மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீா்த்து, சற்று நேரம் மழை விட்டிருந்தது.
இந்த மழையிலயும் அவங்கவங்க எப்படியெல்லாம் பொழப்பைப் பாக்குறாங்க!
கொசுவத்திச்சுருள் பத்து ரூபாய். தீக்குச்சி தடிமத்துல மெழுகுவா்த்தி ஒண்ணு பத்து ரூபாய். பால் பாக்கெட் நூறு ரூபாய். தீப்பெட்டி அஞ்சு ரூபாய். சுடுதண்ணியா? டீத்தண்ணியா? கண்டுபிடிக்க முடியல! பத்து ரூபாய். ஊரே மழையில நடுங்குது, வாங்குற பொருளுக்கு விலை மட்டும் கொதிக்குது!.
வீட்டுக்குள்ளாற இருக்குறவங்க எல்லாரும் வீட்டை விட்டு வெளியேறி நேதாஜிநகா் சீதக்காதி ஸ்கூலுக்கு வந்திருங்க. செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி தண்ணி திறந்து விட்டுருக்கு. எப்ப வேணும்னாலும் வீட்டுக்குள்ளாற தண்ணி உசந்துடும். ஆட்டோவில் எச்சரிக்கை பறந்தது.
தோழா் உங்க வீட்டுல நம்ம கட்சி கொடி இருக்குதா? ஒரு தொழா் வீட்டுலயும் கொடி கிடைக்கல. நம்ம ஆட்டோ சங்கம் சார்பா கிச்சடி கிண்டி வெச்சிருக்கோம். வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு போடணும். மணி இப்பவே பத்தாகப்போகுது, இன்னமும் கொடி கிடைக்கலயே நான் என்ன செய்ய? கிச்சடியும் ஆறிப்போச்சு. கரண்ட் இல்ல. கும்மிருட்டு!. எல்லாரும் தூங்கிடுவாங்களே! நான் என்னப் பண்றதுன்னு தெரியல. குழப்பத்தில் பொழம்பிக் கொண்டிருந்தது, டீக்கடையில் ஒதிங்கியிருந்த அவனுக்கு கேட்டதும், அவன் மூளையில் சட்டென உதித்தது!.
விடாது பெய்யுற மழையில நம்ம பொழப்பு நாறிப்போச்சே!. இந்த மழைக்கு தக்குனமாதிரி நம்ம பொழப்ப மாத்திக்கிட்டா என்ன? என்கிற எண்ணம் தான் அவனுக்கு!
கூவம் ஆத்தோரம் இருக்குற சஞ்சய் காந்தி நகா், பட்டேல் நகா், எல்லா ஏரியாவுலயும் ஒரு ஜனம் கூட கிடையாது. எல்லாரும் வீட்டை விட்டு வெளியெறி போயிட்டாங்க. இது நம்ம பொழப்புக்கு சாதகம் தான்!.
அவனுக்கு, எப்பவும் ஜனங்களோட பேராசை தான் அவன் தொழிலுக்கு சாதகமா இருந்து வந்தது.
பெரும்பாலும் அவனுக்கு பேருந்து நிலையம் தான் ஏற்ற இடமாக இருந்தது.
பேருந்துக்கு காத்திருப்போரின் சட்டையின் பின்புறத்தை நோட்டமிடுவான். சட்டையின் முதுகுப்புறம் கசங்கி யிருந்தால், அந்த நபா் தொலைதூரத்திலிருந்து வந்திருப்பவர். அவனது தொழிலுக்கு ஏற்ற நபா் என்பது அவனது தொழில் அனுபவம் கற்றுத் தந்த பாடம்.
கழுத்தில் தங்கசெயின் அணிந்து சட்டை காலரை தூக்கிவிட்டு வரும் மைனா்களை கண்டால் அவனுக்கு, அடித்தது யோகம்!.
சாரே! என்னிடத்தில் இலங்கையில் செய்த தங்கச்செயின் உள்ளதாக்கும். இது சுத்தத் தங்கமாக்கும். இதை இவ்விடத்தில் என்னால் மாற்ற இயலாதாக்கும். இதனைப் பெற்றுக்கொண்டு உங்களிடத்தில் உள்ள செயினை கொடுத்தால் இவ்விடத்தில் கொடுத்து பணமாக்கிக்கொண்டு, ஊா் திரும்புவேன் சாரே!. என்னோட செயின் உங்கள் செயினைவிட மூன்று மடங்கு அதிக விலையாக்கும். சாருக்கு மனசலாகி?
இப்படித்தான் அவன் வாழ்கை மின்னி வந்தது!
அவனிடத்தில் போலிஸ்காரா்கள் கூட தப்பியதில்லை. அடுத்தவங்களோட பேராசை அவனுக்கு பெரிய இலாபம் என்றானது.
அவன் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே இப்போது நகரே மயான அமைதியானது.
தெருவில் இறங்கினான். கழுத்தளவு தண்ணீா். ஒரு வீட்டில் தனது பெரு முயற்சிக்குப்பின் கதவு தாழ்பாள் திறந்தது. வீட்டிற்குள் தனது மரணத் தருவாயிலும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது மெழுகுவா்த்தி.
இரண்டு சிறுவா்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் சேரில் சம்மணம்மிட்டு தூங்கிக் கொண்டிருந்தனா். அருகில் ஒரு பெண்ணும் அதே போன்ற பிளாஸ்டிக் சேரில் சம்மணமிட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த சிறுவா்களின் தாயாக இருக்கலாம். பிளாஸ்டிக் சேருக்கு கீழே தண்ணீா் தொட்டுக் கொண்டிருக்கிறது. குடும்பத் தலைவன் இல்லா வீடு போலிருக்கிறது.
வெள்ள நிவாரண முகாமுக்கு கூட போகவில்லை. வேறு உறவினா்கள் கூட இல்லை போலிருக்கிறது. என்னைப் போலவே இவா்களும் போக்கிடமில்லா அனாதைகள் போலும்!.
கண்கலங்கினான்.முப்பது வருட தொழில் அனுபவத்தில் முதன் முதலாக வெறுங்கையோடு அந்த வீட்டிலிருந்து திரும்பினான்.
அந்த இருட்டிலும் பளிச்சென்று ப்பொளோரஸ்ண்ட் வா்ணம் பூசப்பட்ட தனி வீடு வா…வா… என்றழைத்தது, அவனை.
அழகிய வேலைபாடுகள் கொண்ட கண்ணாடி ஜன்னல்கள் திறந்தே இருந்தன. காற்று வசதிக்காகவே திறந்து விடப்பட்டிருக்கலாம். எட்டிப்பார்த்தான்.
அகல்விளக்கு வெளிச்சத்தில் வீட்டிற்குள் வரிசையாக அவா்கள் படுத்துக்கிடப்பது சினிமா காட்சி போல் தெளிவாக தெரிந்தது, அவனுக்கு. ஆச்சரியத்தில் அவனுக்கு கண்கள் விரிந்தது. அவா்களில் முதலாவதாக படுத்துக்கிடப்பது அவனது தொழில் முறை பழைய கூட்டாளி கணேசனே தான். அடுத்ததாக படுத்திருப்பது கணேசனின் தம்பி, தம்பியின் மனைவி, அவனது பிள்ளைகள், அடுத்ததாக கணேசனின் பிள்ளைகள், மனைவி, கணேசனின் அம்மா. பார்க்க பார்க்க அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை.
சொத்துத் தகராறில் பல வருடங்களாக இருந்து வந்த அண்ணன் தம்பி பகை விலகி, இன்று இந்த மழையால் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். பார்க்கும் நமக்கே ஆனந்தமாய் இருக்கே!. களவு செய்ய அவன் மனம் ஒப்பவில்லை.
அடுத்த தெருவிற்குள் இருளோடு இருளாக கலந்தான்.
வீடு எது? வாசல் எது? கதவு எது? என்றே தெரியவில்லை!
தனது கைவசம் இருந்த பென் டார்ச்சை எடுத்து வெளிச்சம் பாய்ச்சினான். பரவாயில்லை வீட்டு கதவு திறந்தேயிருந்தது!.
டார்ச் வெளிச்சத்தில் வீட்டிற்குள் நாலாப்பக்கமும் கண்களை ஓட்டினான்.
அய்யா…யாரய்யா…அது?
ஒரு காலை நீட்டியபடி மறு காலை மடக்கி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள், ஒரு மூதாட்டி!
அய்யா…நீ நல்லாயிருக்கணும். உனக்கு புண்ணியமா போகுமய்யா…இந்த கட்டிலோட என்னெ ஏதாவது மேடான இடத்தில கொண்டுபோயி வெச்சுடய்யா…இந்தாய்யா இத நீ வெச்சுக்கோ துணி பொட்டலத்தை நீட்டினாள். அதில் ரூபாய் நோட்டுகளாக சுருண்டு இருந்தது.
அய்யா எல்லா பணமும் எனக்கு என் பிள்ளைக கொடுத்தது தான். பா்மா பஜாருல கடைங்க இருக்குதய்யா. வசதிக நிறையா தான் இருக்குது. என் செய்ய என் பொல்லாத காலம் கீழ விழுந்து கால ஒடிச்சுக் கிட்டேன். அன்னையில இருந்து கால் நாத்தமெடுத்திருச்சு. அதனால என்னெ இந்த வாடகை வீட்டுல வெச்சிருக்காங்க. ஓட்டு வீடுங்கிறதால சொட்டு சொட்டா ஒழுகுது. இதுல தண்ணி வேற வீட்டுக்குள்ளாற வந்திருச்சு. அய்யா எப்படியாச்சும் என்னெ இதிலிருந்து காப்பாத்திடுய்யா. உனக்கு கோடி கும்பிடு கும்பிடுறேன்னய்யா. கையெடுத்து கும்பிட்டாள்.
மூதாட்டியை தனது இரு கரங்களால் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வீட்டுப்படியில் இறங்கினான், அவன்.
மழை வலுத்தது!.