முறைமாமன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 8,291 
 
 

“வீரம்மா, ஆத்தா சொன்னதுக்காக நி சம்மதிக்கனும்னு அவசியமில்ú. உன் நிஜமான அபிப்ராயத்தை சொல்லலாம். நான் அதற்காக வருத்தப்படுவன் அல்ல, அதை நீ புரிஞ்சுக்கணும்…”

வாய்க்காலில் முகம், கை கால்களை கழுவிக்கொண்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தபடியே சொன்னான் மருது.
சாப்பாட்டுத் துôக்கை மரத்தடியில் வைத்துவிட்டு மாமனை நிமிர்ந்து பார்த்தாள் வீரம்மா, அவளுக்கு எதுவும் புரியவில்லை, குழப்பத்தோடு நின்றாள்.

“என்ன புள்ளே… புரியலையா? அதான் ஒனக்கும் எனக்கும் கண்ணாலம் பண்ண வர்ற வெள்ளிக்கிழமை முகூர்த்தம் வைக்க ஆத்தா நாள் பார்த்திருக்கே… அதைதான் சொல்றேன்…”

“மாமா, உனக்கு இந்த கண்ணாலத்திலே இஷ்டமில்லையா?”

“அது இல்லே புள்ளே… என் அக்கா இருந்தா அவ என்ன நினைப்பாளோ? என் மாமன் அக்காவை சொல்லாலே சாகடிச்சிட்டு உன்னைப்பத்தி கவலைப்படாம, எரிஞ்சிட்டுப் போயிட்டார். ஆத்தா எடுத்து வளர்த்ததற்காக இதற்கு நீ சம்மதம் சொல்லணும்னு அவசியம் இல்லே, ஏன்னா உனக்குன்னு உணர்வுகள் இருக்கும். அதிலே ஆசாபாசங்கள் இருக்குமில்லையா அதற்காக கேட்கிறேன்”

“உண்மைதான் மாமா. உனக்கு இந்தக் கண்ணாலத்தில சம்மதம்னா, எனக்கும் சம்மதம்தான் மாமா”

“என் அக்கா பெண்ணை கட்டிக்க எனக்கென்ன கசக்குமா என்ன? கொஞ்சம் எனக்கு வயசு கூட… என் கூட்டாளிகள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க, பரவாயில்லை, சோத்தைப் போடுபுள்ளே“.

மருதுவின் பதிலால் வீரம்மா முகம் வெட்கத்தால் சிவந்தது.

மருது சாப்பிட்டு முடிந்ததும் தூக்கை எடுத்துக் கொண்டு வயல்வரப்பில் உல்லாசமாக சினிமா பாட்டை முணுமுணுத்தவாறு நடந்தாள் வீரம்மா.
வீட்டை அடைந்த வீரம்மா அங்கு நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து திகைத்து நின்று விட்டாள்.

“இதப்பாரு கிழவி… பெத்தவன் நானிருக்க என் மவளுக்கு நீ என்ன கண்ணாலம் பண்றது?”

“நான் அவளோட ஆத்தா”

“இந்த கிண்டல், கேலி எல்லாம் வேண்டாம். என் மக வீரம்மாவை என் தங்கச்சி மவன் வடிவேலுவுக்குத்தான் கட்டறதா வாக்கு கொடுத்திருக்கேன்” அடித்து மாயன் பேசினான்.

“பெரிய சத்தியவான். இத்தனை நாளா ஆளை காணோம். இப்ப வந்துட்டாரு… என்னப்பா இங்க கூட்டம் போங்க அப்பால” கிழவி சப்தம் கேட்டாள்.

அதற்குள் ஊர் பெரியவர் ராமசாமி குறுக்கிட்டார்.

“இந்த பாரு பெரியம்மா, நீ இப்படி ஏடாகூடமா பேசறது நல்லாயில்லே. என்ன இருந்தாலும் வீரம்மா மாயனோட பொண்ணு. அவர்கிட்டே ஒரு வார்த்தை நீ இதுபற்றிக் கேட்டிருக்கணும் கேட்டியா?”

“அந்த ஆளு யாருய்யா இதை கேக்க?”

‘என்ன பெரியம்மா கேட்கிறே, மாயன் உன் மாப்பிள்ளை வீரம்மாவோட அப்பன், உன் மகளுக்குப் புருஷன், நீ இப்படிக் கேக்கலாமா?’

“புருஷன் பெரிய சீமையில் இல்லாத புருஷன்… கண்மூடற வரைக்கும் கட்டினவளை கரை சேர்க்கிறவனுக்குப் பேருதான் புருஷன், நாலு பெத்தாப்புல என் மகளை நல்லபடியா வைச்சுப் பொழைச்சானா? நல்லதங்கா போல இருந்த என் மகமேல சந்தேகப்பட்டு நடத்தை கெட்டவள்னு பேசுனான். அவ ரோஷக்காரி வயித்துல புறந்தவ நாண்டுகிட்டு செத்துட்டா, செத்தபிறகு ஒரு நாளாவது வந்து பெத்த மகளைப் பார்த்திருப்பானா? பெத்தவனாம், இவனுக்கேதுப்பா புள்ளை… வந்துட்டானுங்க பெரிசா, போங்கையா அப்பால…”

“இந்தாப் பாரு கிழவி, இதை நீ சொல்லக்கூடாது, உன் பேத்தி சொல்லணும். அது சொன்னா நாங்க கேட்டுக்கிறோம். வீரம்மா உங்கப்பனுக்கு நீ என்னம்மா பதில் சொல்லப் போற, முன்னால வந்து சொல்லும்மா..,” பெரியவர் ராமசாமி சொன்னார்.

வீரம்மா கம்பீரமாக முன் வந்தாள். சுற்றிலும் எல்லோரையும் பார்த்தாள். பின் நிதானமாக பேசினாள்.

“இவரை யாருன்னே எனக்குத் தெரியாது, அப்பா யாருன்னு பெத்தவங்கதான் சொல்லணும். பெண்ணைப் பெத்தவ இப்போ இங்கே இல்ல. எனக்குத் தாயும் தகப்பனுமா இருந்ததெல்லாம் எங்க ஆத்தாதான். ஒருவேளை என்னை வந்து அடிக்கடி பார்த்து, என் நல்லது கெட்டதுல பங்கு எடுத்துட்டு இருந்தாலாவது அப்பான்னு நினைக்க வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பும் இல்ல, எனக்கும் நல்லது கெட்டது தெரியும். எங்க மாமாவைத்தான் நான் கண்ணாலம் கட்டிக்கப் போறேன். அனாவசியமா இங்கு வந்து கூச்சல் போட்டாலோ குழப்பம் செய்தாலோ நான் போலீசு உதவியை நாட வேண்டியிருக்கும். எல்லோரும் அமைதியா போயிடுங்க…” சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

மாமன் மட்டுமல்ல, அவனுடன் பஞ்சாயத்துப் பண்ண வந்திருந்த அத்தனை பேருமே வாயடைத்துத் திரும்பினர்.

– தினபூமி, மங்கையர் பூமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *