கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 3,793 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கிராமணி சட்டையைத் தலைவழியாக மாட்டிக் கொண்டார். அவர் உடலுக்கு ரொம்ப லூஸான சட்டை அது. எப்பொழுதும் அது மாதிரியான சட்டையைத்தான் அவர் போடுவார். கை, அரைக் கையாயும் இல்லாமல் முழுக் கையாயும் இல்லாமல், முக்கால் கை இருக்கும். கை அகலம் ஒன்னரை ஜாணுக்குக் குறையாது. மார்பில் ரெண்டு பவுன் பொத்தான்கள் கோக்கப்படாமல் அப்படியே கிடந்து ஆடும். மார்பின் வெள்ளி மயிர் வெளியில் தெரியும். 

‘ஆனந்து…’ என்று அவர் மனைவியைக் கூப்பிட்டார். 

ஆனந்தாயி கூடத்தில் குந்தியவாறே, மரச்சீப்பால் தலையை பரக்பரக்கென்று சீவி பேன் எடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு முழத்துக்கு ஒரு ஜாண் குறைவு அவள் கூந்தல். அவள் கறுப்பு மயிரில் வெள்ளை பெயின்ட் அடித்த மாதிரி கலந்திருக்கும். 

‘இன்னா…’ என்றாள் அவள். 

‘ஒடம்பு என்னுமோ காலைலேந்து ஒரு மாரியா இருக்கு… சளி புடிச்சிருக்கு… மத்தியானம் காரமீனு வாங்கியாந்து மொளவ கொஞ்சம் அதிகமாப் போட்டுக் கொழம்பு வையி..’ என்றார் அவர். 

கிராமணிக்குப் பல வியாதிகள் மீனாலேயே தீரும். மீன் இல்லையென்றால் வரும். ஜலதோஷம், ஜுரம், வாய்வு சம்பந்தப் பட்ட குத்தல் குடைச்சல்கள் ஆகியவற்றுக்கு எல்லாம் அருமையான மீன் வைத்தியம் சொல்வார். தனக்குச் செய்து கொண்டு திருப்தி ஏற்பட்ட அனுபவ வைத்திய முறைகள் இவை அவருக்கு. 

‘காரமீனு எங்க கிடைக்குது, நெனச்ச நேரத்துல எல்லாம்…’ என்று தன் கஷ்டத்தைச் சொன்னாள் ஆனந்தாயி. 

‘காரமீனு இல்லன்னா கெழங்கா மீனு கெடைக்காமையா பூடும்… பாரு… கெழங்கானும் கெடைக்கல்லேன்னா இருக்கவே இருக்கு சுதும்பு… வாங்கி நல்லா தள தளன்னு காரம்மா வய்யி… சுதும்பு மீன் வறுத்துப்பூடாத… நெத்திலி கெடைச்சா வாங்கிக்கினு வந்து நெறைய இஞ்சி, பூண்டெல்லாம் வச்சி புட்டு வெயி… நல்லாயிருக்கும்…’ என்றார் ரசித்துக்கொண்டே கிராமணி. 

‘உக்கும். திண்ணு கெட்ட ஜாதி… உங்களுக்கு மீனு ஓணும்… ஓங்க புள்ள மீனுன்னாலே மூஞ்சால அடிக்கிறான்… அவனுக்குக் காய்கறி தினுசுதான் ஓணுமாம்… ஒங்க ரெண்டு பேருக்கு மத்தியில மாட்டிகினு நான்தான் லோல் பட்டு லொங்கழிறேன்… சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க… வர்றவ கிட்ட எல்லாத்தை யும் உட்டுட்டு அக்கடான்னு என் தம்பி வூட்டுக்குப் போயி உழுந்து கெடக்கப் போறேன்…’ – ஆனந்தாயி சலித்துக் கொண்டாள். 

கிராமணி பதில் சொல்லாமல், செருப்பை மாட்டிக்கொண்டு வெளியில் போனார். 

கூரையில் சொருகி இருந்த பறியை எடுத்துக்கொண்டு, சுருக்குப் பையில் ரூபா நோட்டை போட்டுச் சுருக்கி, இடுப்பில் சொருகிக் கொண்டாள் ஆனந்தாயி. கையிலிருந்த சுண்ணாம்பைக் கதவு ஓரத்தில் தடவி இழுத்துப் பூட்டினாள். தெருவில் இறங்கி நடந்தாள். 

வீட்டுக்கும் மார்க்கெட்டுக்கும் தூரம் கம்மிதான். பாரதி வீதியே வந்து புஸ்ஸி வீதி திரும்பினால், மணிக்கூண்டு தெரியும். மார்க் கெட்டும் அங்குதான். தூரத்தில் வரும் போதே மீன் கவிச்சை வந்து மூக்கில் மோதும். சில பேருக்கு இதுதான் மணம். ஆனந்து, மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள். வரிசையாகக் கூடைகள். ஒவ்வொரு கூடைக்காரியும் கூடையின் குறுக்காக மீன்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கீழே தரையிலும் விதவிதமாக, சுறா,வஞ்சனை, சென்னாவரை நாக்கு, வெளவா என்று பல விதமான மீன்கள் கூறுகட்டி, வைக்கப்பட்டிருந்தன. வியாபார மும்முரத்திலும், டீக் குடிப்பதும் வெற்றிலை போடுவதுமாக இருந்தார்கள் செம்படச்சிகள். ஜனம் ‘ஜே ஜே’ என்று இருந்தது. 

ஆனந்தாயி, தான் வாடிக்கையாக மீன் வாங்கும் பவுனைத் தேடினாள். மூலையில் தந்திக் கம்பத்துக் கீழே குந்தியிருந்தாள் பவுனு. டீ குடித்துக்கொண்டே பீச்சைக் கையால் மீனை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் பவுனு. இவளைப் பார்த்ததும் ‘வாம்மா’ என்று சொல்லி டீ கிளாசை கீழே வைத்தாள். வெற்றிலை எச்சி, கோடு கிழித்ததைப் போல காலி கிளாஸின் விளிம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. 

மீன்களை நோட்டம் விட்டாள் ஆனந்தாயி. பாம்பு மாதிரி வெள்ளை வெள்ளையாகச் சுண்ணாம்பு வாளை, சிவப்பு சிவப்பாக சங்கரா மீனும், சென்னாவரையும் கூறு போடப்பட்டிருந்தது. அவளுக்குப் பிடிக்காத விலாங்கு மீனும் அங்கிருந்தது. 

‘கார இருக்கா…’ என்று கேட்டாள் ஆனந்து. 

“அதான் இல்ல… பட்டாதான் பாக்கியம்…. சுதும்பு இருக்கு… கெழங்கா இருக்கு.. காலா இருக்… கெளுத்தி கூட இருக்கு. எடுத்துக் கிட்டுப்போயேன். ரெண்டு பிஞ்சி கத்திரிக்காயி போட்டுக் கொழம்பு வையேன்… சோறு கொண்டா கொண்டான்னு உள்ள எறங்காது…?” என்று சொன்னாள். 

‘கெழங்கானே போடு…’ என்றாள் ஆனந்தாயி. 

ரெண்டு கூறை எடுத்துப் பறியில் போட்டாள், பவுனு. ‘நெத்திலி இருக்கா…’ 

‘ஏது… இங்க இருக்கிறதுதான்… ஒனக்கு வச்சிக்கினே இல்லன்னு வனா… ஆமா… பத்தியப் பொடி வாங்கியிருக்கியே… ஊட்ல யாருக்காவது ஒடம்பு கிடம்பு செரியில்லியா இன்னா..’ என்று நேச பாவத்தோடு விசாரித்தாள் பவுனு. 

‘உக்கும்… எங்கூட்டுக்காருக்கு சளி புடிச்சிக்கினு ஒடம்பு இன்னுமோ மாரி இருக்காம்… அதான், பத்தியப் பொடி போட்டுக் கொழம்பு வச்சிட்டு நெத்திலியப் புட்டு வக்கலாம்னுட்டு…’ 

‘புட்டு வக்கத்தான் சொறா இருக்க… புட்டு வச்சா ஷோக்கா இருக்குமே…’ என்று சொல்லித் துண்டுதுண்டாக அறுத்துக் கூறு கட்டியிருந்த ஒரு பகுதியை எடுத்து அதையும் பறியில் போட்டாள். 

‘எவ்ளோ ஆச்சி..?” என்றாள் ஆனந்து. இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை எடுத்துக் கயிற்றை இழுத்துத் திறந்து ஓர் அஞ்சு ரூபாத் தாளை எடுத்தாள். 

பவுனு, தன் வாயிலிருந்த எச்சிலை, சிகரெட் பிடிக்கிற மாதிரி, ரெண்டு விரலை வாயில் வைத்து ‘ப்ளிச்’ என்று எட்டித் துப்பினாள். கொஞ்சம் யோசித்து ‘ஒன்னார் ரூபா குடு’ என்றாள். 

‘இன்னாது, ஒன்னார் ரூபாவா… ஒரு நாலு கெழங்காம், சுதும்பு பொடிக்கும், நாலு துண்டு சொறாவுக்குமா’ என்றாள் ஆனந்து. 

‘அக்காங்… ஒங்கிட்டேந்து புடுங்கித்தான் நான் மாடி வூடு கட்டிடப் போறேன்… இன்னா பாப்பா… இம்மா நாளு பயகியும் என் கொணத்தைத் தெரிஞ்சிக்கிலையே நீ… வோனுன்னா சும்மா எடுத்துக்கிட்டுப் போ… என் மவளாட்டம் நெனச்சுக்கிறேன்…!’ என்று பவுனு அலுத்துக் கொண்டாள். மருமவள் வரும் வயசான போதும், ஆனந்தாயி பாப்பாதான், அந்த பவுனுக் கிழவிக்கு. 

‘இல்ல இல்ல, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா.. எங்கிட்டயா நீ ரொம்ப வாங்கிடப் போற… இந்தா… எடுத்துக்கினு மீதி குடு…!’ என்று ஐந்து ரூபாத் தாளைக் கொடுத்தாள் ஆனந்து. மீதியை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டாள். 

‘இந்தா, போயிலை இருந்தா கொடேன்-‘ என்று கேட்டாள் ஆனந்தாயி, பவுனு, காலடியில் போட்டிருந்த சாக்கின் அடியிலிருந்து, ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தாள். அந்த போயிலைத் துண்டை வாயில் போட்டு அதக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள் ஆனந்தாயி. 

செம்படச்சி பவுனுக்கும் கிராமணிச்சி ஆனந்தாயிக்கும் உறவு ஏற்பட்ட சமாசாரம் ரொம்ப சுவாரஸ்யமானது நாம் அதைத் தெரிந்து கொள்ளத்தான் வேணும்— 

இதே மாதிரிதான், ஒரு மூணு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் காலையில் மீனு வாங்க மார்க்கட்டுக்குப் போனாள் ஆனந்தாயி. அன்றைக்கு அவள் தம்பியும் தம்பி பெண்டாட்டியும் வந்திருந்தார் கள். கடல் மீன் கிடைக்காத தஞ்சாவூர்க்காரன் அவன். அவனுக்காக நல்ல மீனைத் தேடி அலைந்தாள். பவுனு ஒரு பெரிய வஞ்சனை மீனை வைத்துக்கொண்டு குந்தியிருந்தாள். தம்பிக்கும் வஞ்சனை என்றால் ரொம்ப இஷ்டம் என்று ஞாபகம் வந்தது அவளுக்கு. குழம்பும் வைக்கலாம். வறுக்கலாம். பவுனை நெருங்கி விலை கேட்டாள். 

பவுனு, கறாராக, ‘ஒரே வெல… அஞ்சு ரூபா…’ என்றாள்.

‘சொல்லிக் குடு’ ஆனந்தாயி. 

‘அதாஞ் சொல்லிட்டேனே. இஷ்டமானா எடு… கஷ்டமானா விடு…’ 

‘மூணு ரூபா வச்சுக்கோ… அஞ்சுன்னு ஒரேயடியா சொல்றியே… அநியாயமால்ல இருக்கு..’ 

‘தே… நாயம் அநியாயமல்லாம் வேற எங்காவது போயி வச்சுக்கோ…வந்துட்டா சின்னாளப்பட்டி சேலையைக் கட்டி சிலுக் சிலுக்குன்னு…வாங்கற மூஞ்சியப்பாரு… போ பொத்திக்கிட்டு என் வாயப்புடுங்காத’ கூடைக்காரியிடம் சகஜமான இந்த வார்த்தையைக் கேட்டு ஆனந்தாயி கோபம் கொள்ளவில்லை. இது என்ன புதுசா… அவள், அம்மாவின் புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு மீன் வாங்கிய ஒரு தலைமுறைப் பழக்கம் அவளுக்கு… 

ஒருமுறை எவனோ ஒருவன் குடித்துவிட்டுக் கொஞ்சம் ஓவராகப் பேசினான் போல. ஒரு கூடைக்காரி கேட்டாள், ‘போடா பேமானி, ஒன் மூஞ்சில இருக்கிற மீசையும் சரி… என் மயிருஞ் சரிடா…’ 

‘சரி… மூனரை வச்சுக்கோ…’ 

‘ஒரே வெ… நாலு குடுத்துடு… கேக்கறியேன்னு கொடுக்கறேன்…’ என்று சொல்லியவாறே மீனை எடுத்துப் பறிக்குள் போடப் போனாள். 

திடீரென்று ஓர் தடித்த கை-வேப்ப மரத்து அடிப்பாகம் மாதிரி, ஏகப்பட்ட பொன் வளையல்கள் போட்ட கை. உள்ளே நுழைந்து மீனைப் பற்றியது. 

ஆனந்தாயி நிமிர்ந்து, வந்தவளை நோக்கினாள். கழுத்தே இல்லாமல் கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகளும் நெக்லசும் போட்டி ருந்தாள் அவள். உதடுகள். சாயச் சிவப்பில் சிரித்துக் கொண்டிருந்தன. 

அவள் ஒரு அஞ்சு ரூபாவை பவுனிடம் நீட்டி, ‘மீன இதுல போடு…’ என தன் பையைக் காட்டினாள். 

‘இந்தப் பொண்ணுக்குக் கொடுத்தாச்சி, நாலுக்கு, என்றாள் பவுனு. 

‘நான்தான் அஞ்சி ரூபா தாறேனே… எனக்குக் கொடுத்துரு…’ என்றாள் அவள். 

‘அதான் சொல்லீட்டனம்மா… இதுக்குக் குடுத்தாச்சுன்னு…’ 

‘சர்தான் போடு… பெரிய இவதான் நீ… ஓர் ரூபா சேத்து தர்றேனே…’ 

‘இன்னாடி சொன்னே..’ சிலிர்த்துக்கொண்டு எழுந்தாள் பவுனு. மயிர் அவிழ்ந்து வீழ்ந்தது. ‘நீ ஆயிரம் ரூபாய் கொடேன்… மீன தருவனா… அது இன்னாடி? நாக்கு ஒன்னா ரெண்டா மனுஷா ளுக்கு; வாயின்னா சுத்தம் ஓனுன்டி… நான் இதுக்குக் குடுத்துட் டேன்னு சொன்னப்புறமும் ஏத்தி தர்றாளாம் ஏத்தி… இன்னாடி பணக் கொழுப்பா… ஒன் பணமும் பீயும் எனக்கு ஒன்னுடி… இந்தப் பவுன ஒனக்குத் தெரியாது… ஒருத்தனுக்கே வாக்குப்பட்டு ஒருத்த னுக்கே தலப்பு போட்டவடி நானு.. பஜாரியில்ல ஒன்னப்போல… பணத்துக்கு பீயி துன்ற ஜாதி இல்லடி உன்னைப்போல. ஒங்கம்மாவை யும் உங்காத்தாளையும்…’ வார்த்தைகள் அருவி மாதிரி அவள் மனசிலிருந்து பீறிக் கிளம்பின. அந்தத் தடிச்சி மெல்ல நழுவினாள். பவுனு கூந்தல் ஆட ஜிங்கு ஜிங்கென்று சாமி ஆடினாள். 

ஆனந்தாயி ரொம்ப நாள் வரைக்கும் தன் புருஷனிடமும் பையனிடமும் ‘இன்னா நாணயம்; இன்னா வாக்கு சுத்தம்; இன்னா மனுஷி-‘ என்று சொல்லி மாய்ந்து போனாள். அவர்கள் உறவு இந்தச் சந்தர்ப்பத்துக்குப் பிறகு வளர்ந்தது. 

சோற்றை இறக்கி வைத்தாள். குழம்பு கொதி வந்தது. கரண்டியால் ஒரு சொட்டு எடுத்து உள்ளங்கையில் வைத்து நக்கிப் பார்த்தாள். நல்லாவே இருந்த மாதிரி இருந்தது. வாணலியில் இருந்த புட்டைக் கிளறிவிட்டாள். வேலையெல்லாம் முடிந்தபோது ரொம்ப அசதியாக இருந்த மாதிரி இருந்தது அவளுக்கு. அடுப்பங்கரை ஓரமாக முந்தானையைப் போட்டுப் படுத்தாள். கண்ணை இழுத்துக் கொண்டு போயிற்று. 

திடீரென்று சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். பையன் நட்ராஜன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து ஸ்டாண்டு போட்டு நிறுத்தினான். மில்லில் கிளர்க்கு அவன். 

‘சோறு போடும்மா-‘ என்று சொல்லியவாறு சட்டையை அவிழ்த்தான். பேண்ட்டைக் கொடியில் போட்டுக் கைலியைக் கட்டிக்கொண்டான். செம்பால் தண்ணி எடுத்துக் கை கால் கழுவிக் கொண்டான். ஆனந்தாயி தடுக்கைப் போட்டாள். லோட்டாவில் தண்ணி வைத்து இலை போட்டாள். சோறு பரிமாறினாள். 

‘இன்னா கொழம்பு..’ என்று கேட்டவாறே வந்து இலையில் உட்கார்ந்தான் நட்ராஜன். 

‘மீன் கொழம்பு… பத்தியக் கொழம்பு மாரி வச்சியிருக்கேன். நல்லாருக்கும்… சாப்ட்டுப் பாரு-‘ என்று சொல்லியவாறே கொழம்பை ஊற்றினாள் ஆனந்தாயி. 

‘உக்கும்… இன்னிக்கும் மீனு கொழம்புதானா…? அன்னாடம் இந்த எழவையே எப்படீமா துன்றது… சே… வாரத்துல ஒரு நாளாவது ஏதாவது காய்கறிய வாங்கியாந்து கொழம்பு வக்கக் கூடாதா…?” என்று அலுத்துக்கொண்டான் நட்ராஜன். 

‘ஒண்டிக்காரி நானு-ஒவ்வொருத்தருக்கு ஒன்னு ஒன்னு புடிக்குது… நான் இன்னாதான் பண்ணுவேன்… யாருக்குன்னு மாரடிப்பேன்…. என்னால. முடியாதப்பா… அவருக்குன்னு மூணு வேளையும் மீனு வேணும்… ஒனக்கு மீனுன்னாலே பிடிக்கலே… ஒன் பெண்டாட்டி வந்தா அந்தப் பாப்பாத்திக் கிட்டக் கேட்டு வேணுங்கற காய்கறி தினுசு ஆக்கிப் போடச் சொல்லுப்பா… என்னாலே இப்டி லோல் படமுடியாது…?” 

முக்கி முனகிக்கொண்டே. சாப்பிட்டு எழுந்தான் நட்ராஜன்.

நட்ராஜனுக்கு உலகத்தில் முதல் எதிரியே மீன்தான். மீன் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டான் அவன். வாரத் தில் ஏழு நாட்களும் ஒருவன் மீனையே சாப்பிட எப்படி இருக்க முடியும்? தன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் அது எப்படி ஒத்துக் கொள்கிறது? நட்ராஜனுக்கு இது ஒரு புரியாத புதிர்தான். கிராமணிக்குக் காலை இட்லிக்கு என்னதான் விதவிதமான சட்னி, இருந்தாலும் தொட்டுக் கொள்ளப் பிடிக்காது. முந்தின நாள் வைத்து சூடேற்றிச் சுண்டிப் போன மீன் குழம்புதான் இட்லிக்கு வேணும். அவனுக்கும் அப்படியே மத்தியானம் மீன் குழம்பு. ராத்திரிக்கும் மீன் குழம்பே. மீன் அந்த வீட்டில் மாசத்தில் முப்பது நாட்களிலும் வரும். ரெண்டு வேளை தவிர. அமாவாசை கிருத்திகை, அன்றைக்கு மட்டும் மத்தியானம் சாம்பார். ராத்திரிக்கே நிச்சயம் மீன் இருந்தாக வேண்டும் அவருக்கு. நல்ல வெறால் கெண்டையாக வாங்கி வந்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால்தான், மத்தியானம் சாப்பிட்ட பருப்பு செரிக்கும் அவருக்கு. இல்லையென்றால் வாய்வு வந்து விடும். இடுப்புப் பிடித்துக் கொள்ளும்; ரெண்டு நாட்களுக்குப் படுத்துக் கொண்டு ‘ஹா… ஹு’ என்று புரளுவார். 

கிராமணி மீன் பிரியர் அல்லது வெறியர் மட்டுமல்ல! ஒன்னாங் கிளாஸ் ரசிகரும் கூட… இன்ன மீனை இன்ன விதமாகத் தான் சமைக்க வேண்டும் என்பது அவருக்கு அத்துபடி. நாக்கு மீனை குழம்பு வைப்பவளை ஒரு பெண் ஜன்மமாகவே அவர் ஒத்துக் கொள்ளமாட்டார். நாக்கு மீனை வறுக்கவே வேண்டும். வௌவா மீன் என்றால் அதைக் குருமாதான் வைக்க வேண்டும். ஏதாவது கஷ்டப்பட்டுக் கொண்டு, தள்ளாமையால், வௌவாவை ஒரு சமயத்தில் வறுத்து விடுவாள் ஆனந்தாயி. போச்சு…! அவ்வளவு தான்… வீடு தூள் தூள் ஆகும். அவள் ஏழு தலைமுறையையும் இழுத்துப் பேசுவார். வண்டை வண்டையாகத் திட்டுவார். 

கானாங்கழுத்தை அவருக்குக் கட்டோடு பிடிக்காது. உலகத்திலேயே மட்ட ஜாதி மீன் கானாங் கழுதை. கழுதை என்ற வார்த்தைதான் கழுத்தை ஆகிவிட்டது என்பது அவர் கட்சி. சுண்ணாம்பு வாளை மீனை பஜ்ஜியாகத்தான் போடவேணும். வேறு விதமாக அதைப் பண்ணக் கூடாது. ‘ஆம்பிளைன்னா வேஷ்டி கட்டணும்… பொம்பளைன்னா பொடவை கட்டணும்… மாத்திக் கட்டலாமோ….?” என்பது அவர் கேள்வி. 

ஒரு சின்ன விஷயம்! போன தடவை புயல் அடித்தது அல்லவா? அந்தச் சமயம், நல்ல ராத்திரி நேரம். மழை இன்னும் விட்ட பாடில்லை. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. கிராமணி கதவைத் தட்டினார். தூக்கக் கலக்கத்தில் முனகிக் கொண்டே கதவைத் திறந்தாள் ஆனந்தாயி. எதிரே கிராமணி ஒரு பெரிய 

வாயில் வைத்துக்கொண்டு சுருட்டைப் பிடித்துக் கொண்டு கையில் ஒரு பெரிய வரால் மீனை வைத்துக்கொண்டு பாவாடை ராயன் மாதிரி நின்றிருந்தார். 

‘உங்க எழவ எடுக்க… இந்த அர்த்தசாம நேரத்துல இந்த மீன வாங்கியாந்து நின்னிங்கன்னா நான் என்ன பண்ணித் தொலை யரது… ஒண்டிக்காரியா ஒருத்தி லோல்படறாளேன்னு ஈவு எரக்கம் இருக்கா உங்களுக்கு… ஒங்க ஜாதிக்கே அது கெடையாதே…’ என்று திட்டித் தீர்த்தாள். 

‘மழைல ஒதுங்கிச்சாண்டி… ரொம்ப மலிவா கொடுத்தான்…’

‘மயிரில் கொடுத்தான்… அன்னாடம்தான் வெவுச்சிக் கொட்டறன… அது போதாதுன்னு இது வேறையா…?’ 

‘சர்தாண்டி… ரொம்ப எகிறாதே…’ என்று அலட்சியமாகச் சொன்னார் கிராமணி. அவர் வாயிலிருந்து பட்டை வாசனை வந்தது. 

இந்தச் சூழ்நிலையில் ஆளாகி வந்தவன் நட்ராஜன். மீன் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதல்ல… மீனே சாப்பிடுவது தான் பிடிக்கவில்லை. கல்யாணம் ஆவட்டும்… வரப்போகும் மனைவி நிச்சயம் இப்படி இருக்கமாட்டாள். நம்மை மாதிரி சாப்பாட்டு வகைகளில் ஒரு ‘நாகரிகம்’ உள்ளவளாக இருப்பாள் என்று அவன் மனப்பூர்வமாக நம்பினான். 

நட்ராஜன் ராத்திரி தூங்கும்போது கனவு கண்டான். ஒரு பெரிய கடல். அதில் லட்சக்கணக்காக, கோடிக்கணக்காக மீன்கள், அலை அலையாகப் படை எடுத்து வருகின்றன. ஒவ்வொரு மீனின் கையிலும் ஒவ்வொரு கத்தி இருந்தது. அந்த மீன்களெல்லாம் நட்ராஜனை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. ‘டேய்… மீன் இனத் துரோகி… கொலைகாரா… உன்னை என்ன செய்கிறோம் பார்…ஹ… ஹ…ஹ…ஹ…’ என்று வில்லன் வீரப்பா மாதிரி சிரித்தன. 

தம் கைகளிலுள்ள கத்தியால் அவனைக் குத்தின. ஒரு பிருமாண்டமான மீன் – அது நிச்சயம் திமிங்கலமாகத்தான் இருக்க வேண்டும் – ஒரு பெரிய ஸோபாவில் உட்கார்ந்து கொண்டு இந்தச் சண்டையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. 

திடுக்கிட்டு விழித்துக் கொண்டான் நட்ராஜன். மேல் எல்லாம் வியர்வை வழிந்தோடியது. நாக்கு வறண்டிருந்தது. எழுந்து தண்ணி குடித்துவிட்டு மீண்டும் படுத்தான். 

திரும்பவும் ஒரு கனவு… 

ஒரு மனிதன் படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் வயிறு பிருமாண்டமானதாக இருக்கிறது. அந்த வயிறுக்கு உரிய மனிதன் நட்ராஜன்தான் என்று அவன் உணர்கிறான். அந்த வயிற்றுக்குள் மிகப் பெரிய கல்லறை. கல்லறை இன்னும் மூடப்படவில்லை. அதன் வாய் இன்னும் திறந்தே இருக்கிறது. கிராமணியும் ஆனந்தாயியும் கூடை கூடையாக வண்டி வண்டியாக, அம்பாரம் அம்பாரமாக மீன்களைச் சுமந்து கொண்டு வந்து திறந்த கல்லறையின் வாயில் கொட்டுகிறார்கள். 

கடைசியாக நட்ராஜனையும் ஒரு கறுப்பு வண்டியில் வைத்து இழுத்துக்கொண்டு வந்து அந்தக் கல்லறையில் போட்டு மூடுகிறார்கள். கல்லறைக்குள் இருந்த மீன்களெல்லாம் இவனைப் பார்த்து ‘ஒஹோ’ என்று சிரிக்கின்றன. கண்ணடிக்கின்றன. இவனைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மி அடிக்கின்றன. 

திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறான் நட்ராஜன். ஒரு கணம் தான் கல்லறையில் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறான். அழுகை வந்தது. நைட் லாம்ப் தன் சிவப்பு, வெளிச்சத்தைச் சிதறுகிறது. கல்லறையில் நைட் லாம்ப் ஏது? எதற்கு?… அப்படி… தான் சாகவில்லை என்பதும், தன் வீட்டில் தன் அறையில்தான் இருக்கிறோம் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. நிம்மதியாக இருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டு விடிய விடியக் கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருந்தான். 

நட்ராஜன் கல்யாணம் முடிந்தது. முதல் இரவில் அறைக்குள் பயந்துகொண்டே நுழைந்தான், நட்ராஜன். கட்டில் மெத்தைமேல் மல்லிகைப்பூவை நிறையத் தூவி இருந்தார்கள். ஒரு சின்ன மேஜையில் ஒரு தட்டு. அந்தத் தட்டு நிறைய ஸ்வீட்களும் பட்சணங் களும் இருந்தன. மீன் சமாசாரமும் ஏதாவது இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக எடுத்து முகர்ந்து பார்த்தான். இல்லை! 

புது மனைவி சுமதி உள்ளே வந்தாள். அவள் மிரண்டு போய் இருந்தாள். பளிச் பளிச்சென்று மைக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள். 

அவளோடு என்ன பேசுவது என்று நட்ராஜனுக்கு விளங்க வில்லை. ரொம்ப நேரம் யோசித்து, ‘ஒனக்கு மீன் பிடிக்குமா..’ என்று கேட்டான். அவள் மேலும் மிரண்டு போனாள். 

இந்தக் கேள்விக்கு அர்த்தம் விளங்கவில்லை அவளுக்கு. என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள். தான் படித்த எந்த நாவலி லும், கதாநாயகன் இப்படி ஒரு கேள்வி கேட்கவில்லை. எந்த சினிமா விலும் கேட்கவில்லை. சினிமாவில் பாட்டுதான் பாடுவார்கள். ஆனால் அவளால் பாட முடியாது. முடிந்தாலும் கேட்க முடியாது. என்ன தர்ம சங்கடம். கடைசியாகப் பட்டும் படாமலும், பிடிக்கும்… ஆனா அதிகமாப் பிடிக்காது…’ என்று முணுமுணுத்தாள். 

நட்ராஜனுக்கு நிம்மதி பிறந்தது. 

மாப்பிள்ளையும் பெண்ணும் மறு உண்டுவிட்டு ஊர் திரும்பி னார்கள். நடராஜனுக்கு லீவ் முடிந்துவிட்டது. அன்று மில்லுக்குப் போக வேணும். 

காலையில் குளித்து இட்லியும் சட்னியும் வடையும் சாப்பிட் டான். அறைக்குள் சென்று டிரஸ் பண்ணிக்கொண்டு வெளியே வந்தான். 

‘நான் போயிட்டு வர்றேன் சுமதி..’ என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கறைக்கு வந்தான். சுமதி இட்லி சாப்பிட்டுக் கொண்டி ருந்தாள். தட்டில் இரண்டு இட்லிகள் இருந்தன. பக்கத்தில் பெரிய கிண்ணத்தில் முந்தின நாள் வைத்துச் சுண்டின மீன் குழம்பு இருந்தது. சட்னிக் கிண்ணம் அப்படியே தொடப் படாமல் இருந்தது. சுமதி இட்லியைப் பிட்டு, குழம்பில் போட்டுப் புரட்டிப் புரட்டி ‘சர் சர்’ என்று சத்தத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சின்ன மீன் மண்டையை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினாள். பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த சுமதி நட்ராஜனைக் கவனிக்க வில்லை. 

மீன் குழம்பு வாசனை தூக்கி அடித்தது. 

– 1976

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *