மலர்ந்த மனம் போதும்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 18,086 
 
 

ஹாலில் அமர்ந்து ரீனாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, வாசலில் ஆளரவம்; கூடவே, பெண்களின் கிசுகிசுப்பு.

“”இதுதான் வனிதா வீடு! பார்… எத்தனை பெருசா, பங்களா மாதிரி இருக்குன்னு! வர யோசிப்பா தான்… ஆனா, வந்தா முன்னூறு, நானூறு ரூபா அன்பளிப்பா குடுப்பா… அதான் அழைக்கலாம்ன்னு வந்தேன்!”

“அட… இது சித்தி குரலாச்சே?’

வனிதா எழுவதற்காக, ரீனாவை சோபாவில் கிடத்தியபோது, சித்தி மகள் சுந்தரியின் குரல்…

“”வனிதாக்கா வந்தா, அவங்களை வளையல் போட விடுவீங்களாம்மா?”

“”நல்ல கதை! எவ விடுவா? தத்துக் கொழந்தையெல்லாம் கொழந்தையாயிடுமா? வயிறு மலர்ந்தவங்கதான் என் மருமகளுக்கு வளையல் போடணும்! வனிதாவை ஏதாச்சும் சொல்லித் தட்டிக் கழிச்சுடுவேன்!”

வனிதாவுக்கு, “திக்’கென்றது.

மலர்ந்த மனம் போதும்

பஸ்சர் ஒலித்தது.

முகக் கலக்கத்தை மறைக்க, வலிந்து புன்னகையை மலரவிட்டபடி, கிரில் கேட்டைத் திறந்து ஒதுக்கினாள் வனிதா.

“”வாங்க சித்தி… வா சுந்தரி…”

“”இதுதான் ரீனாவா? கேள்விப் பட்டோம்…”

“”ஆமாங்க சித்தி… எட்டு மாசமாச்சு. யாருக்கும் சொல்லலை…”

“”நீ சொல்லாட்டித் தெரியாமலா போகும்? நீ தத்தெடுத்த ரெண்டாம் நாளே, நம்ம சொந்த பந்தம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சி… இப்பல்லாம், மொபைல் போன்லயே பறக்குது நியூஸ்!”

புன்னகைத்தபடி இருவருக்கும் குளிர்பானம் கொடுத்தாள் வனிதா.

“”என் மருமக சித்ராவுக்கு நாளைக்கு வளைகாப்பு. சாயந்தரம் நாலு மணிக்கு. உன்னை அழைக்கிறதுக்காக வந்தேன். தவறாம வந்துரு… என்ன…” என்றாள் சித்தி.

“”கண்டிப்பா வர்றேன் சித்தி…”

“”சரி வனிதா… நாங்க கிளம்பறோம். இன்னும் நாலு வீட்டுக்குச் சொல்லணும்…”
சித்தி வீட்டு வாசலில், வனிதாவின் கார் வந்து நின்றதுமே, உள்ளே எல்லாரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நக்கலாய் சிரித்துக் கொண்டனர்.

ரீனாவை இடுப்பில் சுமந்தபடி வனிதா நுழைந்தாள்.

“என்ன தைரியத்தில் வர்றா… ஒரு அனாதைக் குழந்தையைத் தூக்கிட்டு…’
யாரோ, யாரிடமோ முணுமுணுத்தது, வனிதாவுக்கும் கேட்டது!

“”வா வனிதா… உன் குழந்தையா? எப்பப் பொறந்துச்சு? சொல்லவே இல்லையே!” என்று தெரியாததுபோல் கேலி தொனிக்கக் கேட்டது, ஓர் அழுகிய மனம்.

“”வனிதாக்கா… உங்க வளைகாப்பு எப்ப நடந்துச்சு? எனக்கு சொல்லாம பங்ஷனை நடத்தீட்டீங்களே…” இது அடுத்தது.

“”குழந்தை பிறந்தப்புறமும் அப்படியே கன்னிப் பொண்ணாட்டம், “சிக்’ன்னு இருக்கியே வனிதா!” இது மற்றொரு திரிந்த மனம்.

தெரிந்தும், தன்னைத் துன்புறுத்த வேண்டும் என்பதற்காக, தெரியாதது போல் இவர்கள் வீசும் கணைகளுக்கு, புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்து, பெண்கள் மத்தியில் போய் அமர்ந்தாள் வனிதா.

எல்லாருக்கும், ஸ்வீட்டும், குளிர்பானமும் வழங்கிய பின், நிகழ்ச்சி ஆரம்பமானது.

“”மொதல்ல நாத்தனார்ங்கிற முறையில, என் மகள் சுந்தரி வளையல் போடுவா… அப்புறம் நான். அதுக்கப்புறம் சம்பந்தியம்மா. அவங்க போட்டு முடிச்சதும், நான் கூப்பிடக் கூப்பிட மத்தவங்க, என்ன…” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, “”சுந்தரி! நீ ஆரம்பி…” என்றாள் சித்தி.

முக்கிய மூவரும் வளையல் அணிவித்ததும், “”நீங்க வாங்க… நீங்க வாங்க…” என்று ஒவ்வொருத்தராய் அழைத்தாள் சித்தி.

ஆயிற்று, ஏறத்தாழ எல்லாருமே வளையல் அணிவித்து விட்டனர். இனி வனிதா ஒருத்தி மட்டும் தான் பாக்கி. ஆனால், வனிதாவை சித்தி ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை!

“”ம்… ஆரத்தித் தட்டை ரெடி பண்ணுங்க…” என்று, நிகழ்ச்சியை முடிப்பதற்கு அறிகுறியாக சித்தி குரல் கொடுத்ததுமே, ரீனாவைத் தூக்கிக் கொண்டு அவசரமாக எழுந்தாள் வனிதா.

அவள் வளையல் போடத்தான் எழுகிறாளோ என்று பயந்த சித்தி, பதைபதைப்புடன் தடுத்தாள்.

“”உக்காரு வனிதா… உக்காரு… வளையல் எண்ணிக்கை சரியாப் போச்சு. இதுக்கு மேல, சாஸ்திரப்படி போடக்கூடாது!”

தன் வழக்கமான புன்னகையை உதிர்த்த வனிதா, “”நான் வளையல் போட எந்திரிக்கலைங்க சித்தி… அன்பளிப்பைக் குடுத்துட்டுக் கிளம்பலாம்ன்னு எந்திரிச்சேன்… வீட்ல அவசர வேலை இருக்கு…”

சித்திக்கு முகத்திலடித்தாற்போல் இருந்தது; சங்கடத்துடன் நெளிந்தாள்.
வனிதா, “விர்’ரென சித்தியின் மருமகளிடம் போய் ஐநூறு ரூபாய் கொண்ட கவரை அளித்தாள். பின் கூடியிருந்த உறவினர்களிடம், “”இதான் ரீனா! எட்டு மாசத்துக்கு முன்னால தத்தெடுத்தோம். யாருக்கும் நாங்க சொல்லலைன்னாலும், எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கிறேன்…” என்றாள் வனிதா.

உடனே, கேலிப் புன்னகையும், நக்கல் சிரிப்பும் அங்கே எழுந்தது.
“”அதாவது, வயிறு அசலுக்கு மலரலே; ஆனாலும், தத்தைத் தூக்கிக்கிட்டு மலர்ந்தாப்பில வளைகாப்புக்கு வந்துட்டே!” என்று ஒரு பெருசு நஞ்சை உமிழ்ந்ததும், எல்லாரும் வீடதிரச் சிரித்தனர்.

கேலிச் சிரிப்பைத் தன் புன்னகையால் அலட்சியம் செய்தபடி தொடர்ந்தாள் வனிதா…

“”குழந்தையை எல்லாருக்கும் காட்டிட்டுப் போகலாம்னுதான் நான் இந்த பங்ஷனுக்கே வந்தேன். ரீனாவைத் தத்தெடுத்ததிலிருந்து, எங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்க்குது. அவரோட கம்பெனியில, அவரை மிகச் சிறந்த மார்க்கெட்டிங் மேனேஜர்ன்னு பாராட்டி, சம்பளத்தை நாலு பங்கு உயர்த்திட்டாங்க. எனக்கும், எதிர்பாராத பதவி உயர்வு கெடைச்சு, சம்பளம் இரட்டிப்பாயிருச்சி.

“”அதுமட்டுமில்லாம, இந்த ஆபிஸ் பதவி உயர்வையெல்லாம் தாண்டின, ரொம்ப ரொம்ப பெரிய பதவி உயர்வு ஒண்ணு, எங்க ரீனாவோட அதிர்ஷ்டத்தால எனக்குக் கிடைச்சிருக்கு… இந்த மாதிரி சுப நிகழ்ச்சிகளுக் கெல்லாம் தயக்கமில்லாம, தாழ்வு மனப்பான்மை இல்லாம தலைநிமிர்ந்து வந்து போகும்படியா, கடவுள் எனக்குக் கிருபை புரிஞ்சுட்டார்… எல்லாம் எங்க ரீனா வந்த வேளை தான்! இந்த வளைகாப்பு பங்ஷனுக்கு நீங்க எல்லாரும் வந்த மாதிரி, இன்னும் ஐந்து மாசத்துக்கு பிறகு நடக்கவிருக்கும் என்னோட வளைகாப்பு பங்ஷனுக்கும் வரணும்!”

அவ்வளவு தான், அந்த வீடே வெட்கத்தில் ஆழ்ந்தது.

அவசர அவசரமாக, “”வனிதா வனிதா, நீயும் சித்ராவுக்கு வளையல் போடு! இன்னும் எண்ணிக்கை பாக்கியிருக்கு!” என்றாள் சித்தி.

“”சாரிங்க சித்தி! எனக்கு நேரமாச்சு… நான் கிளம்புறேன்…” என்று வாசலை நோக்கி நடந்தாள் வனிதா. கதவருகே சென்றவள் திரும்பி உறவினர்களிடம் புன்னகையுடன் சொன்னாள்…

“”என்னோட வளைகாப்புல, எண்ணிக்கையை எல்லாம் நான் பாக்கப் போறதில்லே… வந்தவங்க எல்லாருமே எனக்கு வளையல் போடலாம்; அவங்களோட வயிறு மலர்ந்திருந்தாலும் சரி, மலராட்டாலும் சரி… மனசு மலர்ந்திருந்தாப் போதும்!”

– மே 2010

Print Friendly, PDF & Email

1 thought on “மலர்ந்த மனம் போதும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *