மாவு மிஷின் தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 10,295 
 

மாவு மிஷினின் சத்தம் காதைப் பிளந்தது. கனகராஜ் தாத்தா பல்லைக் கடித்தபடி மிஷினை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது. நல்ல கறுத்த உடல். மிஷினில் உட்காருவதற்கு முன் கழற்றப்பட்ட சட்டை மாவு ஆலை மாலை ஏழு மணிக்கு மூடப் படும் போது தான் மீண்டும் அவர் உடலில் ஏறும். காலை எட்டு மணிக்கு வேலையை ஆரம்பித்தார் என்றால் இரவு ஏழு ஏன் சில சமயம் எட்டு வரை கூட நீண்டு விடும்.

மாவாலை முதலாளி இவருக்கு நன்கு தெரிந்தவர் என்பதோடு நாற்பது வருடப் பழக்கம். அந்த உரிமையில்

“ஏன் கனகராஜ் மிஷினுக்கு வர்ர பொம்பளைங்களைக் கவர் பண்றதுக்கா இப்படி சட்டையில்லாம அலையிறீங்க?” என்பார்.

வெறுமே சிரித்து விட்டுப் பேசாமல் இருந்து விடுவார் தாத்தா.

அவருக்கென்ன தெரியும்? மிளகாய் நெடியில் உடலெல்லாம் எரியும். போதாதற்கு வெய்யில் வேறு , மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை. என்னமாக இருக்கும்? மாவு அரைக்க யாரும் இல்லாத போது பக்கத்து பெட்டிக்கடையில் போய் நிற்பார். அங்கு வீசும் லேசான காற்று இதமாக இருக்கும். அந்தக் கடைக்கும் வரும் பெரிய பெரிய ஆபீசில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் தாத்தாவுக்கு பழக்கம்.

காலை ஒன்பது மணி என்றால் சன் டிவியில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் பாக்கு வாங்க வருவார். அவரே மீண்டும் மதியம் ஒன்றரைக்கு வருவார். காலை ஒன்பதரைக்கும் மாலை ஆறரைக்கும் ஐ டியில் வேலை பார்க்கும் பல்ராம் வருவார். இப்படிப் பட்டியல் போட்டு வைத்திருப்பார். இது ஒன்று தான் அவருக்குப் பொழுது போக்கு. அதிகாரிகளும் கூட இவரிடம் மிகவும் நன்றாகப் பழகுவார்கள். டீக்கடையில் அவரது பெயர் காதல் மன்னன் கனக ராஜ் தான். அது என்னவோ தாத்தாவுக்கு அப்படி இமேஜ் இருந்தது. இத்தனைக்கும் எந்தப் பெண்ணிடமும் அவர் தவறாக நடந்து கொட்னதோ பேசியதோ இல்லை.

எந்த நாளாக இருந்தாலும் சரி தாத்தா சரியாக காலை ஒன்பதரை மணிக்கு எங்கோ போனார் என்றால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் வருவார். அதே போல மாலை ஐந்தரைக்கு. எங்கு போகிறார்? எதற்குப் போகிறார் என்று யாருக்கும் தெரியாது. அதைப் பற்றிக் கேட்டாலும் சொல்ல மாட்டார். மற்ற நேரங்களில் தாத்தா நன்றாக வேலை செய்ததால் எங்கே போகிறார்? என்று முதலாளியும் கேட்டுக் கொள்ள மாட்டார். பின்னே இத்தனை குறைந்த சம்பளத்தில் இந்தக் காலத்தில் யார் வேலைக்கு வருவார்கள்?

“தாத்தா உங்க வீடு எங்க இருக்கு?” என்று ஒரு நாள் ஸ்ரீ கேட்டார்.

“ஏன் சார் கேக்கறீங்க? நான் கொடுங்கையூர்லருந்து வரேன். மூணு பஸ் மாறி வேலைக்கு வரதுக்குள்ள உசிர் போயி உசிர் வருது”

“அப்படிக் கஷ்டப்பட்டு ஏன் இப்படி இந்த வயசுலயும் வேலை செய்யறீங்க? ஹாயா வீட்டுல ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல?”

“எப்படிங்க ரெஸ்ட் எடுக்க? பையன் வேலைக்கு போகணும் , மகளைக் கல்யாணம் கட்டிக் குடுக்கணும். எனக்குன்னு கடமைகள் இருக்கு சார்! என் மகனுக்கு ஒரு வேலை கெடைக்கட்டும் . உடனே என் மக கல்யாணத்தை முடிச்சிடணும்னு நெனச்சிருக்கேன். ” என்றார் கண்களில் கனவுகளோடு.

ஸ்ரீ சார் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாசன் சாருக்கு மிஷின் தாத்தா என்றால் மிகவும் பிரியம். அவரால் முடிந்தது காப்பி டீ சாப்பிடும் போதெல்லாம் பஜ்ஜி வடை என்று ஏதாவது வாங்கித் தருவார். அவர் தான் தன் மகனுக்கும் வேலை வாங்கித் தருவார் என்று நம்பியிருக்கிறார் தாத்தா.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவரிடம் மாவு அரைக்க வரும் பெண்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ளுவார்கள்.

“தாத்தா ! நான் கொண்டு வந்து வெச்சி எம்மாம் நேரம் ஆச்சி? எனக்கு பின்னால வந்தவுங்களுக்கு அரச்சிக் குட்துக்கிற? நான் மட்டும் என்ன காசு தரலையா?” என்பாள் ஒருத்தி.

சரி அவளுக்கு அரைத்துக் கொடுத்து விடலாம் என்று பாத்திரத்தை எடுத்தால் அவளுக்கு பின்னால் அல்லது முன்னால் நிற்பவள் வாயிலிருந்து வசவு வாங்க வேண்டி வரும். எப்படியோ எல்லாரையும் சமாளித்து அரைத்துக் கொடுத்து “அப்பாடா ! இனி அரவை இல்லை ! கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நிமிர்வார் , அப்போது பார்த்து பக்கத்து ஹோட்டல் ஆள் ஐந்து கிலோ சாம்பார் தூள் அரைக்க வருவான்.

மழையோ வெயிலோ பனியோ தாத்தா அசர மாட்டார். அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை தான் , அந்த சத்தம் தான் அந்த நெடி தான். 20தாவது வயதிலிருந்து இதே மிஷின் தான் இதே இடம் தான்.

“ஏன் இந்த ஊர்ல மாவு மிஷின் இல்லையோ? இவரு கொண்டார 6000 சம்பளத்துக்கு பஸ் சார்ஜே 1500 போயிடுது ! தொரை லோக்கல்ல வேலை பாக்க மாட்டாரோ? ” என்று கிண்டலாக கேட்பாள் முனியம்மா. தாத்தாவின் மனைவி. எதையும் சட்டை செய்ய மாட்டார்.

தாத்தாவைப் பற்றி சிலசமயம் மணி டீக்கடையில் பேச்சு வரும். காய்கறி விற்கும் கன்னியம்மாவுக்கு ஓரளவு அவரைப் பற்றித் தெரியும். அவள் தான் ஒரு நாள் சொன்னாள்.

“அவங்கப்பா உசிரோட இருக்க சொல்லோ அது இங்க தான் குடியிருந்தது. ரொம்ப வசதி இல்லையின்னாலும் ஓரளவு வசதி தான். என்ன நட்ந்ததோ தெர்ல கொஞ்ச வருசத்துல வீட்டை வித்துட்டு கொடுங்கையூர் போயிடிச்சி . அப்பா செத்துட்டாரு.அப்புறம் தான் கண்ணாலமே கட்டிக்கிச்சி ! பாவம் பையன் சரியில்ல ! குட்ச்சி குட்ச்சி இது காசையெல்லாம் தொலச்சிட்டான். அதான் பாவம் இந்த வயசுலயும் வேலைக்கு வருது” .

“ஏன் இவ்வளவு தூரத்துலருந்து வரணும்? இங்கேயே சின்னதா ஒரு போர்ஷன் வாடகைக்கு எடுத்துக்கலாம் இல்ல? பஸ் காசு மிச்சமாகும். அலைச்சலும் மிச்சம்.” என்றார் ஸ்ரீ.

“கொடுங்கையூர்ல பொண்டாட்டி வீடு இருக்குது சார்! அது எங்கியும் வர மாட்டேன்னிடிச்சாம் . அதான் தாத்தா அல்லாடுறாரு ” என்றாள் கன்னியம்மா.

“ஏன் கொடுங்கயூரில் வேலை பார்க்கலாமே ” என்று நினைத்துக் கொண்டார் . “என்னவோ இருக்கு ! அதான் தாத்தா இந்த ஏரியாவை விட்டுப் போக மாட்டேங்கறாரு” என அவரது எண்ணம் ஓடியது.

ஸ்ரீ சார் தான் கிழவர் எங்கே தினமும் போகிறார் என்பதைக் கண்டு பிடித்தார். அதுவும் எதைச்சையாகத்தான்.

ஒரு நாள் நாலைந்து தெரு தள்ளியிருந்த ஒரு உறவுக்காரரின் வீட்டுக்கு சென்றிருந்தார் ஸ்ரீ சார். உறவினர் தான் வீட்டு ஓனர். அந்த வீட்டில் இன்னும் நாலைந்து குடித்தனங்கள் இருந்தன. எல்லாமே கீழ்த்தட்டு வகையைச் சார்ந்தது தான். அங்கே வைத்து தான் அவர் மிஷின் தாத்தாவைப் பார்த்தார். ஒரு பெண்மணி கட்டிலில் படுத்திருக்க மிஷின் தாத்தா குனிந்து என்னவோ செய்து கொண்டிருந்தார். “சே” என்று ஆகிப் போனது. இவர் பார்த்ததை தாத்தாவும் பார்த்து விட்டார். ஒரு நிமிடம் திகைத்தவர் மறு நொடி எதுவுமே நடக்காதது போல திரும்பிக் கொண்டார்.

அன்று முதல் மிஷின் தாத்தாவுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார் ஸ்ரீ சார்.

நாட்கள் ஓடின. தாத்தா எத்தனையோ முறை வந்து வந்து பேச முயற்சி செய்தும் எதற்கும் மசியவில்லை அவர்.

ஒரு நாள் அவரைத் தனியாக மடக்கினார் தாத்தா.

“சார் ! நீங்க என்னைப் பத்தித் தப்பா நெனச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியும். ஆனா நான் தப்பான காரியம் எதுவும் செய்யல்ல சார் ! நான் சொல்றதை முழுசும் கேட்டுட்டு அப்புறமா நீங்களே சொல்லுங்க” என்றார்.

அவரது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்ட தாத்தா சொல்ல ஆரம்பித்தார்.

“சார் ! 35 வருஷத்துக்கு முந்தி நான் நல்ல வாலிபம் ! எங்க வீட்டுக்கு எதுத்த வீட்டுல ஒரு பொண்ணு குடியிருந்தா. பேரு சரசு. அவ அழகு குணம் எல்லாத்தையும் பாத்து நான் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன். அவளும் தான். அப்ப எங்கப்பா உயிரோட இருந்தாரு. கையில காசு இல்லாட்டாலும் சொந்த வீடு இருக்கற திமிரு அவருக்கு. என் காதலைத் தூக்கி எறிஞ்சுட்டாரு. அதோட சரசு அப்பாவை மிரட்டவும் செஞ்சாரு. அதனால் அவளுக்கு அவசர அவசரமா கல்யாணம் நடந்தது”

சொல்லும் போதே கண்களில் நீர் துளிர்த்தது தாத்தாவுக்கு. சாருக்குப் பாவமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடர்ந்தார் தாத்தா.

“அவன் சரியான குடிகாரன். சரசை என் கண்ணு முன்னாலயே போட்டு அடிப்பான். எதுவும் செய்ய முடியாம கையைக் கட்டிக்கிட்டுப் பாத்துக்கிட்டிருக்க வேண்டியதாப் போச்சி ! . என்னால அவ சித்தரவதைப் படறதைப் பாக்க முடியல்ல ! அப்ப எங்களுக்கு பணப் பிரச்சனையும் வேற இருந்ததால வீட்டை வித்துட்டு கொடுங்கையூர்ப் பக்கம் போயிட்டோம். கொஞ்ச நாள்ல எங்கப்பாவும் போயிட்டாரு. அவ புருஷனும் குடிச்சிக் குடிச்சே செத்துட்டான். அத்தோட இந்த ஊரை விட்டுப் போனவ தான். ஆனா என்னிக்காவது ஒரு நாள் வருவாங்கற நம்பிக்கையில நான் இங்கயே சுத்திக்கிட்டு இருந்தேன்”

கேள்விக்குறியோடு தாத்தாவைப் பார்த்தார் ஸ்ரீ.

“எனக்கும் கல்யாணமாச்சி ! ஆனா என் மனசுல சரசு தான் இருந்தா. அவ வருவான்னு நான் இங்கயே வேலை பாத்தேன். யார் சொல்லியும் கேக்கல்ல! என் நம்பிக்கை வீண் போகல்ல! அஞ்சு வருஷத்துக்கு முந்தி வந்தா சரசு. அதுவும் எப்படி? நோயாளியா , இப்பவோ அப்பவோன்னு உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டு வந்தா. அவ கஷ்டப்பட்டு படிக்க வெச்ச அவ மகன் அவளை பாரம்னு சொல்லி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஒரு வீட்டுல தள்ளிட்டுப் போயிட்டான். அவளை நான் எப்படிக் கைவிட முடியும்? என் எதுத்தாப்புலயே அவ அனாதையா நின்னா என்னால தாங்க முடியுமா? அதான் தினமும் அவளுக்கு மருந்து சாப்பாடு எல்லாம் கொடுத்து கவனிச்சுக்கறேன். இது தப்பா சார்? நீங்களே சொல்லுங்க” என்றார்.

கண்களில் படர்ந்திருந்த நீரை மெதுவே சுண்டி விட்டார் ஸ்ரீ சார் .

உண்மையான அந்தக் காதலனைப் பார்த்து மரியாதையோடு வணங்கி வேறொன்றும் பேசத் தோன்றாமல் மௌனமாக நடக்கத் துவங்கினார் அவர்.

– செம்மலர் (மார்ச் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *