முதல் இல்லாத இரவு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 1,306 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மங்கலமாகத் துவங்கிய கல்யாணச் செயல்பாடுகள், இப்போது அமங்கலமாக முற்றுப் பெற்றுக் கொண்டிருந்தன.

கல்யாணம் முடிந்து விட்டது. சாப்பாட்டுக்கு முந்தியவர்களுக்குக் கிடைத்த ரசமே, பிந்தியவர்களுக்குச் சாம்பாராக்கப்பட்டு, பந்தியும் முடிந்து விட்டது. மண மேடைக்கு முன்னால் ஜோடிப் பொருத்தம் பார்ப்பதற்காகக் கூடிய இளவட்டங்கள், இப்போது கண்ணில் தட்டுப்படவில்லை. எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பில்லாமலே வரும் சிறுவர் – சிறுமியர்கள், இந்தக் கூட்டத்துக்கும் வந்து, அய்யரின் மந்திரம் அவருக்கே கேட்ட முடியாத அளவுக்கு, கத்தினார்கள். பந்தல் கால்களுடன் கட்டப்பட்ட குலை வாழைகளின் முந்தானைகளான இலைகளைக் கைகளால் கோதித் துகிலுரிந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டே கால்களால் கற்றி, வலம் வந்தார்கள். ‘ஸ்பீக்கர் செட் சைலண்டாகிவிட்டது. மேளக்காரர்கள் ரேட் சம்பந்தமாகப் பெண் வீட்டாருடன் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். கரெண்ட் ஆப் ஆன ஒரு மணி நேரத்துக்கு உரிய பணம், பேசிய தொகையிலுந்து பிடிக்கப்படும் என்று பெண்ணின் பெரியப்பா ஒலிக்பெருக்கிக்காரரிடம் வாய் பெருக்கிக் கொண்டிருந்தார்.

உண்ட மயக்கத்திலும், மணமக்களை உற்று உற்றுப் பார்த்த உணர்ச்சிப் பெருக்கத்திலும் ஒய்ந்து போன கல்யாணத் தொண்டர்கள் மண மேடையிலேயே துரங்கினார்கள். அதுவும் கொசுக்கள் கடிக்காமல் இருப்பதற்காகத் தலைகளில் துண்டுகளை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டு, பிணம் மாதிரிக் கிடந்தார்கள்.

வீட்டின் வராந்தாவை அடுத்து இருந்த உள்ளறையில் புதுப்பெண்ணைச் சுற்றி, ஒரே பெண்கள் கூட்டம். தவளைக் குரலில் அவர்களின் பேச்சு, கிககிக சத்தமாகக் கேட்டதே தவிர அதன் சாரம் வெளியே பாயவில்லை.

தந்தையின் சொல்லை மந்திரமாகக் கொண்டவன் போல்,புது மாப்பிள்ளை செல்லப்பாண்டி, தத்தம் ஊர்களுக்கு அவசர அவசரமாகப் புறப்பட்ட உறவினர்களை தெரு வரைக்கும் வந்து வழியனுப்பப் போனான். அவர்கள், அங்கேயே நின்று, அவனோடு தத்தம் நெருக்கத்தை, தெருக்காரர்களுக்குக் காட்டும் வகையில் நெருங்கி நின்று சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நகர வைத்துவிட்டு, வீட்டுக்குள் இருக்கும் புது மனைவியுடன் நெருங்கி அமர ஆசைப்பட்ட அந்த மாப்பிள்ளைப் பையன், சொந்தக்காரர்களுக்கு முன்னால் நடந்து, அவர்களுக்கு வழி காட்டினான்.எப்படியோபாதித்தெருவரைக்கும் நடந்து அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு, மனைவியை பார்பதற்காகத் திரும்பி நடந்தான். மனைவியே தெருவுக்கு வந்து, என்ன நினைச்கட்டிங்க. இப்படித்தான் என்னை ஏங்க வைப்பதா என்று கண்ணால் அதட்டுவது போல் கற்பனை செய்தான். அந்தக் கற்பனையே, அவனை கிறங்க வைத்தது.

செல்லப்பாண்டி, இடையே தட்டுப்பட்ட ஒருசிலரைப் பார்க்காதவன் போல் சக்கரக் கால்கள் கொண்டவனாய், பெண் வீட்டைப் பார்த்துத் தாவித்தாவி நடந்தான். விரல்கள், பாதங்களிலி ருந்து பிய்த்துக் கொள்வது போலவும், கால்கள் உடம்பிலிருந்து விலகிக் கழன்று கொள்ள முயல்வது போலவும், அவன் நடக்காத குறையாக ஓடி, ஓடாத குறையாக நடந்தான்.பிறைநிலா நெற்றியும், காதளவோடிய கண்ணும், பெரியோர் ஆசீர்வதித்துப் போட்ட மஞ்சளரிசி நிறமும் கொண்ட மனைவியின் கூந்தலைப் பிறர் அறியாது இழுக்கத்துடித்தவனாய், அருகில் அமர்ந்திருக்கும் சாக்கில், அவள் கையைக் கிள்ள நினைத்தவனாய், அவள் நாணத்தில கண் சிவந்து, தன்னை மருட்சியான மகிழ்வோடு பார்க்கும் நேர்த்தியைக் காணப் பறப்பவனாய், மணப் பந்தலுக்குள் நுழைந்து, வீட்டுக்குள் எப்படி முன்னேறுவது என்பது தெரியாமல் தயங்கி நின்றான்.

பெண் வீட்டுப் பெண் ஒருத்தி வீட்டுப் படிக்கட்டில் நின்றபடியே அவனைப்பார்த்துக்கேட்டாள். அவள் சொன்ன சொல், மனைவியே அவளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தது போல் கேட்டது.

‘எவ்வளவு நேரமாய்ப் பெண்ணைக் காக்க வைக்கது? சீக்கிரமா ‘கை நனைக்க வாங்க. அவள் பசியில் துடிக்காள்.’

செல்லப்பாண்டி வகையறாக்களின் குல மரபுப்படி, புதுமணத் தம்பதிக்கு ஒரே தட்டில் உணவு பரிமாறப்படும்.மாப்பிள்ளை முதலில் பாதிச்சோற்றை சாப்பிட்டுவிட்டு, மீதியைச் சாப்பிடாமல் வைக்க வேண்டும். அதை மனைவி சாப்பிடுவாள். சாப்பிட வேண்டும். இதுதான் கை நனைப்பு. செல்லப்பாண்டி, தான் உண்ட மிச்சத்தை உண்ணப் போகும் மனைவியின் சிணுங்கலையும், மழுப்பலான சிரிப்பையும் அப்பொழுதே உருவகித்துக் கொண்டான். அந்த மயக்கத்திலேயே அப்படி நின்றான். இதற்குள் படிக்கட்டில் நின்ற பெண், சொன்னதையே மீண்டும் சொன்னாள்.

அந்தச் சமயத்தில் வெளித் திண்ணையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், ‘மாப்பிள்ளை. எல்லாத்தையும் சாப்பிடாதேயும். இந்தா படுத்திருகாரு பாரும். வயிருதாரி’ பெருமாளு. இவரு அவ்வளவையும் சாப்புட்டுட்டு இன்னும் கொஞ்சம்சோறுபோடுங்கன்னு சொன்னவரு. என்றார். அதுவரை தலைவிரி கோலமாகப் படுத்துக் கிடந்த அந்த வயிருதாரி, “இவரு சங்கதியை நான் சொல்லுதேன் கேளும். இவரு. கல்யாணத்துல. கொழுந்தியா ஒருத்தி இவரை ஏமாத்தறதுக்காக உருண்டையாய் இருந்தவெள்ளரிக்கத்திரிக்காயச்சோத்துல வச்சாள். இந்தமனுஷன் அதை முட்டைன்னு கடிச்சு கடிச்சுப் பாக்கி வைக்காமாச் சாப்புட்டார். இவ்வளவுக்கு அது பச்சைக் கத்திரிக்காய்… கத்தரிக்காய்க்கும் முட்டைக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷன். இவரு பேச்சை. நீ ஒரு பைத்தியக்காரன் கேட்டுக்கிட்டு நிக்கே பாரு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மணமேடையிலே தடாலென்று விழுந்து மூச்சுவிடும் பிணமானார்.

செல்லப்பாண்டி, சத்தம் போடாமல் சிரித்துக் கொண்டு படிக்கட்டில் ஏறியபோது, உள்ளே இருந்துவந்த ஒருவர் ஒரு செம்பு நிறையத் தண்ணிர்கொண்டுவந்துகொடுக்க, அவன், அதை எடுத்து, வீட்டின் கிழக்கு சுவர் அருகே கையலம்பி விட்டு, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தபோது, அவன் அக்காள் செல்லம்மா, கைக்குழந்தையுடன் அந்தப் பக்கம் வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன், தன்னையும் அறியாமலே கண்கள் கசிய, அவற்றைத் தன் குழந்தையின் தோளில் வைத்தேதேய்த்துவிட்டு,போடா.சீக்கிரமாப் போய் சாப்பிடு. ஒன் பொண்டாட்டி ஒனக்காக ஊசி முனையில ஒருகாலும், உச்சந்தலையில ஒரு காலுமாத்தவமிருக்காள். நல்லாச் சாப்பிடு. என்று சொல்லிக் கொண்டே பந்தலுக்கு அருகே போய் நின்று கொண்டாள்.

செல்லப்பாண்டி,போகிற அக்காளைப் பார்த்தான். கிண்டல் செய்கிறாளா. இருக்காது. அவள் அப்படிப்பட்ட டைப் இல்லை. அவள் முகம் கூட, கடுகடுப்பாய், பானையில் இருந்து பொங்கத் துடிக்கும் பால் மாதிரி கண்ணிர் நுரையுடன் இருப்பது போல் தோன்றியது. அவன், அக்காளின் அருகே சென்றான். அவளே ஏதாவது பேகவாள் என்று நினைத்தான். அவளோ, பிரியப் போன உதடுகளைக் கடித்துக் கொண்டாள். அவனே கேட்டான்.

“என்னக்கா ஒரு மாதிரி பேசற.”

“ஒண்ணுமில்லேப்பா. நீ சாப்பிடப்போ… நாளானால் சரியாப் போயிடும்.”

“நீ… இப்போ சொல்லாட்டா… இன்னைய பொழுது சரியாகாது. இது முக்கியமான நாளு என்பதையும் மறந்துடாதே.”

“ஒன்ணுமில்லேப்பா. ஒனக்குச் சம்பந்தமில்லாத விஷயம். நீ போ…”

இதற்குள், ‘மாப்பிள்ளை வாங்க என்று மாமனாரே வீட்டுக்குள் இருந்து கூப்பிட்டார். ‘அக்காளிடம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து, அவன் நகரப்போனபோது, அக்காள் மகள் செல்வி- பத்து வயதுச் சிறுமி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள். அம்மாவிடம் ரகசியம் பேசுபவள் போல், மாமனுக்கும் கேட்கும்படி கத்தினாள்.

“அம்மா… பொண்ணு இன்னும் அழுதுக்கிட்டுத்தான் இருக்காள்.”

செல்லப்பாண்டி, திடுக்கிட்டான். அழுகிறாளா.. ஏன்? தன் வீட்டுக்காரர்கள் அவள் மனத்தைநோகவைத்துவிட்டார்களா..”நகை சரியில்லை. தொகை சரியில்லை என்று நச்சரித்து விட்டார்களா. அதற்காக அவள் ஏன் அழனும்? நான் சொல்லுவதுதானே முக்கியம். நாலுபேர் சொல்வதா முக்கியம்?

அக்காள் மகளின் விரல்களைப் பிடித்துக்கொண்டே அவன் கேட்டான்.

“எதுக்கும்மா ஒன் அத்தை அழுவுறாள்?”

அக்காள் அதட்டினாள்.

“ஏய் கிறுக்கி. இப்படி வா.”

செல்லப்பாண்டி, அக்காள்மகளின் கையைப்பிடித்து இழுத்து, கையலம்பிய இடத்துக்கு கூட்டிப்போனான். அக்காள் படபடத்தாள். மகளின் வாயை மூடுவதற்காக ஒடப் போனவளின் வழியை அடைப்பது மாதிரி, நான்குபேர் ஒரு பெரிய பெஞ்சை தூக்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள், அந்தச் சிறுமி தாய் மாமாவிடம் ஒப்பித்துவிட்டாள்.

‘அதுவா. வீட்டுக்குள்ள பொண்ணு கண்ணிர் விட்டுக்கிட்டே இருந்தாள். அப்போ, அவளோட அம்மா வந்தாள். உடனே, இவள், அவளைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டே என்னைப் பாழுங் கிணத்துல தள்ளிட்டியேம்மா.. இந்தக் கன்னங் கரேர் மாப்பிள்ளைக்காம்மா நான் காத்திருந்தேன்னு சொல்லி அழுதாள். அப்போ பார்த்து உள்ளே வந்த அம்மா “என் தம்பிக்கு என்ன குறைச்சல். அவன் கால் தூசிக்கு நீ பெறுவாயான்னு கேட்டுட்டு அழுதுக்கிட்டே வெளியே வந்துட்டாள்.”

செல்லப்பாண்டியின் காதுகள் தாமாக இரைந்தன. அவற்றுக்குள், காற்று புகுந்து, பலூன் மாதிரி ஏதோ ஒன்று வெடிப்பது போன்ற பேரிரைச்சல். கண்கள் அக்கினிக் குழம்பாகி, திரவமாக மாறுவது போன்ற உரு மாற்றம் அடை மழை போல், உடலெங்கும் வேர்வை. கைகள் தாமாகத் தலையைப் பிடித்துக் கொண்டன. சிறிது நேரம் வரை, தாம்பத்தியப் பேராசையில் நெகிழ்வோடு இருந்த இதயம், இப்போது ஒப்பாரி ஓசையுடன், இழவு மேளம் போல வேகமாக அடித்தது. என்புதோல் போர்த்திய அவன் யாக்கையைக் கிழித்துக் கொண்டு வெளியே வரத் துடிப்பது போன்றவேகம். மூச்க உள்ளேயும், வெளியேயும் போக முடியாமல் மூக்குக்குள்ளேயே சிறைப்பட்டது போன்ற முட்டல்… வானம் இருண்டு, தானும் இருட்டிப் போனது போன்ற பிரமை.

அந்த பிரமையின் பிடியில் சிக்கிக் கொண்டே, பாம்பின் வாய்த் தவளை போல் – பாதி உடல் போன பின், ‘நீ என்ன காப்பாத்துவது என்று பதுங்கி நிற்கும் பிறிதொரு தவளையைப் பார்க்கும் அந்தப் பிராணியைப் போல், அவன் அக்காளைப் பார்த்தான். அக்காள், தொலைவில் இருந்தபடியே, தன் முகத்தை கைக் குழந்தையை வைத்து மறைத்துக் கொண்டாள்.

இப்போது, வீட்டுக்குள்ளிருந்து நாலைந்து பேர் வெளியே வந்து, மாப்பிள்ளையைச் சுற்றி நின்றபடி, ‘நேரம் ஆகுதுல்லா. மொதல்ல கை நனையுங்க…’ என்று சொல்ல, விஷயம் தெரியாமலும், தெரியப் படுத்தாமலும் பந்தக் காலைப் பிடித்துக் கொண்டு நின்ற செல்லப் பாண்டியின் தந்தை ‘போயேண்டா. ஒனக்கு எத்தனை தடவதான் சொல்லுவாங்க…’ என்றார்.

செல்லப்பாண்டி, தந்தையின் முகத்தைப் பார்த்தான். மகனை, பட்டப் படிப்புப் படிக்க வைத்ததற்காக, கையில் பட்டை ஏந்தாத குறையாகக் கடன் வாங்கியும், முழு வயிற்றைச் கால் வயிறாகச் சுருக்கியும், இப்போது பெருமிதமாக நின்ற பெற்றவரைப் பார்த்தான். முதல் சம்பளத்தை அனுப்பியபோது மொதல்ல. ஒனக்கு வேண்டியத வாங்கிக்கோடா. மெட்ராஸ்ல. தன்னந்தனியா என்ன பண்ணுவே. என்று சொன்ன, அந்த விதி விலக்கு மனிதரைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு தன் விதி, சிறிதாகத் தெரிந்தது. தந்தைக்கு விவரம் தெரியக் கூடாது என்ற எச்சரிக்கையில், யந்திரம் போல் உள்ளே சென்றான்.

பெண்ணின் முகம் சிரிக்காமல், கண்கள் மட்டும் சிவந்திருந்தன. நாணத்தால் குனியவேண்டியதலை அவமானத்தால் கவிழ்ந்திருப்பது போல் தோன்றியது. இப்போதுதான் அவனுக்கே நினைவு வந்தது. தாலிகட்டும்போது தன்கையில் அவள் கண்ணிர்சொட்டு விழுந்தது. அதை அப்போது ஆனந்தக் கண்ணிராக பாவித்தான்.இப்போது அதே அந்தக் கண்ணிர்பட்டகையைத் துாக்கி, தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். எல்லாப் பெண்களும், பெண்மைக்கு விரோதமாக, மெளனமாக இருந்தது, அவன் உள்ளத்தில் பேரிரைச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒருவரோ அல்லது ஒருத்தியோ சொல்வது அவன் காதில் கேட்டது.

‘உம். உட்காருங்க..?’

செல்லப்பாண்டி மனைவியை ஏறிட்டுப் பார்த்தான். அவளோ, தரை பார்த்த கண்களை நிமிர்த்தவே இல்லை. திடீரென்று அவன் அமைதி கலந்த ஆக்ரோசத்தோடு சொன்னான்.

“எனக்கு எச்சில் சோறு கொடுத்தும் பழக்கமில்லை. எடுத்தும் பழக்கமில்லை. நான் எச்சில் சோறும் இல்லை. பெண்ணுக்குத் தனியாச்சோறு போடுங்க.பசிச்சால் சாப்பிடட்டும்.எனக்கு இப்போ பசிக்கல. நான் அப்புறமாச் சாப்பிட்டுக்கிறேன்.”

செல்லப்பாண்டி, எந்த வேகத்தில் சொன்னானோ, அந்த வேகத்தில் நடந்து பந்தலுக்குச் சற்றுத் தொலைவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய், தலையில் கை வைத்து முதுகை வளைத்து, முகம் கவிழ உட்கார்ந்தான்.என்னமோஏதோ என்கிறமாதிரி, உள்ளே ஆண்கள் குரலும், வெளியே பெண்கள் குரலும் அவனுக்குக்கேட்டன. அவன் தந்தை யதார்த்தமாக, ‘கோபத்துல சாப்பிடாம இருக்க மாட்டான். அவனுக்குன்னு சில அபிப்பிராயங்கள் வச்சிருக்கறவன். அதை விட்டுக் கொடுக்கவும் மாட்டான். பிறத்தியாரைப் பிடிக்கும்படியும் சொல்ல மாட்டான். இப்போ.. என்ன வந்துட்டு மாப்பிள்ள எச்சில் சோறை. பொண்ணு சாப்பிடறது தப்புத்தான். விட்டுத் தள்ளுங்க’ என்று அவர் சொல்வதும் கேட்டது.

உண்மைதான்.

ஒரு மாதிரியான, சில தனி அபிப்பிராயங்களைக் கொண்டவன்தான் அவன். கிராமத்தில் மத்திய வர்க்கத்தின் கீழ்த்தட்டில் உதித்து, முப்பது கிலோ மீட்டர் தொலைவுள்ள கல்லூரிக்குத் தினமும் ரயிலில் போய் வந்து, ரயில் பிரயாணத்தால், ஒருவித ஏகாந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டவன். பேண்ட்-சிலாக் மாணவ பட்டாளத்தில் வேட்டியோடு போனவன். பூட்ஸ் கால்களுக்கு இணையாக செருப்பில்லாமல் நடந்தவன். நிறத்தாலும், உடையாலும் தனித்திருப்பதையே, தனிக் கவர்ச்சியாக நினைத்த ஒரிரு கல்லூரிப் பெண்கள், அவனைக் காதலிக்க முன்வந்ததும் உண்டு.அவர்களைப் பார்த்து இவன் பின்வாங்கியதும் உண்டு. வறுமை, அவனுக்கு ஒரு காம்ப்ளெக்ஸாகாமல், அதற்கான காரணங்களை ஆராயும் வகையில், மதங்களின்போதனைகளையும், பொருளாதார சமூகநிபுணர்களின் ஆய்வுகளையும் படிக்கவைத்தது. வறுமையால் தாக்கப்படாமல், அதனை, அதன்வேர் போன்ற காரணத்தோடும், வேரடி மண்ணான காரியத்துடனும் தாக்க நினைப்பதையே சிந்தனையாய்க் கொண்ட ஒரு சிந்தனையாளனுக்குரிய இயல்புப்படி, அவன் உருவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

தந்தை, இந்தப் பெண்ணை நேரில் பார்க்கும்படி, சொன்னபோதுகூட, மானுட ஜீவி அனைத்துமே அழகுதான் என்கிற மாதிரி, பெண்ணைப பார்க்க வேண்டியதில்லை என்று சொல்லி விட்டான். அதே சமயம், மண மேடையில், பெண்ணில் அழகால் கவரப்பட்டு, அந்த அழகைத் தன்னை அறியாமல் உபாசித்தான். அப்போதுகூட, தனது கருப்பு அவனது வெள்ளை மனத்தை உருத்தவில்லை.

செல்லப்பாண்டி, நாற்காலியிலிருந்து எழுந்தான். கல்யாண வீட்டின் எல்லைப்பரப்புக்குள்ளேய சிறிதுநேரம் உலாவினான்.கை நனைக்காமல், கை கழுவியவளை, நினைத்தபடியே சூனியத்தைத் துரத்துபவன்போல் உலாவினான்.பின்னர்கல்யாணக்கூட்டத்தின் கண் பார்வை எட்டாத குளத்துக்கரைப் பக்கமாக நடந்தான். அவனைப் பின்தொடப் போனவர்களை சைகையாலேயே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, குளத்துக்கரைமேல் நடந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் கரைக்குக் கீழே உற்றுப் பார்த்தான். பாழுங் கிணறு.. அல்ல. நான். நானே. பெண்ணைப் பொறுத்த அளவில் நான் அதுவே.

சிந்தனை, அவனை பேயாய் அலைக்கழித்தது.

‘மாப்பிள்ளை குடிகாரன்.ஸ்திரீலோலன் என்று எவனாவது ஒருவன் எழுதிய மொட்டை மனுவைப் படித்துவிட்டு,பொறுப்புள்ள பெண் அழுவாள். அவன், நல்லவன் என்று அறிந்ததுமே அவள் அழுகை ரெட்டிப்பு மகிழ்ச்சியாகும். அல்லது கெட்டவனாக இருந்தால், அவன் தானாய்த் திருந்தியோ, அல்லது அவள் திருத்தியோ, தாம்பத்தியம் எந்த’பத்தியம் இல்லாமலும் செழிக்கலாம். காதல் தோல்வி என்றால் கூடக் காலப் போக்கில் சரியாகிவிடும். ஒல்லியாக இருக்கிறான் என்றால், சாப்பிட்டுத் தடியாகலாம். தடியன் என்றால், உண்டி கருக்கி, அந்தப் பெண்ணை மகிழ வைக்கலாம். உடம்பில் ஏதாவது சதைத் திரட்சி இருந்தால், அதைக் கூட அறுத்து விடலாம். ஆனால் உடம்பு முழுவதையுமே கருப்பு என்று ஒருத்தி ஒதுக்கும்போது, அந்த உடல் முழுவதையுமே அறுத்தெறிந்தால் அன்றித் தீராத பிரச்சனை இது.

செல்லப்பாண்டி,மனம் போன போக்கில் நடந்தான். பிடிக்காத பெண்ணுடன் எப்படி வாழ்வது? எங்கேயாவது ஒடிப் போய்விடலாமா?. எப்படி முடியும். அவளுக்கும் தங்கைகள் இருக்கிறார்கள், தனக்கும் தங்கைகள் இருக்கிறார்கள். இவன் ஒடி, அவர்களுக்கு வரும் கல்யாணமும் ஒடிப்போய் விடக் கூடாதே. அதற்காக. எப்படிக் குடும்பம் நடத்த முடியும்? கட்டிய தாலியைக் கழற்ற, அவன் தயார். ஊர் உலகம் ஒப்புமா. குடும்பம் நடத்தித்தான் ஆக வேண்டும். ஆனால். என்ன ஆனால்? வாழ்க்கையே ‘ஆனால்’ ஆகிவிட்டதே.

காலநேரம் தெரியாமல் அவன், கால்கள், அவனைப் பல்லக்குச் சுமப்பது போல சுமந்த போது செல்லப்பாண்டி. செல்லப்பாண்டி என்ற குரல் கேடடுத் திரும்பிப் பார்த்தான். தன் உறவினர்களும், பெண்ணின் உறவினர்களும் படையெடுத்து வருவது போல் வந்தார்கள்.

‘செல்லப்பாண்டி.செல்லப்பாண்டி’ என்ற குரல், கரையில் மோதி, குளத்தில் எதிரொலித்தது. செல்லப்பாண்டி. ஒருவேளை இந்தப் பெயரைக் கூட கர்நாடகம் என்று ஒதுக்கியிருப்பாள். இதைக்கூட செல்வா என்று மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உடம்பு நிறத்தை மாற்ற முடியுமா? செல்லப்பாண்டி, அவர்களைப் பார்த்து, திரும்பி நடந்தான். அவன் வேதனையைப் பகிர்ந்து கொள்பவர்கள் போல், அத்தனை பேரும், அவனை மெளனமாகப் பார்த்தார்கள். தந்தை, அவன் கையை எடுத்துத் தன் கைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார். மெதுவாக ‘நான் ஒருவன் ஒனக்காக இருக்கிறதை மறந்துடாதடா…’ என்று தழுதழுத்த குரலில் சொன்னபோது, அவரது கை, தானாக ஆடி, தன் கையையும் ஆட்டுவிப்பதைப் புரிந்து கொண்டான். எப்படியோ, விவகாரம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதைத் தெரிந்து கொண்டான்.

வீட்டுக்குள் அவன் நுழைந்தபோது, உள் அறையில் ஒரு கட்டிலில், மனவிை குப்புறப் படுத்துக் கிடந்தாள். செல்லப்பாண்டி, கூனிக் குறுகியவனாய், ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தான். அவள் அம்மாக்காரி, மகளைப் பார்த்து.’நீ என்ன ரதியாடி. என்று இவனைப் பார்த்துக் கொண்டே திட்டுவதிலிருந்து, அவள் மருமகனாய் ஆகியோனவனின் திருப்திக்காக திட்டுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். பிறகு மாமினார் அவனருகே வந்து, கைகளிரண்டையும் பிசைந்தபடி “செல்லமாய் வளர்த்தபொண்ணு. மனகல இருக்கதை மறைக்கத் தெரியாதவள்.” என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

செல்லப்பாண்டிக்கு, அந்தச் சூழலே கேவலமாகத் தெரிந்தது.

மாமியார்க்காரி,மகளுக்கு மறைக்கத் தெரியாது என்பதற்காகத் தான் வருந்துகிறாளே தவிர அப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்ததற்காக அல்ல. செல்லப்பாண்டி எழுந்து வெளியே போகப் போனான். ஒருவர்.அவனை வழிமறித்து, உட்கார வைத்தார். அவனுக்கு எல்லாமே அசிங்கமாக தோன்றியது. ஆடுமாடுகள் கூட, விருப்பம் இருந்தால்தான் இணையும். ஆனால், இங்கே விருப்பமில்லாத ஒருத்தியையும், வெறுப்படைந்த ஒருவனையும் இணைக்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து தப்ப முடியாதா…’

தப்ப முடியவில்லை.

இரவில் சாப்பிடத் தயங்கினான்.

எல்லோரும் அப்போதே சாகப்போகிறவர்கள் போல ‘முகங்காட்டியதால்’ அவன், அவர்களின் மகிழ்ச்சிக்காக, துக்கத்தோடு சாப்பிட்டான். துக்கத்தை உண்பது போல் உண்டான்.

அவளோ, இன்னும் குப்புறப் படுத்துக் கிடந்தாள். எல்லோரும் அவனை விழுந்து விழுந்து உபசரிப்பதில் இருந்தார்களே தவிர, விழுந்து கிடப்பது போல் கிடந்த அவளை ஒரு பொருட்டாக நினைக்க வில்லை. செல்லப் பாண்டிக்கே அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

செல்லப்பாண்டி யதேச்சையாக மாடிக்குப் போனான்.அங்கே கிடந்த மெத்தைக் கட்டிவில் கண்களை மூடியபடி, துரங்காமல் கிடந்தான். எவ்வளவு நேரம் ஆகியதோ தெரியவில்லை. இரண்டு பெண்கள், அவளை அங்கே கொண்டு வந்து, அங்கேயே விட்டு விட்டுக் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டதும், அவன் கண்விழித்தான். ஒஹோ.முதலிரவோ. கல்லென்றாலும் கணவன் என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு வந்துவிட்டாளோ.

அவள், கையில் பாலோடு நின்றாள். செல்லப்பாண்டி மெள்ள எழுந்தான்.அந்த அறையின் மூலையில் தண்ணிர்ப்பானை மூடிமேலி ருந்த ஒரு எவர்சில்வர் டம்ளரை எடுத்துப் பாதிப் பாலை ஊற்றிக் கொண்டான். அவள், தயக்கத்தோடு நின்று கொண்டிந்தாள். முகம் வீங்கியிருந்தது. பிறகு டம்ளரை ஒரு முக்காலியின் வைத்துவிட்டுத் தயக்கத்தோடுநின்றாள்.செல்லப்பாண்டி,அமைதியாகப்பேசினான்.

“என் நண்பர்களோட முதலிரவு விவரங்கள. ஒரு கட்டம் வரைக்கும் அவங்க சொல்லக் கேட்டிருக்கேன். எல்லாப் பயலுங்களும் ‘என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டிருக்காங்க… அதுக்கு அவளுங்க. ‘இல்லாமலா கழுத்தைக் கொடுத்தேன்’னு சொல்லி இருக்காளுங்க, ஒருவேளை நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன். ஆனால்.”

அவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். அவனுக்கு, அவள் அழுகையை மறைக்க பார்க்கிறாளா? அல்லது அவனது முதகத்தை பார்த்த வெறுப்பை மறைக்கப் பார்க்கிறாளா என்பது புரியவில்லை. ஒன்று புரிந்தது. நிச்சயமாக அது நாணம் இல்வை; அவன் மேலும் பேசினான்.

“ஒனக்கு என்னைப் பிடிக்கலேன்னு தெரியும், கன்னங்கரேர்னு இருக்கிற என்னை.”

மேற்கொண்டுபேசமுடியாமல், அவன் தத்தளித்தபோது, அவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் எந்தவித குற்றவுணர்வும் இருப்பதாக இல்லை. ‘அய்யோ, அப்படியெல்லாம் கிடையாதுங்க..’ என்று அழுவாள் என்று மனோ தத்துவ ரீதியில் எதிர்பார்த்து, அவன் சிறிது ஏமாற்றமடைந்தான். அதே சமயம், உண்மையை மறைக்க விரும்பாத அல்லது தெரியாத அவளின் நேர்மையில் அவன் நெகிழ்ந்தான். இப்போது புத்தரைப் போலவே பேசினான்.

“ஒன்மேல எனக்குக் கோபம் கிடையாது, வருத்தமும் கிடையாது. சொல்லப் போனால் பரிதாபம்தான். கல்லூரியில் பாதிவரை படிச்சவள் நீ. பல நாவல்களையும் சினிமாக்களையும் பார்த்து, வரப்போகிறவன் எப்படி இருக்கணுமுன்னு கற்பனை செய்து பார்த்திருப்பே. அருவத்தில் தோன்றிய அந்த உருவம், இந்த உருவத்தில் மோதி சிதைஞ்க போனதுக்குப் கோப்படவோ. அழவோ ஒனக்கு உரிமை உண்டு. நான் சினிமா வசனம் பேசல. சீரியஸாத்தான் பேசுறேன். ஆமாம். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றபடி உருவத்தையே ஒரு பொருட்டாக நினைக்காத நானே, கல்யாணச் சமயத்தில், ஒன் அழகுல மயங்குனது இயற்கைன்னா, நீ என் நிறத்துல, வெறுப்படையறதும் இயற்கை தான். ஒரு பெண் யாரைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வாள் என்கிற கொள்கைப்படி ஒன்னை – ஒன் விருப்பு வெறுப்பைப் பார்க்காமல், ஒன்னிடம் என்னைக் காட்டாமல், கட்டிவச்சது ஒருவித மேல் சாவணிசம். ஆண் முதன்மை பெற்ற சமூகக்கோளாறு. ஆனால் ஒன்மேல ஒரே வருத்தம். தாலி கட்டுறதுக்கு முன்னால மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாம். நானே முன்னே நின்று அங்கயே இன்னொருவனை உட்கார வச்சிருப்பேன். ஆனால் இப்போ…”

அவள், இமையாது அவனைப் பார்த்தாள். முகம் தானாகச் கழித்தாலும்,காதுகள் நிமிர்ந்தன.கண்கள் விரிந்தன.கருமேகம் விலகி வெண்மதியைப் பார்த்தது போல நெஞ்சில் ஒரு சுமை குறைப்பு ஏற்பட்டது.

செல்லப்பாண்டி தொடர்ந்தான்.

“இதுக்கு நானும் ஒரு காரணமாகிவிட்டதை நினைக்கும்போது தான், நெஞ்சமே வெடிப்பது மாதிரி இருக்கு. என்ன செய்யுறது. கொஞ்சநாளைக்குப் பொறுத்துக்கோ. அப்புறம் நானே ஒரு நல்ல ஏற்பாட்டைச்செய்யுறேன்.அது ஒனக்கும் நல்லது.எனக்கும் நல்லது. சரிம்மா.. எனக்கு சிந்தனையோ துக்கமோ அதிகமாகும்போது, நான் உடனே தூங்கிடுவேன். இது என்னோடபழக்கம். சந்தோஷத்தைத் உடனே பகிர்ந்துகொள்ளணும்.துக்கத்தைச்சாவகாசமாய்ப்பகிர்ந்து கொள்ளலாம். சரி. நான் துரங்கட்டுமா… இவ்வளவுக்கும் காலேஜ்ல.எத்தனையோ பெண்கள் என்னை. சரி வேண்டாம்.ஏதோ என்னுள்ளயே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் குத்துச் சண்டை மாதிரி ஒண்ணு நடக்கு. இன்னும் பேசினா, நீ தான் இந்தச் சண்டைக்குக் காரணமுன்னு ரெண்டும் சேர்ந்து என்னையே ஒதைக்கலாம். குட் நைட் மேடம்.”

செல்லப்பாண்டி, போர்வையை எடுத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டு குப்புறப் படுத்தான். என்னதான் நடந்ததை, அறிவு ரீதியில் எடுத்துக் கொள்ளப் பார்த்தாலும், உணர்ச்சி அதை விழுங்கி, பிறகு கண்ணிராய்க் கொட்டியது. நிதானமாக மூச்சு விட்டு, விம்மைைல அடக்கியபடி, அப்படியே முடங்கினான். பிறகு, சுற்றுப்புறச் சூழல் அற்றுப் போனது போல் துக்கத்தில் அடங்கி, துாக்கத்தில் சங்கமித்தான்.

அவள், நிலைகுலைந்து நின்றாள். தன்னையே வெறுப்பவள் போல், முகத்தை சுழித்தாள். பிறகு விக்கித்தபடியே மெள்ள நடந்தாள். செல்லப்பாண்டி தூங்கிக் கொண்டிருந்தான்.

கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து அவன் தலை முடியை மெள்ள மெள்ளக் கோதி விட்டாள். ரிஷி கர்ப்பம் மாதிரி, நடக்காத முதலிரவிலேயே பிள்ளை பெற்று, அந்தப் பிள்ளையைப் பார்ப்பது போல், அவனைப் பார்த்தாள். பிறகு அவன் கரங்களை எடுத்துத் தன் கரங்களுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டாள்.

அந்தச் சூழலில், அந்தப் பெண்ணுக்கு முதல் தடவையாக, ஒரு ஆண் மகனைத் தொடுகின்ற ஸ்பரிச இன்பம் இல்லைதான். ஆனாலும் – நிலையற்ற இளமை வேகக் கற்பனைத் தீ, நிலையான தாய்மையின் குளிர்மையில் அடங்கித்தானே ஆக வேண்டும்?

– கல்கி விடுமுறை மலர்-1982 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *