(இதற்கு முந்தைய ‘ரெண்டு பெண்டாட்டிச் சங்கடங்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
பாண்டி அண்ணாச்சி வேகமா கோமதியைப் பாக்குறதுக்குப் போனார்.
அவள் அவர் சொன்னதைக் காதில் போட்டுக் கொண்டாளா இல்லையான்னே தெரியலை. அவளும், அவளுக்குத் தலைக்குமேல் கிடந்த சோலிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘எல்லாம் நீ போட்ட பிச்சைதானே; நீ சம்மதிச்சி; நீயே பெண் பாத்துக் கட்டி வச்சதின் பலன்தானே இது’ன்னு புருசன் கெடந்து உள்ளுக்குள் உருகுவது அவளுடைய மனசுக்குத் தெரியவே இல்லை. ‘ஒனக்கு வாரிசு வந்தா எனக்கென்னா’ன்னு அவளின் மனம் பாறையாய் இறுகிப் போயிருந்தது.
இசக்கி அண்ணாச்சிக்கு ஒரு நிமிசம் மனம் வெதும்பித்தான் போனது. வாரிசு உருவாகிவிட்டது என்ற சந்தோசம்கூட வடிந்து போய், ரொம்ப நேரம் மச்சிக்குப் போய் தனியாக உக்கார்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கோமதியின் பாராமுகம் அவருடைய மனசை மிகவும் காயப்படுத்தி விட்டது. மனசென்ன இப்படி மனிதர்களுக்கு மாறிப் போய்விடுகிறது…
நேற்று அவள்தான் ‘வாரிசுக்காக நீ இன்னொரு கல்யாணம் செய்துகொள்’ என்றாள். ஆனால் இன்று, ‘உனக்கு வாரிசு உருவானால் எனக்கென்ன’வென்று முகத்தைத திருப்பிக்கொண்டு போகிறாள். எதிலும் அக்கறையோ ஈடுபாடோ இல்லாமல் இருந்தாள். இது கோமதியின் மன நிலையில் ஏற்பட்டிருந்த ரொம்பப் பெரிய திருப்பம். இதுக்கு ஆதாரமா அவளின் உடம்பில் சரியாக அதே கால கட்டத்தில் மாத விலக்கு சற்றுத் தூர்ந்து போனதைச் சொல்லலாம். பெண்ணின் மன அமைப்பை அவளின் உடல் அமைப்பு கைவிட்டுக் கொள்கிற விசித்திர பருவம் அது. பெண் என்பவளின் தனிப்பட்ட ஒரு உற்சாக அடையாளம் பறி போகிற கட்டம் அது.
ஏற்கனவே தாய்மையையே இழந்து கிடக்கும் கோமதியின் மனம் இந்த இழப்பையும் பெற நேர்ந்திருந்த சமயத்தில், நப்பின்னை வாரிசு ஒன்றை சுமந்து கொண்டிருக்கிறாள் என்ற செய்தியையும் தாங்கிக் கொள்ளுமா? அவளும் பெண்தானே? இனி என்ன பாக்கி இருக்கு? எல்லாமே அவ்வளவுதான். இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது. வெற்றி நேற்று வந்தவளுக்குத்தான்! கோமதிக்குப் பொறாமை வந்தது. எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்ற கோபம் வந்தது. குரோதம் வந்தது. இனியென்ன அவள் கொடிதான் பறக்கும் என்ற வெறி வந்தது. யாரையாவது பழி தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சி வந்தது.
அதன் பலன் – நப்பின்னையின் வயிற்றில் ஒரு வாரிசு உருவாகியிருக்குன்னு இசக்கி அண்ணாச்சி ஓட்டமா ஓடி வந்து சொன்ன போது, ‘ஒனக்கு வாரிசு வந்தா எனக்கென்ன?’ என்கிற மாதிரி எதுவும் பேசாமல் மெளனமாக ஒரு பார்வை பாத்தாளே…! அந்த மெளனத்தைத்தான் அடுத்த இருபது வருசமும் புருசனிடம் மட்டும் கோமதி தொடர்ந்து காட்டிவிட்டாள். எவ்வளவு முயன்றும் அவரால் அவளது மெளன விரதத்தைக் கலைக்கவே முடியவில்லை. முயற்சி செய்து பார்த்து தோற்றுப்போனார்.
அவர் குளிக்கிற நேரத்தில், வெந்நீர் குளியல் அறையில் தயாராக இருக்கும். சாப்பாட்டு நேரத்தில் சாப்பாடு மேஜையில் தயாராக இருக்கும். இசக்கிக்கு, கோமதியிடம் ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தால், சுவரைப் பார்த்தபடி சொல்லிவிட்டுப் போவார். கோமதி அதுவும் சொல்வதில்லை. அவர்களின் நான்கு சுவர்களுக்குள், ரெண்டு உயிர்களாகத்தான் இருவரும் வாழுந்து கொண்டிருந்தார்களே தவிர, அந்தக் கடைசி இருபது வருடம் புருசன் மனைவியாக அவர்கள் வாழவில்லை.
கோமதியுடன் இசக்கிக்கு இந்தப் பாடென்றால், நப்பின்னையிடம் வேறொரு பாடு. முதல் வாரிசு அவளுடைய வயிற்றில் உருவாகி இருக்கிறது என்பது உறுதியான உடனே அவளின் பேச்சும் ஒரு மாதிரியாகி விட்டது.
“போதுமா, சந்தோசந்தானே இப்ப?” என்று புருசனைப் பார்த்துக் கேட்டாள்.
“ஏன் ஒனக்கு இதில் சந்தோசம் இல்லையா?” இசக்கி அண்ணாச்சி திருப்பிக் கேட்டார்.
“நீங்கதான் ஆசைப்பட்டீங்க வாரிசு வேணும்னு. இந்தா உண்டாயிடுச்சி வாரிசு. இன்னும் எட்டு மாசத்லேயே இந்த வாரிசை பெத்தும் குடுத்திட்டா என் பெரிய கடமைல ஒண்ணு முடிஞ்சிரும்!”
“என்ன திடீர்ன்னு என்னவோ போல பேசறே?”
“உண்மையைப் பேசினா, என்னவோ போலப் பேசறேனா?”
“ஓ அப்பப் பேசு பேசு.”
இசக்கி பேசாமல் இருந்து விட்டார். வாரிசு உருவான நேரமே சரியில்லையோ என்று கூடப் பயந்தார்.
கோமதி எவ்வளவுக்கு எவ்வளவு பேசாத ‘ஊமைக் கோட்டானாக’ இருந்தாளோ, நப்பின்னை அத்தனைக்கு அத்தனை பேசிப் பேசியே தீர்த்தாள். ஆனால் இசக்கி அண்ணாச்சிதான் விட்டேத்தியாக அவர் பாட்டுக்கு இருந்தார். எவனும் என்ன வேண்டுமானாலும் பேசிட்டுப் போகட்டும் என்று முதல் வாரிசு பிறக்கப் போகிறதுக்காக சகோரப் பறவை மாதிரி காத்துக் கிடந்தார்.
சரியா சித்திரை மாத வெயிலில், இசக்கி அண்ணாச்சியின் அம்பத்தி ரெண்டாவது வயசில், நப்பின்னையை அவர் கல்யாணம் செஞ்ச ரெண்டாவது வருசம் அவரின் முதல் வாரிசு அழகான ஆம்பளைப் பிள்ளையா வெள்ளை வெளேர்ன்னு பிறந்தது. இசக்கி அண்ணாச்சி எதிர்பார்க்கவே இல்லை இதை. அப்படியொரு அழகுல ஆண் வாரிசு வந்திருக்கு.
புதுசா வீடு வாங்கி அதில் நப்பின்னையைக் குடியேற்றிய போதே நிறைய பேர் அந்த வீட்டை ரொம்ப ராசியான வீடு என்று சொன்னார்கள். நெசம்தான் அவர்கள் சொன்னது. இசக்கி அண்ணாச்சி அவருடைய முதல் வாரிசுக்கு சரவணன் என்று பெயர் வைத்தார். சரவணன் பிறந்த ரெண்டு வருசம் கழித்து அண்ணாச்சிக்கு இன்னொரு ஆண் வாரிசு பிறந்தது. ரெண்டாவது ஆண் வாரிசும் அழகா வெள்ளை வெளேர்ன்னுதான் பிறந்தது. ரெண்டாவது வாரிசும் ஆம்பிளைப் பிள்ளை என்பதில் இசக்கி அண்ணாச்சிக்கி ரொம்ப ரொம்ப சந்தோசம்.
அண்ணாச்சியைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல பலர் வீட்டுக்கு வந்திருந்தனர். அதில் அவருடன் படித்த பவளக்காரரும் அடக்கம். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், “ரெட்டைக் குதிரைகள் மாதிரி ரெண்டு ஆம்பளைப் பிள்ளைங்களை வாரிசா பெத்து வச்சிருக்கேன்… இதை சுவர்ல எழுதிப் போடறதுக்கு இந்த ஊர்ல எந்தப் பயலையும் காணோம்”னு, வேற யாரையோ சொல்வது மாதிரி, பவளக்காரர் கொஞ்சம் தள்ளி நிக்கறதைப் பாத்துக்கிட்டே ஜாடையா சொன்னார்.
இசக்கி அண்ணாச்சி இந்த மாதிரியெல்லாம் ஜாடைப் பேச்சு பேசாமல், வாயை அடைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது? நெறய பேருக்கு சனி நாக்கில்தானே!
‘எழுதிப் போடவா சொல்ற? எழுதறேண்டா பனங்காட்டு நாயே! எழுதறேன். காலம் வரும்போது எழுதறேன்’னு மனசுக்குள் முனங்கிக்கொண்டே போனார் பவளக்காரர். அதென்னவோ பள்ளிக்கூட காலங்களில் இருந்தே அண்ணாச்சிக்கும் பவளக்காரருக்கும் அப்படியொரு உள்குத்துப் பகை.
இசக்கி அண்ணாச்சி ரெண்டாவது வாரிசுக்கு முருகன் என்று பேர் வைத்தார். சரவணன்-முருகன்!
‘இதிலெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்பது மாதிரி, பவளக்காரருக்கு வயிறு பற்றி எரிந்தது.
கதை முருகனோடு நின்று போகலை… அவன் பிறந்து சரியா ரெண்டு வருசம் கழித்து செந்தில்!
நப்பின்னையை இசக்கி அண்ணாச்சி கல்யாணம் செஞ்சி ஆறு வருசங்களில் வரிசையா மூன்று வாரிசுகள். சரியா ரெண்டு வருசத்துக்கு ஒன்று என்ற கணக்கில்…!
ஆனால் பவளக்காரருக்கு, பள்ளியில் முட்டைகளாக வாங்கியவன், இப்போது ஐம்பது வயதிற்கு மேல் அழகழகாக மூன்று ஆண் வாரிசுகளைப் பெற்றுவிட்டானே என்கிற பொறாமைத் தீ கனன்று கொண்டேயிருந்தது…
மூன்று வாரிசுகளோடு ‘போதும்’ என்று இசக்கி நப்பின்னையிடம் ஏனோ ‘கட் அண்ட் ரைட்டா’ சொல்லிவிட்டார்.
இதை அவளிடம் ஏன் சொல்ல வேண்டும்? தெரியலை! ஆனால் அவர் அப்படிச் சொன்னது நப்பின்னைக்கு ‘அப்பாடா’ன்னு இருந்தது.
இனிதான் புயல் பயங்கரமா அடிக்கும் போல