முதல் ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 11,722 
 

பார்ப்பதற்கு திலீபனைப் போலவே இருந்த அந்த தூரத்து ஆளை ரவி திரும்பி பார்த்தார். அவரைக் காணவில்லை! அலைகள் வரைந்த நீளக் கோட்டையொட்டி தேடிப் பார்த்தார். பின் திரும்பி பார்க்கையில் அவரும் அவருடன் வந்த பெண்மணியும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

அது திலீபனாக இருந்திருக்கலாம். கூட வந்த பெண் சங்கரியாக இருந்திருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை சாத்தியப்படுத்த. சங்கரியும் திலீபனும் காதலித்தார்கள் தானே? யாரைக் கேட்டு அறிந்துகொள்வது?

சங்கரியின் வீட்டுக்கு போக வேண்டியிருந்தது. கடற்கரையின் கடைசி மனிதராக அமர்ந்திருந்த ரவி கைப்பையை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார், நினைவுகளில் மனம் புதைய புதைய.

அந்த டவுன் பஸ் பயணத்தை ரவி இன்னும் மறக்கவில்லை. மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர்ந்த பேருந்து, வயல்வெளிகள் சூழ்ந்த தார்ச்சாலையில் மெதுவாக சென்றுகொண்டிருந்தது. கூட்டமில்லை. மாலைக் காற்று ஜன்னல் வழியே புகுந்து எதையோ படபடப்பாக பேருந்தெங்கும் தேடியபடி வெளியேறியது. ஜன்னல் பக்கமாக அமர்ந்திருந்த சங்கரி கூந்தலையும் தாவணியையும் மாற்றி மாற்றி கவனித்தபடி அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின் இருக்கையில் ரவியும் திலீபனும் அமர்ந்திருந்தார்கள். திலீபனும் சங்கரியும் ஒரே ஜன்னல் வழியே உலகத்தை கவனித்தபடி வந்தார்கள். ரவி இருவரையும் கவனித்தபடி வந்தார். திலீபன் ஏதோ ஒரு பாடலை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்ததாக நினைவு. மூவரும் முகத்தில் விலகாமல் கிடந்தது ஒரு சின்னப் புன்னகை. அன்று ரவி சங்கரிக்கும் திலீபனுக்கும் மிக நெருக்கமாக உணர்ந்தார். அந்தத் திருவிழாவுக்கு சென்று திரும்பி நாள் தவிர, அப்படி ஒரு நெருக்கமான பொழுது அமையவே இல்லை.

ரவியின் அப்பா இறந்து அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அப்பாவின் இனம் புரியாத கண்டிப்பு ரவி, சங்கரி, அம்மா ஆகிய மூவரின் வாழ்க்கையிலிருந்து பல சுகங்களைத் திருடியிருந்தது. அம்மாவின் மொத்த எதிர்ப்பும் ஆழமான வேர்கள் கொண்ட மௌனமாக வளர்ந்தது. இரு பிள்ளைகள் பிறந்ததும், அவர்கள் அம்மாவின் மிகப்பெரும் மௌனத்தின் நிழலில் வளரத் தொடங்கினார்கள். அம்மா ரவிக்கும் சங்கரிக்கும் அப்பாவை வெறுக்கக் கற்றுத் தரவேயில்லை. அந்த வீட்டின் இயல்பே அது தான் என்பது எல்லாருக்கும் புரிந்திருந்தது. அம்மா அதை அப்படியே ஏற்றுக்கொண்டது போல, அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்தாள். அப்பாவைத் தவிர வீட்டில் வேறு யாரும் பேசியதே இல்லை. அப்பா இல்லாத நேரங்களிலும் வீடு அமைதியாகவே இருக்கும். எல்லா பிள்ளைகளும் அப்பாவை எதிர்த்து பேசுகிற வயதில், ரவியின் அப்பா படுத்த படுக்கையானார்.ரவிக்கு இருபது வயது ஆன போது அப்பா மாண்டு போய், அந்த அமைதியை நிரந்தரமாக்கினார்.

மூவருக்கும் அப்பாவின் திடீர் மரணம் மிகுந்த குழப்பத்தை தந்தது. சத்தம் போட்டு பேசிக்கொள்ள, வெளிப்படையாக அன்பைச் சொல்லிக் கொள்ள திடீரென வாய்ப்பு வந்திருந்தது. ஆனால் அதை எப்படி எடுத்துச் செல்வது என்று மூவருக்குமே தெரியவில்லை. அப்பா இருப்பதாக நினைத்துக்கொண்டு அதே வாழ்க்கையை தொடர்ந்தார்கள். ரவி பத்திரிக்கையொன்றில் வேலை தேடிக் கொண்டார். சங்கரி பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள். அம்மாவோடு வீட்டிலேயே தங்கிவிட்டாள். அந்த சமயத்தில் தான் திலீபன் வந்து சேர்ந்தான்.

கதைகள் எழுதுபவனாக அறிமுகம் செய்யப்பட்டான். திலீபனை கண்ட முதல் நாள் ரவிக்கு ஒரே விஷயம் தான் தோன்றியது. நிச்சயமாக திலீபனுடைய அப்பா, ரவியின் அப்பாவுக்கு நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டவராக இருக்க வேண்டும்.

திலீபன் உரத்த பேச்சும், சிந்தனைகளுமாக திரிந்தான். சில சமயங்களில் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருந்தான். ரவிக்கு யாரையும் நண்பராக்கவும் தெரியாது, யாராவது அவரை ஆக்கிக்கொண்டால் தடுக்கவும் தெரியாது. திலீபன் ரவியை மிகச்சிறந்த நண்பனாக்கிக் கொண்டான். ரவிக்கு திலீபனும் அவன் எழுதிய சொற்ப கதைகளும் அதிசயங்களாக இருந்தன. ரவிக்கு அந்தக் கதைகள் புரியாத போதும், அவற்றின் வசியத்தன்மைக்கு மயங்கியிருந்தார். பத்திரிக்கை ஆசிரியர் திலீபன் பெரிய எழுத்தாளனாக வருவான் என்று சொல்லும் போதெல்லாம் ரவிக்குப் பெருமையாக இருக்கும்.

ரவி வீட்டுக்கு அழைத்து வந்த முதல் நண்பனாக திலீபன் ஆனான். அவன் வந்த முதல் மாலைப் பொழுதிலேயே வீட்டில் இருந்த அடர்ந்த மௌனத்தை முற்றிலுமாக ஒழித்தான். அப்பாவைப் போலவே, அந்த இரண்டு வருடங்களுக்குப் அந்த வீட்டில் பேசிக்கொண்டே இருந்த ஒரே ஆளாக திலீபனாக ஆனான். வீடு அவனின் சிரிப்புகளால் நிறைந்து கொண்டிருந்தது.

சங்கரிக்கும் திலீபனுக்கும் ஈர்ப்பு இருப்பதாக எப்போது அவர் உணர்ந்தார் என்று நினைவில்லை. முதல் பூ பூத்த பின்னர் ஒரு செடியை கவனிப்பது போல, சங்கரியின் ஏதோ ஒரு புன்னகைக்குப் பின்னரே அவர் கவனிக்க ஆரம்பித்தார். திலீபன் வந்து சென்ற பிறகு அவன் இருந்த இடங்களிலெல்லாம் அவள் சுற்றித் திரிந்தாள். அவன் கதை வந்த இதழ்களை சேமித்து வைத்திருந்தாள். அவனைப் பற்றி அவர் ஏதேனும் சொன்ன அபூர்வ கணங்களில் அவள் அழுத்தமாக அவன் மீதான காதலை அவருக்கு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தாள். எப்போதும் சங்கரியிடம் நேரடியாக பேசாத திலீபன், ஒரு நாள் தேநீர் கொண்டு வந்த கொடுத்தவளிடம் ரவியை முன்வைத்துக்கொண்டு எதோ பேசிய பொழுது, ரவிக்கு இன்பமான அதிர்ச்சியாக இருந்தது. சங்கரிக்கும் அப்படியே இருந்திருக்கும். அதன் பின்னர், முன்னெப்போதும் இல்லாத விதமாக அவர்களின் காதலைப் பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.

நினைப்பதையெல்லாம் தயங்காமல் பேசும் திலீபனுக்கு சங்கரியைப் பற்றி பேசத் தயக்காம் இருக்காது என்று ரவி நம்பினார். ஒரு மாலைப்பொழுது அந்த நம்பிக்கையின் சுடர் மிகப்பிரகாசமாக எரிந்தது.அதன் பின்னரே திலீபன் ஒரு நாள் காணாமல் போனான். மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரவிக்கு இன்று நிச்சயம் திலீபன் சங்கரியைப் பற்றி பேசுவான் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. திலீபனின் அன்றைய புன்னகைகள் இன்றும் நினைவிருக்கிறது அவருக்கு. மிகச்சாதாரணமாக சங்கரியைப் பற்றி பேசி அன்றைய உரையாடலை முடித்துக்கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு அவன் காணாமல் போனான்.

இருந்த இடம் தெரியாமல், எங்கே சென்றான் என்று தெரியாமல் எங்கோ மறைந்தான். அதன் பிறகு அவன் பெயரிட்ட கதைகள் பத்திரிக்கைக்கும் வரவில்லை. வேறெந்த பத்திரிக்கையிலும் வரவில்லை. சங்கரி எப்போதும் போல அமைதியாக இருந்தாள். எனினும், முன்னெப்போதையும் விட அதிகமாகவே ரவி அவளின் காதலை உணர்ந்தார். அம்மாவுக்கு இது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை, சங்கரி தன்னிடம் மட்டுமே இதை பகிர்ந்துகொண்டிருக்கலாம்.

சங்கரிக்கு திருமணம் நடந்த நாள் வரையிலான ஒவ்வொரு நாளையும், ரவி திலீபனைப் பற்றி தகவல் வரும் என்று காத்திருந்தார். அம்மா திருமணப் பேச்சை எடுத்ததும், ரவியும் சங்கரியும் ஒருவரை ஒருவர் ஒரு முறை பார்த்துக்கொண்டதோடு சரி. திருமணம் இனிதே நிகழ்ந்தேறியது.

பேருந்தின் கண்ணாடியின் மேல் சட்டத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த மழை நீரை கவனித்துக் கொண்டிருந்த ரவியின் காதுகளில் ‘ஐஸ் அவுஸ் இறங்கு’ என்று கேட்டது.

மழையில் சிக்காமல் ரவி கடைகளில் ஒதுங்கியபடி நடந்தார். சங்கரிக்கு ஏதாவது வாங்கலாம் என்று தோன்றியது. அவளுக்குப் பிடித்த இனிப்பை வாங்கிக் கொண்டு அவளின் வீடு நோக்கி நடந்தார்.

*************************

கதவைத் திறந்ததும் பேச்சொலிகள் வெளியே சிதறின. ‘எங்கங்க போனீங்க?‘, கற்பகம் கேட்டாள். ‘இதே வேலையா போச்சு மாப்பிள்ளை சார். ஆஊன்னா பீச்சுக்கு போயிர்றது. அப்படி என்ன தான் பண்ணுவாரோம்மா! தெரியலயே’. கற்பகம் சங்கரியின் கணவரிடம் பேசியபடி உள்ளே போய் அமர்ந்தாள். சங்கரி ஹாலில் இல்லை. சங்கரியின் கணவரும் மகளும் ஒரு சோஃபாவில் அமர்ந்திருந்திருந்தனர். கற்பகம் எதிரே அமர்ந்திருந்தாள்.

‘வணக்கம் மாப்பிள்ளை சார்’ , ரவி சங்கரியின் கணவரை பார்த்து புன்னகைத்தார். கற்பகம் கொஞ்சம் நகர்ந்து ரவிக்கு இடம் விட்டாள். ‘புதுப்புடவையா?’ ரவி புன்னகைத்தபடி கேட்டார். ‘இங்க பாரும்மா.’ கற்பகம் பொய் அதிர்ச்சி காட்டினாள். ‘இவரு கண்ணு உறுத்துது. எம் பொண்ணு கல்யாண விஷயம் சொல்ல வெளில வறேன். ஒரு புது புடவ கட்டிக்க கூடாதா?’

சங்கரி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள். ‘வாண்ணே‘. கையில் தோசைத் தட்டு.

‘எங்க வீட்டுத் தலைவர் வண்ட்டாருபா’ பிரகாஷ் குரல் கேட்டு ரவி திரும்பினார். பெட்ரூம் வாசலில் நின்றிருந்தான் பிரகாஷ். ஒரு நிமிடம் ரவிக்கு தன்னையே இளம் வயதில் பார்த்தது போல இருந்தது.

‘எங்கம்மா? பீச்சுக்காமா?’ பிரகாஷ் வந்து ரவி பக்கத்தில் அமர்ந்தான்.

‘வேறெங்கே!’

‘நீ தான்பா இனி வீட்டுத்தலைவன். உன் தங்கச்சி கல்யாணத்த தனியாளா நின்னு முடிச்சிருக்க.’ வாய் விட்டு சிரித்தார் மாப்பிள்ளை சார்.

ரவி புன்னகைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கற்பகமும் பிரகாஷும் ஏதேதோ விடாமல் பேசிக்கொண்டேயிருந்தார்கள். இருவருக்கும் பேச்சு அத்தனை இஷ்டம்.

‘சரி. கல்யாணப் பொண்ணு வீட்டுல தனியா இருக்கா. கிளம்பலாம் சீக்கிரம். நாங்க விஷயத்த சொல்லியாச்சு. நீங்க ஒரு தடவ சொல்லி குடுங்க’ – பூ,பழம் எல்லாவற்றையும் வெளியே எடுத்தாள் கற்பகம்.

ரவி சங்கரியையும் மாப்பிள்ளை சாரையும் எதிரே ஜோடியாக நிற்க வைத்து சொன்னார் – ‘எம் பொண்ணு அனுவுக்கு கல்யாணம். கூட படிச்சவர், கூடவே வேல செய்யுறார். அவருக்கு அனு மேலே இஷ்டம். அவ எங்களுக்கு பயந்து சொல்லாம இருந்திருக்கா. பிரகாஷ் தான் எங்ககிட்ட சொல்லி சண்ட போட்டு முடிச்சு வெச்சாப் போல. முதல்ல அவனுக்கு முடிச்சிருக்கணும்.’ ரவி புன்னகைத்தார். ‘பத்திரிக்கையோட இன்னொரு நாள் வறோம்‘.

எல்லாரும் வாசல் வரை வந்தனர். பிரகாஷ் ஆட்டோ பிடிக்க தெருமுனைக்கு சென்றான். ரவி இருட்டில் சங்கரியின் முகத்தில் எதையோ தேடினார். ‘நாங்க கிளம்பறோம்‘.

தெருமுனை நோக்கி கற்பகமும் ரவியும் நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் சென்றதும் ரவி நின்று திரும்பி சங்கரியை நோக்கி கையசைத்தார்.

– ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *