்னும் சில வாலிபர்களுக்கும் பூங்கொத்து கொடுப்பதும் வாழ்த்துச் சொல்லிக் கட்டி அணைத்து உச்சி முகர்வதிலிருந்தும் அவர்களும் தன் மகனைப் போன்றே வெளிதேசத்திற்குப் போகிறார்கள் போலும் என நினைத்துக் கொண்டார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் ஒரு தமிழ் நாட்டுக் கிராமத்து ரயில் நிலையத்தில் நடந்த அந்தக் காட்சியை மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தார் சுப்பிரமணி.

‘ஐயா, சுப்பிரமணி… நீதான்யா குடும்பத்துக்கு தலச்சன் பிள்ள… நீ எங்களை விட்டுட்டு அக்கர சீமக்கிப் போயிட்டா வயசான எங்களையும் ஒனக்கு கீழ நஞ்சானும் குஞ்சானுமா நிக்கிற இந்த புள்ளைங்களையும் யாருப்பா காப்பாத்தப் போறா..?’

வயசாளியான சுப்பிரமணியத்தின் தந்தையின் இடுங்கிய கண்களிருந்து வரவிருந்த ஒரு சொட்டுக்கரிசல்மண் கண்ணீரும் அந்த மதிய வெயில் நேரத்தில் காய்ந்து போனது.

தந்தைசொல்லோ தாயின் கோரிக்கைகளோ உடன் பிறந்த பிறப்புக்களின் வெறுமை தாங்கிய முகங்களோ சுப்பிரமணியத்தின் அயல் தேசத்தின் பயணத்துக்குத் தடைக்கல்லாக இருக்க முடியாததாக இருந்தது. அப்படியிருந்தால் அதற்கான காரணத்தைச் சரியாகச் சொல்லவும் தயார் நிலையிருந்தான் சுப்பிரமணியம்.

‘உங்களையும் இதோ பாதி கட்டி மீதி வெறும் உடம்போட நிக்குதுங்களே ஏந் தம்பி தங்கச்சிங்க அதுங்களுக்கு ஒரு நேரமாவது வயிறு நெறையணும். உங்க முழு ஒடம்புக்கும் துணி வேணும்பா…ஒரு வேள கஞ்சி குடிச்சிட்டு மீதி நேரம் கொலப்பட்டினியா கெடக்கிறமே… மூனு நேரம் வயிறார சாப்பிடணும்… அதுக்காக நான் வெளி நாட்டுக்கு போய்த்தான் ஆகணும்…!’

மகனின் இந்த அழுத்தமான சொற்பிரவாகத்துக்கு முன் அந்த வயசாளிகளுக்கு எந்த ஒரு பதிலும் இல்லாமல் போனது. அவனை ரயில் ஏற்றக் கூட அவர்கள் மலைக்கு அடிவாரத்திலிருந்த குக்கிராமத்திலிருந்து கால் நடையாகத்தான் பிரயாணிக்க முடிந்தது.

மகனின் மலாயா நாட்டுப் பயணத்திற்கு அவனது தந்தை அவர்களுக்கு இருந்த ஒரே பூர்வீகச் சொத்தான இரண்டு காணி புன்செய் நிலத்தின்மேல் கடன் வாங்கியிருந்தார். அது அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்தது. ‘மகன் சம்பாதித்து பணம் அனுப்பினா அதை மீட்டுடுவே..!’என விழி ஓரங்களில் நம்பிக்கை துளிர்த்த ஈரத்தொடு சுப்பிரமணியின் கையில் பணத்தைக் கொடுத்தார் தந்தை.

‘இது என்ன பெரிய காசு மலாயா நாட்டுக்குப் போயி இந்த பணத்த ஒரு வருசத்துல சம்பாதிச்சு அனுப்பி நெலத்த மூட்டுக்க சொல்லணும்.. ஏங் குடும்பம் மத்தவங்க மதிக்க பசேல்ன்னு இருக்கணும்… மவன் வெளி நாட்டுக்குப் போயி அம்மா அப்பா ஒடன் பொறந்தவங்கள நல்லா வாழ வைக்கிறாம்பா..!’

அவன் நெஞ்சத்தில் இப்படித்தான் எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது காப்போது..அந்நேரத்தில்..!

வாலிபத்தில் மலாயாவுக்குக் கப்பலேறிய அவனுக்கும் அவனைப் போலவே கப்பல் இறங்கியவர்களுக்கும் ‘சஞ்சிக்கூலிகள்’ என ஒரு அழுத்தமான முத்திரை குத்தப்பட்டது அன்று!

தோட்டத்து ரப்பர் காட்டில் மீனாச்செடிகளின் கூர்மையான முட்கள் குத்தி கடுகடுத்ததையும் புறந்தள்ளி உடம்பெல்லாம் வழிந்துத் தெப்பமாக ஓடிய வியர்வையையும் வழித்தெறிந்து கடுமையாக உழைத்தான். அக்கணம், பெற்றெடுத்தவர்களையும் உடன் பிறப்புக்களையும் குளிர்வித்துவிட வேண்டுமெனும் வைராக்கியம் மட்டுமே கண் முன் விஞ்சி நின்றது.

எதுவரை..?

கண்ணம்மாளின் துறுதுறுத்த இளசான விழிகளையும் உடல் வனப்பில் நீக்கமற நிரம்பி வழிந்த அளவான அங்கச் செழிப்புகளையும் காணும் வரை..!

தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் ரப்பர் மரங்களிடையே நடந்த சந்திப்பில் ‘என்னய வுட்டுட்டு வூருக்கு போவணுமா…அப்பிடி போயிட்டா நான் உயிரோட இருப்பேன்னு நெனக்கிறீங்களா..?’

இந்தக் கேள்வியைக் கேட்டபோது அவளது கண்களின் ஓர எல்லைகள் ஈரமாகியிருந்தன.. அந்த இளநங்கையின் ஒற்றைக் கேள்வியும் எழில் கொஞ்சிய ஆயிழையின் இளவிழியோர நீர்த்திவலைகளும்சுப்பிரமணியத்தின் வாழ்க்கையையே சுனாமியாகப் புரட்டிப் போட்டுவிட்டது.

தோட்டம் களை கட்டியது. இளைஞர்கள் காட்டுக்குச்சென்று சின்னதும் பெரியதுமான மூங்கில்களும் குரங்கு பாக்குக் குலைகளும் வெட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்து பெரிய பந்தல் போட்டார்கள். அதனுள்ளே, நகரத்திலிருந்து வந்த இலக்கிய சங்கத் தலைவர் உரையாற்றகுழுமியிருந்தோர் கைதட்ட சுப்பிரமணியம் தாலி அணிவிக்கசெல்லம்மாள் மனைவியாகி விட்டாள். அவளது இளமை உடல் செழுமையில் இரண்டறக் கலந்து குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிப் போனான். அதன்பின்பு, பெற்றோரும் ரத்த பந்தங்களும் அந்நியமாகி தொலைந்து தொலை தூரத்திற்குபோயேபோய்விட்டார்கள். அவன் தந்தை அவனுக்காகக் கடன்பட்ட நிலம் மீட்கப் பட்டதா..? தாயும் தந்தையும் உடன் பிறப்புக்களும் என்னவானார்கள் என்பதை முழுஉடம்பையும் மறைக்கத் துணி கட்டினார்களா வயிறார உண்டார்களாஎன்பதைஎண்ணத்திலிருந்து காண்டித்து விட்டான்பாசமகன், வைராக்கிய நெஞ்சன் சுப்பிரமணியம்.

சில ஆண்டுகளே சுப்பிரமணியத்துக்கு மோகமும் ஆவலும் இருந்தன. வாழ்க்கையின் வெளிச்சம் தோட்டத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுக்குத் தெரிந்து போக மற்றவர்களை விட உயர்ந்து நிற்க,‘ஏழ்மையை விரட்டி பொருளாதாரத்தை அணைத்துகொள்,’ என்னும் மந்திரமும் மனதுக்குள் ஆழமாகப் படிந்து போக கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் உன்னத உணர்வோடு உழைத்தார்கள். கடின உழைப்பு கைமேல் பலன் கொடுத்தது. இப்போது அதிகம் இல்லாவிட்டாலும் பக்கத்து நகரில் தரை வீடொன்று உடைமையாகியிருந்தது.

பிள்ளைகளின் கல்வியை உயிர் மூச்சாகச் சுவாசித்ததில் பெரிய மகன் அரசன் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த முறையில்தேர்ச்சி பெற்றிருந்தான். மற்றைய மூன்று பிள்ளைகளும் முதல் மகனைப் போலவே தேர்வில் மிகச் சிறந்து சுப்பிரமணியமும் செல்லம்மாவும் பூரிப்பில் மிதக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள்.

இப்போதுதான் அவர்களுக்கு உண்மையான பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முளை கட்டத் தொடங்கின. முதல் மகன் அரசன் அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் தனியார் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டம் பெறுவதே தன் வாழ்க்கையின் லட்சியம் என உறுதியாகச் சொல்லி விட்டான். ஜெர்மன் நாட்டில் மோட்டார் வாகன நிபுணத்துவத் துறையில் பட்டம் பெற அரசாங்கக் கல்விக் கடன் பெற்றது போக மீதிப் பணத்தைத் திரட்ட ஒரே உடைமையான வீட்டை விற்க வேண்டியதாகவிருந்தது.

“நம்மகிட்ட உள்ளதே ஒரு வீடுதான். அதையும் ஒரு பிள்ளை படிப்புக்கே வித்து செலவு செய்துட்டா மத்த பிள்ளைங்க படிப்புக்கு எப்படிங்க..? மனைவி ஒருநாள் தன் ஆதங்கத்தைச் சொல்ல, “அட நீ ஒன்னு அரசன் படிப்புக்கு ஒரு நல்ல வேல கெடைக்கும்… அவன் தன்னோட தம்பி தங்கச்சிங்க படிப்புக்கும் நமக்கும் உதவுவான்… நீ கவலைப் படாம இரு..!” சுப்பிரமணியம் தன் துணைவிக்கு ஆறுதலும் தேறுதலும் சொன்னார்.

அந்நேரத்தில்தான்…!

சுப்பிரமணியத்தின் எதிர்பார்ப்பில் ஒரு விரிசல் விழுந்தது மகன் வாயிலாக…அது என்னவென்றால்: ‘நான் படிச்ச படிப்புக்கு எனக்கு இருக்கிற கல்வித் தகுதி, திறமைக்கு வெளிநாட்டுக்குப் போனாதான் நெறையசம்பாதிச்சு வசதியா வாழ்க்கையை அமைச்சிக்க முடியும்!’ என்பதுதான் அந்த முடிவான தீர்ப்பு.

‘என்னய்யா வெளிநாட்டு வேல… நாம தான் அங்கன போயி வேல செய்யறவங்களுக்கு கையும் பையும் நெறைஞ்சு போயிருக்கறதா நெனச்சிக்கிறோம்… ரொம்பப்பேரு வெடியகால கோழி கூவறதுக்கு முன்னாலயே எழுந்துகிட்டா அன்னக்கி ராத்திரி எட்டு மணிக்குத்தான வீட்டுக்கு வந்து படுக்க வேண்டியிருக்கு… அதுலயும் சில பையனுங்க மேல குடும்பப் பார்வை இல்லாததனால சம்பாதிக்கிற பணத்த குடியும் கும்மாளமா எறச்சுடறதா தெரியுது. அதுக்கு நம்ம நாட்டுலய வேல செஞ்சு கொஞ்சம் கொறஞ்ச வருமானமா இருந்தாலும் நிம்மதியா இருந்துட்டு போகாலமேய்யா…நம்ம நாட்ல இல்லாத வசதியும் வாய்ப்புமா!’

அன்று ஒருநாள், வெளிநாட்டு வேலை பற்றி நண்பர் ஒருவர் சொன்னது மனத்தின் ஒரு பக்கவாட்டில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. அப்போது, சுப்பிரமணியத்தின் மன ஆழத்தில் என்றோ பதிந்திருந்த அந்த முள் உறுத்தியது. தாயும் தந்தையும் உடன் பிறப்புக்களும் வறுமைக் கோலத்துடன் நின்ற காட்சி பழுப்பேறிப்போன வெள்ளை கறுப்பு நிழற்படமாக.

‘வேண்டாய்யா அரசு… நீ எங்கள விட்டுப் பிரிஞ்சு வெளி நாட்லதான் போய் வேல செஞ்சு சம்பாதிக்கணும்ணு இல்ல… ஓம் படிப்புக்கு ஏத்த வேல நம்ம நாட்லயே கெடைக்கும். அதனால இங்கயே ஒரு வேல தேடி செய்யறதுதான் எனக்கு நல்லதாப் படுது.. அதோட உனக்குப் பெறகு ரெண்டு பிள்ளைங்களைப் படிக்க வைக்கணும்.. அதுக்கு உன்னோட வருமானமும் தேவையாயிருக்கு..! உன்னோட படிப்புக்கு நம்ம கிட்ட இருந்த ஒரு வீட்டையும் விக்க வேண்டி வந்துடுச்சு… எனக்கும் உங்க அம்மாவுக்கும் வயசும் ஆகிப் போச்சு..!’

தந்தையின் வேண்டுகோளும் ஒருவகை கெஞ்சுதலோடு மகனுக்கு முன் வாசித்தளித்த விண்ணப்பங்களும் சருகாகப் போயிருந்தன. அரசன் தன் பிடியில் உடும்புகூட தோற்று விடும் உறுதியில் இருந்தான். அவன் படித்த நிபுணத்துவத் துறையில் ‘டாலர்’ வருவாயில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்புக் கடிதம் வந்திருந்தது. அதனால், வெளிநாட்டு அதுவும் அமெரிக்க நாட்டு வெளிச்சம் அவன் மனமெல்லாம் பிரகாசிக்க மற்ற எதையும் யோசிக்க வேண்டியவனாயிருக்கவில்லை.

‘அரசன், மோட்டார் தொழில் நுட்பத் துறையில ஆய்வு செய்துபுதிய கண்டு பிடிப்புக்கள கண்டுபிடிக்கிற அளவில சிறப்பா தேர்ச்சி பெற்று இருக்கிறீங்க… இங்கயே ஒரு சின்ன அளவு தொழிலையோ தொழிற்சாலையையோ ஆரம்பிக்கலாம். அதோட நம்மகிட்ட அதற்கான முதலீடு இல்லாவிட்டாலும் அதுக்கு கடன் வசதி செய்து கொடுக்க நம்ம சமுதாயத்திலயே தூரநோக்கு சிந்தனை கொண்டவங்க இருக்காங்க… நம்மைப் போன்ற இந்திய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து செய்தோம்னா நம்ம வருங்கால இளைய வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேல கொடுக்க முடியும்..!’

அவனுடன் கல்வி கற்றுத் தேறிய ஒரு நண்பன் கூறிய கருத்துக்கு, “எனக்கு அதில ஆர்வம் இல்ல, படிச்சதுக்கு வெளிநாட்ல ஏற்ற வேலய தேடிக்கிட்டு கைநெறைய சம்பளம் எடுத்து ‘லைப்’ல செட்டில் ஆகற விட்டு என்னய்யா சமுதாயம் அது இதுன்னு பேசிக்கிட்டு..!” இப்படி முகத்தில் அறையாத குறையாகப் பேச அந்த நண்பன் அன்
றையிலிருந்துஇவனைப் பார்த்தால் கொஞ்சம் விலகியே சென்று விடுவான்.

‘அப்பா, அவங்க அத சொல்றாங்க இதைச்சொல்றாங்கன்னு கண்டவங்க பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு நிக்காதீங்க… உங்களையும் அம்மாவையும் நல்லா வச்சிருக்கணும்… என்னோட தம்பி தங்கச்சிங்க என்னைப் போலவே மேல் படிப்பு படிக்கணும்… அதுக்கு நான் வெளி நாட்டுக்குப் போய் வேல செய்யணும். நம்ம நாட்ல வேல கெடைக்குந்தான்… என் படிப்புக்கேத்த சம்பளம் வெளிநாட்ல தான் கெடைக்கும்…!’

இறுதியாக மகன் சொன்ன சொற்கள் சுப்பிரமணியத்தின் மனதுக்குள் நுழைந்து ஒரு குடைச்சலை ஏற்படுத்தியது. ‘அன்று அப்படித்தானே… வாழ வழி இருந்தும் வாயசாளிகளான பெற்றோரையும் உடன் பிறப்புக்களையும்விட்டுவிழிகளில் சோகம் சுமக்க இந்த நாட்டுக்கு கப்பல் ஏறி வந்தேன்’.

***

விமான நிலையத்தின் வெளி வாசலிலேயே நின்று மகனுக்குக் கையசைத்து வழியனுப்பி பயணிகள் கூட்டத்தில் அவன் கலந்து பார்வை மறையும் வரை காத்திருந்து வெளியே வந்தார்கள் சுப்பிரமணியமும் செல்லம்மாவும்.

அப்போது..!

சுப்பிரமணியத்தின் விழிகளில் எதற்காகவோ சுரந்த நீர் குளிர் அறையிலும் காய்ந்து போயிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *