+2 எக்ஸாம் முடிஞ்சு 2 நாள்தான் ஆனது. நான் அதுவரை எங்கள் மாவட்டத்தின் தலைநகருக்கு கூட சென்றதில்லை. பள்ளி படிப்பை முடித்தவுடன் எதோ பெரிய சுமையை இறக்கி வைத்ததுபோல் இருந்தது. இனிமேல் எதிர்காலத்தை விருப்பம்போல் அமைத்துக்கொள்ளலாம், எங்கும் செல்லலாம் இன்னும் பல முதிர்ந்த எண்ணங்கள் பூத்தது.
பெற்றோர்களிடம் சென்னைக்கு செல்வதாக கூறினேன். அம்மா மறுத்தாங்க. அங்கு என் மாமா வீடு இருப்பதால், ஏதேதோ கூறி சண்டைபோட்டு, நாற்பது நாட்கள் மட்டும் விடுமுறைக்கு சென்று முடிந்தால் வேலைக்கு செல்வதாக கூறி சமாதனம் செய்து அன்று இரவு பக்கத்துவீட்டில் கடன் வாங்கி அம்மா கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
ஒரு வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன். கிட்டத்தட்ட ஏரோப்ளேன்ல ஏறி எங்கோ செல்வதுபோன்ற எண்ணம் எனக்கு தன்னந்தனியாக முதல் பயணம் தலைநகர் நோக்கி பெருமையாக இருந்தது. அருகிருப்பவரிடம் சம்மந்தம் இல்லாமல் பேச்சு கொடுத்தேன்.யதார்த்தமாய் இருப்பதாய் நானே நினைத்து கொண்டேன்
அன்றைய பொழுது சென்னையில் கோயம்பேட்டில் விடிந்தது. அந்த பேருந்தில் கடைசியாக இறங்கும் பயணி நான்தான். அவ்வளவு தூக்கம். தூக்க கலக்கத்தில் இறங்கினால், “எப்பா எவ்ளோ பெருசு” கண்ணை திறந்து நாட்டில் விட்டதுபோல் இருந்தது. எங்க பாத்தாலும் ஒரே மாதிரி இருக்குது. மாமாவுக்கு கால் பண்ணேன் என்னை கோயம்பேட்டில் வந்து அழச்சிகிறேன்னு சொல்லி இருந்தார், இப்போது போனில், எதோ காரணம் சொன்னார் வராததற்கு. அம்மா தன் தம்பியை பத்தி சொன்னது ஞாபகம் வந்தது. “நீச்சல் தெரியாதவனுக்கு கிணத்துல தள்ளி விட்டுத்தான் கத்து கொடுப்பான் போ”. எனக்கும் அதான் வேணும்னு எதோ வசனம் பேசிட்டுதான் வந்தேன்.
இனி அடுத்த அனுபவத்திற்கு, பிளாட்பாரம் நம்பர் எதோ சொன்னாரு பஸ் நம்பர் எதோ சொன்னாரு, எல்லாத்தையும் புரிந்ததுபோலவே கேட்டுவிட்டு, மூனுமணி நேரமா முன்னூறு பேரிடம் கேட்டு கோயம்பேட்டையே ம்-முப்பது சுத்து சுத்தி ஒரு பஸ்ல ஏறிட்டேன், உதவி செஞ்சவங்க மேல தப்பு இல்ல, சரியாய் சொல்றவன் மேல சந்தேகம் தவறாக சொல்றவன் மேல நம்பிக்கை இப்டித்தான் நேரம் போச்சு.
பஸ்ல ஜன்னல் சீட்டுல உக்காத்தேன், பக்கத்துல ஒருத்தர் வந்து அமர்ந்தார். யாருன்னு பாத்தா எங்க மாமா. எனக்கு செம கோவம் வந்திச்சி. இருந்தாலும் சின்ன வயசில் பாத்தது, என் ரோல் மாடல், ஹீரோ, அதனால் சந்தோசமா பேசிட்டிருந்தேன். அவர் நெனச்ச மாறி கத்துகொடுக்க முன்னமே ஆரம்பிச்சடாறுபோல. பஸ்ல ஒருவன் வந்து பிச்சை கேட்டான். நான் கோவமா அவனை விரட்டினேன். என் மாமா இடைமறித்து “டேய் மாப்ள இரு”ன்னு சொல்லிட்டு பத்து ரூபா கொடுத்து அனுப்பிவிட்டு சொன்னார் “அவன் உன்கிட்ட பிச்சை கேக்கல மிரட்டி காசு கேட்கிறான் அவன் சொன்னதை யோசிச்சு பாரு” . நான் யோசித்தால் “அய்யா அனாதை அய்யா யாருமே இல்லையா என்னால உங்கள ஒண்ணுமே பண்ண முடியாதுய்யா” என ஒலித்தது. ஆளு வேற குண்டர் சட்டத்தில் விடுதலை ஆனவன்மாதிரி இருந்தான்.
என் மனதில் நேற்று இரவு பக்கத்து சீட்டுல பயனிச்சவர்க்கு அம்பது ரூபாய்க்கு மேல செலவு செஞ்சது ஞாபகம் வந்தது. எது உண்மையான ஏமாற்றம்னு மனதுக்குள் விவாதம் நடந்தது. நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பஸ்ஸை விட்டு இறங்கிய வுடன் ஒரு தாய் பச்சிளங்குழந்தையை கையில் வைத்து பிச்சை கேட்டது, யாருமே ஒரு ரூபா கூட போடல. எங்க மாமாவை பார்த்தேன். “வாடா மாப்ள போகலாம், “இங்க யாரும் கருணைக்காக பிச்சை போடல, பயத்துலதான் பிச்சை போட்றாங்க அதுனால பேசாம வா”ன்னு இழுத்துட்டு போனார்.
மாமா வீட்டுக்கு போய் ஒரு மணி நேரத்தில் சென்னை வாசியாகவே ஆகிவிட்ட நினைப்பு எனக்கு. எதாவது செய்யணும் எங்காவது போகணும் னு தோணுது. மாமா வேற வெளியிலே போய்ட்டாரு. அக்கா கிட்ட சொல்லிட்டு பக்கத்துல இருக்குற லோக்கல் ரயில்வே ஸ்டேஷன்க்கு போனேன். பத்து நிமிடத்திற்கு ஒரு ட்ரைன் வருது போகுது. வேடிக்கையாக இருந்தது. கூட்டம் கூட்டமாக குப்பையை கொட்டுவது போல மக்களை கொட்டிட்டு போவதும், வருவதுமாக இருந்தது ட்ரைன். எனக்கும் பயணிக்க ஆசையாய் இருந்தது. எதோ ஒரு நினைவில் ஏறிவிட்டேன். டிக்கெட் எடுக்க யாருமே இல்ல. எல்லாரும் எறுறாங்க, இறங்குறாங்க. கண்டெக்டர் இல்லவே இல்ல. யாரும் டிக்கெட் எடுக்கல நானும் எடுக்க ஆள் இல்ல. அப்புறம்தான் புரிந்தது சென்னையின் வளர்ச்சி, சென்னையினா சென்னைதான் என தோன்றியது.
கொஞ்சம் நேரம் ஆகிருக்கும், மாலை நேரம் வந்தது. சரி நெறைய வேடிக்கை பத்தாச்சு. வீட்டுக்கு போவோம்னு நெனச்சேன். இன்னொரு திரும்பி போற ட்ரைன்க்கு, காத்திருதேன். சிறிது நம்ம ஊர பத்தி எதோ யோசித்து கொண்டிருந்தேன். இங்க யாருமே யாரையுமே கண்டுகிறதே இல்ல. இவ்ளோ பேர் வர்ராங்க போறாங்க. நம்ம ஊர்லன்னா கொஞ்சம் நேரம் பஸ் ஸ்டாண்டுல உக்காந்து இருந்தாலே யாராச்சும் நீ எந்த ஊரு என்ன தெருவு அப்பா பேரு என்னன்னு நோண்டி எடுப்பாங்க. ஆனால் இங்க நம்மல கண்டு முதல்ல பேசுற ஒரே ஜீவன் இவங்க தான் “அய்யா சாமி தர்மம் பண்ணுங்க சாமி,”.
திரும்ப நான் ஏறுன ஸ்டேஷனுக்கே, வந்துட்டேன். இறங்குன உடனே ரயில்வே ஸ்டாப் ஒருத்தர் டிக்கெட் கேட்டார். நான் “சாரி சார், எவ்ளோ சார்? னு கேட்டேன் ? அவர் கோவப்பட்டு, “எவ்ளோவா? டிக்கெட் இல்லையா?ன்னார். நான் “ கண்டெக்டர் நீங்க ட்ரைன்ல இல்லவே இல்ல நான் எப்டி எடுக்கிறது? அவர் “ ட்ரைன்ல கண்டெக்டறா? ஹே ஏமாத்துரியா? ஒன்னும் தெரியாத மாறி? ஐநூறுபா பைன் கட்டு..” ன்னார். நான் “ஐநூருபாவா ? சார் நான் ஊருக்கு புதுசுன்னு ஏமாத்த பாக்குறீங்களா? எங்க ஊர்லேந்து இங்க வரவே எறநூறுவதான் ஆச்சு.” அவருக்கு குழப்பம் உணமையிலே இவனுக்கு தெரியலையா இல்ல மென்டலானு நெனச்சு அழச்சிட்டு போய் ஸ்டேஷன்ல உக்கார வச்சிட்டாரு.
ரொம்ப நேரம் ஆச்சு, நான் போனும் எடுத்துட்டு போகல, எங்க மாமா எங்க பாத்தாலும் தேடி அலைஞ்சு ஸ்டேஷனுக்கு வந்துட்டாரு, நான் அப்பதான் நெனச்சேன் எல்லாம் இவரு வேலைதான் இருக்கும்னு. வந்து “பளார்” னு ஒன்னு விட்டாரு. எல்லாரும் பாக்குறமாறி, அந்த ஸ்டாப் வந்து தடுத்து விட்டு, டிக்கெட் மேட்டரை சொன்னார். இதை முதலே புரிந்து வைத்திருக்கும் மாமா “ சார் இவனுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் கம்மி, வெளியூர்லேருந்து வந்திருங்கான் வேற” னு சொன்னதும் எனக்கு உண்மையிலேயே புத்தி பேதலிச்சமாரிதான் இருந்திச்சி.
அவரும் இரக்கபட்டு விட்டுட்டார், வீட்டுக்கு வந்தவுடன் உடனே அன்று இரவே எங்க மாமாவே கோயம்பேடு வரை வந்து மன்னார்குடி பஸ்ல ஏத்திவிட்டு போனார் பொறுப்பாக. ஊருக்கு வந்தால் எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பதுபோலவே இருந்தது. இதுதான் என் முதல் தூர பயண அனுபவம். இப்போது நினைத்து பார்த்தால் எனக்கே சிரிப்பு கொப்பளிக்கிறதுதான்.
“அந்தந்த நேர பல்வேறுபட்ட அனுபவங்கள், பின்வரும் நாட்களில் நகைச்சுவையாவது வியப்பான சிறப்பு” – தேவா