மிந்நூறு ரூவா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,107 
 
 

பாலுவை வேஷ்டியில் வரக்கூடாதென்று கண்டிப்புடன் அவர் மகன் சொல்லி இருந்தான். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு பேன்ட் போட்டுக் கொண்டு வந்திருந்தார் பாலு. சாலையிலிருந்து சுமார் பத்து பதினைந்து அடி உயரத்தில் இருந்தது அந்த ஸ்டார் ஹோட்டலின் வாசல். பிரதான சாலையிலிருந்து வலப்புறம் பிரிந்த சறுக்கையில் லாவகமாக ஏற்றி, ஹோட்டலின் பிரம்மாண்ட வாசலின் முன்னே காரை நிறுத்தினான் அவர் மகன் சஞ்சய்.

அந்த முன்னிரவு நேரத்தில், ஹோட்டலின் வண்ணமயமான முகப்பும், பனைமர உயர கண்ணாடிக் கதவும், அதனூடே பிரகாசமாகத் தெரியும் பிரம்மாண்ட வரவேற்புக் கூடமும் பாலுவை பிரமிப்பில் ஆழ்த்தின. பாலுவுக்கு இதெல்லாம் ரொம்பவும் புதுசு. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடை பார்ப்பது போலத் தான்!”. அறுபத்தி நான்கு வருடங்கள் செய்யாமங்கலம் கிராமத்திலேயே கழித்து விட்டார், கல்லணைக்குப் பக்கத்திலே வருமே! அவர் பிறந்தது, வளர்ந்தது, பிறகு தேய ஆரம்பித்ததும் அங்கயே தான். வி.ஏ.ஓ வாக இருந்தார். அவருக்கு வரும் ஆவணி வந்தால் அறுபத்து ஐந்து முடிகிறது. அவர் மனைவி போன வருடம் மாசி மாதம் காலம் ஆகிவிட்டாள். அதற்குப் பிறகு, அவர் பையன் கேட்டுக் கொண்டதற்கிணங்க மெட்ராஸோடு வந்து விட்டார். இந்த ஒரு வருடமாகத்தான் புது ஊர்!

ஹோட்டலின் பிரம்மாண்டம் பாலுவுக்கு அர்த்தமற்ற நினைவுகளை மனக்கண் முன் கொணர்ந்தது. பல சமயங்களில் பிரம்மாண்டமான ஒரு விஷயத்தை நாம் காணும் பொழுது ஒருவித குறுகிய மனப்பான்மை நம்மில் குடிகொள்ளுவது இயற்கையே.

“தோட்டம், தொரவு, கிராம மக்கள், என் வீடு, குடும்பம் இப்படி கிணத்துத் தவளையாவே வாழ்ந்திருக்கேன். நான் பேன்ட் போட்டுண்ட நாட்கள் வெகு சில. இதுநாள் வரை வேஷ்டி தான். என் ஆத்துக்காரி பேன்ட் போட்டுக்கச் சொல்லி அடிக்கடி சொல்லுவாள். ம்.ஹ்ம்….மாட்டேனுடுவேன். தேவைகள் கம்மி. குருவி கூடு போலதொரு வாழ்க்கை. அப்படியே கழிச்சுட்டேன். என் பையன் அப்படியா? அமெரிக்கா, ஜப்பான்னு நெறய தடவை ஃபாரின் போய்ட்டு வந்துருக்கான். ஐ.டி. ஃபீல்ட்! ரொம்ப நன்னா படிச்சான். அதெல்லாம் சொல்லக்கூடாது, என்னை ரொம்பத் தரமாத்தான் பார்த்துக்கறான். அவனுக்கு நான்னா கொள்ளப் பிரியம். எனக்குந்தான்!”

மேற்படி தனக்குத் தானே யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் ஹோட்டலினுள்ளே நுழைந்தார் பாலு.

“ஏம்ப்பா சஞ்சு! சாவிய யார்ட்டயோ கொடுத்துட்டு வரியே, ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?” என்றார் அப்பாவித்தனமாக.

“இல்லப்பா! திஸ் இஸ் கால்ட் வேலட் பார்க்கிங். அவாளே கார பார்க் பண்ணிட்டு சாவிய பத்தரமா வச்சுருப்பா. நாம டின்னர் சாப்டுட்டு வாங்கிக்கலாம்”.

வித்தியாசமாக தடுக்கி விழுந்தாலே ட்ரீட் கேட்கும் உலகம் இது. இன்று சஞ்சய், ப்ராஜக்ட் மேனேஜராக பதவி உயர்வு பெற்றிருக்கிறான். சும்மாவா? அதனால்தான் இந்த ஸ்டார் ஹோட்டல் ட்ரீட். ஒரு பக்கம் தன் பையன் நல்ல நிலைமைக்கு வந்து தன்னை ஸ்டார் ஹோட்டலுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு வருவதில் பெருமிதம். இன்னொரு பக்கம் இந்த புது அனுபவம் கொடுத்த பயம். அவர் மனதில் இரண்டும் கலந்த ஒருவித உணர்வு – வார்த்தைகளால் வருணிக்க முடியாததோர் உணர்வு. மேலும் அவர் பார்வை, மனத்துள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அறுபத்தைந்து வயது தந்தை தன் மகனுக்கு மகனாக ஆகி இருந்தார்.

“என்னடா கண்ணா, இப்படி மூச்சு முட்டற மாதிரி இருக்கு”.

“அப்பாஆஆ! இதெல்லாம் ஸ்டார் ஹோட்டல். ஆம்பியன்ஸ் ரொம்ப நன்னா இருக்கணும்னு ரூம் ஸ்ப்ரே, செண்ட் எல்லாம் யூஸ் பண்ணுவா”.

“அதுக்காக இப்படியா? சரி அதை விடு, எதுக்கு இத்தனை காலி சோபா போட்டு வச்சுருக்கா?”

“வெயிட்டிங்க் ரூம், ரிசப்ஷன் ல, நெறய பேரு வரணுமோல்யோ…அதுக்குத்தான்” என்று மிக பொறுமையாக பாலுவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் சஞ்சய்.

ஹோட்டலின் உள்ளே சென்றவர், இங்கேயும் அங்கேயும் இந்த பொருளையும் அந்த பொருளயும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தார். குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல, அவர் மனம் பொருளுக்குப் பொருள் தாவிக் கொண்டிருந்தது.

“வாழ்க்கை நமக்கு நாம் பொறந்தது முதல் பாடம் சொல்லிக் கொடுத்துண்டே இருக்கு. பிறப்பு, இறப்பு புரியாத பாடங்கள்! பள்ளி, கல்லூரி பாடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுந்தான். நின்று விடுகிறது. நிறுத்தப்படுகிறது! ஆனால் வாழ்க்கை பாடம் தொடர்கிறது. மரணம் வரை நீள்கிறது. அந்த மாதிரி தான் இன்னிக்கு நான் கத்துக்கிற பாடம், அறுபத்தைந்து வயசிலும் கத்துக்கறேன்.”

பாலுவுக்குத் தெரிந்ததெல்லாம் ராமசந்திர விலாஸ் மட்டும் தான். செய்யாமங்கலம் கடைவீதி பஸ் ஸ்டாப் எதிரே வருமே! அலுவலகத்திலிருந்து வரும் பொழுது கடை வீதியில் இறங்கி பார்த்துக்கொண்டே வருவார். பார்த்துக்கொண்டே மட்டும் தான்! ஹோட்டல்களில் சாப்பிடுவதைக் கூடுமான வரை தவிர்த்து விடுவார். பாலுவின் மனதின் அடி ஆழத்தில் பெருத்த சோகம் ஒன்று குடி கொண்டிருந்தது. பாலுவின் தந்தை கடைசி காலங்களில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது அதே ராமச்சந்திர விலாஸில் தான் காப்பி ஆற்றினார். பத்து பதினைந்து வயது சிறுவனாக இருந்த பொழுது அதை மிக கேவலமாக எண்ணுவார் பாலு. ஆனாலும் அவருக்கு அவர் தந்தை மீதிருந்த அன்பும் மரியாதையும் துளிகூட குறையவில்லை. ஹோட்டல் என்றாலே ஒருவித வெறுப்பு. ஆனால் இந்த ஸ்டார் ஹோட்டலின் வனப்பு அந்த வெறுப்பை வென்றிருந்தது. மேலும் தனக்கு வயதாகிவிட்டதே என ஒரு விநாடி பாலுவை சிந்திக்கவும் வைத்தது. நாகரீக உலகம் தரும் அநாகரீக மயக்கம்! இதில் கட்டுண்டோர் மீள்வது மிகமிக கடினம்.

“அப்பா இங்க பார்த்தேளா? இது தான் ஆட்டோமேடிக் பாலிஷ் மஷின்”

“என்னது என்னது?”

“ஷூவ…இங்க பாரு, இந்த எடத்துல காமிக்கணும். அதுவே பாலிஷ் பண்ணிடும்”….

“அட கட்டால வைக்க…” என்று முகத்தை மேலே தூக்கி தன் மூக்குக்கண்ணாடியின் கீழ் பாகம் வழியாக ஆர்வமுடன் பார்த்தார்.

பாலுவை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, இரவு விருந்திற்காக தான் முன்னரே பதிவு செய்திருந்த மேஜை பற்றி விவரம் கேட்க சஞ்சய் சென்று கொண்டிருந்தான். அவன் மனைவியும் அவன்பின் சென்றாள். தன் பேத்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர், கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தபின் தன் பேத்தியுடன் சேர்ந்து அவரும் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

“ஹே கண்ணா! என்னடா இது? இப்படி இருக்கு…..ஹே அங்க பார்த்தியா?”

“தாத்தா இது என்ன பூ?”

“தெரியலயே குட்டி!”

“தொட்டு பார்த்து சொல்லேன்…”

“அய்யோ! அங்க இருக்கா பார்த்தியா அந்த மாமி….அப்புறம் நம்ம ரெண்டு பேரயும் திட்டுவா…”

தெற்கேயும் வடக்கேயும் பார்த்துக் கொண்டே நடந்தார். திடீரென ஒருவர் மீது லேசாக மோதினார். வழிந்தார். சுற்றிலும் முற்றிலும் பார்த்தார். தன் பேத்தி அதைக் கவனித்ததை உணர்ந்து அச்சமுற்றார். சமாளிக்கத் தொடங்கினார்.

“அங்க பாரு! ஹைய்ய்ய்ய்…எவ்வளவு பெரிய கடிகாரம்…”

“கடிகாரமா?”

“ஆமாம் இங்கிலீஷ்ல க்ளாக்…சொல்லு”

“க்ளாக்….அது என்ன தாத்தா?”

“எதைச் சொல்ற கண்ணம்மா?……”

அதற்குள் சஞ்சய் அங்கே திரும்பி வந்திருந்தான்.

“அப்பா! நம்ம டேபிள் எங்கன்னு கேட்டுண்டேன். பசிக்க ஆரம்பிச்சா சொல்லு….நாம சாப்பிட போக வேண்டியதுதான்…”

“சித்த நாழி இரேன்….இந்த ஹோட்டலோட அழக ரசிச்சுட்டு வரேன்…”

“ஓ.கே. நோ ப்ராப்ளம்….நானும் அவளும் இங்க அங்க தான் இருப்போம்….கூப்பிடு, சரியா?”

பாலு வருவதாக இல்லை. அவரை வலுக்கட்டாயமாக விருந்திற்கு அழைத்துச் சென்றான் சஞ்சய்.

அது ஒரு பெரிய செவ்வகக் கூடம்! கூடத்தின் நடுவில் ராட்சஸ சாண்டிலியர் விளக்கு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. சராசரி உயரம் கொண்ட மனிதன் ஒருவன் லேசாக எம்பினால் விளக்கைத் தொட்டுவிடலாம். சுவற்றில் ஆங்காங்கே ஹோட்டலுக்கு சிறுதும் சம்பந்தம் இல்லாத கலை ஓவியங்கள், ஒரு சில பெரிய மனிதர் படங்கள். அந்த கோடியில் ஒரு பழங்கால ஜீப் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நன்றாக துடைக்கப் பட்டிருந்த அந்த ஜீப் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. பிராகாசம் அதிகம் இல்லாத மஞ்சள் விளக்குகள். மெல்லிய இசை காதுக்கு இனிமைக் கூட்டிக்கொண்டிருந்தது. கூடத்தின் நடுவில் நீளமான பகுதி ஒன்றில் வகைவகையான உணவு பதார்த்தங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதன் இருபுறங்களிலும் ஆங்கங்கே இருக்கைகள். அதன் வலது ஓரத்தில் சூப், பச்சை காய்கறிகள், பன், பட்டர், ஜாம். இடது ஓரத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிட ஐஸ்கிரீம், பெயர் சரியாக தெரியாத பழங்கள், குளோப்ஜாமூன், கேக், இன்னபிற இனிப்புகள். எல்லா பதார்த்தங்களும் ஆறி விடக் கூடாதென கீழே நீராவி அடுப்பு சூடு செய்து கொண்டே இருந்தது. மனிதர்கள் சிலர் ஏற்கனவே வந்தமர்ந்து, இரவு விருந்தை ‘ஒரு கை’ பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாலுவைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லாத குறையாக அழைத்துக் கொண்டு, ஒவ்வொரு பதார்த்தமாக அறிமுகம் செய்து வைத்தான் சஞ்சய். பாலுவுக்கு சாப்பிட மனதே இல்லை. ஹோட்டலின் அழகு அவருக்கு பாதி வயிற்றை ரொப்பியிருந்தது.

“இதைப் பார்த்தியா! திஸ் இஸ் கால்ட் ப்ராக்களி….”

“என்னது? திருப்பி சொல்லு…”

“ப்ராக்களி…யூ.எஸ். ல ரொம்ப ஃபேமஸ்….வேக வச்சு வச்சுருக்கான்..அப்புறம் லெட்யுஸ் போட்டுக்கோ…இது..இதை….போட்டுக்கோ….ப்ரெட் எடுத்துக்கோ….போதும்….”

“போதுமா?”

“இல்லப்பா….அடுத்த ரவுண்ட் வந்துக்கலாம்” என்று அவரைப் பரிதாபமாக பார்த்து சிரித்தான்.

இருக்கைக்குச் சென்று உணவை ருசிக்க ஆரம்பித்தனர்.

“கண்ணாகுட்டி கீழ சிந்தாம சாப்பிடணும்…அப்பா! எப்படி இருக்கு…எல தழை எல்லாம்” என்று பாலுவையும், அவன் மகளையும் ஒருசேர கவனித்தான் சஞ்சய். பாலுவுக்கு மிக வித்தியாசமாக இருந்தது உணவு. “ஏ க்ளாஸ் பா!” என்று சொல்லி வைத்தார். நன்றாக இல்லை என்றால் சஞ்சய் கோபித்திக் கொள்வானோ என்ற பயம். ப்ரெட், ப்ராக்களி, கெட்சப் என எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒருவாறு தட்டைக் காலி செய்தார்.

“அப்பா! அப்பா! ஒருவாட்டி சாப்ட தட்டைத் திருப்பி எடுத்துண்டு போக கூடாது….அப்படியே வச்சுட்டு, வேற புது ப்ளேட் எடுத்துக்கோ….ஹோட்டல் எடிக்கெட்ஸ்…” என்றான் டெக்னாலஜிக்குப் பிறந்த சஞ்சய்.

ஒரு ரவுண்ட்,

இரண்டு ரவுண்ட்,

மூன்று ரவுண்ட்

என நன்றாக வெலுத்துக் கட்டிய பின், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன ஜுட்டா? ஆத்துக்கு களம்பலாமா?” என்று சஞ்சய் கேட்டான்.

“அப்பா அப்பா இன்னும் ஒரே ஒரு ஐஸ்கிரீம்” என்று கொஞ்சி கெஞ்சி கூத்தாடினாள் அவன் மகள்.

“ஒத விழும்….வந்ததுலேந்து ஐஸ்கிரீம் மட்டும் தான் சாப்டுண்டு இருக்க…சாதம், வெஜிடபிள்ஸ் எதுவும் தொடவே இல்லை….பல்லு வீணாப் போய்டும்…நா பில் சொல்லப் போறேன்” என்று அதட்டி விட்டு, எல்லோர் முகத்தையும் ஒருமுறை பார்த்தான்.
எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.

பில் வந்தது. சஞ்சய் க்ரெடிட் கார்ட் மூலம் கட்டினான்.

பாலுவுக்கு வயிறும் மனதும் நிரம்பி இருந்தது. பரம திருப்தி! இருந்தாலும் “பில் எவ்வளவு வந்துருக்கும்?” என்ற ஆதங்கம், அவர் மனதை அரித்தது.

“இந்த மாரி செலவு பண்ணி, டெக்கரேட் பண்ணி வச்சு இருக்கான்….எவ்வளவு இருக்கலாம்?” என்று யோசித்துக் கொண்டே கூடத்தை விட்டு வெளியே வந்தார்.
அவரால் பொறுக்க முடியவில்லை. “ஏண்டா சஞ்சு! தலைக்கு எவ்வளவு ரூவா?” என்று கேட்டார்.

“த்ரீ ஹன்ரட் ருப்பீஸ்”

“என்ன சொன்ன? திருப்பி சொல்லு”

“த்ரீ ஹன்ரட் ருப்பீஸ்ஸ்ஸ்ஸ்” என்று இழுத்துச் சொல்லிவிட்டு, அவன் மகளை “இங்க வா..டைம் ஆச்சு…ஆத்துக்கு போகணும்” என்று அதட்டினான்.
பாலுவுக்குத் தூக்கி வாரி போட்டது! ஐம்பது வருடம் ஆனாலும் அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருந்த நினைவுகள். பாலுவுக்கு அவர் தந்தையுடன் ஏற்பட்ட கடைசி தருணங்கள் – அவர் கட்டை வெந்தால் தான் அழியும்.
பாலுவுக்கு பதினைந்து வயதிருக்கும் அப்பொழுது. பாலுவின் தந்தைக்கு ஏதோ அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. வறுமை! எதுவும் செய்ய முடியாத நிலைமை. ஆனால், விதி தன் கடமையைச் செய்துவிட்டது. சிறு வயதிலேயே அவர் தந்தை காலம் ஆகி விட்டார். அன்று, பாலு, அவர் மாமா, வெங்குட்டு டாக்டர், பாலு தந்தையின் நெருங்கிய நண்பர் சாமா மாமா எல்லோரும் நின்றிருந்தார்கள்.
வெங்குட்டு டாக்டர் சொன்னது பாலு காதில் அசரீரி மாதிரி இப்போது ஒலித்தது “மிந்நூறு ரூவா இல்லைன்னு சொல்லிட்டான்டா…மிந்நூறு ரூவா இல்லைன்னு சொல்லிட்டான்டா….”

“எவ்வளவோ மன்றாடி கேட்டுண்டேன்டா சாமா…ஒரு மிந்நூறு ரூவா ஏற்பாடு பண்ணுடா, நானே மெட்றாஸ் கூட்டிண்டு போய், லண்டன்ல படிச்சுட்டு வந்த என் ஸ்நேகிதா மூலமா ஆபரேஷன் பண்ணி குணப்படுத்திடறேன்னு சொன்னேன்….மிந்நூறு ரூவா
இல்லைன்னு சொல்லிட்டான்டா….”

பாலுவால் தாங்க முடியவில்லை. ஐம்பது வருட ஏக்கம். அப்பாவை இழந்த சோகம்.

“டேய் கண்ணா! இங்க பாத்ரூம் எங்க இருக்கு?” என்று சஞ்சயிடம் கேட்டார்.

“அங்க பாரு? அந்த மூலேல ஆரோ மார்க் போட்டு இருக்கே, தெரியுதா?”

“ம்…..இதோ வந்துடறேன்…”.

பாத்ரூமுக்கு ‘கிடு கிடு’ வென நடையைக் கட்டியவர் மனதில் பயங்கர ஆத்திரம்.

“ஐம்பது ரூவா அறுபது ரூவாய்க்கு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்டா போறாதா? என்ன மடத்தனமான கலாச்சாரம் இது. அந்த காலங்கிறது வேற, இந்த காலங்கிறது வேறன்னாலும் இப்படியா காசை கரி ஆக்கறது? என் அப்பா எதுவும் நெனச்சுக்க மாட்டார். அவருக்கு நான்னா கொள்ளப் பிரியம். அப்பாஆஆ….அப்பாஆஆ…” என்ற பொழுது பாலுவின் கண்கள் துடித்தன. அவர் அப்பா அவர்கண் முன் தெரிந்தார்.

“பாலு கண்ணா! எப்படி இருக்க?” என்றார் பாலுவின் அப்பா.

“அப்பாஆஆ….அப்பாஆஆ…”

பாத்ரூமுக்குள் நுழைந்தவர், வாஷ் பேசினில் வயிறு காலியாகும் வரை வாந்தி எடுத்தார்.

“என்னால அதை ஜீரணிக்க முடியல்ல. எதுங்கறேளா? அதான், ‘மிந்நூறு ரூவா’…..”

– ஜனவரி 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *