(1979 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மறுமணம் என்ற கதை பலதார மணத்தின் அவசியத்தை உடலியல் உளவியல் ரீதியில் சித்தரித்து. இஸ்லாமிய சோலையுள் நம்மை அழைத்துச் சென்று. கோட்பாடுகள் என்னும் நறுமலர்களை நாம் நுகரும்படி செய்கின்றன – அ.ஸ. அப்துஸ்ஸமது – B.A (Hons)
***
சுபஹ் பாங்கு ஒலிக்கிறது. நான் அதுவரை ஓதிய குர்-ஆனை மூடிவிட்டு, பாங்கிற்குப் பதில் கூறினேன். அவரும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.
சுபஹ் பர்ளை முடித்துக்கொண்ட நான், காலைக் கோப்பிக்காக தண்ணீரைக் கொதிக்கவிட்டேன். பள்ளிக்குச் சென்ற அவர், திரும்பி வந்துவிட்டார். நான் கோப்பியை ஊற்றி அவருக்காக எடுத்துச் சென்றேன். ஸ்பிரிங் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து திருக்குர்-ஆனை ஓதிக் கொண்டிருந்த அவர், என்னை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
இவ்வளவு நாளும் வேலைக்காரியால் நடைபெற்றவை வழக்கத்துக்கு மாறாக இயங்குவதைப் பார்க்கும்பொழுது அவருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது எனக்கு மனநிறைவையும், பரவசத்தையும் தந்து கொண்டிருக்கின்றது. கோப்பியைக் குடித்த அவர், விழிகளை மூடிக்கொண்டு மௌனமாகப் படுத்திருந்தார். அவர் தூங்கவில்லை, எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரது மாறும் முகபாவத்திலிருந்து தெரிந்தது.
சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த நான் வெளியே வந்தேன். ஊமைப்படம்போல என் கடந்தகால நினைவலைகள் என் உள் மனதில் உணர்ச்சிகளை வாரிக்கொண்டிருந்தன. நான் பளீரென்று சுடர்விடும் அழகியல்ல, மாநிறத்தவள்தான். என்றாலும் தங்கமும், வைரமும் வெளிநாட்டு உயர் ரக சாரிகளும் அணிந்துகொள்ளும் செல்வச் செழிப்பிலே பிறந்தேன். படிப்பு வாசனை இல்லாத குடும்பத்தில் படிப்பதை இலட்சியமாகக் கொண்டு படித்துப் பட்டமும் பெற்றேன். தொழில் பார்க்கும் அவசியம் இல்லாததால் பட்டாம் பூச்சி போல் பறந்தேன். என்றாலும் இயற்கை சும்மா இருக்கவில்லை . அது என் பருவத்துக்குரிய பரிசை குறைவின்றித் தந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக பெற்றார் விருப்பப்படி எனது திருமணமும் ஊர் வியக்க பெரிதாக நடந்தேறியது.
நாட்கள் ஓடின…. என் உள்மனதில் நீண்ட காலமாகச் சுடர்விட்ட இலட்சியத்தாகம் நிறைவேறும் நாள் என் தோழிகள் மூலம் எனக்கேற்பட்டது.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என கலாசாலையில் படிக்கும்பொழுது மார்தட்டிக் கூக்குரலிட்டோம். கலாசாலை வாழ்வின் பின் அவை புதைந்துவிட்டன. புதைந்துவிட்ட நெருப்பு சுடர்விடவேண்டும் என நான் எண்ணியிருந்தேன். என் எண்ணங்கள் நண்பிகள் மூலம் நிறைவேறின. சந்தோஷத்துடன் அவர்கள் கூட்டிய மாதர் மன்றத்தில் நானும் அங்கத்தவளானேன்.
ஊரிலே எமக்குப் பூரண ஆதரவு கிடைத்தது. பல முற்போக்கான திட்டங்கள் எம்மால் செயலாக்கப்பட்டன. என் கணவர் உட்பட பல பணக்காரர்கள், படித்தவர்கள் பல வழிகளிலும் இயக்கம் வெற்றி பெற உழைத்தனர்.
காலங்கள் கடந்தன; நான் மாதர் மன்றத் தலைவியானேன். பெரிய இடத்துப் பெண்கள் பலர் எமது இயக்கத்தில் சேர்ந்தனர். நாகரிகம் என்ற பெயரில் மேலைத்தேய கண் மூடிக் கொள்கைகள் எமது இலட்சியங்களாக மாறின. அந்த இலட்சியங்கள் எம்மிடையே வெறியாக மாறும் பொழுது நான் தீவிரவாதியானேன்.
இரண்டு வருடங்கள் எப்படியோ ஓடிவிட்டன. எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்த எனது இல்லற வாழ்வில் பூகம்பங்கள் வெடிக்கத் தொடங்கின. அவரின் நல்ல மனதை நான் பலவீனமாகப் புரிந்துகொண்டேன். தவித்தோடி வந்தவரின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல் இரு கைகளினால் தடைச்சுவர் எடுக்க எண்ணினேன், இலட்சிய வெறிகொண்ட எனக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
“பெண்களுக்கு மாதர் மன்றம் முக்கியம். நல்ல முற்போக்கான செயல் திட்டங்கள் எமது சமூகப் பெண்மணிகளிடம் இருக்க வேண்டும். இதனாலேதான் நானும் உங்கள் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தந்தேன். என்றாலும் இலட்சியம் என்ற பெயரில் அருட்கொடைகளை ஒழிக்கத் துணியக்கூடாது. தமக்கென ஒரு தனித்தன்மை இல்லாது போய்விடும் என்ற பயத்தின் காரணமாக இன்றைய பெண்மணிகள் ஏதேனும் ஒரு தனிச்சிறப்பைத் தேடிக்கொள்ள விளையும் அவசரத்தில் தமது பண்பாடு கலாசாரங்களை மறந்துவிடத் – துணிகின்றனர். நீயும் இதற்கு விதிவிலக்கல்ல. என்ன செய்ய…? ம்… எல்லாம் அவன் செயல்… காலம் பதில் கூறட்டும்” என பலவாறாகக் கூறிய அவர், அதன் பிறகு ஒன்றுமே பேசவில்லை .
மௌனமாகச் செல்கிறார்… ‘என்னை விலக்கிவிடுவாரோ…? டேகிட் ஈஸி… போனால் போகட்டும்’ என நினைத்திருந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை…அவர் என் வழிக்கே வரவில்லை.. ஓதுங்கியே இருந்தார்.
மலரை அரிக்கத் தொடங்கும் வண்டுபோல எமக்கு ஆதரவு தந்தோர் எம்மை எதிர்க்கத் துணிந்தனர். எமது இலட்சியங்களைப் புகழ்ந்தோர் எதிர்ப்பு முன்னணி அமைத்துச் செயல்பட்டனர்.
பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் கிளம்ப, மாதர் இயக்கம் ஆட்டங்கண்டது. சிலர் கணவர்களை ஒதுக்கினர். பலர் எமது இயக்கத்திலிருந்து ஒதுங்கினர். ஓதுக்கினவர்களை வீராங்கனைகள் எனப் புகழ்ந்தோம். ஓதுங்கியோர்களை கோழைகள் என இகழ்ந்தோம். “திமிர் பிடித்த கழுதைகள்” என்ற அடைமொழி எமக்கு ஊரிலே கட்டப்பட்டது. எங்கும் எமக்கு அதே பெயர். எமது சட்டங்களே எம்மை சுழன்று சுழன்று தாக்கின. என்றாலும் வைராக்கியத்துடன் செயல்பட்டோம்.
எமது வைராக்கியங்கள் ஒவ்வொரு வீட்டிலும் எரிமலைகள் வெடிக்கச் செய்தன. எங்கு எது நடந்தபோதிலும் எங்கள் வீட்டில் எதுவும் நடைபெறவில்லை. அவர் என்னை விவாகரத்துச் செய்யவுமில்லை. எதுவிதக் குறைவுகளும் வைக்கவுமில்லை. இருந்தும்…? நான் அவரை மதிக்கவில்லை; கையாலாகாதவர் என எண்ணியிருந்தேன்.
அது தவறு என்பதை அன்றுதான் உணர்ந்தேன். எமது மாதர் மன்ற சட்டங்களினால் நாம் வழிகேட்டில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை அந்தச் சம்பவமே எனக்குக் கூறியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை… நான் எனது அறையில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். நான் அன்று வீட்டிலிருப்பது அவருக்குத் தெரியாது. அவர் தன் பால்ய நண்பர் மிஸ்டர் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
சிறிய வயது முதல் மிஸ்டர் பொன்சேகாவும் அவரும் இணைபிரியாத் தோழர்கள். நீண்ட காலமாக வெளிநாட்டில் வியாபாரஞ் செய்த பொன்சேகா அன்று எங்கள் வீட்டுக்கு வந்தது அவருக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பலவித விஷயங்களை காது வெடிக்க கதைத்துக்கொண்டிருந்த அவர்கள் அமைதியாக அதுவும் வீரியஸாக கதைப்பது என் காதில் விழுந்தது.
ஒற்றுக் கேட்பது என் வழக்கமல்ல; என்றாலும் என் பெயர் அடிபட்டதால் காது கொடுத்துக் கேட்டேன்.
“உங்க மனைவியின் போக்கைப்பற்றி ஊரே கதை சொல்லுது. ஆண்கள் பாரையும் மதிப்பதில்லையாம். ஏன் உங்களைக்கூட மதிப்பதில்லையாம். எதற்காக அர்த்தமில்லாத இந்த வாழ்வு வாழவேண்டும்? பேசாம ‘டைவர்ஸ்’ பண்ணிவிடுங்கள். இல்லையேல் மறுமணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் மதம் மறுமணத்தை ஆதரிக்கிறதே…ஏன் கவலைப்பட வேண்டும்?” என்றார் பொன்சேக்கா.
“சே… என்ன கதை சொல்கிறீர்கள்…? என்னைப்பற்றி இவ்வளவு தெரிந்த நீங்கள் இப்படியா பேசவேண்டும்? ‘டைவர்’ – ‘விவாகரத்து’… இந்த வார்த்தைகளை வெறுப்பவன் நான். இந்த வார்த்தைகள் என் காதுகளில் விழும்போது, பழுக்கக் காய்ச்சிய இரும்பை ஊற்றுவதுபோல இருக்கிறதே!” என்றார் அவர்.
“நான் தவறுதலாகச் சொல்லவில்லை. உங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டே கூறுகிறேன். நாம் சாப்பிடும் சாப்பாட்டை ருசியான முறையில் சாப்பிடுவது ருசித்த உணவாகும். அதை தாறுமாறாகச் சாப்பிட்டால் ருசித்த உணவாகுமா? நீங்கள் உங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பதுபோல் மனைவியை அனுபவிக்கிறீர்கள். ஆனால் உங்களை மனைவி அனுபவிக்கிறாளில்லையே. படித்த உங்களுக்கு இது புரியாமல் இருக்கிறதே….”
“புரியாமல் என்ன? எனக்கு எல்லாம் புரிகிறது. என்னிடம் பல பேர்கள் விவகாரத்துச் செய்துவிடுங்கள் என – மறைமுகமாகவும், சாடையாகவும் கூறுகின்றனர். என்றாலும் நான் அதை விரும்பவில்லை. மனிதத்தன்மை இல்லாத சுயநலம் என்றே கருதுகிறேன். என்னிடம் பணமிருக்கிறது. ஏன்? அவளிடமும் பணமிருக்கிறது. ஆனால் அவளுக்கு என்னைத் தவிர தாய், தகப்பன், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர் யாருமில்லை. இந்த வேளையில் அவளை நான் கைவிட்டால் அவள் வாழ்வு திசைமாறிவிடும். அது அவளை கொலை செய்வதற்கே ஒப்பாகிவிடும்.
“இன்னும் பாருங்க… அவள் இலட்சிய வெறியால் அலைகிறாளே தவிர கெட்டலைந்து அலையவில்லை. அப்படி அலையக் கூடியவளுமல்ல. அவளைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு நாள் திருந்துவாள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. சரி, நான் விவகாரத்துச் செய்து கொண்டேன் என வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அவள் உண்மையை உணர்ந்தால்….அவள் நிலைமை என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்!”
“உண்மைதான்… ம்… உங்கள் நல்ல மனதிற்கு செருப்பால்தான் அடிக்கவேண்டும். அப்போ…நீங்கள் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிதான்… போங்க..”
“அப்படியும் எண்ணிவிடாதீர்கள்….விவகாரத்துத்தான் செய்ய மாட்டேன். என் மனம் இப்படியே இருக்க மறுத்தால் மறுமணம் செய்து கொள்வேன்.”
“என்னப்பாம் புதிர் போடுகிறீர்கள். மறுமணம் தேவையில்லை என்கிறீர்கள்; தேவை என்கிறீர்கள்; என்ன இது…அது சரி…நீங்கள் மறுமணம் செய்து வேறொரு பெண்ணை இங்கு கொண்டுவர உங்கள் மனைவி உடன்பாடுவாளா?”
“அவள் உடன்படுவது ஒரு புறமிருக்கட்டும். அவளை சட்டப்படி உடன்படுத்த என்னால் முடியும். அப்படி நான் செய்யவில்லை. இனி செய்யவும் இஷ்டமில்லை.”
“நீங்க… என்ன கதைக்கிறீங்க..? – எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என பொன்சேகா பெரிய வியப்புக்குள்ளானார். எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது. அத்துடன் என் மனதில் பாறாங்கல்லைப் போட்டு அமிழ்த்தும் உணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கதவுப் பக்கத்தில் மறைந்து நின்றுகொண்டு தெளிவாகக் கேட்டேன்.
“நான் சொல்வது உண்மை . இதுவரை எவருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நான் உங்களிடம் கூறுகிறேன். ஆனால் இதை வேறு யாரிடமும் கூறக்கூடாது. எமக்கு கலியாணம் நடந்து ஒரு வருடம் முடியவில்லை. அவளுக்கு கடுமையாகக் காய்ச்சல் ஏற்பட்டது. அது ஒருவித மாயக்காய்ச்சல். ஒபரேஷனுக்குப் பிறகுதான் குணங்கண்டது. இது அவளுக்கும் தெரியும். ஆனால் இந்தக் காய்ச்சலால் அவள் கர்ப்பந்தரிப்பதை இழந்தாள், உங்கள் மனைவி இனி தன் வாழ்நாள் முழுதும் கர்ப்பந்தரிக்கமாட்டாள் என டாக்டர் கூறிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வார்த்தைகள் அன்று எனக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. என்றாலும் தாங்கிக்கொண்டேன். இந்தச் செய்தி என் மனைவிக்குக்கூட தெரியாது. இன்றுதான் முதன்முதலாக உங்களிடம் கூறுகிறேன்.”
வானமே இடிந்து என் தலையில் வீழ்ந்தாற்போல் உணர்வு எனக்கு! அதன் பின் அவர்கள் என்ன பேசினார்களோ நான் அறியேன். தூக்கத்தில் நடப்பவள்போல் நடந்து கட்டிலில் சாய்ந்தேன். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது..
அவர் வார்த்தை – ஒவ்வொன்றும் சாட்டையால் அடிப்பது போலிருந்தது. நாகரிகம் என்ற இரும்பு, அந்த சூழ்நிலையில் ஒரு நிமிஷவேக்காடு தாளாமல் இளகிவிட்டது.
மன உணர்வை ஆராய்ந்து வாழ்க்கையை விளக்கமாக எடுத்துச் செல்லும் ஒரு மனிதனை… இல்லை – இல்லை …ஒரு மனிதப் புனிதரை என் கணவன் ரூபமாகக் காண்கிறேன். உடல் நிலை கொள்ளாமல் தவிக்கிறது. ஒரே படபடப்பு. என் உள்ளத்தின் இன்னோர் பகுதியில் இன்னும் ஏதோ அரிக்கத் தொடங்கியது. அது…என் கைகளில் ஒரு குழந்தை… ல்லை பிரமை. எனக்கு குழந்தை கிடையாது…நான் மலடி. தலையணையை கட்டிக்கொண்டு விடியுமட்டும் அழுதேன்.
எத்தனை மணிநேரம்….எத்தனை நாள் அழுதேன்? எனக்கே தெரியாது. துயரம் என்று ஒன்று உண்டு என்ற நினைப்பே இன்றி இறுமாப்புடன் வாழ்ந்தேன். இப்பொழுது முன்னே நிற்பவை எல்லாம் துன்பப்படிகள். அவற்றைத் தாண்டி, நேர்வழி நடக்கவேண்டும்.
“நீ உன் சுதந்திரத்தை அனுபவிக்கிறாயா…? என் கட்டிலின் பக்கத்திலுள்ள வெறுமை என்னைப்பார்த்துக் கேட்பது போலிருந்தது. சுதந்திரம்…அப்படி என்றால் என்ன…? நானே என்னைக் கேட்டுக்கொண்டேன். கணவனை மையமாகக் கொண்டு எழுந்த சமூக தர்மத்தை வெறும் சட்டத்தின்மூலம் சீர்திருத்தம் செய்ய முயன்றேன். மானிட இயல் போதிக்கும் இந்த உண்மையை அறிய எனக்கு இத்தனை நாட்கள் எடுத்தன. ஆம், துணிந்துவிட்டேன். கட்டிலிலிருந்து அப்புறப்படுத்தும் அழுக்குப் படுக்கையைப்போல என் குண இயல்புகளை ஓர் அழுக்கு மூட்டையாகச் சுற்றி மூலையில் எறிந்துவிட்டேன்.
அன்று மாதர் மன்றம். அவசிய, அவசர தேவையாதலால் என் அழைப்பை ஏற்ற எல்லோரும் சமுகந் தந்திருந்தனர். தலைமையை ஏற்ற நான், இதுவரை காலமும் எமது சங்கத்தில் இயங்கி வந்த சட்டங்களை நீக்க வேண்டும். மற்றும் எமது இயக்கத்தை புனரமைப்புச் செய்ய வேண்டும்” என்பதைச் சுருக்கமாகக் கூறினேன். சபையிலே சலசலப்பு…பலரின் முணுமுணுப்புகள் என் காதிலும் விழுகின்றன.
“முதுகெலும்பில்லாத தலைமையினால்தான் பல சாம்ராஜ்யங்கள் இன்று வீழ்ச்சி பெற்றுள்ளன. நீங்கள் மட்டும் விதிவிலக்காக முடியாதே. நேரத்துக்கொரு சட்டம். பச்சோந்தித் தலைமை எமக்கு வேண்டாம்” என ஏளனப் புன்னகையுடன் எழுந்த விஜிதா முகத்தில் அறைந்தாற்போல் கூறிமுடித்தாள்.
“வாஸ்தவம்தான்…உங்கள் எல்லாரையும் வழிதவறி நடத்திய என் தலைமையை நானே விரும்பவில்லை. என்றாலும் உங்கள் முன்னிலையில் பல உண்மைகளை எடுத்துக்கூற விரும்புகிறேன். சகோதரிகளே. ஆணை மையமாக வைத்துத்தான் இந்த சமூகம்… ஏன் இந்த உலகமும் இயங்குகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. இதை உணரும்போது தான் ஒரு பெண் பாதுகாப்பு தேடுறது ஆச்சரியமாகப் படுவதில்லை .
“நமது நாட்டுப் பெண்களுக்கு கணவன் என்கிற இடந்தான் முக்கியம், திருமணம் என்பது பரஸ்பர தியாகம். இத்தியாகத்தை கேலியாக்கக்கூடாது. எனவேதான் நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். என்னால் முடியாததை என் கணவர் பெறவேண்டும். அதாவது என் கணவர் இரண்டாந்தாரம் முடிக்க வேண்டும்” எனக்கூறி என் நிலைமையை விளக்கினேன். என் முடிவைக் கண்ட பல சகோதரிகள் திடுக்கிட்டு விழிப்பதை என்னால் உணர முடிகிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துடுக்கும். நாகரிகப் பூச்சுமுள்ள நாதிரா எழுந்தாள். என்
“உங்களுக்கு ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை? உங்களுக்கு தாழ்வு என்றால் நாங்கள் அனைவரும் தாழ்வுமா? சே…! பலதார மணம் பெண்களை அடிமைப்படுத்தி, வெறும் காமக்கிழத்தியாக, பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்குகிறது. ஆண்கள் மட்டும் பல பெண்களைக் கட்டிக்கொள்ளலாம். ஏன் ஒரு பெண் பல புருஷர்களைக் கட்டிக் கொள்ளக்கூடாது?” என காரமாகவே கேட்டாள்.
“தர்க்க ரீதியாக உங்கள் வாதம் சரியாகப்படுகிறது. ஆனால் எதையும் தர்க்க ரீதியாகப் பார்க்கக் கூடாது. மனித இயல்புகளையும், ஆண் பெண் தேகக் கூறுகளையும் சோதனை செய்து பார்க்கவேண்டும். சரி… நான் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் இரண்டு ஆடவர்களை மணக்க விரும்பியுள்ளீர்கள்…? விழிக்கவேண்டாம். இந்த உலகில் எந்தப் பெண்ணும் ஒரே நேரத்தில் இரண்டு ஆடவர்களை மணக்க விரும்பமாட்டாள். இது வரை காலமும் ஒரு பெண் பல ஆடவரை மணந்த வரலாறுகள் உண்டா ? ஏதோ தாயின் வாக்குறுதிக்காக பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை மணந்த கதையொன்றைத் தவிர வேறு ஆதாரங்கள் ஏதேனுமுண்டா? சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு ஆணுக்கு ஒரே நேரம் பல பெண்களைப் பராமரித்து வாழ முடியும். ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒரே நேரம் இரண்டு ஆண்களைப் பராமரித்து வாழ முடியுமா? திருப்திப்படுத்த இயலுமா? கேள்விக் குறிகளுடன் சபையை விழித்து நோக்குகிறேன்.
எங்கும் நிசப்தம்… தொடர்ந்தேன்.
“தோழியர்களே! மானிட இயல் கூறும் இயற்கை சாத்திரங்களை நாம் மாற்ற முனைவது மடமைதான். இன்னும் சற்று சிந்தியுங்கள். பலதாரமணம் வெறுக்க வேண்டியதல்ல. ஒரு பெண் மாதமொருமுறை குறைந்தது ஏழு நாட்கள் தீண்டத்தகாதவள். அத்துடன் இரண்டு மூன்று குழந்தைகள் கிடைத்ததும் பெரும்பான்மைப் பெண்களால் தம் கணவரை பூரணமாக திருப்தி செய்ய முடியாது. இப்படியான நிலைகளில் கூடுதலான ஆண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியுமா? எமது இனத்தாலே கெடும் ஆண்கள் நோயாளியாகி, எம்மையும் நோயாளியாக்காமல் இருக்க வேண்டுமானால் பலதார மணத்தை எப்படி நாம் வெறுக்க முடியும்? இப்படி நான் கூறுவது, பணத்தை வைத்துக்கொண்டு உடலின்பத்தை நாடி பலதாரம் புரியும் ஆண்களையோ, அன்றி காம எண்ணங்கொண்டு பெண்களை சீரழிக்கும் ஆண்களையோ அல்ல. என் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கே உரிய தாயாகும் பாக்கியம் என்னிட மில்லை. என் கணவருக்கு, சட்டப்படி எல்லாம் செய்யமுடியும். ஆனால் அவர் செய்யவில்லை. ஏன்? உண்மையிலே அவரொரு தியாகி. தியாகம் என்று கூறி அவர் வாழ்வை பாழ்படுத்த நான் விரும்பவில்லை” எனக் கூறிய நான் மேசையின் மேல் இருந்த சோடாவை ஊற்றி மடமடவெனக் குடித்துவிட்டு இருக்கையில் இருந்தேன்.
சபையில் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டெழுந்த நதிரா, “உங்கள் இஷ்டம் அவர் பாக்கியம். என்ன செய்ய..? கோழைத்தலைமை இன்றோடொழியட்டும். எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்” என துடுக்காகக் கூறி சபையோரின் கைதட்டலைப் பெறுகிறாள். நான் எழுந்து கூறினேன்:
“மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் பொன்னான நேரத்தை நான் மண்ணாக்கமாட்டேன். என்றாலும் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இயற்கையை வெற்றிகொள்ள எங்களால் முடியாது. இயற்கையோடு இணைந்த முற்போக்கான திட்டங்களைச் செய்யுங்கள். கடைசியாக ஒரு வார்த்தை, அதுவும் உறுதியாகக் கூறுகிறேன்….என்னால் இயலாததை என் கணவர் பெறவேண்டும் அதற்கு நானே என் கணவருக்கு பெண் தேடப்போகிறேன்.”
– ‘பிறைப் பூக்கள்’ – 1979 (நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு),மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.