முள்ளை முள்ளால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 8,022 
 
 

திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது.

புதிதாக வந்திருந்த ஜி.எம். சுதாகர் அவளை விழுங்கி விடுவதைப்போல் அடிக்கடி உற்றுப் பார்ப்பதும், இரட்டை அர்த்தம் தொனிக்க செக்ஸியாகப் பேசி அதிகமாக வழிவதும் வர வர அதிகமானது. அவளுக்கு சுதாகரை சமாளிப்பது சிரமமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

திவ்யா அந்த கம்பெனியின் சென்னை கிளையில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்கிறாள்.

நல்ல அழகு. பெண்களுக்கு அழகுதானே பல சமயங்களில் சத்ரு? ஐந்தரை அடி உயரத்தில், பாப் கட்டிங் செய்த தலை முடியுடன், வளப்பமாக கோதுமை நிறத்தில் பார்ப்பதற்கு ஒரு அழகான ஸிந்திப் பசு மாதிரி இருப்பாள். தான் அழகு என்பதை தன் பதின்மூன்று வயதிலேயே உணர்ந்து கொண்டவள். அந்த வயதிலிருந்தே அவள் எதிர்கொண்ட ஆண்கள் ஏராளம். ஆனால் அனுபவம் கொடுத்த எச்சரிக்கையினால் ஆண்களை ஒரு குறிப்பிட்ட எல்லையிலேயே நிறுத்தி விடுவாள்.

இப்போது மும்பையில் இருந்து பிரமோஷனில் வந்திருந்த சுதாகரை அம் மாதிரி ஒரு எல்லையில் நிறுத்த முடியாது தவித்தாள். ஏனெனில் சுதாகர் அவளுடைய ஜி.எம். மற்றும் பாஸ்.

அன்று புதன் கிழமை. அவனுடைய கேபினுக்கு சென்ற திவ்யாவிடம், சுதாகர் எப்பவும் போல் வழியலானான்.

“திவ்வு….நாம ரெண்டு பேரும் வர்ற சனிக்கிழமை மகாபலிபுரம் போகலாமா? ஆபீஸில் அதிக வேலைன்னு உன் ஹஸ்பெண்டிடம் சொல்லிட்டு வா. நாம காலையில் போயிட்டு சாயங்காலம் வந்துரலாம்…பகல்ல ஏஸி ரூம்ல கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்” என்றான்.

“………………”

“நீ ரொம்ப மாடர்னா இருக்கறதுனால இதெல்லாம் புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். யோசிச்சு நீ நாளைக்கு பதில் சொன்னாப் போதும் திவ்வு, யூ மே கோ நெளவ்”

திவ்யா வெளியே வந்தாள்.

இதற்குமேல் இவனை இனி அனுமதிக்கக்கூடாது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.

அன்று இரவு பெட்ரூமில் தன் கணவனிடம் நடந்தவைகளைச் சொல்லி, சுதாகரின் சனிக்கிழமை மகாபலிபுரம் அழைப்பையும் சொன்னாள். அவள் கணவன் “கவலையே படாத செல்லம், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கலாம்…நான் சொல்றபடி செய்” அவள் காதில் கிசு கிசுத்தான்.

மறுநாள் வியாழக்கிழமை. அலுவலகத்தில் சுதாகர் திவ்யாவை தன் கேபினுக்கு வரச் சொன்னான்.

“என்ன திவ்யா நேற்று நான் சொன்ன சனிக்கிழமை மகாபலிபுரம் ப்ரோகிராம் உனக்கு ஓகேதானே?
கண்டிப்பா வருவீல்ல….வரணும்.”

“கண்டிப்பா வரேன் சார்.”

“எனக்குத் தெரியும் நீ மாடர்ன் கேர்ள்… எதையும் அனுசரிச்சுப் போவேன்னு” சுதாகர் உற்சாகத்துடன் பல்லிளித்தான்.

“நான் ரொம்ப மாடர்ன் டைப்தான்; நீங்களும் அதே மாதிரி மாடர்னா இருப்பீங்கன்னு எதிர் பார்க்கலாமா?”

“அதுல என்ன சந்தேகம் திவ்வு, உனக்கு என்ன வேணும்னு சொல்லு….பிரமோஷந்தானே, கமான் கம் அவுட்….அப்ரெய்சலாவது, கிப்ரெய்சலாவது உன் அழகுக்கு ஒரு சுண்டைக்காயும் வேண்டாம்”

“பெரிசா ஒண்ணுமில்ல சார்…நாம மகாபலிபுரம் போறதப்பத்தி நேத்து என் ஹஸ்பெண்டிடம் சொன்னேன். அவரு ஒரு நல்ல ஐடியா கொடுத்தாரு. நீங்களும் உங்க மனைவியை மகாபலிபுரம் கூட்டிட்டு வந்தீங்கன்னா, நாம எல்லோருமே சேர்ந்து இருக்கலாம். ரிலாக்ஸ்டா நைட்டு தங்கிட்டு சண்டே வந்தா போதும். அலுக்க அலுக்க இஷ்டப்படி எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாம்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு… உங்க வைப் மாயாவை நம்ம கம்பெனி ஆனுவல் டேல பார்த்திருக்காரு…அவருக்கும் இதுல ஆசைதான். நானும் சரின்னுட்டேன், உங்களுக்கும் சம்மதம்தானே சார்?”

சுதாகர் தொப்பலாக வியர்த்தான்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *