மறுமலர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 353 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழையை லக்ஷ்யம் செய்யாமல் ஒரு பெரிய கார் தெருவின் கடைசியில் வந்து நின்றது. அந்த மோட்டாரில் டிரைவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. காரை நிறுத்திவிட்டு டிரைவர் வெளியே வந்து முனையிலுள்ள வீட்டுக் கதவைத் தட்டினான். 

”யார் அது?” என்ற குரல் உள்ளே இருந்து கேட்டது. “நான் ரேடியோ ஸ்டேஷனிலிருந்து வந்திருக்கிறேன் என்றான் சாரதி. 

“ஓ! இதோ வந்துவிட்டேன்” என்ற பதில் வந்தது. சில நிமிஷத்தில் முப்பது வயசிற்குள் இருக்கும் ஒரு பெண்மணி வெளியே வந்தாள். அவள் அழகான வெள்ளை ஸில்க் புடைவை கட்டிக்கொண்டிருந்தாள். அதற்கு ஏற்றபடி மஞ்சள் ரவிக்கை போட்டுக்கொண்டிருந்தாள். அவள் அழகை அந்த உடை அதிகமாக எடுத்துக் காட்டியது. தலையில் சுருண்ட மயிர் அலக்ஷ்யமாகத்தான் வாரிவிடப்பட்டிருந்தது. 

“ரேடியோவிற்கு மழை கிழை ஒன்றும் கிடையாதோ? என்று புன்சிரிப்புடன் கேட்டாள். 

“அப்படி ஏதாவது இருந்தால்தான் தேவலையே!” என்று அலுப்புடன் பதிலளித்தான் காரின் சாரதி. 

அவள் அவன் முகத்தைப் பரிதாபத்துடன் பார்த்தாள். சட்டென்று காரில் ஏறிக்கொண்டாள். “காஞ்சனா, ஜாக்கிரதை!” என்ற எச்சரிக்கைக் குரல் வீட்டிற்குள்ளேயிருந்து வந்தது. அது காஞ்சனாவுடைய தாயின் குரல். 

சட சடவென்று பெய்யும் மழையினிடையே விர்ரென்ற சப்தத்துடன் கார் சென்றது. கண்ணாடிக் கதவுகளால் அடைபட்ட மோட்டாரின் உட்புறத்தில் நிசப்தம் நிலவியது. வீர்,வீர் என்று அடிக்கும் காற்றும் மழையும் அவள் மனத்தில் எவ்வளவோ எண்ண அலைகளை எழுப்பிக்கொண்டிருந்தன. நம் வாழ்நாளிலே முதல் முதலாகப் பல ஜனங்களுக்குக் கான விருந்தை அளிக்கப் போகிறோமே என்ற பெருமையும் அவள் இருதயத்தில் ஒரு மூலையில் சுடர் விட்டுக்கொண் டிருந்தது. மற்றொரு பக்கத்தில் பாடிப் பிழைக்கும் அவலப் பிழைப்புத் தனக்கு ஏற்பட்டுவிட்டதே என்ற துக்கம் வேறு இருந்தது. 


சரியாக மணி ஏழு அடித்தது. தம்புராவின் சுருதி ‘ஙொய்’ ‘ஙொய்’ என்று சப்தம் போட ஆரம்பித்தது. அதிலே ஓர் இன்ப ரசம் பொங்கியது. காஞ்சனா ‘மைக்’ கின் முன் உட்கார்ந்தாள். அவள் தேகம் ஒரு நிமிஷம் நடுங்கியது. முகத்தில் வேர்வை வழிந்தோடியது. நாக்கு ஒட்டிக்கொண்டுவிட்டது. அறிவிப் பாளர், பொழுது ஸ்ரீமதி காஞ்சனா தேவி அவர்கள் பாடு வார்கள். முதலில் கல்யாணி ராகத்தில் என்ற பாட்டு ” என்று சொல்லி முடித்தார். 

காஞ்சனாவினால் இனிமேல் ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்க முடியாது.வருகிறதோ வரவில்லையோ, பாடித்தான் ஆகவேண்டும். தன் பயத்தை எல்லாம் விட்டு விட்டு ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் கொஞ்சம் கரகரப்பாய் இருந்தது தொண்டை பாடப் பாட மெருகு ஏறிக்கொண்டே போயிற்று. அபூர்வமான தேவகானம் வழிந்தோடியது ரேடியோ வழியாக ; பிடிகளும், பிருகாக்களும் நட்சத்திரங்கள் உதிர்வதுபோல் உதிர்ந்தன. கல்யாணி ராகத்தின் முழுக் களையும் சொட்டும்படி பாடினாள். அடுத்தது மோகன ராகத்தில் ஒரு பாட்டு; அபூர்வமான கற்பனைகள் அடங்கிய பாட்டு. கேட்போர் உள்ளம் அப்படியே கரைந்து உருகும்படி யிருந்தது அந்தப் பாட்டு. 

கச்சேரி முடிந்தது. காஞ்சனாவை அதே கார் வீட்டில் கொண்டுபோய் விட்டது. 

“டிரைவர்! இந்தா, நீ ரொம்பவும் சிரமப்பட்டாய்” என்று கூறி அவனிடம் ஒரு ரூபாயைக் கொடுத்தாள் அவள். 

“நான் இதையெல்லாம் வாங்கக்கூடாது.வாங்கமாட்டேன்” என்று அவன் மறுத்தான். 

“இல்லை அப்பா ; நீ வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். செய்யும் வேலை அதிகம். ஆனால் உனக்குக் கிடைக்கும் கூலி குறைவுதான். நான் கொடுக்கும் வெகுமதி அப்படி ஒன்றும் அதிகம் அல்ல. ஏதோ ஒரு நாளைக்கு உன் செலவுக்கு ஆகும் அல்லவா?” என்று கூறி அவனை அதை வாங்கிக்கொள்ளும்படி செய்துவிட்டு உள்ளே சென்றாள். 

“அந்தக் கையில் வாங்கி இந்தக் கையில் தர்மம் செய்கிறாயே அப்படி என்ன மிதமிஞ்சி உனக்கு வரும்படி வந்துவிட்டது? என்றாள் அவள் தாய் செல்லம். 

“மிதமிஞ்சி வந்தால்தான் தர்மம் செய்ய வேண்டுமா? கையில் இருக்கிறபோதுதானே அம்மா கொடுக்கப் போகிறோம்? பாவம்! அவன் ஏழை டிரைவர். கொட்டுகிற மழையிலும் தன் வேலையைச் செய்யவேண்டி யிருக்கிறது. அதற்குத் தக்க ஊதியம் ஒருவரும் அளிப்பதில்லை. நம்மைப்போல் உள்ளவர்கள் ஏதாவது கொடுத்தால் அவன் மனம் சந்தோஷம் அடையும். தான் பட்ட சிரமத்திற்குப் பலன் கிடைத்தது என்று மனத் திருப்தி ஏற்படும்.” 

“போதுமே உன் பேச்சு! தர்மம் என்று சொல்லிக்கொண்டு தானே நாம் இன்று ஓட்டாண்டியாய்ப் போய்விட்டோம்? பாடிப் பிழைக்கும் வழி ஏற்பட்டதே! அதை நினைத்தாவது நிலைமையை உணர்ந்து காரியத்தை நடத்தக் கூடாதா? என்னவோ இப்படி அசட்டுப் பெண்ணாய் இருக்கிறாயே!” என்று செல்லம் அங்க லாய்த்தாள். காஞ்சனாவின் அழகிய முகத்தில் சோகப் புன்னகை தோன்றி மறைந்தது. 

“அம்மா, என் பாட்டு எப்படி யிருந்ததம்மா? எதிர்வீட்டு ரேடியோவில் கேட்டாயா?” என்று ஆவலுடன் கேட்டாள் காஞ்சனா. 

“இல்லை. நான் அதைக் கேட்க விரும்பவில்லை. சோகத்தந்தி களிடையே எழும் நாதத்தைக் கேட்டு மனம் உருகுவதைவிடப் பேசாமல் இருப்பதே மேல் என்று இருந்துவிட்டேன்” என்றாள் செல்லம், கண்களைத் துடைத்துக்கொண்டே. 

“அம்மா, அழாதே. நீ அழுதால் என் மனசில் ரத்தம் கசிவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அழுது அழுது வாழ்க்கையில் ஒன்றும் காணவில்லை. பிறந்தது முதல் உன் கண்களில் நீரைத் தவிர நான் வேறு ஒன்றும் பார்த்ததில்லை. கண்ணீர் வடிந்து வடிந்து உன் முகமே கறை படிந்துவிட்டது. இவ்வளவு நாள் தான் பணமில்லாமல் கஷ்டப்பட்டோம். என் சங்கீதம் பணம் சம்பாதித் துக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இதுவரையில் ஏற்பட்ட தில்லை. இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. சந்தோஷம் இல்லாத வாழ்க்கையாய்ப் போய்விட்டாலும் சோற்றுக்குத் திண்டாடும் பரதேசி வாழ்க்கை இல்லை அம்மா. ஒருவனிடம் கையைக் கட்டிக் கொண்டு கெஞ்சி நிற்கவேண்டிய அவசியம் இல்லை” என்று தன் தாய்க்கு ஆறுதல் சொல்ல முற்பட்டாள் காஞ்சனா. 

“காஞ்சனா……!” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் செல்லம். 

“ஏனம்மா?” 

“உன் முகத்தைப் பார்க்கப் பார்க்க என் மனசு எவ்வளவு வேதனை அடைகிறது, தெரியுமா?” 

“பாராமல் இரேன்!” 

எப்படி இருக்க முடியும்? பெற்ற உள்ளம் கேட்குமா?

“காஞ்சனா…… எவ்வளவு அழகான பெயரடி! நீதான் எவ்வளவு அழகடி?” 

“சரி அம்மா, உன் பிதற்றல்களை ஆரம்பித்துவிட்டாயா? அழகு! இது யாருக்குப் பிரயோஜனம்?” என்று மனம் வெதும்பிச் சீறினாள் தாயின்மேல். அழகு என்றவுடன் இவ்வளவு நேரம் குடிகொண்டிருந்த சாந்தமெல்லாம் பறந்துவிட்டது. கண்கள் கோப ஜ்வாலையைக் கக்க ஆரம்பித்துவிட்டன. தாய் நடுங்கி விட்டாள். அதனுடன் அவர்கள் சம்பாஷணையும் முற்றிற்று. 


காஞ்சனாவின் தந்தை வேதமூர்த்தி நல்ல ஸ்திதியில் இருந்தவன். வேதத்திற்கு நாலைந்து சகோதரர்கள் உண்டு. எல்லோரும் வேதத்தின் தந்தை இருக்கிறவரையில் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தார்கள். அவர் காலமான பிறகு பாகப் பிரிவினை ஆயிற்று. சகோதரர்களுக்குள்ளே பாகப் பிரிவினை ஆன சில நாட்களில் உயிர்ப் பிரிவினையும் சில ஆய்விட்டது. ஐந்து சகோதரர்களில் எஞ்சி நின்றவர்கள் பிரணதார்த்தியும் வேதமுந்தான். பிரணதார்த்தி மூத்தவன்; வேதம் இளையவன். அந்தக் குடும்பத்தில் பிரணதார்த்திக்கும் வேதத்திற்கும் என்றுமே ஒத்துக்கொள்ளாது. இறந்த சகோதரர்களுக்கு வாரிசு ஒருவரும் இல்லை. ஆதலால் அவர்கள் சொத்தும் இவ்விருவரையே சேர்ந்தது. இவ்விருவருக்கும் சொத்து எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாயிற்றோ அவ்வளவுக்கவ்வளவு விரோதமும் அதிகமா யிற்று. இருவரும் ஒரே ஊரில்தான் இருந்தார்கள். 

பிரணதார்த்திக்கும் வேதத்திற்கும் இரண்டு வருஷங்களே வயசில் வித்தியாசம். குடும்பத்தில் கோரச் சாவுகள் நிகழ்ந்து, பிறகு அமைதி நிலவியபொழுது பிரணதார்த்திக்கு வயசு முப்பது; வேதத்திற்கு இருபத்தெட்டு. இருவருக்கும் அப்பொழுது விவாகம் ஆகவில்லை. பலர் பெண் கொடுக்க முன்வந்தார்கள் இருவருக்கும். என்னதான் விரோதம் இருந்தாலும் அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகாமல் தான் கல்யாணம் செய்து கொள்வது நியாயமன்று என்று கருதிவந்தான் வேதம். அதனால் வந்த பெண்களைத் தட்டிக் கழித்தான். அவன் அப்படித் தட்டிக் கழித்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. அதுதான் செல்லம். பக்கத்து வீட்டுப் பெண். அதிக அழகு வாய்ந்தவள் என்று தான் சொல்ல வேண்டும். குழந்தை முதற்கொண்டே வேதத்திற்கும் அவளுக்கும் பரஸ்பர அன்பு ஏற்பட்டு வந்தது. செல்லத்தின் தகப்பனாரும் அந்தக் குடும்பத்திலேயே செல்லத்தைக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தார். முக்கியமாக வேதத்திற்கு அவளைக் கொடுப்பதில் அவருக்குப் பரம திருப்தி. ஆனால், ‘பிரணதார்த்தி கல்யாணமாகாமல் இருக்கும்பொழுது எப்படி வேதத்திற்கு அவளைக் கொடுப்பது?’ என்ற பிரச்னை எழுந்தது. பிரணதார்த்திக்கும் செல்லத்தைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அதனால் அவனும் வந்த பெண்களைத் தட்டிக் கழித்துவந்தான். 

கடைசியில் துரதிருஷ்டவசமாகப் பிரணதார்த்தியின் ஜாதகம் செல்லத்துடைய ஜாதகத்துடன் பொருந்தவில்லை. வேதத்தின் ஜாதகத்தோடு பொருந்தி விட்டது. இது பிரணதார்த்திக்கு மிகவும் வருத்தந்தான். 

செல்லத்தின் தகப்பனாரின் பொறுமை போய்விட்டது. “வேதம்! நீ செல்லத்தைக் கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் நான் வேறு இடம் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டார், ஒரு நாள். 

“அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகாமல் நான் எப்படிச் செய்து கொள்வது?” என்றான் வேதம். 

“அதற்கு என்ன செய்வது? உன் அண்ணா ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரி விரதம் அனுஷ்டித்தால் நீ அது மாதிரியே இருக்க இஷ்டப்படுகிறாயா? ஐயர் வரும் வரையில் அமாவாசை காத்திருக்குமா?’ என்றார் அவர். வேதமூர்த்தியின் மனமும் திரும்பிவிட்டது. செல்லத்தைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். பிரணதார்த்தியின் மனம் பொறாமையால் பொங் கிற்று. தனக்குக் கிடைக்காதவள் தம்பிக்குக் கிடைத்து விட்டாளே என்ற ஆத்திரம் வேறு. தம்பியின் பேரில் தீராத வெறுப்பு உண்டாகவே, அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் ஊரை விட்டே போய்விட்டான். அவன் போன் இடம் ஒருவருக்கும் தெரியவேயில்லை. 

செல்லத்துடன் வேதம் அதிக வருஷங்கள் வாழ்க்கை நடத்த வில்லை. காஞ்சனா பிறந்த மறுவருஷம் அவன் இறந்துவிட்டான் காஞ்சனா தந்தையின் ஸ்பரிசத்தையும், அன்பையும் பெறாத அபாக்கியவதி யாகிவிட்டாள். செல்லத்தின் வாழ்க்கையில் அன்று ஏற்பட்ட துக்கம் மறையவே இல்லை. காஞ்சனாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் துக்கம் குமுறிக்கொண்டு வரும். அவள் அழகு மிகுந்த வதனத்தைச் சிறிது நேரம் கூர்ந்து பார்ப்பாள். அவள் மனத்தில் ஏதோ சாந்தி ஏற்பட்டதுபோல் தோன்றும். குமுறிய துக்கம் சிறிது நேரம் அடங்கும். அதற்குள் வேதமூர்த்தி யின் முகம் அவள் மனக் கண்முன் வந்து நிற்கும். குழந்தையின் பேரில் பொட்டுப் பொட்டாகக் கண்ணீர் வடிப்பாள். தாயின் முகத்தை ஒரு நாளாவது மலர்ச்சியுடன் காஞ்சனா பார்த்ததே யில்லை என்றுகூடச் சொல்லலாம். 

காஞ்சனா வயசு வந்த பெண் ஆனாள். அவள் அழகும் பேச்சும் ஊரையே கொள்ளை கொண்டன. அவள் மனம் கருணை வடிவு கொண்டது. ‘பிச்சை’ என்று கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லும் வழக்கமே அவளிடம் இல்லை. தன் பெண்ணின் தர்ம சிந்தனையைப் பார்த்துச் செல்லத்திற்கு ஒவ்வொரு சமயம் பெருத்த கவலை உண்டாகிவிடும். நம் சொத்து முழுவதும் இந்தப் பெண் இப்படியே தர்மத்தில் அழியும்படி செய்து விட்டால் நம் எதிர்காலம் என்னவாவது?’ என்று யோசிப்பாள். ஆனால் காஞ்சனா எதையும் செய்யும்பொழுது தடுக்கமாட்டாள். காஞ்சனாவிற்குச் சங்கீதத்தில் நல்ல ஞானம். அபூர்வமான குரல். செல்லம் அவளுக்குத் தகுந்த சிக்ஷை சொல்லி வைத்தாள். காஞ்சனா அதைச் சிரத்தையுடன் பழகி வந்து அதில் மிகவும் முன்னேற்றம் அடைந்தாள். 

காஞ்சனாவிற்குக் கல்யாண வயசு வந்தது.செல்லத்தின் கவலைகள் அதிகரித்தன. அல்லும் பகலும் இதே சிந்தனை : தகுந்த வரன் கிடைக்கவேண்டுமே என்று. தன் வாழ்க்கைப்போல் அவள் வாழ்க்கையும் முடிந்துவிடக் கூடாது என்ற அர்த்தமற்ற பயம் வேறு அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. காஞ்சனாவின் அழகைக் கண்டு எவ்வளவோ பேர் மோகித்தனர். ஆனால் காஞ்சனா தன் அழகைக் கண்டு மோகிப்பவர்களைக் கட்டோடு வெறுத்தாள். அபூர்வமான குணங்களும் எண்ணங்களும் நிரம்பிய வளாய் இருந்தாள் அவள்.அவளுக்குத் தன் அழகைக் கண்டாலே ஒரு வெறுப்புத் தோன்றும். தன் அழகைப் புகழ்பவர்களையும் அவள் வெறுப்பாள். கடைசியில் அவள் தனக்கென்று ஒரு வரனைத் தேர்ந்தெடுத்தாள். 


காஞ்சனாவின் கல்யாணம் நடந்ததே ஒரு விசித்திரமான முறை. ஹிந்து ஆசாரங்களுக்கெல்லாம் அநேகமாக விலக்கானது. முதல் விஷயம் : ஜாதகம் பார்க்கவில்லை. மனப் பொருத்தம் இருந்தால் எல்லாப் பொருத்தமும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையாகிய அஸ்திவாரத்தில் அவளது இல்வாழ்க்கையாகிய கட்டிடம் அமைந் தது; கல்யாணத்திற்குப் பத்திரிகையோ, அழைப்போ ஒருவருக்கும் 

தம். அனுப்பவில்லை. கல்யாண மாப்பிள்ளை மட்டும் கல்யாணத்தன்று காலை வந்தான். இரண்டு வைதிகர்கள் முன்னிலையில் காஞ்சனா வின் கழுத்தில் தாலியைக் கட்டினான். அன்று முதல் அவன் காஞ்சனாவின் கணவன் ஆகிவிட்டான். அவள் சுகதுக்கங்களில் அவனுக்குப் பங்கு ஏற்பட்டது. செல்லம் தன் பெண் கல்யாண விஷயத்தில் அதிகமாக ஒன்றும் ஆட்சேபம் கிளப்பவில்லை. அவள் இஷ்டப்படியே நடக்கட்டும் என்று இருந்துவிட்டாள். 

காஞ்சனாவின் கணவன் பாலன் ஏதோ நல்ல உத்தியோகத்தில் இருந்தான். பார்ப்பதற்கு ஆள் வாட்ட சாட்டமாய் இருப்பான். அவனுடைய உறவினர்கள் ஒருவரும் அருகில் இல்லை. தகப்பனார் மாத்திரம் எங்கேயோ வடக்கே இருப்பதாகச் சொன்னான். அவரை விட்டுத் தனியாக இங்கு எதற்கு வரவேண்டும் என் கேட்டால், தகப்பனுக்கும் பிள்ளைக்கும் ஆகாது போனதுதான் காரணம். செல்லம், அவன் தகப்பனாரை ஆனமட்டும் கல்யாணத்திற்கு வரவழைக்க வேண்டுமென்று மன்றாடினாள். பாலன், முடியவே முடியாது என்று சொல்லிவிட்டான். எனக்குத் தகப்பனார் ஒருவர் இருக்கிறார் என்றே நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம். நான் அநாதைதான். என் உத்தியோகந்தான் என் வரும்படி. அதை நம்பி உங்கள் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பதாய் இருந்தால் கொடுங்கள். அவளை நான் மனம் நோவாமல் வைத்துக்கொள்வேன்” என்றான் பாலன். பிள்ளையின் தாய்தகப்பன் பெயரைக் கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படிப் பெண்ணைக் கொடுப்பது என்று செல்லம் முதலில் தீவிரமாக யோசித்தாள். 

“அம்மா, நீ இதையெல்லாம் யோசிக்க வேண்டாம். பழைய காலமெல்லாம் போய்விட்டது. ஜாதகமாவது, நட்சத்திரமாவது பெயராவது, ஊராவது ! மனந்தானே எல்லாவற்றிற்கும் காரணம்? அது சரியாக இருந்துவிட்டால் எல்லாம் சரியாய் நடக்கும். என்னவோ எனக்கு அவரை ரொம்பப் பிடித்திருக் கிறது” என்றாள் காஞ்சனா. 

பிறகு செல்லம் தன் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு காஞ்சனாவின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தாள். கல்யாணமும் நடந்தது. அன்று காஞ்சனாவின் முகத்தில் ஏற்பட்ட வசீகரம் என்றுமே மறக்கமுடியாது. தம்பதிகளின் மனம் குதூகலத்தால் பொங்கிக் கொண்டிருந்தது. பாலன் தனக்கு இப்பேர்ப்பட்ட அழகுவாய்ந்த மனைவி கிடைத்தாளே என்று மனத்திற்குள்ளே பூரித்துப் போனான். ஆனால் செல்லத்தின் மனம் மட்டும் ஏதோ வேதனை அடைந்து கொண்டிருந்தது. அவள் இருதயத்தில் காரணமற்ற திகில் குடிகொண்டது. காஞ்சனாவின் வாழ்க்கையை நினைத்துப் பயங்கரமான எண்ணங்களுக்கு அடிமையானாள். 

கல்யாணமான இரவே பாலன் ஊருக்குப்போகும்படி ஆ விட்டது. அவன் காரியாலயத்தில் ஒருநாள் விடுமுறை கிடைப்பதே குதிரைக் கொம்பான விஷயம். அதிருஷ்டவசமாய் அவனுக்கு லீவும் இரண்டுநாள் கிடைத்தன. போகவரப் பிரயாணத்திற்கு ஒருநாள் என்றும், கல்யாணத்திற்கு ஒருநாள் என்றும் இரண்டு நாளாக எடுத்தான். ஆதலால் அன்று கட்டாயம் புறப்படும் அவசியம் ஏற்பட்டது.காஞ்சனாவையும் அழைத்துப் போகிறேன் என்றான். செல்லம் அதற்குச் சம்மதிக்கவில்லை. காஞ்சனாவும் தன்னையே நம்பி வாழும் தாயைச் சட்டென்று பிரியச் சம்மதிக்க வில்லை. 

பாலன் பிரியும்போது காஞ்சனாவின் கண்கள் கலங்கின. கண்ணீர் ஓரங்களில் கசிந்தது. பாலனின் முகத்தில் ஒரு பரிவு நிறைந்த பார்வை ஏற்பட்டது. 


பாலன் ஊருக்குப் போனான். போனவனிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. தாயும் மகளும் திகிலடைந்து போயினர். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி ஏங்கினார்கள். செல்லத்தின் மனம் தூசிபோல் அலைந்தது. தன்னுடைய எண்ணங்கள் பலித்து விடுமோ என்று அஞ்சினாள். பாலனுக்குக் கடிதம் எழுதினாள். பதில் இல்லை. நேரில் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் காஞ்சனாவையும் அழைத்துக்கொண்டு போனாள். ஆனால் ஆசாமி அங்கே இல்லை. திடீரென்று ஒருநாள் வேலையை ராஜீநாமாச் செய்துவிட்டுப் போய்விட்டான் என்று தெரிந்தது.குலம் கோத்திரம் விசாரிக்காமல் கல்யாணம் செய்து கொடுப்பதன் பலன்கள் இப்படித்தான் முடியுமோ?’ என்று எண்ணினாள். காஞ்சனா கண்ணீரை மாலையாகப் பெருக்கினாள். 

தாய்க்கும் மகளுக்கும் ஒரே திருப்தி: அதாவது நல்ல வேளை காஞ்சனாவின் கற்பு நிலை கெடவில்லை என்பதுதான். காஞ்சனா பரிசுத்தமாகவே இருந்தாள். 

ஒரு மாதம் ஓடிவிட்டது. பகல்பூரிலிருந்து காஞ்சனாவிற்கு ஒரு கடிதம் வந்தது. கடிதம் பாலனால் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு தாயும் மகளும் பூரித்தார்கள். ஆனால் மறு நிமிஷம் அவர்கள் பூரிப்பில் மண் விழுந்தது. ஏமாற்றமாகவும் அதிசய மாகவும் இருந்தது. அத்துடன் மட்டுமல்ல; நடக்கக்கூடாததும், இதுவரை நடந்திராததுமான காரியம் ஒன்று நடந்துவிட்டது! 

“அன்புள்ள சகோதரி காஞ்சனா” என்ற முதல் வரியைப் பார்த்தவுடன் காஞ்சனாவின் இருதயம் நின்றுவிடும்போல் ஆகி விட்டது. சொந்த மனைவியை யாராவது சகோதரி என்று அழைப்பதுண்டா? மேலே தொடர்ந்து வாசித்தாள்: 


காஞ்சனா, உன் அழகு இருக்கிறதே அதுவே உன் வாழ்விற்குச் சத்துருவாய் இருந்தது. அதனால்தான் நீ அதை வெறுப்பதாய் உன் கல்யாணத்திற்குமுன் சொன்னாயோ? ஆனால் நான் உன் அழகிற்கு அடிமையானவன்தான். உன் அழகு எனக்கு எங்கேயாவது கிடைக்காமல் போய்விடுகிறதோ என்று எண்ணித் தான் குலம், கோத்திரம், என் தந்தையின் பெயர் ஒன்றையும் கூறாமல் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளத் துடித்தேன். உலகத்தவர், நம் ஹிந்து சமூகத்தவர், செய்யத்தகாத பாவத்தை நான் செய்துவிட்டேன். என் வாழ்வில் சாந்தியே கிடைக்காது இந்தப் பாவத்தினால். செய்வதையும் செய்தாகிவிட்டது; இனி மேல் அதைப்பற்றி எவ்வளவு துக்கித்துத்தான் என்ன பயன்? ஆனால் காஞ்சனா, ஒரே ஒரு புண்ணியம் செய்தேன். உனது தேகத்தூய்மைக்கு நான் பங்கம் விளைவிக்காமல் அந்தப் பாவத்தி லிருந்து தப்பினேன். 

காஞ்சனா, நான் உனக்கு ஒன்றுவிட்ட சகோதரன் முறை ஆகவேண்டும். இது எனக்குத் தெரியாது. என் தந்தையும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவே இல்லை.நீ ஒருத்தி இருக்கிறாய் என்பது அவருக்கு இன்னமும் தெரியாது. அது தெரியாமல் இருப்பதே நல்லது. 

நான் நம் கல்யாணத்திற்குப் பிறகு ஊருக்குப் போனே னல்லவா? அங்கே என்னை ஒரு தந்தி வரவேற்றது. என் தந்தை உடனே வரும்படி அடித்திருந்தார். எவ்வளவுதான் அவருடன் சண்டை போட்டுக்கொண்டு ஓடிவந்தாலும் தந்தியைக் கண்டவுடன் அவரைப் போய்ப் பார்க்காமல் இருக்க மனம் வரவில்லை. அன்றே பகல்பூர் கிளம்பிச் சென்றேன். என்னைக் கண்டவுடன், “பாலா, பாலா’ என்று கதறிக்கொண்டே என்னை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டார். 

“பாலா! நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. உன் தாயும் என்னைக் கைவிட்டுப் போய்விட்டாள். நீயும் என்னை விட்டு ஓடினால் என் மனம் சகிக்குமா? இத்தனை நாள் உன் பிரிவைப் பொறுத்துக்கொண்டதே போதும். இனிமேல் போகாதே. நானும் இப்படித்தான் அந்தக் காலத்தில் வீட்டை விட்டு ஓடிவந்தேன். ஆனால் எனக்கு அப்பொழுது தாய் தந்தை இல்லை. என் பிரிவை நினைத்து வருந்த ஒருவரும் இல்லை. என் தம்பி ஒருவன்தான் இருந்தான். அவனால்தான் நான் ஓடிவரும்படி நேர்ந்தது; அதுவும் கல்யாண விஷயமாக. நான் அதை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன். 

“என்னுடைய மூர்க்ககுணமும் பொறாமை நிறைந்த உள்ள முந்தான் அதற்குக் காரணம். என் தம்பி வேதமூர்த்தி பக்கத்து வீட்டில் இருந்த செல்லத்தைக் கல்யாணம் செய்துகொண்டான். அவளையே நானும் மணக்க விரும்பினேன். ஆனால் எனக்கும் செல்லத்துக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று தட்டிக் கழித்துவிட்டார்கள். அதனால் நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவில்லை. அதனுடன் என் தம்பியே அவளைக் கல்யாணம் செய்துகொண்டதால் எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. என் சொத்துச் சுதந்தரங்களுடன் இங்கு வந்தேன்.பிறகு உன் தாயை மணந்துகொண்டேன். உனக்கு ஆறு ஏழு வயசானவுடன் அவள் இறந்துவிட்டாள். அன்று முதல் உன் முகத்தைப் பார்த்துத்தான் நான் உயிரோடு இருந்துவருகிறேன். அப்படி இருக்கும்பொழுது நீயும் ஓடிவிட்டாள் நான் என்ன செய்வேன்! விட்டுப் பிடிப்போம் என்றுதான் பேசாமல் இருந்தேன். ஆனால் உன் பிடிவாதமே ஜயித்தது. உன்னைப் பிரிந்திருக்க மனம் இல்லை. அதனால்தான் உடனே வரும்படி தந்தி அடித்தேன்” என்றார். 

அவருடைய அந்த உருக்கமான பேச்சு என் மனத்தைப் பெரிதும் துன்புறுத்திவிட்டது. ‘இவ்வளவு அருமையுள்ள தந்தைக் குச் சொல்லாமல்கூடக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டேனே!’ என்று வருந்தினேன். அவரிடம் எப்படி நான் மணந்துகொண்டதைக் கூறுவது என்று தயங்கிக்கொண்டிருக்கும்பொழுது ‘செல்லம்’ என்ற பெயரை அவர் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வந்தது.உன் தாயின் பெயரும் செல்லம் என்று எனக்குத் தெரியும். ஒரு வேளை அவர் குறிப்பிட்டது உன் தாயாகவே இருக்கலாமோ என்ற சந்தேகம் மனத்தில் உண்டாகியது. அதை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் எனக்கு அதிகரித்தது. செல்லத் தின் அங்க அடையாளங்களை அவரிடம் கேட்டேன். என் தேகம் நிச்சயமாகிவிட்டது. உன் தாய்தான் அவர் குறிப்பிட்ட செல்லமும் என்று தெரிந்தவுடன் என் உடலே நடுங்கிவிட்டது. கண்களில் என்னையும் அறியாமல் ஜலம் வந்தது. அதை அடக்கிக் கொண்டேன். தந்தைக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் தனியே தோட்டத்தின் பக்கம் சென்றேன். 

காஞ்சனா, என் நிலையை எவ்வாறு விவரிப்பது? எவ்வளவு மகத்தான பாப வலையில் சிக்கிவிட்டோம் நாம்? சகோதரனுக்கு யாராவது மாலையிடுவதை நாம் பார்த்திருக்கிறோமா? இது என்ன கலிகால அதிசயமா? என் தந்தையின் பெயரை ஆனமட்டும் கூறும்படி உன் தாய் கேட்டாளே? “அதெல்லாம் சொல்ல முடியாது. என்மீது நம்பிக்கையில்லையா? அப்படி நம்பிக்கை அற்றவனிடம் நீங்கள் சம்பந்தம் வைத்துக்கொள்ளவேண்டாம்!” என்று வெடுவெடுப்பாகப் பதிலளித்தேனே ! அதைக் கேட்டாவது அவள் என் சம்பந்தத்தை அறுத்து எறிந்திருக்கக் கூடாதா? நீயும் என்னைக் கல்யாணம் செய்துகொள்வதாக ஒரே பிடிவாதம் பிடித்தாயே; அதன் பலன் எப்படி முடிந்தது பார்த்தாயா? ‘கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு’ என்று நம் ஹிந்து சமூகத்தில் விதித்திருக்கும் விதியை நாம் மீறியதன் பலன் எப்படி முடிந்தது பார்த்தாயா? 

தன்னந்தனியாக இருந்த இரண்டு மாதர்களை என் வலையில் விழச்செய்தவன் நானல்லவா? என்மேலும் குறை சொல்ல முடியாது, காஞ்சனா. எல்லாவற்றிற்கும் உன் அழகுதான் காரணம். அதுதான் என் மனத்தை அப்படி மயங்க வைத்தது. அதுதான் ஜாதகமில்லை, கோத்திரமில்லை என்று பொய் சொல்ல வைத்தது. காஞ்சனா, என்னை மன்னித்து விடு. உனது வாழ்க்கையைக் குலைத்த பாவியை மன்னி! இனிமேல் உன் முகத்தில் நான் விழிக்க முடியாது. நீ இனிமேல் என்னைத் தேடுவதும் வீண் முயற்சிதான். உன் மாங்கல்யத்திற்காக நான் இந்த உலகில் உயிர்வாழத்தான் செய்வேன்.இதனால் தற்கொலை புரிந்து செத்துப்போகமாட்டேன். எவ்வளவுதான் என் தந்தை என்பேரில் அன்பைச் செலுத்தினாலும் இந்த விஷயத்தினால் நான் அவரிடம் இருக்க முடியாதவனாகி விட்டேன். அவருக்கு இன்னமும் உன் தந்தை இறந்ததும், நீ ஒருத்தி இருக்கும் சமாசாரமும் தெரியா. எப்பொழுதாவது அவரைப் பார்த்தால் நான்தான் உனக்குத் தாலிகட்டிய கணவன் என்று சொல்லிவிடாதே. 

நான் இதோ போகிறேன். எங்கே போவேனோ தெரியாது. என்னை ஒருவரும் தேடவேண்டாம். 

இப்படிக்கு,
உன் அன்புள்ள
பாவி பாலன். 

இதைப் படித்தவுடன் காஞ்சனாவின் இருதயம் சுக்கு நூறாக வெடித்துவிடுவதைப் போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது.”அம்மா!” என்று கதறினாள். செல்லத்தின் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது என்றுதான் சொல்லவேண்டும். செல்லத்தின் கைகள் காஞ்சனாவின் நெற்றியில் இருந்த திலகத்தை அழித்துவிட்டது. 

“காஞ்சனா! உன் எதிர்காலத்திட்டங்களுக்குச் சமாதி கட்டியாகி விட்டது. நீ இனிமேல் வாழ்க்கைப் பாதையினின்று ஒதுங்கிப் போனவள்தான். கல்யாணமாகியும் கன்னிப்பெண்தான். ஆனால் மங்கல ஒளி வீசும் திலகம் நெற்றியில் வேண்டாம். உன் அழகை மேன்மைப்படுத்தும் திலகம் அழிந்துபோகட்டும். அதனால் உனக்கு இனிமேல் ஒருவித நன்மையும் இல்லை. உன் அழகே உனக்குச் சத்துருவாய் முடிந்தது. உன் பெரியப்பாவே அன்றும் என் கல்யாணத்திற்கு முதலில் தடையாய் இருந்தார். அந்தத் தடையே சில நாட்களில் உன் அப்பாவின் வாழ்க்கைக்கு உலையாக முடிவதுபோல் இருந்தது. இன்றும் என் பெண்ணான உனக்கும் அதே பெரியப்பாவால்தான் வாழ்க்கை குலைய நேர்ந்தது.போ, அழாதே! நீ புனிதவதி. அந்தமட்டில் சந்தோஷம்” என்று ணர்ச்சியோடு கூறிப்புழுங்கினாள். 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரண்டு வருஷங்கள் ஓடி விட்டன.தாயும் மகளும் சாந்தி அற்ற வாழ்க்கை நடத்திவந்தனர். இருந்த சொத்தைக் கரைத்துவிட்டனர். 

காஞ்சனா மேடை ஏறிக் கச்சேரி செய்ய விரும்பவில்லை. கெளரவமாகத் தன் சங்கீதத்திற்கு யாராவது மதிப்புக் கொடுத்து ஆதரிக்கிறவர்கள் இருக்கிறார்களா என்று அலசிப் பார்த்தாள். ரேடியோவைத் தவிர வேறு சரியான இடம் அவளுக்கு அமைய வில்லை. அதில்தான் ஆபத்து இல்லை, கௌரவமானது என்று வள் நினைத்தாள். தாயின் சம்மதத்தின்பேரில் ஒரு மனுப் போட்டாள். குரல் பரிசோதிக்கப்பட்டது. அதிகாரிகள் பிரமித்துப்போனார்கள். அந்த மாதத்திலேயே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. 

பாலன் காஞ்சனாவிற்குக் கடிதம் எழுதிவிட்டு எங்கே போனான் என்றே தெரியாமல் போய்விட்டான். அவன் தந்தை யாகிய பிரணதார்த்தியின் மனம் உடைந்துபோய்விட்டது. மேலும் அவருக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. கையில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு ஸ்தல யாத்திரை கிளம்பிவிட்டார். வட இந்திய க்ஷேத்திராடனம் முடிந்தது. தென் பக்கம் திரும்ப ஆசை உதித்தது. அதனுடன் தம்பியைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது. பழைய குரோதங் களையெல்லாம் மறந்துவிட்டார். செல்லத்தின்பால் இருந்த காதலும் மடிந்துவிட்டது. எப்படியாவது தம்பியையும் செல்லத் தையும் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் புறப்பட்டு வந்தார். ஆனால் ஊரில் வந்ததும், தம்பி இறந்த தகவலும், செல்லமும் அவள் பெண்ணும் ஊரை விட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தியும் கிடைத்தன. பிரணதார்த்தியின் துக்கம் கரைகடந்து போயிற்று. ஐந்து சகோதரர்களுடன் பிறந்து மருந்துக்குக்கூட ஒருவரும் இல்லாமல் பிரிந்து போய்விட் டார்களே! இருந்த ஒருவனுடனும் சண்டை போட்டுக்கொண்டு ஓடினேன். அவனும் கடைசியில் போய்விட்டான். ஐயோ! செல்லத்திற்கு இந்தக் கதியா வரவேண்டும்? அவள் இளமையும் இப்படிப் பாழடைந்து போய்விட்டதே! அவளுக்கு ஒரு பெண் இருந்தாள் என்று சொல்கிறார்களே; தாயும் மகளும் எப்படி ஜீவனம் செய்கிறார்களோ? சொத்து எத்தனை நாளுக்கு வந்தி ருக்கப்போகிறது!’ என்று பலவிதமாக எண்ணித் துக்கித்தார். ‘எப்படியாவது செல்லத்தைக் கண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லவேண்டும்’ என்று திடமான உறுதி செய்துகொண்டார். ஊர் ஊராக அலைந்தார். 

காஞ்சனா ரேடியோக் கச்சேரி செய்த மறுநாள், பத்திரிகைக ளெல்லாம் அவளுடைய பாட்டைப் பற்றி விசேஷமாகப் புகழ்ந் திருந்தன. அவள் போட்டோ வேறு பிரசுரமாயிருந்தது. பிரணதார்த்தி போட்டோவைப் பார்த்துத் திடுக்கிட்டுப்போனார். ஆதியில் செல்லம் எப்படியிருந்தாளோ அதேமாதிரி இருந்தது காஞ்சனாவின் முகம். பிரணதார்த்தி, அவள்தான் செல்லத்தின் பெண்ணாக இருக்கவேண்டுமென்று ஒரு நொடியில் திட்டம் செய்துகொண்டு விட்டார். 

இனிமேல் அவருக்குச் செல்லத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாகத் தோன்றியது. அன்றிரவே புறப்பட்டார். 

காஞ்சனாவின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுதே பிரணதார்த்தியின் மனம் ஏதோ வேதனையை அடைந்தது. கதவைத் தட்டினார். காஞ்சனா கதவைத் திறந்தாள். பிரணதார்த்தி அப்படியே மலைத்து நின்றார், அவள் அழகைப் பார்த்து. 

“நீங்கள் யார்?” என்றாள் காஞ்சனா. 

“நானா? பிறகு சொல்கிறேன். உன் தாய் இருக்கிறாளா?” என்றார். 

“இருக்கிறாள்.உள்ளே வாருங்கள்” என்றாள். 

செல்லம் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். 

“அம்மா! உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்!” என்றாள் காஞ்சனா. 

“இந்த அபலையைப் பார்ப்பதற்குக்கூட இந்த உலகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா?” என்று திரும்பிப் பாராமல் பதிலளித்தாள். 

பிரணதார்த்திக்குச் சுருக்கென்று பட்டது. 

“செல்லம், நான் ஒருவன் இருக்கிறேனம்மா; பாவி!” என்றார். 

செல்லம் திடுக்கிட்டுத் திரும்பினாள். பிரணதார்த்தியைப் பார்த்தவுடன் அப்படியே ஸ்தம்பித்துவிட்டாள். அவள் முகத்தில் வெறுப்பு, ஆச்சரியம் இரண்டும் குடிகொண்டிருந்தன. 

“அண்ணா!” என்றாள். அவள் கண்களினின்று பொலபொல் வென்று கண்ணீர்த்துளிகள் உதிர்ந்தன. 

“அழாதே செல்லம்! நம் விதி இப்படியா நேரவேண்டும்? என்ன சோதனைக் காலம் நமக்குத்தான்!’ என்று அவளைச் சமாதானப்படுத்தினார். 

காஞ்சனாவிற்குத் தன் பெரியப்பாவைப் பார்த்ததும் பின்னும் துக்கம் பொங்கிற்று. அவர்முன் நிற்க வெட்கப்பட்டுக்கொண்டு உள்ளே மறைந்து நின்றாள். 

“உன் பெண் உன்னையே உரித்து வைத்திருக்கிறது, செல்லம். அவள் முகத்தைப் பத்திரிகைகளில் பார்த்த பிறகுதான் உன்னைக் கண்டுபிடிக்க முடிந்தது. நம் குடும்பத்தின் பெயரைத் தன் சங்கீதத்தால் நிலை நாட்டுவதற்கு அவளாவது மாணிக் கம்போல் இருக்கிறாளே! 

“அண்ணா, அவள் உருவத்தில் மட்டும் என்னைப்போல் இல்லை. வாழ்க்கையிலும் எனக்குள்ள துக்கம் அவளுக்கும் இருக்கிறது.மாணிக்கந்தான்; ஆனால் அழுக்கடைந்த மாணிக்கம்”. 

“என்ன செல்லம், புதிர் போடுகிறாய்? உனக்கு என்ன கஷ்டம்?” 

“கஷ்டம் ஒருவிதத்திலா?  

எவ்வளவோ விதத்தில்தான். அதையெல்லாம் ஒன்றும் கேட்காதீர்கள், அண்ணா. உங்கள் விஷயம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மனைவி மக்கள் எங்கே?” 

“செல்லம், என்னுடைய வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை. என் மனைவி இறந்துபோய்ச் சில வருஷங்களாகிவிட்டன. அவளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நான் ஒரு பிள்ளையை வளர்த்துவந்தேன். அவனும் ஏதோ காரணத்தால் ஓடிவிட்டான். நிம்மதியில்லாமல் ஊர் ஊராகச் சுற்றினேன். கடைசியில் இங்கே வந்தேன்”. 

“பிள்ளையை வளர்த்தீர்களா? உங்களுக்குச் சொந்தப் பிள்ளை இல்லையா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் செல்லம். 

“சொந்தப் பிள்ளை என்றுதான் எல்லோரும் கருதி வந்தார்கள். அவனும், என்னையும் என் மனைவியையும் தன் சொந்தத் தாய்தகப்பன் என்றுதான் எண்ணிக்கொண்டு வந்திருக் கிறான். இன்னமும் அவனுக்கு நான் வளர்ப்புத் தந்தை என்று தெரியாது. ஆனால் என்ன காரணத்தாலோ ஓடிவிட்டான்”. 

அந்த ஒவ்வொரு வார்த்தையும் செல்லத்தின் மனத்தில் நிமிஷத்திற்கு நிமிஷம் ஓர் உணர்ச்சியை எழுப்பியது. துக்கச் சாயை படர்ந்திருந்த அவள் முகத்தில் மலர்ச்சியின் மோகனம் படர ஆரம்பித்தது. 

“ஹும்! அப்புறம்?” என்றாள். 

“குவெட்டா பூகம்பத்திற்குப் பிறகு நான் ஏழை மக்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவி செய்த ‘கமிட்டி’ ஒன்றில் சேர்ந்து தொண்டு செய்துவந்தேன். அந்தச் சமயம் ஒருநாள் ஒரு தென் னிந்தியப் பிராமணர் அந்தக் குழந்தையை என்னிடம் கொடுத்தார். அவர் சொன்னார்: ‘ஐயா, இந்தக் குழந்தை நல்ல குலத்தைச் சேர்ந்ததுதான். இதன் தாய் தந்தையர் பூகம்பத்தின் கொடு மைக்கு ஆளாகி இறந்துவிட்டார்கள். இந்தக் குழந்தையை நான் காப்பாற்றினேன். எனக்கு இதை இதன் ஆயுள் முழுவதும் காப்பாற்றும் சக்தி இல்லை. நீங்கள் எடுத்துப்போய் வளருங்கள்’ என்று. நானும் குழந்தையின் முகத்தைப் பார்த்து இரங்கி வளர்க்கச் சம்மதித்தேன். கடைசியில் எனக்கும் பிள்ளை ஏற்படவில்லையாதலால் அவனையே பிள்ளையென்று கருதி வந்தேன். ஆனால் இன்றோ அவன் எங்கேயோ போய்விட்டான்!” என்று சொல்லி வருத்தப்பட்டார். 

செல்லத்தின் மனம் இதைக் கேட்டுப் பூரித்தது. காஞ்சனா வைகளை உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனம் மறுபடியும் வாழ்க்கைச் சுவையைக் காண ஆவல்கொண் டது. ‘நம் வாழ்க்கை விளக்கு இன்னும் அவியவில்லை’ என்ற நம்பிக்கை ஊற்று அவள் இருதயத்தில் சுரக்க ஆரம்பித்தது. தன் அழகு தனக்குச் சத்துரு ஆகிவிடவில்லை என்ற திடமான அபிப்பிராயமும் ஏற்பட்டது. 

பிறகு செல்லம் காஞ்சனாவின் கல்யாணத்தைப்பற்றி யெல்லாம் சொன்னாள். பிரணதார்த்திக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. 

“செல்லம், இந்தக் காரணத்தைக் கொண்டல்லவா அவன் எங்கேயோ ஓடிவிட்டான்? என்னிடம் அப்பொழுதே சொல்லி யிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு வந்திராதே! எல்லாம் என் னுடைய முட்டாள்தனந்தான். நான் அவனுடைய பிறப்பைப் பற்றி நினைவு தெரிந்தவுடனே கூறியிருக்கவேண்டும். ஏற்கனவே என்னோடு சண்டைக்கு நிற்கும் பேர்வழியாய் இருக்கிறானே, அவனிடம் போய் என்னுடைய உறவு முறையைச் சொன்னால் எங்கே என்பேரில் வெறுப்புக்கொண்டு ஓடிவிடுவானா என்று பயந்தேன். ஆனால் அதில்லாமலே போய்விட்டான். காஞ்சனாவின் வாழ்க்கையைப் பாழ்படுத்துவதற்கு நான்தான் ஒரு கருவியாக அமைந்தேன். செல்லம், உன்னைப் பார்ப்பதற்கே என் கண்கள் கூசுகின்றன. காஞ்சனா, இங்கே வா, அம்மா!” என்றார். 

“பெரியப்பா, நமஸ்காரம் செய்கிறேன், ஆசீர்வாதம் செய்யுங்கள்!” என்றாள் காஞ்சனா. 

பிரணதார்த்தி அவளை வெறிக்கப் பார்த்தார். காஞ்சனா மண்டியிட்டு நமஸ்காரம் செய்தாள். அவள் கண்களின் ஓரத்தில் தேங்கியிருந்த நீர்த்துளிகள் கீழே விழுந்து பிரணதார்த்தியின் பாதத்தில் தெறித்தன. 

“தீர்க்க சுமங்கிலி பவ!” என்று மெதுவான குரலில் ஆசீர்வதித்தார். அந்த வாழ்த்து வாழ்த்தாகவே இருக்கவேண்டு மென்று காஞ்சன மனத்திற்குள் பகவானை வேண்டிக் கொண்டாள். 

“செல்லம், காஞ்சனா, நான் எப்படியாவது பாலனைக் கண்டுபிடித்து வருகிறேன்; கவலைப்படாதீர்கள். அணைந்த தீபத்தை ஏற்றிவைப்பது என் கடமை. காஞ்சனா,உன் அழகு பாழாகிவிடாது. தைரியமாய் இரு!” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளிக்கிளம்பினார் பிரணதார்த்தி. 

செல்லமும், காஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டார்கள். மனத்தில் ஏற்பட்டிருந்த கவலைகள் நீங்கின. பாலன் வருவான் என்ற நம்பிக்கையும் அவள் மனத்தில் தீவிரமாக எழுந்தது. சோகம் ததும்பிய அவள் முகம் மலர்ந்தது. பாலனின் வரவை நோக்கிக் காஞ்சனாவின் அழகு காத்திருந்தது!

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *