மாறாதவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 1,886 
 
 

நண்பனுடைய அறைக்குள் நுழைந்ததும் எல்லோரும் “வாடா புதுமாப்பிள்ள. பொண்ணு புடிச்சிருக்கா?” என்று கேட்டார்கள் பீட்டரிடம்.

“இன்று சாயங்காலம் தான் பொண் பார்க்கப் போகிறோம். பொண்ணுக்கு ஏதாவது வாங்கிப் போகலாமென்று நினைக்கிறேன். நிவாஸ் வர்றியா. துபாயில் இருக்கும் பார்த்தாஸிலே போய் ஒரு பட்டுச்சேலை எடுத்துக் கொண்டு போகலாம் என்று எண்ணியிருக்கிறேன்.” என்றான் பீட்டர்.

“போடா. துபாயில் வளர்ந்த பெண். அவளுக்கு சேலை எல்லாம் கட்டத் தெரியுமோ என்னவோ… பர்ஜூமான் சென்டரிலே போய் ஒரு ஆயிரம் தினார் (பன்னிரண்டாயிரம் ரூபாய்) கொடுத்து அழகான ஜீன்ஸ் ட்ரஸ் வாங்கிக் கொண்டு கொடுப்பதை விட்டு விட்டு..” என்று நக்கலடித்தான் நிவாஸ்.

“பொண்ணு பார்க்கப் போகும் போது ஜீன்ஸெல்லாம் வாங்கிக் கொண்டு போனால் எப்படிடா இருக்கும்” என்று நெளிந்தான் பீட்டர்.

“சரியான பட்டிக்காட்டிலே வளர்ந்தவன் என்பதைக் காட்டி விட்டாயே… ஏண்டா இத்தனை வருடமாக துபாயில் பிறந்து வளர்ந்த பொண்ணுக்கு என்ன பிரசன்ட் பண்ணணும்னு கூட தெரியாமல் இருக்கிறாய்” நிவாஸ் சிரித்தான்.

“டேய், அவன் புது மாப்பிள்ளை ஆகப்போகிறவன். நீ போண்ணு கட்டி ஊரிலேயே விட்டு விட்டு வந்தவன். அவன் நிலைமை உனக்கு எங்கே தெரியும்” என்று விரட்டிய ராஜன் “போய் நல்லதா விலை கூடிய சல்வார் கம்மீஸும் மேக்கப் பாக்சும் வாங்கிக் கொண்டு போடா. ஆமா, யாரெல்லாம் போறீங்க” என்று கேட்டான் ராஜன்.

“நானும் மாமாவும் தான் போகிறோம். பொண்ணுபார்த்துப் பிடித்துப் போனால் ஊரிலே வைத்து திருமணம் நடத்தலாம் என்ற முடிவிலே இருக்கிறார்கள்…” கொஞ்சம் வெட்கப்பட்டான் பீட்டர்.

”யாருடா, துபாயிலே வந்து ஸிப்பிங் மேனேஜரா வேலை செய்கிறவனுக்கு கல்யாணம் என்றவுடன் வெட்கம் வருகிறது.” சிரித்த நிவாஸ் எழுந்து “சும்மா கலாச்சேன் பீட்டர். வா நீ விரும்பிய மாதிரி ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம். உனக்கு என்ன விரும்பம்” சட்டை அணிந்த வாறு கேட்டான் நிவாஸ்.

“நேற்று அம்மா சொன்னார்கள் உனக்கு என்ன வாங்கிக் கொண்டு போக விருப்பமோ அதை வாங்கிக் கொண்டு போ. உனக்கு மனைவியாகப் போகிறவள் என்றார்கள். நான் முதலில் தங்கத்திலே ஏதாவது வாங்கிப் போக நினைத்தேன். அப்புறம்தான் வேறு ஏதாவது பொருளாக வாங்கிப் போகலாம் என்று நினைத்தேன். நீ சொல்வதும் சரிதான். இப்போது துபாயில் யார் சேலை கட்டுகிறார்கள். வா, போய் புதிதாக பெண்கள் அணியும் வேறு மாடல் உடைஒரு செட் வாங்கிக் கொண்டுப் போகலாம்” என்று நிவாஸுடன் கிளபினான் பீட்டர்.

மாலையில் மாமா ராஜையவுடன் பெண்பார்க்கக் கிளம்பிய போது “என்ன வாங்கினாய்” என்று கேட்டார்.

“ஒரு மார்டன் டிரஸ் வாங்கினேன்” என்றான் பீட்டர்.

பெண் வீட்டிற்கு வந்து ஸ்வீட் பாக்ஸையும் உடையையும் பெண்ணின் அம்மாவிடம் கொடுத்து விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் பெண் எழிலான அழகோடு பட்டுச் சேலையில் வந்து அமர, பெண்ணின் அம்மா “நாங்கள் இன்னும் இங்கு மாறவில்லை. நீங்கள் மார்டன் ட்ரஸ் வாங்கி வந்ததை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. எப்படித் தான் துபாய்க்கு வந்து வாழ்ந்தாலும் நம் தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மறந்து போக வில்லை. அவள் கல்லூரிக்குப் போகும்போது சல்வார் கம்மீஸ் போட்டிருந்தாலும் இப்போது சேலையைத் தவிர எதுவும் உடுத்துவதில்லை.” என்று சொல்ல கொஞ்சம் உள்ளே மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தான் பீட்டர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *