மிட்டாய்க்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 673 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஒரு வியாபாரி. அவனுடைய வியாபாரம், விளம்பரம் எல்லாம் தனி மாதிரி. பிறர் கையை எதிர்பார்த்துப் பிழைக்கிறவன் அல்ல அவன். தானே உழைத்து வியாபாரம் செய்து சம்பாதிப்பவன். அவனுக்கு உதவியாள் தேவையே இல்லை.

முனிசாமியைத்தான் சொல்கிறேன்; அந்த மிட் டாய்க்கார முனிசாமி. உலகத்து எதிர்காலப் பிரஜை களாகிய குழந்தைகளே அவனுடைய வாடிக்கைக்காரர்கள். மிட்டாய்ப் பாட்டைப் பாடிக்கொண்டு போகும்போது அந்த விளம்பரம் எவ்வளவு குழந்தை களைக் கவர்ந்துவிடுகிறது!

பள்ளிக்கூடங்களைப்பற்றிய பல விஷயங்கள் அவனுக்குத் தெரியும்; படிப்பைப்பற்றி அல்ல. ‘சங்கரன் செட்டியார் தெருவில் மேற்கே பார்த்து இருக்கும் சிவப்புப் பள்ளிக்கூடத்தில் நூறு பிள்ளை கள் படிக்கிறார்கள்; அவர்களிலே பெண் குழந்தைகளும் உண்டு’ என்று அவன் கணக்கு ஒப்பிப்பான். தன் சொந்த அனுபவத்தில் அவன் உணர்ந்தது இந்தச் சமாசாரம்.

சரியாக ஒன்பது மணிக்குத் தன்னுடைய மிட் – டாய்த்தட்டோடு பள்ளிக்கூடத்து வாசலில் வந்து நிற்பான். பத்தரை பதினொரு மணி வரையில் வியாபாரம் நடக்கும். அப்பால் கொஞ்சம் வெளி வியா பாரத்தைக் கவனிக்கப் புறப்படுவான். வெயில் 108 டிகிரி உறைக் கட்டுமே, அவனுக்கு லக்ஷயமா என்ன? அவனுடைய மிட்டாய் உருகிவிட்டால் கூட அவனுடைய முயற்சி இளகாது. ஒரு மணி அடிப் பதற்கு ஐந்து நிமிஷத்திற்கு முன் பள்ளிக்கூடத்து வாசலில் மறுபடியும் பிரசன்னமாவான். குழந்தை களுக்கு அது சாப்பாட்டு நேரம். ஒரு மணி முதல் இரண்டு மணி வரையில் அவனுடைய வியாபாரம் முடுக்காக நடக்கும். இரண்டரை மணிக்கு மறுபடி நகர்வலம் வருவான். கிடைத்த மட்டும் லாபமென்று தெருத் தெருவாகச் சந்து சந்தாகச் சுற்றுவான். சரியாக நாலு மணிக்குப் பள்ளிக்கூட வாசலில் ஆஜ ராகி விடுவான். பிள்ளைகள் நாலரைமணி அடித்ததும் பள்ளிக்கூடச் சிறையிலிருந்து வெளி வருவார்கள். போகிற போக்கில் வாயில் அடக்கிக்கொள்ள ஒரு வெங்காயமிட்டாயோ, ஒரு தேங்காய் மிட்டாயோ வாங்குவார்கள்.

முனிசாமி ஒருநாள் முழுவதும் ஒரே பள்ளிக் கூடத்தில் வியாபாரம் செய்வதும் உண்டு; ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு பள்ளிக்கூடமாக முறை வைத்துப் போவதும் உண்டு. எப்படியோ சாயங்காலத்துக்குள் அவனுக்கு எட்டணாக் காசு – எல்லாம் காசுதான், அதிலும் தம்பிடிகளே முக்கால் வாசி – கிடைத்துவிடும். அதைக் கொண்டு போவான் வீட்டுக்கு.

முனிசாமிக்கு இந்த வியாபாரம் நிரந்தரமாக் நடந்து வந்தது. குழந்தைகளுக்கு லீவு நாள் வந்தால் மட்டும் அவனுக்கு வியாபார மந்தம் நேரும்; அன்றைக்கு அலைச்சலும் அதிகமாக இருக்கும். வியாபாரத்திற்கு ‘லீவு’ விட முடியுமா? வயிற்றுக்கு ‘லீவு’ கொடுத்தால் அது முடியும்.

பிச்சைச் சோற்றில் சனி புகுந்தாற்போல இந்த வியாபாரத்தில் போட்டி உண்டாகிவிட்டது. முனி சாமி மிட்டாயை மாத்திரம் வியாபாரம் செய்வதில் பழைய லாபத்தைக் காணவில்லை. புதிய புதிய சரக்குகளை அவன் விற்கத் தொடங்கினான். கடலை உருண்டை, எள்ளுருண்டை, மாங்காய்க் கீறு இவையெல்லாம் அவன் தட்டில் இடங்கொண்டன.

ஞாயிற்றுக்கிழமைகளில் தன் வீட்டிலேயே ஒரு வாரத்துக்கு வேண்டிய மிட்டாய்களைச் செய்வான். அவன் மனைவி உதவி செய்வாள். அவள் நாலு வீடுகளில் வாசல் பெருக்கியும் பாத்திரம் தேய்த்தும் மாசம் நாலு ரூபாய் சம்பாதித்தாள். இரண்டு பேரும் ஏதோ கிடைத்ததை வைத்துக்கொண்டு கஞ்சியோ கூழோ காய்ச்சிக் குடித்து இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களுடைய அன்புக்கு அடையாளமாக ஓர் ஆண் குழந்தை பிறந்து வளர்ந்து வந்தது.

பள்ளிக்கூடங்களில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. ஒன்றரைமாதம் அந்தக் கூடு களில் குழந்தைகளின் சலசலப்புச் சத்தம் கேளாது. அந்த இடத்தில் இருந்த அழகு, ஜீவன் மறைந்து நின்றது. முனியனுடைய தோற்றமும் அதன் வாசலில் காணவில்லை.

பள்ளிக்கூடம் இல்லாத இந்த மௌனநிலையை அவன் வெறுத்தான். குழந்தைகளுக்கு இந்த விடுமுறை தூக்கத்தைப் போன்ற ஓய்வைக் கொடுத் தது. முனிசாமியோ மரணத்தைப் போன்ற ஓய்வாக எண்ணினான். அவன் வாழ்க்கையில் நிச்சயமாகக் குறிப்பிட்ட காலங்களில் நேரும் கண்டங்கள் அந்த விடுமுறைக் காலங்கள். மற்ற நாட்களெல்லாம் அவனுக்கு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அந்த விடுமுறை நாட்களோ மெல்ல மெல்ல அடிமேல் அடி வைத்து அவனைப் பார்த்துப் பார்த்துப் பயமுறுத்திக் கொண்டே சென்றன.

அந்தக் காலங்களில் வெயில் அதிகம்; அவன் அலைச்சலும் அதிகம். சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது அவன் உள்ளம் வதங்கி, உடல் வதங்கி வருவான்.

‘எப்படியோ இந்த வருஷம் கோடை விடுமுறை கழிந்துவிடும்; இன்னும் ஒரு வாரந்தானே இருக் கிறது? எங்கேயாவது கடன் வாங்கிச் சர்க்கரையும் எள்ளும் கடலையும் வாங்கி மிட்டாய்களையும் மற்றப் பண்டங்களையும் செய்து வைத்துக்கொள்ளவேண் டும்’ என்று அவன் நினைத்தான். பணம் யார் கொடுப்பார்கள்? அவன் மனைவி, தான் வேலை செய்யும் வீடுகளில் ஒரு வீட்டு அம்மாவிடம் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு வந்தாள். சர்க்கரை முதலிய சாமான்களை வாங்கிவந்து புதுவருஷ வியாபாரத்துக்காகச் சரக்குகளைத் தயார் செய்யத் தொடங்கினான்.

குழந்தைக்கு இரண்டு வயசு ஆகிறது. எதைக் கண்டாலும் வாயில் போட்டு மதிப்பிடும் பருவம்.

அதற்கு அந்த மிட்டாயில் சிந்தினதைக்கூடக் கொடுக்க அவனுக்கு மனம் வராது. மிட்டாய் தின்னும் அந்தஸ்து அதற்கு இல்லையென்பது ஒரு காரணம்; அதற்குமேல் வேறொரு காரணமும் உண்டு. ‘ஒருநாள் கொடுத்துப் பழக்கம் பண்ணிவிட்டால் பிறகு பெரிய தொந்தரவாகிவிடும்’ என்று அவன் சொல்லுவான். ஆனாலும் குழந்தைக்கு இந்தக் காரணங்களின் நியாய அநியாயங்கள் தெரியுமா?

“அப்பா, எனக்கு ஒரு மிட்டாயி” என்று சிணுங்கும் குழந்தை.

“ஓதைதான்” என்று சீறிவிழுவான் முனிசாமி. மற்றக் குழந்தைகளிடம் இனிமையாகப் பேசி வியாபாரம் செய்யும் அவனுக்குத் தன் குழந்தையினிடம் பிரியமாகப் பேசத் தெரியவில்லை. ‘அவனுக்கு அந்தக் குழந்தைகள் வாடிக்கைக்காரர்கள்’; இந்தக் குழந்தையோ தன் அதிகாரத்துக்கு அடங்கியிருக்கவேண்டிய குட்டி அடிமை. அப்படி அவன் நினைத்தானோ இல்லையோ, அவனுடைய அன்றாடங் காய்ச்சிப் பிழைப்பு அவனை அப்படி ஆக்கிவிட்டது.

“கொளந்தைக்கு என்னா தெரியும்? அதுங்கிட்டே வள்ளுன்னு உளுறயே!” என்று அவன் மனைவி கேட்பாள்.

“போடீ களுதெ; இவனுக்கு மிட்டாயி இல்லாமத்தான் கொறைஞ்சு போச்சோ!” என்று உறுமுவான்.

‘அட பாவி; கொளந்தைக்குக் குடுக்காமே என்னத்தைச் சேத்து வச்சுட்டோம்’ என்று அவள் மனத்துக்குள் முனகுவாள்.

குழந்தை இருவருக்கும் இடையே நின்று கொண்டு அழும். அந்த அழுகை தாயின் வயிற்றைக் கலக்கும். தகப்பன் கண்ணில் தீப்பொறியை உண்டாக்கும். ஆனாலும் குழந்தையை அவன் அடிக்க மாட்டான். அவ்வளவு தூரம் முரடனாகப் போகவில்லை அவன்.

அன்றைக்குப் பள்ளிக்கூடம் திறக்கும் நாள். முனிசாமி காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டான். புதுவருஷப் பிறப்புப் போல அன்று அவனுக்கு இருந் தது. அவன் தன் மிட்டாய்த்தட்டுக்கு வர்ணக் கடுதாசி வாங்கி ஒட்டி அழகு செய்திருந்தான். தான் பண்ணியிருந்த மிட்டாயிலிருந்து அந்தத் தட்டு நிறைய எடுத்து வைத்தான். “சாமீ, கடவுளே, இன்னிக்குத்தான் ஆரம்பம். நல்லா விக்கணும்” என்று திருநீற்றை அள்ளி இட்டுக்கொண்டான். தலையில் சும்மாடு கட்டிக்கொண்டான். சிறிய இரும்பு மணியை முதல் நாள் எடுத்து வைக்க மறந்திருந்தான். அதை எடுத்து அதற்கும் தட்டுக்கும் குங்குமம் இட்டான்.

கொஞ்சம் கஞ்சியைக் குடித்துவிட்டுக் கை கழுவிக்கொண்டிருந்தான். அந்தச் சில நிமிஷத்தில் குழந்தை மிட்டாய்த் தட்டுக்குப் போய்விட்டது. அதிலிருந்து ஒரு மிட்டாயை எடுத்து வாயில் வைத்து ருசி பார்த்துக்கொண்டிருந்தது.

முனிசாமி வந்து பார்த்தான்; “அட பாவி மகனே ” என்று சொல்லிக்கொண்டு அந்த இளங்குழந்தையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான். அந்தத் தட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

குழந்தை அங்கேயே சுருண்டு விழுந்து வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. வாயில் பாதியும் கையில் பாதியும் இருந்த மிட்டாய் அவன் அறைந்த அறையில் கீழே விழுந்துவிட்டது. உயிர் துடிக்க அது கத்திக் கொண்டிருந்தது.

அதன் தாய் ஓடி வந்தாள்; குழந்தையை வாரி எடுத்தாள். “ஐயோ! படுபாவி, கொளந்தையைக் கொன்னுட்டானே!” என்று புலம்பினாள், “என் கண்ணே; சாமிக்குக் கண் இல்லையா? உன்னை என் பாழும் வயித்திலே ஏன் பொறப்பிச்சார்? எங்கேயாவது தோட்டி வீட்டிலே பொறந்திருந்தாலும் சௌக்கியமாக இருக்கலாமே. இந்த மனிச மிருகத்தினிடம் வந்து சிக்கிக்கொண்டாயே. எல்லாம் நான் பண்ணின பாவம்! ஐயோ! முதலியார் வூட்டுக்குக் கொண்டு போனபோது ‘ராசாவாட்டம் இருக்குது கொளந்தை; சாக்கிரதையாப் பாத்துக்கோன்னு’ நேத்துத்தானே அந்த அம்மா சொன்னாள்? என் ராசா, உன்னை அடிக்க எப்படித்தான் அந்தப் பாவிக்கு மனசு வந்ததோ!” என்று அழுது நைந்து உருகினாள். அவள் உள்ளம் படபடத்தது; தேகம் பதறியது. அவள் ஏழையாயிருந்தால் என்ன? ஒரு தாயின் ஹிருதயத்தில் ஏழையென்றும் பணக்கார னென்றும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?

முனிசாமி வெகு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறான்; ‘இன்று காலையில் அபசகுனம் மாதிரி அந்தப் பாவிமகன் இதிலே கைவைத்தானே! தரித்திரக் கை பட்டுவிட்டதே. இன்றைக்கு வியாபாரம் ஆகுமோ, ஆகாதோ!’ என்று அவன் உள்ளம் சிந்தித்தது. அடுத்தபடி, ‘என்ன இருந்தாலும் குழந்தையை அப்படி அடித்துவிட்டுத் திரும்பிப்பாராமல் வந்திருக்கக்கூடாது. பாவம்! அது என்ன பண்ணும்? அதற்கு ஒன்று கொடுத்தால் குறைந்து விடுமா?’ என்று ஒரு நினைவு எழுந்தது. ‘குழந்தை களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மகாராஜா வீட்டுக் குழந்தையானாலும் அடங்கி நடக்க வேண்டும்’ என்றது ஒரு நினைப்பு. ‘இந்த வயசில் அதற்கு என்ன தெரியும்? என்ன அடங்காமல் நடந்து விட்டது? ஐயோ ! அந்தச் சிறு குழந்தையிடம் அன்பு காட்டாமல் ஆயிரம் குழந்தைகளுக்கு மிட்டாய் தருகிறோமே!’ என்றது ஓர் எண்ணம்.

இப்படி எண்ண அலைகள் அவன் உள்ளக்கடலில் மோதிக்கொண்டிருந்தன. ஒரு சந்து வழியே நடந்து போய்க்கொண்டிருந்த அவனுக்கு எதிரில் திடீரென்று ஒரு மோட்டார் வெகு வேகமாக வந்தது. சட்டென்று அவன் ஓரமாக ஒதுங்கினான். அங்கே இருந்த பெரிய கல் ஒன்று தடுக்கியது. படாரென்று கீழே விழுந்தான். கார் அவனைத் தாண்டிப் போய் விட்டது. அவன் தலையிலிருந்த மிட்டாய்த்தட்டு, பக்கத்திலிருந்த சாக்கடையில் விழுந்தது. முண்டாசு ஒரு புறமும் மணி ஒரு புறமும் விழுந்தன.

முனிசாமி எழுந்தான். கார்க்காரனை வாயில் வந்தபடி திட்டினான். முண்டாசையும் மணியையும் எடுத்தான். மிட்டாய்த் தட்டைப் பார்த்தான்.

மிட்டாய் அவ்வளவும் சாக்கடையில் விழுந்து கிடந்தன. தட்டை மாத்திரம் எடுத்தான். எந்தக் கல் தன்னைத் தடுக்கிவிட்டதோ அந்தக் கல்லின் மேல் உட்கார்ந்தான். நல்ல வேளையாக உடம்பில் காயம் படவில்லை. ஆனால் அவன் உள்ளத்தில் காயம் பட்டது.

தன் குழந்தைக்கு ஒரு துணுக்குக் கூடக் கொடுக் காமல் காப்பாற்ற எண்ணிய மிட்டாய் அவ்வளவும் அவன் கண்முன் சாக்கடையில் கிடந்தன. அவற்றில் ஒரு துணுக்குக்கூடப் பிரயோசனப்படாது. பேயறையாக அறைந்து குழந்தையை வீழ்த்திவிட்டு வந்தான் அவன்; இங்கே கடவுள் அவனையே வீழ்த்திவிட்டார்; அவன் பாதுகாத்து வந்த மிட்டாய் முழுவதும் சாக்கடைக்கு உணவாயிற்று.

அவன் முழு மிருகமாயிருந்தால், ‘படுபாவி தொட்டான்; இப்படி ஆயிற்று’ என்றுதான் எண்ணியிருப்பான். அவனிடமும் மனிதத்தன்மை இருந்தது. பச்சாத்தாபம் உள்ளத்தில் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தது; தந்தைக்குரிய அன்பு எங்கோ இடந்தெரியாமல் அழுக்கேறி இருந்தது.

அந்தச் சாக்கடைத் தீர்த்தக் கரையில் தன்னைத் தண்டித்த கல்லாகிய ஆஸனத்தில் உட்கார்ந்து உள்ளத்தைத் திறந்து பார்த்தபோது அவனுக்கு ஞானோதயமாயிற்று; மங்கிப் புதைந்திருந்த இயல்புகள் அவனுக்குத் தோன்றின. மனிதத் தன்மை, பச்சாத்தாபம், அன்பு எல்லாம் புறப்பட்டன.

‘ஐயோ, நான் எத்தனை பாவி! அந்த இளங்குழந்தையை அறைந்துவிட்டு வந்தேனே; நான் கொண்டுவந்த மிட்டாய் அவ்வளவும் இந்தச் சாக்கடையில் விழுந்துவிட்டதே; இப்போது யாருக்கு என்ன பிரயோசனம்? அந்தக் குழந்தைக்குக் கொடுத்திருந்தால் அந்த ஒன்றாவது உபயோகப்பட்டிருக்குமே. அந்தக் குழந்தை உயிரோடு இருக்கிறதோ, இல்லையோ. நான் ஆத்திரத்துடன் அறைந்தேன். படாத இடத்தில் பட்டிருந்தால்’

இப்படி நினைத்துப் பார்க்கும் போது அவன் உள்ளம் துக்கத்தால் குமுறியது. கண்களில் நீர் ததும்பியது. தலையில் அடித்துக்கொண்டான். ‘சாமி கும்பிட்டுத் திருநீறு இட்டுக்கொண்டேனே; அந்தக் குழந்தை தெய்வத்துக்குச் சமானம் அல்லவா? அதை அறைந்து போட்டுவிட்டு வரலாமா? சாமிக்குத்தான் பொறுக்குமா? பொறுக்கவில்லை. அதனால்தான் அவ்வளவையும் சாக்கடையில் சாய்த்து விட்டார். எனக்கு நன்றாக வேண்டும்’ என்று இரங்கினான்.

‘முதலில் குழந்தை என்ன ஆயிற்று என்று பார்க்க வேண்டும்’ என்ற வேகம் ஏற்பட்டது. முண்டாசுத் துணியை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மணியையும் வெறுந்தட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

“ஏன், அதுக்குள்ளாற வந்துட்டே? வியாபாரம் ஆயிடுத்தா?” என்று வினவினாள் தாய். அழுது அழுது சோர்ந்துபோன குழந்தை அவள் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கன்னத்தில் விரல்களின் சுவடும் அதன்மேல் ஓடிய கண்ணீரின் சுவடும் முனிசாமியின் கண்ணில் பட்டன.

“மிட்டாயெல்லாம் கொட்டிப் போச்சு” என்று சோர்ந்த தொனியோடு அவன் சொன்னான்.

‘ஐயோ, இந்தக் குழந்தை தொட்டதனால் வந்ததென்று, இருக்கிற உயிரையும் வாங்கிவிட்டால் என்ன பண்ணுகிறது!’ என்ற பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. அதனால் அவன் குழந்தையை அடித்ததைப்பற்றிச் சொல்லி அவன் கோபத்தைக் கிளப்பக்கூடாது என்று எண்ணிப் பேசாமல் இருந்து விட்டாள். அவளுடைய மௌனம் அவன் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது. பேசாமல் தட்டைக் கீழே வைத்துவிட்டுச் சோர்ந்துபோய் மூலையில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை; அவளும் பேசத் துணியவில்லை.

சிறிது நேரம் இந்த மௌனம் நிலவியது. வெளியில் மௌனம் சாதித்தாலும் அவன் உள்ளத்தில் புயலும் இடியும் எழுந்தன. ஏதாவது பேசிச் சமாதானம் செய்துகொள்ளாவிட்டால் அவன் ஹிருதயமே வெடித்துவிடும்போல் இருந்தது.

“தூங்குதா?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“ரொம்ப அளுதானோ?”

“அதெல்லாம் ஏன் விசாரிக்கறே?”

“அடி பலமாப் பட்டுதோ?”

“பலமா இருந்தா என்ன? இல்லாட்டிப் போனா என்ன?”

“காயம் கீயம் பட்டிருக்குதோ?”

கேள்விமேல் கேள்வி வரவே அவள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பீறிக்கொண்டு கிளம்பியது. “சீ, நீயும் ஒரு மனிசனாட்டம் பேச வந்துட்டயே; கொளந்தையை ஒரே அடியாகக் கொன்னு போட்டுடறதுதானே? இப்ப விசாரிக்க வந்துட்டயே? சாமி உனக்குக் கூலி கொடுக்காமல் போவாது.” அவளுக்குப் பேச்சு வரவில்லை; துக்கம் தொண்டையை அடைத்தது. கோவென்று அழத் தொடங்கினாள்.

அவனுக்கும் அழுகை வந்துவிட்டது; அடக்கிக் கொண்டான்; “இந்தா, இந்தப் பாரு; நான் சொல்றதைக் கேளு; என்ன? ஒன்னெத்தான். இனிமே சாமி சத்தியமா அந்தக் கொளந்தையை நான் தொடறதே இல்லை. நான் படுபாவி. சாமி எனக்குக் கூலி குடுத்துட்டார். இந்தா, அளாதே, எனக்குக்கூட அளுகை வறது. என்னை அந்தச் செருப்பாலே அடி. பட்டுக்கறேன். இனிமே இந்தப் புத்தி வேண்டாமின்னு சொல்லி அடி” என்று அவனும் விம்மலானான். இந்த ஆரவாரத்தினிடையே குழந்தை கண்ணைத் திறந்து பார்த்தது.

அவன் எழுந்தான். மிட்டாய் வைத்திருக்கும் கூடையைத் திறந்தான். கைநிறைய எடுத்துக் கொண்டு வந்து அந்தக் குழந்தையின் கையில் கொடுத்தான்; “என் கண்ணு, இனிமே, தினம் உனக்குத் தான் முதல் மிட்டாய்” என்று சொல்லி அதன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். எந்தக் கன்னத்தில் அவன் கையினால் காலையில் அறைந்தானோ, அதே கன்னத்தில் அவன் இதழ் முத்தமிட்டது. அடுத்தபடி அவளும் முத்தமிட்டாள். அந்த இரண்டு முத்தங்களும் மருந்து போல உதவின. அந்தக் குழந்தையின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. கையில் இருந்த மிட்டாயைக் கடித்துக்கொண்டே தந்தையையும் தாயையும் மாறி மாறிப் பார்த்தது; என்ன தோன்றிற்றோ தெரியவில்லை; களுக்கென்று சிரித்தது ; “சிரிக்கிறதைப் பார், போக்கிரி” என்று சொல்லிக்கொண்டு அவன் ஒரு பெருமூச்சுவிட்டான் அப்பாடி! இப்போது என்ன ஆறுதல்! என்ன ஆனந்தம்!

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *