மாமியாரின் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 2,421 
 
 

வாசகர்களை ஒரு தவறு செய்ய தூண்டுகிறது இந்த கதை. இந்த தவறை செய்து விட்டு, அட இப்படி எல்லாம் இருப்பார்களா? என்ற கேள்வியோ, கோபமோ, வருத்தமோ (அதுவும் இளைய தலைமுறைக்கு) வந்தால் அதை எல்லாம் உதறி விட்டு இதுவெல்லாம் ஒரு கற்பனை என்று சென்று விடுங்கள் (பழைய கால குடும்ப படங்களில் எல்லாம் இந்த கதாபாத்திரம் கண்டிப்பாய் இருக்கும்) இந்த கதையும் இருபது முப்பது வருடங்களுக்கு முன்னால் நடந்திருக்கலாம் என்று அனுமானித்து கொள்வோம். என்ன தவறு செய்கிறீர்கள் என்று இடையில் தெரிந்து கொள்வீர்கள்

கதைக்குள் நுழைவோம்

சார்….போஸ்ட்…

ரகு.. எனக்கா?

சியமாளா (ரகுவின் சகோதரி)- எனக்கா?

ரகுவின் அப்பா….. எனக்கா?

ரகுவின் அம்மா எனக்கா?

ரகுவின் சித்தப்பா..எனக்கா?

ரகுவின் சித்தி… எனக்கா?

மற்றும் அங்குள்ள அனைத்து நண்டு சிண்டு போன்ற வாண்டுகளும் ஓடி வருகின்றனர். எனக்கா?

அதற்குள் போஸ்ட் மேன் கடிதத்தை விசிறி விட்டு போய் விடுகிறார்.

அதை குனிந்து எடுத்த ரகு இது “மாலதிக்கு” வந்திருக்கு..முணு முணுக்கிறான்..அவ வேற

சென்னை போயிருக்கிறாளே..

ரகுவின் அம்மா..அவ சென்னை போயிட்டா என்ன? உன் பொண்டாட்டிக்கு வந்த லெட்டர்தானே? யார் எழுதியிருக்கா?

உம் ..பின் புறம் திருப்பி பார்த்தவன் அவ அம்மாதான் போட்டிருக்கா?

ரகுவின் அம்மா..உடனே முகத்தை அஷ்ட கோணலாக்கி…ம்…ம்.. இங்க இருக்கும்போதே அந்த ஆட்டம் போட்டவ. இப்ப மகளுக்கு லெட்டர் போட்டிருக்காளா? சரி என்னதான் எழுதிருக்கான்னு படியேன்.

ரகு… அம்மா அடுத்தவங்க லெட்டரை படிக்கிறது தப்பு..

ரகுவின் அம்மா ஏண்டா அவ உன் பொண்டாட்டி தானே படிச்சா..என்ன?

அதெல்லாம் தப்பு, .குரல் சற்று பின் வாங்கி.அமுங்குகிறது

அங்குள்ள எல்லோரும் “கோரசாய்” படிச்சுத்தான் பாரேன்…சத்தமிட வேறு வழியில்லாமல் கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தவன் முகம் சற்று வெளுத்து பின் சகஜமாய் ஒண்ணுமில்லை வீட்டுல எல்லாம் செளக்கியமான்னு கேட்டிருக்காங்க..அவ்வளவுதான் கடிதத்தை அவசரமாய் மடித்து சட்டை பைக்குள் போட்டுக்கொண்டான்.

அவனை சுற்றி “கடிதத்தை படிப்பான்” என்று ஆவலுடன் காத்திருந்த அனைவருக்கும் அவன் செய்கை சப்பென்று முடித்தது போல் தோற்றமளிக்க நம்பிக்கையில்லாமல் ஒவ்வொருவரும் அவரவர் இடத்துக்கு பெயர்ந்தனர். “ரகுவின் அம்மா” மட்டும் அவ ஏதாவது என்னைய பத்தி எழுதியிருப்பா. அதான் லெட்டரை உள்ளே வச்சுட்டான், முணங்கிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

ரகு அப்பாடி பெருமூச்சு விட்டு விட்டு தன் அறைக்கு வந்து உட்கார்ந்து அந்த கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தான்.

(வாசகர்களாகிய நாம் இப்பொழுது ரகுவின் பின்னால் மறைந்து நின்று அவன் மாமியார், தன் மகளுக்கு எழுதிய கடிதத்தை படிக்கபோகிறோம்.

மாலதிக்கு ! உனக்கு கடிதாசி போடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம என்னைய ஊருக்கு போக சொல்லிட்டியே, உனக்கு என்னவெல்லாம் பண்ணியிருப்பேன், அதுக்கெல்லாம் நன்றியில்லாமல் “நீ இருந்தா இந்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடுவேன்னு சொல்லி என்னை கழுத்தை பிடிச்சு தள்ளுனாப்புல போக சொல்லிட்டியே.

“பெத்த மனம் பித்து”பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாங்க, அது மாதிரி நீ கழுத்தை பிடிச்சு தள்ளுனாலும் என் மனசு கேக்காமத்தான் இந்த கடுதாசிய போடறேன்.

உன் புருசன்கிட்ட சாக்கிரதையா இரு. அவன் பாட்டுக்கு தாம் தூம்னு பெத்ததுகளுக்கும், தண்டத்துக்கு உக்காந்துக்குதங்களே, அவங்க சித்தப்பன் கூட்டம் அதுகளுக்கும் சேத்து கொட்டி கொடுத்துடப்போறான்.

அப்புறம் வீட்டுல ஒரு குரங்கு இருக்குதே அதுதான் அந்த சியாமளாவோ, கியாமளாவோ, அவ சரியான வாயாடி, பார்த்து அதுகிட்ட பேசிக்கோ, அவளுக்கு கல்யாணத்துக்கு செலவு பண்ணறேன்னு உன் வீட்டுக்காரன் எல்லா செலவையும் தலையில தூக்கி போட்டுக்கப்போறான், முதல்ல அவன் கிட்ட சொல்லி அடக்கி வை. நான் சொல்றது புரிஞ்சுதா? ஏதோ உனக்கும் குழந்தை குட்டி இருக்கு. அதுகளுக்கும் நல்லது கெட்டதும் செய்யனுமில்லை. அவளும்..ஆளும்… இத சொன்னா நீ இந்த குடும்பத்தை குழப்பறேன்னு சொல்லி என்னை அடக்குறே.

பாரு உன் மாமனார், நாப்பது வருசம் வேலை செஞ்சாரு, பென்சன் வருது, இருக்கட்டும், அதுக்கப்புறம் ஏதாவது வேலை வெட்டிக்கு போலாமுல்ல. பக்கத்துல வாட்ச்மேன் உத்தியோகம் கூடவா கிடைக்காது. ஏதோ கவர்ன்மெட்ல பெரிய ஆபிசரா இருந்துட்டாங்கறதுக்காக வீட்டுல உட்கார்ந்து சாப்பிடறதா?

அதுக்கு மேல உன் மாமியார்? அவளுக்கென்னமா ராசாத்தி ! கொஞ்சமாவது உடம்பு வளையுதா பாரேன். நீ தான் கஷ்டப்பட்டு காலையில எந்திரிச்சு குளிச்சு, டிரெஸ் எல்லாம் பண்ணிட்டு கிளம்பும்போது இந்தம்மா ஏதோ இரண்டு இட்லி கொண்டு வந்து வச்ச்சுட்டு சாப்பிடுன்னு சொல்லிட்டு, மதியம் சாப்பிடறதுக்கு ஒரு டிபன் பாக்ஸை கொடுதனுப்பிச்சுட்டா போதுமா? எல்லாம் நடிப்பு. இவங்க கொடுக்கிற இரண்டு இட்லிக்கும், மதியானம் சாப்பிடற ஆறிப்போன சாப்பாட்டுக்கும் நீ மாசமானா, உன் சம்பளத்தையும் உன் புருசன் சம்பளத்தையும் கொண்டு போய் கொட்டணுமா? இதையத்தானே கேட்டேன் அதுக்கு போய் குடுமபத்துல குழப்பம் பண்ணறேன்னு சொல்லிட்டியே?

அப்புறம் உன் சின்ன மாமனார், அந்த ஆளுக்கு உங்க வீட்டுல என்ன வேலை?

பக்கத்துல இருக்கறாங்கன்னா அடிக்கடி உங்க வீட்டுல வந்து ஓசியில காபி டீ குடிச்சுட்டு போயிடறதா? ஏதோ உங்க மாமனாருக்கும் அவர் தம்பிக்கும் பாகம் பிரிச்சு அவங்கவங்க தனித்தனியா வீடு கட்டி இருந்துட்டாங்கன்னா அதோட இருந்தற வேண்டியதுதானே? நல்லது கெட்டதுக்கு ஒண்ணு சேந்துக்கறேன்னு சொல்லி எப்ப பாத்தாலும் புருசனும் பொண்டாட்டியும் உங்க வீட்டுக்குள்ள வந்து உக்காந்துக்கறதா? அதுக்கு உன் மாமியாரும், அவ வீட்டுக்காரரும் வடிச்சு கொட்டறது, இதுக்கு நீங்க இரண்டு பேரும் சம்பாரிச்சு கொண்டு போய் கொடுக்கறது. இது என்ன நியாயம். அவங்க அண்ணன் தம்பி பாசமெல்லாம் வெளியில வச்சுக்கறதுதானே? இதைய சொன்னா குத்தமிங்கறே.

அப்புறம் இந்த வாண்டுகள் இருக்குதே, அப்பப்பா..எப்படித்தான் இருக்கற்யோ இந்த வீட்டுல? சரியான கோண்டுகள். உன்னுடையதையும் சேர்த்துத்தான் சொல்ரேன். எப்ப பாத்தாலும் கத்திகிட்டு, கூப்பாடு போட்டுகிட்டு. இதைய சொன்னா என் மேலே கோபப்படறே?

ஆக் மொத்தம் இந்த குடும்பம் உருப்படறமாதிரி எனக்கு தெரியலை. நீ கூட இந்த குடும்பத்துல உழைச்சு கொட்டி கடைசியில உருப்படாமத்தான் போகப்போறே? இருந்தாலும் மனசு கேக்குதா? “பெத்த மனம் பித்து” பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க, நான் ஊதுற சங்கை ஊதிடுறேன், அதுக்கப்புறம் நீ உருப்படுவியோ, உருப்படாம போவியோ எனக்கு தெரியாது.

அநியாயத்துக்கு நான் வீட்டுல இருந்தா எல்லார்கிட்டேயும் சண்டை மூட்டிவிட்டு குடும்பத்துல குழப்பத்தை மூட்டறேன்னு என்னைய ஊருக்கு போக சொல்லிட்டியே. இங்க பாரு உங்கப்பா என் கூட பேசறதுக்கு கூட பயந்துகிட்டு அடிக்கடி சேசாத்திரம் போறேன்னு ஊர் ஊரா கிளம்பிடறாரு. உன் அண்ணனும், அக்காளும் பக்கத்து பக்கத்துலதான் குடும்பத்தோட இருக்கறாங்க, ஆனா என்ன பிரயோசனம், என்னை கண்டா எதிரியை கண்ட மாதிரி ஓடி ஓளிஞ்சுக்கறாங்க.

எனக்கு இங்க ஒத்தையில இருக்க போரடிக்குது, நீ மட்டும் ம்..னு சொல்லு, உடனே மூட்டைய கட்டி உன் கூட வந்துடறேன் என்ன சொல்றே?

இப்படிக்கு

உன் அன்பு அம்மா

இப்ப விரோதியா நீ நினைக்கிற அம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *