மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 5,005 
 

வேடிக்கையும் ஞானத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருந்த ஒரு நடு இரவாயிருந்தது. என்ன காரணக் காரியமென்றுத் தெரியாமல் சற்றும் முன்பின் தொடர்பற்று திடீரென பேச்சு மாமரம் பற்றியதாக மாறியபோது நான் ஒரு மாமரத்தைக் குறிப்பிட்டு அந்த மாமரத்திடம் போய் என் பெயரைச் சொல்லிப்பார் அது மெல்ல தலையசைக்கும் என்றேன். அவள் என்னை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே சிரித்தாள். அவளின் அவ்வாறான சிரிப்பை பல தருணங்களில் நான் சுவீகரித்திருப்பவன் என்பதால் இப்போது அவளின் பரீட்சயமான சிரிப்பை உறுதிப்படுத்திக் கொண்டே தொனி பிசகாமால் மறுபடியும் சொன்னேன் நீ வேண்டுமானால் இதை ஒரு சோதனையாகக் கூட செய்து பாரேன். இப்போது சிரிப்பைச் சுத்தமாக நிறுத்திவிட்டு வினோதமாக பார்த்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் கொஞ்சம் நேரம் இதுபோல் பேசினால் சுற்றிலும் இருள் பரவிக் கிடந்த அந்த நடு இரவில் அவள் பயப்படுவாள் என்பதைப் புரிந்து சிறிய இடைவெளிவிட்டு பேச எத்தனிக்கையில் வார்த்தை வெளிப்படும் முன்னமே போ லூசு என்றாள். என்னக் காரணமோ தெரியவில்லை பெண்கள் பழகிய ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்ளாகவே என்னை லூசு என்று எந்த தயக்கமும் இன்றி அழைத்து விடுகிறார்கள். லூசு என்று அழைத்ததில் உங்களுக்கு வருத்தம் ஓன்றுமில்லையே என்று மிக்க பவ்யமாய் கேட்கும் அவளிடம் இல்லை என்றும் அடியாளத்திலிருந்து வெளிப்படும் உண்மைகள் ரொம்பவும் இதமான ஆறுதல் தருபவைதான் என்றேன். அப்படியானால் ‘போடா லூசு என்று சொல்லட்டுமா’ என மெல்லியக் குரலில் கேட்ட போது இது இன்னும் ஆறதலானது என்றேன். அவளுக்கு அதில் கொஞ்சம் சந்தோசமும் பெருமிதமும் இருந்தது. ஒரு நாள் அந்த மாமரம் எங்கேயிருக்கிறது என்று கேட்டாள். மறந்துவிடுவாளென நினைத்துக்கொண்டு நாளை சொல்வதாகச் சொன்னாலும் மாமரம் தலையாட்டும் என்றது அவள் உள்ளிருந்து முளைக்கத் துவங்கிவிட்டதோ என்னமோ விடாமல் நச்சரித்து மறுநாளும் தலைவா மாமரம் எங்கே நிற்கிறது என்றாள். அவளின் தலைவாவும் போடா லூசும் ஒரே அர்த்ததளத்தில் இயங்குபவைதான். அவளிடம் பேசும் போது அவளுக்கென்றே ஒரு ஸ்கிரிப்டை நான் தயார் செய்து சொல்லவேண்டும். நீக்கம், மறைப்பு, ஒப்பனையென நுட்ப வேலைப்பாடுகளோடு கிடுக்கிப்பிடி கேள்விகள் அவளுக்குள் உருவாகிவிடாதவாறு ஏக திருப்தியோடு கட்டமைத்து விட்டால் அவளிடம் சொல்லிவிடலாம். லூசாக இருப்பதில் இதில் ஏராளமான சௌந்தர்ய சவுரியங்கள் உண்டு.
சில தினங்கள் கடந்த ஒரு காலையில் நாளிதழோடு தேநீரும் பருகிக் கொண்டிருந்த போது ‘உண்மையைச் சொல்லு அந்த மாமரத்திடம் உன் பெயரைச் சொன்னால் தலையாட்டுமா? இன்றைக்கு நாம் போகலாம். நான் உன் பெயரை அந்த மரத்திடம் சொல்கிறேன். அது தலையாட்டுவதை எனக்குப் பார்க்கவேண்டும் லூசு’ என்று கெஞ்சத் தொடங்கினாள். கெஞ்சுவதைப் பார்த்தால் சட்டென அதைவிட்டு விலகிவிடும் உத்தேசம் அவளுக்கு இல்லையென தோன்றியபோது அது ரொம்ப தூரம.; உடனடியாகப் போக இயலாது. நான் நிச்சயமாக அழைத்துப் போகிறேன். மனசுக்குள் இருந்து மாமரத்தை தற்காலிகமாக எடுத்துவிடு. நான் ஒரு பேச்சு ரசனைக்காக சொன்னது என்றேன். அவள் பொய்தானே என்ற போதாவது ஆமாம் பொய்தானென விட்டுத் தொலைத்திருக்க வேண்டும். ஆனாலும் பொய்யெல்லாம் இல்லை உண்மைதான். கடந்த மே மாதம் அதற்கு முன்னே நின்று என் பெயரைச் சொன்னேன். அது தலையாட்டியது என்ற போது போடா லூசு நீ சொல்லும் போது காற்றடித்து மரம் அசைந்திருக்குமென்றாள். அப்படியெல்லாம் இல்லை அது என் மரம். என் பெயரை எத்தனை முறைச் சொன்னாலும் தலையாட்டுமென நான் சொல்லிக் கொண்டிருந்த என் கம்பீரத்தை அவளின் போடா லூசு என்ற அழைப்பு காலி செய்திருந்தது.

அந்த மரத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு, ரொம்ப தூரம் என்றால் எங்கே, ஏன் இதற்கு முன்பு அப்படியான மாமரத்தைப் பற்றி பேசியதில்லையென தொடர்ச்சியாக கேள்விகள் எதுவும் கேட்கவில்லையானாலும் நிச்சயமாக எப்போதாவது மதிய உணவருந்தும் போது அவள் கேட்கக்கூடும்.

என் கணக்குக் கூட்டலில் அந்த மாமரத்திற்கு இருபத்தி ஏழு வயதாவது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மாடம்பி இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை மாமரத்தை பார்க்க போனபோது மாடம்பியை அந்தத் தோட்டத்தின் முனை டீ கடையில் பார்த்த சமயத்தில் நலன் விசாரித்துப் பேசிக் கொண்டபோது என்னை ஆச்சரியத்தோடு இமைமூடாமல் விழுங்குவதுபோல பார்த்துக் கொண்டிருந்தவர்; பெருஞ்சலிப்புடன் காலத்தைத் திட்டினார். போன மாசம் வந்திருக்கலாமே பாட்டக்காரன் மூடை மூடையாக மாங்காய் பறித்துக்கொண்டு போனான் என்பதைச் சொன்னபோது சிரித்துக் கொண்டேன். அவர் அவளைப் பற்றி குசு குசுப்பான குரலில் கேட்டதும். நான் தெரியாது அதன் பிறகு பார்க்கவேயி;ல்லை முஸ்திபெடுத்து தேடவுமில்லை என்றதும் கருமேகம் கவிழ்ந்து மூடிக்கிடந்த மேற்குப் பக்க அடிவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே காலத்துக்க போக்கப் பாத்தியா என்றபோது மிகக் கடுமையான வருத்தத்தின் சாயல் அவர் முகமெங்கும் பாய்ந்திருந்தது.

மனம் நினைவுகளை காலத்தின் தன்மை மாறாமல், உருவங்களைக் கூட மாற்றாமல் அற்புதமான காட்சியாகவே தந்துவிடுகிறது. அந்த அவளுக்கும் எனக்குமான பழக்கத்தில் சாக்லேட், சிறப்பு உணவுகள், பேக்கிரி பண்டங்கள் என பலவற்றை பங்கிட்டு உண்டிருக்கிறோம். அவ்வாறான நாட்களில் அன்று அவள் தான் மாம்பழத்தைக் கொண்டுவந்தாள். கல்கத்தாவிலிருந்து அவள் உறவினர் கொண்டு வந்து பின்னர் ஊரிலிருந்து அவள் அம்மா மூலமாக அவளின் விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தது அந்த மாம்பழம். நாங்கள் இருவரும் பங்கிட்டு சாப்பிடவேண்டி அசட்டுத் துணிச்சலில் எங்கள் இருப்பிடத்திலிருந்து முப்பது மைல் தூரம் பயணித்திருந்தோம். மாடம்பியிடம் மாட்டிக்கொண்டதும் அன்று தான். மாடம்பி எங்கள் ஊரில் ஒரு பண்ணையாரின் தோட்டத்தில் பார்வைக்காரனாக இருந்ததால் என் முகம் அவருக்கு நல்ல பரிச்சயம்முண்டு மட்டுமல்லாமல் என் தந்தையின் மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்தவர். அந்த இடத்தில் அன்று சற்றும் எதிர்பாராமல் மாடம்பி டேய் தம்பீ என்று அழைத்தபோது திடுக்கிட்டுப் பரிதாபமாக நின்றேன். என்னையும் அவளையும் மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டே மாடம்பி போலீஸ்காரனைப் போலக் கேட்டார் யாருடே… இது

என்கூட படிக்கிறவங்க

இங்கே எதுக்கு வந்தே….

டேமுக்கு சுத்தி பாக்க

சரி இல்லையே…. கையில என்னது

மாம்பழம்..

மாடம்பி மேலும் சில கேள்விகளை வீசிக் கொண்டிருக்க முடிந்த மட்டும் அவைகளில் சிக்குண்டு விடாமல் தப்பித்துக் கொண்ட பிறகே மாம்பழம் வெட்டித்தின்ன கத்தி தந்தார். ஆனாலும் நாங்கள் பயந்து போயிருந்தோம்.

‘காலம் மோசம்பிள்ளே…… இனி இப்படி தனியா வரப்புடாது நானும் நிக்கேன்…… நீங்க சுத்திபாருங்க……. இரண்டரைக்கு ஒரு பஸ் உண்டு அதுல ஏத்திவுடுவேன்…… பொன்னுபோல ஊருபோய் சேந்திரனும’; தலையாட்டினோம்.

இரண்டரை பஸ்சுக்கு மேலும் மூணு மணிநேரம் இருந்தது. தேங்காய் சில்லுபோல அடர்த்தி கொண்டிருந்த மாம்பழம் நல்ல ருசி. முன்பு எப்போதும் சாப்பிட்ட வகையிலுள்ளதுமில்லை. மாசு மருவற்று மஞ்சள் நிறத்திலிருந்த மாம்பழத்தில் ஒரு சிவந்த படரலும் உண்டு. அவள் துண்டுகளாக வெட்டியதிலிருந்து மாடம்பிக்;கு கொடுக்கப்பட்ட துண்டை வாயில் வதைத்த உடன் சப்புக் கொட்டியபடி சொன்னார். மக்கா பயங்கர ருசி…….எங்க உள்ளது…… நான் அவளைக் காட்டியபோது மாடம்பி அவளை மலைப்பாக பார்த்துக்கொண்டே ‘தேவலோகத்திலிருந்து மாம்பழத்தோட இறங்கிவந்திட்டாளா…. இந்த இனிப்பு இனிக்கு… கொள்ளாம்டே. நமக்கு நட்டுருவோம். என்றபடி மாடம்பி டேமின் அருகிலுள்ள அவரின் பராமரிப்புத் தோட்டத்துக்கு அழைத்துப்போனார். எதிரில் வந்த ஒருவரிடம் நமக்கு வேண்டப்பட்ட பிள்ளைங்கதான் ஆராய்ச்சி படிப்புக்காக வந்திருக்காவோ என்ற போது நானும் அவளும் ரகசியமாக சிரித்துக்கொண்டோம்.

சுற்றிலும் காட்டாமணக்குச் செடிகளால் வேலியாக்கப் பட்டிருந்த மாடம்பியின் பராமரிப்பிலுள்ள பெரிய தோட்டத்தில் முன் பக்கம் ஒரு படலமைக்கப்பட்டு ரோட்டோரமாகவே இருந்தது. ஓன்றிரெண்டு மாதங்களுக்கு முன்னால் தான் சுற்றிலும் தெங்கு நட்டுப் பிடித்திருப்பார்கள் போலும். அது இன்னும் பள்ளதிலிருந்து மேலெழும்பவில்லை தோட்டம் வலுப்பெற இன்னும் சில ஆண்டு காலம் பிடிக்கும் என்றார். தோட்டத்தின் நடு நாயகமாக வாக்காய்க் கிடந்த செம்மண் தரையில் மண்வெட்டியால் நாலு வெட்டுதான் வெட்டியிருப்பார். என் கையிலிருந்த மாங்கொட்டையைக் காட்டி இரண்டுபேரும் சேர்ந்து நின்னு அதப் போடுங்க என்ற போது நானும் அவளும் நெருக்கமாக நின்று அந்த மாம்பழ விதையை பிரார்த்தனையோடு குழிக்குள் வைத்து கைகளாலே மண்ணைத்தள்ளி மூடி வைத்தோம.; ஈர நைப்போடு மண்ணாகியிருந்த எங்கள் கைகளை மாடம்பி காவட்டையில் கொண்டுவந்த தண்ணீரில் கழுவி நீரையும் அதில் ஊற்றிவிட்டபோது அவர் அந்த நிலம் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே பேசினார். பேரு, அழகு, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு இந்த ஆறும் கருவுல உள்ளது. கரைக்ட்டா வந்து சேந்திருக்குப்பாத்தியா. எங்க எது வரணுமோ அது வந்து சேந்திடும்… எல்லாம் வகுத்தது.… இந்த மண்ணுல மரம் நட்டு வளக்கவன் கடவுள் மாதிரி.

நானும் அவளும் அன்று இனம் புரியாத மகிழ்வோடு தோட்டத்தைச் சுற்றி வந்து அங்கிருந்த குளுமையான ஒரு கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாடம்பி தோட்டத்தின் வெளியே சரளைக் கற்கள் நிரம்பிய சாலை முனையிலிருந்த தேநீர் கடையிலிருந்து வாங்கித்தந்த பலகாரங்களை பகிர்ந்து தின்னும் போதும் இடையிடையே எங்களை நோட்டமிட்டுக் கொண்டே மாடம்பியும் பேசிக் கொண்டிருந்தார். இரண்டரை பஸ்சில் கிளம்பும் நேரத்தில் மறு வாரம் வரலாமா என்றபோது தலையை வடக்கும் தெற்குமாகக் ஆட்டிக்கொண்டு அது சரிப்படாது மக்கா என்றார். சரிபடாது மக்கா என்ற வார்த்தை ஒரு பாடு அர்த்தங்களைக் கொண்டிருந்தது. ஆனாலும் அன்றிலிருந்து சரியாக மூன்றரை மாதத்திற்கு பிறகு ஒரு சனிக்கிழமை நானும் அவளும் மாடம்பியின் பாரமாரிப்பிலுள்ள அந்த தோட்டத்துக்குப் போய் விட்டோம். அப்போது மாமரம் எங்கள் மார்பு உயரத்திற்கு ஒற்றைக் குச்சியாய் வளர்ந்திருந்தது எட்டோ பத்தோ இலைகளோடு. மரம் நட்ட முதல் பயணத்திற்குப் பிறகு அதுவும் விடுதியின் அருகே வைத்து அது முளைத்திருக்குமா என்று அவள் கேட்டப் பிறகு தெரியாது நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என இரண்டாவது வாரம் நான் மட்டும் தனியாக கிளம்பிப் போயிருந்தேன். என்னை பார்த்ததும் மாடம்பி சுற்றி சுற்றித் அவள் எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று தேடிய அவரின் சுழன்றலையும் பார்வை நாலாபுறமும் அலைபாய்ந்து நான் மட்டும் தான் தனியாக வந்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்தியப் பின்னரே அழைத்துப்போனார்.

இளம் குங்குமக் கலரில் ஒரு தெளு ஈரம் உலராத மண்ணுக்குமேலே செல்லமாக தலைகாட்டியதை ஆர்வாமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கணத்தில் பார்த்தது போல ஒரு அற்புதமான தெளுவை வாழ்வில் பின்னர் ஒருபோதும் பார்த்ததில்லை என்கிற தோணுதல் இப்போதும் எனக்கு பொய்யாகவே இல்லை. இரண்டாம் பிறையை தரையில் நட்டுவைத்ததைப்போல பேரழகு முளையாக மெல்ல எழுந்து வந்திருந்தது. உன் பேர அதுட்ட சொல்லு.. அதுக்கு கேட்கும் என்றார் மாடம்பி. கேட்குமா என்றேன் மறுபடியும். கேட்கும் அது ஒரு உயிர் என்றார். நானும் மாடம்பியும் மாமர முளையின் அருகே மிக நெருக்கமாக அமர்ந்திருந்தோம். எனக்கு சிரிப்பாக வந்ததது சிரித்துக் கொண்டே என் பெயரை மெல்லச் சொன்ன போது முளை மண்புழுவைப்போல மெலிதாக அசைந்தது. மாடம்பியின் கவனம் திசைமாறிய ஒரு தருணத்தில் அவள் பெயரையும் சொன்னேன் அப்போதும் அந்த மண்புழுவின் அசைவு முந்ததைய அசைவிலிருந்து எவ்வகை மாற்றமும் இன்றி முளையில் தென்பட்டது.

விடுதியருகிலான அன்றைய பேச்சில் அவள் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள். என் பெயரைச் சொன்னதும் கூட அசைந்ததா… அசைவு எப்படி இருந்தது… அழகாக இருக்கிறதா… உனக்கு அது என்னைப் போல் தெரிந்ததா… அன்று அவள் எனை நோக்கி கேட்ட கேள்விகளும் அவளின் முகபாவனைகளும் எண்ணிக்கையற்றவை. பின்னர் நாங்கள் அந்த மரத்தின் நினைப்போடே வேறு வேறு மரங்களைக் குறித்து சிந்திக்கத் துவங்கி எங்களின் பிரதான பாடுபொருள் மரங்களாகிப் போனது. மரங்களைப் பார்க்கும் விதமும் எங்களிடம் முன்புபோல இல்லாமல் முற்றிலும் மாறிப்போய் உலகிலுள்ள எல்லா மரங்களும் எங்களின் அதிசயத்திற்குரியதாகவும் பேரன்பிற்குரியதாகவும் நொடிப் பொழுதில் மாறிவிட்டது. எல்லா கட்டிடங்களையும் அழித்தொழித்துவிட்டு மரங்களை நட்டுத் தள்ளிவிடவேண்டும் என்றேன். பிறகு பிறகு என கேட்டுக் கொண்டிருந்தாள். சாலைகளில் எல்லாம் மரம்நட்டு போக்குவரத்தை மாற்றிவிட வேண்டுமென்றேன். மரம் வெட்டுபவனை எல்லாம் சகாரா பாலைவனத்துக்கு கடத்திடணும் என்றேன். பிறகு என இன்னும் கேட்டாள். அவளின் ‘பிறகு’ தீரவே இல்லை. எனக்கு அப்போது சில நாட்களாக மரக்கிறுக்கன் என்று ஒரு செல்லப்பெயர் வைத்திருந்த அவள் விடுதியிலிருந்து விடைபெற்றுப் போகும் வரை தனியான எங்கள் உரையாடலில் எல்லாம் அந்த பெயரையே குறிப்பிட்டுக் கொண்டிருந்தாள.; அவள் மாடம்பியின் தோட்டத்துக்கு அழைத்துப்போகச் சொன்னப் பிடிவாதத்தை அப்போது உடனடியாக நிறைவேற்ற இயலவில்லை. ஆனாலும் நான் பின்னரும் மூன்று மாதங்களில் இரண்டு முறை போய் வந்திருந்தேன். அப்போதெல்லாம் பச்சை இலைகளில் சிலதும் இளம் குங்குமக்கலரில் சில தெளுவுகளுமாய் எங்கள் மாமரம் ஒரு அடி உயரத்திற்கு வந்துவிட்டது. நிறைய முறை பெயர் சொல்லி; விளையாடியிருக்கிறேன். என் கையால் உரம் வைத்து தண்ணீர் விடவேண்டுமென மாடம்பியிடம் பிடிவாதமாக நின்றபோது உரம் இப்போது வேண்டாம் தண்ணீர் வேண்டுமானால் விடு என்றார். உரம் வைத்தால் என்னவென எனது துடுக்குத்தனமான கேள்வியை மாடம்பி அமிழ்த்துப் பிடித்து அது பச்ச பிள்ளை மக்கா வளரட்டும் நமக்கு உரம் வைக்கலாம் என்றார். நான் அன்று கிளம்பும் முன்னால் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணத்தோடு வேறு சொற்களை சப்தங்களாக்கி மிதமான மிதமற்ற வகைபாடுகளில் கத்திப் பார்த்த போதும் செடி அசையவேயில்லை. வேண்டு;மென்றே தொண்டையை இறுக்கி குரல் மாற்றி என் பெயரை மெதுவாகச் சொன்னேன். செடி மெல்ல அசைந்தது.

மாடம்பி பின்னால் நின்று கவனித்தப்படி ‘எப்படி மாற்றிச் சொன்னாலும் உம் பேருதான் அதுக்கு தனியா தெரியுதுடே’

இப்ப பாரு ஒய் என்றபடி அவளின் பெயரைச் சொன்னேன். செடி அவ்வாறே செல்லமாய் அசைந்தது.

மாடம்பி சிரித்தபடி ‘கொள்ளாம்புடே நீயும் அவளும் இந்த மாமரத்துக்க அப்பனும் அம்மையும்மாக்கும் அதான்’

நான் மாடம்பியிடம் கேட்டேன். ‘அப்போ நீரு’

‘நான் வளர்ப்பு தந்தை’

மாடம்பி ஹோ ஹோ என பெருங் குரலெடுத்துச் சிரித்துக் கொண்டிருக்கும்போது மெல்ல கேட்டேன்

‘ஒய் அவள செடி பாக்க ஒரு நாள் கூட்டிட்டு வரட்டா’

சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு மாதிரியாக பார்த்தபடி

‘அவயாரு அவளுக்கும் உனக்கும் என்னா…. ஒண்ணுகெடக்க ஒண்ணுண்ணா நேர இப்பவே பஸ்ச பிடிச்சி ஏறிப்போய் சாயிப்புட்ட விசயத்த சொல்லிப் போடுவேன் பாத்துக்கோ’

‘எனக்கும் அவளுக்கும் ஒண்ணும் கிடையாது… கூடப்படிக்கிறா…. பழக்கம்.. என்ன அவளுக்குப் பிடிக்கும்’

‘உனக்கு அவள பிடிக்காதா…’

பிடிக்கும் என்றபோது முறைப்பதைப் போல பார்த்த அவரிடம் அன்றைக்கு பேசிப்பேசி மாலை நாலரை பஸ்ஸில் தான் கிளம்ப முடிந்தது. மாடம்பி துளைத்து துளைத்து கேள்வி கேட்டார். எனக்கும் அவளுக்கும் ஒன்றும் கிடையாது என்று ஸ்தாபித்து விட்டேன். மாடம்பி அவளை கூட்டிவாவென்றும் சொல்லவில்லை வரவேண்டாமென்றும் சொல்லவில்லை பொத்தம் பொதுவாக நின்றார். அன்றைய மாடம்பியுடனான உரையாடலில் ஒரு உணர்ச்சிகரமான விசயம் நடந்தது. பேச்சுவாக்கில் ஒரு இடத்தில் மாஞ்செடியை புடிங்கி எறிந்துவிடுவேன் என்று சொன்ன அந்த கணத்தில் அவ்வளவு தூரம் நான் தேம்பி தேம்பி அழுவேன் என்று மாடம்பி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என்னை சமாதானிக்கும் பொருட்டு அன்று மதியம் சோறும் வாங்கித்தந்து செடிக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொள்வேன் என சத்தியமும் செய்தார். நாலரை பஸ்சுக்கான நீண்ட காத்திருப்பில் பொதுவாக மரங்களைப் பற்றியும், அதன் வளர்ச்சி, பராமரிப்பு, மரத்திற்கான நோய்நொடிகள், பூக்கும் காய்க்கும் காலங்கள் பற்றியும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். பஸ் பயணத்தில் வரும் வழியிலெல்லாம் சாலையோரத்து வீட்டின் முற்றங்களிலுள்ள மாமரங்களை எல்லாம் எண்ணிக் கொண்டே வந்தேன். மறுநாள் மாலை விடுதியின் அருகே வைத்து அவள் மொத்தம் எத்தனை மரம் என்றாள். உத்தேசமாக ஒரு எழுபதுக்கு மேல் இருக்கும் நான் இடதுபக்கம் மட்டும்தான் எண்ணினேன் என்றபோது அடிவானத்தின் ஐஸ்வரியம் நிறைந்த அவளின் புன்னகையில் நின்று விடாமல் மாடம்பி சொன்ன மரங்களைப் பற்றிய குறிப்புகளை அவளிடம் கதைகதையாக சொல்லிக்கொண்டிருந்தேன். நேற்று மாமரத்தின் தலையாட்டல் அமைதியான நீரின் மேற்பரப்பில் மென்மையான காற்று வீசும்போது ஏற்றபடும் அதிர்வைப்போல் இருந்தது என்றேன். நானும் அவளும் அந்த மாமரச் செடியின் அப்பா அம்மா என மாடம்பி சொன்னதைச் சொன்னபோது அவளின் முகபாவனையும் சிரிப்பும் கறந்த பாலின் பரிசுத்தம் போல் இருந்தது. அவள் விடுதியை ஒட்டிய சாலையில் பெரும் போக்குவரத்தெல்லாம் கிடையாது. காலணியின் பின் பக்கமாக வந்து ஒற்றைச் சாலையை அடைந்து விட்டால் அது நீண்டுகிடக்கும். இரண்டு பக்கமும் அழகழகான பெரும் மரங்கள் உண்டு. அந்த சாலை பிரதானச் சாலையோடு இணையும் முனையில் ஒரு பூங்காவும் இருந்தது. ஒன்றிரண்டு முறை அந்த ஒற்றைச்சாலையில் நானும் அவளும் விடுதி வரை நடந்துகொண்டே பேசியபடி போயிருக்கிறோம். மாடம்பியின் பராமரிப்பிலுள்ள தோட்டத்தில் மாமரம் முளைத்தப்பிறகே அந்த ஒற்றைச்சாலையின் மரங்கள் மீதான ஈர்ப்பும் ரசிப்பும் இருவருக்குள்ளேயும் மிகுந்திருந்தது. இந்த மரங்களை எல்லாம் மிகப்பெரிய அன்பானவர்களால்தான் நட்டு வைத்திருக்க முடியும் என்றவள் மரம் இன்னொரு மரத்தோடு பேசுமா என அவளின் வலப்பக்கம் நடந்துகொண்டிருந்த என்னிடம் கேட்டாள்.

பேசிக்கொள்ளும் காதல் செய்யும் என்றபோது அவள் பட்டென ‘ஆனால் ஏமாற்றாது’ என்றபடி அமைதியாக நடந்தவள் பின்னர் என்னை நம்ம மரம் பாக்க எப்போ கூட்டிட்டு போவே எனக்கு அதைப் பார்க்க வேண்டும். எனக்கு இப்போது கனவுகளில் உன்னோடு அந்த மரமும் வருகிறது. நேற்று அதிகாலை கனவில் மாமரத்தை என் மடியில் கிடத்தி அதற்குப் பூச்சூடினேன் என்றவள் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் நான் தனியாக போய்விடுவேன். உன் மாடம்பியைக் கண்டு எனக்கொன்றும் பயமில்லை பெரிய வளர்ப்பு தந்தையாம்…. அம்மாவை பார்க்கவிடாமல் செய்வதுதான் நியாயமா என்றாள். நாம் விரைவில் போகலாம் என்றேன். பின்னர் ஒரு மாலைப் பொழுதில் விடுதியருகே வைத்து நீயாவது போய் பார்த்து வா என்றபடி உன் பெயரை எத்தனை முறைச் சொல்வாயோ அத்தனை முறையும் என் பெயரையும் சொல்ல வேண்டும் என்றாள்.

இம்முறை பயணம் என்னை தவியாய் தவிக்க வைத்திருந்தது. என் தவிப்பின் விளைவே பயணத்தில் வலப்பக்க மாமரங்களை எண்ணும் திட்டத்தைக் தொலைத்துப் போட்டுவி;ட்டது. அந்த தோட்டத்தில் எனக்காக மாமரம் இருக்கிறது. அது என்னை தேடுகிறது என்பதால் அதைப் பார்க்கும் ஆவலும் தவிப்புமாகித் துடித்துக் கிடந்தது மனம். பஸ்சில் ஏறி அமர்ந்த தருணத்தில் இருந்து ஒரு நூறு முறைக்கு மேல் எங்கள் மாஞ்செடியருகே போய் வந்துகொண்டேயிருந்தேன். இந்த பஸ்சுக்கு சிறகு முளைத்துப் பறந்து போய்விட்டால் கொள்ளாம் போல் தோன்றியது. ஆனாலும் இரண்டுமணிநேர யாத்திரையில் நான் அவள் மரமென கனவும் கனவில்லாததுமான ஒரு சஞ்சரிப்பில் உழலும் உலகமாய் இருந்த பயணத்தை ஒரு ஞான நிலையென்று கூச்சமின்றி சொல்லிவிடுவேன். எனக்கென்னமோ அன்றைக்கு முன்னிலும் ஒரு அரை அடி கூடுதலாக வளர்ந்திருந்த அந்த மரத்தை என் மார்போடு அணைத்துக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மாடம்பி விலகிய ஒரு தருணத்தில் அன்று அதை நான் செய்தும் விட்டேன். அந்த மரத்தின் இலையில் இருந்து வெளிப்பட்ட அதன் மூச்சுக் காற்று என் சர்Pரத்தை குளுமைப்படுத்தியது.

மறுநாள் இரு பக்கமும் மரங்கள் அடர்ந்த அவள் விடுதி உள்ள அந்த ஒற்றைச் சாலையில் நடந்து போகும் போது நேற்றைய நிகழ்வின் விவரிப்பில் அவள் கண்கள் கலங்கிப் போனாள். பின்னர் அவளின் பேச்சு இவ்வாறாக இருந்தது.

நான் மே மாததத்துக்குப் பிறகு ஊருக்குப் போய் விடுவேன். மேற்படிப்புக் குறித்து உறுதி இல்லை ஊருக்குப் போறதுக்கு முன்னால் அந்த மரக்கன்றை பிடுங்கிக் கொண்டு போய் என் வீட்டில் உன் நினைவாக நான் நட்டு வைத்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு எனக்கு உடனே அதை பார்க்க வேண்டும் என்றாள். நான் பதிலாக ஏதும் பேசிக் கொள்ளவில்லை இதன் பிறகு நாங்கள் பதினைந்து தினங்களுக்குப் பிறகு மாடம்பியிடம் சொல்லிக் கொள்ளாமலே ஒரு காலை பயணமானோம். விடுமுறை நாள் என்பதால் பஸ்ஸில் நிறைய கூட்டமில்லையென்றாலும் என் முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள் இடையிடையே வாய்க்கும் போது பேசிக் கொண்டோம். பேச்சு மரங்களைப் பற்றியதாக இருந்தது. முன்னர் எங்கள் பேச்சு பொதுவாக கவிதை பற்றியதாக இருக்கும் இப்போது கவிதையை விட மரம் சிறப்பானது என்ற முடிவுக்கு திட்டமிடுதலின்றியே வந்துவிட்டோம். எங்கள் இருவரையும் அன்று ஒரு சேர பார்த்த போது மாடம்பி சின்ன ஆச்சரிய முகபாவனையைத் தவிர்த்து வேறொன்றையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் இப்பதான் மாமரக் கன்றை முதன் முதலாகப் பார்க்கிறாள். கிட்டத்தட்ட அவள் மார்பு உயரத்துக்கு வளர்ந்திருந்தது. நுனி இலையில் செல்லமாக ஒரு முத்தமிட்டாள். நானும் பின்னர் அவ்வாறு செய்தேன். கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மாடம்பி என்னை கவனித்துக் கொண்டிருப்பது நன்றாவே தெரிந்தது அவளுக்கு மாங்கன்றை விட்டு விலக மனசில்லை. இலைகளின் வாசத்தை நாசியில் உறிஞ்சி உள்ளிளுத்து சுவாசித்தாள். சுவாசிப்பின் ரசிப்பில் இமைமூடிய அவளின் முகத்தோற்றம் இப்போதும் அந்த பெருமரத்தின் அடிப்பாகத்தில் வியாபித்துக் கிடக்கிறது. என் பெயரை அவளும் அவள் பெயரை நானுமாக மரக்கன்றிடம் சொல்லி விளையாடிக்கொண்டிருந்தோம். இடையில் மாடம்பித் தந்த கருப்பட்டிச் சாயா அத்துணை இதமானதாக இருந்தது. இரண்டரை பஸ்சுக்கு பயணப்பட ஆயத்தமான போது அவள் லேசாக அழுதுகொண்டிருந்தாள். பிடுங்கிக் கொண்டுபோகும் முயற்ச்சி உசிதமானது அல்ல அது கன்றை அழித்துவிடும் என மாடம்பி உறுதியாகச் சொல்லிவிட்டார். இரண்டரை பஸ் அன்று புறப்படும் தருணத்திலேயே ஓடி வந்து ஏற முடிந்தது. அன்று அவள் மாங்கன்றை விட்டுப் பிரிய மனமின்றி கொஞ்சிக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் மார்போடு அணைத்தும் பிடித்திருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை ஆண்களை பொத்தாம் பொதுவாகத் திட்டினாள். பஸ்ஸிலும் முன் இருக்கையிலிருந்து திரும்பியவளின் கண்கள் நீர் கோர்த்துச் சிவந்திருந்தது. அவள் எதுவும் என்னிடம் பேசிக் கொள்ளவில்லை. அவளுக்கு முன்னமே அந்த பேருந்திலிருந்து நான் இறங்கிக் கொள்ளவேண்டிய இடைவெளியில் என் ஊர் இருந்தது. நிறுத்தத்திற்கு சற்று முன்னர் திரும்பி என்னிடம் பேசினாள். மரத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள் அது ஒரு பெண் மரம.; நான். என்றாள். பேருந்து மெல்ல ஒதுங்கி நின்றது. சில மதங்களுக்குப் பிறகான ஒரு நண்பகல் என்று நினைக்கிறேன். அவள் அப்பாவும் அம்மாவும் வந்து அவ்வாறாக அவள் விடுதியில் இருந்து விடைபெற்றுப் போனாள். இதற்கு முந்திய பகலில் நானும் அவளும் ஒன்றாய் அமர்ந்து ஒரு பேக்கரியில் குளிர்பானம் பருகியிருந்தோம். அவ்வளவுதான்.

நான் முன்னமே சொன்னேனே இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதென்று. இக்காலங்களில் ஐம்பது அறுபது முறைக்கு மேல் நான் போய் வந்துவிட்டேன். என் மரக்கன்று இப்போது பெரிய மாமரம். பெரிய மாமரம் என்றால் ரொம்பப் பெரியது. பச்சை மாடம் தரித்த பிரம்மாண்டம். ஒருபாடு கிளைகளோடு நான் கட்டிப்பிடத்துக் கொள்ளும் அளவுக்கு அடிப்பாகம் உடையது. என் கட்டிப்பிடித்தலின் அளவு மாறி மாறிப் இப்போது நான் கைகளை கோர்த்துப் பிடிக்கும் அளவிற்கு வந்திருக்கிறது. கைகோர்த்துக் கட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு இன்னும் வலுதாகக் கூடும். பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை நண்பரோடு போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. அன்று மாடம்பியையும் பார்க்க முடியவில்லை. ஒன்றும் தெரியாத இருட்டு. ஆனாலும் அந்த திசைநோக்கி வாயருகே கரம் குவித்து அவள் பெயரைச் சொல்லிக் கத்தினேன். நண்பர் என்னை பரிகசித்துக் கொண்டிருக்கும் போதே மாம்பூவின் வாசனை நிரம்பிய காற்று என்னைத் தழுவிக் கொண்டது. இருட்டிலும் என் மாமரம் தலையசைத்திருப்பதை உணர்ந்து உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமானது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்திருக்கிறேன். மணிக்கணக்கில் பைத்தியக்காரனைப் போல நின்று மரத்தோடு பேசியிருக்கிறேன். கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறேன். அதன் வாசத்தை நாசியில் இழுத்து உறிஞ்சி சுவாசித்திருக்கிறேன். மாடம்பி கதை கதையாக சொல்லுவார். கதைகளெல்லாம் மாமரம் பற்றியதுதான். முதன்முதலாக ஐந்தாவது வருடத்தில் பூத்ததாம் மொத்தம் நாற்பத்தி ஏழு காய்கள் பறித்தாராம். அவர் மரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கும் விதம், பின்னர் அதன் கிளையொன்றில் வாக்காய் படுத்திருந்த விதம், மருந்து, உணவு இத்தியிலை பற்றிப்பிடித்து விடாத ஆத்மார்த்தமான கவனிப்பு என மாடம்பி மாமரத்தின் கதை சொல்லிய விதம் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். வயதில் தளர்ந்துவிட்ட மாடம்பி பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை ‘அந்த பிள்ளைய அதுக்கு பொறவு எப்பமாவது பாத்தியாடே’ என மெல்லக் கேட்ட போது இல்லை என்றதும் ‘காலம் இரக்கம்மில்லாததுடே’ என்றவர் ‘நானும் பாக்கேன் எப்பவாச்சும் இந்த மரத்த தேடி வந்திரமாட்டாளன்னு’. அன்று பேசி விடைபெறும் போது மாடம்பி மறுத்த போதும் பிடிவாதாமாக கொஞ்சம் பணம் கொடுத்தேன்.

‘இந்த மரத்த எப்பவாச்சியும் யாரும் வெட்டிடக் கூடாது’…… என்றேன் ‘எனக்க சீவன் கெடக்குற வரைக்கும் எவனையும் வெட்ட விடமாட்டேன்…..’ என தீர்க்கமாகச் சொன்னார். மாடம்பியைப் பார்த்து ஏழுவருடங்களாகிவிட்டது. மாடம்பி இறந்து போய்விட்டார் என்பதும் நம்பகமான தகவலாய் இல்லை.

மொட்டைமாடி நிலவிரவில் நான் தனித்திருந்த போது என்னைக் கொஞ்சம் கருணையாகப் பார்த்துக் கொண்டே பட்டென கேட்டாள். ‘லூசு… என்ன பாத்துட்டு இருக்கே…… மாமரத்துட்ட எப்போ கூட்டிட்டு போவ….. உன் பேரச் சொன்னா தலையாட்டுத அதிசயத்தப் பாக்கணும்….’

மறந்திருப்பாள் என்றுதான் நினைத்திருந்தேன் இப்போது விடாது நச்சரிக்கிறாள். இவளிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ ஒரு உந்துதலில் தலையாட்டும் மாமரம் பற்றி சின்னக் குறிப்பை மட்டும் சொன்னதிலிருந்து அவளுக்கு மாமரம் பார்க்கும் ஆவல் உள்ளுக்குள் உருப்பெற்றுவிட்டது. இனி மறந்துவிடுவாளென தட்டிக்கழிக்கவெல்லாம் முடியுமா என்பதும் தெரியவில்லை குழந்தையைப்போல குதூகலிக்கும் அவளை அழைத்துக் கொண்டு மறுவாரம் மாமரம் பார்க்கப் போவதாக முடிவு செய்து கொண்டேன்.

‘மவனே….. மாமரம் மட்டும் உன் பேர் சொன்னதும் தலையாட்டலே…. உனக்கு டூப்பு சங்கரன்னு பேரு வச்சிருவேன்….’ எனக்கு கொஞ்சம் பயமும் இருந்தது. ஒருவேளை இவள் என் பெயர் சொல்லி தலையாட்டவில்லை என்றால் போடா லூசு என்பதற்குப் பதிலாக டூப்பு சங்கரன் கொஞ்சம் பரவாயில்லை தானே

பயணத்துக்கு அவள் கொஞ்சம் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து வைத்திருந்தாள். கிளம்பிய தயாரெடுப்புகள் எல்லாம் ஒரு நாள் இன்ப சுற்றுலாவுக்குரிய அலங்காரங்களைக் கொண்டிருந்தது. அதிகாலையில் கிளம்பினோம் மாமரம் பார்த்துவிட்டு அங்கு அருகே ஒரு அருவியில் குளிப்பதாகவும் உத்தேசம்.

‘இப்பவாவது உண்மையைச் சொல்லு லூசு…. மாமரம் தலையாட்டுமா’

‘அவசரப்படாதே…… வா…..பார்க்கலாம்’

அவள் லூசோடு சேர்த்து இப்போது டூப்புசங்கரனையும் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கார் பயணம் என்பதால் ஒன்றேகால் மணிநேரத்தில் வந்துவிட்டோம். மே மாதத்தில் பார்த்ததைவிட மாமரம் வனப்பாக நின்றிருந்தது பிரமாண்டமான அதன் அற்புதம் பார்த்த கணத்திலேயே என்னைக் குளிர்வித்துக் கொண்டிருக்க அவள் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சொல்ட்டா என்றவளிடம் சொல்லு என்றேன் சொன்னாள். மாமரத்திடம் ஒரு அசைவும் இல்லை கோபமாக எனைப் பார்த்துக் கொண்டே ‘லூசு என்ன பைத்தியக்காரின்னு நினைச்சியா….’

கோபப்பட்டுவிட்டாள். அவளை சமாதானப்படுத்தி நான் சொல்கிறேன் பார் என்றேன். நான் சொன்னேன் மாமரம் அவ்வளவு அற்புதமான அசைவை வெளிப்படுத்தியது. அசைவென்றால் அசைவு வாரி அணைக்க வா என்று அழைப்பது போல். நம்பிக்கையும் நம்பிக்கையற்றும் வியப்பாகப் பார்த்தவள் கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

நான் சொன்னா ஏன் அசையல….

ஒரு தடவைக் கூட சொல்லிப்பாரு….

அவள் தொடர்ச்சியாக ஆறு ஏழு முறை சொன்னாள் எந்த அசைவும் மாமரம் வெளிப்படுத்தவில்லை என்னை இன்னும் ஒரு முறை சொல்லச் சொன்னாள். நான் நிமிர்ந்து நின்று மரவாசனையை இழுத்து சுவாசித்தப்படி மாமரம் பார்த்துச் சொன்னேன். என்னை வாரி அணைக்கும் வாஞ்சையோடு மரம் அசைந்தது. அவள் கலங்கிப்போனாள். கொஞ்சநேரம் நின்றிருந்தவள் என்னைப்போல முகபாவனை அமைத்துக் கொண்டு நிமிர்ந்து மரம் பார்த்து சொன்னாள். அசைவில்லை. நான் அவளிடம் மெல்லச் சொன்னேன்;. ‘என் பெயரோடு ‘குயின்;’ என சேர்த்துச் சொல்லிப்பார். அவள் அவ்வாறே சொன்னாள். மாமரம் ஆடியது. அது ஒரு கொண்டாட்டமான ஆட்டம் போல இருந்தது. ‘படச்ச ரப்பே…. இது என்ன அதிசயம்….’ என வியந்தவளின் புருவம் அத்துணை நேர்த்தியாய் வடிவம் கொண்டிருந்து. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவள் நெருக்கத்தில் வந்து கேட்டாள் டேய் லூசு ‘குயின்’ என்றால் யார்.

இனி நான் அவளுக்கு ஒரு கதை சொல்லவேண்டும்

– July 25, 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *