மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 3,476 
 
 

‘காலம் மாறீட்டது, கதை சொல்றாளாம் கதை!’ உங்க அம்மவுக்கு அறிவே இல்லை.. மாமியாரைக் கடிந்து கொண்டாள் மகேஸ்வரி.

‘என்னடி சொல்றே..?! மாமியார் மருமகள் பிரச்சனைக்கு அளவே இல்லாம போச்சு.!’. அதட்டினான் அழகேசன்.

‘பின்ன என்ன? எப்ப பாரு கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம மாடு சோளத் தட்டையை மெள்றா மாதிரி வாயில வெத்தலை போயிலையைக் குதப்பிமென்னு , சின்னப்பிள்ளைப் பார்க்குதேன்னு கூட விவஸ்தை இல்லாம தின்றது…, அந்த சின்னக் கொழந்தை வெற்றிலை கேட்டா, ‘சின்ன பிள்ளைங்க வெற்றிலை போடக்கூடாது! போட்டா கோழி, முட்டும்கறது..!’ கறுவினாள் மாமிமாரை மகேஸ்வரி.

‘இதுல என்னடி தப்பு இருக்கு?! சின்ன கொழந்தைங்க வெற்றிலை பாக்கு போதை வஸ்துக்கு அடிமையாயிடக் கூடாதேன்னு ‘கோழி’ முட்டும்னு சொன்னா, பயமுறுத்தினா அதுல என்ன பெரிய தப்பு?!’ கேட்டான் அழகேசன்.

‘கெட்ட பழக்கதைத் தடுக்க நெனைக்கறவங்க தான் மொதல்ல வெற்றிலை போடாம இருக்கணும்!. அதை விட்டுட்டு, முட்டாத கோழியை முட்டும்னு சொன்னா, நாளைக்கு குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறம் கோழிக்குக் கொம்பில்லையே?! அது எப்படி முட்டும்?! பாட்டி பொய் சொல்றா? பாட்டி சொல்றதெல்லாமே பொய்யத்தான் இருக்கும்னு நெனைச்சா என்னவாறது?! என்றாள்.

‘அவள் கேள்வியில் நியாயம் இருக்கவே அழகேசன் அம்மாவைப் பார்த்தான் அப்பாவியாக!

இருவர் பேச்சையும் இம்மி பிசகாம கேட்ட மாமியார் ராசாத்தி பாட்டி ரம்யமான தன் குரலில் சொன்னாள்’ என்ன உன் பொண்டாட்டிக்கு இப்ப பிரச்சனை? கோழி முட்டும்னு நான், சொன்னதுதானே?’ என்றாள்.

‘ஆமாம்மா… ! கோழிக்குத்தான் கொம்பில்லையே..?! அப்புறம் ஏன் கோழி முட்டும்னு பொய் சொன்னே? மாடுதானே முட்டும்..மாடு முட்டும்னு சொல்ல வேண்டியதுதானே? அதுதானே முட்டும்?!!’ அம்மாவைக் கேட்டான் அழகேசன்.

‘இத பாருடா! ‘என் நாக்குல நஞ்சு இருந்து, நான் சொன்ன சொல், அறச்சொல்லாகி , மாடு முட்டும்னு சொல்ல, கடைக்குக் கிடைக்குப் போற கொழந்தையை ரோட்டுல திரியற மாடு நெசமாவே முட்டீட்டா? இப்பத்தான் வெவஸ்தை இல்லாமா மாடுக கேட்பாரற்று மேயுதே ரோட்டுல?! அது, கொழந்தைக்குக் கஷ்டம்தானே?! அதான் முட்டாத கோழியை முட்டும்னு சொன்னேன்!. மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே தானே இனிக்கும்?! இது ஒன் பொண்டாட்டி கிழவியானாத்தான் உனக்குப் புரியும். அதுவரை உன்ன மாதிரி அம்மாவை நம்பாதவங்க, ஆத்துக்காரி சொன்னதுக்காக ஆயிரம் கேள்விக கேட்பாங்க! என்றாள் ராசாத்தி.

அம்மா கால்களில் கண்ணீர் மல்க விழுந்து வணங்கினான் அழகேசன். மலை மலைக்க பார்த்துக் கொண்டு மட்டும் நின்றாள் மகேஸ்வரி.

Print Friendly, PDF & Email
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *