(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராதா ஒரு புதிர்
தேன்துளி தின்னத் தின்னச்
சிறிதுமே திகட்டாது. —
தேவர் தந்த பூமாலை
சூடவும் திகட்டாது.
மனைவி தந்த வெற்றிலையின்
மகிழ்ச்சியும் திகட்டாது.
தாய் ஊட்டும் பால்சோறு
சாப்பிடத் திகட்டாது.
தந்தை தந்த பொன்னாடை
தரிக்கத் திகட்டாது.
காவிரி தேவி புகழ்
பாடப் பாடத் திகட்டாது.
– குடகர் பாட்டு மொழிபெயர்ப்பு
ரித்த பாம்புச்சட்டையைப் போல் உலர்ந்து தோட்டங் களை ஊடுருவிக்கொண்டு செல்லும் அந்தச் சாலை, குடகு நாட் டின் தலைநகரான மெர்க்காராவிலிருந்து காப்பித் தோட்டங்களுக்குப் போவதற்காகத் தோட்ட முதலாளிகளால் அவர்கள் செலவில் அமைக்கப்பட்டது. ஜீப்புகளும், டிராக்டர்களுமாக அடிக்கடி அந்தப் பாதையில் ஓடி. அதைக் கந்தைத் துணிபோல் ஆக்கி வைத்திருந்தது. வாகனங்கள் இல்லாத எஸ்டேட் முத லாளிகள் அங்கு இல்லை. எது வேண்டுமானாலும் அவர்கள் மொர்ச் காராவுக்குத்தான் வந்து வாங்க வேண்டும். எப்படியும் ஒரு முறையாவது ஒவ்வொரு தோட்டக்காரரும் மெர்க்காராவுக்கு வந்துதான் திரும்புவார்கள். அதனால் மெர்க்காரா, மெர்க்காரா என்று நொடிக்கு ஒரு முறையாவது அதன் பெயரைச் சொல்ல, வேண்டி வந்துவிடும். பெட்ரோல் போட வேண்டுமானாலும், டீசல் போடவேண்டுமானாலும் மெர்க்காராவுக்குத்தான் போக வேண்டும்: கறி வாங்க, காய், கனிகள் வாங்க, ரொட்டி வாங்க மற்ற சமையல் சாமான்கள் வாங்க அனைத்துக்குமே மெர்க் காராதான் மத்திய கேந்திரம்! அதனால் சுடலை நோக்கி ஓடும் நதிகளைப்போல கார்கள் மொர்க்காரா நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.
மொர்க்காரா!
தென் இந்தியாவில் ஒரு உயரமான மலை வாசஸ்தலம், குடகு நாட்டுக்கு அதுதான் தலைநகரம். குலைநகரம் என்றவுடன் அது சென்னையைப்போல், பெங்களூரைப்போல் விஸ்தாரமாக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம். தமிழ் நாட்டிலுள்ள ஒரு நகரியத்திற்கு இணையாகத்தான் சொல்லலாம். இருந்தாலும் அது ஒரு தலைநகரம்; குடகுப் பகுதியின் கலாச்சாரத்திற்கு அது தான் ஒரு அழியாத முத்திரையாக விளங்கும் பட்டணம்.
நகரம் சமதளமாக இருக்காது. சில வீதிகள் ஏற்றமாகவும், சில வீதிகள் இறக்கமாகவும்தான் இருக்கும். சுமார் பதினயாயிரம் பேர் கொண்ட அந்தச் சிறிய நகரம்தான் குடகிற்கே பெரியவியாபார ஸ்தலமாக விளங்குகிறது. அதைவிட்டால் அறுபது மைல் கீழே இறங்கி மைசூருக்குத்தான் வரவேண்டும், மைசூருக்கு மேற்கே அவ்வளவு தூரத்தில் உயரமான குன்றின்; மீது அந்த நகரம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
மெர்க்காரா – வெள்ளிக்கிழமைகளில் திருமண வீட்டைப் போல மளமளப்பாக இருக்கும். கடைகளில் வியாபாரம் பொங்கி வழியும்; கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கள்களும் இங்கும் அங்கும் இழைந்து கொண்டிருக்கும். சினிமாக் கொட்டகைகளில்கூட அன்றுதான் படங்களை மாற்றிப் போடுவார்கள். ஏனெனில் அன்றுதான் மெர்க்காராவில் வாரச்சந்தை கூடுகிறது. இதை அனுசரித்தே சுற்றியுள்ள தேயிலை, ஏலம், காப்பித் தோட்டங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளானாலும் சரி, முதலாளிகளானாலும் சரி வெள்ளிக்கிழமை தான் மெர்க்காராவுக்கு வரமுடியும். மற்ற நாட்களில் எல்லோரும் அவரவர்தோட்டங்களில்தான் இருப்பார்கள்.
மற்ற முதலாளிகளைப்போலத்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட் முதலாளி சடையப்பரும் வெள்ளிக்கிழமை தோறும் மெர்க்காராவுக்குப் போவார். ஒரு வாரத்திற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வருவார். அவரிடம் ஒரு அம்பாசிடர்கார், ஒரு ஜீப், ஒரு டிராக்டர், இரண்டு வண்டிகள் இருந்தன. சுவையாகச் சமைப்பதற்காக செட்டி நாட்டிலிருந்து ஒரு சமையல்காரனைக் கொண்டுபோய் வைத்திருந்தார்.
மூன்று கணக்குப் பிள்ளைகள், நான்கு மேஸ்திரிகள்– இன்னும் சில நபர்கள் – இவர்களுக்கு மத்தியில் “ராதா அம்மா” என்று அன்போடும் பரிவோடும் அழைக்கப்படும் ஒரு இளம். பெண் – இவர்கள்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் பிரஜைகள்.
“ராதா!”
“சார்!”
“விடிந்தால் வெள்ளிக்கிமமை. சாமான் சிட்டைகளெல்லாம் தயாராகிவிட்டதா?”’ சடையப்பர் இராமனாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவராதலால் செட்டி நாட்டு பாணியிலேயே பேசுவார்.
“காய் கறிச்சிட்டை, சமையல் சாமான்கள் சிட்டை எல்லாம் தயாராகிவிட்டது. பெட்ரோல் விஷயம் டிரைவரைத் தான் கேட்கணும். அவன் சித்தாப்பூருக்குப் போயிருக்கிறான் வந்ததும்கேட்டுக் கொள்கிறேன்”’.
ராதாவின் பதிலிலிருந்து யாரும் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாது. அவள் யார்? அந்த எஸ்டேட்டில் அவளுக்கு என்ன பொறுப்பு? அவளுக்கும் சடையப்பருக்கும் என்ன சம்பந்தம்? விருந்தாளிகளுக்கும், வேற்று மனிதர்களுக்கும் இது ஒரு புதிர்தான். சரி; அங்கே வேலை பார்ப்பவர்களுக்குத் தான் ஏதாவது தெளிவாகத் தெரியுமா? சாமான்கள் வாங்குவதற்குத் தோட்டக்காரர்கள் எப்படி மொர்க்காராவுக்குப் போய்த்தான் தரவேண்டுமோ அதைப்போலத்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் எதுவேண்டுமானாலும் ராதாவைத்தான் கேட்க வேண்டும்.
ஆம்; ராதா, சில்வர்ஸ்டார் எஸ்டேட்டில் ஒரு நடமாடும் மொர்க்காரா! சமையல்காரன் அரிசிக்காக ராதாவிடம் போய் நிற்பான்; கணக்குப்பிள்ளை வாரச் செலவுக்காக ராதாவிடம் ரொக்கப் பணத்தை எதிர்பார்த்திருப்பார். சிப்பந்திகளின் சம்பளப்பட்டு வாடாவிலிருந்து, கூலிகளின் அன்றாடச் சம்பளம் வரை – எல்லாமே ராதாவின் முன்னிலையில், மேற்பார்வையில் தான் நடந்தன.
ராதா ஒரு யுவதி! ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா, திருமணம் ஆகவில்லையா என்பது ஒருவருக்கும் விளங்காத கேள்விக் குறியாக இருந்தது.
அவளுக்கு அந்த எஸ்டேட்டின் மூலைமுடுக்கெல்லாம் தெரியும். அந்தப் பங்களாவின் எல்லா விவரங்களையும் அவள் அறிவாள். ஆனால் அவள் உள்ளத்தில் உள்ளதை எவரும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மனம் மட்டும் – பூமியில் உள்ள புழுதிகளையும், ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களையும், மேகத்தின் மழைத்துளிகளையும் சுமந்து கொண்டிருப்பதைப் போல் கனத்துப்போயிருந்தது. இதை மட்டும் அங்குள்ள சிப்பந்திகளால் எப்படியோ புரிந்து கொள்ள முடிந்தது!
மனிதன் – தனிமையில் இருக்கும் போதுதான் தன்னைப் பற்றி நினைக்கிறான். அதுவும், கவலைகளால் சூழப்பட்ட மனிதன், அந்தக் கவலைகளைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கே அடிக்கடி. தனிமையை விரும்புவான். ராதா இந்த வகையைச் சேர்ந்தவள். ஓவ்வொரு கட்டத்திலும். அவள் தனியாத சிந்தனையிலிருந்து தான் வெடுக்கென்று தூங்கி விழித்தவளைப்போல் துள்ளிக் குதித்து வருவாள்.
அவள் அழகு எல்லோரும் அறிந்தது. அவள் குரல் எல்லோரும் கேட்டது; அவள் நடை உடை எல்லோரும் பார்த்தது. ஆனால் அவள் உள்ளம் மட்டும் எவரும் அறியாதது.
ஆறுமாத காலத்திற்குள் அந்தப் பங்களா முழுவதும் நீக்க மற நிறைந்துவிட்ட ராதாவைப்பற்றி அதே பங்களாவில் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு ஆணின் குணம் நெருங்கிப் பழகினால் சில நாட்களில் தெரிந்து விடுகிறது; ஆனால் ஒரு பெண்ணின் குணம் அப்படி யல்ல! அது கடலில் தவற விட்ட கணையாழி மாதிரி! கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம்.
ராதா பாடத் தெரிந்தவள். அவள் குரல் இனிமையானது. இரவு. நேரங்களில் நிலவொளியில் வாசலில் உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் பாடுவாள், அது சோகமான பாட்டாக இருந்தாலும் இனிமையாக இருக்கும்.
ராதா அந்த எஸ்டேட்டுக்கு வந்த மறு மாதமே, சடையப்பர் அவளுக்கு உதவிக்காக தமிழ்நாட்டிலிருந்து ஒரு வேலைக்காரியையும் கொண்டு வந்து சேர்த்து வைத்தார். ஏனெனில் – பத்துப்பெண்கள் மத்தியில் ஒரு ஆண் வாழமுடியும்; ஆனால் பத்து ஆண்கள் மத்தியில் ஒரு பெண் எப்படி வாழமுடியும்? – என்பதைச் சடையப்பர் உணர்ந்திருந்தார்.
சடையப்பர், தான் மட்டும் வெளியில் போவதாக இருந்தால் ஜீப்பில் போவார். ராதாவையும் அழைத்துக் கொண்டு போவதாக இருந்தால் அம்பாசிடர் காரில் போவார். காரின் முன் சீட்டில் அவர் உட்கார்ந்து கொள்வார். பின் சீட்டில் ராதா உட்கார்ந்து கொள்வாள்.
“ராதா!”
“சார்”
“வந்து.ஆறுமாத காலம் ஆகப்போகிறதே! நீ ஒருநாள் கூட சினிமாப் பார்க்கவில்லையே?”
“அதெல்லாம் மறந்து போச்சு சார்! டிரான்சிஸ்டர் வச்சுப் பாட்டை மட்டும் கேட்கிறேன்!”
“ராதா, வாழ்க்கையில் கவலைகள் தோன்றலாம்; ஆனா வாழ்க்கையே விரக்தியாக விடக்கூடாது. கறியிலே உப்பு கூடிப் போயிட்டா அதைத்தூக்கியா எறிஞ்சிடுகிறோம்! அதிலே கொஞ்சம் புளியைச் சேத்தா அது சரியாப் போகுதுல்ல! அது மாதிரித் தான் வாழ்க்கையும்!”
“மனப்புண், வெட்டுக்காயங்களைவிடக் கொடியது சார். மருந்தோ, மந்திரமோ அதுக்குப் பிரயோசனமில்லே சார்! அதே மனம்தான் சார் அதுக்கு மருந்து! நான் கொஞ்சம் கொஞ்சமா அதை ஆற்றிக்கிட்டு வர்றேன்! வேறே ஓண்ணுமில்லே சார்!”
“எல்லாம் சரியாப்போயிடும். காலம்தான் எல்லாத்துக்கும் மாமருந்து. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தாலும், எனக்கென்று சில கவலைகள் இருக்கே! அதுக்காக நான் சாப்பிடாமல் இருக்கேனா? சிரிக்காமல் இருக்கேனா? கணக்கு வழக்கைப் பார்க்காமல் இருக்கேனா? விசிறி இல்லாத போது வியர்க்கிற மாதிரி கொஞ்ச நேரம் கவலைப்படுவேன். நீயும் அப்படித்தான் இருக்கணும்! என்ன. நான் சொல்றது?”
“நீங்க சொல்றது எதையும் நான் தட்றது இல்லை சார்!”
சடையப்பர் ராதாவைக் கூட்டிக்கொண்டு பேபோகும் போதெல்லாம் இப்படிப்பேசுவதுண்டு. ராதா எதையும் தட்டிப் பேசமாட்டாள். பெரிய அதிகாரியிடம் பேசும்போது ‘சார்’ என்று மட்டும் பதில் கூறும் சின்ன அதிகாரியைப்போல் மறு வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசமாட்டாள்.
“ராதா!”
“சார்!”.
“உன்னைப்பற்றி நமது எஸ்டேட்டில் என்ன நினைக்கிறார்கள்?”
“நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை சார்!”
“நான் கேட்பதுவேறு! நீ நினைத்துக்கொண்டு பதில் சொல்லுவது வேறு! உன்னை வேலைக்காரி என்று நினைக்கிறார்களா அல்லது உறவுக்காரப்பெண் என்று நினைக்கிறார்களா என்று கேட்கிறேன்”.
“ராதா அம்மா என்று தான் நினைக்கிறார்கள். சில நேரங்களில் மரியாதையாக ‘அம்மா!’ என்று அழைக்கிறார்கள். இதில் நான் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது சார்!”
“நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இனிமேல் யாராவது உன்னைப்பற்றிக் கேட்டால் நீ தான் என் செக்ரட்ரி என்று சொல்லி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.”
“ரொம்ப மகிழ்ச்சி சார்! சில்வர் ஸ்டார் எஸ்டேட்டுக்கு செக்ரட்ரியாக வருவதென்றால் நான் பாக்கியசாலிதான்?”
“பின்னே என்னம்மா! ஓன்றும் படிக்காதவனெல்லாம் பழக்கத்துனாலே மானேஜர், காஷியர்னு இங்கு சொல்லிக் கொண்டு திரியும் போது, பி. ஏ. படிச்ச ஒரு பொண்ணு எனக்கு செக்ரெட்ரியா வர்றது என்ன தப்பு?”
“நான் பி. ஏ. படி.ச்சவங்கிறதை நீங்கதான் அங்ககரிச்சிருக் இங்க சார்! எனக்கு, என் படிப்பு, நான் படிச்ச அந்தக் கல்லூரி வாழ்க்கை– இதையெல்லாம் நெனைச்சா ஒரு கெட்ட சொப் பனம் மாதிரித் தெரியுது சார்!”
“சொப்பனம்கிறது தூங்கும் போது நடக்கிற உலகம். அது சிலருக்குப் படிப்பினையாகக்கூட அமைஞ்சுடலாம். ஆனால் உனக்கு நெஜ உலகமே சொப்பனமாக் இருக்குதுங்றீயே! அது தப்பம்மா!”:
“கரெக்ட் சார்! பழைய நினைவுகள் என்னை அப்படி. நெனைக்க வைக்கிறதே! தவறு என்ற காரியங்களையும் மனிதர்கள் சல வேலைகளில் திரும்பத் திரும்பச் செய்கிறார்களே! அது மாதிரி தான் நானும்!”
*அதுனாலேதான் நான் சொல்றேன் – அடிக்கடி பழைய விஷயத்துக்குப் போகக் கூடாது; அதுவும் கெட்ட் விஷயங்களை நெனைச்சே பார்க்கக் கூடாது!”
ராதாவுக்கும், சடையப்பருக்கும் இப்படி அடிக்கடி உரையாடல் ஏற்படுவதுண்டு,
அன்று சடையப்பருக்கு அவருடைய மருமகனிடமிருந்து ஒரு தந்தி வந்திருந்தது.
சடையப்பர் தந்தியைப் பிரித்துப் பார்த்தார். அவர் எதிர் பார்க்சுவில்லை – அவர து மருமகன் ஆனந்தன் மனைவியோடு எஸ்டேட்டுக்குப் புறப்பட்டு வருவதாக அதில் கண்டிருந்தது. ஆனந்தன் குடகிற்கு வந்ததே இல்லை. இப்போதுதான் முதன் முறையாக வரப்போகிறான். திருமணத்திற்குப் பிறகு சடையப்பர் மகள் கீதாவும் தோட்டத்திற்கு வரப்போவது இதுதான் முதல் தடவை.
சடையப்பர் தந்தியைப் படித்ததும் மகளும், மருமகனும் மறுநாளே வரப்போவதை அறிந்து பரபரப்படைந்தார்: கணக்குப்பிள்ளையைக் கூப்பிட்டார்; சமையல்காரனைக் கூவி அழைத்தார். மேஸ்தரி ஓடிவந்தான். எல்லோரிடமும் சடையப்பார் ‘நாளைக்கு மாப்பிள்ளை குடும்பத்தோடு வருகிறாராம்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். மகள் மீதும், மருமகன் மீதும் அவ்வளவு பிரியம்! சடையப்பருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் அன்று இரவு அவர் சரியாகத் தூங்கவே இல்லை.
“ராதா!”
“சார்!”
“என் மகளும், என் மருமகனும் வரப் போகிறார்கள்?”.
“ரொம்ப மகிழ்ச்சி சார்! கீதாவை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கப்போகிறேன் சார்! “
“ஏன், அவள் படத்தைப் பார்த்திருப்பியே! நம்முடைய: ஹாலில் இருக்கிறதல்லவா!”
“ஆமாம். சார்!. ஆனால் தம்பதிகளாகப் பார்ப்பது மகிழ்ச்சி யில்லையா சார்!”
“ராதா, உனக்கும் நன்றாகப் பொழுதுபோகும்! கீதா மிகவும் நல்லவள். மாப்பிள்ளையும் அப்படித்தான். அவரும் பி. ஏ: படித்திருக்கிறார்; பெரிய பணக்காரர் வீட்டுக்கு ஒரே பிள்ளை! கீதாவும் ஒரே பெண். இரண்டு பேரும் தான் வீட்டிலே! அதனாலே குடும்பத்திலே குறைச்சல் இல்லை; சொத்தோடுசொத்துச் சேந்தாச்சு!! இல்லையா ராதா!”
“கரெக்ட் சார்! வில்லன் இல்லாத நாவல் மாதிரி நிம்மதி யாகப் போயிடும்”’
“என்ன ராதா சொல்றே!”
“மாப்பிள்ளைக்குத் தம்பி அல்லது அண்ணன், பெண்ணுக்கு நாத்தனூர்– இவர்களெல்லாம் இருந்தால் தானே சார் பிரச்சினையே வருகிறது என்கிறேன்!”
“உண்மைதான் ராதா! எனக்கு அதில் அதிகமான அனுபவம் உண்டு.”
“உங்களுக்கு என்ன சார் அப்படி அனுபவம்?”
“வாழ்க்கை என்பது கல்யாணத்தோட முடிஞ்சு போற சினிமா இல்லை ராதா. காதல் கல்யாணம் ஆனாலும் சரி, சம்பிரதாயக் கல்யாணம் ஆனாலும் சரி, தாலி கட்டியதற்குப் பிறகு தானே யுத்தமே தொடங்குது! மண மாலைகளெல்லாம் வெற்றி மாலைகளாகி விடுமா என்ன? இன்னம் சிலருக்கு கல்யாணமான மறுநாளே குருக்ஷேத்திரம் தொடங்கி. விடுகிறதே!”
“சார்!”
“என்ன ராதா!”
“ஒண்ணுமில்லே சார். உங்க முன்னுரை குடும்ப வாழ்க்கைக்கே ஒரு அபாய அறிவிப்பு மாதிரி இருக்கே சார்!”
“உனக்குத் தெரியணும்கிறத்துக்காகத் தான் இதெல்லாம் சொல்கிறன்.நீ இனிமேல் தான் வாழப்போறே அதுனாலே சொல்றேன்”.
“வேண்டாம். சார்! எனக்குப் பயமா இருக்கு சார்!”
“பயம் அவசியம் தான்! அதுக்காக எல்லாத்துக்கும் பயப்படக்கூடாது ராதா! சில பெண்கள் பயத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் அழிஞ்சுபோயிருக்காங்க; பயம்கிறது கோழைத்தனம். மரியாதைங்கிறது பெருந்தன்மை!”
“சார் மொ்க்காராவுக்குப் போயி சாமான்கள் வாங்கவேண்டாமா?” என்று குறுக்கிட்டுப் பேச்சை நிறுத்த முற்பட்டாள் ராதா.
“போகத்தான் வேணும்! ஆனால் இன்னக்கி என் மனம் சரியில்லேம்மா! எங்கோ போய்ட்டேன். கீதா வர்றான்னு தெரிஞ்ச உடனே என்மனம் பழைய காலத்துக்குப்போயிருச்சு””.
“நீங்க தானே சார் சொன்னீங்க பழைய விஷயங்களுக்குப் போகக் கூடாதுன்னு!”
“சொன்னேன்; சொன்னபடியா மனிதன் நடக்கிறான்?”
“எதையோ நினைக்கிறீங்க. ஆனால் சொல்லமுடியாமெ முழிக்கிறீங்க. சார்?””,
“என்னைப் பெற்றவள் இருந்தாளே- என் தாய், அப்ப நான் இப்படியா வாழ்ந்தேன். தினசரி வீட்டில் போராட்டம்தான்- குப்பைக் கூளங்கள் நிறைந்த வீடு; கூந்தலுக்குக்கூட எண்ணை யில்லாநிலை; சாக்குப் பைகளைவிட கறுத்துப்போன எங்கள் உடைகள்; கரிப்பிடித்த பாத்திரங்கள்; மண் வெடித்த அடுப்பு: சாம்பல் பூத்த தரை– இப்படித்தான் அந்தக் காலத்தில் எங்கள் வீடு இருக்கும்.
“என்னைப் பிடித்த அதிர்ஷ்டம் நான் இந்த எஸ்டேட் முதலாளிக்குச் சுவீகார புத்திரனாக வந்தேன். இவருக்கு புத்திரபாக்கியம் இல்லாதிருந்தது. தத்தாக வந்ததும் குலமுறைப்படி என் பெயர் என் சொந்தப்பெயர் எல்லாம் மாறின. என் பெற்றோர்களின் பெயர்களும் மாறின. என் வீடு, வாசல், ஊர் எல்லாமே மாறிவிட்டன, நான் புதுப் பிறவியாகிவிட்டேன்.
“சுவிகாரம் வந்த மறுமாதமே எனச்குத் திருமணம் நடந்தது. நல்ல சம்பந்தம்தான். எனக்கு வாய்த்த மனைவியும் நல்லவள்: தான்; பெயர் மரகதவல்லி – தமிழ் நாட்டிலுள்ள செட்டி நாட்டில் அழகாபுரி எங்கள் ஊர். நான் பிறந்தது பிள்ளையார் பட்டி என்றாலும் சுவிகாரம் போன ஊர்தான் இப்போது எனது சொந்த ஊர்.
“திருமணமான மறு வருஷமே கீதா பிறந்து விட்டாள். கீதாவின் மேல் நாங்கள் உயிரையே வைத்திருந்தோம். ஆனால் கீதாவின் தாயார்…?”
“அவுங்களுக்கு என்ன ஆச்சு சார்?”
“இருமலில் தொடங்கி காசமாக முற்றி மரணத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது ராதா!”
“அப்பறம் சார்?”
“எனக்கு இருபது வயதிலே கல்யாணம். இருபத்தோராவது வயதிலே கீதா பிறந்தாள். இருபத்திநான்காவது வயதில் நான் என் மனைவியைப் பறிகொடுத்தேன். எனக்கு இப்போது வயது நாற்பத்திரெண்டாகிறது!”’ என்றார் சடையப்பர். அவர் குரலில் ஏக்கம் ததும்பி நின்றது.
“ஏன் சார் இரண்டாவது மணம் புரிந்து கொள்ளவில்லை?”
“சரியான கேள்விதான்! எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தன. கீதாவின் மீது உள்ள தணியாத பாசத்தினால் எல்லாமே தள்ளிக்கொண்டு போய் விட்டன.
“ராதா, என் மனத்தில் ஒரு ஆழமான கருத்து தழும்பாகிக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளை வைத்திருப்பவனைக்கூட இந்த உலகம் மதிக்கிறது; ஆனால் முதல் மனைவியை இழந்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டவனை இந்த உலகம் முக்கால் மனிதனாகத்தான் மதிக்கிறது. இப்படி ஒரு தாழ் வான எண்ணம் எனக்கு”?
“நீங்க நினைக்கிறது தப்பு சார்! நீங்க அப்பவே இரண்டாவது கல்யாணம் செய்துக்கிட்டிருக்கணும் சார்!”
“சரி; ராதா, எந்த ஒரு காரியத்துக்கும் ஆசை மட்டும் முக்கியமல்ல; சூழ்நிலைகளும் ஒத்து வரணுமில்லையா! கீதா கைப்பிள்ளை. அந்த நேரத்தில் திருமணம் செய்துக்கிட்டா கீதாவின் தாய் வீட்டுச் சொந்தமே அறுந்து போயிடுமே!”
“இன்னொரு காரணம்– இரண்டாவது கல்யாணம்னா, நல்ல பெண் அமையிறது ரொம்பவும் கஷ்டம், காலையில் தயாரித்த வியாபாரமாகாத பொருள் அந்திக் கடைக்கு வருகிற மாதிரி கூன், குருடுகள் வந்து வாய்க்கும் – இப்படிப் பல பிரச்சினைகள்!”
“ராதா, இன்னக்கி நான் ரொம்பே நேரம் உன்கிட்டே பேசிட்டேன். அதுவும் பல விஷயங்களைப் பேசிட்டேன் இல்லையா!”
“அதுனாலே ஒண்ணும் தப்பில்லே சார், உங்க செக்ரெட்ரி கிட்டேதானே பேசியிருக்கீங்க! ஏன் சார், கீதாவுக்கு . என்ன வயசு?”
“இருபதுக்குள்ளேதான் இருக்கும். எங்க ஜாதியிலே இருபதுக்குள்ளே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணாட்டா பலவிதமாகப் பேச ஆரம்பிச்சிடுவாங்களே?”
“என்னைக்காட்டிலும் இரண்டு வயது இளமை! அப்ப நான் கீதான்னு கூப்பிட்டா தப்பில்லையே!”
“இதிலென்ன தப்பு! தாராளமாகக்கூப்பிடு! மாப்பிள்ளைக்கு கீதாவைவிட இரண்டு வயது கூட. உத்தியோகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; பெரிய பணக்காரர். கீதாவைப் பொறுத்தவரை இனிக் கவலை இல்லை”.
“ஏன் சார் நீங்க ஏன் இப்படிச் செய்திருக்கக் கூடாது?”
“எப்படி?”
“மருமகனையே இங்கே கொண்டுவந்து வச்சிக்கிட்டா எப்படி. இருக்கும்? கீதாவையும் அடிக்கடி பார்த்துக் கிட்டமாதிரி இருக்கும்; உங்களுக்கும் ஒரு மனச்சாந்தி. மாப்பிள்ளையும் எஸ்டேட் வேலையைப்பழகிக் கொள்வாரே?”
“எனக்கு அப்படி. ஒரு திட்டமும் உண்டு ராதா! எதற்கும் நேரம், காலம் என்று இருக்கே!”
“இந்த முறை அதை ‘டிசைட்’ பண்ணிட்டாப் போகுது!”
“மாப்பிள்ளையின் நோக்கம் அறிந்துதான் அதைப்பேசணும். எடுத்த எடுப்பிலே பேசிட்டா காரியம் கெட்டுப் போனாலும் போயிடுமே?”
“எல்லாவற்றையும் கீதா மூலமே பேசிட்டாப் போகுது! கீதா சொல்றதை அவர் தட்ட மாட்டார் அல்லவா?”
“தட்டவே மாட்டார். கீதாவின் தாயாரிடத்தில் நான் எப்படியோ, அப்படித்தான் என் மாப்பிள்ளையும். குடும்பத்துக்கு அது அவசியம் ராதா! புருஷனுக்குள் மனைவி அடக்கமானவள் என்கிறார்கள். மனைவி சொல்றதையும் புருஷன் கேட்டால் தான் அது உண்மையாகும்! மனைவியை வெறும் சமையல் காரியின்னு நெனைச்சாச்சுன்னா மனைவி மனத்திலே ஏதாவது புகுந்து கொள்ளும். நம் கோட்டைக்குள்ளே எதிரியின் ஆள் ஒருவன் நுழைந்து விட்டாலே போச்சு! படிப்படியாக நாம் கோட்டையை இழந்து விடவேண்டியது தான். அது மாதிரிதான் மனைவியின் உள்ளமும்!”
“சார், நீங்க ரொம்பவும் உயா்ந்தவங்க சார்! கொஞ்ச நாள் தான் நீங்க மனைவியோடு வாழ்ந்தீங்க! அந்தக் காலத்திற்குள்ளே ஒரு பெண்ணின் மனத்தை நல்லா அறிஞ்சு வச்சிருக்கீங்களே சார்?”
“நல்ல மனைவி கிடைச்சா, புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவான். மனைவியே எதிரியானவளா அமஞ்சிட்டா வாழ்க்கையே சூன்யமாப் போயிடும்!”
“அமைறதுன்னா என்ன சார்! கடவுளாப் பார்த்து ஏற்பாடு செய்யிறதா?”?
“அப்படியில்லை! முன்பின் தெரியாத பொண்ணைத்தான் கல்யாணம் பண்றாங்க. மனப்பொருத்தம் சரியாகப்போனால் அமஞ்ச மாதிரிதான்.”’
“சரி, பார்த்து, விரும்பி, கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கூடப் பாதியிலே பிரிஞ்சிடுராங்களே!”
“அது அதுங்க தலையெழுத்து! உதாரணத்துக்கு எடுத்துக்க? ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்றாங்க! எனக்கும் அப்படித்தான் பண்ணுனாங்க! நான் எப்படி அவளைப் பறி கொடுத்தேன். இதுதாம்மா விதி!”
“விதியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் சார். முடிவு களையெல்லாம் விதியின்னு சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். இப்ப நீங்க இருக்கிறதை உங்க ‘விதி’ங்கிறீங்க! நீங்களே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவும் விதியா?”
“ஆமாம், என் விதிதான்!”
“அப்படின்னா முதலில் சொன்ன விதி என்ன ஆச்சு? ஒரு மனிதனுக்கு இரண்டு விதிகள் இருக்க முடியுமா?”
“அடேயப்பா! ராதா, நீ இப்படிப் பேசுவாய்ன்னு நான் நெனைக்கவே இல்லை!”
“நான், பி.ஏ.யிலே தத்துவம் படிச்சவள் சார்!”
“உன்னை ஈரோடு ஐங்ஷனிலே பார்த்ததுக்கும் இன்னக்கிப், பார்க்கிறதுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி இருக்கு!”
“அது கவலை சார்! மருந்து சாப்பிட்டால் கூட மெலிய முடியாதவர்கள் கவலைப்பட்டால் மெலிந்து விடுவார்கள் என்பதற்கு நானே ஒரு உதாரணம் சார்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மேஸ்திரி ஓடிவந்து ‘கீதா அம்மாவும், மாப்பிள்ளை ஆனந்தும் வந்து விட்டதாக”’ச் சொன்னான். சடையப்பர் வேகமாக எழுந்து வாசலுக்குப் போனார். ராதா மனதில் ஏதோ தீர்மானித்தவளாய் உள்வாசலிலேயே நின்று கொண்டு வரவேற்கத் தயாரானாள்.
பெரிய காரில் ஆனந்தும், கீதாவும் வந்து இறங்கினார்கள். சடையப்பர் மகளை அனைத்து வரவேற்றார். கீதாவும் ஆனந்தும் உள்ளே வந்தார்கள்.
“வணக்கம்’” இருகரம்கூப்பி ராதா அவர்களை வரவேற்றாள்.
ராதாவைக் கூர்ந்து கவனித்த ஆனந்தன் திடுக்கிட்டுப் போனான்!
“என் பெயர் ராதா! சில்வா ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி!’” என்றாள்!
ஆனந்தின் முகத்தில் இருள் படர்ந்தது. அவன் நடையின் கம்பீரம் குன்றிப்போனது. இவள் வேறு பெண்ணாக இருப்பாளோ? இல்லே, கீதாதான் பெயரை மாற்றிக்கொண்டு ராதா என்கிறாளா?” – இந்தக் குழப்பத்திலே ஆனந்தன் உள்ளே நுழைந்தான்.
கீதா வருகிறாள்
செத்தபின் பிறக்காதே
செத்தபின் பிறந்தால்
பசுவாகப் பிறக்காதே
பசுவாகப் பிறந்தால்
பாவியான பெண்கள்
பாலுக்கு ஆசைப்பட்டு
பால் கறந்து விடுவார்கள்.
எருதுவாகப் பிறந்தால்
சண்டாளப் புலையர்கள்
உழுதடித்துக் கொள்வார்கள்.
ஆடாகப் பிறந்தால்
பத்ரகாளி தேவிக்கு
ஆடறுத்துக் கொல்லுவார்கள்.
செத்தபின் பிறக்காதே
ஆகையால் நீங்களோ
வாடாமல் வதங்காமல்
வைகுண்ட நகரத்தில்
மனம்குளிர வாழீரோ!
– குடகர் பாட்டு
அது ஒரு எக்ஸ்டென்ஷன் ஏரியா. அதை எல்லோரும் புதுப் பட்டணம் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கத் தொடங்கி அந்தப் பெயரே பிற்காலத்தில் ஊர்ஜிதமாகிவிட்டது.
புதுப் பட்டணம், சாக்லெட் மிட்டாயைப்போல் சமசதுரமானது. குறுக்கும், நெடுக்குமாக தெருக்கள் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்கின்றன. புரியும் படியாகச் சொல்வதானால் பெங்களூரைப் போல் புதுப்பட்டணத்தில் பல சர்க்கிள்கள் உண்டு. மதுரை மாநகரில் தெருக்களுக்கு மாதங்களின் பெயர்கள் இருப்பதைப்போல் இந்தப் புதுப் பட்டணத்தில் தெருக்களுக்கெல்லாம் தேசியத் தலைவர்களின் பெயர்களே சூட்டப்பட்டிருந்தன. தமிழ்நாட்டுக்கே உரித்தான தாழ்வான புத்தியின் படி எல்லாத் தெருக்களுக்கும் வட நாட்டுத் தலைவர்களின் பெயர்களே வைக்கப்பட்டிருந்தன. ஜவகர் சாலை, திலகர் சாலை, போஸ் மைதானம், ஆசாத் பூங்கா — இப்படித்தான் அந்தப் பெயர்கள் இருந்தன.
புதுப்பட்டணத்தின் வளர்ச்சியையும் கவர்ச்சியையும் கேள்விப்பட்ட பாண்டிச்சேரி கிறிஸ்துவ மிஷனைச் சோர்ந்தவர்கள் குழந்தைகளுக்கான ஒரு ஆங்கிலத் தொடக்கப்பள்ளியை புதுப் பட்டணத்தில் தொடங்கினார்கள். அந்தப் பள்ளிக்கு ‘அருள் மலர் கான்வெண்ட்’ என்று பெபயர் வைக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் இரண்டு சிஸ்டர்கள்தான் அங்கு ஆசிரியை களாக வந்தார்கள். அவர்களது கண்டிப்பான நிர்வாகத் திறமையாலும், கனிவான உபசரணைகளாலும் அருள் மலர் கான்வெண்ட் புதுப்பட்டணத்து மாளிகைவாசிகளை வெகு எளிதில், மிகவிரைவில் கவர்ந்து இழுத்துக்கொண்டது.
வீட்டுக்கொரு பிள்ளை விகிதம் அந்தப்பள்ளி சுவீகரிக்கத் தொடங்கியது. தாங்கள் குடியிருக்கும் புதுப்பட்டணத்திற்கு மரியாதையும் மதிப்பும் உயரவேண்டும் என்பதற்காக செல்வந்தர்கள் அனைவரும் அருள் மலர் கான்வெண்ட்டை கார்த்திகை மாதத்துக் கழனியைப் போல் கண்காணிக்கத் தலைப்பட்டனர்.
பொருள்கள் வாங்கிக் கொடுப்பதிலும் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதிலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தார்கள். அமர்ந்து படிப்பதற்கான டெஸ்க் முதல் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கான அமெரிக்கன் என்சைக்ளோபீடியா வரை இலவசமாகவே வந்து குவிந்தன. சிஸ்டர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
“கர்த்தர் தான் எங்களுக்கு இவைகளைச் செய்கிறார்; இல்லாவிட்டால் நாங்கள் விமான நிலையத்திற்குப் பக்கத்திலே தான் கான்வெண்டை அமைப்பதாக இருந்தோம்!” என்று அடிக்கடி அவர்கள் மனதுக்குள்ளேயே ‘ஸ்தோத்திரம்’ செய்து கொண்டிருந்தார்கள்.
பிள்ளைகள் பெருகிவிட்டன. இரண்டு சிஸ்டர்கள் பள்ளிக் கூடத்தை நடத்தமுடியவில்லை. மறுவருடமே பாண்டிச்சேரி மேற்றாணியார் அருள் மலர் கான்வெண்ட்டுக்கு ஒரு மதரையும் நியமித்து இரண்டு ஆசிரியைகளையும் அமர்த்திக்கொள்ள ஆணை பிறப்பித்துவிட்டார்கள்.
அருள் மலர் கான்வெண்ட்டின் மகிமை புதுப்பட்டணம் மட்டுமின்றி, தாய்ப் பட்டணமான மதுரை மாநகரிலும் பரவிடத் தொடங்கியது. நகரிலுள்ள பெருந்தனக்காரர்கள் அவர்கள் குழந்தைகளைக் கார்களிலும் ரிக்ஷாக்களிலும் புதுப் பட்டணம் கான்வெண்ட்டுக்கு அனுப்பத் தொடங்கினர்.
கான்வெண்ட்டுக்’ இப்போது புதிய கட்டிடம் வந்துவிட்டது. மதரும் சிஸ்டர்களும் தங்குவதற்குத் தனியாக குவார்ட்டர்சும் விட்டது. குழந்தைகளை வீடு தேடிப்போய்க் கூட்டிக்கொண்டு போய் விடுவதற்கும் கூட்டிவருவதற்கும் புதிய டீசல் வேன் ஒன்றும் வாங்கிவிட்டார்கள். புண்ணிய காரியத்திற்காகத் தொடங்கப்பட்ட அந்த கான்வெண்ட் ஒரு பெரிய வாணிப ஸ்தாபனம் போல் தானாக வளர்ந்துவிட்டது. சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டால், சாப்பிடக் கூடாததைச் சாப்பிட்டது போல் உடல் நலம் கெட்டு விடும் என்று உணர்த்தும் டாக்டரைப்போல் மதரும், சிஸ்டர் களும் மிகுந்த கவனத்துடன் போதனை செய்து வந்தார்கள். அருள்மலர் கான்வெண்ட்டின் வெற்றிக்கு அது அமைந்த இடம் மட்டும் காரணம் அல்ல; செல்வந்தர்களின் அரவணைப்பு மட் டும் காரணமல்ல; அதன் நிர்வாகத். திறமையும் ஒரு முக்கிய காரணம்.
கான்வெண்ட்டுக்கு இப்போது ஓரு மிஸ் வந்திருக்கிறாள். அவள், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள். அவளுடைய குளிர்ச்சியான தோற்றமும், அவள் குடும்பத்தின் ஏழ்மை நிலையும்தான் அவளை கான்வெண்ட்டில் ஒரு மிஸ் ஆவதற்கு வழி வகுத்துக்கொடுத்தன.
மிஸ் மஞ்சளா!
இதுதான் அவள் பெயர். ஆங்கிலம் சரளமாகப் பேசுவாள். அவளும் ஒரு கான்வெண்ட்டில் படித்தவள் தானே !
அவள் அந்தக் கான்வெண்ட்டில் மிஸ் ஆனதும், மதர் சுப்பீரியர் அவளுக்கு ஒரு உத்தரவு போட்டார்கள் — ‘மஞ்சுளா, இனிமேல் வீட்டுக்குப்போக முடியாது. மதரோடும் சிஸ்டர்களோடும் குவார்ட்டர்சில் தான் தங்கவேண்டும்’ – இதுதான் மதார் கொடுத்த உத்தரவின் சாரம்.
இந்த உத்தரவு, மஞ்சுளாவுக்கு ஒரு வகையில் மனதுக்கு இதமாகத்தான் தெரிந்தது. வேளா வேளைக்கு உணவு; கட்டுப்பாடான வாழ்க்கை, பிறரிடம் அன்போடு பழக வேண்டும்; பேச வேண்டும் என்ற மனப் பயிற்சி; இவைகளுக்கெல்லாம் மேலாக மலர்களைப் போன்ற பிள்ளைகளுக்கு எழுத்து அறிவிக்கும் புனிதத்தொழில் – இந்தக் காரணங்கள் அவளை குவார்ட்டர்சில் வாழ்க்கை நடத்துவதற்கு உற்சாகத்தை வழங்கின.
மஞ்சுளா பி. ஏ. படித்தவள், வாடாத மலரைப்போல் எப்போதும் அவள் முகம் மலர்ச்சியாக இருக்கும். அவள் கருப்புமல்ல, வெரிப்பான சிவப்புமல்ல; மான் நிறம். ஆண்களைப் போல் உயரமானவளுமல்ல; சில பெண்களைப்போல் குள்ளமானவளுமல்ல. அவள் அழகானவள், கவர்ச்சி மிக்கவள்; வசீகரிக்கும் சக்த்தியுள்ளவள் என்று பார்ப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அவள் எடுப்பாக இருந்தாள்.
மஞ்சுளா இனிமையாகப் பாடுவாள். குயிலின் குரல் அவளுடையது. மஞ்சுளா சங்கீதம் பயின்றிருந்தால், அவள் ஒரு இசை வாணியாக இருப்பாள். அவளுடைய மென்மையான நடவடிக்கைகளும், இனிமையான குரலும் மதர், சிஸ்டர்கள் மத்தியில் அவளுக்கு ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
“மஞ்சுளாவை ஏன் நம் மதத்தில் சேர்த்துவிடக்கூடா து? சேர்த்துவிட்டால் வெகு விரைவில் ‘மதர்’ ஆகிவிடுவாள்?” என்று பலமுறை மதரும் சிஸ்டர்களும் பேசிக்கொண்டிருந்ததை மஞ்சுளா கேட்டிருக்கிறாள்.
“நான் ஏன் மதராக வேண்டும்? வாழ்க்கையில் இளமையிலேயே வெறுப்படைந்தவர்களும், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களும் காதலில் தோல்வி கண்டவர்களும் தான் மதத்தை மாற்றிக்கொண்டு அடையாளம் தெரியாமல் வாழ்க்கை நடத்துகிறார்கள். என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நானும் மாறவேண்டுமா என்ன!”– இப்படித்தான் அவள் அந்தக் கன்னிமாடத்து மதரைப் பற்றியும், சிஸ்டர்களைப் பற்றியும் முடிவு செய்திருந்தாள்.
உலகத்தில் மனித மனத்தின் சில முடிவுகள் எடுத்த எடுப்பில் தோன்றுபவை உண்மையாகி விடுகின்றன; பல முடிவுகள் எடுத்த எடுப்பில் தோன்றுபவை தவரானதாகவே முடிந்திருக்கின்றன. மிஸ் மஞ்சுளாவிற்கும் மதார்களைப்பற்றியும் சிஸ்டர்களைப் பற்றியும் எழுந்த எண்ணம், அவளுடைய பருவத்திற்கும், தோற்றத்திற்கும் தொடர்புடையவை.
மாலை நேரங்களில் மல்லிகைப் பூவையும், ஓய்வு நேரங்களில் ‘நேயர் விருப்பம்?’ கேட்பதற்கு டிரான்சிஸ்டரை யும் தேடும் மிஸ் மஞ்சுளாவிற்கு எப்படித் துறவு வாழ்க்கை பிடிக்கும்? இந்த ஆசைகளை யெல்லாம் சுவையான உணவுக்காகவும், வறுமையற்ற வாழ்க்கைக்காகவும். தியாகம் செய்துவிட முடியுமா? ஆம்; தியாகமும், ஆசையையும் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்யும் வாகனங்கள், காலம் இடைவெளியை பெருக்குமே தவிர ஒரு போதும் சுருக்காது.
“மஞ்சுளா! ”
“சிஸ்டர்!”
“இன்று எக்ஸ்கார்ஷன் இருக்கிறது, குழந்தைகளை டவுனுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டுத் திரும்ப வேண்டும்!”
“அப்படியே செய்கிறேன்.”
மஞ்சுளாவின் பதிலில் ஒரு கவர்ச்சி இருக்கும். அழகான பெண்களுக்குக் குரலும் இனிமையானதாக அமைந்துவிட்டால் அவர்களின் அழகு தினம் தினம் மெருகு ஏறுவதுபோல் பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அருள் மலர் கான்வெண்ட்டில் மிஸ் மஞ்சுளா ஒரு தேவதைபோல விளங்கினாள்.
ஆனால் அந்த அழகே அவளுக்கு எதிரியாக வரும். என்று அவள் எதிர்பார்த்திருக்க முடியுமா?. எதிர்பாராததெல்லாம் நடப்பது தானே வாழ்க்கை! பெண்களுக்குப் பொறாமை உண்டு என்று மஞ்சுளா அறிந்ததுதான்! ஆனால், பொன் வேண்டாம், பூ வேண்டாம், பொட்டு வேண்டாம் என்று பெண்மையின் சின்னங்களையெல்லாம் தியாகம் செய்த சிஸ்டர்களுக்குக்கூட வயிற்றெரிச்சலும், பொறாமையும் இருக்கும் என்று அவள் எப்படி எதிர்பார்க்க முடியும்!
ஒரு நாள் மஞ்சுளாவுக்கு பாண்டிச்சேரி மிஷன் மேற்றாணி யாரிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது. மஞ்சுளா, அப்படி ஒரு உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அருள் மலர் கான்வெண்ட்டில் கிடைத்த ஆசிரியை வேலையை அவள் தற்காலிக மானதாகத்தான் கருதியிருந்தாள். ஆனால் மிஷன் அப்படி நினைக்கவில்லை. அவள் திருமணம் செய்துகொள்ளும் வரை அவளை நிரந்தர ஆசிரியையாக நியமனம் செய்து உடனடியாக அவளுக்கு ஒரு மாறுதல் உத்தரவையும் மேற்றாணியார் போட்டிருந்தார். அந்த உத்தரவின்படி. மஞ்சுளா பாண்டிச்சேேசரி தலைமை அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்.
மாறுதல் உத்தரவைப் பெற்றதும் மஞசுளாவிற்கு மனம் குழம்பியது. திருமணமாகும் வரை மேற்றாணியாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் வேலையைவிட்டு விலகிவிட வேண்டுமாம் – இதில் மஞ்சுளா ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.
“மஞ்சுளா!”
“சிஸ்டர்!”
“பாண்டிச்சேரிக்குப் போவதைப் பற்றி முடிவு செய்து விட்டாயா?”
“இன்னும் இல்லை சிஸ்டர். இன்னும் இரண்டு தினங்களில் முடிவு செய்துவிடுவேன். பிறகு என் விருப்பத்தைச் சொல்லு கிறேன்.”
“மஞ்சுளா, எங்களுக்கெல்லாம் மேற்றாணியார் உத்தரவு கடவுளின் ஆணை மாதிரி, நீ இன்னும் மதத்தில் சேராததால் உனக்கு அதன் மகிமை தெரியவில்லை. உண்மைதான் மஞ்சுளா!”
சிஸ்டரின் பேச்சு மஞ்சுளாவிற்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதை அவளால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதெல்லாம் பெண்கள் விஷயத்தில் உண்மையல்ல. பெண்கள் இமய மலையையே இதயத்தில் ஓளித்துவைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் திறமைசாலிகள். அதே நேரத்தில் மற்றவர்களின் சின்ன விஷயத்திற்குக்கூட அவர்கள் உள்ளத்தில் இடம் கிடைக்காது; அப்படியே வெளியே கக்கி விடுவார்கள். மஞ்சுளாவும் அப்படித் தான்.
பைபிள், ஜபமாலை போன்ற மதக்குறிகள் மட்டும் அரசோச்சிக் கொண்டிருந்த குவார்ட்டர்சில் வாழ்ந்து கொண்டு எவ்வளவு பெரிய ரகசியத்தை அடக்கி வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறாள்!
அன்றிரவு மஞ்சுளா தூங்கவே இல்லை. ஏனெனில் அவளுடைய எதிர்காலத்தைக் கணித்த இரவு, அந்த இரவு தான். மனிதவாழ்க்கையில் அவர்கள் ஒரே ஒரு கணத்தில் தீர்மானிக்கும் முடிவுகள் தான் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. நெப்போலியன் காலத்திலிருந்து இன்றுவரை இந்தத் தத்துவம் சிரஞ்சீவியாக இருந்து வருகிறது. மஞ்சுளா மட்டும் தப்ப முடியுமா?
அன்று இரவு!
ஆடி முடிந்த நாடகக் கொட்டகையைப்போல் அந்தக் கன்னியர் மாடம் திசப்தமாக இருந்தது. விடியற்காலம் மலர இருக்கும் மலர்கள் தங்கள் இதழ்களை விரிக்க நாழிகை பார்த்துக் கொண்டிருந்தன. பூச்செடிகளைப் பனிப் போர்வைகள் அமுக்கிக் கொண்டிருந்தன.
அந்தக் கன்னியர் மாடத்தில் மஞ்சளாவைப்போல் வேலைக்குச் சேர்ந்த தோட்டக்காரன் தேவாசீர்வாதம் லொக்கு லொக்கு என்று இருமிக்கொண்டு கிடந்தான். அவன் ஒரு அரசாங்க அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து ஒய்வு பெற்றவன். சோறு கிடைத்தால் போதும் என்று அருள் மலர் கான்வெண்ட்டில் வேலைக்கு சேர்ந்தான். அவனுக்கு குழந்தை குட்டி மனைவி மக்கள் இல்லை. அவன் சூழ்நிலைகளால் துறவியானவன், கொஞ்சம் படித்திருந்தால் பாதிரியாகக் கூட ஆகி இருப்பான்.
தேவாசீர்வாதம் அதிகம் பேசமாட்டான். பல்சக்கரம் போல பணியாற்றுவான். சோறு போடும் போது சாப்பிடுவான்; பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவான்; அதிகாலையில் கான்வெண்ட்டைக் கூட்டிப் பெருக்குவான். வேறு விவகாரங்கள் அவனுக்குத் தெரியாது. சுருக்கமாகச் சொன்னால் பிறவியிலேயே அவன் ஒரு ‘மாதிரி’யானவன்.
மஞ்சுளாவின் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் திரைகள் விலகியபடி கிடந்தன.
“மஞ்சுளா?”
மஞ்சுளா மதரின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் போனாள்.
“நமஸ்காரம் மதர்!”
“இன்னும் ஏன் தூங்காமல் இருக்கிறாய் என்று கேட்டுப் போக வந்தேன்.”
“என்ன மன்னிக்க வேண்டும் மதர். நான் வேலையை ராஜினாமாச் செய்வதாகக் தீர்மானித்து விட்டேன்.”
“மஞ்சுளா?”
“உண்மைதான் மதர். என்னால் எனது தகப்பனாரை விட்டுப் பிரிந்து போக முடியாது மதர். அவர் வயதானவர்.”
“உன் மாறுதலுக்காகவா இந்த முடிவை எடுத்தாய்?”
“இந்த மாறுதல் என் வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பி விட்டுவிடுமோ என்ற பயம்தான் மதர் எனது இந்த முடிவுச்குக் காரணம்!”
பிரஞ்சு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, பப்ளி மாஸ் பழத்தைப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த மதருக்கு கோபத்தால் முகம் ரத்தம் சுண்டியது போலாகி விட்டது.
‘இந்தியர்கள் மிகவும் மோசமானவர்கள்; அற்ப சுகத்திற்காக எதையும் செய்வார்கள்’ என்று மனதுக்குள் எண்ணிய வளைப்போல் அறையைவிட்டு வெளியேறி விட்டாள்.
மஞ்சுளா வாழ வேண்டியவள், வாழ நினைப்பவள்; இன்னும் சொல்வதானால் வாழத் துடிப்பவள். வெள்ளைக் கவுன் அணிந்த சிஸ்டர்களும்கு மத்தியில் அவள் வண்ணப்புடவை அணிந்து வாழ்ந்தது – மல்லிகைத் தோட்டத்தில் ஒரே ஒரு ரோஜாச் செடி பூத்திருப்பது போல் இருந்தது.
அழகு — ஒரு சில பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக வந்து விடுகிறது. வேறு சிலருக்கோ அவர்களது உயிர்களைக் குடிக்கும் கேணியாக அமைந்து விடுகிறது.
மதர், அறையை விட்டுப்போன பிறகு மஞ்சுளா பயத்தால் நடுங்கினாள். ஏனெனில் ஒரு நாளும் மதர் அப்படி நடந்து கொண்டதில்லை. மதர் வருத்தப்பட்டுக் கொண்டு போனார்களா, அல்லது கோபப்பட்டுக்கொண்டு போனார்களா என்று அவளுக்கு ஒரே குழப்பம்.
ஏன் அப்படி நினைத்துக் குழம்புகிறாள்? கோபப்பட்டால் ஏதாவது உதவி செய்வார்கள் மதர்; வருத்தப்பட்டால் அவர்கள் மனத்தில் தப்பான அபிப்பிராயம் வேரூன்றக் தொடங்கிவிடும் இப்படி நினைத்தாள் மஞ்சுளா. தத்துவங்களைத் தெரிந்துகொள்ள புத்தகங்களை விடச் சம்பவங்கள்தான் மனிதார்களுக்கு உதவுகின்றன.
பொழுது விடியப்போகிறது. மாதா கோயில் மணி ‘டணாா” டணார்’ என்று அடிக்கத் தொடங்கி விட்டது. மதரும், சிஸ்டர்களும் அவார்களது வேனில் கோஷாகுளம் புதூரில் உள்ள மாதா கோயிலுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். மஞ்சுளா மட்டும் தன்னந் தனிமையாய் குவார்ட்டர்சில் இருந்தாள். .
“மஞ்சு!”
“என்ன தேவு?”
இப்படித்தான் மஞ்சுளாவும் தோட்டச்காரத் தேவாசீர்வாதமும் பேசிக் கொள்வார்கள்.
“நீ ஊருக்குப் போகப் போறீயாமே?'”
“இல்லை; நான் வீட்டுக்குப் போகப் போறேன் தேவு?”
“அவசரப்படாதே; ஒருவேளை உன்னுடைய மாறுதல் ரத்தானாலும் ஆகலாம்; ராத்திரி பெரியம்மா பேச்சிலே இருந்து தெரியுது மஞ்சு!”
“இப்ப ரத்துப் பண்ணுவாங்க. பிறகு ஒரு நாளைக்கு கோவாவுக்குப்போ என்பாங்க! அதுனாலே நிரந்தரமா ஏதாவது முடிவு எடுக்கணும். அது தான் வேலையை விட்டுப்போற முடிவு!’
“அவசரப்பட்டு வேலையை விட்டுடாதே! ரஞ்சிதமான சாப்பாடு; கச்சிதமான படுக்கை வசதி – இதுக்கு மேலே உனக்கு என்ன வேணுமாம்!”
“வாழ்ககை என்பது வயிற்றிலேயா இருக்குது; மன நிம்மதியிலே தானே இருக்குது!”
“அப்ப…வசதிசளைவிட, சம்பளத்தைவிட உனக்கு வேறு என்னமோ இருக்குது போலே இருக்கு. இல்லையா மஞ்சு!”
“எனச்கு மட்டுமில்லே! எல்லார் வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அது இல்லாட்டா அது என்ன வாழ்க்கை? போடுறதை சாப்பிட்டுட்டு பூதம் மாதிரி கிடக்கிற அல்சேஷன் நாய்க்கும் மனிதனுக்குமே பிறகு என்ன வித்தியாசம்!”
“அடேயப்பா! ஒரு நாள் கூட நீ இப்படிப் பேசினதில்லையே மஞ்சு! இன்னிக்கி நீ இவ்வளவு பேசிட்டியே!”
“நான் ஒன்றும் வித்தியாசமா பேசிடல்லையே தேவு! எனக்கு இப்ப மனந்திறந்து பேசுறதுக்கு உன்னைத் தவிர வேறு யாருமே இல்லை. அதனாலேதான் அள்ளிக்கொட்டினேன். எல்லாருடைய உள்ளத்திலேயும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. அதை பயன்படுத்துறதைப் பொருத்து இருக்கு. தென்ன மரத்திலே தான் இளநீர் கிடைக்குது! அதே தென்ன மரத்தலேதானே மதியைக் கெடுக்கும் கள்ளும் கிடைக்குது! அது மாதிரிதான் மனிதனின் உள்ளமும்!”
“மஞ்சு! நீ ஏதோ மனம் குழம்பிப்போயிருக்கே! நான் பேசிக்கிட்டேயிருந்தா நீ புலம்பிக்கிட்டே இருப்பே, அதனாலே நானே பேச்சை நிறுத்திக்கிறேன்.”
“இல்லை தேவு, மதரும் சிஸ்டா்களும் திரும்பும் வரை நீ தாராளமாகப் பேசிக்கிட்டேயிருக்கலாம். அல்லது பள்ளிக்கூடம் துவங்குகிற வரைக்கும் பேசலாம். அப்புறம் பாமினி வந்துவிடுவாள். பிறகு எனக்கு ஒரு முடிவு தெரிந்துவிடும்!”
“மஞ்சு! எந்தப் பாமினி.”
“அதுதான் நம்ம ஸ்கூலிலே எல்.கே.ஜி. படிக்குதே ஒரு பொண்ணு. தினசரி ஒரு பச்சைக் காரிலே வரும்ல; அந்தக் குழந்தையைத்தான் சொல்றேன்!”
“அது யாரு மஞ்சு? பெரிய பணச்கார வீட்டுக் குழந்தையோ?”
“இல்லை; எல்லோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது சாதாரண வீட்டுக் குழந்தை. அந்தக் குழந்தையின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு பணக்காரர் இருக்கிறார். அவர், அவரது நூற்பாலைக்குப் போகும்போது தினசரி இந்தக் குழந்தையை தனது காரில் இங்கு கொண்டுவந்து இறக்கி விட்டு விட்டுப் போகிறார்!”
“பாவம், அவருக்கு குழந்தை இல்லை போலே இருக்கு!”
“சை! அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே! பெரிய பணக்காரர். வீட்டுக்கு ஒரே பிள்ளை, பெரிய நூற்பாலை, எல்லாம் அவருக்குத்தான்.”
“அவருக்கென்று யாரோ பாக்கியவதி பிறந்திருப்பாள் இல்லையா மஞ்சு?” என்று சொல்லிக் கொண்டே தேவாசீர்வாதம் கடைக்கண்ணால் மஞ்சுளாவைப் பார்த்தான். மஞ்சுளா தேவாசீர்வாதத்தைக் கவனிக்காமல் பள்ளிக்கூட வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அந்தப் பச்சைக்கார் பாமினியை இறக்கி விட்டு விட்டுத் திரும்பியது. பாமினி பள்ளிக்குள் ஓடி வந்தாள். மஞ்சுளா ஓடிப்போய் அவளை வாரி அனைத்து முத்தமிட்டு விட்டு ஆவளுடைய புத்தகப் பையைப் பறித்து வழக்கம் போல் ஆவலோடு பார்க்கும் சிலேட்டைப் பார்த்தாள். அதல்,
“மஞ்சு, என் தகப்பனாரை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்து விட்டேன். விரைவில் திருமணம் நடைபெறும். பயப்படாதே – ஆனந்தன்”
– என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும் மஞ்சுளாவின் மனம் பூரித்து வீங்கியது அப்படி ஒரு செய்தி ஆனந்தனிடமிருந்து வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு விரைவில் ஆனந்தனின் தந்தை திருமணத்திற்கு இசைவளித்தது தனது பாக்கியமே என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
மஞ்சுளா, சாதாரண ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள்; ஆனந்தனோ ஒரு பெரிய நிறுவனத்திற்கு அதிபரின் ஒரே மகன்.
மஞ்சுளா, ஆனந்தன் இருவரின் இருமணம், ஆனந்தன் வட் டாரத்தில் ஒரு மனப் புழுக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தது. யார் சும்மா இருந்தாலும், வீட்டில் பெண்ணை வைத்துக் கொண்டு பெரிய இடத்து மாப்பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருப்போர் சும்மா இருப்பார்களா?
‘இதில் ஏதோ விஷயம் இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி ஒரு பொருந்தாத சம்பந்தம் நடைபெறவே நடைபெறாது. ஆனந்தன் ஏதோ ஒரு வகையில் பெண் வீட்டாரிடம் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவனதுதந்தை சிக்கக்கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் குடியிருக்கக்கூட ஒரு சரியான வீடில்லாத பெண்ணை மணக்க ஆனந்தன் எப்படிச் சம்மதிப்பான்?’ – இந்தப் பிதற்றல் பிரச்சாரங்கள் பெண் வீட்டை இடித்துத் தள்ளுமளவிற்கு முற்றுகையிட்டன.
பெண்ணுக்குத் தந்தையோ ஓய்வு பெற்ற ஆசிரியர்; வாழ வேண்டிய பருவத்தை வாழ்ந்து கழித்தவர்; அவர் எதற்கும் அசையவில்லை. ‘மனிதர்கள் விரும்பினால் சமாதியைக் கோயில் என்று வணங்குவார்கள். விரும்பாவிட்டால் ராஜகோபுரம் இருந்தால் கூட அதைச் சமாதி என்று அலட்சியம் செய்து ஒதுங்கிப் போவார்கள். வெறுந்துணியை ஆடையாக்க வேண்டும் என்றால் அதை வெட்டி, சேர்த்துத்தானே தைக்கவேண்டும். அது புதுத்துணி, அதை வெட்டக் கூடாது என்றால் ஆடை எப்படிக் கிடைக்கும்? அது மாதிரித்தான் ஒரு ஏழைப் பெண் பணக்கார வீட்டுக்குப் போவதும்” என்ற அலட்சியத்தோடு திருமண நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
மஞ்சுளாவின் ராஜினாமாவிற்கு பிறகு திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. ஆனந்தன் வீடு, ஒரு புதிய கோயிலின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைவிட சிறப்பாக அலங்கரிக்கப் பட்டு வந்தது. மேளக்கச்சேரி, பாட்டுக்கச்சேரி, பரதநாட்டியம் என்று இப்படிப் பிரமிக்கத்தக்க வகையில் நிகழ்ச்சி நிரல் தயாராகி இருந்தது. திருமணம் நல்ல நாளில் சாஸ்திரம் படித்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுபவேளையில் தான் முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்தது.
மஞ்சுளா– தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாறுதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. “ஒரே செடியில் பூத்த இருமலர்களில் ஒன்று பூக்கடைக்கும், மற்றொன்று கோவிலுக்கும் பிரிந்து விழுவதைப்போல நான் ஆண்டவன் சந்நிதானத்திற்குப் போகிறேன்” என்று அவள் மனதுக்குள்ளேயே களிப்படைந்துகொண்டிருந்தாள். அவள் கிறிஸ்துவப் பள்ளியில் பணியாற்றியதால் அவளுக்கு அடிக்கடி இப்படி பைபிளின் சாரம் நினைவுக்கு வந்து விடுவதுண்டு.
திருமணம் முடிந்துவிட்டது. பொருளாளர்கள், அருளாளர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் மணமக்களை ஆசீர்வதித்தார்கள். மஞ்சுளாவின் அழகைப் பார்த்த ஆனந்தனின் நண்பர்கள் – “ஆனந்தா நீ கொடுத்து வைத்தவன்; உன்னிடம் பணம் இருக்கிறது; உன் மனையிடம் அழகு இருக்கிறது. இரண்டும் சேர்ந்தால் வாழ்க்கை தானாக அமைந்து விடுகிறது” என்று புதிய நீதிகளைப் படிக்கத் தொடங்கினார்கள். மஞ்சுளாவிற்கு தோழிகள் குறைவு. இருக்கிறவர்களும் கன்னிகாஸ்திரீகள், அவர்களுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை.
ஆகையால் மஞ்சுளாவைப் பற்றிப் பொருமைப் படவும் ஆள் இல்லை! வாழ்த்தி மகிழவும் ஆள் இல்லை!
மஞ்சுளாவிற்கு ஆனந்தன் கிடைப்பதற்கும் அல்லது ஆனந்தனுக்கு மஞ்சுளா கிடைப்பதற்கும் பாலமாக விளங்கிய சிறுமி பாமினியின் குடும்பம் திருமணத்திற்கு வந்திருந்தது. அவர்களுக்குக் தெரியுமா தங்கள் குழந்தையால் தான் இந்தத் திருமணம் நடைபெறுகிறதென்று? சில விஷயங்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்து கைகூடி விடுகிறது. சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தும் கைகூடாமல் போய்விடுகிறது. இவை இரண்டுமே காதல் விஷயங்கள் தான்!
மணவிழா அன்று இரவு!
ஆனந்தன் ஒரே மகனானதால் தன்வீட்டில் இனி ஒரு பெரிய விழா அண்மையில் நடைபெறச் சாத்தியமில்லை என்று கருதி ஆனந்தனின் தந்தை அன்று சுவாமி புறப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தார். மயிலாட்டம், ஓயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் – எல்லாம் இன்னொரு பக்கம் கோயில் வாசலில் நடந்து கொண்டிருந்தன. மாடியில் நின்று வெகுதேரமாக இவைகளைக் கண்டு களித்துக் கொண்டிருந்த ஆனந்தனும், மஞ்சுளாவும் அப்போதுதான் முற்றத்து விளக்கை அணைத்துவிட்டு மல்லிகைப் பூக்கள் விதைக்கப்பட்ட பள்ளி அறைக்குள் நுழைந்தார்கள்.
வீட்டில், கீழே – இராமாயணத்தை எழுதி முடித்துவிட்டு கம்பன் பெருமூச்சுவிட்டதைப் போல ஆனந்தனின் தந்தை திருமணத்தை முடித்துவிட்டு பெருமிதத்துடன் உடம்பை முறித்துச் சொடக் பறித்துக் கொண்டு ‘சுவாமி சேர்க்கை சேர்ந்து விட்டதா?’ என்று வேலைக்காரனைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“சுவாமி தெற்கு வீதியில் வந்து கொண்டிருக்கிறது. சேர்க்கை சேர விடிஞ்சு போயிடும்’” என்று வேலைக்காரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
உக்கிராண அறைக்கு அருகில் படுத்துக் கொண்டிருந்த ஆனந்தனின் தாயார் அப்போது ஓடிவந்து “இங்கே வாங்க! வேகமா வாங்க! தம்பி என்னமோ சொல்றான்!” என்று பதட்டத்துடன் கத்தினாள்.
“தம்பி என்னசொன்னான்? ஏன் இப்படிப் பதறிப் போயிப் பேசறே?”
“இங்கே வாங்களேன்; எனக்கு அதைக்கேக்கவே பயமா இருக்கு!”
ஆனந்தனின் தந்தை எழுந்து விரைந்தார். அவா் மனைவி இடிந்துபோய் நின்றாள். அவளுக்கு அருகில் வியர்க்க வியர்க்க பேயறைந்தவனைப் போல் ஆனந்தன் குறிச்சியில் சாய்ந்து கிடந்தான்.
“என்னப்பா இதெல்லாம்! ஏன் உங்கம்மா இப்படிக் கதறிக்கிட்டிருக்கா?“
“எல்லாம் அவனைத்தானே கேளுங்க! குலம், கோத்திரம் பாக்காமெ சம்பந்தம் பண்ணினா இப்படித்தான் வந்துசேரும்!”
“என்னடி விடுகதை போட்டுக்கிட்டிருக்கே! நடந்ததைச் சொன்னாவுல்ல நானும் தெரிஞ்சுக்கலாம்!”
“மஞ்சுளாவுக்கு குஷ்டமாம்! என் புள்ளே புழுவாத் துடிக்கிறானே!” என்றாள் ஆனந்தனின் தாயார்.
“என்ன குஷ்டமா? என்னடா இது! உங்கம்மா சொல்றதெல்லாம் மெய்தானா? ஏண்டா பேசாமெ நிக்கிறே?”
“அவனைக் கேட்டா எப்படி? அவன் இதுக்கு மேலே எப்படிச் சொல்லுவான்?”
“நீயாவது விவரமாச் சொல்லு! நீ போயிப் பாத்தியா? அவன் சொன்னாச் சரியாப் போச்சா? இன்னும் சாமி கூடச் சேர்க்கை சேரல்லே! அதுக்குள்ளே இந்தக் கூத்தா!” பெரியவர் பொரிந்து தள்ளினார்.
“எதுக்கு இந்தச் சந்தேகம்! நானே போய்ப் பாத்துட்டு வந்துடுறேன்!” என்று கூறிவிட்டு ஆனந்தனின் தாயார் கடகட வென்று மாடிப்படி ஏறிப்போனாள். மனைவியைப் பிரசவ அறைக்குள்ளே அனுப்பிவிட்டு, வெளியில் வெடவெடத்துப் போய் நிற்கும் கணவனைப்போல பெரியவர் பரபரப்புடன் உலாத்திக் கொண்டிருந்தார்.
எதிரிகளுக்குப் பயப்படாத எப்பேர்ப்பட்ட பலசாலியாக இருந்தாலும் சொந்த வீட்டில் ஊனம் ஏற்பட்டு விட்டால் களங்கம் தோன்றி விட்டால் அவன் உள்ளம் உடைந்து அவன் கோழையாக விடுகிறான்; அவன் உடல் கலகலத்து விடுகிறது ஆனந்தனின் தந்தைக்கும் அந்த நிலை தான்.
கல்யாணப் பந்தலில் கட்டியுள்ள மாவிலைகள்கூட் இன்னும் காயவில்லை; கண்ணைக்கவரும் சிங்காரப்பந்தலும் அதில் தொங்கிய நொங்குக் குழைகளும் அவரைப் பார்த்து நையாண்டி. செய்வது போல் தெரிந்தது. அவர் நெற்றியில் வைத்திருந்த குங்குமப் பொட்டு இளகி வடிந்குது. மழையில் நனைந்தவரைப் போல் அவார் அணிந்திருந்த சில்க் ஜிப்பா வியர்வையால் ஈரமாகி விட்டது. அதுவரை சோபாவில் சாய்ந்து கிடந்த ஆனந்தன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை .பேதலித்தவனைப் போல, குற்றம் புரிந்து விட்டவனைப்போல் ஊமையாக இருந்தான்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மேலே போன ஆனந்தனின் தாயார் இறங்கிவிட்டாள். இறங்கி வரும்போதே அவள் பத்ரகாளியாகத்தான் வந்தாள்.
“என் குடி. கெட்டுப்போச்சே! ஓரே புள்ளை! அவன் தலையெழுத்து இப்படியா இருக்கணும்?” என்று ஓப்பாரி வைத்துக் கொண்டே இறங்கினாள் .
“என்னடி நடந்து போச்சு? விவரமாச் சொல்லு!”
“உங்ககிட்டே விரிவாச் சொல்ற மாதிரி இல்லே! அது குஷ்டம்தான்! முதல்லே தம்பியை டாக்டர்கிட்டே கூட்டிப் போயி ஒரு ஊசியைப் போட்டுட்டு வாங்க!”
“இந்தா பாரு! பதட்டத்திலே எதையும் உளராதே! கல்யாணத்துக்கு வந்தவங்களெல்லாம் வெராந்தாவிலேயும், பந்தலிலேயும் தூங்கிக்கிட்டு இருக்காங்க! விடிஞசப்புறம் பாத்துக்கலாம்!”
“முடியாது! என் புள்ளையை முதலிலே நான் காப்பாத்தணும், குஷ்டம் தொத்து நோயி!”’
“யாரு சொன்னா குஷ்டம் தொத்து நோயின்னு?”
“யாரு சொல்லணும், எனக்குத் தெரியாதா? முதல்லே நான் சொல்றதைக் கேளுங்க!”
ஆனந்தனின் தாயார் போட்ட ஆர்ப்பாட்டம் கல்யாண வீட்டை அலைமோத வைத்து விட்டது. விழித்துக் கொண்ட வார்களுக்கு எதுவும் புரியவில்லை. தூங்குகிறவர்களுக்கு இந்தக் தடபுடல்களெல்லாம் கனவுபோல் தோன்றியிருக்க வேண்டும்! ஏனெனில் அவர்கள் எல்லோரும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்.
பெண்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது, மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கண்களைக் கசக்கினார்கள். பெண் வீட்டுக்காரா்களுக்காக அனுதாபப்பட ஆளில்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் ஆர்ப்பாட்டத்தை மட்டுப்படுத்தக்கூட வழியில்லை. தூக்கத்திலிருந்து விழித்திருந்த மஞ்சுளாவின் தந்தை கூனிப் போய்விட்டார். நீந்தத் தெரியாதவன் கிணற்றில் விழுந்து விட்டதைப் போல் அவர் உள்ளம் திக்குமுக்காடியது.
விடிவதற்குள் கல்யாண வீடு முழுதும் பரவி வெளியாட்களுக்கும் செய்தி எட்டிவிட்டது.
“ஆனந்தா, என்ன உன் முடிவு?” பல கோணங்களிலிருந்து பலர் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள்.
ஆனந்தன் முதலில் பதில் ஏதும் சொல்லவில்லை; பதுமை- யைப்போல் உட்கார்ந்திருந்தான்.
மஞ்சுளாவிற்கும் அவனுக்கும் ஏற்பட்ட தொடர்பு; அதற்குப் பயன்பட்ட பச்சைக்குழந்தை; இருவரும் பூங்காவிலே உலாவியது; திரைப்படத்திற்குச் சென்று இணைந்து உட்கார்ந்திருந்தது – எல்லாமே ஆனந்தனின் மனத்திரையில் வண்ண ஓவியங்களாகத் தோன்றித் தோன்றி அழிந்தன.
“எத்தனை புரட்சிகள் முளைச்சாலும் ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்யறது எவ்வளவு ஆபத்தன்னு தெரிஞ்சு போச்சா? அதனாலேதான் அந்தக் காலத்திலே அத்தை மகள் மாமன் மகள் இப்படிப் பாத்துக் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிவச்சாங்க! ஓண்ணுக்குள்ளே ஒண்ணு சம்பந்தம் பண்ணினாத்தான் உள்விவகாரமே வராது! இப்படி. ஏமாரவேண்டிய அவசியமே வந்திருக்காது” சுற்றியிருந்தவர்களின் இந்தக் கரைச்சல் ஆனந்தனைப் பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆக்கிவைத்தது.
ஆனந்தன் அப்போதும் பேசவில்லை. அரண்டு கிடந்த அவன் உள்ளம் அதுவரை தெளியவில்லை.
“நான் ஏழைப் பெண்; நம்முடைய உறவை உங்கள் வீட்டார் அங்கேரிக்கவே மாட்டார்கள். ஆகவே நமது உறவு ஒரு கனவாக முடிந்து போகட்டும். ஒரு ஆண் எவ்வளவு கெட்டாலும் சமூகத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து விடலாம். பெண்கள் அப்படியல்ல; அவர்கள் கெட்டுவிட்டால் ஒருமுறை கடலில் கலந்துவிட்ட ஆற்று நீர் மாதிரிதான் அவர்கள். மறுபடியும் மீளவே முடியாது அவர்களால்!”” என்று ஒவ்வொரு கட்டத்திலும் மஞ்சுளா ஆனந்தனிடம் சுட்டிக் காட்டியது மதில் சுவரில் மோதித் திரும்பும் பேச்சுக் குரல்போல அவன் மனத்தில் எதிரொலித்தது.
“குஷ்டம்! சே! எவ்வளவு முட்டாள் தனம் செய்து விட்டோம்! காதலோடு நிற்காமல் காமம் வரை போயிருந்தால் அவள் தொடையில் உள்ள குஷ்டம் தெரிந்திருக்கும். தெய்வீக மானதென்று வர்ணிக்கப்படும் காதல் எவ்வளவு போலித்தன மானதாக இருக்கிறது” ஆனந்தனின் உள்மனம் இப்படியும் அவனை உறுத்தி அழுத்தியது. அவன் முடிவு எதுவும் கூறவில்லை. அவனைச் சுற்றியிருந்த அவனது உறவினர் கூட்டம் அவனை நச்சரித்தது.
“ஆனந்தா, இது லேசான விஷயமல்ல; வாழ்க்கைப் பிரச்சினை. வாழ்க்கை என்பது ஆடியில் விதைத்து மார்கழியில் அறுவடை செய்யும் விவசாயம் போன்றதல்ல, அது ஆயிரம் காலத்துப் பயிர்! பெரிய குடும்பத்திற்கு அவமானத்தைத் தேடி. வைத்து விடாதே!” உறவினர்களின் ஒவ்வொரு சொல்லும் அவன் நெஞ்சைத் துளைத்து அவனைக் கோழையாக்கிக கொண்டிருந்தது.
“என்னடா இப்படிக் குதிரு மாதிரி உட்கார்ந் திருக்கே! சொந்தக்காரங்க சொல்றதைக் கேளு! நீ ஒரு குஷ்டரோடப் பெண்ணோடவா வாழப்போறே?”
“அம்மா!”
“இந்தக் கல்யாணத்தை இப்பவே தீர்க்கணும்! இந்தப் பந்தல் பிரிக்கும் முன்னாடியே வேறொரு பெண்ணை நான் மருமகளாகப் பார்க்கணும், என்னடா சொல்றே?”
“அம்மா!”
“இது என் முடிவும் உங்கப்பா முடிவும்! சொந்தக்காரங்க முன்னாலேயே இப்பவே. தீத்துக்குவோம்.”
அதற்குப்பிறகு கூடியிருந்தவர்கள் ஆனந்தனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
பாவம் மஞ்சுளா! அவளுடைய சுமங்கலி வாழ்க்கை அரும்பிலேயே கருகிவிட்டது. அவள் அவளுடைய பிறந்த வீட்டுக்கே திரும்பி விட்டாள்.
அன்று படுக்கையில் படுத்த அவள் தந்தை மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.
மஞ்சுளா, தந்தையை இழந்து விட்டாள். மனக்கவலை, முதுமையை விடக் கொடிய வியாதி. அந்த வியாதி முதுமை யுடையவர்களுக்கே வந்து விட்டால் அவர்கள் தப்பவே முடியாது; புலியிடம் சிக்கிய வெள்ளாடு மாதிரிதான்.
மஞ்சுளா இப்போது தனிமரம். பூத்துப் புளகாங்கிதத்துடன் காற்றில் அசைந்து மணம் பரப்பும் பன்னீர் மரத்தைப் போல் அவள் அழகு அந்தப் புதுப்பட்டணம் முழுதும் பரவி யிருந்தது, மீண்டும்: அருள்மலர் கான்வெண்ட்டுக்குப் போக அவளுக்குக் கூச்சம். திருமணமாகி ஒரு நாள் மணப்பெண்ணாக இருந்தவளை, அந்தக் கான்வெண்ட். ஏற்றுக் கொள்ளுமோ கொள்ளாதோ என்ற அச்சம் வேறு அவளை அலைக்கழித்தது.
“பகைமையை பகைமையால் வெல்ல முடியாது; அன்பினாலேதான் பகைமையைத் தனியவைக்க முடியும்” என்று கூறும் கருணைமிக்க மதர்கள் கூட ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றவளாக ஆகிவிட்டேனே என்ற துயரம் மஞ்சுளாவை அடிக்கடி. திகிலடைய வைத்தது.
“யாரையும் நிந்திக்காத நான் யாரிடமும் துவேஷம் காட்டாத நான் எவர் பொருளையும் அபகரிக்காத நான் இப்படி. மொட்டாக இருக்கும் போதே வெதும்பிப்போய் விட்டேனே இதற்கெல்லாம் காரணம் யார்? தர்மம் நின்று கொல்லலாம்; அந்தத் தத்துவம் உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் பசிக்கும் போது சோறு கிடைக்காமல், பசியால் இறந்து நாற்றமெடுத்த பிணமான பின்பு பாலும் சோறும் கிடைத்தால் யார் சாப்பிடப்போகிறார்கள்” மஞ்சுளாவின் மனத்தில் ஆடிமாதத்துக்காற்றைப் போல இந்தக் கேள்விகள் சுழன்று சுழன்று அடித்தன.
பெண்கள் என்னதான் புலன்களை அடக்கிக் கொள்ளக் கூடியவார்களாக இருந்தாலும், உணவு கொள்வதில் நிதானமுள்ளவர்களாக வாழ்ந்தாலும், இன்பங்களுக்காக மட்டும் வாழாமல் ஒரு இலட்சியத்திற்காக வாழ்பவர்களானாலும் அவா்கள் வாழ்க்கையில் புயலடிக்கும்போது, சாகப்போகும் நேரத்தில் புலியைக்கூட தன் கொம்பால் குத்திப் பார்த்து விடுவோம் என்று நினைக்கும் மானைப்போல் வீறிட்டெமுந்து விடுகிறார்கள். கூச்சமுள்ள பெண்கூட கோயிலுக்கு ஓடி மண்ணை வாரித்தூற்றுகிறாள்; குமரிப் பெண்கூட குமுறி அழுது உரக்க பேசிவிடுகிறாள். அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் வாழும் பெரிய இடத்துப் பெண்கள்கூட நாலு தெருக்களுக்குத் தெரியும்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிடுகிரார்கள். மானின் போராட்டத்தைப் போல் இது பெண்ணின் இறுதிப்போராட்டம்.
அனாதையாகிவிட்ட நிரபராதியான மஞ்சுளா இனிமேல் எதற்காக வாழ்க்கை என்று இறந்துவிடத்தான் நினைத்தாள். ஆனால் அவளுடைய உள் ஓளி அவளை அந்தப் பாதைக்குப் போக விடாமல் பூட்டுப் போட்டுவிட்டது.
“மஞ்சுளா, கோவலன் இறந்ததும் கண்ணகி ஏன் தற்கொலை செய்துகொள்ளவில்லை? மீனாட்சி அம்மன் மீது பழியைப்போட்டு விட்டு பொற்றாமரைக் குளத்தில் குதித்து இறந்திருக்கலாம். அல்லது யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியே இருக்கும் வண்டியூர் தெப்பக்குளத்தில் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். முன்பின் தெரியாத ஊரிலே இருந்துகொண்டு, துக்கத்துக்கு மத்தியிலேயும் ஒரு நிதானத்துடன், கொழுந்துவிட்டெரிந்த கோபத்துக்கிடையேயும் சுயபுத்தியுடன் அநீதிக்குப் பாடம் கற்பிக்க கண்ணகி நினைக்கவில்லையா? படித்துப் பட்டம் பெறாத கண்ணகியே அவ்வளவு வைராக்கியத்தோடு இருந்திருக்கும்போது பி.ஏ. படித்த நீ. உன்னை வதைத்த ஆனந்தனுக்குப்பாடம் கற்பித்துத்தான் ஆகவேண்டும்!” என்ற சபதத்தை பிரகடனப்படுத்திவிட்டது. ஒரு நீண்ட பெருமூச்சோடு தனக்குத்தானே அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டாள். சமயம் வாய்க்கும்வரை ஈரோட்டிலுள்ள அவளுடைய சிற்றன்னை வீட்டில் தங்கியிருப்பது என்ற தீர்மானத்தில் ஈரோடு புறப்பட்டாள் மஞ்சுளா!
ஈரோடு! மஞ்சுளாவின் சின்னம்மா செளந்தரத்தம்மாள் ஒரு விதவை. பிரபல ஐவுளிக்கடையான கொப்புடையம்மன் ஜவுளிஸ்டோரில் சில்லறையாகப் புடவைகளை வாங்கிக் கொண்டுபோய் கிராமங்களில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரி அவள். செளந்தரத்தம்மாள் எப்படியும் ஒரு நாளைக்கு பத்துப் புடவைகளுக்குக் குறையாமல் விற்றுவிடுவாள். அதனால் இடைக்கும் லாபத்தை வைத்து அவள் ஒண்டிக் குடித்தனம் நடத்திவந்தாள். அவளுக்குக் கொப்புடையம்மன் ஐவுளிக்கடையில் தனிச்சலுகைகள் உண்டு. முன்பணம் கட்டாமலே அவளுக்குச்சரக்குகள் கொடுப்பார்கள். அவளுடைய புருஷன் நீண்ட காலமாக அந்தக் கடையில் நாணயமாக உழைத்து திடீரென்று மாரடைப்பால் காலமானவர். புருஷனின் நாணயம் தான் செளத்தரத்திற்கு பிற்காலத்தில் மூலதனமாக அமைந்தது.
“நாணயம் என்பது வெறும் காசு மட்டுமில்லே; கை சுத்தமும் ஒருவகையான நாணயம்தான்; வாய்ச் சுத்தமும் ஒருவகையான நாணயம்தான்”’ என்று தன் புருஷனைப் புகழ்ந்து ஒரு நாளைக்கு பத்துத் தடவையாவது செளந்தரம் சொல்லாமல் இருக்கமாட்டாள்.
மஞ்சுளா முன் அறிவிப்பில்லாமல் திடீரென்று செளந்திரத்தின் வீட்டுக்கு வந்தது. இறந்துபோன தன் மகள் ராதாவே பெரியவளாகி தேவதைபோல் வந்து நிற்பதாக நினைத்துவிட்டாள் செளந்தரம்,
“ராதாக்கண்ணு!’* மஞ்சுளாவை தன் மகள் நினைவாக ராதா என்றுதான் செளந்திரம் அழைப்பதுண்டு. மஞ்சுளா என்றும் மஞ்சு என்றும் மற்றவர்களால் அழைக்கப்பட்டாலும் செளந்தரம் மஞ்சுளாவை ‘ராதா’ என்ற பெயரைத் தவிர வேறு பெயர் சொல்லி அழைத்ததில்லை.
“நீ வந்தது எனக்கு ஆறுதல், சஞ்சலத்தோட இருக்கும் உனக்கும் மனச்சாந்தி – நானே ஒன்னை இங்கே கூப்பிட்டுக்கணும்னு நெனைச்சேன். ராதா போனபிறகு நீதான் எனக்கு ராதா. அவ இருந்தா உன் மாதிரியே பெரியவளாகி இருப்பாள், எங்க முதலாளியிடம் சொல்லி ஒனக்கும் ஏதாவது வேலை வாங்கணும்னு நினைப்பு.”
“நானும் அப்படித்தான் சித்தி நினைச்சேன். உன் கிட்டேயே இருந்து ஏதாவது வேலை பார்த்தா எனக்கும் மன நிம்மதியா இருக்கும்!”
மூதலாளிகூட இன்னைக்கித்தான் வராருனு பேசிக்கிறாங்க! போனவாரம் தான் அவர் மகளுக்குக் கல்யாணம்! கல்யாணத்தை திடீர்னு வச்சுப் புட்டாங்க! மதுரைதான் மாப்பிள்ளை வீடு. பணத்தோடு பணத்தைச் சேக்கிறதும் வறுமையையோடு வறுமையைச் சேக்கிறதும்தானே இப்போ கல்யாணப் பொருத்தமா இருக்கு! ஜோடிப்பொருத்தம், மனப்பொருத்தம் எல்லாம் இப்ப இல்லை ராதா! இப்ப முக்கியம் பணப்பொருத்தம்தான்! எங்க முதலாளிக்கும் ஒரே மகள்; மாப்பிள்ளை அவங்க வீட்டுக்கு ஒரே பிள்ளை; கேக்கணுமா வசதியை! மைசூர் எஸ்டேட்டு, ஈரோட்டுக் கடை எல்லாமே இனி அந்தப் புள்ளையாண்டானுக்குத்தான்!” – செளந்தரத்தின் பேச்சில் முதலாளி வீட்டு மீது கொண்டுள்ள விசுவாசம் மகிழ்ந்து கொட்டியது.
மஞ்சுளாவுக்கும் ஒரு தெம்பு வந்து விட்டது. செளந்தரம்மாள் எப்படியும் வேலை வாங்கித் தந்துவிடுவாள் என்ற நம்பிக்கை மஞ்சுளாவின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.
கொப்புடையம்மன் ஐவுளி ஸ்டோரின் முதலாளி சடையப்பர் மூன்று நாட்களுக்குப்பின்தான் கடைக்கு வந்தார். அது வரை அவர் கிட்டங்கியில் தங்கி ஒரு மாதக் கணக்குகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார். சடையப்பர் கடைக்கு வருவது சிப்பந்திகளுக்கு ஒரு விழாவாகத் தெரிந்தது. செளந்தரத்தம்மாளும் ஒரு சிப்பந்தியைப்போல் அன்று கடைக்கு வந்திருந்தாள்.
“என்ன செளந்தரம்! செளக்கியமா இருக்கியா?”
“முதலாளி புண்யத்தில் நிம்மதியா இருக்கேன்” .
“உன் மனசுக்கும், உன் புருஷன் நாணயத்துக்கும் பகவான் ஒரு ஆண் வாரிசைக் கொடுக்காமெ போய்ட்டானே!”
“நம்ம நினைக்கிறபடியா எல்லாம் நடக்குது! எனக்கு புள்ளை இல்லாவிட்டாலும், நீங்க எனக்கு பிதா மாதிரி இருக்கிறதே எனக்குப் புள்ளே இருக்கிற மாதிரித்தான் முதலாளி!”
செளந்தரத்தம்மாளின் இந்த இதமான பேச்சு சடையப்பரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. ஒரு சிப்பந்தி முதலாளியைப் புகழ்வது அபூர்வம்; அதைவிட அபூர்வம் மனதாரப் புகழ்வது. செளந்தரம் மனப்பூர்வமாகக் கண் கலங்கப் புகழ்ந்ததுதான் சடையப்பரின் கண்களைக்கூட ஊறவைத்து விட்டது.
“சொளந்தரம், உன் புருஷன் என்னிடம் நடந்து கொண்ட விதத்திற்காக நானும் என் சந்ததியினரும் எவ்வளவோ கடமைப்பட்டவர்கள். நான் எங்கள் குடும்பத்துக்கு சுவீகார புத்திரனாக வந்தவன். நான் வருமுன்பே இந்தக்கடை நடக்கிறது. புதிதாக வந்த என்னை ஏமாற்றி எவ்வளவு வேண்டுமானாலும் உன் புருஷன் எடுத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அந்த விஷயத்தில் உன் புருஷன் சத்புத்திரனாக நடந்து கொண்டான். நான் அதை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன். உனக்கு மட்டும் ஒரு பிள்ளை இருந்திருந்தால் அவனை இப்போது உன் புருஷன் இருந்த இடத்தில் வைத்திருப்பேன்” என்றார் சடையப்பர்,
“முதலாளி!”
“என்ன சொல்லு!”
“எனக்குப் பிள்ளையில்லாட்டாலும் என் அக்கா மக ஒருத்தி இருக்கா! நல்லாபடிச்சவ. பி. ஏ. வரை படிச்சிருக்கா! அவளுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும்.”
“கல்யாணம் ஆயிடுச்சா?”
“…இல்லை”
“கல்யாணம் ஆகியிருந்தா எஸ்டேட்டிலே வச்சுக்கறலாம். கன்னிப்பொண்ணை எப்படிக் கொண்டு போகிறதுன்னுதான் யோசிக்கிறேன்” என்றார் சடையப்பர்.
“அதுனாலே என்ன! நீங்க எங்கள் குடும்பத்துக்குத் தெய்வம் மாதிரி! அவளும் ரொம்ப கரெக்டானவ முதலாளி!”
“செளந்தரம்! உன் அக்காள் மகளைப் பற்றி இனிமேல் நீ எனக்குச் சொல்ல வேண்டாம்!” என்றார்.
இதைக் கேட்ட செளந்திரம் திடுக்கிட்டுப் போனாள்.
“பயப்படாதே செளந்திரம். உன் அக்காள் மகள் மிகவும் நாணயமானவள். நான் ரெயிலில் வந்து இங்கு இறங்கயபோது யாரோ ஒருவன் எனது ரெயில் பெட்டிக்குள் புகுந்து சாமான்களைத் திருடப் பார்த்தான். இந்தப் பெண்தான் “திருடன்! திருடன்!” என்று கூச்சல் போட்டுப் பிடித்துக்கொடுத்தாள். இவள் இல்லாவிட்டால் எனக்கு எவ்வளவோ நஷ்டமாகியிருக்கும்.”
செளந்தரம் இதைக்கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
“அதுமட்டுமில்லே! உடனே என் பர்சிலே இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தேன். உன் பொண்ணு அதை வாங்க மறுத்திட்டா! விலை மதிக்க முடியாத அந்த உதவிக்கு நூறுரூபாய் விலை வைத்துவிட்டோமே என்று பிறகுதான் நான் வருத்தப்பட்டேன்” என்றார் சடையப்பர்.
சடையப்பரின் நிறுவனத்தில் மஞ்சுளா, ராதா என்ற பெயரில் நிரந்தரமான ஒரு அங்கமாகி சடையப்பரோடு சில்வர் ஸ்டார் எஸ்டேட்டுக்குப் போய்விட்டாள். இப்போது ராதா சடையப்பருக்கு செக்ரெட்ரி!
இதுதான் மஞ்சுளா, மெர்க்காராவுக்கு வந்து சேர்ந்த கதை.
மாமனார் வீட்டில் மகாராஜாவின் அரண்மனையைப் போன்ற வசதிகள் இருந்தும் ஆனந்தனின் உள்ளம் உற்சாகம் பெறவில்லை. அவன் உள்ளத்தில் ஒரு குறு குறுப்பு, ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. “ராதா யார்? மஞ்சுளா தான் அவளா? அல்லது உலகத்தில் வெவ்வேறு வயிறுகளில் ஒரே மாதிரிப் பெண்கள் பிறந்து விட்டார்களா?” இது தான் ஆனந்தனைக் குழப்பிக் கொண்டே இருந்தது. “மஞ்சுளா வாக இருந்தால் இவ்வளவு நாட்களுக்குள் ஏதாவது ஒரு கட்டத்தில் காட்டிக் கொண்டிருப்பாள்; அல்லது இந்த வேலையே வேண்டாம் என்று சலாம் போட்டுவிட்டுப் போயிருப்பாள். சேச்சே! அவளாக ஒரு நாளும் இருக்க முடியாது” என்று ஆனந்தனின் மனம் ஒரு முறை நினைத்துச் சமாதானம் அடைந்து கொண்டாலும், அவன் மனத்தில் ஒளிந்து கொண்டிருந்த வேறொரு நினைப்பு அடுத்த கணமே பேருரு எடுத்து அவனை மிரட்டத் தொடங்கி விடுவதுண்டு. “அவளே தான் இவள்! பெண்கள் மேகத்துள் பறக்கும் பறவைகள் மாதிரி; அவார்களின் தடங்களைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். மஞ்சுளா திட்டமிட்டு பழிவாங்குவதற்காகத்தான் இந்த எஸ்டேட்டை தேடிப்பிடித்து வந்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்” என்று அடுத்த நினைப்புத் தோன்றி ஆனந்தனை அலைக்கழித்தது.
“மாப்பிள்ளே!”
“என்ன மாமா?”
“ராதா மிகவும் கெட்டிக்காரி, நாணயமானவனள். அவள் இந்த எஸ்டேட்டுக்கு செக்ரெட்டரியாக வாய்த்தது எனக்குப் புதையல் கிடைத்த மாதிரி. அவள்தான் இங்கு ஆல் இன் ஆல்!”
“உண்மை தான் மாமா! அவள் இல்லாமல் இங்கே எதுவுமே நடக்காது போலத்தான் தெரிகிறது. எல்லோருமே அவள் கையில்தான் இருக்கிறார்கள். அவளைத்தான் எதிர்பார்க்கிறார்கள் அவளைத்தான் நம்புகிறார்கள்!”
“மிகவும் அடக்கமானவள்;அதைவிட அவள் ஒரு தேவதையைப்போல் கண்ணியமானவள். நீண்ட கொம்புகளையுடைய மான்கள் செடி, கொடிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் காட்டில் ஓடித் திரிவது எவ்வளவு ஆச்சரியமான காரியமோ அதைப்போலத்தான் ஒரு இளம்பெண் வசதியான வட்டாரத்தில் ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துவதும்!”
இது ஆனந்தனின் மனத்தில் சுருக்கென்று முள் தைப்பதைப் போல் இருந்தது. ஒரு வகையில் அவனுக்கு ஒரு மனத்தெளிவு ஏற்படுவது போலவும் இருந்தது. “இவள் அவளல்ல! இவள் வேறு அவள் வேறு!” என்று நினைத்து ஆறுதல் அடைந்தான். “ஒரே மரத்தில் காய்காய்க்கும் கனிகள் கூட விதவிதமான வடிவங்களைப் பெற்று விடுகின்றன. ஆனால் வெவ்வேறு தாய்களுக்குப் பிறந்த பெண்கள் இப்படி. ஒரே வடிவமாக எப்படி. அமைந்து விடுகிறார்கள்!” என்று அவன் தத்துவ விசாரணையில் இறங்கி விடுவான். அவன் சிந்தனையை ஓவ்வொரு கட்டத்திலும் கீதா தான் தலையிட்டுத் தேன் கூட்டைக் கலைப்பதுபோல் கலைத்து வந்தாள்.
“ராதா, மிகவும் நல்லவள். பார்ப்பதற்கு ரதி மாதிரி இருக்கிறாள். ஆனால் ஏன் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள்? ஒரு வேளை யாரையும் காதலிக்கிராளோ!”
“எல்லாவற்றையும் என்னிடம் கேட்டால் எப்படி? நீயும் ஒரு பெண், அவளும் ஓரு பெண்; நீயே அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!”
“கேட்டு விடலாம்; ஒரு வேளை அவள் நம்மைத் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?”
“அவள் உன்னைப்பற்றி என்ன நினைத்து என்ன செய்துவிடப் போகிறாள்? அவளா இந்த எஸ்டேட்டுக்கு முதலாளி. எல்லாமே நாம்தானே! ஆப்டர் ஆல் அவள் ஒரு செக்ரெட்டரி; அவ்வளவு தான்; நீ நினைத்தால் நாளைக்கே அவளுக்குச் சீட்டைக் கிழித்து அனுப்பி விடலாம்! “
– என்று ஆனந்தனும் கீதாவும் இப்படி அடிக்கடி பேசிக் கொள்வார்கள். அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி “அதெல்லாம் நடக்காது – அப்படிச் செய்வதெல்லாம் தப்பு – பெண் பாவம் பொல்லாதது” என்று வேறு எதற்காகவாவது உள்ளே இருந்து வந்து கொண்டே சடையப்பர் சொல்லுவது அவர்களுக்கு முகத்திலே கரி பூசுவது போல் இருக்கும்.
“கீதா, எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. குடகு நாட்டிலே உள்ள ஒரு தோட்டத்திற்கு தமிழ் நாட்டிலே இருந்து ஒரு பெண் – இளம்பெண் – குமரிப்பெண் – எப்படி வந்து சேர்ந்திருப்பாள்? நீ ஒரு நாளைக்காவது இதை உன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்ததுண்டா?”
“உங்களை விட எனக்கு இதில் அதிக அக்கரை உண்டு ஆனால் எதற்கும் நேரம், காலம் என்றிருக்கிறதல்லவா?”
இப்படி கீதாவும், ஆனந்தனும் பேசிக் கொண்டிருக்கும் கட்டங்களில், “எந்த நேரத்தில் ராதா இங்கே காலெடுத்து வைத்தாளோ அது முதல் நமக்கு அபரிமிதமான லாபம்” என்று சொல்லிக்கொண்டே சடையப்பர் வருவார். சடையப்பர் இவ்வாறு இயற்கையாகப் பேசிக்கொண்டே. அடிக்கடி ஹாலுக்குள் வருவது ஆனந்தன்-கீதா உரையாடலுக்கு முற்றுப் பள்ளி வைத்துக்கொண்டே. வந்தது.
“மிஸ்டர் ஆனந்த்!”
“ஓ ராதாவா! என்ன ராதா? “
“சித்தாப்பூருக்குப்போய் இன்று நீங்கள் சினிமா பார்க்கலாமாம்; ஐயா சொல்லச் சொன்னார்கள். வந்ததிலிருந்து நீங்கள் வெளியிலேயே போகவில்லையாம். இதையும் ஐயாதான் சொன்னார்கள்!”
“இந்தா பார் ராதா, இங்கேயெல்லாம் பழைய படங்கள் தான் ஓடும்; மேலும் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. மாமாவிடம் சொல்லிவிடு; மெர்க்காராவுக்குப் போகும்போது எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.”
– இப்படி ‘அலுவலக”க் குறிப்புகளைத்தான் ராதா, ஆனந்தனோடு பேசுவாள். அவள் மனம் சிறிதும் இளகவில்லை. குழாய்க்குள் ஒடும் தண்ணீரைப்போல ஓரே சீராகத்தான் அவள் உள்ளம் வேலை செய்து கொண்டிருந்தது.
ஆனால் ஆனந்தன்?
ராதாவின் தோற்றம், அவனுக்கு மஞ்சுளாவின் திருவுருவை நினைவு படுத்தியது. அவளது குரல் – பகலில் அவன் விழித்துக் கொண்டே கனவு காண்பதுைப்போல் நிலை குலைய வைத்தது.
“மஞ்சுளா எவ்வளவு அழகானவள்! எப்போதும் கறந்த பாலைப்போல் சுத்தமாக இருப்பாளே! மகுடத்தில் ஜொலிக்கும் மாணிக்கம்போல் அவள் குங்குமம் மின்னுமே! அவளுக்கா அப்படி ஒரு வியாது?”
ஆனந்தன் மனதுக்குள்ளே இப்படிக் குமுறிக்கொள்வான்.
“அழகும், குணமும் இணைவது அபூர்வம் என்பார்கள். அந்து அபூர்வம் ராதாவிடத்தில் கைகோர்த்து நிற்கிறது. பலநாள், பல வருடப் பழக்கத்தாலே உருவாகும் நல்ல இயல்பு பிறவியிலேயே அழகாகப் பிறந்த ராதாவிடம் சரணடைந்து கிடப்பது இது அபூர்வமில்லையா?”
ஆனந்தன் நித்திரையில்லாமல் புலம்பிக் கொண்டே. இருந்தான். ஆனால் கீதா அவன் மீது கொண்டிருந்த பக்தி அவனைத் திசை திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தது. பகைவன், பகைவனுக்குச் செய்யும் தீமையைவிட தவறான வழியில் திரும்பிய உள்ளம் அதிகமாகக் கேடுவிளைவிக்கும் என்று அவன் மாமா அடிக்கடி அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தது ஒரு பக்கம். அவன் உள்ளத்தை அனலில் வாட்டுவது போல் இருந்தது. இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? இருபது நாட்கள் ஆனந்தன் இந்த உபாதைக்கு ஆளாகியிருந்தான்.
எஸ்டேட்டில் ஒரு புதிய டைனிங் ஹால் கட்டி முடித்தார்கள். தரையெல்லாம் தேக்குமரம், முகடு கூட மரத்தாலானது தான். குளிர் பிரதேசமல்லவா? சுற்றுச் சுவர் மட்டும் சிமிண்டினால் பூசப்பட்டிருந்தது.
அன்று முதன் முதலாக அந்தச் சாப்பாட்டறையில் சாப்பாடு நடந்தது. சடையப்பர், அவர் மகள் கீதா, மருமகன் ஆனந்தன், ராதா எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட தொடங்கினார்கள். மரவாடையும், பெயிண்ட்வாடையும் மூக்கைத் துளைத்தன. ராதாவுக்கு எதிரே ஆனந்தனும் கீதாவுக்கு எதிரே சடையப்பரும் அமர்ந்திருந்தார்கள். விவரம் தெரியாதவர்கள் யாராவது அந்தக் கோலத்தைப்பார்த்தால் இரண்டு ஜோடிகள் உட்கார்ந்திருப்பதுபோல் மனதுக்குப் படத்தான் செய்யும். ஆனால் அப்படி ஒரு உள் நோக்கம் கற்பிக்க அங்கே யாரும் இல்லை. காரணம், ராதா தன்னை ஒரு கண்ணாடிப் பாத்திரமாகக் கருதிக் கொண்டுதான் ஓவ்வொரு நாளையும் கழித்து வந்தாள்.
சாப்பாட்டு மேஜையில் வெள்ளிக் தட்டுகள் வைக்கப் பட்டன. கறிகளைப் பரிமாறுவதற்குச் சமையல்காரன் ஆயத்த மாகிக் கொண்டிருந்தான்.
“கீதா!”
“என்னத்தான்”
“இவ்வளவு அழகான அறையில் ஒரு குறை இருப்பது உனக்குத் தெரியவில்லையா?“
“எதிலும் எப்போதும் குறை சொல்வதுதான் உங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அப்பா உங்களுக்காகத் திட்டமிட்டுக் கட்டியிருக்கிறார்” என்றாள்.
அந்தக் கணத்தில் ஆனந்தனின் விழிகள் பதிந்திருந்த திக்கை நோக்கினாள் ராதா. சுவரில் ஒரு மூலையில் வர்ணம் பெயர்ந்து உள்ளே இருந்த வெள்ளைப்பூச்சு வெளியில் தெரிந்து கொண்டிருந்தது.
“கீதா எனக்குச் சாபபாடு வேண்டாம். மரவாடையும், பெயிண்ட் வாடையும் என் மூக்கைத் துவாரம் போடுகின்றன” என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய்விட்டான்.
சடையப்பர் உள்பட அனைவருக்கும் இது விளங்காத புதிராகத்தான் இருந்தது.
“என்னம்மா கீதா இப்படிப் போய்விட்டார் மாப்பிள்ளை!”
“எப்பவும் இப்படித்தானப்பா! திடீரென்று அவருக்கு மூடு மாறிவிடும். எழுந்து போய்விடுவார். அவர் குணம் மழைமேகம் போல! எப்போது என்ன செய்வார் என்று சொல்லமுடியாது”
“போம்மா, போய் அழைச்சுட்டு வாயேன்!”
“இல்லேப்பா அவர் குணம் ஒரு போதை. மாதிரி. அது தானாகத்தான் தணியனும்.”
“கீதா எனக்கு ஓண்ணும் கோபமில்லை. மனதிலே ஒரு அருவருப்பு. அதை என்னாலே வெளிப்படையாகக் காட்டிக்க முடியல்லே! ராத்திரிக்கு வழக்கம் போல நம்ம பழைய டைனிங் ஹாலிலேயே சாப்பிடலாம்!” இடையிலே குறுக்கிட்டு கீதாவுக்குச் சமாதானம் சொன்னான் ஆனந்தன்.
ராத்திரி வந்தது. மீண்டும் புதிய டைனிங் ஹாலிலேயே சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது.
“கீதா சாப்பாடு தயார்!” என்றார் சடையப்பர்.
“இல்லே கீதா! எனக்கு புது அறைபிடிக்கவில்லை. பழைய அறையிலேயே சாப்பிடலாம்” என்றான் ஆனந்தன்.
“இல்லை, மிஸ்டர் ஆனந்தன் புது அறை பகலில் இருந்தது மாதிரி இருக்காது. எல்லாம் சரியாகிவிட்டது; வாருங்கள்” என்றாள் ராதா.
இதைக்கேட்டதும் தண்ணீரில் அமுக்கி எடுத்த ஆட்டைப் போல் அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
“ராதா?”
“ஆமா சார், வந்து பாருங்கள். உங்களுக்கு மனக் குறைவே இருக்காது. அருவருப்பும் தோனாது.
ஆனந்தன் அவளையும் அறியாமல் புதிய சாப்பாட்டறைக்குள் நுழைந்தான். நடந்து வந்ததாகவே அவன் நினைக்காமல் மிதந்து வந்ததாகவே கற்பித்துக்கொண்டான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. பகலில் அவன் கண்களையும் மனத்தையும் உறுத்திக் கொண்டிருந்த வர்ணம் போன அந்த இடம் சரி செய்யப்பட்டிருந்தது.
“ராதா?”
“என்ன மிஸ்டர் ஆனந்த்!”
“உன்னைப் புரிந்து கொண்டேன்”
“என்ன மாப்பிள்ளே சொல்றீங்க”?
“ராதாதான் இங்கே ஆல் இன் ஆல்ன்னு சொன்னீங்களே அது நூற்றுக்கு நூறு உண்மை மாமா” மனதிலே ஒன்றை ஒளித்துக்கொண்டு வெளியிலே வேறு ஒன்றைச் சொன்னான் ஆனந்தன்.
ஆனந்தன் பரிபூரணமாக நிம்மதியை இழந்து விட்டான்.
“இவள் ராதா அல்ல; மஞ்சுளா தான்” என்று தீர்மானித்துக் கொண்டான்.
ஆனந்தன் நிம்மதியை இழந்து விட்டான். அவன் ஒரு இயந்திரத்தைப் போலவே இயங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் களை இல்லை. நடமாட்டத்தில் சுறுசுறுப்புக் குன்றிவிட்டது. மஞ்சுளா, ராதா என்ற பெயரில் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் வந்து சேர்ந்திருப்பது துப்பறியும் கதையில் வரும் திடீர்த் திருப்பம்போல் ஆனந்தனுக்குப்பட்டது. அதனால் அவன் மூளை கலங்கியவனைப்போல் காணப்பட்டான்.
அவன் உள்ளத்தில் இரண்டு விதமான துன்பங்கள் தோன்றி அவனை உறுத்திக்கொண்டிருந்தன. ஒன்று– மஞ்சுளா இப்படி. ஒரு மாயப் பிசாசாகத் தோன்றி தன் வாழ்க்கையில் குறுக்கிட்டு நிற்கிறாளே என்பது; மற்றொன்று – இந்த விவகாரம் கீதாவுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பது. இத்த வேதனைகள் அவனைச் சில வேலைகளில் கூனிக் குறுக வைத்துக்கொண்டிருந்தன. பிறவிப் பணக்காரன் என்ற தோரனையில் எதையும் நிமிர்ந்த நோக்குடன் பார்த்துப் பழகிய ஆனந்தன், தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு தன்னை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணிக் கொண்டு தலைகுனிந்து நடக்க ஆரம்பித்தான்.
கீதா என்றும், ராதா என்றும் உரத்த குரலில் கூப்பிட்டுப் பேசும் அவன் குரலை எப்படியே ஒரு பனிமூட்டம் தாக்கி கிடு கிடுக்க வைத்துக்கொண்டிருந்தது. சண்டைப் படத்தை பார்த்து தன் தாயின் இடுப்பைச் கட்டிக் கொண்டு கதறும் சிறு குழந்தையைப்போல் அவன் நடுங்கிப் போயிருந்தான். யாரும் அவனுக்கு அறுதல் சொல்ல வழியில்லை; ஏனென்றால் யாருக்கும் இந்த விவகாரம் தெரியாது; தெரியவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தில் அவனும் அவன் உள்ளமும்தான் கூட்டாளிகள். தனிமை தான் அவனுக்கு மணிமண்டபம்.
“ஆனந்தா, மஞ்சுளா எப்படி இங்கு ராதாவாக வந்தாள் என்று குழம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவளை இங்கிருந்து கடத்துவதில்தான் உன் எதிர்கால வாழ்க்கையின் ஜீவ நாடியே அடங்கியிருக்கிறது’” என்று அவன் மனம் அவனை அச்சுறுத்திக் காட்டியது.
“ராதாவை எப்படி விரட்டுவது? அவள் நாணயம் கெட்டவள்; பொய்க்கணக்கு எழுதுகிறாள் என்று சடையப்பரிடம் சொல்லலாம் என்று நினைக்கும்போது சடையப்பரே நேரில் வந்து “மாப்பிள்ளே, ராதா மிகவும் நேர்மையானவள்; எளிமையானவள். அவள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்” என்று சொல்ல ஆரம்பித்தார். இதனால் ஆனந்தன் அந்தத் திட்டத்தைக் கைவிட நேர்ந்தது.
ராதாவை, ஒழுக்கங்கெட்டவள் என்று சேற்றை வாரிப் பூசலாம் என்றாலோ அதற்கும் வழி இல்லை. ஏனென்றால், அவள் யாரிடமாவது சரளமாகப் பேசினால் தானே அந்தப் பழியை அவள் மீது சுமத்தமுடியும். அவள்தான் கண்பட்டை அணிந்த குதிரையைட்போல் நேர்கொண்ட பார்வையிலேயே இருக்கிறாளே! ஆதலால் ஆனந்தனுக்கு அதிலும் வழிபிறக்கவில்லை.
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் ஆனந்தன். கீதாவுக்கும் ராதாவுக்குமே முடிச்சுப் போட்டு விட்டால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.
“கீதா!”
“அத்தான்!”
“என் மனதில் கொஞ்ச நாட்களாக ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்ல நினைப்பதுண்டு. அதற்கு இப்போது தான் நேரம் கிடைத்திருக்கிறது.”
“என்ன் அத்தான் அப்படிப் புது விஷயம்! சொல்லுங்களேன்?”
“இந்த எஸ்டேட்டில் உன்னைவிட ராதாவுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கிறது. வேலைக்காரர்கள் அவளைப் பார்த்தால்தான் பயப்படுகிறார்கள். இது உனக்கு வெட்கமாக இல்லையா?”
“தவறு அத்தான்! ராதா நமது செக்ரெட்ரி. அவளுக்கு வேலையாட்கள் பயப்படுவது நமக்குப் பெருமைதானே! காரணம் ராதா அவ்வளவு நாணயமாக இருக்கிறாள்; கண்டிப்பாக நடக்கிறாள்…!”
“உனக்கு ஒன்றும் புரியவில்லை கீதா. எதிர் காலத்தில் இந்த எஸ்டேட் நமக்குத்தானே வரப்போகிறது?”
“வரட்டுமே, அப்போதும் ராதா நமது செக்ரெட்ரியாகத் தானே இருக்கப் போகிறாள்.”
“இல்லை, அதற்குள் அவள் இங்கு சின்ன முதலாளியாகிவிடுவாள். மாமாவுக்கும் விஷயம் புரியவில்லை!”.
“அத்தான், ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறீர்கள். அப்பா, விவரம். தெரியாமல் எதையும் செய்யமாட்டார். அப்பாவே அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்! ராதா இல்லாவிட்டால் இங்கே எதுவுமே நடக்காது; யாருமே பணியமாட்டார்கள் என்று அப்பாவே சொல்லும் போது அதை எளிதில் மாற்றி விட முடியுமா?”
ஆனந்தனுக்கு, கீதாவின் பதில் தலையில் சம்மட்டி அடிபோல் விழுந்து கொண்டிருந்தது. அவன் உள்ளம், தவறிப்போய் தரையில் விழுந்துவிட்ட மீனைப்போல் துடித்துக்கொண்டிருந்தது. ஓவ்வொரு நாளையும் அவன் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தான்.
ஓரு காலத்தில் ஆனந்தனின் கண்களுக்குக் காதல் தெய்வமாகத் தெரிந்த மஞ்களா, இப்போது அருவறுப்பைத் தரும் குரூபியாகத் தெரிந்தாள். அன்று அன்னமாகவும், மயிலாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தோன்றிய மஞ்சுளா, இப்போது பயங்கரமான நகங்களை வைத்துக் கொண்டிருக்கும் பருந்தாகவும், கழுகாகவும் தோன்றினாள். ஆனந்தனைப் பொறுத்தவரையில் அன்பு கூட ஒரு வகையான மாயையாகப். போய்விட்டது, ஏனென்றால் அவன் அவள் மீது வைத்த பிரியம் அவளது உருவத்தால் ஏற்பட்ட கவர்ச்சியின் கருவே தவிர, இதயங்களின் சேர்க்கையால் பிரசவித்த பாசமல்லவே!
அன்று எஸ்டேட்டில் கூலி போடும் நாள். எப்போதுமே கூலிபோடும் நாட்களில் ராதா பரபரப்பாக இருப்பாள். அவள் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டும். ராதாவின் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் கீதாவைக் கிறுகிறுக்க வைத்தன. தொழிலாளிகளுக்கு ராதா பணம் பட்டுவாடா செய்வது ஏதோ ஓரு செப்படி வித்தைபோல கீதாவுக்குத் தெரிந்தது. அதைவிட சுயநலம் கருதாமல் ஒரு எசமானியைப் போலவே ராதா நடந்து கொள்வது தான் கீதாவைப் பெரிதும் கவர்ந்திருந்தது
“அத்தான்!”
“சொல்லு கீதா?”
“ராதா எவ்வளவு விசுவாசமாக இருக்கிறாள் தெரியுமா? உங்களுக்குத்தான் அவளை ஏனோ பிடிக்கவில்லை!”
“கீதா, நீ.வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிற அப்பாவி, உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படி நடக்குமா?”
“அத்தான்! போகப்போகத்தான் உங்களுக்கு உண்மை விளங்கும்!”
“எனச்கு உண்மை நன்றாக விளங்கிவிட்ட து. வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு நான் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று எடுத்தெறிந்து பேசினான் ஆனந்தன். ஒரு நாளும் அவன் கீதாவிடம் அப்படி நடந்து கொண்டதில்லை.
“புரியும்படியாகச் சொல்லுங்கள். இப்ப என்ன நடந்து போச்சு?”
“நடக்காதது நடந்து போச்சுதோ! இந்தா; இந்தக் கடிதத்தை படிச்சுப்பாரு! எல்லாம் புரியும்!” என்று கூறி ஒரு கடிதத்தைத் தூக்கிப் போட்டான் ஆனந்தன்.
அந்தக்கடிதம் மைசூரிலிருந்து ஆனந்தனுக்கு வந்த கடிதம், கீதா கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
அன்புள்ள ஆனந்தனுக்கு,
நமஸ்காரம். என் மனத்தை எவ்வளவோ அடக்கப்பார்த்தும் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்லாமல் இருக்க முடிய வில்லை. உன் மாமனார் எஸ்டேட்டில் செக்ரெட்ரியாக வேலை பார்க்கும் ராதாவின் லீலைகள் இப்போது மிகுந்து விட்டன, கூடிய விரைவில் அவள் உனக்கு மாமியாறாகப் போகிறாள். வெள்ளை உள்ளம் படைத்த கீதாவுக்கு ராதாவின் வினயமான போக்கு புரியவில்லை. இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்க முயற்சி எடுத்துக்கொள்வாய் என்று நம்பி இந்தக் கடிதத்தை உனக்கு எழுதியுள்ளேன். உனக்கு இந்த விவரம் எப்படித் தெரியும் என்று நீ நினைக்கலாம். உங்கள் மாமனார் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் கூலியாட்களில் பலபேர் எனக்குத் தெரிந்தவர்கள். எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கடிதத்தைப் பார்த்ததும், நீங்கள் விழித்துக்கொண்டு ராதாவை விரட்டியடிக்காவிட்டால் உங்கள் தலையெழுத்து அவ்வளவு தான் என்றுதான். தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
இப்படிக்கு,
உன் தோழன்
மைசூர்
இந்தக் கடிதத்தை கீதா படிக்கும்போது அவள் முகத்தில் எந்த மாற்றமும் தெரியாமல் இருந்தது. ஆனந்தனுக்கு இது அதிர்ச்சியாகப் பட்டது.
“இப்போதாவது புரிகிறதா கீதா?” ஆனந்தனின் பேச்சில் ஒரு கொக்கரிப்புத் தெறித்துக் கிளம்பியது.
“அத்தான்!”
“சும்மா சொல்லு!”
“இந்தக் கடிதத்தில் கண்டிருப்பது உண்மையாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். அப்படி உண்மையாக இருக்குமானால் எங்கப்பா பாக்கியசாலிதான்; ராதாவைச் சித்தி என்று அழைக்கும் பாக்கியம் எனக்கும் கிடைக்கும்.”
கீதாவின் பதில், ஆனத்தனுக்குக் குதிகாலில் தேள் கொட்டுவதுபோல் இருந்தது.
“கீதா!”
“நான்தான் பேசுகிறேன் அத்தான். எங்கப்பா என் கண் எதிரே மகிழ்ச்சியாக இருந்தா எனக்குச் சொர்க்கம் கிடச்ச மாதிரி நான் நினைப்பேன். இதில் உங்களுக்கென்ன சங்கடம்?”
“நீ பேசுவதெல்லாம் உண்மைதானா கீதா!”
“உண்மைதான்! ராதா உங்களை மயக்கினால்தான் குற்றம். அதுதான் என்னைப் பாதிக்கும். அவள் அதுவரைக்கும் உத்தமி! யாரிடமும் சொந்தம் கொண்டாடாத எங்கப்பா மீது தானே பிரியம் வைத்திருக்கிறாள். ராதா, எங்கம்மாவைப் போல புண்ணியம் செய்தவள். குதிரைகளை அடக்கும் தேர்ப்பாகனைப் போல இந்த எஸ்டேட்டில் வேலை செய்கிறாள். மலர்களுக்குச் சேதம் ஏற்படாமல் தேனைச் சேகரிக்கும் தேனீயைப்போல அவள் பணி சிறந்திருக்கிறது”
“கீதா”
“கீதா தான் பேசுகிறது! உங்களுக்கு ஏன் ராதா மீது இவ்வளவு எரிச்சலோ தெரியவில்லை?”
“வாயை மூடு! மாமா வந்திடப்போறார்!”
“என்னம்மா மாப்பிள்ளயைக் கோபப்பட வச்சுட்டே?”
“ஒண்ணு மில்லேப்பா! ஒரு சிறு சர்ச்சை! குழம்பின் சுவை சுரண்டிக்குத் தெரியுமா? நாக்குக்குத் தெரியுமா? என்கிறது பற்றி விவாதிக்கிறோம்பா!”
“பரவாயில்லையே, இது ஒரு புதுமாதிரியான பட்டிமன்றமா இருக்கே! சரி வாங்க சாப்பிடப் போகலாம்” என்று சடையப்பார் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு போனார்.
கசப்பான கனிகளை கடித்துவிட்ட சிறுவனைப்போல, ஆனந்தன் முகத்தைச் சுளித்துக்கொண்டே டைனிங் ஹாலுக்குள் நுழைந்தான். அவன் முகத்தில் – இந்த மொட்டைக் கடிதச் சூழ்ச்சியும் பலிக்காமல் போய்விட்டதே என்ற விரக்தி விசுவரூபம் எடுத்து நின்றது.
பங்களாவிற்குச் சற்றுத் தொலைவில் ஒரு சிமிண்ட் பொட்டல் உண்டு. அது ஏலக்காய்களை உலர்த்துவதற்காகப் போடப் பட்டது. ஏலக்காய் விலை உயர்ந்த வாசனைப் பொருளாதலால் அதற்குக் தனியாக காவல்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். எப்போதாவது ராதா அங்குபோவாள். போகும் போது ஏதாவது ஒரு பாடலை மனதுக்குள்ளேயே பாடிக்கொண்டு தான் போவாள். அவள் தோட்டத்திற்குள் நுழைந்தாலே ஒரு அழகாகத்தான் இருக்கும். வெறும் பசுமை மட்டும் மிகுந்திருக்கும் அந்தத் தோட்டத்திற்குள் வண்ணப்பூப்போட்ட புடவையை உடுத்திக்கொண்டு ராதா போகும்போது பூத்து மலர்ந்த பூச்செடி தனது மாயக்கால்களினால் தோட்டத்திற்குள் ஊர்ந்து போவதுபோல் மற்றவர்களுக்குத் தெரியும்.
“ராதா!”
இந்தக் குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தாள் ராதா.
“என்ன கீதா இங்கே வரை வந்து விட்டாய்!”
“உன்னை எப்போது தனிமையில் பார்க்கலாம் என்று ஒரு வாரமாகக் காத்து கடந்தேன். இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. வந்துவிட்டேன். தூக்கம் வராதவனுக்கு இரவு கொடிதாகத் தெரியும், நடக்க முடியாதவனுக்குச் சிறு தூரம்கூட நெடுந்தாரமாகப்படும். அதைப்போல உன்னைப் பார்ப்பதற்காக ஏங்கக்கொண்டிருந்த எனக்கு இந்த வாரமே ஒரு வருஷமாகத் தோன்றியது ராதா!”
“என்ன கீதா பீடிகையே நீளமாக இருக்கிறது. சும்மா சொல்லு. என் மனம் எதையும் தாங்கிக் கொள்ளப் பக்குவப் பட்டு விட்டது.”
“உன் மனம் புண்படும்படி நான் எதையும் சொல்லப் போவதில்லை. நான் அதற்காகவும் இங்கு வரவில்லை ராதா”
“நீ மூதலாளியின் மகள், நீ எதையும் செய்யலாம், நீ என்ன சொன்னாலும் நான் அதற்குக் கட்டுப்படக்கூடியவள்; கடமைப் பட்டவள். உன் உத்தரவுகளை மீறுவதற்கு எனக்கு வலிமை இல்லை.”
“நீயாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதே ராதா! நீ சந்தனமரம் போல் மணமுள்ளவள்; தியாக மனம் படைத்தவள்!”
“நான் சந்தன மரமென்றாலும், சுழன்றடிக்கும் சூறாவளியை எதிர்க்க சந்தன மரத்திற்கு ஏது ஊக்கம்?”
“ராரதா, உன்னை எங்கள் சிப்பந்தி என்ற முறையில் நான் பார்க்க வரவில்லை. அப்படி விரும்பியிருந்தால் நான்-இருக்குமிடத்திற்கு உன்னை வரவழைத்திருப்பேன். நான் உன்னை என் சித்தியாக ஏற்றுக்கொண்டு ஒரு வார காலமாகி விட்டது ராதா! இனிமே நீ …நீங்கள் எனக்கு சித்தி!”
கீதாவின் குரலில் பனித்துளிகள் படர்த்திருந்தன.
“கீதா!”
“நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் ராதா! ஏழைவீட்டுக் கூறையில் கிடந்த சுரைக்காயைப்போல் ஒண்டியாக வாழ்ந்த என் தந்தைக்கு நீ துணைவியாக வாய்ப்பது அவர் செய்த தவம் மட்டுமல்ல; நான் செய்த புண்ணிய மும் கூட!”
“கீதா! இப்படியெல்லாம் என்னைத் தவறாக நினைப்பது நல்லதல்ல! கொடிய பாவம்! கீதா, என் பாவம் உன்னைச் சும்மா விடாது… விடவே விடாது!”
“எனக்கு எல்லாம் தெரியும் ராதா! நான் அதை எதிர்த்தால் தானே நீ கலங்க வேண்டும்; நான் தான் உள்ள பூர்வமாக அதை விரும்புகிறேனே!”
“சுத்தப் பொய்! அபாண்டம்! உனக்குப் பிடிக்கவில்லை யென்றால் நான் இப்போதே வேலையை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். தியாகம் எனக்குப் புதிதல்ல; நான் ஏற்கனவே என் புருஷனையே தியாகம் செய்தவள்!”
“ராதா!”
“ஆமாம், என் கதை உனக்குக் தெரியாது, நான் ஏற்கனவே கல்யாணமானவள். ஒரே ஒரு நாள் மணமகளாக இருந்தவள். முதல் இரவு, பெண்களுக்குப் புனித இரவாக அமைகிறது. ஆனால் எனக்கு மட்டும் அந்த முதல் இரவு துன்ப இரவாக முடிந்து விட்டது. பொழுது விடியுமுன் என்னை விவாகரத்து செய்துவிட்டார்கள்.!”
“ராதா, இதெல்லாம் நடந்ததுதானா? யார் அந்தப் பாதகன்?”
“இதெல்லாம் நடந்தது தானா என்றா கேட்கிறாய்?. ஒரு நாவலாசிரியர் கற்பனை செய்து பார்க்க முடியாத அதிசயங்கள் பெண்களின் வாழ்க்கையில்தான் நடக்கின்றன. அதுவும் ஒரு பணக்காரன் நினைத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெளிக்கலாம்; வளைக்கலாம்; நொறுக்கலாம்; ஆனால் பாவம் பழுக்கிறவரைதான் அவர்கள் தப்பிக்கலாம். பாவம் பழுத்துக் கனியாகும் போதுதான் பாவிகள் புழுவாகத் துடிக்கிறார்கள். நான் இன்னும் சாகாமல் இருப்பது அதற்காகத்தான். பெண்ணைப் பரிதவிக்க விட்டவர்கள் பாடம் பெறுகிறார்களா என்று நான் பார்க்க வேண்டாமா?”
“ராதா, எனக்கு விவரமாகச் சொன்னால் பரவாயில்லை? உன்னை ஏன் விவாகரத்து செய்தார்கள்? நீ செய்த தவறு என்ன கல்யாணத்திற்கு முன் நீ யாரையாவது விரும்பி அவன் ஏதும் செய்து விட்டானா? என்னிடம் சும்மா சொல்லு ராதா!”
“என் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்ததே பாழாய்ப்போன காதலால்தான் கீதா; நான் ஒருவரைத் தெய்வமாக மதித்தேன். அவரும் அப்படித்தான் நினைக்கிறார் என்று நினைத்துத் திருமணத்திற்கு ஓப்புக்கொண்டேன். திருமணமும் நடந்தது. முதலிரவு நெருங்கிக் கொண்டே வந்து, மல்லிகையும் பன்னீரும், எங்களைப் படுக்கையறைக்கு அழைத்தன. பால் நிலவு நேரம்! அவருடைய மாளிகையின் மேல் குளத்திலிருந்து நாங்கள் மீனாட்சி அம்மன் கோவிலைத் தரிசித்தோம். சுவாமி புறப்பட்டு வடக்கு மாசி வீதியில் வந்துகொண்டிருந்தது. மேளக் கச்சேரியும், கரகாட்டம், மயிலாட்டம் முதலிய வேடிக்கைகளும் எங்கள் செவிகளுக்கு எட்டி எங்களைப் போதைக்குள்ளாக்கி விட்டன. இதற்கு மேல் – நான் உனக்கு விவரிப்பது நல்லதல்ல; படுக்கையறையில் லேசான வெளிச்சம். தெளிந்த நீரோடையில் நீந்தும் மீன்கள் ஒன்றை அணைத்துக்கொண்டு மற்றொன்று தழுவி நீந்துவதைப்போல் நாங்கள் நிலை தடுமாறிப் போயிருக்கிறோம். எந்தப் பெண்ணும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அவர் படுக்கையை விட்டெழுந்து விளக்கைப் போட்டார்.
“சீ! என்னைத் தொடாதே!” என்றார்.
‘அத்தான், என்ன இதெல்லாம்!’ என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். இப்படிப்பட்ட கேலிக்கூத்துகளெல்லாம் முதலிரவு அன்று நடக்கும் போலிருக்கிறது என்று நான் முதலில் நினைத்து விட்டேன்.
“அவர் பதில் பேசவில்லை. உடைகளை மாட்டிக்கொண்டு கட கடவென்று கீழே இறங்கி விட்டார். நான் அலங்கோலமாக நிற்கிறேன். சற்று நேரங் கழித்து யாரோ மாடிப்படியில் ஏறிவரும் அரவம் கேட்டது. நான் வேகவேகமாக உடைகளை அணிந்தேன். வேறு யாருமல்ல; என் மாமியார் தான் வந்தார்.”
“நில்லு அப்படியே!”
“ஒன்றும் நடக்கவில்லையே அத்தே!”
“அது வரையில் நாங்கள் செய்த புண்ணியம்! உனக்குக் குஷ்டம் என்கிறானே என் மகன்!” என்றார் அவர் அம்மா.
“எனக்கா குஷ்டம்?”
“வேறு யாருக்கு! உனக்குத் தான்!” என்று கூறிக் கொண்டே என் புடவையை உரிந்தார் என் அத்தை. என் தொடையில் ஒரு வெள்ளைத் தழும்பு இருந்தது. அதைப் பார்த்ததும் என் அத்தை எனக்குக் குஷ்டம்தான் என்று ஊர்ஜிதம் செய்துவிட்டார். அவ்வளவுதான் என் கழுத்தில் ஏறிய தாலி இறங்கியது, என் கூந்தலில் இருந்த பூக்கள் பிய்த்தெறியப்பட்டன. சிறு அழுக்குகூடப்படாமல் என் மஞ்சள் கயிறு அவிழ்க்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு தான் இந்த எஸ்டேட்டுக்கு வந்தேன். புண்ணியவான் சடையப்பரிடம் எல்லா விவரத்தையும் சொல்லி அழுதேன். அவர் என்னை பெங்களூருக்கு அழைத்துப் போய் சிகிச்சை செய்தார். இப்போது அந்த வெள்ளைத் தழும்பு இல்லை; மறைந்து விட்டது. உங்கப்பா எனக்குக் கடவுள் மாதிரி, எந்தப் பெண்ணாவது கடவுளைப் புருஷனாக ஏற்றுக்கொள்வார்களா கீதா?”
ராதாவின் இந்தச் சோகக் கதை கீதாவைக் கண்கலங்க வைத்தது.
“அப்படியானால் இந்த வதந்திகளெல்லாம் உண்மை தானா?”
“எந்த வதந்திகள் கீதா!” ஆவலோடு கேட்டாள் ராதா.
கீதா, ஆனந்தனுக்கு வந்த அத்த மொட்டைக் கடிதத்தை எடுத்து நீட்டினாள்.
ராதா அதைப் படித்துப் பார்த்துவிட்டு லேசாகச் சிரித்தாள். கலங்கிய கண்களுடன் அவள் சிரித்தது, சில நாட்களில் மாலை வேளைகளில் வெயிலுடன் சேர்ந்து மழைத்துளிகள் விழுவது போலிருந்தது.
“இதையெல்லாம் நான் எதிர்பார்த்தேன் கீதா! நான் இங்கே இருக்கக் கூடாது என்று நினைக்கிறவர்கள் செய்யும் மோசடி நாடகங்கள்! நீ சொன்னால்கூட நான் போய் விடுகிறேன்! வீண்பழி உன் தகப்பனாருக்கு வேண்டாம்” என்று அழுதுகொண்டே சொன்னாள் ராதா!
கீதா அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.
“என்ன கீதா, ராதா என்ன சொல்கிறாள்? அவள் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன?”
ராதாவும், கீதாவும் திரும்பிப் பார்த்தார்கள். மேகத்திலிருந்து குதித்தவனைப்போல ஆனந்தன் நின்று கொண்டிருந்தான்.
“ஒன்றுமில்லை அத்தான், ராதா அவள் கதையைச் சொல்லி அழுகிறாள்!” என்றாள் கீதா.
“நானும் கேட்டுக்கொண்டுதானிருந்தேன், ராதா தன் முடிவை கடைசிவரை சொல்லவே இல்லையே”: என்றான்.
இதைக் கேட்டு ராதா துணுக்குற்றுள்.
மெர்க்காராவுக்குச் சற்று கீழேதான் சித்தாப்பூர் இருக்கிறது. மெர்க்காராவுக்குப் போகமுடியாத சாதாரண மக்கள் அங்குதான் தங்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட அது ஒரு இராமனாதபுரம் ஜில்லா மாதிரியே இருக்கும். அங்கு சிறிய கடைகள் வைத்து இருப்பவர்கள் எல்லாம் இராமனாதபுரம் ஜில்லாக்காரர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், சித்தாப்பூரைச் சுற்றியுள்ள எஸ்டேட்டுகள் அனைத்தும் இராமனாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுடையது தான்.
தமிழகத்தை ஓட்டியுள்ள கேரளத்தை விட்டுவிட்டு, கன்னடத்தையும் தாண்டியுள்ள குடகு நாட்டிற்குச்சென்று அவர்கள் தோட்டங்கள் வாங்குவதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் பூர்வீக வாசஸ்தலம் பூம்புகார் என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம். காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து கடலில் சங்கமமாகும் காவிரி நதியின் உற்பத்தி ஸ்தானம் அந்தக் குடகு நாடுதான். அதனால்தான் அதே குடகு நாட்டில் காவேரி உற்பத்தியாகும் தலைக்காவேரிக்கு மிக அருகாமையில், அந்தச் சமூகத்தினர் தோட்டங்களை வாங்கி தொன்று தொட்டுப் பராமரித்து வருகிறார்கள், நாட்டுக்கோட்டைச் சமூகத்தினருக்கு, காவேரி ஒரு குலதெய்வம் போன்றது. அதனால் தான் அவர்கள் இல்லங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ‘காவேரி’ என்று பெயர் சூட்டுகிறார்கள். இது புராணம் அல்ல; ஒரு வரலாறு.
தலைக்காவேரியின் அடிவாரத்தில்கான் சித்தாப்பூர் இருக்கிறது. தலைக்காவேரியிலுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிக்குக் கூட. சித்தாப்பூரிலிருந்துதான் சாமான்கள் போக வேண்டும். தோட்டங்களுக்கு வேலைக்குப்போகும் இராமனாதபுர ஜில்லாவைச் சேர்ந்தவர்கள், முதல் கட்டமாக ஊரைப் பழகிக் கொண்டு, இரண்டாவது கட்டமாக வேலையை விட்டு விலகிக்கொண்டு சித்தாப்பூரில் பெட்டிக்கடை, டீக்கடை, துணிக்கடை, தையல்கடை வைக்கத் தொடங்கி விடுகிறார்கள்: இப்படி வளர்ந்த ஊர்தான் சித்தாப்பூர்.
தலைக்காவேரியில் உள்ள நாட்டுக்கோட்டையார் விடுதி, மலையில் கட்டப்பட்ட வீடுபோல் இல்லாமல், சமதரையில் கட்டப்பட்ட ஒரு மாளிகை போலவே இருக்கும். ஒன்பது வகையான கோவில்களைக் குலதெய்வங்களாக வணங்கும் அவர்கள் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து அந்த விடுதியைக் கட்டி, அங்கு வருவோரை உபசரிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
திருமணத்திற்குப்பிறகு, முதல் முறையாக மனைவியை குடகிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கும் ஆனந்தனையும்; கீதாவையும் தலைக்காவேரிக்குப் போய் நீராடிவிட்டு வரச் சொல்லவேண்டும் என்று சடையப்பர் ஆசைப்பட்டார். குடும்பக் கவலைகளை மறப்பதற்கும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப் பேற்றினைப் பெறுவத்ற்கும் தலைக்காவேரியில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை.
“கீதா!”
“என்னப்பா!”
“நாளைக்கு ஆடி வெள்ளி! நீயும் மாப்பிள்ளையும் தலைக்காவேரிக்குப் போயி, நீராடிட்டு வந்தா நல்லது. காவேரித் தாயே, அடுத்த வருஷம் இதே ஆடி வெள்ளிக்கி நாங்கள் ஒரு குழந்தையோடு வரணும்னு வேண்டிக்கிட்டு வாம்மா!”
“சரியப்பா! ஆனால் ஒரு வேண்டுகோள்?”
“சும்மா சொல்லம்மா!”
“எங்களோட ராதாவையும் அனுப்பி வையுங்கப்பா!”
“ராதாவா?… அவளுக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை! அவள் சுவாமி தரிசனம் செய்து நான் பார்த்ததே இல்லை. அவளுக்காகவும் நீயே வேண்டிக்கிட்டா நல்லது!” என்று பேசிக்கொண்டே நாலாபக்கமும் சுற்றிப் பார்த்துக் கொண்டார் சடையப்பர்.
“என்னப்பா, இப்படிப் பாக்கறீங்க!”
“உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லணும்னு நெனைச்சேன்… ராதாவுக்கு எப்படியாவது திருமணம் செஞ்சுவச்சுடணும்னு இருக்கேன். திடீர்னு சொன்னா அவ ஓத்துக்கிட மாட்டாள். கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லணும் நீயும் சேர்ந்துதான் சொல்லணும். செளகரியப் பட்டால் மாப்பிள்ளைக்கூடச் சொல்லலாம்”
அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த ஆனந்தன் “மாப்பிள்ளை யாரு மாமா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.
“மாப்பிள்ளைக்கா பஞ்சம்? இந்த எஸ்டேட்டிலே ஒரு பகுதியை தர்றேன்னு சொன்னா, எத்தனை பேரோ வருவாங்க! அதுவும் இல்லேன்னா, நானே எனக்கு ஒரு சுவீகாரப் புத்திரனை எடுத்துக்கிட்டாப் போகுது? இவ்வளவு பெரிய குடும்பத்திற்கும், சொத்திற்கும் நான் அதிபதியாவேன்னு எனக்கே தெரியாது. நான் மட்டும் இங்கே சுவீகாரமா வரல்லேன்னா இவ்வளவு காலத்திற்கும் ஏதாவது ஒரு வட்டிக் கடையிலேதான் குமாஸ்தாவா இருந்திருப்பேன்” – சடையப்பர் பேசில் நன்றி உணர்ச்சியும், பெருந்தன்மையும் போட்டி போட்டு மிதந்துகொண்டிருந்தன.
“கீதா, மாமா பேச்சைக் கேட்டியா?”
“அப்பா, எதையும் யோசிக்காமல் செய்யமாட்டாங்க! எனக்கு ஓரு அண்ணன் வருவது உங்களுக்கும் ஒரு பக்கபலம் தானே!”
கீதாவின் எதிர்பாராத இந்தப் பதில் ஆனந்தனுக்கு கஷாயம் குடிப்பது போல் இருந்தது.
ஆனந்தன் அந்த இடத்தைவிட்டு நகர்வதற்கும், ராதா அங்கு நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“குட்மார்னிங் கீதா!”
“உனக்கு ஆயுள் கெட்டி! உன்னைப் பற்றிதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நீயே வந்து விட்டாய்!”
“ராதா!”
“சார்!”
“நாளைக்கி, கீதாவும், மாப்பிள்ளையும் தலைக்காவேரிக்கு போறாங்க! நீயும் அவங்களோடு போய்ட்டு வந்தா நல்லது. எனக்கும் ஒரு திருப்தி ஏற்படும்!”
“நீங்க எனக்கு பாஸ்! நான் உங்கள் செக்ரெட்ரி!.உத்தரவிடுங்கள் போய் வர்றேன்; மற்றபடி எனக்கு மதம், சாமி தரிசனம் இவைகளில் நம்பிக்கையே இல்லை சார்!”
“உனக்கு இல்லை; எங்களுக்கு இருக்கே! . எங்களாலே உனக்கும் புண்ணியம் கிடைக்கட்டுமே””
“கெடைக்கத்தானே அப்பா போகிறது! ராதாவை, அண்ணியினு அழைக்கிறகாலம் வராமலா போகப்போகுது!”
“கீதாவின் பேச்சிலே ஏதோ உள் அர்த்தம் இருந்து கொண்டே வருகிறது. நான் ஒன்றும் ஏமாந்தவளல்ல; நான் ஏற்கனவே ஒரு முறை ஏமாந்தவள்; அதுவும் கீதாவுக்குத் தெரியும்…”
“தெரிந்துதான் கீதா பேசுகிறாள் என்று வைத்துக் கொள்ளேன். எல்லாம் பேசுகிற நேரம் இது இல்லை; நல்ல காரியங்கிறது ஒரு வீடு கட்ற மாதிரி; அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முடிக்கணும்” என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார் சடையப்பர்.
நள்ளிரவு! வண்டுகளின் ரீங்காரம் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. கண்களுக்குத் தென்படாத தென்றல் ஐன்னல் வழியே புகுந்து குழப்பமான நிலையில், ஒருக்களித்துப் படுத்திருந்த ராதாவை எழுப்பி உட்கார வைத்தது. பொழுது புலர்ந்ததும் சடையப்பரின் உத்தரவுப்படி. கீதாவுடன்.தலைக்காவேரிக்குப் புறப்படுவதற்கு ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தாள் ராதா. பழங்கள், கட்டுச் சோறு -இவைகள் தயாரிக்கப்பட்டு, ராதாவின் அறையில் தயாராக இருந்தன. ஒரு சிறிய பையில் அவளுக்கு வேண்டிய உடைகளையும் எடுத்து வைத்திருந்தாள்.
முதல் நாள் மாலையில் சடையப்பரும், கீதாவும் பேசிக் கொண்டிருந்ததுதான் ராதாவைக் குழப்பிக் கொண்டிருந்தது. ஏதோ நடக்கப்போகிறது என்று அவள் அஞ்சினாள். அதற்குள்ளாக – “பொல்லாங்கிற்கு இடம் தராமல் எஸ்டேட்டை விட்டுப் போய்விட்டால் நல்லது; ஆனால் எப்படிப் போவது? சடையப்பரிடம் எதைச் சொல்லிவிட்டுப் போவது? ஆனந்தன்தான் என் புருஷன் என்று சொல்லிவிட்டால், இவ்வளவு காலமும் நான் இங்கே இருந்தது, பணியாற்றியது எல்லாமே ஒரு சதித்திட்டம் என்றாகிவிடுமே” என்ற இந்த மனச்சுமைதான், அவள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது. அப்போது இரவு மணி இரண்டு அடித்தது.
“ராதா!”
ராதா திடுக்கிட்டுப்போய் படுக்கையை விட்டு எழுந்தாள்.
கைவிளக்குடன் ஆனந்தன் அவளது அறை வாசலில் நின்று கொண்டிருந்தான்.
பாதி ராத்திரி வேளையில் ஆனந்தன் அப்படி தன் அறைக்குள் நுழைவான் என்று ராதா எதிர்பார்க்கவில்லை.
“நீங்களா?”
“நானே தான்!”
“நீங்கள் இப்படி இந்த நேரத்தில் இங்கு வரலாமா? பார்க்கிறவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்களா? தயவு செய்து போய் விடுங்கள். ஆள் அரவம் கேட்டால் நாய் குலைக்கும்; பிறகு வேலையாட்கள் விழித்துக் கொள்வார்கள். உங்களுக்கும் அசிங்கம், எனக்கும் அசிங்கம்! தயவு செய்து போங்கள்!”
“நான் இங்கே வந்திருப்பது நீ நினைப்பது போல் தவறான காரியத்திற்காக அல்ல! உனக்குக் கொஞ்சமாவது விவஸ்தை இருக்கிறதா என்று கேட்டு விட்டுப் போகத்தான் வந்தேன்!”
“ஆனந்த்!”
“நீ திட்டமிட்டே இங்கே நுழைந்து எனது நிம்மதியைக் குலைக்கத்தான் வந்திருக்கிறாய். உனக்குக் கொஞ்சம் கூடவா மானம், ரோஷம் இல்லாமல் போய்விட்டது?”
ஆனந்தன் இப்படிப் பேசியது, ராதாவுக்குத் தன் கூந்தலில் நெருப்புப் பற்றியது போல் இருந்தது.
“எனக்கா வெட்கமில்லையா என்று கேட்கிறீர்கள்? இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டுவிட நேரமாகி விடாது! யானையை அடக்கி விடக்கூடிய மாவுத்தன், சிலவேளைகளில் தன் கோபத்தை அடக்கிக்கொள்ள முடியாமல் அழிந்து விடுவதைப் போல நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்!”
“சீ. வெட்கங் கெட்டவளே! உனக்குப் பேச்சு வேறே கேடா?”
“ஆனந்த்! நிதானமாகப் பேசுங்கள்! உதாசீனப் படுத்துப் பேசுவது உங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட ‘ஒன்வே டிராபிக்’ அல்ல! மரியாதை என்பது ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு நாணயமான வியாபாரம் என்று நினைப்பவள் நான். நீங்கள் என்னை எது பேசினாலும் என்னை ஒன்றும் பாதித்து விடாது. ஆனால் நான் ஒரு வார்த்தை திருப்பி பேசிவிட்டால் அது பாலில் விஷம் கலந்தது மாதரி ஆகிவிடும்!”
“முறைகெட்டுப்போன உன்னோடு நான் தர்க்கம் செய்ய வரவில்லை!”
“பின் எதற்காக இங்கே வந்தீர்கள்? குஷ்டம் போய் விட்டதா என்று பார்ப்பதற்காக வந்தீர்களா?”
“உனக்கு ஒரு அபாய அறிவிப்பைச் சொல்லி விட்டுப்போக வந்தேன். நீ இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த எஸ்டேட்டை விட்டுப் போய்விட வேண்டும்! உனக்கும் எனக்கும் இருந்த உறவை மற்றவர்கள் தெரிந்துகொள்ளுமுன் நீ மரியாதையாகப் போய் விடுவது நல்லது.”
“மிஸ்டர் ஆனந்த்! என்னை நீங்கள் இப்போது மிரட்டிக் காரியம் பார்த்துவிட முடியாது. நான் இந்த சில்வார் ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி! அதை மறந்து விடாதீர்கள்! சாதாரண தினசரிக் கூலி அல்ல! யாரைக் கேட்டு நீங்கள் இந்த அறைக்குள் நுழைந்தீர்கள்!. ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது அதுவும் நள்ளிரவில் மனைவியைப் படுக்கையில் தூங்க வைத்து விட்டு இப்படி வருவது உங்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லையா?”
“ராதா! உன் திட்டத்தை நான் அறியாதவனல்ல! எடுபிடியாக நுழைந்து இந்த எஸ்டேட்டுக்கே எசமானியாகப் பார்க்கிறாயா? அது ஒன்றும் என்னிடம் நடக்காது!”
“ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்னும்கூட உங்களுடைய கெட்டபுத்தி இன்னும் போகவில்லையே என்றுதான் வருந்தத் தோன்றுகிறது!”
“ராதா! இறுதியாகச் சொல்லுகிறேன்; இந்த இரவு தான் நீ இந்த எஸ்டேட்டில் கழிக்கும் கடைசி இரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை இரவு இந்த எஸ்டேட்டில் எங்காவது ஒரு புதரில் நீ பிணமாகக் இடப்பாய்/”’
“மிஸ்டர் ஆனந்த், நீங்கள் நாளைக்கு என்னைக் கொல்லப் போவது இரண்டாவது முறை. முதல் முறை என் வாழ்க்கையைக் கொன்றீர்கள்; நாளைக்கு என் உயிரைக் குடிக்கப் போகிறீர்கள்; இல்லையா!”
“என் வாழ்க்கையை அழிக்க வந்திருப்பவள் நீ தான், உன்னை அந்த அளவிற்கு விட்டுவிட மாட்டேன், உன் சாவில்தான் என் எதிர்காலம் இருக்குமானால் நான் கொலைகாரன் ஆவதைத் தான் பெரிதும் விரும்புவேன். எந்தச் சட்டமும் என்னை அண்ட முடியாது!”
“என்னைக் கொல்வதற்கு எந்த ஆயுதமும் உங்களுக்குத் தேவைப்படாது. இதற்கு முன் தேவைப் பட்டதுமில்லை. என் உயிரை நான்தான் என் கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். சாவதாக இருந்தால் என் கழுத்திலிருந்த தாலியை நீங்கள் அறுத்த அன்றே மாய்த்துக் கொண்டிருப்பேன்!”
“வேறொரு பெண்ணாக இருந்தால் அப்படித்தான் செத்திருப்பாள்! உன்னைப்போல் மோப்பம் பிடித்துக் கொண்டு அலைந்து திரிய மாட்டாள்!”
“மிஸ்டர் ஆனந்த்! நீங்கள் மிதமிஞ்சிப் பேசுகிறீர்கள்; இதமாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது, குளத்தில் விழுந்து சாகப் போகிறவர்கள் யாரைப்பற்றி இழுத்தாலும் அவர்களும் மூழ்கி விடுவார்கள் என்பார்கள். அது மாதிரித் தான் நீங்கள் சிக்கிக்கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் இப்போது என்னுடைய அறையில் இருக்கிறீர்கள். நான் கூச்சல் போட்டால் நீங்கள் தான் சிக்கிக் கொள்வீர்கள், விசாரணை இல்லாமலே நீங்கள் குற்றவாளி ஆகிவிடுவீர்கள். முன் யோசனை இல்லாமல் வந்து விட்டீர்கள். தயவு செய்து போய் விடுங்கள்!” என்று ராதா சொன்னது ஆனந்தனின் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. இருந்தாலும் அவனுடைய ஜபர்தஸ்து குறையவில்லை.
“இப்படி மிரட்டத் திட்டம் போடுகிறாயா? என் மீது பழி போட உன்னாலும். முடியாது, உன்னைப் படைத்த கடவுளாலும் முடியாது!”
“பாவம் கடவுள்! அவரை ஏன் திட்டுகிறீர்கள். இந்த விவகாரத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை!”
“ராதா, நீ.பாம்போடு விளையாடுகிறாய்;”
“இல்லை, நீங்கள் தான் தர்மத்தோடு மோதிக் கொண்டிருக்கிறீர்கள்!”
“நீ என்ன தர்மதேவதை என்ற நினைப்பா?”
“சட்டம் உங்கள் கையில் இருந்தால் தர்மம் என் கையில் தான் இருக்கும். சட்டமும் தர்மமும் ஓத்துப் போனதாகச் சரித்திரம் இல்லை!”
“வம்பை விலைக்கு வாங்காதே! உனக்கு உயிரோடு போய் விட விருப்பமிருந்தால் உனக்கு ஓரே ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறேன். நாளைக்கு இரவு இந்த அறையில் நீ இருக்கவே கூடாது” என்று கடுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அறைக்கு வெளியே ‘சரக்’ என்று ஒரு ஓசை கேட்டது. அது ராதாவின் காதில் விழுந்ததும் அவள் துடித்துப்போய் தலையைக் குனிந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். அவளுக்கு உயிரே போய்விட்டது போன்ற ஒரு திகில் ஏற்பட்டது – யாரோ ஒரு உருவம் முக்காடு போட்டபடி வேகமாக மறைந்து கொண்டே சென்றது.
“ஆனந்த் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள்!” என்று திரும்பிப் பார்த்தாள். ஆனந்த் அந்த இடத்தில் இல்லை.
ராதாவின் அறையை விட்டுக் கிளம்பிய ஆனந்தன் நேராக அவனுடைய படுக்கை அறைக்கு ஓடினான். அங்கே அவனுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. படுக்கையில் கீதாவைக் காணவில்லை.
“கீதா!”
பதிலில்லை!
இந்த அகால நேரத்தில் கீதா எங்கே போயிருப்பாள்?
“கீதா! கீதா!”
கீதா, அசைந்துவரும் தேரைப்போல் வெளியிலிருந்து உள்ளே வந்தாள்.
“இந்த நேரத்தில் எங்கே கீதா போயிட்டு வருகிறாய்?”
“வேறு எங்கும் நான் போகவில்லை. பாத்ரூமுக்குத்தான் போய் விட்டு வருகிறேன்?”
“சரி சரி! படு! குளிர் அதிகமாக இருக்கிறது. கம்பளியைப் போட்டு மூடிக்கொள்.”
கீதா எதுவும் பேசாமல் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.
கீதாவுக்குத் தூக்கம் வரவில்லை. தாலி கட்டும் நேரத்தை எதிர் நோக்கியிருக்கும் மணப்பெண்ணைப்போல, கீதா சூரியோதயத்தை ஆவலோடு எதிர்பார்துக் கிடந்தாள். அவளுடைய உள்ளத்தில், சுயநலத்திற்கும், நியாயத்திற்குமிடையே பலப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. குருவிகளின் சலசலப்பும், மொட்ட விழும் புதுமலர்களின் நறுமணமும், பொழுது விடியப் போகிறது என்பதை விரித்துக் காட்டினாலும் கீதா மனக் குழப்பத்திலேயே சவாரி செய்து கொண்டிருந்தாள்.
“என்ன இருந்தாலும் அவர் என் புருஷன்! அவரை நான் காட்டிக் கொடுக்க முடியுமா?”
“அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையையே அழித்து விட்டு, இங்கும் வந்து அவளைத் துரத்த நினைப்பதா?”
“குற்றம் அவர் மீது இல்லை! அவள் அப்போது குஷ்டரோகியாக இருந்தாள், அதனால் விவாகரத்து செய்தார்!”
“சரி முடிந்து விட்டது; அதோடு விட்டு விடுவதுதானே நியாயம்! அவளுக்கு வியாதி என்று தானே ஆனந்தி அவளைக் கைகழுவினார்!”
“இப்போது அவளுக்கு வியாதி தீர்ந்து விட்டது என்று தெரிந்து விட்டால் அவர்மனம் மீண்டும் அவள் பக்கம் திரும்பாது என்பது என்ன நிச்சயம்?”
“நீ அவளுக்காக எவ்வளவு வாதாடியிருக்கிறாய்? அவளை எந்த அளவுக்குப் புகழ்ந்திருக்கிறாய்? அவ நீ உன் சித்தியாக ஏற்றுக் கொள்ளக் கூடத் துடிக்க வில்லையா?”
“துடித்தது உண்மைதான். நேற்றுவரை கூட எனக்கு அந்த எண்ணம்தான். இனிமேல் எப்படி முடியும்? ஒரு மலரில் இரண்டு வண்டுகள் மொய்க்கலாம், ஆனல் ஒரு சிம்மாசனத்தில் இரண்டு அரசர்கள் இருக்க முடியாது.”
“கீதா, உன் இரக்கமெல்லாம் எங்கே போய் விட்டது? எல்லாம் நாடகம் தானா?”
“இரக்கம் வேறு, தியாகம் வேறு! ராதாவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பேன். அவளுக்காக நான் என் வாழ்க்கையை இழக்கமாட்டேன். மகரந்தமில்லாத மலரை வண்டுகள் கூட மதிப்பதில்லை. அதைப்போல புருஷன் இல்லாத பெண்ணை பூ விற்பவள் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டாள்!”
“கீதா; இது தான் உன் முடிவா?”
“சகோதரியாக இருந்தாலும் அவளை சக்களத்தியாக ஏற்றுக் கொள்ள எந்தப் பெண்ணும் சம்மதிக்க மாட்டாள். நாளைக்கே அவள் இந்த எஸ்டேட்டை விட்டுப் போய்விட. வேண்டும்.. அதுவும் எங்கப்பாவிற்கு விவரம் தெரியுமுன் போய் விடவேண்டும்.”
இதற்குள் பொழுது விடிந்துவிட்டது. கனவு கண்டவளைப்போல் கீதா விழித்துப்பார்த்தாள். அவள் எதிரே காபியை வைத்துக்கொண்டு ராதா நின்றாள். கீதா, வேண்டா வெறுப்பாக முகத்தைச் சுளித்துக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள்: ராதா ஒரு கணம் திகைத்து அடுத்த கணம் சமாளித்துக் கொண்டாள். நேற்று இரவு, ஜன்னல் வழியாக வந்து பார்த்து விட்டு ஓடியது கீதா தான் என்று ராதா புரிந்து கொண்டாள்.
“கீதா!”
“எனக்குக் காபி வேண்டாம்!”
“காலையில் எழுந்ததும் காபி மீது என்ன கீதா கோபம்?”
“எல்லாம் எனக்குத் தெரியும்!”
“உனக்குத் தெரிந்து விட்டது என்று எனக்கும் தெரியும்”
“ராதா!” ,
“உன் கேள்விக்கு நான் பதில் சொன்னேன். சில நேரங்களில் மெளனம் நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கி விடுகிறதே, அதற்காக!”
“உன்னிடம் நான் எந்த விளக்கமும் எதிர்பார்க்கவில்லை; நீ போகலாம்!”
“இன்னமும் உனக்கு எதற்கு விளக்கம்? எல்லாம் தான் தெரித்திருக்குமே?”
இந்தக் கட்டத்தில் வாயில் டூத்பிரஷோடு உள்ளே நுழைந்தான் ஆனந்த்.
“ராதா, உடம்பு சரியில்லை கீதாவுக்கு! இரவெல்லாம் அவள் தூங்கவில்லை. நீ, அவளை அதிகமாகப் பேசவிடாதே! தேவைப்படும் போது நான் பெல் அடிக்கிறேன்” – ஆனந்தன் நறுக்குத் தெரித்ததுபோல் பேசினான். அவன் ஒரு நாளும் அப்படிப் பேசியது இல்லை. அன்று முதல் எஸ்டேட் பங்களாவை ஒரு பனி மூட்டம் கவ்விக் கொண்டது. எல்லா நிகழ்ச்சிகளும் பழைய காலத்து ஊமைப் படத்தைப்போல பேச்சு மூச்சு இல்லாமல் நடந்து கொண்டிருந்தன. ராதாவுக்குத் தோழிபோல் இருந்த கீதா இப்போது ஒரு எசமானியைப்போல் நடந்து கொண்டாள். அதைப் போலவே தான் ராதாவும் ஒரு விசுவாசமுள்ள ஊழியரைப் போல் நடக்கத் தொடங்கினாள். எஸ்டேட்டை ஏதோ ஒரு உருத்தெரியாத சூன்யம் கவ்விக் கொண்டுவிட்டது போல உணர்ந்தார் சடையப்பரா். ராதாவின் முகத்தில் அருள் இல்லை; அதைப்போலவேதான் கீதாவுக்கும்.
“ராதா!”
“சார்?”
“ஏன் களைப்படைந்திருக்கறாய்? உன் முகத்தில் எப்போது மிருக்கும் களையைக் காணவில்லையே?”
“ஜலதோஷம் சார்!”
“ஐலதோஷம் என்றால் இவ்வளவு நேரத்திற்குள் கீதாவுக்கும் அது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமே?”
சடையப்பர் வினயமில்லாமல் தான் கேட்டார். ஆனால் ராதா?
“ஒட்டிக் கொண்டிருக்கிறதே! அதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?” என்று உள் அர்த்தத்தோடு பதில் சொன்னாள் ராதா.
“ஜலதோஷம் இல்லையப்பா! அது குணதோஷம்!” என்று வெடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கீதா!
கீதா உள்ளே வந்ததும் ராதா, “சார் நான் பீல்டுக்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.
“கீதா, என்னம்மா நடந்தது?”
“நீங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை; ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியவில்லை. ராதாவை வேலையை விட்டு நீக்காதவரை உங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் தீராது!”
“வழக்கைச் சொல்லாமல் நீயே தீர்ப்பையும் வழங்கி விடலாமா கீதா? என்ன நடந்தது! அவள் உன்னை அவமதித்தாளா, அல்லது உன் புருஷனை ஏதாவது பேசிவிட்டாளா? என்னிடம் சொல்வதற்கே கூச்சப்பட்டால், நான் எப்படி முடிவு சொல்வது?”
“எஸ்டேட் முழுவதும் ஒரே பேச்சு; உங்களுக்கும், ராதாவுக்கும் தொடர்பு இருக்கிறதாம்!”
சடையப்பர் பலமாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் துளியும் மாசு இல்லை.
“ஏம்மா, நீயும் உன் புருஷனும் எஸ்டேட்டுக்கு வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆகிவிட்டது. திடீரென்று இப்போது இந்தக் கதை எப்படி முளைத்து வந்தது?”
“ஆனந்துக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது. அவர் அதை என்னிடம் காண்பித்தார்.”
“ஒரு மொட்டைக் கடுதாசியை நம்பி, உன்னைப்பெற்ற அப்பனையே நீ சந்தேகப்படலாமா? நாளைக்கு இன்னொரு மொட்டைக் கடுதாசி வரும். அதில், உன் புருஷனுக்கும், ராதாவுக்குமே கள்ள நட்பு என்று எழுதியிருப்பார்கள். உடனே நீ அதையும் நம்பிவிடுவதா? ஒரு பெண்ணுக்கு முதலாவது புருஷன் மீது நம் பிக்கை வேண்டும். இரண்டாவது பெற்றோர்களிடத்தில் மரியாதை வேண்டும். இல்லாவிட்டால் எந்தப் பெண்ணுக்கும் மன நிம்மதி இருக்காது.”
“அப்பா”
“இன்னும் ஏதாவது இருந்தால். சொல்லு! நீ செல்லப் பிள்ளை! உனக்கு எஸ்டேட் நிலவரம் தெரியாது. உனக்கு மட்டும் சொல்லிவைக்கிறேன். ராதா இல்லாவிட்டால் இந்த எஸ்டேட் இல்லை. அவள் நினைத்தால் தொழிலாளர்களை தூண்டிவிட்டு ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே உருவாக்கிவிட முடியும். மொட்டைக் கடுதாசியை நம்பி மூளையைக் குழப்பிக் கொள்ளாதே!”
இந்தக் கட்டத்திலாவது’ உண்மையை உடைத்து– “ராதா ஏற்கனவே திருமணமானவள், ஆனந்து தான் அவளது புருஷன்” என்று சொல்லிவிட கீதா துடித்தாள். ஆனால் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சம் அவளைத் தடுத்து விட்டது. கீதா அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
“ஓரே செடியில் மல்லிகையும் ரோஜாவும் பூத்தால் கூட வியப்பில்லை; ஒரே வீட்டில் இரண்டு இளம் பெண்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் வியப்பு” என்று சொல்லிக் கொண்டே படுக்கைக்குப் போனார் சடையப்பர். ஆனால் அவரால் தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். எப்படியோ பொழுது விடிந்தது.
“மாமா!”
“என்ன மாப்பிளே!”
“நானும் கீதாவும் ஊருக்குப் புறப்பட்டுட்டோம்! வந்து மூன்று மாதமாகிவிட்டது. இங்கேயும் பனி அதிகமாகி விட்டது!”
“எனக்கும் அது தான் மாப்பிள்ளே யோசனை. கீதாவை நீங்கள்தான் பக்குவப்படுத்த வேண்டும். அவள் எதையும் வினயமாக எடுத்துக்கொண்டு விடுகிறாள்.”
“வதந்திகளை அப்போதைக்கு அப்போது களைந்து விடவேண்டுமென்று நினைக்கிறாள். இதைத் தவிர அவள் மனதில் வேறு கல்மிஷம் இருப்பதாகத் தெரியவில்லை மாமா!”
“ஒரு பெரிய ஆலமரத்தில் சில பழங்கள் வெதும்பி உதிர்கின்றன! இன்னும் சில அழுகிவிடுகின்றன; பலவற்றைப் பறவைகள் கொத்திக் கொண்டுபோய் விடுகின்றன. இதனாலெல்லாம் மரம் பட்டுப் போய் விடுமா? அதுமாதிரித்தான் பெரிய குடும்பங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வதந்திகள் உலாவலாம். அதற்காக என்னையே சந்தேகப்பட்டால் இந்த எஸ்டேட் உருப்படுமா மாப்பிளே!”
ஆனந்த் தலையைக் குனிந்து கொண்டே எதிரே நின்றான்.
இதற்குள்ளாக கீதா பெட்டி படுக்கையுடன் முகப்புக்கு வந்துவிட்டாள்.
“நாங்க ஊருக்குப் புறப்பட்டுட்டோம்பா”
“நல்லதம்மா!”
எஸ்டேட் பங்களா வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ராதாவின் இதயம் மட்டும் கல்யாண வீட்டுச் சமையலறையைப்போல் புகைமண்டிக் காணப்பட்டது. சடையப்பர் மட்டும் எதையும் மனதில் போட்டுக் கொண்டவராக்க் காணப்படவில்லை. வழக்கமான அவருடைய பணிகளில் எந்தத் தேக்கமும் உண்டாக வில்லை.
தோட்டக்காரனைக் கூப்பிட்டு “செடிகளுக்குப் பூச்சி மருந்து அடிச்சியா?” என்று கேட்டார்.
சமையல்காரனை வரச்சொல்லி தனக்கு வேண்டிய சாப்பாடுகளைச் சமைக்கச் சொன்னார்.
டிரைவரை அழைத்து மெர்க்காராவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் – பேரீச்சம்பழம் வாங்கி வரும்படி ஏவினார்.
மாலைவேளையில் டிரான்சிஸ்டரைத் திருகி, கர்னாடக சங்கீதம் கேட்கும் வாடிக்கையைக்கூட அவர் நிறுத்தவில்லை. இவைகளெல்லாம், சடையப்பர் உள்ளத்தில் எந்த உறுத்தலும் இல்லை என்பதை சிப்பந்திகளுக்கு ஜாடை. காட்டிக் கொண்டிருந்தன. ஆனால் ராதா? அவள் மழைத்துளியைப்போல் தூய்மையானவள். செம்மறியாட்டைப்போல் கூச்சமுள்ளவள். அவள் மனதுக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்தாள்.
“சார்!”
“என்ன ராதா!”
“முக்கியமான விஷயமாகத் தங்களைத் தனிமையில் சந்திகலாமென்று வந்திருக்கிறேன்!””
“எஸ்டேட் விஷயமா அல்லது ஏலக்காய் மார்க்கெட் விஷயமா?”
“இரண்டுமில்லை! என் விஷயமாக!”
“நீ தான் செக்ரெட்ரி, உன் பொறுப்புத்தான் இ ந்தத் தோட்டம்! உனக்கென்று என்ன தனியான விஷயம் ராதா?”
“மன்னிக்க வேண்டும் சார்! நான் ஊருச்குப் போய்விடலாமென்று சொல்லிவிட்டுப் போக வந்தேன் சார்!”
“என்ன ராதா, இப்படி திடீரென்று குண்டைத் தூக்கிப் போடுகிறாய்!”
“என்னாலே தான் கீதா கோபித்துக் கொண்டு போய்விட்டதாக எஸ்டேட் முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது. என்னாலே குடும்பத்திலே குழப்பம் வேண்டாம் என்று யோசிக்கிறேன்!”
“ராதா, குடும்பம் என்பது ஒரு குருவிக் கூடு மாதிரி. அதில் குழப்பமும், பின்னலும் இருந்தால்தான் கூடு வலுவாக இருக்கும், அவர்கள்தான் போய்விட்டார்களே பிறகென்ன குழப்பம்?”
“என்ன இருந்தாலும் கீதாவின் மனம் கசிய நான் காரணமாக இருக்கக்கூடாதல்லவா!”
“நீ தர்க்கம் செய்வது என்று இறங்கினால் நான் உடைத்துப் பேசவேண்டிவரும். பிறகு உன் மனம் தான் கசியும். நீ நிரபராதி என்பதற்கு விசாரணை தேவையில்லை. எனக்கே தெரியும்,”
“எனக்கு எல்லாம் தெரியும் சார்! அதனால்தான் உங்கள் மீது வீண்பழி வேண்டாம் என்று நினைத்து ஊருக்குப் போய்விடலாம் என்று தீர்மானித்தேன். நான் ஊருக்குப் போய்விட்டால் நீங்கள் என்னை விலக்கி விட்டுவிட்டதாக மற்றவர்கள் எண்ணி உங்கள் மீது செலுத்திய தவறான பார்வையை மாற்றிக் கொள்வார்கள். எனக்கும் நல்லது, உங்களுக்கும் பெருமை! “
“உன்னைவிட நான் மூத்தவன். என் அனுபவத்தில் கண்ட உண்மை – அவதூறுகளுக்குப் பயப்படுகிறவன் மனிதனாக முடியாது – என்பது தான்.”
“உங்கள் வரை இந்தத் தத்துவம் சரியாக இருக்கலாம். என்னைப் போன்ற ஒரு இளம் பெண்ணுக்கு இது ஒத்துவராத தத்துவம்; ஒரு பெண் மீது தொடர்ந்து சகதி அள்ளி வீசினால் பிறகு அவள் எத்தனை முறை குளித்தாலும் பிரயோசனமில்லாமல் போய்விடும்.”
“ராதா; இதற்கு மேல் உன்னோடு வாதாடிக்கொண்டிருக்க எனக்கு மனமில்லை. இதோ என் கையாலேயே எழுதித் தந்து விடுகிறேன்; அதை வாங்கிக் கொண்டு போய்விடு!” என்று சொல்லிக் கொண்டே ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஏதோ இரண்டு வரிகளை எழுதி ராதாவிடம் கொடுத்தார்.
ராதா அதை, நடுங்கும் கைகளுடன் வாங்கிப் பார்த்தாள்.
“அன்புள்ள ராதா, நான் உயிரோடிருக்கும் வரை நீ தான் இந்த சில்வர் ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி.
இப்படிக்கு சடையப்பர்.
என்று எழுதியிருந்தது. இதைப் படித்ததும் ராதாவின் கண்களில் மேகம் படர்ந்தது. அவள் ஊமையாகிவிட்டாள்.
அதற்குப் பிறகு ராதா, சடையப்பரை அடிக்கடி சந்திக்காமல் இருந்தாள். சடையப்பர் மீது அவளுக்கு மரியாதை கூடியது.
“அரளிப்பூவை யாரும் சூடிக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகத்தான் அதை ஆண்டவனே சூடிக் கொண்டுவிடுகிறார் என்பது என்னைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை தான். இல்லாவிட்டால் எங்கோ எப்படியோ வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியவள் இப்படி ஒரு ஸ்தாதனத்திற்கு வந்திருக்க முடியுமா?” என்று ராதா தனக்குள்ளே எண்ணி அடிக்கடி பூரித்துக் கொண்டாள்.
மதுரைக்குச் சென்ற ஆனந்தும் கீதாவும் எதையோ இழந்தவர்களைப்போல் விரக்தியடைந்திருந்தார்கள். தன்னுடைய முதலாவது திருமண விஷயம் கீதாவுக்குத் தெரிந்துதான் கீதா இப்படியெல்லாம் அவள் தந்தையிடம் வேகமாக நடந்து கொண்டாளோ என்ற சந்தேகம் ஒவ்வொரு நாளும் பேயுருவில் வந்து அவனை மிரட்டிக் கொண்டிருந்தது.
அதைப் போலவே கீதாவின் உள்ளத்திலேயும் – ராதா எஸ்டேட்டில் நீடித்தால் என்றாவது ஒரு நாள் ஆனந்த் ராதாவின் வலையில் விழுந்து விடுவான் என்ற ஒரு அச்சம் கல்வெட்டைப் போல் பதிந்து போயிருந்தது.
இரண்டு பேருடைய குழப்பங்களும் ஒன்றை ஒன்று தொடாமல் வெய்யிலும் மழையும் போலத் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்தன.
அன்று ஆனந்த் பரபரப்புடன் உள்ளே ஓடிவந்து கீதாவுடன் பேசினான்.
“கீதா!”
“ராதாவுக்கு சீட்டுக் கிழிந்து விடும்!”
“எப்படிச் சொல்கிறீர்கள்! அப்பா ஒரு நாளும் அவளைப் போகச் சொல்ல மாட்டார். அது நடக்கிற காரியமும் இல்லை!”
“ஒரு சாலஞ்ச்! நிச்சயமாக அடுத்த வாரமே, ராதா விரட்டப்படுவாள் என்கிறேன் நான்!”
“ஆருடமா ஆனந்த்!”
“இதோ பார்! இந்தப் பத்திரிகையைப் படி” என்று அலட்சியமாகத் தூக்கிப் போட்டான் ஆனந்த்.
கீதா பத்திரிகையை எடுத்துப் படித்தாள். அதில்,
“சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் சடையப்பரின் காமலீலைகள்”
என்ற தலைப்பில் சடையப்பரைப் பற்றியும் ராதாவைப் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவிரிவான செய்தி வெளியாகி இருந்தது!
கீதாவுக்குக் கண்கலங்கியது. உடல் படபடத்தது.
‘அப்பாவுக்கும் இப்படி ஒரு ஆசையா? நானே கூடத்தான் ராதாவைச் சித்தியாக்கிக்கொள்ள விரும்பினேன். ஆனால் அவள் ஆனந்தின் முதல் மனைவி என்று தெரிந்த பின்பு தான் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போதுகூட காலம் கடந்துவிட வில்லை. உண்மையைச் சொன்னால் ராதாவை அப்பா நிச்சயமாக டிஸ்மிஸ் செய்துவிடத்தான் செய்வார்! ஆனால் ஆனந்த், ‘இப்படி மனதுக்குள்ளே கீதா எண்ணிக் கொண்டிருக்கும்போது எஸ்டேட்டிலிருந்து அவளுக்குக் கெட்டியான கடிதம் வந்திருந்தது. கீதா அதை உடைத்துப் பார்த்தாள். அவள் தலையில் யாரோ நெருப்பை அள்ளிக் கொட்டுவதுபோல் இருந்தது.
அன்புள்ள கீதா, வீணான வதந்திகளையும், அவதூறான பத்திரிகைச் செய்திகளையும் தினம் தினம் படித்து உன் தந்தை செத்துப் பிழைப்பதைவிட அந்த வதந்திகளையே உண்மையாக்கி விடுவது நல்லதென்று தீர்மானித்து அடுத்த வெள்ளிக்கிழமை காலை தலைக்காவேரியில் நீராடிவிட்டு ராதாவை மணந்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். உனக்கு மனமிருந்தால் நீ உன் மாப்பிள்ளையுடன் புறப்பட்டு வந்து திருப்பூட்டு விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். உறவினர்கள் யாருக்கும் நான் சொல்ல வில்லை.
உன் தந்தை,
சடையப்பர்.
“ஆனந்த்!”
“என்ன கீதா!”
“நம் குடி முழுகிப் போய் விட்டது ஆனந்த்!”
“மாமா என்ன எழுதியிருக்கிறார்? ராதாவை டிஸ்மிஸ் செய்திருப்பார்! அவ்வளவுதானே!”
“அதுதான் இல்லை! அப்பா நம்மைத்தான் டிஸ்மிஸ் செய்து விட்டார்! ராதாவை மணந்து கொள்ளத் தீர்மானித்து விட்டாராம்!”
“ராதா இனிமேல் எனக்கு மதர்-இன்-லா! இல்லையா கீதா?”
எஸ்டேட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதிகாலையில் தலைக்காவேரிக்குப் புறப்பட்டுப் போய் அங்குள்ள ஊற்றுநீர்த் தேக்கத்தில் நீராடிவிட்டு, அகஸ்தியர் ஆலயத்தை வலம் வந்து அதற்குப்பின் மாலை மாற்றிக் கொள்வதாகச் சடையப்பர் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் நடந்தது வேறாகிவிட்டது. இரவோடு இரவாக சடையப்பருக்கு மதுரையில் இருந்து ஒரு தந்தி வந்தது. தன்னுடைய கடிதத்தைப் பார்த்துவிட்டு கீதாவும், ஆனந்தும் வாழ்த்துத் தந்தி கொடுத்திருப்பார்கள் என்றுதான் சடையப்பர் பெருமையோடு தந்தியைப்பிரித்தார். ஆனால் அது மரண ஓலை என்று படித்துப் பார்த்த பின்னர்தான் அவருக்குத் தெரிந்தது.
“என் மனைவி கீதா இறந்து விட்டாள்” என்று ஆனந்த் தந்தி கொடுத்திருந்தான்.
தந்தியைப் படித்ததும் சடையப்பருக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
உடனே அவரும், ராதாவும் மதுரைக்குப் புறப்பட்டார்கள். மதுரையில் ஆனந்தின் மாளிகை அலங்கோலமாகக் கிடந்தது.
“அன்புள்ள அப்பாவுக்கு, தாங்கள் என் பிரேதத்தைப் பார்க்க வந்தால் இந்தக் கடிதத்தைப் படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். என் கணவர் ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்திருக்கிறார். அவள் வேறு யாருமல்ல! ராதாதான். இந்த உண்மை எனக்குத் தெரிந்ததும் நான் எஸ்டேட்டை விட்டு வந்து விட்டேன். அதன் பிறகு தங்களின் திருமண ஏற்பாட்டைப்பார்த்தபின் இனிமேல் என்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று தீர்மானித்து நானே என் வாழ்க்கையை முடித்துக் கொண்டேன்.”
கீதாவின் இந்தக் கடிதத்தைப் படித்ததும் ராதாவையும், ஆனந்தனையும் ஏற இறங்கப் பார்த்தார் சடையப்பர். அவர்கள் இருவரும் கால் விரல்களால் தரையைக் கிள்ளிக் கொண்டிருந்தார்கள்.
சடையப்பர் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
“ராதா!”
“இந்த உண்மையைச் சொல்லிவிட நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால் நீங்கள், எல்லாம் எனக்குத் தெரியும் என்று என் வாயை அடைத்து விட்டீர்கள்”.
“பரவாயில்லை!” என்றுகூறி கீதா கல்லறைக்குள் போகுமுன்னரே, ராதாவை ஆனந்திடம் ஒப்படைத்தார் சடையப்பர்.
“மாப்பிள்ளே, ராதாவுக்கு இப்ப எதுவும் குஷ்டம் இல்லை!” என்று குத்தலாகவும் சொல்லிக்காட்ட அவர் தவறவில்லை.
– மிஸஸ் ராதா, வானதி பதிப்பகம், சென்னை. திருநாவுக்கரசு தயாரிப்பு