மலர் அன்ரி எனக்கு நேரடியான சொந்தமில்லை. ஆனாலும் மலர் அன்ரியென்றே அழைத்தேன். அவளது அக்காளை மேரி மாமி என்று அழைத்து வருகையில், அவளேதான் தன்னை மலர் அன்ரியென அழைக்கச் சொன்னாள். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அந்தப் புதிய சொல் மாமியென அர்த்தம் கொண்டதென. அவள் என்னோடு வெகு அன்பாயிருந்தவள். என்னை அரவணைத்து எந்நேரமும் அருகில் வைத்துக்கொண்டவள்.
இப்போது அவளையேயல்ல, என்னையே எழுதப்போகிறேனாயினும், இதில் அவளின் உள்ளும் வெளியும் தெரியவரவேதான் போகின்றன. எனினும் இது வேறொரு அர்த்தமும் நோக்கமும் கொண்டது.
இக் கதை நிகழ் காலத்தில் அவளுக்கு சுமார் இருபது வயதிருக்கலாம். எனக்கு ஏழுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட ஒரு வயது. அவள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அந்த வயதில் என்னில் எவ்வாறு புரிதலாகினவென்பதை, இவ்வளவு காலத்துக்குப் பின்னான அறிவு அனுபவங்களின் விளக்கப் பின்புலத்தில் நான் எழுதுவதென்பது சிரமமான விஷயம். ஆனாலும் அவள்மீதான பிரியமுடனும், சிறுபிள்ளைத்தனத்தின் சிந்தனை செயற்பாங்குகள் வெளிப்பாடு அடையும்படியுமே இதைச் செய்ய நான் முனைவேன்.
மலர் அன்ரி மாநிறம். கல்யாணமாகி வாழப்போய் கணவனை இழந்த பின் அங்கே தனியனாய்த் திரும்பிவந்த அவளது அக்கா மேரி மாமியைவிடவும் நிறமாயிருந்தாள். அவர்களது அம்மாவின் நிறத்தோடு ஒப்பிட்டால் அவர்களைச் சிவப்பிகளென்று தாரளமாகச் சொல்லிவிடலாம். அதுபோல் அவள் அழகானவளென்பதையும் நிச்சயப்படுத்திச் சொல்லவேண்டும்.
அந்த வட்டாரத்திலேயே எஸ்.எஸ்.சி. படித்தவள் மலர் அன்ரி மட்டும்தான். பரீட்சையில் றிசல்ற் என்னவெனக் கேட்பவர்களுக்கு ‘றிபேர்ட்’ என சிறிது தயக்கமாக அவள் சொல்கிறபோது, அவள் பாஸ் செய்யவில்லை என்பதை நான் புரிந்துகொண்டிருந்தேன்.
ஊர் நாற்சந்தியின் ஒரு மூலையில் அவர்களது வீடென்றால், அதன் எதிர் மூலையில் எங்களுடைய வீடிருந்தது. அதனால் நான் அங்கேதான் நிற்கிறேனாவென்பதை மலர் அன்ரியைக் கூப்பிட்டே விசாரித்துவிடும் சுலபமிருந்ததில நான் அங்கே போய்வருவதற்கான இடைஞ்சலேதும் என் அம்மாவிடமிருந்து ஏற்பட்டுவிடவில்லை. அது என் தம்பிக்கும் மிக அனகூலமாக இருந்திருக்குமாதலால், அம்மாவுக்கு அதில் இரட்டைத் திருப்தி. எந்நேரமும் தம்பியுடன் சண்டை பிடிக்கிறேனென்று அம்மாவுக்கு என்னில் குறை.
மலர் அன்ரி வீட்டில் வேறு சிறுவர்கள் இல்லாததோடு, அங்கே வந்து விளையாடுகிற வேறு அயற் சிறுவர்களும் இல்லாததில் அந்த வீட்டு குட்டி இளவரசனாக நான் அரவணைக்கப்பட்டேன். பள்ளி முடிந்த நேரத்திலிருந்து வார நாட்களிலும், சனி ஞாயிறுகளில் பெரும்பாலான நேரமும் எனது வீடு அதுவாகவே ஆகியிருந்தது.
மலர் அன்ரி கதைப் புத்தகங்களும், கல்கி குமுதம் ஆனந்தவிகடன் அம்புலிமாமா கல்கண்டு என சஞ்சிகைகளும் நிறைய வாசிப்பாள். மேரி மாமிக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. கல்கண்டு சஞ்சிகையில் வரும் கத்தரிக்காய் துப்பறியும் சித்திரக் கதை அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பிடிப்பு அவள் கதை சொல்லும் விதத்தில் குறிப்பாகத் தெரியும். சொல்லாவிட்டால் அவதி தீராதென்பதுபோல், என்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு வைத்து ஒரு தீவிரத்தோடு கதை சொல்வாள்.
சில காலம் ஆக, மேரி மாமிக்கு இரண்டாம் கல்யாணம் நடந்து அவள் கணவனூர் போக, மலர் அன்ரி வீட்டிலே தனித்துப்போனாள். மலர் அன்ரியின் தாய்க்கு சந்தையிலே காலமைப்பாட்டில் மீனும், பின்னேரப்பாட்டில் கருவாடும் வியாபாரம். காலையிலே போனாளென்றால் அவள் வீடு திரும்ப எப்படியும் இருண்டுவிடும். தகப்பனுக்கு ரயில்வேயில் சிங்களப் பகுதியிலே வேலை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவதே அபூர்வம். வந்தாலும் தங்குவது குறைவு. ஒரு சனிக்கிழமை காலையிலே வந்தாரென்றால், ஞாயிறு மாலையில் பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். அவர் அங்கே ஒரு சிங்கள மனுஷியோடு குடும்பம் நடத்துவதாக ஊரிலே ரகசியப் பேச்சு இருந்தது.
அவர் அவ்வாறு வந்து வீட்டிலே தங்கும் நாட்களில் நான் அங்கே போவது கிடையாது. அவரைக் கண்டாலே எனக்குப் பயம். அப்படியொரு சிரிப்பற்ற முகமும், தொனி பெருத்த குரல்வாகும் அவருக்கு.
மலர் அன்ரியின் தாயோடு அவரை ஒப்பிடுகையில் அவருக்கு அவளைவிட பத்து பதினைந்து வயதாவது குறைவுபோல் தோன்றும். ஆனால் அந்த மாயத் தோற்றத்தில் நான் மயங்கியதில்லை. ஏனெனில் கணவர்களுக்கு எப்போதும் மனைவியரைவிட வயது கூடவெனவே நான் நம்பியிருந்தேன்.
மேரி மாமி கல்யாணமாகிப் போன பின், தாயும் சந்தை வியாபாரத்திலிருந்து திரும்பி நடந்து வர இருண்டுவிடுமாதலால், மலர் அன்ரி தனியாகத்தான் வீட்டிலே இருந்துவந்தாள். பள்ளி முடிந்து வந்த நான் வீட்டிலே சிறிது தாமதித்துவிட்டாலோ, ஒழுங்கையில் நடக்கும் போளை அடி, காசுகட்டு, புள்ளடி விளையாட்டுகளில் பராக்காகி நின்றுவிட்டாலோ மலர் அன்ரியே தேடிவந்து என்னைக் கூட்டிப்போய்விடுவாள்.
அப்போது மாரி தொடங்கியிருந்தது.
நத்தாருக்கு சில நாட்கள் இருந்தன.
ஒருநாள் பொழுது சாய்கிற நேரமாய் தேவசகாயம் மலர் அன்ரி வீட்டுக்கு வந்தான். தேவசகாயத்தை எனக்குத் தெரியும். ஊர்த் தொங்கலில் வயல்கரைப் பக்கமாய் அவனது வீடு இருந்திருக்கவேண்டும். அங்கிருந்துதான் சைக்கிளில் வேலைக்குப் போய்வருவான். பெல் தேவையில்லாத சைக்கிள் அவனது. அதுவாகவே சப்தித்துக்கொண்டுதான் வரும்; போகும். கொஞ்சக் காலத்துக்கு முன்புதான் பாஸையூரிலிருந்து அங்கே அவனது தாய் தகப்பன் காணி வாங்கி வீடு கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். ஐயா யாருடனோ கதைக்கும்போது சொன்ன ஞாபகம். பல சிறுவர்களும் அவனை சகாயமண்ணை என்றும், பெரியவர்கள் சகாயம் என்றும் அழைத்தார்கள். நானும் அவனை விளிக்க நேர்ந்தவை குறைந்த சந்தர்ப்பங்களென்றாலும் சகாயமண்ணையென்றே அழைத்திருக்கிறேன்.
வீட்டுக்கு வந்த சகாயமண்ணை பின்வளவில் போய் பனை மட்டையொன்று வெட்டிவந்தான். கருக்குச் சீவி, அதைப் பிளந்து, தேவையான அளவுகளில் துண்டு துண்டாக வெட்டினான். முக்கோணம், சதுரங்கள் வரும்படியாக அவற்றை தடித்த நூலெடுத்து கட்டத் தொடங்கினான். ‘ஏனிது, மலரன்ரி?’யென நான் கேட்க, ‘வெளிச்சக் கூட்டுக்குத்தான்’ என்றாள் அவள். வேதக்காரர் அதிகமாய்க் குடியிருக்கும் அந்த ஊரிடத்தில் நத்தார்க் காலத்திலே அவ்வாறு சில வீடுகளில் கட்டுவதை நான் கண்டிருக்கிறேன்.
பனைமட்டைக் கீறுகள் கட்டப்பட்டு முடிந்ததும் வர்ண ரிசூப் பேப்பர்களை அளவாக வெட்டி ஒவ்வொரு கட்டத்துக்கு ஒவ்வொரு வர்ணம் வரக்கூடியவாறு சகாயமண்ணை அவற்றை பசையினால் ஒட்டினான். பிறகு காயும்வரை தொடவேண்டாமெனக் கூறி வீட்டுக் கூரையின் உட்புறத்தில் ஒரு வசதியான இடம் பார்த்து வெளிச்சக் கூட்டைக் கட்டி தொங்கவிட்டான். ‘ரண்டொரு நாள் போகட்டும், வந்து பாக்கிறன்’ என்றவன், பின் சிறிதுநேரம் முற்றத்தில் நின்றபடியே மலர் அன்ரியோடு கதைத்துவிட்டு போய்விட்டான்.
அங்கே வருகிற நேரமெல்லாம் வீட்டுக் கூரையில் கட்டித் தொங்கவிட்டுள்ள வெளிச்சக் கூட்டை அண்ணாந்து அண்ணாந்து பார்ப்பதே எனக்கு வேலையாகிப் போனது. ‘வெளிச்சக் கூடு இன்னமும் காயேல்லயோ, மலரன்ரி? எப்ப கட்டுவியள்?’ என அன்ரியை அடிக்கடி கேட்கவும் ஆரம்பித்துவிட்டேன். அவளும், ‘சகாயமண்ணை வந்துதான் பாத்துச் சொல்லவேணும்’ என்று சுலபமாகச் சொல்லி தப்பித்துக்கொண்டு இருந்தாள்.
சகாயமண்ணை நாளுக்கு இரண்டு மூன்று தடவைகள் வேலைக்கோ வேறு அலுவல்களுக்கோ அந்த றோட்டால் சைக்கிளில் போய்வருகிறான், முற்றத்தில் அல்லது படலையில் மலர் அன்ரி நிற்பதைக் கண்டால் சைக்கிளை மறித்து நின்று பேசுகிறான், வெளிச்சக் கூடு காய்ந்திருக்குமா என்பதை அன்ரி கேட்டிருக்கலாமேயென எனக்குத்தான் துக்கமாகிப் போகும்.
மேரி மாமிக்கு குழந்தை பிறந்ததாய் போஸ்ற் கார்ட் தகவல் வந்து, மலர் அன்ரியின் அம்மா அவளைப் பார்க்க போயிருந்தவேளையில், நத்தாருக்கு இன்னும் நாலு நாள் இருப்பதாக மலர் அன்ரி கணக்குப் பார்த்துச் சொன்னதற்கு அடுத்த நாள் மாலையில் சகாயமண்ணை மறுபடி அங்கே வந்தான்.
நான் அப்போது அங்கேதான் நின்றிருந்தேன்.
‘மழை வாற சிலமனும் இல்லை ; நேரமுமிருக்கு; அப்ப… இண்டைக்கே வெளிச்சக் கூட்டை கட்டியிடுவம், மலர்’ என்றான்.
மலர் அன்ரி குளித்து வந்து, உடுப்பு மாற்றி, தலையிழுத்து, பவுடர் போட்டு, பொட்டு வைத்து நல்ல வடிவாய் நின்றிருந்தாள். ‘அதைப் பாக்கத்தான நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறம்’ என தன் தெத்துப் பல்லின் ஒருவித அழகு சிதற சிரித்தாள் அவள்.
சகாயமண்ணை மலர் என்று அழைத்ததையே பிடிக்காதிருந்த எனக்கு, மலர் அன்ரி சிரித்துக்கொண்டு பதில் சொன்னது விசரைத்தான் கிளப்பிற்று. ஏன் பிடிக்கவில்லையென்றெல்லாம் தெளிவாய்த் தெரியவில்லையே தவிர, அந்தப் பிடிப்பின்மை இருந்ததுமட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது.
சூரியன் மேற்கே சாய்ந்துகொண்டு இருந்தது. இருள வெகுநேரமில்லை இனி. சகாயமண்ணை அவசரமானான். அவன் எதிர்ப் பக்க வளவிலுள்ள வெறுங்காணி நாவல் மரத்தில் ஒரு முனைக் கயிற்றைக் கட்டி, மலர் அன்ரியின் வளவு வேப்ப மரத்துக் கிளையிலே மறுமுனையை முதலில் தொங்கவிட்டான். பிறகு வெளிச்சக் கூட்டை, கயிற்றின் முனையை இழுத்தால், அது றோட்டின் மத்தியில் உயர்ந்து நிற்கக்கூடியவாறு கட்டி முடித்தான்.
வேலை ஆரம்பிக்கும் முன்னரே தன் சேர்டைக் கழற்றி விறாந்தையில் மறைப்புக்குக் கட்டியிருந்த மூங்கில் தட்டியிலே போட்டிருந்ததில், சகாயமண்ணையின் கரிய வெறுமேனியில் வியர்வை குளித்ததுபோல் வழிந்துகொண்டிருந்தது. துளி துளியாய் அவை வழிந்து உதிர்வதை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர் அன்ரி.
புதுச் சைக்கிள் வைத்திருக்கிற நாகராசாவோடும் சிலவேளை மலர் அன்ரி கதைப்பதுண்டு. ‘டேய்… வாடா… போடா’ என்று ‘டா’போட்டுத்தான் பேசுவாள். அவ்வாறு பேசினால் பரவாயில்லையென்றுதான் அப்போது நான் நினைத்திருந்தேன். ஆனால் சகாயமண்ணையோ பேய்க் கறுப்பாயிருந்தாலும், நாகராசாவைவிட அழகானவாய் இருந்தான். தன்னைக் கவனிக்கும்படி செய்யும் ஒரு வசீகரம் அவனிடத்தில் இருந்தது. அவனது வெறுமேனியில் வழிகிற வியர்வை எனக்கோ பார்க்கவே அருவருப்பாய் இருக்க, மலர் அன்ரி அதையே உற்று உற்றுப் பார்ப்பதும், அவனுக்குக் கிட்டக் கிட்டவாய்ப் போய் நிற்பதும் எனக்குப் பிடிக்கவேயில்லை.
என்ன நினைத்தாளோ, திடீரென மலர் அன்ரி அடுக்களைக்கு ஓடினாள். சிறிதுநேரத்தில், ‘செபமாலை மாதாவே…!’ என்று அவள் அங்கிருந்து கூவியது கேட்டது. பின் என்னைக் கூப்பிட்டாள். நான் செல்ல, ‘ராசா, சகாயமண்ணை பாவமெல்லே, எவ்வளவு களைச்சுப்போய் இருக்கிறார், நீயும் பாத்தியெல்லே, ஒரு தேத்தண்ணியாச்சும் நாங்கள் வைச்சுக் குடுக்கவேணுமெல்லோ, காலமையே சீனி முடிஞ்சுபோச்செண்டது எனக்கும் இப்பதான் ஞாபகம் வந்திது, சின்னக் காலால ஓடிப்போய் கடையில கா றாத்தல் சீனி வாங்கிக்கொண்டு வந்திடுறியா’ என்று கேட்டாள்.
நான் தயங்கினேன். கணபதி கடைதான் சுற்று வட்டாரத்தில் எங்கள் வீடுகளுக்குக் கிட்ட உள்ள கடை. என்றாலும் போய்வர இருண்டுவிடும். அதற்குள் வெளிச்சக் கூட்டை சகாயமண்ணை மேலே கட்டியிட்டால்…? நான் அதைச் சொன்னேன்.
‘கட்டமாட்டார். நீ வாறமட்டும் கட்டவேண்டாமெண்டு நான் மறிச்சு வைப்பன்’ என்று உறுதி சொன்னாள் மலர் அன்ரி. நான் சம்மதித்தேன்.
மலர் அன்ரி அடுப்படிப் பரணிலிருந்த அடுக்குப் பெட்டியெடுத்து காசு பொறுக்கி எண்ணித் தந்தாள். அவள் குனிந்து காசு தந்தபோது, பின்னேரத்தில் குளித்திருந்தவளின் மேனியிலிருந்து வாசச் சோப்பின் வாசனை மூச்சில் அடித்தது. பெரிய கழுத்துச் சட்டைக்கூடாக நெஞ்சப் பிளவு தெளிவாய்த் தெரிந்தது. முன்பெல்லாம் அவளை நான் அந்தமாதிரிக் கண்டதேயில்லை. ஆனாலும் எனக்கு பறந்துபோய் கடையில் சீனி வாங்கிக்கொண்டு வருவதே முதன்மைச் சிந்தனையாயிருந்தது.
காசு கையில் கிடைத்தமாத்திரத்தில் எடுத்தேன் ஓட்டம்.
கடையிலே அந்தநேரத்தில் சனமாய்த்தான் இருந்தது. ஒருமாதிரி துளைத்துக்கொண்டு நுழைந்து, முன்னாலிருந்த மேசைக்கு மேலாக தலையை உயர்த்தி, ‘கா றாத்தல் சீனி தாருங்கோ… கா றாத்தல் சீனி…’ எனச் சொல்லிக்கொண்டே நின்றேன். விளக்கு வைக்கிற நேரத்தில் எங்கிருந்து வந்த பெடியனோ, இருட்டு முன்னம் போகட்டுமென எண்ணிப்போலும் கடைக்காரர் சீனியை கட்டித் தந்தார். சரையை வாங்கியதும் அம்மா அவ்வப்போது சொல்லியனுப்பும் ‘கடையில எப்பவும் மிச்சக் காசை கேட்டு வாங்கவேணும், இல்லாட்டி அவை மறந்துபோவின’ என்ற வார்த்தைகள் ஞாபகமாக, ‘மிச்சக் காசு’ என்றேன்.
‘கா றாத்தல் சீனி எட்டுச்சம்தான்; மிச்சமில்லை.’
நான் மறுபடி விசையெடுத்தேன்.
மேற்குத் திசைப் பனங்கூடலுக்குள் மஞ்சள் பெருவட்டத்தில். இன்னும் சூரியன் நின்றுகொண்டிருந்தது.
சென்ற வேகத்தில் நான் தகரப் படலையைத் திறந்த சத்தம் பெரிதாய்க் கேட்டிருக்கும். விறாந்தை மூங்கில் தட்டி மறைப்பில் நின்றிருந்த சகாயமண்ணையும் மலர் அன்ரியும் இறங்கி முற்றத்துக்கு வந்தார்கள்.
மலர் அன்ரி சீனிச் சரையை என்னிடமிருந்து வாங்கிப் போய் சகாயமண்ணைக்கு தேத்தண்ணீர் போட்டுவந்து கொடுத்தாள்.
சகாயமண்ணை தேநீர் அருந்தி முடிந்ததும், வெகு ஆர்வமாய் வெறும் கோப்பையை வாங்கி விறாந்தையில் மலர் அன்ரி வைக்க, வெளிச்சக் கூட்டு வேலையில் கவனமானான் சகாயமண்ணை. தூரத்தில் பக்குவமாய் வைத்திருந்த கடதாசிச் சரையிலிருந்து இரண்டு மெழுகுதிரிகளை கொளுத்தி வெளிச்சக் கூட்டின் சப்பையான தடித்த நடுத் தண்டில் நன்கு பொறுத்திருக்கும்படி அமைத்தான். பின் மெதுவாக வேப்ப மரக் கிளையில் தொங்கவிட்டிருந்த கயிற்றை இழுத்து இழுத்து வெளிச்சக் கூட்டை மேலே வரச் செய்தான்.
வெளிச்சக் கூடு கட்டியாகிவிட்டது. இனி அங்கே எனக்கு வேலையில்லை. வெளிச்சக் கூட்டை கீழேயிருந்தல்ல, தூரவிருந்து பார்த்தாலே அதனழகு இன்னும் கூடவாய்த் தெரியுமென்று எனக்குத் தெரிந்திருந்தது. நான் வெளிச்சக் கூட்டைப் பார்த்தபடி றோட்டில் பின்னோக்கி நடந்து நடந்து எங்களது வீட்டையும் தாண்டிப் போய் றோட்டு முகரியில் நின்றேன்.
இருள் கவியக் கவிய வெளிச்சக் கூட்டின் மஞ்சள் பச்சை சிவப்பு வெள்ளை நீல காவி நிறங்கள் விகசிப்படையத் துவங்கின. ஒருபொழுது பார்த்தபோது மலர் அன்ரியும் சகாயமண்ணையும் படலைக்கு முன்னால் நின்றிருந்தது தெரிந்தது. மறுபொழுது பார்த்தபோது இருள் அவர்களை விழுங்கியிருந்தது. எனக்கு அதுபற்றி ஒன்றும் தோன்றவில்லை. என் நெஞ்சு முழுக்க வெளிச்சக் கூடு காண்பதின் பரவசம் நிறைந்திருந்தது.
என்னை அழைத்த அம்மாவின் குரல் வீட்டிலிருந்து எழுந்தது. அப்போதுதான் கவனித்தேன், றோட்டில் அங்கங்கே வீடுகளின் முன்னால் நின்று வெளிச்சக் கூடு காண்போரின் தொகை.
மறுநாள் பொழுதுபடும் வேளையிலும் மலர் அன்ரி வீட்டுக்கு சகாயமண்ணை வந்தான். வெளிச்சக் கூட்டை புது மெழுகுதிரிகள் கொளுத்திவைத்து உயர ஏற்றிக் கட்டிய பின் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போய்விட்டான். மறுநாளும் அவன்தான் வந்து வெளிச்சக் கூட்டை ஏற்றினான்.
இப்போதெல்லாம் மலர் அன்ரி வீட்டில் நான் அதிகநேரம் தங்குவதில்லை. வெளிச்சக் கூடு ஏற்றியதும் றோட்டு முகரிக்கு வந்துவிடுவேன். மலர் அன்ரி பாவம் தனிய என்ற எண்ணம் அவ்வப்போது எழத்தான் செய்யும். ஆனாலும் இன்னும் சிறிதுநேரத்தில் பக்கத்துவீட்டு அன்னம்மா ஆச்சி படுக்கைத் துணைக்கு வந்துவிடுவாள்தானேயென்று சமாதானம் ஆகிக்கொள்வேன்.
‘வெளிச்சக் கூடு வைச்சாப் பிறகு நீ இஞ்ச வந்தாலும் கனநேரம் நிக்கிறாயேயில்லையே, ராசா. மலரன்ரி பாவம்…. தனியா இருப்பாவெண்டு நெக்கமாட்டியோ?’ என ஒரு நாள் மலர் அன்ரி கேட்கவும் செய்தாள். ‘அன்னம்மா ஆச்சி வருவாவெல்லோ?’ என்றேன் நான். ‘அவ வர எவ்வளவு நேரமாகுமோ? கொழும்புக் கோச்சு வாற சத்தம் கேட்டாப் பிறகுதான் அவ வீட்டைவிட்டு வெளிக்கிடுவா.’
நான் அதற்கு ஒன்றும் சொல்வதில்லை.
நத்தாருக்கு முந்திய நாள் மாலையில் மலர் அன்ரியின் அம்மா மேரி மாமியின் வீட்டிலிருந்து திரும்பிவிட்டாள்.
நத்தாரிலன்று சகாயமண்ணை வெளிச்சக் கூடு வைக்க வரவில்லை. சிறிதுநேரம் காத்திருந்து ஏமாறிய நான் மலர் அன்ரியிடம், ‘இண்டைக்கு வெளிச்சக் கூடு ஏத்திறேல்லையோ?’ என்று கேட்டேன். அவள்தான் சொன்னாள், ‘இண்டைக்கு சகாயமண்ணை வரமாட்டார்; பாஸையூர் போயிட்டார்; நான்தான் கூடேத்தப் போற’னெண்டு.
எனக்குப் பரபரப்பாகிப் போனது. மலர் அன்ரியாலும் அது ஏலுமாவென்று பார்க்க ஆர்வம் மேவிப்போனேன். அவள் கொய்யாப் பழம் பிடுங்க கொய்யா மரமென்றும், நாவல் பழம் உலுப்ப நாவல் மரமென்றும் ஏறி இறங்கிற ஆள்தான். மலர் அன்ரியால் முடியுமென்றால் இனி சகாயமண்ணை அங்கே வரத் தேவையில்லையென எனக்குச் சந்தோஷமாக இருந்தது.
சிறிதுநேரத்தில் எதுவித சிரமமுமில்லாமல் வெளிச்சக் கூட்டில் மெழுகுதிரி கொழுத்திவைத்து கூட்டினை மேலே ஏற்றினாள் மலர் அன்ரி. ‘உங்களுக்கும் வெளிச்சக் கூடேத்த தெரியுது, மலரன்ரி’ என நான் புளகித்து நிற்க, ‘சகாயமண்ணைதான் சொல்லித் தந்தவர்’ என்றாள் அவள்.
எனது புளுகம் பொத்தென்று மடிந்தது. அத்தனை நாட்களாய் சகாயமண்ணை வெளிச்சக் கூடேற்றுவதைக் கண்டு தானாகவேதான் அவள் அதைத் தெரிந்துகொண்டாளெனவே நான் கருதியிருந்தேன். சகாயமண்ணையிடமிருந்து அல்லாமல் நாகராசாவிடமிருந்து அறிந்திருந்தால் நான் அவ்வாறு எண்ணியிருப்பேனோ தெரியாது.
புது வருஷம் வந்தது. முன்னதோ பின்னதோவாக இரண்டொரு தடவைகள் சகாயமண்ணை அங்கு வந்துபோனான்.
வருஷம் முடிந்து ஒரு வாரமாகியது.
இப்போது வெளிச்சக் கூடு இறக்கி வைத்தாகிவிட்டது. இனி அடுத்த நத்தாருக்குத்தான். அப்போதும் மழை வராவிட்டால்தான் வெளிச்சக் கூடு ஏற்றலாம்.
ஆனாலும் எனக்கு தைப்பொங்கல் கொண்டாட்டம் விரைவில் வரவிருந்தது.
தைப் பொங்கல் வருகிறதென்றால் சீன வெடிச் சத்தங்கள் எழத் துவங்குவது மட்டுமில்லை, வீடுகளும் கலகலப்பு கொள்ளத் துவங்குகின்றன. அடுப்பு பிடிப்பதிலிருந்து, பொங்கல் பானை வாங்குவதுவரை எல்லாமே ஒரு கொண்டாட்டத்தின் களிநிலையையே உருவாக்குகின்றன.
ஒருநாள் மாலை, தைப் பொங்கலுக்கு முன்னதாகத்தான், மலர் அன்ரி வீடு போயிருந்தேன். படலையைத் திறக்கத்தான் தெரிந்தது, சகாயமண்ணையும் அங்கே நின்றிருப்பது. நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது சைக்கிள்கூட படலைக்கு வெளியில் நின்றிருக்கவில்லையே.
சிறிதுநேர உரையாடலின் பின் மலர் அன்ரி அடுக்களைக்குப் போனாள். என்னை அழைத்தாள். நான் போக, கடைக்குப் போய்வருகிறாயாவெனக் கேட்டாள். வெளிச்சக் கூடேற்றுவது பார்க்கும் ஆவல் அப்போது இல்லாததில் நானும் பிகுவின்றிச் சம்மதிக்க, அடுக்குப் பெட்டியில் தேடி எட்டுச் சதம் எடுத்துக் கொடுத்தாள். குனிந்து என்னிடம் காசு தருகையில் அப்போதும் கண்டேன், அவள் அணிந்திருந்த பெரிய கழுத்துச் சட்டைக்கூடாக அவளது துல்லியமான நெஞ்சுப் பிளவை.
நான் கடைக்குப் போய்க்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, சகாயமண்ணை தன் சைக்கிளை எங்கே விட்டிருந்தானென்று. அவனது பழஞ் சைக்கிள் பக்கத்துக் காணியோடுள்ள வேலிப் புதருக்குள் நின்றிருந்தது.
மறுநாள் பொங்கலென்றிருந்த குதூகலமான ஒருநாளில் நான் மலர் அன்ரி வீட்டுக்குப் போனபோதும் சகாயமண்ணை அங்கே நின்றிருந்தான். நான் படலை திறந்து உள்ளே நுழைய இருவருமே சத்தமின்றிச் சிரித்தார்கள். மலர் அன்ரி அன்றைக்கு மிகவும் வடிவாகவிருந்தாள். பெரிய கழுத்துச் சட்டை அணிந்திருந்தாள். பவுடர் பூசியிருந்தாள். இரட்டைப் பின்னலிட்டு றிப்பன் கட்டியிருந்தாள். பின்னல் தன் அசைவுக்குத் தக ஆடும்படி அவள் இங்குமங்குமாய்ச் சரிந்து சரிந்து கிணுகிணுத்தாள்.
பின்னரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அப்போது நான் நினைத்துக்கொண்டேன், மலர் அன்ரி இனி அடுக்களைக்கு பாய்ந்தோடுவாளென. அப்படியே அவள் செய்தாள். இனி கடைக்குப் போய்வர என்னை அழைப்பாளென நான் எண்ணினேன். அவளும் அப்படியே என்னை அழைத்து கடைக்குப் போய்வர கேட்டாள்.
அவர்களது கொடுப்புச் சிரிப்பு மனத்தைக் குடைந்துகொண்டிருந்ததில் இந்தமுறை கடைக்குப் போக எனக்கு விருப்பமிருக்கவில்லை. நான் மௌனமாய் நின்றுகொண்டிருக்க என்னை மெதுவாக மலர் அன்ரி அணைத்து, ‘அச்சாப் பிள்ளையெல்லே… ‘ எனக் கெஞ்சினாள்.
நெஞ்சோடு சேர்த்த அந்த இதமான அணைப்பு என்னைச் சம்மதிக்கச் செய்தது. நான் காசை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.
மலர் அன்ரிமீதான எனது கோபம் போய்விட்டிருந்ததென்றாலும், சகாயமண்ணைமேல் கொண்டது இன்னுமிருந்தது. அதில் இன்னும் என் முகம் கடுகடுப்பாகவே இருந்தது. சகாயமண்ணை அதைக் கவனித்திருப்பான்போலும். படலைவரை என்னையே பார்த்தபடி நின்றிருந்தான்.
போகும்போது அவன் வழக்கமாக தன் சைக்கிளை மறைவாய் விடும் வேலி மூலையைப் பார்த்தேன். சைக்கிள் நின்றிருந்தது. ஏதோ கள்ளத்தின் காரணமே அவன் சைக்கிளை அவ்வாறு விட காரணமென்று நெஞ்சுக்குள் சந்தேகம் குமைந்தெழுந்தது. போகும் வழி முழுதும், சீனி வாங்கிக்கொண்டு வரும் வழி நெடுகிலும் அதுபற்றியே நான் யோசித்திருந்தும் அக் கள்ளத்தின் காரணத்தை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. அதனால் கோபம்தான் ஏறியது.
கோபம் சகாயண்ணைமீது மட்டுமல்ல, இப்போது மலர் அன்ரியிலும். அவள் ஏன் என்னையே எப்போதும் சீனி வாங்கிவர கடைக்கு அனுப்புகிறாள் என்பதினால் அது. ஒவ்வொரு தடவை சகாயமண்ணை வரும்போதும் அவளுக்குச் சீனி ஏன் முடிந்துபோகிறது; அப்படி முடிந்திருந்தாலும், ஒவ்வொரு தடவையும் அவனுக்கு தேத்தண்ணீர் கொடுக்கவேண்டுமென்று இல்லையேயென நான் மறுகினேன்.
அந்தக் கோபத்தில் சீனிச் சரைக்குத்தான் ஒரு நுள்ளுக் கொடுத்தேன். மழைக்கு உவனித்திருந்த மண்ணிறச் சீனி அந்தத் துவாரத்திலிருந்து பதுங்கிப் பதுங்கி செய்யலாமா வேண்டாமா என்பதுபோல்தான் கொட்டுண்டது. அதுபோதும். என்னவிருந்தாலும் மலர் அன்ரி அல்லவா? அவளது அன்பும் அணைப்பும் எவ்வளவு இதமானவை?
ஆனால் சகாயண்ணை மீதான கோபம் அப்படியேதான் இருந்தது. மலர் அன்ரி என்னைப் பார்த்துச் சிரித்தாலும், அவன் எப்படிச் சிரிக்கமுடியும்? மேலும் அவனிடம் ஏதோ கள்ளமுமிருக்கிறது. அவனுக்கு ஏதாவது தீங்கு செய்தே ஆகவேண்டுமென நான் நிச்சயித்தேன். அதற்கேற்ற ஐடியாவும் உடனடியாக உதித்தது.
நான் றோட்டின் இரு பக்கங்களையும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன். யாருமில்லை. மெதுவாக அவன் சைக்கிள் விட்டிருந்த இடத்தை அணுகுகிறேன். மறுபடியும் றோட்டைக் கவனித்து யாரும் காண வாய்ப்பில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, சைக்கிளின் பின் சில்லில் ‘வால்வ் கட்டை’ எங்கே இருக்கிறதென தேடுகிறேன். அதைக் கண்டுகொள்ளப் போதுமான வெளிச்சம் இன்னும் வெளியில் இருக்கிறது. நான் ‘வால்வ் கட்டை’யை இளக்க முயன்றேன்.
‘மூதேவி…’ எரிச்சலாக வந்ததெனக்கு. அது கழர சிரமப்பட்டது. கையிலிருந்த சீனிச் சரையை கழிசான் பொக்கற்றுக்குள் திணித்துவிட்டு, ஒரு கையை சைக்கிளில் ஆதாரத்துக்குப் பற்றிக்கொண்டு மறுபடி என் வலிமையெல்லாவற்றையும் திரட்டி கட்டையை முறுக்கினேன். அது மெல்ல அசைந்து கொடுத்தது. நான் மேலும் திருகினேன். இப்போது இன்னும் சுலபமாகிப்போனது எனக்கு.
ஆனால் மறுகணம் திறபட்ட வேகத்தில் காற்று புஸ்ஸென்று சீறிக் கிளம்ப கைப்பிடிக்குள்ளிருந்த ‘வால்வ் கட்டை’ அப்படியே பாய்ந்து எங்கோ மறைந்தது.
மெதுவாக காற்றைத் திறந்துவிடும் எண்ணம்தான் என்னிடத்தில் இருந்தது. இப்போதோ ‘வால்வ் கட்டை’யே பறந்து மறைந்துவிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி. அதிலிருந்து விடுபடுமுன்னம் காற்று சீறி வெளிவந்த இரைச்சல் மலர் அன்ரி வீட்டிலிருக்கும் சகாயமண்ணைக்கு கேட்டிருக்குமோவென்று இப்போது பயமாகிவிட்டது. ‘வால்வ் கட்டை’ கையிலிருந்தாலாவது மறுபடி அதைப் பூட்டிவிட்டு போய்விடலாம். காற்று போனதற்கு அந்தக் கல் றோட்டில் காரணம் தேடவேண்டிய அவசியமில்லை. இப்போது பெரும் பிழை செய்து மாட்டிக்கொள்ளப் போகிற அவதி என்னில்.
நான் றோட்டில் ஏறி மெதுமெதுவாக மலர் அன்ரி வீட்டை அடைந்தேன். மலர் அன்ரி சிரித்தபடி வந்து, ‘ஏன் ராசா இவ்வளவு நேரம்’ என்று கேட்டு சீனிச் சரையை என்னிடமிருந்து வாங்கினாள். ‘கடையில சரியான சனம், மலரன்ரி’ என நான் சொன்னேன்.
அன்றிலிருந்து மலர் அன்ரி வீடு போவதை சகாயமண்ணையின் பயத்தில் குறைத்துக்கொண்டேன். அதிசயமாக சகாயமண்ணையின் வரத்தும் அங்கே குறைந்துகொண்டு வந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. சிறிதுகாலத்தில் அது நின்றே போனது. எனது மனப்பயம் ஒரு முடிவுக்கு வந்தது.
நான் சுதந்திரமானவனாக பழையபடி மலர் அன்ரி வீடு போய்வரத் துவங்கினேன்.
சிறிது காலத்தில் அவளது தந்தை ஒரு சிங்கள தேச மாப்பிள்ளையைக் கூட்டிவந்து அவளுக்கு கல்யாணம் செய்து வைத்தார். ஏனோ, அந்தச் சிங்கள ஆள்மீதும் எனக்கு வெறுப்புத்தான் வந்தது.
– ஜீவநதி, செப்.20