மீண்டு(ம்) வருவாள்…!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,382 
 

“தேவிகா…இப்போ எப்படி இருக்கீங்க… எங்கிட்ட எதையுமே மறைக்காம சொல்லுங்க…! நாம நிறையவே பேசியிருக்கோம்.அப்போ நீங்க இருந்த மனநிலை வேற… படபடன்னு மனசில இருந்தத ஒரு தயக்கமுமில்லாம கொட்டிட்டீங்க…இப்போ நீங்க நல்ல தெளிவாவே இருக்கீங்க..அதனால பேச தயக்கமா இருக்கும்…இப்போ எனக்கு ஒண்ணுதான் முக்கியமா தெரியணும்..!! தன்னம்பிக்கையோட வெளியுலகை எதிர்கொள்ளும் மனோ தைரியம் இருக்கா…?? எனக்காக சொல்லாதீங்க…நீங்க சொல்ற பதில வச்சுத்தான் உங்கள டிஸ்சார்ஜ் பண்ணனுமா வேண்டாமான்னு நான் முடிவெடுக்கணும்..”

டாக்டர் மீரா காளமேகம் தேவிகாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கேட்டாள்..

“டாக்டர்… நான் இப்படி பழைய தேவிகாவா மாறுவேன்னு கனவுல கூட நினைக்கல..! பார்க்கப்போனா முன்ன இருந்ததவிட அதிக தன்னம்பிக்கையும் வாழ்க்கையில ஏதாவது சாதிச்சு காட்டணும் என்கிற உத்வேகமும் தைரியமும் வந்திருக்கு..! இதெல்லாம் உங்களாலதான் எனக்கு கிடைச்சிருக்கு…என்ன புது தேவிகாவா மாத்திட்டீங்க…. வெறும் வார்த்தையால நன்றி சொன்னா பத்தாது..நீங்க சொன்னமாதிரி வாழ்ந்து காட்டுவதுதான் உங்களுக்கு நான் செய்யும் மரியாதை….”

“குட்..தேவிகா..! உங்க மேல எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு..ஆனா ரொம்ப அவசரப்படாதீங்க..நிதானமா யோசிச்சு ஒவ்வொரு அடியா மேல எடுத்து வைங்க…

அப்போ நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லுங்க..உங்கள கூட்டிட்டு போக….?”

“யாரு என்ன கொண்டு சேத்தாங்களோ…அவங்கதான் டாக்டர்..என்னோட ஃபிரண்ட் சாருதான்…!

“ஓக்கே… அவுங்க உங்களுக்கு தோழியா கெடைச்சது நீங்க செய்த பாக்கியம்….! நாளைக்கே அவுங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க…சில ஃபார்மாலிட்டியெல்லாம் இருக்கு..சில பேப்பர்ல கையெழுத்துப் போடவேண்டியிருக்கும்..அப்புறம் முக்கியமான விஷயம்..!! நீங்க கொஞ்ச நாளைக்கு நான் எழுதிக் குடுக்கிற மாத்திரைகளை எடுத்துக்க வேண்டியிருக்கும்..ஒரு சில மாத்திரைகள் கொஞ்ச நாளைக்கு மட்டும்தான்.. ஒரு மாத்திரை மட்டும் குறைந்தது இரண்டு வருடத்துக்கு எடுத்துக்கணும்..மாசம் தவறாம ரிவ்யூ வரணும்.. அதையும் சீக்கிரமே நிறுத்திடலாம்…ஒண்ணு மட்டும் நினைவில வையுங்க..நீங்க பூரணமா குணமானதுக்கு நீங்க மட்டும்தான் காரணம்..உங்க ஒத்துழைப்பும் விடாமுயற்சி மட்டுமேதான் காரணம்..மருந்து மாத்திரையெல்லாம் அப்புறம்தான்…முதல்ல நம்மை நாம்தான் நம்பணும்..அப்போதான் மத்தவங்க நம்மள நம்புவாங்க…ஆல் தி பெஸ்ட்…!!”

தேவிகா அந்த மனநலமருத்துவ முனையிலிருந்து வெளிவந்தபோது அன்றுக்குத்தான் புதிதாய் பிறந்துபோல உணர்ந்தாள்….

நுழையும் போது சுவாசம் முட்டியதுபோல இப்போது இல்லை…

வானத்தை வில்லாய் முறிக்கலாம்போன்று அத்தனை சக்தி… அவள் மூச்சில்….!

தேவிகா..ஐ லவ் யூ…!! மனது குதியாட்டம் போட்டது….

தனது தோழி சாருவைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்…

“தேவிகா..உன்ன இப்படி பாக்குறதில எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?”

“சாரு..டாக்டரே சொல்லிட்டாங்க….!! உன்ன மாதிரி ஒரு ஃப்ரண்டு கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணமாம்….”

“சரி..இப்போ நாம எங்க போறோம்…??”

“நேரா என்னோட விடுதிக்கு தான்.. நான் ஏற்கனவே பெர்மிஷன் வாங்கி வச்சிட்டேன்..நீ ஒரு மாசம் தாராளமா எங்கூட தங்கிக்கலாம்..அதுக்குள்ள வேற ஏதாவது வொர்க்கவுட் ஆகும்…!!”

சாருவின் அறை நல்ல விசாலமாய் இருந்தது.. எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தாள் சாரு..

“தேவிகா… போய் நல்லா குளிச்சிட்டு வா… லஞ்ச் ரெடியா இருக்கும்.. அப்புறம் கூட்டமாயிடும்..”

டைனிங் ரூமில் நாலைந்து பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.. தேவிகாவை வினோதமாகப் பார்த்தார்கள்..ஏதோ வேற்றுக்கிரக வாசி மாதிரி..

கூட சாரு இருந்ததால் வாயைத் திறக்கவில்லை..

அவர்களுக்கு சாருவின் குணம் நன்றாகத் தெரியும்..வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் அப்புறம் மூச்சுவிட மூக்கு இருக்காது..

ஆனாலும் அவர்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டதை தேவிகா பார்க்கத் தவறவில்லை..

“தேவிகா..நாளைக்கு நான் வேலைக்கு போகணும்..நீ இரண்டு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடு..இயல்பா இரு..

சாப்பிடும்போது யாராவது அனாவசியமாக கேள்வி கேட்டால் பதிலே சொல்லாத..வந்து நான் வச்சிக்கிறேன்…

சாரு எத்தனை தீர்க்கதரிசி….!!

“நீங்கதான் தேவிகாவா.?? “

“நீங்கதானே ஒரு மாசமா நர்சிங் ஹோமில இருந்தீங்க..இப்போ குணமாயிடிச்சா…?

“ஜாக்கிரதையா இருங்க.. மறுபடியும் வர சான்ஸ் இருக்கு…!!”

“ஆனாலும் உங்களுக்கு இப்படி வரவேண்டாம்..”

“உங்க குழைந்தைங்கள விட்டு உங்களால எப்படி இருக்க முடியுது..?”

பழைய தேவிகாவாயிருந்தால் இந்நேரம் அவர்கள் கன்னம் பழுத்திருக்கும்…..!

மேசையிலிருந்த பதார்த்தங்கள், தட்டு, கரண்டியெல்லாம் மூலைக்கொன்றாய் பறந்திருக்கும்..!!!

எல்லா கேள்விகளுக்கும் மௌனமே பதிலாக்கி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்…

“சாரு…நீ சொன்னபடியே டைனிங் ரூம்ல என்ன ஒருவழியாக்கிட்டாங்க..

ஏன் சாரு..எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்களா..?
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. மறுபடியும் பழையபடி ஆய்டுவேனா…உண்மைய சொல்லு சாரு….!!

“என்ன தேவிகா… நான் உனக்கு எத்தன முறை சொல்லியிருக்கேன்.?

உனக்கு ஒவ்வொரு நாளும் அக்னிப் பரீட்சை தான்.. நீதான் அந்த தீயில வெந்து சாகாம, தங்கத்தைப் போல புது மெருகோட வெளியில வரணும்…

உன்னால முடியும். உன்னை மட்டுமே நம்பு..”

***

“தேவிகா… இன்னைக்கு எனக்கு பள்ளிக்கூடத்தில இன்ஸ்பெக்க்ஷன் இருக்கு…
வர நேரமாகும்..

அப்பாவுக்கு தோச சுட்டு குடுத்திட்டு நீயும் சாப்பிட்டிடும்மா…..

எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்..

எங்களுக்கெல்லாம் பிரின்சிபால் ‘ ஹை டீ ‘ ஏற்பாடு செய்து விட்டார்…

“அம்மா..எங்களப்பத்தி கவலப்படாம போயிட்டு வா…!!’

தேவிகாவுக்கு அப்போது பதிமூன்றே வயது..அம்மா சாவித்திரி அவளை எல்லா வேலையையும் செய்ய பழக்கியிருந்தாள்…

தனியாகவே மூன்று பேருக்கு சமைத்து விடுவாள்…

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவளைப் பார்த்து மிகவும் பெருமையாயிருக்கும்….

ஒரு நிமிடம் கூட சும்மாயிருக்கமாட்டாள்… படிப்பிலும் முதல் ஐந்து இடத்துக்குள் வந்துவிடுவாள்…

சாவித்திரிக்கு பெண் நிறையப் படித்து வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று விருப்பம்…

ஆனால் அப்பா சிதம்பரத்துக்கு அவளை சீக்கிரமே நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டுமென்று ஒரே பிடிவாதம்…

சேது ஒருவகையில் தூரத்து சொந்தம்…. ஒரு பெரிய கம்பெனியின் மேனேஜராக இருந்தான்…தங்கை பத்மா திருமணமாகி மும்பையிலிருந்தாள்….

மாமியார் மருகளிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்…
வாய்க்கு ருசியாக சமைக்கத் தெரியவேண்டும்…

இரண்டு வீட்டாருக்கும் திருப்த்தியாக அமைந்த திருமணம்..

சேதுவுடன் சென்னையில் குடித்தனம்…

***

மாமியாரும் மாமனாரும் கூடத்தான் இருக்கப் போவதாக ஏற்கனவே தீர்மானமாகச் சொல்லியிருந்ததால் தேவிகா வுக்கு ஆரம்பத்தில் அது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கவில்லை….

தேவிகா எல்லோரிடமும் உடனே பழகிவிடுவாள்… அவளை புகுந்த வீடு எந்தவிதத்திலும் பயமுறுத்தவில்லை..

சேது கொஞ்சம் மூடி டைப் என்று போய் ஓரிரு நாட்களிலேயே புரிந்து கொண்டாள்..

மாமியார் அதிகாரம் செய்யவில்லையென்றாலும். அன்னியோன்யம் என்று கூற முடியாது..

மாமனார் அதிகம் வாயே திறக்க மாட்டார்.. வாயைத்திறந்தால் அதில் ஆணையிடுவது போன்ற ஒரு தோரணை தெரியும்…

அன்பு வெள்ளமென பாயும் அவள் பிறந்த வீட்டுக்கும் அன்பு வற்றி வறட்சியாக இருக்கும் சேதுவின் குடும்பத்துக்கும் இருந்த வித்தியாசம் அவளுக்கு புரிபட நாளாயிற்று…

காலை சிற்றுண்டியை அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்பி விடுவான் சேது…

மாமியார்.. மாமனார் பதினோரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு அவர்கள் அறைக்கு போய்விடுவார்கள்..

இரவு சரியாக எட்டு மணிக்கு மூன்று பேரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள்..

அவள் சமைத்து வைத்த ஒவ்வொரு ஐட்டத்தையும் விமரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டார்கள்..

போன புதிதில் அவளை புகழ்ந்து தள்ளிவிட்டாள் மாமியார்..

“தேவிகா..அருமையா சமைக்கிறியே.. நல்ல கைமணம்.. இன்னும் கொஞ்சம் கொத்சு வை..கத்தரிக்கா கொத்சு இப்படி நான் சாப்பிட்டதேயில்ல..

சேது.. இன்னும் கொஞ்சம் பொங்கல் வச்சுக்கோடா.”

சேது எப்போதாவது அவளைப் பார்த்து புன்னகை செய்வதோடு சரி..

சாப்பாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தை அவள் இப்போதுதான் பார்க்கிறாள்..

அவளுக்கு அப்பா..அம்மா ..நியாபகம் வந்தது..

***

சாப்பிடும் நேரம்தான் அவர்கள் அதிகம் பேசிக்கொள்ளும் நேரம்..

பேச்சு சாப்பாட்டை பற்றி இல்லை.

புத்தகங்கள் , அறிவியல் சார்ந்த விஷயங்கள், அவர்களுக்கு பிடித்த பாடல்கள் , வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சுயசரிதை, திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் என அரட்டை கச்சேரி முடிய குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.

சமயத்தில் கை காய்ந்து போய் வறவறவென்று இழுக்கும்.

மூன்று பேரும் சேர்ந்தேதான் சாப்பிடுவார்கள்..

ஒருவரை விட்டுவிட்டு சாப்பிடும் பேச்சுக்கே இடமில்லை..

சாப்பிட்டதும் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து பத்தே நிமிடத்தில் சமையலறை விளக்கை அணைத்து விடுவார்கள்..

மனதும் வயிறும் நிறைந்திருக்கும்..

இரவு படுக்கப் போவது வரை நிசப்தம்…

அவரவர் வேலையை செய்து கொண்டு…

இங்கோ நேர் எதிர்..!!

***

தேவிகாவுக்கு ஒன்றுமட்டும் மனதை நெருடியது..

மூவரும் உட்கார்ந்து கொண்டு ரசித்து ருசித்து சாப்பிடுவார்களேதவிர ‘நீயும் உக்காரு..சேர்ந்து சாப்பிடலாம் … எதுக்கு தனியா உக்காந்து சாப்பிடணும் ‘ என்று ஒரு உபசாரத்துக்குக்கூட சொன்னதில்லை…

சரி..அது கூட வேண்டாம்..

‘ நீ சாப்பிட்டியா .?’ என்று ஒரு வார்த்தை… ம்ஹூம்…’

மாமியார் மட்டும் போகிற போக்கில்..

“தேவிகா… நீயும் நேரத்தில சாப்பிட்டு , பாத்திரமெல்லாம் கழுவி, சமயலறைக்கதவை சீக்கிரமே சாத்திட்டு வா…

ராத்திரி கடமுடன்னு சத்தம் கேட்டாலே இவருக்கு கோபம் வந்திடும்…”

அவள் வேலையெல்லாம் முடித்துவிட்டு படுக்கப் போகும்போது சேது யாருடனோ சிரித்து சிரித்து போனில் பேசிக் கொண்டிருப்பான்..

இவளைப் பார்த்ததும் .
“ஓக்கே… நாளைக்கு பார்க்கலாம்.. குட்நைட்”
என்று கூறி உடனை போனைக் கட் பண்ணி விடுவான்..

அவனுடைய முகத்தில் இத்தனை நேரம் குடிகொண்டிருந்த சிரிப்பு மாயமாய் மறைந்திருக்கும்..

அப்புறம் அவள் பார்ப்பது அவனுடைய இறுகிய முகத்தைத் தான்..

ஏதோ கடமையை நிறைவேற்றுவது போல அவனது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு புரண்டு படுத்து விடுவான்…

தேவிகாவுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது..

***

அவளுடைய அப்பாவும் அம்மாவும் அவள் முன்னால் ஒன்றும் கொஞ்சிக் கொண்டிருக்கமாட்டார்கள்..

ஆனாலும் அவர்களுக்கிடையே இருந்த காதல்…!!

“சாவித்திரி.. ஏன் உம்முன்னு இருக்க…தலவலிக்குதா…??”

“தலவலியெல்லாம் இல்ல…இன்னிக்கு வகுப்பில ஒரே ரகளை…..

பாண்டியன்னு ஒரு பையன்…கீதா நோட்ல லவ் லெட்டர் வச்சிருக்கான்… திருத்தும் போது என் கையில் அகப்பட்டுது..

“ஆமா.. டீச்சர்.. நான் அவள லவ் பண்றேன்..என்ன தப்பு..??ன்னு நெஞ்ச நிமித்தி கேக்கறான்…!

“சாவித்திரி.. அவனோட தைரியத்தை நான் பாராட்டறேன்..

எனக்கு அந்த தைரியம் இல்லாம போச்சே.. நான் காவேரிக்கு எழுதின லவ் லெட்டருக்கு என்ன பின்னி எடுத்திட்டாரே எங்க வாத்தியார்…

எந்நேரம்..!!

உங்கம்மா தான் எனக்குன்னு இருக்கும்போது…!

“ச்சே.. என்ன பேச்சு பேசறீங்க.வயசு வந்த பொண்ண வச்சிட்டு….??”

“அப்பா.. அப்பா.. காவேரி யாருப்பா… ??எப்படி இருப்பாங்க..?
ப்ளீஸ் .. உன் லவ் ஸ்டோரிய சொல்லுப்பா…”

“ஏம்மா..என்னோட துக்கத்த கிளறிவிட்டுட்டு…!
எல்லாத்துக்கும் குடுப்பின வேணும்…”

அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாகவே சிரிப்புசத்தம் அவர்கள் அறையிலிருந்து கேட்கும்….

இதுபோல எத்தனையோ சம்பவங்கள்…

***

ஒரு நாள் தேவிகா மாமியாரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்..

“அம்மா.. நான் வருவதுக்கு முன்னால நீங்கதான் சமச்சிட்டிருந்தீங்களா..?

“ஆமா.. தேவிகா.. ஏன் கேக்குற…??”

“இல்ல..எல்லா வேலையும் தனியா செய்ய சிரமாமாயில்ல..??

யாரும் ஒரு உதவியும் செய்ய மாட்டேங்கிறாங்களே..!

உங்க வயசுக்கு நிச்சயம் கஷ்ட்டமாதானே இருந்திருக்கும்…!”

“நீ வரதுக்கு முன்னால தனபாக்கியம்னு ஒரு அம்மா கூடமாட உதவி பண்ணும்…”

“என்ன உதவி….??”

“காய் வெட்டி குடுப்பா.. பாத்திரம் தேச்சு, வீடு பெருக்கி , துணி துவைச்சு கொடுப்பா…!!”

“பாதி வேலய செஞ்சிடுவான்னு சொல்லுங்க…”

“ம்ம்ம்.. அப்படித்தான் வச்சுக்கோயேன்…!”

“ஏன்.. அவளுக்கு என்னாச்சு…??”

“உன் மாமனார் தான் இனிமே வேண்டாம்னு நிறுத்திட்டார்..

“அதான்… ஒண்ணுக்கு ரெண்டு பொம்பளைங்க வீட்டில இருக்கீங்களே.. அவளும் எதுக்கு…??”

இப்போதுதான் கொஞ்சம் உறைத்தது தேவிகாவுக்கு…

“இரண்டு பேர் எங்க..?? நான் ஒருத்தி தானே கிடந்து தனியா அல்லாடுறேன்…”

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

“ஏன்.. வேலைக்கு ஆள் வைக்கணும்னு சொல்றியா…?”

‘ ஆள் வேண்டாம்.. நீங்க கூடமாட உதவி செய்தாலே போதும்…’ என்று சொல்ல ஆசைதான்…

ஆனால் மாமியாரிடம் அந்த உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமா…?

தேவிகா பதில் சொல்ல முடியாமல் முழித்தாள்..

***

தேவிகாவின் முகம் நன்றாகவே தெளிந்திருந்தது…

“தேவிகா..நம்ம இன்னைக்கு டின்னருக்கு வெளியே போறோம்.. சரியா..!!”

“அவசியம் போகணுமா…??”

“ஏன்..??தயக்கமா இருக்கா..?? ஒரு வருஷமா வெளி உலகத்தையே பாக்காம இருந்திட்ட.. நான் உங்கூட இருக்கிற வரைக்கும் பயப்படத் தேவையில்ல..!!”

“ஏறு வண்டியில…”

“சாரு..பைக் வேணாமே ..ப்ளீஸ்.. கண்ணெல்லாம் இருட்டிட்டு வர மாதிரி இருக்கு..!”

“ஓக்கே.. பைக் வேண்டாம்.நான் டாக்ஸி புக் பண்றேன்..ஆனா நிச்சயமா வெளில போறோம்..”

“நான் வரேன்..ஆனா சாப்பிடப் போக வேண்டாம்.. பீச்சுக்கு போலாம்…!”

“வெரி குட்.. இப்படித்தான் இருக்கணும்..உனக்குன்னு ஒரு சாய்ஸ் இருக்கு… அத சரியா உபயோகிக்க தயங்கக் கூடாது..

எல்லாத்துக்கும் ‘சரி..சரி ‘ன்னு தலையாட்டி பொம்மை மாதிரி இருக்கக் கூடாது…

‘ நோ ‘ சொல்லவும் தெரியணும்..

பீச்சில் சுதந்திர காற்று.. கால்களை காதலுடன் வருடிக் கொடுக்கும் மணல்.. நுரையைச் சுமந்து வந்து ‘ இந்தா..பிடி…!! என்று காலடியில் கொட்டிவிட்டு போகும் அலைகள்…!

“வா..இங்க உக்காரலாம்…”

தேவிகா எதையோ வெறித்து பார்த்தபடி இருந்தாள்..

நாலைந்து குழந்தைகள் அலைகளின் காலை நனைத்து தண்ணீரை மேலே இறைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்..

“ஏய்.. தேவிகா…!”

“சாரு… நான் உங்கிட்ட நிறைய பேசணும்..கேப்பியா…?”

“பேசாம இப்படி யோசிச்சிட்டே இருக்கறதுதான் தப்பு..நிறைய பேசணும்..!”

“மறுபடியும் நடந்தது எல்லாம் ஒண்ணு விடாம சொல்லு சாரு…இப்போ நான் தெளிவா இருக்கேன்..

நீயும் என்கிட்ட பலமுறை சொல்லியிருக்க..ஆனா அதில பாதிகூட என்னால புரிஞ்சிக்க முடியல..ஒரே குழப்பத்தில இருந்தேன்..

எனக்காக ப்ளீஸ்டா..!!
எங்குழந்தைங்ககூடவா என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்க?

***

“அம்மா.. உங்க கிட்ட ஒண்ணு கேப்பேன்.. நீங்க தப்பா நினைக்கக் கூடாது…!!”

தயங்கி தயங்கி பேசினாள் தேவிகா..

“ம்ம்ம்..கேளு…!!”
மாமியாரின் முகம் இலேசாகக் கறுத்தது…

“அவருக்கு என்னப் பிடிச்சுதானே திருமணம் செஞ்சு வச்சீங்க…”

இதைக் கேட்கும்போது தேவிகாவுக்கும் சேதுவுக்கும் மூன்று வயதிலும், ஒரு வயதிலும் குழந்தைகள்…!

எப்பவோ கேட்டிருக்க வேண்டிய கேள்வி…!!

‘ தேவிகா…என்ன தீடீர் சந்தேகம்…சேது ஏதாச்சும் சொன்னானா….?”

அவரு எங்கிட்ட நாலு வார்த்த பேசினாலே அதிசயம்… நீங்கதான் எல்லாமே பாத்திட்டு இருக்கீங்களே.!!

“பின்ன எத வச்சு சொல்ற…??”

தூங்குவது மாதிரி நடிக்கும் மாமியாரை எப்படி எழுப்புவது..??

“ஒரு நாள் கூட எங்கூட ஆசையா பேசமாட்டேங்கிறாரே…கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்.. அது கூட மனசிருந்நா மட்டும்தான்..!!”

“உங்கிட்ட ஆசையில்லாமையா ரெண்டு பிள்ளைங்கள பெத்த..??”

“ச்சே.. இவளும் ஒரு பெண்ணா… பூனையும் நாயும் கூட ஆசையில் தான் குட்டிகளாக பெத்து தள்ளுகிறதா..??

மேலே பேச முடியாமல் வாயை அடைக்கும் இந்த பதிலை வேறு யார் சொன்னாலும் தேவிகா வேறு விதமாக எதிர்கொண்டிருப்பாள்…!!!

ஆனாலும் அவள் விடுவதாயில்லை….

“இல்லம்மா.. எங்கிட்ட சிடுசிடுன்னு இருக்காரே தவிர போனில் யார்கிட்டையோ சிரிச்சு சிரிச்சு பேசுறாரே…

அதனாலதான் கேட்டேன்…”

“அவனுக்கு ஆபீசு விஷயமா நூத்திஎட்டு ஃபோன் வரும்.அதெல்லாமா ஒட்டு கேப்பாங்க…?”

அன்று இரவு வெகுநேரம் அம்மாவும் பிள்ளையும் அறையில் இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள்…

படுக்கை அறைக்கு அவள் செல்லும்போது மணி பதினொன்றை நெருங்கிவிட்டிருந்தது.

“என்ன பெரிய துப்பறியும் சாம்புன்னு நினைப்பா..??
அம்மாகிட்ட என்னப் பத்தி என்ன கம்ளெயின்ட்..??அத நேர்ல எங்கிட்ட கேக்க வேண்டியதுதானே..??”

தேவிகா வாயடைத்துப்போய் நின்றிருந்தாள்..

“ஆமா..உன்ன அப்பா..அம்மா..கட்டாயத்துக்காகத்தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.

எனக்கு வேற ஒரு பெண்ணோட ரொம்ப வருஷப் பழக்கம்..ஆனா அவள என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..

அதப்பத்தி கூடுதலா உங்கிட்ட பேசணுங்குற அவசியம் எனக்கில்ல…

நீயும் இத இத்தோட விட்டு..தோண்டி தோண்டி கேட்டா நான் பொல்லாதவனாயிடுவேன்..

உனக்கும் நம்ம குழந்தைகளுக்கும் ஒரு குறையும் வைக்கமாட்டேன்..!!”

லைட்ட அணைச்சிட்டு பேசாம படுக்கிற வழியைப் பாரு…!!”

போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக்கொண்டு உறங்கப்போனான்…

தேவிகாவுக்கு கோபமோ, ஆத்திரமோ , அழுகையோ, ஒன்றும் வரவில்லை..

அப்படியே உறைந்து போனாள்.. மனமும் உடலும் மரத்துப் போயிருந்தது..

இரவு முழுவதும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்…

***

தேவிகாவுக்கு நம்பமுடியவில்லை..

இவ்வளவு பெரிய துரோகத்தை ஒரு பெண்ணுக்கு இழைத்துவிட்டு எப்படி இவர்களால் ஒன்றுமே நடக்காத மாதிரி இயல்பாய் இருக்க முடிகிறது…?

அவளுக்கு மாமியாரிடம் பேசவே பிடிக்கவில்லை.
வலியவந்து பேசினவளிடம் முகத்தை திருப்பிக் கொண்டாள் தேவிகா…

அப்பா ..அம்மாவிடம் சொல்வதற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை….
உள்ளுக்குள் வைத்து குமைந்து போனாள்..

அதுதான் அவள் செய்த மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்த போது எல்லாமே கைவிட்டு போய்விட்டதே….

அடிக்கடி அறையில் சென்று கதவைத் தாழிட்டு கொண்டாள்..

காரணமில்லாமல் குகன், மிதிலா மீது எரிந்து விழுந்தாள்..

சில சமயங்களில் குகனுக்கு விழுந்த அடியால் அவன் அம்மாவிடம் வர பயந்தான்..

சிறிது சிறிதாக சமையலறைக்குள் செல்வதை தவிர்த்தாள்..

“தேவகி… இன்னைக்கு சமைக்கலையா…நேரமாச்சே… இவ்வளவு நேரம் என்னதான் பண்ணிட்டிருந்த…?

“அம்மா..பசிக்குதும்மா…!”

தன் புடவைத் தலைப்பு பிடித்து இழுத்த மிதிலாவின் முதுகில்’ தொப்..தொப்பென்று’ மொத்தினாள் தேவிகா..

“ஏம்மா.. நான் வரதுக்கு முன்னாடி நீங்க சமைச்சிட்டுதானே இருந்தீங்க..

போய் சமச்சு உங்க அருமைப் பையனுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் போட்டா குறைஞ்சா போகும்…?”

மாமியாருக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை…

“தேவிகா..என்ன பேசற?? உனக்கென்ன பயித்தியமா..?? யாருகிட்ட பேசறோம்னு தெரியுமா..”

தேவிகா எதையும் காதில் வாங்காமல் அறைக்கதவை படாரென்று சாத்திக்கொண்டாள்..

“அம்மா..அவ ஒரு வாரமா இப்படித்தான் இருக்கா..நேற்று என்ன அடிக்கவே வந்துட்டா..”

“சேது…அவள இப்படியே விடக்கூடாது..ரூம விட்டு வராம பாத்துக்கோ..குழந்தைகள பக்கத்தில அனுப்பவே அனுப்பாத..!!”

அடுத்த ஒரு வாரமும் அவள் அறைக்கே சாப்பாடு போனது.. அவள் குளித்து ஒரு வாரம் இருக்கும்..

தலையையும் ஒழுங்காக வாரிக் கொள்ளாமல் பார்க்கவே பரிதாபமாய் இருந்தாள்…

“சேது !! இவள என்ன செய்யலாம்.. எனக்கென்னவோ நடிக்கிறான்னு தோணுது… ஒரு மாசம் அவ பொறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சா என்ன..?”

“வேணாம்மா… அப்புறம் பிரச்சனையாயிடும்.. இன்னும் கொஞ்ச நாள் பாப்போம்..

இப்போதெல்லாம் தேவிகா ஒழங்காக சாப்பிடுவது இல்லை..

எப்போது பார்த்தாலும் தனக்குத் தானே பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் , குழந்தைகளை பலாத்காரமாக இழுத்து வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டும்…

அவளைப் பாக்கவே குழந்தைகள் பயந்தனர்..

***

“அம்மா..இவள இப்படியே அனுப்பி வைச்சா அவங்க எல்லாத்தையுமே கண்டுபிடிச்சிடுவாங்க…

அப்புறம் நம்ம மேல கேஸ்போட சான்ஸ் இருக்கு..”

“இவளுக்கு அதெல்லாம் ஒண்ணும் நியாபகம் இருக்காதுடா..

அப்படியே ஏதாவது சொன்னாலும் அவுங்க நம்புவாங்களா…?”

“என்னம்மா பேசற..?? அவுங்க முதல் வேலையா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவாங்க..

அவ பழையபடி ஆனா நம்மள காட்டிக் கொடுக்க மாட்டாளா..??”

“அதுனால..??”

“நான் அவள விவாகரத்து பண்ண தீர்மானம் செய்திட்டேன்.. வக்கீல் கிட்ட பேசியிருக்கேன்..!!

அவர் சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து வாங்கி வச்சிட்டா ஒரு பிரச்சனையும் வராது…!!”

“கையெழுத்து போடுவாளா…??”

“அத எங்கிட்டே விடு…”

ஒரு நல்ல நாள் பார்த்து அவளை ஊருக்கு அனுப்ப தீர்மானித்தார்கள்…

“தேவிகா.அம்மாவ பாக்கணுமா..??”

“அம்மா..அம்மா..”
தேவிகா அழ ஆரம்பித்துவிட்டாள்..
கூடவே சிரிப்பும்…

சேது தானே கூட்டிக் கொண்டு போய் விடுவதேன முடிவு செய்தான்..

***

“சேது..வாங்க… எவ்வளவு நாளாச்சு..?? ரொம்பவே கவலை பட்டுட்டோம்…

தேவிகாகிட்டேயிருந்து ஃபோன் வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிடிச்சு…

நாங்க கூப்பிட்டாக்கூட ‘ ஸ்விட்ச் ஆஃப் ‘ ன்னே வருது.. உங்க ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கு..

சாவித்திரி விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள்…
.
பின்னால் நிற்கும் தேவிகாவை இன்னும் பார்க்கவில்லையா.??

“தேவிகா.. எப்படி…? “என்று ஆரம்பித்தவளுக்கு தேவிகாவைப் பார்த்ததும் ஒரே ஷாக்…

மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் சேதுவின் பின்னால் ஒண்டிக் கொண்டிருப்பவளா தேவிகா..??

“சேது..!!என்ன தேவகி இப்படி இளைச்சு , பார்க்கவே ஏதோ பிரமை பிடிச்சா மாதிரி…”

“ஆமா.. அத்த.. அவளுக்கு ரெண்டு மாசமா உடம்பு சரியில்லை..

ஆமா..மாமா..எங்க…?? “

“அவருக்கு ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையாகி ஒரு மாசம் ஆயிடுச்சு…

அத சொல்லத்தான் கூப்பிட்டு கூப்பிட்டு பாத்து அலுத்திட்டேன்…”

சேதுவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..
நல்லவேளை..அவருக்கு பதில் சொல்லத் தேவையில்லை.

சுருக்கமாக நாலு வரியில் தேவிகாவைப் பற்றி சொல்லிவிட்டு..

“நல்லா உடம்பு குணமானதும் சொல்லுங்க.வந்து கூட்டிட்டு போறேன்..”

என்று கூறி புறப்படப் போனவனைத் தடுத்து நிறுத்தினாள் சாவித்திரி..

“சேது..குழந்தைங்க..!அவுங்கள கூட்டிகிட்டு வந்து இங்க விட்டிருக்கலாமே…!!”

“அத்த.. பள்ளிக்கூடம் போறாங்க..மறந்திட்டீங்களா..
இப்போ பரீட்சை வேற வரப்போகுது..

ஊரிலிருந்து பத்மா வந்து உதவி பண்றதா சொல்லியிருக்கா..!

விட்டால் போதுமென்று கிளம்பி விட்டான் சேது…

***

“சாரு.. நான் சாவித்திரியம்மா பேசறேன்..”

“அம்மா..உங்க குரல கேட்டு எத்தன நாளாச்சு..நல்லா இருக்கீங்களா??அப்பா எப்படி இருக்காரு..? தேவிகா கூப்பிட்டாளா..??”

“சாரு..யாருமே நல்லால்லம்மா..நீ எப்படிம்மா இருக்க..உடனே வீட்டுக்கு வர முடியுமா? “

“ஏம்மா..ஏதாவது எமர்ஜென்சியா..??”

“அப்படியும் சொல்லலாம்.. உன்னைத் தவிர வேற யாராலும் இந்த உதவியப் பண்ண முடியாது..!!”

“அம்மா நான் ஒரு முக்கியமான மீட்டிங்குக்காக பெங்களூர் வந்திருக்கேன்.. நாளைக்கே சேலம் திரும்பிடுவேன்..
முதல் வேலையாக உங்கள வந்து பாக்குறேன்..சரியா..??

எதுவானாலும் மனச தளரவிடாதீங்க…! “

******* ******* *******

சாருமதி….!!

தேவிகாவுக்கு கிடைத்த அற்புத புதையல்..

பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள்.

சாரு விடுதி மாணவி.. அதிகம் யாருடனும் பேச மாட்டாள்.. தேவிகா மட்டுமே நெருங்கிய தோழி…

ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவள் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளருகிறாள் என்ற உண்மையை தேவிகாவுக்கு கூறினாள்…

சில நாட்கள் அவள் மிகவும் சோகமாக இருப்பாள்…

“தேவிகா..!! அப்பா..அம்மா..யாருன்னே தெரியாம இருக்கிறது எவ்வளவு கொடுமை தெரியுமா..??

ஏன் தேவிகா..குழந்தைய.. அதுவும் தான் பெத்த குழந்தையை வேணாம்னு யாராச்சும் தூக்கி எறிவாங்களா..??

பூனை, நாயெல்லாம் கூட தான் பெத்த குட்டிகள எவ்வளவு பத்திரமா பாத்துகுதுங்க…??”

“தேவிகா.. எனக்கு வாழவே பிடிக்கல..செத்துடலாம்னு தோணுது..”

சாருவின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் சிறுவர்கள் இதுபோன்ற மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவது உண்டு..

அவர்களுக்கு அடிக்கடி மனநல ஆலோசகர்களின் உதவி தேவைப்படும்..

ஒரு முறை சாரு மனநல மருத்துவரின் கிளினிக்கில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றும் இருக்கிறாள்..

அப்போது அறிமுகமானவள்தான் டாக்டர்…மீரா காளமேகம்….

மாதம் இருமுறை தெரிந்தவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்க அனுமதி உண்டு..

தேவிகாவின் வீடு அவளுக்கு சொந்த வீடு போலத்தான்..

சாவித்திரியையும் , சிதம்பரத்தையும் அப்பா, அம்மா என்றுதான் கூப்பிடுவாள்…

படிப்பு முடிந்ததும் சாரு மேற்கொண்டு கல்லூரியில் சேர்ந்தாள்..

முதுகலை பட்டப்படிப்பு முடித்து ஒரு பெரிய கம்பெனியின் கிளை நிர்வாகியாக சேலத்தில் வேலை பார்க்கிறாள்..

திருமண பந்தத்துக்குள் சிக்கிவிட விருப்பமில்லாமல் தனியாகவே வாழத் தீர்மானித்தவள்..

பத்து வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அவர்கள் நட்பு தொடர்ந்தது..

இப்போது சாருவை விட தேவகிக்கு உதவி செய்ய வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும்..?

‘ நல்லதோர் வீணை செய்தே,
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’

தேவிகாவைப் பார்த்ததும் சாருவுக்கு இந்த பாடல்தான் காதில் ஒலித்தது.

“அம்மா..தேவிகாவா இது..??”

சாருவைப் பார்த்ததும் தேவிகா வின் முகத்தின் இறுக்கம் தளர்ந்தது..

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அப்படியே அவளை இறுக்கி கட்டிக் கொண்டாள்.. சாருவின் எலும்பெல்லாம் நொறுங்கிவிடுவது போல அத்தனை ஒரு இறுக்கம்..

சாவித்திரி பயந்து விட்டாள்..

“தேவிகா..விடு அவள.!!”
“அம்மா இருங்க.. ஏன் பதட்டப் படுறீங்க…?”ஆமா அப்பா எங்கே..??”

தேவிகா சாரு கையை இறுக்கமாகப் பற்றியவள்தான்..விடவேயில்லை!

கேட்க கேட்க சாருவுக்கு ஆத்திரமாக வந்தது..

“அம்மா..அவுங்கள சும்மா விடக்கூடாது.. முதல்ல தேவிகாவ பழையபடி மாத்தணும்.. அப்புறம் இருக்கு அவுங்களுக்கு..!!

சாவித்திரியம்மா சொன்னது சாருவின் மனதை மிகவும் பாதித்தது..

“சாரு.. ! தேவிகா அப்பா படுக்கைக்கு பக்கத்தில ஒரு ஸ்ட்டூலப் போட்டுகிட்டு மணிக்கணக்காக பேசாம அவரையே பாத்துகிட்டு இருப்பா..ஒரு பூனைக்குட்டி போற மாதிரிதான் சத்தமே இல்லாம நுழைவா..
ஆனா எங்கிட்டதான் அதிகம் முரண்டு பிடிக்கிறா..சாப்பாடு தட்டை தூக்கி எறியுறா…தலயை வார விடமாட்டா..ஒழுங்கா சாப்பிடமாட்டா…நினச்ச நேரம் தூங்கறா…!!

சாரு..எம்பொண்ண என்னமோ பண்ணிட்டாங்க…!

சாருவுக்கு நடந்தது எதுவும் தெரியாவிட்டாலும் இப்போது தேவிகாவுக்கு என்ன தேவை என்பது தெளிவாக புரிந்து விட்டது

தேவிகா தீவிர மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்..

அவளுக்கு டாக்டர் மீரா சொன்னது அப்படியே நினைவில் இருந்தது..

“மன அழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போ வேணாலும் வரலாம்..
ஒன்றுக்கு மேல் பல காரணங்களால் மனதில் பாரம் கூடும்போது அதை வெளியில் சொல்லாமல் மனதில் போட்டு அழுத்தி வைக்கும்போது அது தீவிர மனச்சோர்வாக மாறி மனநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள்…ஒரு திருடன் எப்படி சத்தமில்லாமல் வீட்ல புகுந்து எல்லா பொருட்களையும் திருடிட்டு போறான்..மனச்சோர்வும் அப்படித்தான்..! நமக்கே தெரியாமல் உள்ளே நுழையும்.அதுவும் நாம் தனியா இருக்கோம்னு தெரிஞ்சா இன்னும் குளிர் விட்டுப் போகும்..தம்முடைய மகிழ்ச்சி , சுருசுருப்பு, நிம்மதி , பசி , தூக்கம் என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு சத்தம் போடாமல் வெளியேறிவிடும்..அதேல்லாம் தொலைந்தது கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம்மை ஆழ்த்திவிடும். முழித்துப் பார்க்கும் போதுதான் நாம் நம்மையே இழந்தது தெரியும்..பிறர் உதவியில்லாமல் வெளியே வருவது மிகவும் கடினம்..”

“சாரு. அம்மாவப் போய் பாக்கவேண்டாமா..?? அப்பா போனபிறகு அம்மா உடம்பும் மனசும் ரொம்பவே தளர்ந்து போயிட்டாங்கன்னு சொன்னியே..!!”

“தேவிகா..நீயா கேக்கணும்னுதான் பொறுமையா இருந்தேன்..அம்மாவுக்கு மறதி வந்திடுத்து.. யாரையும் உடனே நினைவுக்கு வரவில்லை.. என் பேரு கூட சட்டுனு சொல்ல வரல..ஆனா உடல் நிலை அத்தனை மோசமில்லை….அவுங்கள தனியா விட பயமா இருந்திச்சு..ஒரு நல்ல முதியோர் இல்லத்தில இருக்காங்க…உடனே மனச தளர விடாத.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாய்ட்டு வர..இனிமே நீதான் அவுங்கள வச்சு காப்பாத்தணும்.. அதுக்கு உன் மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருக்கணும்..புத்திசாலித்தனமா நடந்துக்க… உன் பிரச்சனை தீரும் வரைக்கும் அம்மா அங்கியே இருக்கட்டும்..

“சாரு…முதல்ல எனக்கு குழந்தைகள பாக்கணும்…எனக்கு தெரியாம என்னென்னவோ நடந்திடிச்சு.

அதில என் விவாகரத்தும் ஒண்ணு..எனக்கு தெரியாம எத்தனை பேப்பர்ல கையெழுத்து வாங்கியிருக்காங்களோ…?

“தேவிகா.. முதல்ல ஒரு நல்ல வக்கீலப் பாக்கணும்..எனக்கு அருணான்னு ஒரு வக்கீல் நல்ல பழக்கம்.. அவுங்க நமக்கு எல்லா உதவியும் செய்வாங்க..!!

***

“தேவிகா அம்மா..!! உங்களுக்கு ஒரு ஃபோன்….!!”

“எனக்கு யார் ஃபோன் பண்ணப்போறாங்க…? சாரு நீயும் கூட வாயேன்….!

விடுதியின் வரவேற்பு அறையில் அவளுக்காக காத்திருந்தது அந்த ஃபோன்…

சேதுவின் குரல்…உடனே அடையாளம் கண்டு கொண்டாள்..

“ரிஸீவரைப் பொத்தி ‘சேது !’ என்றாள்..

சாரு ‘பேசு‘ என்று சைகை செய்தாள்…

சிறிது மௌனம்.. நடுவில் சிறிய உரையாடல்..என பத்து நிமிடம் போயிருக்கும்…

“அவருக்கு என்ன உடனே பாக்கணுமாம்..நாளைக்கே…!

***

சேது தனியாகத்தான் இருக்கிறான்.. குழந்தைகள் ஹாஸ்டலில்..அம்மா.. அப்பா.. காலம் முடிந்தது.. வேலையும் காலி..

இரண்டு வருடத்துக்கு முன்னால் தேவிகா இருந்த அதே நிலையில்..

பல நாள் தாடி..மீசை..வாரப்படாத முடி..பள்ளத்துள் விழுந்த கண்கள்..

ஓடம் வண்டியிலேறிவிட்டது…

கோர்ட், கேசு என்று அலையாமல், சேர்ந்து வாழ விரும்புகிறான்…!

யோசித்து முடிவெடுப்பதாய் கூறி நடந்தாள் தேவிகா…

***

அருணாவின் அறை மிகக் கச்சிதமாய் இருந்தது..

மேசையில் அங்குமிங்கும் கேஸ் கட்டுக்குள் இறைந்து கிடக்காமல் ஒரு பூங்கொத்து கிண்ணத்தில் மலர்ந்து மணம் வீசியது….

ஒரு பெரிய சட்டத்துக்குள் அருணாவும் ஒரு சின்னப் பெண்ணும் சிரித்தபடி அடைக்கப்பட்டிருந்தார்கள்..

ஒரு பர்சனல் கம்ப்யூட்டர்..

பின்னால் கண்ணாடி அணிந்த முப்பத்தைந்து வயது அருணா..

வக்கீல்களும், மருத்துவர்களும் உணர்ச்சிகளை அடக்கப் பழகிக் கொண்டவர்கள்..

கொக்குக்கு ஒன்றே குறி என்பதுபோல தன்னிடம் வந்த கேஸ் வெற்றிபெற வேண்டும் என்ற ஒன்றே குறி…

“ஹலோ சாரு..!!ஹலோ தேவிகா!”

ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார்கள்.. பேசினார்கள்…!!

“தேவிகா இந்த கேசை இரண்டு விதமான எதிர் கொள்ளலாம்..விவாகரத்து பேப்பர்ல உங்களுக்குத் தெரியாம கையெழுத்து வாங்கியிருக்காங்கன்னு சொல்றீங்க..அத ப்ரூவ் பண்றது சிரமமேயில்ல..உண்மையிலேயே நீங்க அவர விட்டு பிரியணும்னு விரும்பினா பேசாம அத அப்படியே ஏத்துக்கலாம்..!ஆனா உங்க குழந்தைங்க உங்களுக்கு கிடைக்க மாட்டாங்க..இல்ல..என்ன ஏமாத்தி கையெழுத்து வாங்கிட்டாருன்னு நிரூபிச்சா விவாகரத்தே செல்லாது..அவர் மேல கேஸ் போட்டு அவர் பண்ணின எல்லா தில்லுமுல்லையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம்..!!அப்புறம் நீங்க எடுக்கிறதுதான் முடிவு..குழந்தைங்களையும் உங்ககிட்டேயிருந்து பிரிக்க முடியாது..அநேகமாக அவர் கம்பி எண்ணவேண்டியதுதான்…இத முழுக்க முழுக்க தீர்மானிக்க வேண்டியது நீங்கதான்…! நான் உங்களுக்கு என் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் செய்வேன்… நீங்க அனுபவித்த வேதனைய உணர்வுபூர்வமான புரிஞ்சுக்க என்னால முடியும்..நானும் அந்த வேதனய அனுபவிச்சவதான். இந்த கறுப்பு கோட்டே அதுக்கு சவாலா நான் ஏத்துக்கிட்ட உடைதான்..! யோசிச்சு பாத்து முடிவெடுங்க…!”

***

“தேவிகா..என்ன யோசன….?அருணா கிட்ட போய்ட்டு வந்து ஒரே குழப்பமா இருக்கா…?”

“இல்லவேயில்லை.. ரொம்பவே தெளிவா இருக்கேன்..!”

படபடவென்று கையைத்தட்டினாள் சாரு…

அப்படியே தேவகியைக் கட்டிக் கொண்டாள்..

“சொல்லு..உம்மனசில இருக்கறத…!”

“சாரு.. நான் விவாகரத்த ஏத்துக்கப் போறதில்ல…அதேசமயம் உடனே அவர்கூட சேந்து வாழப்போறேன்னு அர்த்தமில்லை…அவர்மேல கேசெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..!!! மனநோயாளியா நான் வாழ்ந்த காலம்..!!என்னால மறுபடியும் நினைச்சு பார்க்க முடியல..!! அதை நிலைமைக்கு அவரையும் கொண்டு விடணுமான்னு யோசிக்கிறேன்.. குழந்தைங்க மட்டுமில்லைன்னா நான் எடுக்கும் முடிவு வேறு விதமா இருக்கும்..!! இவ்வளவு நாள் அம்மா இல்லாம இருந்துட்டாங்க..இப்போ அப்பா இல்லாம வளரணுமா…? இதில அவுங்க செஞ்ச தப்பு என்ன?? தவறே செய்யாம தண்டனைய மட்டும் அனுபவிக்கிறது எவ்வளவு சித்திரவதை! இதுமாதிரியான குழந்தைகள் சமூகத்தில அதிகமாகும்போது தான் போதுதான் திருமணத்தைப் பத்தின கண்ணோட்டமே மாறிடுது. திருமணங்கிற பந்தத்துமேலேயே வெறுப்பு வர ஆரம்பிக்குது…!! அது எங்க போய் முடியும்னே தெரியல…”

“தேவிகா.. எப்படி இவ்வளவு தெளிவா யோசிக்கிற…??

அனாதை ஆசிரமத்தில வளர்ந்த எனக்கு உண்மையிலேயே அம்மா மேல…அப்பா மேல.. இன்னும் தீராத வெறுப்பு..!

எனக்கும் மேரேஜ்ங்ற இன்ட்டிட்யூஷன் மேல நம்பிக்கேயே போயிடிச்சு.

ஆனா இப்படியே தனியா வாழறதும் சிலவேளை சலிப்பா இருக்கு..

சமயத்தில எவ்வளவு லோன்லியா இருக்கு தெரியுமா..??”

“சாரு..எனக்கு என்ன தோணுதுன்னு தெரியுமா…?? குழந்தைங்க மேல அன்பும் மதிப்பும் இருந்தா மட்டுமே நாம இந்த உலகத்துக்கு அவுங்கள கொண்டுவரணும்.

எங்களுக்கும் குழந்தைங்க இருக்குன்னு காண்பிக்க இல்லை…

அந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் குடும்ப அமைப்பில நம்பிக்கை இருக்கும்..”

“தேவிகா..நீ சேதுவோட சேர்ந்து வாழ முடிவு செய்திட்டியா…??”

“அவசரப்படாத சாரு..எனக்கு இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் தேவை..முதல்ல நான் சொந்தக்கால்ல நிக்கணும்..என்னோட குழந்தைகளையும் அம்மாவையும் யாருடைய உதவியும் எதிர்பார்க்காம காப்பாத்தணும்..சேதுவுக்கு ஒரு பக்கபலமா இருந்து மனஅழுத்தத்திலிருந்து அவர வெளியே கொண்டு வரணும்..அவர் செய்த அதே தப்ப நானும் செய்தா இவ்வளவு நாள் மருத்துவமனைல நான் எடுத்துகிட்டு வந்த ஆலோசனைகளுக்கு பலனில்லாம போயிடும்…!!”

“தேவிகா..உன்ன பாத்து நான் ரொம்பவே பெருமைப்படறேன்..”

“சாரு..நீ என் தோழியா கிடைச்சதுக்கு நான்தான் பெருமைப்படணும்…”

இருவரையும் பார்த்து நாமும் பெருமைப்படுவோமே…!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *