கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 6,941 
 
 

“சரிம்மா, சரி. நீ என்ன சொல்றியோ அப்படியே செஞ்சிடலாம். ஆனா இப்ப நீ பயப்படாதேயேன் ப்ளீஸ். அங்க பாரு, கொழந்த கூட இப்ப நல்லாத் தூங்கறான். தைரியமா இரும்மா”, நாற்காலியைக் கட்டிலருகே இழுத்துப் போட்டுக் கொண்டு கட்டிலில் அஜீத்தை அணைத்தவாறிருந்தவளை தலைகோதிச் சமாதானப்படுத்த முயன்றேன். மருத்துவமனை அறையின் மங்கிய விளக்கொளியிலும் பளீரென்றிருந்த படுக்கையின் வெண்மையின் பின்புலத்தில் நவீன ஓவியமாய்த் தெரிந்தாள்.

“நமக்கு இந்த ஊரே வேணாங்க, திரும்பிப் போயிடலாங்க. ப்ளீஸ்ங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. நாம இந்தியாவுக்கே திரும்பிப் போயிடலாங்க”, இதையே புலம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா, ஏதோ இந்தியா தான் உலகிலேயே மிகப் பாதுகாப்பான இடம் என்பது போல.

அதுவரை உலகை மறந்து தாயையும் மறந்து அழகாய் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு, கீழே விழுந்து தன் காலைச் சிராய்த்துக் கொண்டதுமே ‘அம்மா’ என்றழும் சின்னக் குழந்தையைப் போலத் தான் பவித்ராவும் எனக்குத் தோன்றினாள். நல்லதும் கெட்டதும் எல்லா இடத்திலும் தானே இருக்கின்றன. அப்படி யோசித்துப் பார்த்தால், பாதுகாப்பான இடமே உலகத்தில் இருக்க வழியில்லையே. இருந்தாலும், பவித்ராவிருந்த மனநிலையில் எந்தவிதமான விளக்கமும் விழலுக்கிரைத்த நீரேயானது.

அசாதரணமான தைரியசாலி. என் மாமனார் பெருமையாய் மகளின் வீரதீரத்தையெல்லாம் நிறைய சொல்லியிருக்கிறார். பயம் என்பதையே அறியாதவள் பயந்ததால், எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. ஊரிலிருந்து இன்னும் அவளுடைய பெற்றோர் பேசவில்லை. அவர்களுக்கெல்லாம் இன்னும் தகவல் சொல்லவில்லை. அவர்களுடனெல்லாம் பேசிவிட்டால் பவித்ராவைச் சமாளிப்பது மேலும் பெறும் பாடாகிவிடும். அதுவும் தன் அப்பாவின் குரலைக் கேட்டாலே போதும் அவளது சோகம் பன்மடங்காகி விடும். அப்பா பெண்ணாயிற்றே அவள்.

எனக்கே சமயத்தில் தைர்யம் சொல்லும் பவித்ரா, திடீரென்று மருண்ட மானைப்போலத் தன் கண்களை அஜீத்தை விட்டகற்றாமலேயே என்னுடன் பேசி என் பதிலையும் வாங்கினாள். குரலைத் தாழ்த்திப்பேசி அஜீத்தின் உறக்கம் கலையாமலிருப்பதில் அதிக அக்கறை காட்டினாள். அவனை எழுப்பிவிடாமல் வெகு ஜாக்கிரதையாக அவனுடைய அருகில் அவ்வப்போது படுத்துப்படுத்து எழுந்தாள்.

அஜீத் என்னவோ நடுராத்திரியில் எழுந்து, முன்னிரவில் நடந்ததன் சுவடே தெரியாமல் மருத்துவமனையில் கிடைத்த ‘டெடி பேர்’ ஐயும் ‘பில்டிங் ப்ளாக்’ கையும் வைத்து சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு நிலவிய மருத்துவமனையின் கிருமி நாசினியின் நெடியோ புதிய படுக்கையோ இல்லை மற்ற எதுவுமே கூட அவனுக்குப் பெரிய இடைஞ்சலாய் இல்லை. அப்போதும் கூட பவித்ராவின் கண்ணிலிருந்து பெறுகிய கண்ணீர் நிற்கவில்லை. அது என்று நிற்குமோ என்ற கவலை என்னுள் மீண்டும் மீண்டும் தலை தூக்கியது.

மறுபடியும் தூங்கிவிட்டு விடியற்காலையில் எழுந்த அஜீத் வழக்கம் போல தன் காலைக் கடனைக் கழிக்கும் போது வலியில் துடித்து அலறியபோது தான் பவித்ரா தானும் உடன் அழுதுதுடித்தாள். அவள் பட்டபாட்டைப் பார்த்த தாதி ஒருத்தி அவளுக்கே தான் ஏதேனும் ஆனதோவென்று நின்று விசாரித்து விட்டுப் போனாள். காய்ச்சல் வந்திருக்கிறதாவென்று சோதித்து விட்டுப் பின்னர், குழந்தையின் ஆசனவாயில் இருந்த புண்ணுக்கு தாதி மருந்தைத் தடவி, உள்ளுக்கும் வேறு மருந்து ஒன்றைக் கொடுத்து அவனைத் தூங்க வைத்து விட்டுப் போனார். அப்படியே பவித்ராவையும் தூங்க வைத்து விட்டுப் போகச் சொல்லலாமா என்று தவித்தது என் மனம்.

மருந்து மட்டுமில்லாமல் சோர்வும் சேர்ந்து அஜீத்தைச் சுலபமாகத் தூங்க வைத்தது. பவித்ரா மட்டும் தூங்குவதில்லை என்ற பிரதிக்ஞை எடுத்துக் கொண்டவள் போல அவனையே பார்த்தபடி சோகமே உருவாக உட்கார்ந்திருந்தாள். தன்னை மறந்து மூடும் கண்களை முரட்டுப்பிடிவாதமாய்த் திறந்து, தூங்கும் அஜீத்தின் மீது பார்வையை நிறுத்தினாள். தன் பார்வையை விட்டு அவன் அகன்றதால் தான் அவனுக்கு அந்நிலை ஏற்பட்டதாய் அவள் ஆழமாய் அழுத்தமாய் நம்பியது அவள் செயலில் தெரிந்தது. அவள் ஆசையாய் நேற்றிரவு வாங்கியிருந்த பொன்வளையல்கள் சீந்துவாரற்று அவளின் கைப்பையில் இருந்தன.

“கொழந்தைக்கு என்ன வலி வலிக்குமோ தெரியல்லையே, பாவம். இந்த வலியையெல்லாம் என்னால மட்டும் அவங்கிட்டயிருந்து எடுத்துக்க முடிஞ்சா ஹ¥ம்,.. “, மறுபடியும் ஓவென்று அழ ஆரம்பித்தாள். அழுது அழுது அவள் கண்கள் இரண்டும் சிவந்து கிடந்தன. மஞ்சள் கலந்த அவளின் முகம் கன்றிச் சிவந்திருந்தது. வழக்கமாய் அக்கண்களில் துள்ளும் குறும்பும் உல்லாசமும் இனி என்று திரும்பும்.

நடந்திருக்க வேண்டாம் தான். ஆனால், வர வேண்டாத வேதனை வந்து விட்டது குழந்தைக்கு. அதைக் கண்டு பெற்றோரான நாங்கள் பட்ட வேதனை பன்மடங்கு அதிகம்.ஆனால், பவித்ரா கரையானுக்குப் பயந்து வீட்டையே கொளுத்த நினைத்தது தான் எனக்கு மிகவும் வேதனையாயிருந்தது. நடந்ததையே நினைத்துக் கொண்டு மருகுவதில் இலாபம் தான் என்ன. ஆனால், பவித்ராவை எனக்கு நன்கு தெரியுமாதலால், அவளின் முடிவில் மாற்றம் இருக்குமென்று எனக்கு நம்பிக்கையே இல்லை. உடும்பின் பிடியைப்பழிக்கும் பிடியாடிற்றே அவளுடையது. அடுத்து குடி தூக்கும் படலம் நிச்சயம்.

சிறுவயதில்\லேயே மறைந்துவிட்ட என்னுடைய அப்பா மூலத்தினால் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா. காலை வேளைகள் ஒவ்வொன்றும் அவருக்கு ஒரு பிரசவம். பாவம், வியர்த்து விறுவிறுத்து அலறியபடிதான் கழிவறையைத் திறந்து கொண்டு வாசலில் வந்து விழுவார். சிறிது நேரத்திற்கு ஒரே அனத்தலாய் இருக்கும். அம்மா கைவேலையையெல்லாம் போட்டது போட்டபடி அவரருகே சிறிது நேரம் அமர்ந்து பேசி ஆசுவாசப்படுத்துவார்.

என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன், அவர் வேட்டியின் வட்டவட்ட ரத்தத் திட்டுக்களை. முதலில் அரண்டு பிறகு அதுவே அன்றாடக்காட்சியாகப் பழகியிருந்தது. அப்பா காலை அவஸ்தையை நினைத்தே உணவுட்கொள்ளக் கூட எப்போதும் பயந்தாரென்று பின்னாட்களில் அறிந்தேன். அம்மாவின் பரிந்துரையின் பேரில் அவர் கழிவறையின் உட்தாழ்ப்பாளைப் போட்டுக் கொள்ள மாட்டார். வெளியே அடையாளமாய் அம்மா ஒரு சிவப்பு வாளியை நீருடன் வைத்துவிடுவது வீட்டில் எல்லோரும் அறிந்த வழக்கம்.

அம்மாவும் சின்ன வெங்காயத்தை பச்சையாகத் தின்னச் சொல்லி, அதற்கு அப்பா குழந்தையாய் முரண்டு பிடித்து, பிறகு போனால் போகிறதென்று அரைகுறையாய் வதக்கி தினமும் பரிமாறி வந்தார். யார் நல்ல வைத்தியமென்று எதைச் சொன்னாலும் உடனே அம்மா நடைமுறைப் படுத்தி விடுவார். அம்மாவிற்கு மூலத்திற்கான பக்குவங்கள்

அத்துப்படியாகியிருந்தன. ஒன்றிற்கு இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்து பூரணமாகக் குணமாகவில்லை. ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் அஜீத்தின் இப்போதைய நிலை தெரிந்தால், எப்படி உடைந்துதுடித்துப் போவார்கள்.

இப்போது அஜீத்தின் நிலையும் ஒருவகையில் அதே நிலை தான். எனக்கு நன்றாகத் தெரிந்தது ஒன்றே முக்கால் வயதே ஆன அஜீத் படும் பாடு. ஜாடையில் மட்டுமே அவன் என்னைப் போலிருந்தான். சுண்டினால் ரத்தம் தெரிக்கும் நிறம், அவனுடைய அம்மாவைப் போல். தலை நிறைய சுருள் சுருளாகக் கருகருவென்று வளர்ந்திருந்த கேசம் அவனின் நிறத்தை மேலும் தூக்கியது. இறுகிய என் முகத்தை வைத்து பவித்ரா உண்மையான வேதனையும் வருத்தமும் எனக்கில்லை என்றே நினைக்கிறாளோ? குழந்தையின் நிலை எனக்கா புரியாது. அவளால் சுதந்திரமாய் அழ முடிந்தது. ஆணாய்ப் பிறந்துவிட்ட என்னால், வெளிப்படையாக அழமுடியவில்லை. அவ்வளவே.

பவித்ரா அஜீத்தை அப்படியே தூக்கி இரண்டாய் மடக்கிச் சுருட்டித் தன் வயிற்றுக்குள், இல்லையில்லை, நேராகக் கர்பப்பைக்குள்ளேயே திணித்துக் கொண்டு விடுபவள் போலத் தான் தவியாய்த் தவித்தாள். ஏதோ அங்கு மட்டுமே தன்னால் அவனைச் சரிவரப் பாதுக்காக்க முடியுமென்று நம்புபவள் போலவும் தன் கருப்பை தான் அவனுக்குப் பாதுகாப்பான இடமென்று அவள் மனத்திற்குள் நம்பினாற்போலவும்.அடிக்கடி நிஜத்தைத்தவிர்த்து சூன்யத்தையே வெறித்துப்பார்த்தபடியிருந்தாள். ஒரு புறம் அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தாலும் ஒரு புறம் துளி எரிச்சல் தோன்றவே செய்கிறது. அப்போது அவளுக்குத்தான் அஜீத்தைவிட அதிக கவனம் என்னிடமிருந்து தேவைப்பட்டது. இதே நிலை நீடித்தால், இவளுக்கே பைத்தியம் பிடிக்கும் இல்லை உடல்நிலை கெடும் என்று எனக்குத் தோன்றியது.

இரவு மௌண்ட் அல்வேர்னியாவில் கொண்டு வந்து அஜீத்தைச் சேர்த்தபோதே பார்த்த மருத்துவர் சொன்ன தகவல் நிச்சயம் அவள் சற்றும் எதிர் பாராதது. “இதை நீங்கள் நிச்சயம் போலிஸ¤க்குத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு குற்றம், உங்களுக்குத் தெரியுமா”, என்று சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

மருத்துவர் விவரித்ததும் தான் பவிக்கு உண்மையான காரணகாரியம் புரிந்தது. நினைத்தும் பார்க்க முடியாத கொடூரம் அவளை நிலைகுலைய வைத்தது. அவளுக்கு விஷயத்தை உள்வாங்கவே நேரமெடுத்தது. அகன்ற அவள் விழிகள் மேலும் விரிந்து உண்மையை உள்வாங்க முயன்று திண்டாடின.

“ஐயய்யோ,..இப்பிடிக்கூட நடக்குமாங்க,… இப்படிக்கூட மிருகங்க இருக்குமா நாட்டுல. ஐயோ நினைக்கவே முடியலையே. சின்னக்குழந்தை. அவனுக்குப் பேச்சு கூட இன்னும் ஒழுங்கா வரல்லையே “, குளிரூட்டப்பட்ட அறையில் பயத்திலும் குளிரிலுமாக நடுங்க ஆரம்பித்துவிட்டாள் பவி.

“மிருகம்னு சொல்லி மிருகத்தைக் கேவலப்படுத்தாத பவி. மிருகம் வயிற்றுப்பசிக்கு மட்டுமே வேட்டையாடும். நாட்டுல நடமாடும் சில இரண்டு கால் மிருகங்கள் தான் இதைப்போல செய்யும்.”

“நினைக்கவே பயங்கறமா இருக்கே” —-கேவினாள். மயங்கித் துவண்ட துணியாய் கீழே விழுந்தாள். உடனே மருதுவர் அவளுக்கு சிகிச்சையளித்துப் படுக்க வைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் மறுபடியும் புலம்பல்.

“பவிம்மா, நீ கவலபடாத. ரெஸ்ட் எடு. போலீஸ்ல ரிபோர்ட் பண்ணிடுவோம்மா. இன்னிக்கி மத்தியானமே செஞ்சுடுவோம் என்ன?”

“வேணாங்க. போலீஸ்கெல்லாம் போக வேண்டாம். எனக்கு இங்கேயிருந்து கிளம்பினாப் போதும். எங்க ரெண்டு பேரையும் நாளைக்கே சென்னைக்கி ஏத்தி விட்டுடுங்க. நீங்களும் சீக்கிரமே வந்து சேர்ந்துடுங்க.”

“இல்ல பவி,…வந்து”

“இல்லங்க. வேணாம். போலீஸ¤க்குப் போனா என்ன பெரிசா நடந்துடப் போகுது?”

“இல்லம்மா,…”

“இல்ல,.தெரியாமதான் கேக்கறேன்,… நடந்த கொடுமை இல்லன்னு ஆயிடுமா?”

“குற்றவாளி பிடிபட்டா,…இன்னொரு குழந்தைக்கு இது நடக்காம இருக்கும்.”

“இல்ல,..இல்ல..வேணாம். அஜீத்துக்கு நடந்தது…..” பேசமுடியாமல் ஓவென்று அழ ஆரம்பித்ததும்,

“சரி, போலீஸ் வேண்டாம், சரியா, நீ அழாத”, என்று அவளுக்கு இசைவாய்த் தலையாட்டினேன்.

சிங்கை வந்த புதிதிலிருந்து இந்த ஆறு வருடங்களில் ஊருடன் ஒன்றி, சட்டத்தையும் ஒழுங்கையும் சுத்தத்தையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தவள் கடந்த பத்து மணி நேரமாக முற்றிலும் மாறியிருந்தாள். எவ்வளவு ஆசையாய் நேற்று மாலை வீட்டை விட்டுக் கிளம்பினோம். காலையில் விடாமல் பெய்த வானம் வெளிறிக் குளுகுளுவென்றிருந்தது.

பட்டுப்புடவையாய் சேர்ந்து விட்டது. உடுத்தவே சந்தர்ப்பங்கள் இல்லை, இந்த முறை சாதாரணமான சேலையே தீபாவளிக்குப் போதுமென்று அவள் சொன்னாள்.

மதியம் கிடைத்திருந்த திருப்தியான வாரயிறுதித் தூக்கம் கொடுத்த குதூகலத்தில், “சரி, அப்ப ஏதாவது நகை வாங்கிக்கோ”, என்றதுமே, பவித்ரா சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் சொர்க்கமான சிரங்கூன் வட்டாரத்தில் இருக்கும் அந்தப் பலமாடிப் பேரங்காடிக்குப் போகலாமென்றாள். முதலில் சாதாரணப் புடவை ஒன்றையும் அவளுக்குப் பிடித்த ஒரு ஜோடிப் பொன்வளையல்களையும் முதல் மாடியில் வாங்கிய பிறகு, அவளே தான் எனக்கும் அஜீத்துக்கும் வழக்கம் போல ஆடைகள் தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.

அவளுக்கு இந்தக்கட்டத்தில் எப்போதுமே அதிக நேரமெடுக்கும். தனக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட மூன்று மடங்கு ரெடிமேட் பிரிவில் கழிப்பது அவள் வழக்கம். இரண்டாம் மாடியில் தொங்கிய துணிகளுக்கிடையே அஜீத் ஓடி ஓடி என்னோடு விளையாடினான். அவனைக் கட்டுப் படுத்தவே என்னால் முடியவில்லை. என்னையும் வேறு விளையாட வேண்டினான். ஒளிந்து கொள்ள வசதியாய்த் தொங்கிய துணிகளைக் கண்டதும் தேன் குடித்த நரியாய்த் துள்ளினான்.

சீக்கிரமே அவனை விடப்பெரிய சிறுவன், அவனைப்போல விளையாட வந்ததும் என்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்தினான். நான் பவித்ராவுடன் துணிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் ஐந்து நிமிடங்களுக்கு அஜீத் மீது என் கண் இருந்தது. சிறுவர்கள் பக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தனர்.

பவித்ராவுடன் பேசியபடியிருந்ததில் அஜீத்தின் மீது இருந்த என் கண் எப்போது அவனைவிட்டு விலகியது என்றே மறந்து போனேன். சட்டென்று திரும்பிப் பார்த்தால், அந்தச் சிறுவனையும் காணோம், அவன் குடும்பத்தையும் காணோம். பத்துப் பதினைந்து நிமிடங்களில் நிலைமை தலை கீழானது. அஜீத்தைக் காணாமல், அங்குமிங்கும் அலைந்து சிப்பந்திகளிடம் சொல்லி, வெளியே போயிருப்பானோ என்று நான் வெளியில் அக்கம் பக்கமெல்லாம் ஓடி ஓடி தேடிவிட்டு, உள்ளே தேடிக்கொண்டிருந்த பவித்ராவிடம் வந்தால் லேசாகக் கேவிக் கொண்டிருந்த அவள் கதற ஆரம்பித்தாள்.

“கொஞ்சம் நிதானமா இருங்க. கொழந்தை இங்க தான் இருப்பான். போன தீபாவளிக்குக் கூட இதே போல ஒரு கொழந்தையக் காணோம். இதே மாதிரி எல்லாரும் தேடினோம். கடைசியிலே பார்த்தா, அது கண் காணாத மூலையில அமைதியாத் தூங்கிட்டிருந்தது. உங்க பையனும் எங்கேயும் போயிருக்க மாட்டான். பயப்படாதீங்க”, கடையுரிமையாளர் தன் வேலையைப் போட்டு விட்டு வந்து எங்களுக்கு தைரியம் சொன்னார். அவருக்கு தன் கடையின் பெயர் கெடாமல் இருக்கவேண்டுமே என்ற அக்கறையாவது இருந்தது. சிப்பந்திகள் இருவரைத் தேடச் சொன்னார்.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து தேடினோம். அஜீத்துடன் விளையாடிய சிறுவனாவது கண்ணில் படுவானா என்று பார்த்தோம். ஹ¥ம்,… அவனுக்கு என்ன ஆனதோ என்ற கவலை அரிக்க ஆரம்பித்தது. மூளையைக் கிட்டத்தட்ட செயலிழக்கும் நிலைக்குத் தள்ளியது என் கவலை.

“பவித்ரா, எனக்கு டாய்லெட் போகணும். போய்ட்டு இதோ வந்துடறேன். நாம மறுபடியும் சேர்ந்து தேடுவோம். பயப்படாத. எல்லாரும் பாக்கறாங்க பாரு. கண்ணத் தொடச்சிக்க. கவலப்படாத, இங்கதான் எங்கயாவது இருப்பான். ஹ¥ம்,..இதோ வரேன்”, என்றபடி நான் போக, “நானும் வரேன் இருங்க”, என்றபடி பின் தொடர்ந்தாள்.

கழிவறையில் நாங்கள் போன காரியத்தை மறந்தோம். ஆண்கள் கழிப்பறையிலிருந்து நான் கூப்பிட்டதுமே பவியும் ஓடி வந்தாள். “பவி, அஜீத் இங்க இருக்காம்மா. ஓடி வா. உன்னோட ஹேண்ட் பேக்குல வாட்டர் பாட்டில் இருக்கில்ல, அதக்கொடு மொதல்ல”, அரை மயக்கத்தில் இருந்த அஜீத் அங்கே எப்படி வந்தானென்றே அப்போது எங்களுக்குப் புரியவேவில்லை. கீழே தரையில் பாதி உட்கார்ந்த பாதி படுத்த நிலையில் இருந்தான்.

அஜீத், “அப்பா, அஜ்ஜி ஆய் உவ்வா,..அம்மா, பூச்சாண்டி தொம்தொம் அச்சிஅச்சி,….. அம்மா, பூச்சாண்டி மூச்சா,.அஜ்ஜி ஆய் உவ்வா,, அம்மா உவ்வா. ஊதும்மா…” என்று தனக்கிருந்த வார்த்தை வளத்தில் சொல்லிக் கொண்டிருந்தான்.

வன்முறையாய் அவன் வாயைப் பொத்தியதால் ஏற்பட்ட தடித்த ஆண் விரல்களின் தடம் பட்டு அவனுடைய கன்னங்கள் வரிவரியாய் கன்றியிருந்தது. அஜீத்தின் பின் புறம் கால்ச் சட்டையில் திட்டுத்திட்டாய் ரத்தம். அவிழ்த்து பார்த்தால் பவித்ரா பயப்படுவாளே என்று எனக்குத் தட்டிய சந்தேகத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை. பவித்ராவை பயமுறுத்த வேண்டாமே என்று ஒன்றும் பேசாமலிருந்தேன்.

காலையில் வழக்கமாய் வரும் ரௌண்ட்ஸ¤க்கு வந்திருந்தார் டாக்டர் டான். “ஹீ ‘ஸ் ஓகே மிஸ்டர் ரமேஷ். நோ நீட் டு வொர்ரி. நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு மனசொடிஞ்சு போக ஒண்ணுமே இல்ல. அஜீத்துக்கு ஐந்தாறு வயதாகியிருந்தாக் கூட மனசுல ‘நினைவு’ தங்கி மனோரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம்னு பயப்படலாம். அந்த விதத்துல இப்போ அவனுக்கு சீக்கிரமே இந்தச் சம்பவம் மறந்து போகும். புண்ணும் கூட இன்னும் ஒரே வாரத்துல முழுக்க குணமாயிடும். நாளைக்கு மறுபடியும் நான் வந்து பார்க்கறேன்.”, என்று ஆறுதல் கூறினார் அசல் டாக்டராய். மனிதராய் அவருக்குச் சக மனிதருக்கு ஆறுதல் தர முடியுமா. அவர் கொடுக்கும் மருந்து அஜீத்தின் புண்ணை மட்டும் தானே குணப்படுத்தும் எங்களின் மனப்புண்ணுக்கு மருந்து?

– திசைகள்.காம், பெப்ரவரி 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *