சாத்தானின் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 11,056 
 

எலும்புக் கூடே உடைந்து நொறுங்கிப் போகுமளவுக்கு, சுவிஸ் குளிர் வாட்டி வதைத்தது. அகிலனுக்கு இதெல்லாம் பழகிப் போன விடயமாயிற்று. இந்த விடய சஞ்சாரங்களைப் பெரிதுபடுத்தினால் ,துக்கம் தான் மிஞ்சும் என்று அம்மா பல தடவைகள் சொல்லியிருக்கிறாள். ஆகவே எது நேர்ந்தாலும் சமநிலை கெடாமல் இருக்கப் பழகி விட்டதால், அவனுக்கு இந்தக் குளிர் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ஊரில் இருக்கு,ம் அம்மாவின் நினைவு வரும் போதெல்லாம், அவனுக்கு இந்த மாற்றம், உன்னத இருப்பு நிலை தானாகவே வந்து விடும்.

அவன் வேலைக்கும் புறப்படும் நேரம். சொகுசாக ஆடாமல் குலுங்காமல் போய் வருவதற்குக் கார் இருந்தாலும், அவன் தினமும் உடல் மெலிவதற்க்காக சைக்கிளிலேயே போய் வருகிறான். குளிருக்காகப் போட்டிருந்த ஸ்வெட்டரை மாற்றி விட்டு, வேலைக்கான சீருடையை அவன் அணிந்து கொண்டிருந்த போது ,போன் மணி ஒலித்தது. இந்த வேளையில் யாராக இருக்குமென்ற யோசனையுடன், போனை எடுத்தவுடன், எதிர்த் திசையிலிருந்து சங்கரின் குரல் கேட்டது. அவன் இவனது ஒன்றவிட்ட அண்ணன். முன்பு இயக்கத்திற்குப் போய் ஒரு வழியாக மீண்டு வந்து, எப்படியோ தப்பிப் பிழைத்து, இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறான். அகில் கேட்டான்

என்னடா இந்த நேரம் எடுக்கிறாய்? ஏதேனும். அவசரமே?

ஓமடா! உன்னை ஒன்று கேப்பன். கோபிக்க மாட்டியே?

சரி சொல்லு..உன்ரை கதையைக் கேட்டிட்டு எனக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ என்பதைப் பிறகு பாப்பம். முதலிலை கதைக்கு வா

தெரியாமல் தான் கேக்கிறன். நீ இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அவையளுக்கு உழைச்சுக் குடுக்கப் போறாய்? நீ வாழ வேண்டாமே?

அதென்ன பெரிய வாழ்க்கைக் கதை? ஓ! கல்யாணம் முடிச்சுப் பிள்ளை பெத்துப் போடுற வாழ்க்கை இருக்கல்லே1 அதைச் சொல்ல வருகிறானா?ஓ1 எனக்கும் வயசாச்சுது இல்லே. சரியாக முப்பத்தைஞ்சு வயசாகுது. இவ்வளவு வயசான பிறகும், ஏன் நான் இப்படி இருக்கிறன் ? அல்லது என்னைக் கொண்டு உழைப்பிச்சு பண மழையிலே குளிர் காய அம்மா தான் தன்ரை சுய இன்பத்தி|ற்காக என்னை இப்படிப் பலிக் கடாவாக ஆகி விட்டிருக்கிறாளா? அவள் துரோகி என்று சொல்ல வருகிறானா இவன்?எதுக்கு இப்ப இந்தக் கதை? ஏன் கேக்கிறான் ஒன்றும் புரியேலையே.

என்ன நான் கேடதற்குப் பதிலையே காணம்

நீ கேட்டது மிகப் பெரிய கேள்வி அதுக்குப் பதில் சொல்லிக் கதைக்கிற மூட்டிலை இப்ப நான் இல்லை. வேலையாலை வந்தவுடன், பின்னேரம் உன்ரை முழுக் கேள்விக்குமான பதிலை ,நல்லாய் யோசிச்சு, அப்ப சொல்லுறன் ,என்று கூறி விட்டுப் போனை வைத்து விட்டான்.

இதைப் பற்றி சங்கர் என்ன நினைத்திருப்பானோ தெரியவில்லை , இவ்வளவு கேட்கிறவனிடம் , ஒரேயொரு கேள்வி மட்டும் நான் கேக்க வேணும் எதற்கும் பின்னேரம் வரட்டும். யோசிப்பம் .

அகிலனுக்குப் பெரிய மன உளைச்சலாக இருந்தது.. . பெரிய பயந்தாங்கொள்ளிப் பயல் அவன்.. வாயாலேயே ஆளைக் கொன்று தீர்க்கிற சுபாவம் மட்டும் தான் அவனுக்கு. .அதிலை தான் அவன் வீரம் முழுதும். எப்படித் தான் துவக்குத் தூக்கப் போனானோ தெரியவில்லை. .இதை அவனிடம் போய்க் கேட்டால் என்ன சொல்வான்? நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு, இதிலும் வீரக் கதை தான் கூறுவானா? கேட்டுப் பாப்பம்

அவன் கேள்வி அப்படியே தொக்கி நின்றது .அம்மா இன்னும் ஊரிலே தான் இருக்கிறாள். மூன்று தங்கைகள் அவனுக்கு. .பொறுப்பில்லாத அப்பாவை மண முடித்து,,அவன் அம்மா தீக்குளித்து எழுந்ததை யார் கண்டார்கள்? ஒரு வருடம் இனக் கலவரம் மூண்டதால், அவருக்கு வேலையில்லாமல் போனதே நாங்கள் நடுத் தெருவில் நின்ற போது, எங்களை வாழ வைக்க ஆர் வந்தார்கள்? சங்கரா எங்களுக்குச் சோறு போட்டான்? பின்னேரம் வரட்டும். அவனுக்கு வேதமே சொல்லி வைக்கிறன்..

இது நடந்த பிறகு வேலையிலே மனம் ஒட்டவில்லை. அகிலனுக்கு . வேலை என்றாலும் அப்படியொன்றும் மேலான வேலையில்லை. நன்றாகப் படித்து வரவேண்டிய அவன், இன்று கன்னியாஸ்திரி மடத்தில் ,சமையல் வேலை தான் செய்கிறான் என்று நினைக்கும் போது, அம்மா அழுதே விடுவாள் .உறவுகள் எவரும் கை கொடுத்திருந்தால்,அவன் ஒரு பொறியியலாளனாகவே வந்திருப்பான் நன்றாகப் படிக்கக் கூடிய பையன் கணக்கிலே புலி. அவனை அதே வழியில் வாழ வைக்க வேண்டுமென்ற பரந்த மனோபாவ, ம் இல்லாமல் என் வீடு, என் மக்கள் என் குடும்பம் என்ற நிலை தான் எல்லோருக்கும்.. தங்கள் பிள்ளைகளுக்காக உயிரை விடுகிறவர்கள், அவனுக்காக ஒரு புல்லைக் கூட எடுத்து நகர்த்தவில்லை என்பது, அனுபவ ஞானமாய் வந்த பாடம்.. அம்மாவைக் கேட்டால், இந்த உண்மையை வேதமாகவே எடுத்துச் சொல்வாள்

மாலை ஐந்து மணிக்கு அவன் வேலையால் மீண்டு வந்தவுடனேயே, சங்கர் போனில் அவனைத் துளைத்தெடுக்க வந்து விட்டான். .அவனுக்கு ஒரேயொரு மகள். நன்றாகப் படித்து, சிட்னியில் ஒரு டாக்டராக இருக்கிறாள். எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் , வீணாக என் தலையை ஏன் உருட்ட வேண்டுமென்று ,அவன் என்று மனம் கசந்து கொண்டிருந்த போதே, சங்கரின் அழைப்பு வந்தது. ஒரு நாசகாரனின் முகம் போல, அவன் முகம் மனத் திரையில் தோன்றியது. .,வேதமே கூறுவதற்கு அவன் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா இல்லை. அற்ப புழு என்று தான் நினைக்கத் தோன்றியது.

என்ன பேசாமல் இருக்கிறாய் அகில்? நீ இப்படியே தான் இருக்கப் போறியே, காலம் முழுக்க?

எப்படி…? நீ என்ன சொல்ல வாறாய் சங்கர்?

கல்யாணம் செய்யாமல், நெடுக அவையளுக்கு உழைச்சுக் கொட்டப் போறியே நீ? கேக்கிறன்.

போதும் நிறுத்து! இதை அம்மா கேக்க நேர்ந்தால் நொந்து போய் விடுவா. எங்களை வளர்க்கிறதுக்கு தன்னையே எரிச்சுத் தீக்குளித்து மீண்டு வந்தவளடா அவ. . அது மட்டுமில்லை. அப்பாவாலையும் அவ சுகப்படேலை. மேலும் என்னைஒன்றும் தங்கத் தட்டிலை வைச்சுஅவ வெளிநாட்டுக்கு அனுப்பி வைக் கேலை. .இதுக்குக் கூட அவ என்ன பாடுபட்டிருப்பா. கையறு நிலையிலை இதை அவ சாதித்ததே இமாலய வெற்றி தான்.. உனக்குத் தெரியுமே சங்கர் ?ஒரு முறை லண்டன் போக, ஒரு இடம் வந்த போது, ,அதுக்கு தொன்னூறாயிரம் கட்டும்படி ஏஜென்ஸி கேட்ட போது ,,அவ அச்சுவேலிக்குப் போய் உன்ரை மாமா தாசனிடம் அதைக் கேட்ட நேரம், அவர் சொன்னாராம். ஆரும் பொறுப்புக்கு , அதாவது பிணை நின்றால், தான் தருவதாகக் கூறினபோது, அம்மா உன்ரை அப்பா பெரிய மாமா எல்லோரிடமும் போய்க் கேட்ட போதும், ,ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் கையை விரித்து விட்டார்களாம். ஏனென்றால் இதுக்கு பிணை நின்றால் சாட்சியாக நின்று கையெழுத்துபோட்டால், பின்னர் நான் காசு அனுப்பாவிட்டால் குடியே மூழ்கிப் போய் விடுமல்லே அவையளுக்கு அவ்வளவு நம்பிக்கையீனம் என்னிடம் . இப்ப கோடி கோடியாக சம்பாதித்து என்ரை தங்கைகளை நான் கரை ஏற்றி விட்டிருக்கிறேனே! அவர்கள் என் இதைப் பற்றி யோசிக்கேலை ?என்னவொரு சுயநலம் பார்1 இதை அறியாமல் பேச வாற உன்னை, சவுக்காலை அடிச்சாலும் நீ திருந்துவியோ தெரியேலை . மேலும் இப்ப நான் சம்பாதிக்கிற காசு ஒன்றும் ஆகாயத்திலிருந்து தானாகக் கொட்டுண்டேலை . கடைசியாக வேறு வழியில்லாமல் அம்மா என்னைக் கப்பலுக்கு அனுப்பித் தான், கள்ள வழியிலை இறங்கி நான் இஞ்சை வந்தனான். நீ நினைக்கிற மாதிரி அம்மா ஒன்றும் நான் அனுப்புகிற காசை முன் வைத்து சொர்க்கத்திலை இருந்து , சுக போக வாழ்க்கை நடத்தேலை இதுக்கும் அவ கொடுத்து வைக்லேலை. சவால்களை எதிர் கொண்டு எப்பவும் தீக்குளித்து எழுகிற வாழ்க்கை தான் அவவிற்கு .உனக்குத் தெரியுமே எனக்கொரு தங்கைச்சி இருக்கு .மனநிலை சரியில்லாதது. இதை வைச்சுக் கொண்டு அம்மா என்னபாடுபடிருப்பா. இதெல்லாம் தெரிஞ்சுமா என்னை நீ கேக்கிறாய் இந்தக் கேள்வி.? என் கல்யாணம் தள்ளிப் போறதுக்கு அவ தான் காரணமெண்டு, நீ நினைச்சியே1 இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாதடா .எப்பவும் உண்மை அறியாமல் பேசக் கூடாது. மனம் போனபடி பேசினால் கேள்வி கேட்டால் வீண் மனவருத்தம் தான் மிஞ்சும் இப்ப இதைக் கேட்ட பிறகு என்ரை மன நிம்மதியே போச்சு என் கல்யாணத்துக்காக இப்பவும் தான் அவ நாயாய் அலையிறா. இது அவ குற்றமில்லை .வாற கல்யாணத்தை , பெண்ணின்ரை படம் பிடிக்கேலையெண்டு நான் தட்டிக் கழிக்கிறதாலை தான், இந்த நிலைமை.. இவ்வளவு நீதி பேசுறியே. உன்னை ஒன்று கேக்கிறன் . பதில் சொல் பாப்பம். கொப்பாவை கொழும்புக்குப் போய் நீ ஒரு தடவை பார்த்து வரலாமே ..பாவம் அனாதையாய் கிடந்து தவிக்கிறார் அங்கை. எனக்குத் தெரியும். இதைக் கேட்டால் உனக்குக் கோபம் வரும் சரியான பயந்தாங்கொளியல்லே நீ! இப்படித்தான் எங்கடை பக்கத்து நியாமும் புரிந்து கொள் என்றான் அகிலன்.

அவன் கூறிய வேதம் பிடிபடாமல் அங்கு நிசப்தம் நிலவியது. ஓரளவாவது ஆன்மீக ஞானம் இருந்தாலொழிய, அதைப் புரிந்து கொள்வதே கஷ்டம் தான். சங்கரிடமிருந்து வெகு நாரமாகப் பதில் வரவில்லை. அகிலனால் கேட்கப்பட்ட கேள்வி , வாழ்வியல் பற்றிய தர்மசாஸ்திர விதிகளுக்குட்பட்டு எழுகின்ற ஒரு வேத பிரகடனமாகவே அங்கு ஒலித்த போதிலும், சங்கரைப் பொறுத்தவரை நெஞ்சில் குத்தி விட்ட முள்ளாகவே, அது உள்ளூர வலித்து விட்ட நிலையில், வாயடைத்துப் போன மெளனத்தில், மீண்டும் அவனிடமிருந்து பேச்சு வரவில்லை..அவன் பேசி, வெகு நேரமாகிறது. ஒரு யுகமே கடந்து சென்றது. நீதியின் குரலுக்கு அடிபணிந்தவனாய் கனதியாகி விட்ட அவனின் அந்த மெளனமே, உண்மையைச் சொல்வது போலிருந்தது. அன்பு ஆளுமை கொண்டு வாழ்பவர்களே, தேவர்களாவர். சங்கர் போல் குணக் கோளாறு நடத்தை கொண்டு மனம் போனபடி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசித் தீர்க்கின்ற ஒருவனை, வேறு எப்படி அழைக்க முடியும்? சாத்தான் என்று நினைப்பதைத் தவிர வேறு வழியில்லை..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *