மானிடவர்க்கென்று பேச்சுப்படில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 24,601 
 
 
(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி)

’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால வழிபாடு நடந்தேறுவதற்கு அறிகுறியாக நாத வெள்ளமாகப் பல முறை முழங்கி ஓய்கிறது. அதன் ஒலி முழக்கம் ஓய்ந்த பின்னரும் கூடப் பெரியாழ்வாரின் உள்ளத்திலே ஓங்காரமிட்டுக்கொண்டிருக்கும் உணர்ச்சி அலைகள் தணிந்து அடங்குவதாயில்லை.
பல்லாண்டு பல்லாண்டாய்ப் பாசுரம் எழுதிய வாயும்,நெஞ்சும் ஓய்ந்து கிடக்க…நினைவுகளே மரத்துப்போய்விட்ட மோன நிலைக்கு உள்ளத்தைக் கொண்டுபோய் நிறுத்திவிட வேண்டுமென்று அவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில்,நம்பி உள்ளே நுழைகிறான். ஆழ்வார் எழுதிப்போடுகிற பாசுரங்களை ஏடுகளில் படியெடுக்கிற வேலையைப் பக்தி சிரத்தையோடு ..ஒரு தவமாகவே கருதிச் செய்கிற இந்த இளைஞன்,அவரிடம் தமிழ் பயில்வதை..அதற்குக் கிடைத்த வாய்ப்பை ஓர் அரும்பேறாகவே எண்ணிக்கொண்டிருப்பவன்.
இன்று புயலடித்து வீழ்த்திய ஆலமரமாகச் சாய்ந்து சரிந்து நிலைகுலைந்து கிடக்கும் பெரியாழ்வாரின் தோற்றம் அவனைப் பேதலிக்கச் செய்ய அருகே சென்று அவரை மெல்ல எழுப்ப முயல்கிறான்.
‘’ஐயா..தங்களுக்கு உடல்நலமில்லையா என்ன? மருத்துவரை வேண்டுமானால் அழைத்து வரட்டுமா….?’’
அரைக்கண் மூடிய நிலையில் ஆழ்வாரின் வாய் ..
‘’கோதை..!கோதை…!’’ என்று மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கிறது.
‘’கோதை நாச்சியாரைக் கூப்பிடட்டுமா ஐயா?’’
கைகளால் வேண்டாமென மறுத்துச் சைகை காட்டுகிற ஆழ்வார் தம்மைச் சமாளித்துக் கொண்டவராக எழுந்து உட்காருகிறார்.
‘’கோதை…கோதை…! அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் நம்பி ?’’
’’வழக்கம்போலத்தான் ஐயா!அரங்கன் மீது பாமாலைகள் புனைந்து பாடிக் கொண்டிருக்கிறார்’’
என்று பதிலிறுத்தபடியே …ஆசானின் மனநிலை சரியில்லாததை உணர்ந்து கொண்டவனாய் அங்கே சிதறிக் கிடக்கிற சுவடிகளை அடுக்கிப் படியெடுக்க ஆரம்பிக்கிறான் நம்பி.
‘ஆமாம்…இனிமேல் அந்தப் பேதைப் பெண் கோதைக்கு அந்த அரங்கனையும்,அவனைப் பாடுகிறபாடலையும் விட்டால் வேறென்னதான் சாஸ்வதம் ?’
என்று தன் மனதுக்குள்முணுமுணுத்தபடி கண்களை மூடி அங்கேயுள்ள தூணில் சாய்ந்து கொள்கிறார் பெரியாழ்வார்.
மூடிய அவர் கண்களுக்குள் இதுவரை மன அறைக்குள் முடங்கிக்கிடந்த நினைவுச் சுருள்கள் காட்சிகளாய்ப் பிரிந்து நீள..
துளசிப் பாத்தியடியில் பஞ்சுப்பொதியாய்த் துவண்டு நெளிந்திருந்த பிஞ்சுக் கோதை – ஆட்கொள்ளமுடியாத அழகுஜ்வலிப்புடன் அசைந்து வரும் ஆண்டாளாக உருமாற்றம் பெற்ற நிகழ்ச்சியை அவர் உள்ளத்திரை ஓவியமாய் விரிக்கிறது.
அழகுமணித் தொட்டிலில் கையசைத்துக் காலுதைத்துக் குமிழ்சிரித்துக் கொண்டிருக்கிறாள் சின்னக்கோதை.
’’மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி..’’
என்று வையமளந்த வைகுந்த வாசனுக்குத் தாலேலோ பாடியபடி அவளுக்குத் தூளியாட்டிக் களிக்கிறார் பெரியாழ்வார்.
அம்புலி காட்டி அவளுக்குச் சோறூட்டுகையில்,சப்பாணி கொட்டித் தளர்நடை பயின்று அவள் நடமிட்டு வரும் அழகில்…. அன்போடு நீராட்டி ஆசையோடு அவளுக்குப் பூச்சூட்டுகையில்…இன்னும் இன்னும் அவள் காட்டுகிற பிள்ளைக் குறும்புகள் அனைத்திலும் அரவணையில் பள்ளி கொண்ட ஆண்டவனின் அழகையே கண்டவராய் , அவன் புகழையே பாடிப்பாடிப் பரவசப்பட்டுப் போகிறார் அவர்.
காண்பதெல்லாம்.கண்ணனாகக்,,.
கண்ணிலே காட்டப்படுவதெல்லாம் கண்ணனின் உருவாகக்
கேட்பதெல்லாம் அவன் பெயராக வளரும் கோதை , முதன்முதலில் நா அசைத்துப் பேசத் தொடங்குகிற வார்த்தையே கண்ணனின் திருப்பெயராகித் தித்தித்திருத்தல் கண்டு பிறவிப்பயனையே அடைந்து விட்டவராய் அவர் பூரித்துப் போகிறார்.
சிற்றாடை கட்டிச் சிரித்துவரும் நங்கையாகப் பெண்மை அரும்பு கட்டி மலர்கிறாள் ஆண்டாள்.
அரங்கன் பாசம் அவள் உள்ளத்தில் ஆலாய்த் தழைத்திருக்கிறது.
தன் வயதுப் பெண்களுடன் சேர்ந்து கொண்டு ஆற்று மண்ணைக் கொழித்து அவர்களைப் போன்றேஅவளும் சிற்றில் அமைக்கிறாள்.
ஆனால் அவள் அமைக்கிற இல்லம் அரங்கனுக்காக !
அவர்களோடு இணைந்து மணப்பொடி இடிக்கிறாள்;மாலைகள் தொடுக்கிறாள்…அரங்கன் மேனியை அழகுபடுத்துவதற்காக !
அப்போதும் அந்த மங்கையர் குழாத்திடையே தான் வளர்த்த நாச்சியார் வித்தியாசமானவள் என்ற பெருமித உணர்வே பெரியாழ்வாரின் உள்ளத்தில் வியாபித்திருக்கிறது.
உண்ணும் சோறும்,பருகும் நீரும் எல்லாம் கண்ணனாக அவள் பாவிக்கிற அற்புதம்தான் அவரது நெஞ்சுக்கு எத்தனை இதமாக..உவப்பாக இருக்கிறது? தோழிப் பெண்கள் நடுவில் இருக்கும்போது ஆண்டாளை வேண்டுமென்றே சீண்டிப் பார்ப்பதில் அவருக்குத்தான் எத்தனை உற்சாகம் !
‘’கோதை..உனக்குக் கணவனாக யார்வர வேண்டும்..? சொல் பார்ப்போம்..’’
எத்தனை முறை கேட்டாலும் அரங்கனின் பெயரை அலுக்காமல் சலிக்காமல் அவள் உச்சரிக்கிற அழகிலே சிலிர்த்துப் போகிற ஆழ்வார்
‘என் மகளை…இந்த அழகை அந்த அரங்கனைத் தவிர வேறு யாராலேதான் கட்டியாள முடியும் ?’
என்று நெஞ்சுக்குள் புளகித்துப் போகிறார்.
விண்ணகக் கனவுகளிலேயே இதுநாள்வரை சஞ்சரித்துக் கொண்டிருந்த பெரியாழ்வார் மண்ணுலக மாயைகளிலும் கால் பதித்தாக வேண்டிய காலம் வருகிறது.
அதை அவருக்கு உணர்த்துகிறாள் மாணிக்கவல்லி..ஆண்டாளின் செவிலித் தாய்.
வழக்கமாக ஆழ்வாருக்கும்,கோதைக்கும் செய்ய வேண்டிய பணிவிடைகளை முடித்து விட்டுப் பொழுதோடு புறப்பட்டுப் போய்விடுகிற மாணிக்கவல்லி அன்று மாலை சற்றுத் தயங்கித் தாமதித்தபடி நிற்கிறாள்.
‘’என்ன மாணிக்கவல்லி…? ஏதேனும் சொல்ல வேண்டுமா ?’’
‘’ஆமாம் ஐயா ! எல்லாம் நம் கோதையைப் பற்றிய கவலைதான்!
ஒரு தாய் என்று இருந்திருந்தால் உரிய காலத்தில் எல்லாம் கவனித்திருப்பார்கள் !’’
அவள் நீட்டிக் கொண்டே போக அடிபட்டாற்போலக் கலங்கிப் போகிறார் ஆழ்வார்.
‘’நான் எந்த வகையில் கோதைக்குக் குறை வைத்தேன்…?எந்தச் சீராட்டலில் நான் இளைத்துப் போனேன்..சொல் மாணிக்கவல்லி !’’
செவிலி மென்னகை செய்து கொள்கிறாள்.
‘’அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா! என்ன இருந்தாலும் கோதைக்கு வயதாகிக்கொண்டு போகிறதல்லவா?உரிய காலத்தில் தகுந்த வரனைப் பார்த்து அவளை ஒருவரிடம் ஒப்படைப்பது நம் கடமையில்லையா? அதற்காகத்தான் சொன்னேன்!’’
‘ஓ..அப்படியும் ஒன்றிருக்கிறதோ…? உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் பல கற்றும் என்ன பயன் ?’
ஆனாலும் ..அதில் எந்தநெருடலும் இருப்பதாய் ஆழ்வாருக்குப் புலப்படவில்லை.
தன் திருச்செல்வியை..கண்ணுக்குள் மணியான தனருமைக் கோதையை மணக்கும் தகுதியுள்ள நல்ல ஒரு மானுடன் கிடைக்க வேண்டுமே என்ற பொறுப்புள்ள தந்தைக் கவலை ஒன்று மட்டுமே அவரைப் பற்றிக்கொள்ள அந்தக்கடமையினையும் நம்பிக்கைக்குரிய தன் நண்பர்களிடம் இறக்கி வைத்து இளைப்பாற்றல் காண்கிறார் அவர்.
வில்லிபுத்தூரில் பரவுகிற விவாகச் செய்தி கோதையின் காதுகளுக்கும் எட்ட..அவள் துடித்துப் போனவளாய்த் தந்தையைத் தேடி ஓடி வருகிறாள்.
கலங்கிப்போய்ச் சிவந்திருக்கிற அவள் கண்களும் , துடிக்கிற அவள் உதடுகளும்
‘அவதரித்த நாள் முதலாக அரங்கனையே எனக்கு வரித்தளித்த நீங்களுமா அப்பா இப்படி ?’
என்று குற்றச்சாட்டு படிகிறபோதுதான் அவளுக்குத் தாய்ப்ப்பால் புகட்ட முடியாத குறையை ஈடுசெய்கிற விதமாக அவளது உயிரின் ஒவ்வொரு அணுவிலும் ஜீவசத்தாகக் கண்ணனையே செலுத்தி விட்டது , தான் செய்த தவறோ என்ற எண்ணம் ஆழ்வாரின் உள்ளத்தில் முதன்முதலாக முளை விட்டு உறுத்த ஆரம்பிக்கிறது.
‘’அம்மா கோதை ! மண்ணுலகத்திலே மனித வடிவத்திலேதானம்மா தெய்வத்தைத் தரிசிக்க முடியும் ! சீதையை மணந்து கொள்ள ஒரு இராமன் பிறந்ததும் இந்த மண்ணிலேதானே ! நீ அந்தத் திருமகளின் அவதாரம்தான் என்று நான் நம்புவது உண்மையானால் உனக்கென்றே அந்த மாயக்கண்ணன் எங்காவது பிறந்திருக்காமலா போய்விடுவான்?’’
-அருமை மகளின் தலை முடியைப் பாசத்தோடு வருடி விட்டபடி அப்போதைக்கு ஏதோ சமாதானம் கூறி அவளை அனுப்பி வைக்க அவர் முயற்சித்தாலும் அதில் இருவருக்குமே முழு நிறைவு ஏற்பட்டிராததை இருவராலுமே நன்றாக இனம் கண்டு கொள்ள முடிகிறது.

உடலையே உறைய வைக்கிற மார்கழிக் குளிரில் வாடைக் காற்றோடு சேர்த்து
‘’எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாமாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்.
மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்..’’
என்ற பாவைப் பாடலின் வரிகள் …உயிரையே உருகி நீராய் ஓட வைக்கிற ஆண்டாளின் மென்குரலில் தோய்ந்து காதுகளில் ரீங்கரிக்கத் திடுக்க்ட்டுக் கண் விழிக்கிறார் பெரியாழ்வார்.
ஆவணியில் தொடங்கிய திருமணப்பேச்சு ஐந்து மாதங்களாக நீண்டு கொண்டு போவது அப்போதுதான் அடிமனதில் உறைக்க ஆண்டாள் பாவை நோன்பு தொடங்கிய அந்த நாள் அவருள் வந்து நிற்கிறது.
அதிகாலையில் நீராடி வழக்கம் போலக் கால்களில் விழுந்து வணங்கி நின்ற மகளைத் தூக்கி நிறுத்துகிறார் ஆழ்வார்.
இதுவரை அவர் கண்டிராத உறுதியும்,தீர்க்கமும் கண்ணில் மின்னலிட அவள் பேசுகிறாள்.
‘’அப்பா!தாங்கள் சொன்னது போலவே இந்த மண்ணுலகிலிருந்து கொண்டே என் கண்ணனை அடைவதற்குப் பாவை நோன்பு தொடங்க முடிவு செய்திருக்கிறேன்.தாங்கள்தான் ஆசி கூறி வழி காட்ட வேண்டும்’’
அன்று முதல் நெய்யுண்ணாது,பாலுண்ணாது ,மையிட்டெழுதாது ,மலரிட்டு முடியாது நாட்காலை நீராடிப் பாவை நோன்பினை ஒரு தவமாகவேஅவள் இயற்றத் தொடங்கி இன்றோடு இருபத்தொன்பது நாட்களும் பூர்த்தி அடைந்து விட்டன.
நாளை..நோன்பின் இறுதி நாள் !
அவள் கண்ணன் அவளுக்குத் தரிசனம் தரப் போகிறானா?
தன்னுடைய தேடலிலும் ஒரு கண்ணன் கிடைக்காவிட்டாலும்,ஒரு சராசரி மனிதன் கூட ஆண்டாளுக்கு வரனாக இதுவரை அகப்பட்டிராததை இப்பொழுது சங்கடத்துடன் நினைத்துப் பார்க்கிறார் பெரியாழ்வார்.
வில்லிபுத்தூர் முழுவதும் தன்னை மதித்துப் போற்றும் சான்றோர்,பெரியவர்கள்,பட்டர்பிரான்கள் பலர் இருந்தும் …இந்த ஒரு விஷயத்திலே மட்டும் தாமரை இலைத் தண்ணீராக அவர்கள் விலக்கம் காட்டுகிற காரணம்,அவரது உள்ளத்துக்கு இன்னும் பிடிபடுவதாக இல்லை.
தன் மகளின் தகுதிக்கேற்ற வரன் கிட்டாததே தாமதத்திற்குக் காரணம் என்று கடந்த சில மாதங்களாகத் தாமாகக் கற்பித்துக் கொண்டிருந்தது போல… இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாதது போல் தோன்றவே இன்று எப்படியும் சடகோபரை அழைத்து இரண்டில் ஒன்று முடிவாய்க் கேட்டுவிட வேண்டுமென மனதில் உறுதி செய்து கொள்கிறார் ஆழ்வார்.
தனது இளமைக்கால நண்பரும்,அரசவையில் செல்வாக்குப் பெற்று விளங்குபவருமான சடகோபர் வழியாகத்தான் கோதைக்குப் பொருத்தமான வரன் கிட்ட இயலும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரது உளத்திலே வேரூன்றிப் படர்ந்திருக்கிறது.
சடகோபர் வந்து சேர்ந்ததும் …சிறிது நேரம் சுற்றி வளைத்து எங்கெல்லாமோ சுழன்று கொண்டிருந்த பேச்சு , இறுதியில் ஒரு வழியாக மையப்புள்ளியில் வந்து நிலைப்படுகிறது.
‘’கோதை விஷயமாக நான் சொல்லியிருந்ததை மறந்தே விட்டீர்களா ஐயா!’’
என்று பெரியாழ்வாரே நேரடியாகத் தொடங்கி வைக்கிறார்.
சடகோபரின் முகத்தில் உடனடியாகப் பரவும் கருமையை அவர் மறைக்க முயன்றபோதும் நுணுக்கமாகத் துருவும் ஆழ்வாரின் கண்கள் அதைத் தப்ப விடாமல் கவனித்து விடுகின்றன.
’’அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள் சுவாமி! கோதை வேறு …என் மகள் வேறு என்றா நான் நினைப்பேன்…ஆனால் பாருங்கள் …எனக்கென்னவோ நம் கோதைக்கேற்ற வரன் அந்த மாயக் கண்ணன் மட்டும்தான் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது’’
பெரியாழ்வார் வறட்சியாகச் சிரித்தார்.
‘’சடகோபரே!..அதை நீங்கள் வேறு ஒரு தடவை சொல்லிக் காட்ட வேண்டுமா? அப்படிச் சொல்லிச் சொல்லிக் கற்பனைகளை வளர்த்துத்தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டோமோ என்று என் மனம் இப்போது கிடந்து அடித்துக் கொள்கிறது.அதீதமான கற்பனைகளைக் கவிதையில் வேண்டுமானால் ரசிக்கலாம்.யதார்த்த வாழ்க்கைக்கும் அதற்கும் நீண்ட இடைவெளியல்லவா நிறைந்து கிடக்கிறது.’’
‘’அது சரிதான் சுவாமி…ஆனால் கோதை நாச்சியார் கண்ணனைத்தான் மணக்க வேண்டுமென்று பாவை நோன்பு வேறு நோற்று வருவதாக ஒரு செய்தி காதில் விழுந்ததே?’’
‘’ஓ…அது பற்றியெல்லாம் நீங்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை சடகோபரே ! அவளை மணந்து கொள்கிற எந்த ஆடவனிலும் கண்ணனைக் காணக் கூடிய பக்குவத்தையே அவளிடம் நான் ஊட்டியிருக்கிறேன்…ஊட்டியும் வருகிறேன்..அவள் செய்கிற நோன்பும் கூட அதற்காகத்தான்!’’
‘’அது மட்டும் இல்லைசுவாமி’’
-நெஞ்சுக்குள் விழுங்கிக் கொண்ட நெருப்பாக…எதையோ சொல்ல வந்து மென்று விழுங்கியவராய்ச் சடகோபர் தவிக்கிறார்.
தெய்வ நிவேதனத்தில் கலந்துவிட அஞ்சுகிற அசூயைப் பொருளாக …சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் குறுகிப் போகிறார்…!
‘’…..ஆண்டாளின் அழகுக்கும்,பொலிவுக்கும்,அறிவுக்கும்,அன்புக்கும் ….இந்த அற்ப மானுடர்கள் யாரும் பக்கத்தில் நெருங்கக் கூட முடியாது சுவாமி!.ஆனாலும் …ஐயோ..அதை என் வாயாலும் எப்படிச் சொல்வேன் சுவாமி!ஆண்டாளின் பிறப்பை எண்ணிப் பின்வாங்கிப் போகிறார்களே இந்தப் பேதை ஜனங்கள்…?’’
பிறப்பு…!பிறப்பு…..! ஆழ்வாரின் மூளையில் ஆயிரம் மின்னல்கள் ஒரேயடியாய் வெட்டி அடிக்க எங்கிருந்தோ விழுகிற பேரிடி ஒன்று அவரது இதயத்தையே இருட்டடிப்புச் செய்து விட்டுப் போகிறது.
‘திருமகளே இந்த மண்ணுக்கு வந்த மாட்சியாய்..அவதரிப்பாய்த் துளசிச் செடியின் அடியிலே கிடந்த ஆண்டாள்…,அவள் பிறப்பு ..,இத்தனை அற்பமாகி விட்டதா இந்தக்கலக மானிடப் பூச்சிகளுக்கு…ஆனால்..ஆனால்…அந்த மாண்புகளெல்லாம்,அந்த உன்னதங்களெல்லாம் அவராகக் கற்பித்துக் கொண்டவைதானே !…அவராக நியமித்துக் கொண்டு ஊருக்குச் சொன்னவைதானே..!
உண்மையில் ஊராருக்கு வேண்டியதெல்லாம் ..சாதி,குலம்,கோத்திரம்..! அனைத்துக்கும் மேலாக முறையான ஒரு வம்சாவளி ! அதை ஒழுங்காகச் சொல்ல முடியாதபோது ஆயிரம் ஆயிரமாய் அவள் பாயிரம் பாடித்தான் என்ன பயன் ? பாதரசமாய் அவள் அழகு ஒளிவிட்டுத்தான் என்ன பயன் ?
துண்டு துண்டாய்ச் சிதைந்து போய்க் கிடக்கிற ஆழ்வாரை ஆசுவாசப்படுத்திப் படுக்க வைத்து விட்டுச் சடகோபர் எழுந்து போகிறார்.
‘’இன்று புதிதாய் என்ன கற்றுக் கொண்டாய் நம்பி ?’’
என்று வினவியபடியே உள்ளே நுழைகிற கோதை நாச்சியாரின் கண்களில் தன்னை மறந்து சுவரில் சாய்ந்து கிடக்கிற பெரியாழ்வாரின் தோற்றம் புலப்பட….திடுக்கிட்டுப்போனவளாய் அருகில் சென்று அவரை உலுக்கி எழுப்புகிறாள்.
இயல்பாகவே பொலிந்து கொண்டிருந்த அவளது அழகுத் தோற்றம்,இப்போது நோன்புத் தவத்தால் மேலும் புடமிடப்பட்டிருப்பதைக் காணுகையில் ஆழ்வாரின் நெஞ்சு,பாசம்கலந்த விம்மிதத்தால் பொங்கி வரக் கண்கள் பனிக்கின்றன.
‘’நீதான் எத்தனைபெரிய தீர்க்கதரிசி அம்மா ?
இந்த அற்ப மானுடச் சிறுமைகளை உணர்ந்துதான் இவர்களில் யாரோடும் இணைத்துப் பேசப்படுவதில் கூட உனக்கு விருப்பமில்லை என்று அன்றே சொன்னாயோ ? உனக்கு நிகரில்லாத ஒரு மனித மந்தையில் உனக்கு ஏற்றபடி ஆள் தேடுகிற பாவத்தைச் செய்ததனால் நானே உன் அற்புதத்தை அற்பமாக்கி விட்டேனோ..?
தன் மதிப்புள்ள ஒரு மனிதப் பிறவியாக மட்டுமே ஒரு பெண்ணை மதித்து ஏற்கத் தெரியாதவகள் வாழும் மண்ணில் …,அப்படிப்பட்ட பெண்ஜன்மங்களுக்கு ஏற்ற வரன், அந்த ஆண்டவனைத் தவிர வேறு யாராகத்தான் இருக்க முடியும்?’’
‘’மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய்…..’’
என்ற நாச்சியார் திருமொழிப்பாடலை அவரது உதடுகள் மெல்ல இசைக்க….ஆண்டாளின் கண்கள் மகிழ்வில் மின்னுகின்றன.
(1985 மங்கையர் மலரில் வெளியான சிறுகதை)
​எம்.ஏ.சுசீலா-குறிப்புதமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு,எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்www.masusila.com3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை,மதுரை 625014மின் அஞ்சல் : susila27@gmail.com எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர். 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் இவரது’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம்,முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், மலையாளம்,கன்னடம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *