கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 1,598 
 
 

லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம்.

பத்தாம் தேதிதான் எப்போதும் அதற்குக் கடைசி நாள். இந்த மாதம் பார்த்து அது ஞாயிற்றுக்கிழமை அல்லவா வந்திருக்கிறது. ஆக கட்டணம் கட்டுவதற்குக் கடைசி நாள் அது தானாகவே அடுத்த நாள் அந்தத் திங்கள் கிழமை என்றுதானே கணக்காகும். எந்த மாதமும் இப்படி கட்டணம் கட்டத்தாமதம் ஆனதில்லை. ஏனோ இந்த முறைதான் இப்படி த்தள்ளிகொண்டு போய்விட்டது.திங்கள் கிழமை காலை பள்ளிக்குக் கட்டணத்தை எடுத்து தயாராய் வைத்தான். குழந்தை லலித்தைக்கூட்டிக்கொண்டு பள்ளிக்குக்கிளம்ப வேண்டும். அலுவலகம் போகும் பாதையில் உள்ள ஒரே பள்ளி அதுதான். இதைவிடவும் வேறு என்ன வசதி வேண்டிக்கிடக்கிறது. மா நகரில் இந்தப்பள்ளி ஒரு நல்ல பள்ளி என்று பெயர் எடுத்தாகிவிட்டது.ஆகவே பள்ளி நிர்வாகத்துக்கு வருமானமும் கொட்டிக்கொண்டுதானிருந்தது. இந்த பள்ளிக்கூடத்தில் தன் குழந்தை லலித்தைச்சேர்க்க அவன் பட்ட பாடு அவனுக்குத்தான் தெரியும். எத்தனையோ பேர்களின் கால்களில் விழுந்து விழுந்துதான் பள்ளியில் லலித்துக்கு பி.கே.ஜி. சீட் கிடைத்தது. ஒருவர் காலில் விழுவதும் காசு கொடுப்பதுமா பெரிது. காரியமாகவேண்டுமே.

அதிகாலை எழுந்த அவன் மனைவி பம்பரம் போல் சுற்றிச்சுற்றி பணி ஆற்றிக் கொண்டிருந்தாள்.அவளுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. மனைவி என்பவள் வேலைக்குப்போனால்தான் குடும்பத்தை ஓட்டமுடியும்.ஒருவன் மாத்திரம் சம்பாரித்து இந்த மா நகரில் எப்படிக் குப்பையை கொட்டுவது. இரண்டு என்சின்ஜின்கள் மாட்டிக்கொண்ட குடும்பவண்டி மட்டுமேதான் வாழ்க்கைத்தடத்தில் சவுகரியமாக ஓடும். பத்துமணிக்குள் அவளும் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதற்குத்தான் அவள் அலுவலகம் அருகிலேயே வீடு என்ற ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறான். மா நகரத்துப் பேருந்து பிடிப்பதும் மின் இழுவை ரயில் பிடித்துத்தொங்கிப்பயணிப்பதுவும் அவளுக்கு ப்பொசுப்பில்லாமல் போனது.தன் இரு சக்கர வாகனத்தில் லலித்தை அமர வைத்துக்கொண்டான். அவனுக்குக்கட்டவேண்டிய பள்ளிக்கூட யூனிபார்ம் வேடங்கள் முடிந்துபோனது. இந்த வருடம் காலுக்கு ஷூ மட்டுமே. கழுத்தில் டை கட்டும் கடும் தண்டனை எல்லாம் அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கலாம்.பிகேஜி என்பதால் கழுத்துப்பட்டைக் கட்ட வேண்டாம் என்ற அந்த ஒரு சலுகை.

உலகமே ஒரு நாடகமேடை நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். நடிக்கத்தான் இந்த மானிட ஜன்மமுமே வாய்த்து இருக்கிறது. பெரியவர்கள் சொன்ன விஷயம்.அவன் எப்போதேனும் எண்ணிப்பார்ப்பான். ஒன்றை எண்ணி ப்பார்ப்பதற்கெல்லாம் அவனுக்கு எங்கே நேரம். ஓடுவது ஓடுவது ஓடுவது வேறு என்னதான் செய்கிறார்கள் இங்கே நகரத்து மனிதர்கள்.

தன் சட்டைப்பையில் லலித்தின் பள்ளிக்கட்டணத்தைச்சரியாக எண்ணி வைத்துக்கொண்டான். எல்லாம் சரியாகத்தன் இருக்கிறது. அவள் எதிரே நின்று ஆமோதித்தாள்.தான் பள்ளிக்குப்போவதாய்க் குழந்தை அம்மாவுக்குக் கையை ஆட்டினான். அவள் பதிலுக்குக்கை அசைத்து வீட்டின் உள்ளே சென்றாள்.

சாலைக்குளறுபடிகளும் கிறுக்கு ஓட்டுனர்களும் அவன் தினம் சந்தித்துக்கொண்டு தான் வண்டியில் செல்கிறான். லலித் வேடிக்கைபார்த்துக்கொண்டே வண்டியில் அமர்ந்திருந்தான்.நாம் சாலையில் போகும் அவர்களை வேடிக்கை பார்ப்பதுவும் அவர்கள் நம்மை வேடிக்கை பார்ப்பதுவும் தானே சுவாரசியமாய் அரங்கேறுகிறது.
குழந்தையைப் பிகேஜி க்குப்பொறுப்பான அந்த ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டுக் கட்டணம் கட்டும் வரிசையில் நின்றான். ஆயாவிடம் போய் அப்படியே கால்களைக்கட்டிக்கொண்டான் லலித்.

கவுண்டர் முன்பாக எங்கும் வரிசை. அதுவும் இல்லாவிட்டால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள வேண்டியதுதான். பையனின் பெயர் சொல்லிப் படிக்கும் வகுப்பும் சொன்னான்.

‘அபராதம் ஐநூறு’ கவுண்டரிலிருந்து எழுந்தது குரல்.

‘இன்றுதானே கடைசி நாள் அபராதம் எப்படி வரும்’ அவன்.

‘நேற்றுதான் கடைசி நாள்’

‘நேற்று ஞாயிறு ஆக இன்றுதான் கடைசி நாள்’ அவன்.

‘இது அரசாங்க அலுவலகம் இல்லை. உங்கள் சட்டம் எல்லாம் பேசுவதற்கு. நீங்கள் இடத்தை காலி செய்து நகரலாம்’

பின்னால் நிற்பவர்களைத் துணைக்கு அழைத்தான். யாரும் அவனை சட்டை செய்யவில்லை.

‘இது நியாயமே இல்லை’

‘கவுண்டர்ல இருக்கிறவன் கிட்ட போய் நியாயம் பேசி என்ன ஆகும். அபராதம் கட்டிட்டுத்தான் எதையும் பேசணும்’

அவனுக்கு வரிசையில் நின்ற ஒருவரின் அறிவுரை. எரிச்சலாகவேத்தான் வந்தது. நேராக பள்ளிப் பிரின்சிபல் அறைக்குச்சென்றான்.

‘என்ன சார் பிரச்சனை’

‘கட்டணம் கட்ட இன்றுதானே கடைசி நாள். எதற்கு அபராதம் கேட்கிறார்கள். அதுவும் அபராதம் ஐநூறு என்ன கணக்கு’

‘எதுவுமே நிர்வாகத்தின் முடிவுப்படிதான். அதைச்செயல் படுத்துவது மட்டும் தான் என் வேலை’

‘பிரின்சிபல் மாதிரி பேசுங்கள்’

‘அதிகம் பேசாதீர்கள். உங்கள் குழந்தையை வீட்டுக்குக்கூட்டிச்செல்லுங்கள். நாங்கள் வேண்டாமென்றா சொல்கிறோம்’

‘என்ன கருப்பூர் பஞ்சாயத்தாக இருக்கிறது’

‘பேச்சைக்குறையுங்கள்’ பிரின்சிபல் முடித்துகொண்டார்.

நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள். கருப்பூர் நியாயம் என்ன என்றால் அது தவறு செய்தவனை விட்டு விட்டு ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவனுக்கே மீண்டும் ஒரு அபராதம் விதிப்பது.

அவனுக்கு தான் வேலை பார்க்கும் அலுவலகம் வேறு சென்றாகவேண்டும். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. சட்டைப்பையில் இருந்த செல்பேசியை எடுத்து த்தன் மனைவியை அழைத்தான்.

‘குழந்தைக்குப் பள்ளிக்கட்டணத்தோடு ஐ நூறு ரூபாய் அபராதக் கட்டணமும் சேர்த்துக்கட்டவேண்டுமாம். பிரின்சிபலைக்கூட பார்த்துவிட்டேன். கட்டணம் கட்ட நேற்று கடைசி நாள் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்ததே என்று நான் பேசினால் ஒத்துக்கொண்டால்தானே. வேண்டுமானால் உங்கள் குழந்தையை இந்தப் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டுபோய்விடுங்கள் என்று வேகமாய்ப்பேசுகிறார் அந்த பிரின்சிபல்’.

‘லலித் எங்கே’

‘அவன் வகுப்பில்தான் இருக்கிறான்’

‘நீங்கள் என்னிடம் எதுவுமே பேசவேண்டாம். உங்கள் அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு மட்டும் சொல்லுங்கள். இங்கு என்னிடம் வந்து ஐ நூறு ரூபாய் பெற்றுக் கொண்டு போய்ப் பள்ளிக்கட்டணம் கட்டுங்கள் தெரிகிறதா’

அவள் பேச்சை நிறுத்திக்கொண்டாள். அவனுக்கு ஆத்திரம் தாங்க முடியாமல் பொத்துக்கொண்டு வந்தது. இந்தப்பணத்தை காலையில் கிளம்பும் சமயமே தன்னிடம் கொடுத்திருக்கலாம். ஒருக்கால் அவளிடமும் கையில் பணமே இல்லாது கடன் கிடன் ஏதும் வாங்கிக்கொடுக்கிறாளோ என்னவோ. அவள்தான் எதுவும் பேசவேண்டாம் என்கிறாளே. பிறகு என்ன செய்வீர்கள்.

தன் வண்டியை எடுத்துக்கொண்டு அவள் அலுவலகம் நோக்கிக் கிளம்பினான். தான் வேலை பார்க்கும் அந்த மத்திய அரசாங்க அலுவலகத்துக்கு விடுப்பும் சொல்லி ஆயிற்று.அரை நாள் மட்டும்தான் சொன்னான்.

‘மதியம் ஒரு மணிக்குள் போயாகவேண்டும். என்ன தெரிகிறதா இல்லாவிட்டால் லலித் பள்ளியில் கவுண்டர் சாத்தி விடுவார்கள்.’

அவள் கட்டளை வேறு தந்தாள்.அவள் கொடுத்த அந்த ஐ நூறு ரூபாயை பத்திரமாகத்தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

‘இந்த ஐ நூறு ரூபாய் கடன் யாரிடம் வாங்கினாள்’

கேட்கலாம் என்று தோன்றியது.அதற்கெல்லாம் நேரமும் இல்லை. ஒரு வேளை அதற்கும் சேர்த்து இன்னும் இரண்டு பாட்டு அவளிடமிருந்து கிடைத்தாலும் கிடைக்கும்.

பள்ளிக்கு வேக வேகமாக இரு சக்கர வண்டியில் வந்தான். மதியம் சாப்பிட்டபின் மரத்தடி நிழலில் ஆங்கங்கே பள்ளிக் குழந்தைகள் மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டு இருந்தன. லலித்தும் புல் வெளியில் உற்சாகமாய் ஓடியாடிக் கொண்டிருந்தான். லலித்தின் டீச்சர் அவர்களோடு விளையாடிக்கொண்டு சற்று நேரம் போக்கினாள். ஒவ்வொரு குழந்தையும் டீச்சர் முதுகில் உப்பு மூட்டை விளையாடின. லலித் தன் டீச்சர் முதுகில் அமர்ந்து சவாரி செய்து கொண்டே நகர்ந்தான்.

‘டாடி’ என்று கூவிக்கொண்டே லலித் ஓடி வந்து அவன் கால்களை இறுகக் கட்டிக் கொண்டான். ‘கொஞ்சம் இரு’ என்று லலித்தைச் சொல்லிய அவன் கவுண்டருக்கு முன் ஓடி நின்றான். பள்ளிக்கட்டணம் அபராதத்தோடு கட்டி முடித்தாயிற்று.

‘அந்த அம்மா மொகத்துக்கு இந்தக் கொழந்தைக்கு அட்மிசன் போட்டாங்க. எல்லாம் அந்த அம்மாதான். இவரு என்னா செஞ்சாரு’ கவுண்டர்க்கார எழுத்தர் கட்டண ரசீது அவனிடம் நீட்டியபடி சொல்லிகொண்டிருந்தார். சொன்னவர் முகத்தை ஒரு முறை பார்க்க அவனுக்கு ஆசை. அந்த அழகு முகம் எங்கே தெரிந்தது.

அவனும் நாயாய் பேயாய் அலைந்து திரிந்துதான் அந்தப்பள்ளியில் லலித்துக்கு சீட் கிடைத்தது. உங்களுக்காவது அது தெரியட்டும் என்று சொல்கிறேன்.

‘ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கே’ லலித் அவனிடம் கேட்டான்.

‘மதியம் எனக்கு ஆபிசு போகணும்’ குழந்தையிடம் பொய் சொன்னான்.

கட்டணம் கட்டிய செய்தியை செல் எடுத்து குறுஞ்செய்தியாய் அவளுக்குத் தகவல் அனுப்பினான். ‘நன்றி’ என்று மட்டும் அவள் அவனுக்கு சிறு பதில் ஒன்று அனுப்பி வைத்தாள்.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *