மன விருப்பம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 1,762 
 

“பத்துப்பொருத்தமும் நல்லா இருக்குன்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டாரு. மாப்பிள்ளைக்கு இப்ப வசதி பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லாட்டியும் வருங்காலத்துல ரொம்ப நல்லா வந்திருவாராமா. இந்தப்பையனுக்கே நம்ம பொண்ணு மகிய கொடுத்திடலாம். நமக்கிருக்கிறது ஒரே பொண்ணு. நமக்கிருக்கிற சொத்தெல்லாம் அவளுக்குத்தானே கொடுக்கப்போறோம். நாளைக்கே நம்ம ஊரு பெருமாள் கோயிலுக்கு பொண்ணுப்பார்க்க மாப்பிள்ளை ஊட்டுக்காரங்களை வரச்சொல்லிட்டேன்” என பேசியபடி சோபாவில் அமர்ந்த கணவர் நிகனுக்கு சொம்பில் தண்ணீரைக்கொடுத்த நிரஞ்சனா ” நம்ம பொண்ண ஒரு வார்த்த கேட்காம எதுக்கு வரச்சொன்னீங்க? அவ முடியாதுன்னு சொல்லிட்டா கேவலம் தானே? அப்புறம் உங்க பேச்ச ஆறு நம்புவா?” என சலித்துக்கொண்டாள்.

அச்சமயம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய மகி சோபாவில் அமர்ந்திருந்த தந்தை மடியில் அமர்ந்து “ஏப்பா படபடப்பா மொகத்த வச்சிருக்கீங்க? மம்மியோட சண்டையா?” எனக்கேட்டது தான் தாமதம், ” நீ உன்ற அப்பா கூட சண்டை போட்டிருவியோன்னு நாந்தா படபடப்பா இருக்கறேன். நீ மாத்தி கேள்வி கேக்கறே” என தாய் சொன்னதும் தந்தை முகத்தை தன் முகத்துக்கு நேரே தன் இரண்டு கைகளாலும் திருப்பிய மகி “ஏப்பா என்ன விசயம்?” என கேட்க “உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன்” என்றார்.

“அதனாலென்ன? நல்ல விசயம் தானே? ஆனா அந்த மாப்பிள்ளையத்தான் கல்யாணம் பண்ணிக்கோணும்னு சொல்லி கட்டாயப்படுத்த மாட்டீங்களே….?” என மகள் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்தார் நிகன்.

“பார்த்தீங்களா, நாஞ்சொன்னது சரியாத்தானே இருக்கு? இவ ஏடா கூடமா ஏதாவது பேசுவான்னு தெரிஞ்சு தான் நான் அப்படி சொன்னேன். அந்தக்காலத்துல பெத்தவங்க சொன்னா எதுத்துப்பேசாம மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டினாங்க பொண்ணுங்க. இன்னைக்கு பொழுது போக்கு மாதிரி மாப்பிள்ளை பார்க்கறாங்க. மாசக்கணக்குல போன்ல பேசறாங்க. சினிமாவுக்கு, பார்க்குக்கு ஒன்னா போறாங்க. அப்புறம் புடிக்கல வேற மாப்பிள்ளையப்பாருங்கங்கிறாங்க. மடில நெருப்ப கட்டியிருக்கிற மாதர பெத்தவங்களுக்குத்தான் பயம்” என பேசிய நிரஞ்சனாவை பேசாமல் அமரச்சொன்னார் கணவர் நிகன்.

“யாரோ எப்படியோ போகட்டும். நம்ம பொண்ணை அப்படி மோசமா ஏன் நினைக்கிறே? அவ என்னை மாதிரி. சொன்ன சொல்லக்காப்பாத்துவா. மாப்பிள்ளை பார்க்கிறதே நிச்சயம்னு நாஞ்சொல்லவே இல்லையே. அவளுக்கு மனசுக்கு பிடிச்சா ஓகே சொல்லுவோம். இல்லேன்னா வேற மாப்பிள்ளை பார்த்துக்குவோம்” என தனது எண்ணம் போல் தந்தை பேசுவதைக்கேட்டு அவருக்கொரு அன்பு முத்தம் கொடுத்து விட்டு தனது அறைக்குள் சென்றாள் மகி.

தன் மனம் விரும்பும் படியான மாப்பிள்ளை தன் முன் வந்து நின்றதும் பூரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகியின் செயலைக்கண்டு பெற்றோரும் மகிழ்ந்தனர். பத்து நிமிடங்கள் இருவரையும் தனியாக பேசச்சொல்ல ஒரு மணி நேரம் பேச்சு நீண்டது. படிப்பு, வேலை, பழக்கம், எதிர்காலம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குடும்பம், உறவுகள், குழந்தைகள், வெளிநாடு, வீடு, வாகனம், பெற்றோர், சமூகம், கலாச்சாரம் என பேசப்பேச முடிக்க முடியவில்லை, மனதுக்கும் முடிக்க விருப்பமில்லை. ‘வீட்டிற்கே அழைத்துச்சென்று ஒரு நாள், இரண்டு நாள் மனம் விட்டு பேசினால் என்ன? தன்னை மணக்கப்போகிறவர் தானே’ என அதீத‌ சிந்தனையாக பேச்சின் இடையே மகிக்கு யோசனை வந்தது. தன்னைப்பெண் பார்க்க வந்த முகுந்தனுக்கும் இது முதலாவது பார்த்த பெண் என்பதோடு, இதே பெண் மனைவியாக அமைய வேண்டுமென பேச்சின் இடையே கோவில் கோபுரத்தைப்பார்த்து கடவுளை வேண்டிக்கொண்டான். ‘நேரமில்லை பேசியது போதும்’ என மாப்பிள்ளையின் உறவினர் அழைக்க, எழுந்து சென்றவர்கள் அனைவரின் முன்னே இருவருமாக சம்மதம் என்ற போது இரண்டு குடும்பத்தினரும் மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொண்டதோடு, அலைபேசி எண்களையும் பரிமாறிக்கொண்டனர்.

மகியின் தந்தை நிகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தனது பெண்ணுக்கு அலுவலக நண்பர் மூலமாக தான் பார்த்த முதல் வரனே முடிந்ததோடு, தனது பெண் மகிக்கும் சம்மதம் என்றவுடன் அடுத்து வீட்டிற்கு பெண் பார்க்க அழைக்கும் நாளை முடிவு செய்வது, உறுதி வார்த்தை பேசுவது, போக்கு வரத்து, நிச்சயம், பெரிய மண்டபத்தில் திருமணம் என பேரக்குழந்தையை கையில் எடுத்து கொஞ்சும் அளவிற்கு கற்பனையில் மிதந்தார். மகியும் போனில் பேசுவதோடு விடுமுறை நாட்களில் கோவில், பார்க் என மாப்பிள்ளை முகுந்தனை வரவழைத்து பேசியதில் அவனது வெளிப்படையான பேச்சு, அனுசரிப்ப என மேலும் அவன் மீது காதல் அதிகமானது.

சமையல் வேலைகளை மறந்து உறவுகளுக்கு போன் போட்டு தினமும் பேசிக்கொண்டிருந்தாள் மகியின் தாய் நிரஞ்சனா. உறவுகளிடம் பேசும் போது உறவினர் பெண் ஒருவர் ‘அதக்கேட்டியா? இதக்கேட்டியா?’ என தனது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த அனுபவத்தால் கேட்க,

சிறிது அதிர்ச்சியடைந்தவளாய் பல வகையில் சிந்திக்கலானாள்.

 ‘நாம் ஏன் இதையெல்லாம் மாப்பிள்ளை வீட்டில் கேட்காமல் விட்டோம்? பெண்ணுக்கு மாப்பிள்ளையின் பேச்சு, அழகு, ஈர்ப்பு, அதனால் ஏற்படும் சந்தோசம் தவிர வேறெதுவும் சிந்திக்கத்தோனாது. பெற்றோராகிய நாம் தானே மற்ற விசயங்களை கேட்டிருக்க வேண்டும். பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் இருந்ததால் மற்ற எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. தூங்கிக்கொண்டிருந்த கணவனை அதிகாலையிலேயே தட்டி எழுப்பினாள்‌.

“என்னங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இப்படி எதையும் யோசிக்காம, விசாரிக்காம தூங்கிட்டு இருக்கறீங்க?”

“என்னை என்னடி பண்ணச்சொல்லறே? மகிக்கு மாப்பிள்ளைய புடிச்சுப்போச்சு. ஜாதகப்பொருத்தமும், பையனுக்கு எதிர்காலமும் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொல்லிட்டார். அப்புறம் எதுக்கு கண்டதெல்லாம் கற்பனை பண்ணிட்டு? “

“நீங்க ரொம்ப வெகுளியா இருக்கறீங்க. உங்களுக்கு நாட்டு நடப்பு ஒன்னுமே தெரியலே. ஒரே பொண்ணு, நல்லா படிச்சிருக்கிறா, ரொம்ப அழகா வேற இருக்கிறா. நமக்கும் நெறைய பூர்வீக சொத்து இருக்கு. பங்களா மாதர வீடு இருக்குது. நீங்களும் கை நெறைய சம்பாதிக்கறீங்க. நம்ம சொந்தக்காரங்களும் பெரிய பெரிய ஆட்களா இருக்கறாங்க. இன்னும் நெறைய வரன் பார்த்தா பெரிய எடமா முடிவானா நமக்கும் ஊர்ல, உறவுல மதிப்பு உயரும். அத விட்டுட்டு உங்க ஆபீஸ்ல இருக்கற நண்பரோட உறவுக்காரங்கன்னு யோசிக்காம, விசாரிக்காம பையன மட்டும் பார்த்து முடிவு பண்ணிட்டமோன்னு ராத்திரி தூக்கமே வரலைங்க. நீங்க எதையும் நெனைக்காம கொரட்டை உட்டு நிம்மதியா தூங்கறீங்க” என பேசிய மனைவியை முதன்முதலாக ஆச்சர்யமாகப்பார்த்தார் நிகன்.

“சரி உங்க சொந்தக்காரங்க சொன்னத வெச்சு மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள என்ன கேட்கப்போறே? நம்ம பொண்ணு மனசுல மாப்பிள்ளை முழுசா நெறைஞ்ச பின்னாடி இப்ப வேற மாப்பிள்ளை பார்க்கறேன்னு சொன்னா ஒத்துக்குவாளா?” என பேசிய படி மனைவியின் குழப்பத்தை எண்ணி கவலை கொண்டான் நிகன்.

அலுவலகத்திலிருந்த வந்த மகள் மகியிடம் வசதி மிகவும் குறைவு என்பதாலும், ஊர் தூரமாக இருப்பதாலும் வேண்டாம் என சொல்ல தயாராக இருந்த அம்மா மடியில் அமர்ந்த மகி “நீங்க எனக்கு செஞ்ச பெரிய உதவி இந்த மாப்பிள்ளைய பார்த்து கொடுத்தது தான். நானும் இது வரைக்கும் எத்தனையோ பேர் கூட பழகியிருக்கேன். இப்படியொருத்தர நான் இப்பத்தான் பார்க்கிறேன். சொத்து, சம்பளம், கார், பங்களா எதுவும் கொடுக்காத நிம்மதிய எனக்கு அவராலயும், அவருக்கு என்னாலயும் கொடுக்க முடியுங்கிற போது இந்த உலகத்துல வேற எதுவுமே தேவையில்லைன்னு தோணுது. சீக்கிரமா எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க” என உறுதியாக கூறிய மகள் மகியின் பேச்சைக்கேட்டு, தான் மாப்பிள்ளை வேண்டாமென்பதற்கான பொருளாதார காரணங்களை பேச வேண்டும் என நினைத்திருந்ததை தன் மனதிலிருந்த டெலிட் செய்தாள் மகியின் தாய் நிரஞ்சனா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *